ஹன்சிகாவுக்காக குரல் கொடுத்த ஸ்ருதி ஹாஸன்

சென்னை: நடிகை ஸ்ருதி ஹாஸன் மான் கராத்தே படத்திற்காக நண்பன் அனிருத் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்து வரும் மான் கராத்தே படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கும் ஸ்ருதி ஹாஸன் ஒரு பாடலை பாடியுள்ளார். அவர் 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பாடலை பாடிக் கொடுத்துள்ளார்.

ஹன்சிகாவுக்காக குரல் கொடுத்த ஸ்ருதி ஹாஸன்

அனிருத்தும், ஸ்ருதியும் நீண்ட காலமாக நண்பர்களாக உள்ளனர். ஸ்ருதி நடித்த 3 படத்தில் வரும் ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் தான் அனிருத் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மான் கராத்தே பாடல் பற்றி ஸ்ருதி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மான் கராத்தேவுக்காக அனிருத்துடன் பாடலை பதிவு செய்து கொண்டிருக்கிறேன்! ஃபன் ஃபன் ஃபன்! என்று தெரிவித்துள்ளார்,

 

என் தம்பியாக நடிக்க ரன்பிர் கபூர் தான் பொருத்தமாக இருப்பார்: மனிஷா கொய்ராலா

மும்பை: படத்தில் எனக்கு தம்பியாக நடிக்க பொருத்தமான நடிகர் ரன்பிர் கபூர் தான் என்று மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர் கான் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் மனிஷா கொய்ராலா. அவரை இளம் தலைமுறை ஹீரோ ஒருவர் தனது நடிப்பால் கவர்ந்துள்ளார்.

என் தம்பியாக நடிக்க ரன்பிர் கபூர் தான் பொருத்தமாக இருப்பார்: மனிஷா கொய்ராலா

இது குறித்து அவர் கூறுகையில்,

ரன்பிர் கபூரின் நடிப்பை பார்த்து வருகிறேன். அவர் அருமையாக நடிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் என் தம்பியாக நடிக்க சரியாக இருப்பார். நடிகைகளில் பலர் நன்றாக நடிக்கிறார்க்ள். அனுஷ்கா சர்மா, பரினீத்தி சோப்ரா, சோனாக்ஷி சின்ஹா முதல் சோனம் கபூர் வரை அனைவரும் போட்டி போட்டு நடிக்கிறார்கள் என்றார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மனிஷா புற்றுநோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நடிகர் வீட்டு நீச்சல் குளத்தில் பிறந்து 6 நாளே ஆன குழந்தையின் உடல் கண்டுபிடிப்பு

தானே: இந்தி நடிகர் மொனிஷ் பெஹ்லின் பங்களாவில் பிறந்து 6 நாளே ஆன குழந்தை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தி நடிகர் மொனிஷ் பெஹ்லின் அம்மாவான மறைந்த பாலிவுட் நடிகை நூதனின் பங்களா மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் இருக்கும் கரேகாவ்ன் பார்சிக் ஹில் பகுதியில் உள்ளது. இந்த பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தில் பிறந்து 6 நாளே ஆன பச்சிளம் குழந்தை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தை இறந்து பல நாட்கள் ஆகியதால் உடல் அழுகிவிட்டது.

நடிகர் வீட்டு நீச்சல் குளத்தில் பிறந்து 6 நாளே ஆன குழந்தையின் உடல் கண்டுபிடிப்பு

இதையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குழந்தையை அந்த பங்களாவில் போட்டுச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மொனிஷ் பெஹ்ல் அந்த பங்களாவுக்கு கடந்த சில மாதங்களாக செல்லவே இல்லை. இந்நிலையில் தான் யாரோ குழந்தையை அங்கு போட்டுள்ளனர். மொனிஷ் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார் என்று போலீசார் தெரிவித்தனர்.

 

ஐஸ் கட்டி வியாபாரம் செய்து வந்த சலங்கை ஒலி பட எடிட்டரின் மகன் கடத்தல்?

சென்னை: சலங்கை ஒலி, பத்ரகாளி உள்பட பல படங்களில் எடிட்டராக பணியாற்றியவரான மறைந்த ராமசாமியின் மகன் பாலாஜியை சிலர் கடத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாலிகிராமத்தில் வசித்து வந்தவர் ராமசாமி. இவர் இறந்து விட்டார். இவரது மகன் பாலாஜி. இவர் ஐஸ் கட்டிகளை மொத்தமாக வாங்கி சில்லறை வியாபாரம் செய்து வருகிறார். 29 வயதான இவர் 2 நாட்களுக்கு முன்பு இரவில் ஏடிஎம்மில் பணம் எடுக்கப் போயுள்ளார். ஆனால் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் அவரது செல்போனிலிருந்து அவரது அண்ணன் வெங்கடேசனுக்கு, நான் ஆபத்தில் இருக்கிறேன், காப்பாற்று என்று கூறி எஸ்எம்எஸ் வந்துள்ளது. அடுத்த சில நிமிடங்களில் தனது தம்பி திரவியத்தின் செல்போனைத் தொடர்பு கொண்ட பாலாஜி, நான் ஏ.டி.எம்.மிலிருந்து பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்த போது 4 பேர் என்னை காரில் கடத்தி வந்து விட்டனர். நான் எங்கு இருக்கிறேன் என்று தெரியவில்லை. கார் தற்போது ஆந்திரா நோக்கி செல்வது போல் உணர்கிறேன். என்னை கடத்தியவர்கள் இந்தியில் பேசுகிறார்கள். அவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள். என்னை காப்பாற்று என்று கூறியுள்ளார். அதன் பின்னர் போன் துண்டிக்கப்பட்டு விட்டதாம்.

அதன் பின்னர் போன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதையடுத்து போலீஸில் அவர்கள் புகார் கொடுத்தனர். போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு தற்போது பாலாஜி மீதே சந்தேகம் வந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஏகப்பட்ட கடனில் இருந்து வருகிறாராம். எனவே கடன்காரர்களிடமிருந்து தப்ப நாடகம் போடுகிறாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.