பிரபுதேவா கொடுத்த சுதந்திரம் : ஸ்ரீதர் 4/27/2011 10:35:32 AM
'சன் பிக்சர்ஸின் 'எங்கேயும் காதல்', மே 6ம் தேதி ரிலீஸ். இதில் 4 பாடல்களுக்கு நடனப் பயிற்சி அளித்தேன். இவ்வருடத்தின் மாபெரும் ஹிட்டாக அப்பாடல்கள் அமையும். ஹாரிஸ் ஜெயராஜின் இசையும், பிரபுதேவாவின் இயக்கமும், ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகா மோத்வானியின் காதல் நடிப்பும் ரசிகர்களை பரவசப்படுத்தும். எனது நடன அமைப்பில் உருவான நிறைய பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. ஆனால், 'எங்கேயும் காதல்' பாடல் காட்சிகள் ஹைலைட்டாக அமைந்தது, எங்கள் குழுவுக்கே பெருமிதமாக இருக்கிறது' என்றார், நடன இயக்குனர் ஸ்ரீதர்.
பிரபுதேவாவை இயக்கிய அனுபவம்?
அவரே சிறந்த நடன இயக்குனர் என்பதால், எனக்கான சுதந்திரத்தை கொடுத்தார். அவரை பொறுத்தவரை, எதையும் புதுமையாக செய்ய வேண்டும். அப்படி செய்தால், பாராட்டுவார். இப்படத்தில் அறிமுகப் பாடலாக வரும் 'எங்கேயும் காதல்' பாடல் காட்சியில் அவர்தான் நடித்துள்ளார். மென்மையான அவரது அசைவுகள், ஸ்டைலாக இருக்கும். ஜனரஞ்சகமான, ரம்மியான பாடல் என்பதால், மிகப் பெரிய ஹிட்டாகும். ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நிற்கும். இப்பாடல் காட்சியை பிரான்சில் 35 நாட்கள் படமாக்கினோம். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, நிஜமாகவே மாபெரும் வித்தைகள் செய்துள்ளது. ஒரு நடன இயக்குனராக எனக்கும் நல்ல பெயர் வாங்கித் தரும்.
'நெஞ்சில் நெஞ்சில்…' பாடலின் ஹைலைட்?
இந்தப் பாடலுக்காக, ஜெயம் ரவிக்கு முன்கூட்டியே பயிற்சி அளித்தேன். ஹன்சிகாவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன வருமோ, அதற்கேற்ப மூவ்மென்ட்ஸ் அமைத்தேன். நாளைக்கு எப்படி படமாக்கப் போகிறேன் என்பதை, பிரபுதேவாவிடம் முதல்நாள் இரவே செய்து காட்டி விடுவேன். சில திருத்தங்கள் சொல்லி, 'மூவ்மென்ட்ஸ்களை இப்படி மாற்றி வை' என்பார். அதன்படி செய்வேன். ஹன்சிகா மட்டும் பிரபுதேவா என்ன சொல்வாரோ என்று பயந்துகொண்டே இருப்பார். இந்த பாடல் காட்சியை 4 நாட்கள் படமாக்கினோம்.
கதை சொல்லும் பாடல்?
அது இல்லாமல் இருக்குமா? 'எங்கேயும் காதல்' கதையின் தன்மையையும், கேரக்டர்களின் சூழ்நிலையையும் சாதாரண ரசிகனுக்கும் புரியும் வகையில் சொல்கின்ற மான்டேஜ் பாட்டு, 'தீம் தீம்' என்று வரும். ஜெயம் ரவி தனியாகவும், ஹன்சிகா தனியாகவும் ஒருவரை ஒருவர் நினைத்து உருகுவார்கள்.
எத்தனை நாட்கள் ரிகர்சல்?
சென்னையில் 25 நாட்கள் முன்கூட்டியே நாங்கள் பயிற்சி எடுத்ததால், பிரான்சில் நடந்த ஷூட்டிங்கில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அங்கு நானும், குழுவினரும் 35 நாட்களுக்கு மேல் இருந்தோம்.