இப்படித்தான் இன்றைக்கு தமிழ்த் திரையுலகம் நடிகர் விஷாலைக் கொண்டாடுகிறது. அதற்குத் தகுதியானவராக இந்த பத்தாண்டுகளில் தன்னை பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறார் விஷால் என்பதே மிகையில்லாத உண்மை.
அர்ஜூனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்த விஷால், செல்லமே படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சண்டைக் கோழியில் ஆக்ஷன் அவதாரம் எடுத்தவர், தோரணை வரை நிறுத்தவே இல்லை. கையை ஓங்கினால் முப்பது பேர் தெறித்து விழுவார்கள்.
இது என் வித்தியாசமான முயற்சி என்று ஒவ்வொரு படத்தின்போதும் சொல்வார்... ஆனால் ஒரே மாதிரி ஆக்ஷன் கதைகளாகவே இருக்கும்.
ஆனால் சமர் படத்தில் தன் தவறுகளை ஓரளவு தானே சரி செய்து கொள்ள முயன்றார். ஆனால் அந்தப் படத்தின் ரிலீஸ் நேரம் மற்றும் விளம்பரமின்மை எதிர்மறையாக அமைந்துவிட்டன. ஆனால் இப்போது பார்த்தாலும், விஷால் நடித்த நல்ல படங்களில் சமரும் ஒன்று என்பார்கள் விமர்சகர்கள்.
விஷால் நடிக்க வந்து பத்தாண்டுகள் ஓடிவிட்டன. இத்தனை நாட்களில் தான் செய்த தவறுகள், தன் படங்கள் எதனால் மக்கள் மத்தியில் எடுபடாமல் போயின என்பதையெல்லாம் அலசிப் பார்த்த விஷால் எடுத்த புதிய முடிவுதான் விஷால் பிலிம் பேக்டரி.
'இனியும் அடுத்தவர் பேனரில் பரிசோதனை செய்து பார்க்கவோ, வழக்கமான ஆக்ஷன் படம் தரவோ எனக்கு விருப்பமில்லை. என் தந்தையின் பேனர், அல்லது அண்ணனின் பேனரில்கூட நான் படம் செய்ய விரும்பவில்லை. அதனால்தான் இந்த விஷால் பிலிம் பேக்டரியை ஆரம்பித்தேன். சொந்தக் கம்பெனி ஆரம்பித்ததைக் கூட
நான் பெரிதாக விளம்பரப்படுத்த விரும்பவில்லை. ஒரு நல்ல படம் தருவதின் மூலம் அதை நிரூபிக்க விரும்பினேன்.
அடுத்து, எனக்காக கதை என்றில்லாமல், கதைக்காகத்தான் நான் என்பதைப் புரிந்துகொண்டேன். என்னை முழுமையாக இயக்குநரிடம் கொடுத்துவிட்டேன். எந்தக் காட்சியிலும் என் தலையீடு இருக்கவில்லை. ஒரு தயாரிப்பாளராக என் எல்லையையும் நடிகராக அதற்கான எல்லையையும் உணர்ந்து நடந்து கொண்டேன்.
இப்போது நான் விரும்பிய அத்தனையும் எனக்கு நடந்திருக்கிறது," என்கிறார் விஷால் அடக்கத்துடன்.
பட்டப் பெயர்கள்...
இதற்கு முன் புரட்சித் தளபதி என்பதை விஷாலுக்கு பட்டப் பெயராகப் பயன்படுத்தினர். ஆனால் சமர் படத்தோடு அதை தூக்கி எறிந்தார். பட்டத்து யானை, பாண்டிய நாடு ஆகியவற்றிலும் அந்தப் பெயர் இல்லை. ஏன்?
"பட்டப் பெயரெல்லாம் எனக்கு எதற்கு? பட்டப் பெயர் வைத்துக் கொண்டு, அதன் மூலம் அரசியல் பண்ண அல்லது வேறு ஆதாயம் தேடும் அளவுக்கு நான் புத்திசாலி அல்ல. எனக்கு அது தேவையுமில்லை. ஒரு சினிமாக்காரனுக்கு எதற்கு இதெல்லாம். நமது நோக்கம் மக்களை மகிழ்விப்பது, அதன் மூலம் ஆதாயம் பெறுவதுதான். அதற்கு மேல் தலையில் ஒரு தனி கிரீடத்தை நாமே சுமந்து கொண்டு ஏன் திரிய வேண்டும்... எனவேதான் நான் வெறும் விஷாலாக, ஒரு கலைஞனாக மட்டும் இருக்கிறேன்," என்கிறார் விஷால்.
அடுத்தவருக்கு உதவி...
எவ்வளவோ முயன்றும் எடுபடாமல் போன இளம் நடிகர்களில் ஒருவர் விக்ராந்த். அவருக்கு தன் படத்தில் ஒரு கவுரவ வேடம் கொடுத்து நல்ல பெயரைப் பெற்றுத் தந்ததோடு, தன் சொந்தப் பட நிறுவனத்தின் மூலம் அவருக்கு பெரிய வாய்ப்பைத் தரும் முயற்சியில் உள்ளார் விஷால். அதுமட்டுமல்ல, திறமையுள்ள இளம் கலைஞர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கவும் முடிவு செய்துள்ளார்.
தன் தொழில் சார்ந்த அத்தனை நடவடிக்கைகளிலும் நியாயம் என்னவோ அதை உணர்ந்து செயல்படுவராக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.
பொதுவாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி, பல பொறுக்கித்தனங்கள் செய்து பின் தன்னை உத்தமராகக் காட்டிக் கொள்வார்கள் சில நடிகர்கள்.
"ஆனால் விஷாலைப் பொறுத்தவரை, ஆரம்பத்திலிருந்தே ஒரு நல்ல குடும்பத்துப் பிள்ளை என்ற இமேஜை முடிந்தவரைக் காப்பாற்றி வருகிறார். நடத்தை ரீதியாக அவரிடம் யாரும் குற்றம் காண முடியாது. தொழில் ரீதியிலான தன் தவறுகளை திருத்திக் கொண்டு, இன்று வெற்றிகரமான தயாரிப்பாளராகவும், நல்ல நடிகராகவும் மாறியிருக்கிறார். இந்தப் பிள்ளையின் தலையில் புதிய கிரீடம் எதையும் சுமத்தாமல், அவரை அவராகவே இருக்க விடுவது தமிழ் சினிமாவுக்கு பல நன்மைகளைத் தரும். விஷால் ஈஸ் எ ட்ரூ ஜென்டில்மேன்!", என புகழாரம் சூட்டுகிறார் இயக்குநர் பாரதிராஜா.
வெரிகுட்!