சீரியலில் அமைதியாக வந்துபோகும் ஸ்ரீ துர்கா, சுசீந்தரன் இயக்கும் ‘ஆதலால் காதல் செய்வீர்' படத்தில் தற்போது நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியில் உறவுகள், தியாகம் முந்தானை முடிச்சு ஆகிய தொடர்களில் நடித்து வரும் ஸ்ரீ துர்காவிற்கு கிடைப்பதெல்லாம் அமைதியான கதாபாத்திரம் என்றாலும் அழுகைதான் அதிகம். சிறுவயதில் இருந்தே சினிமா, சீரியலில் நடித்துவரும் துர்கா தனது மீடியா வாழ்க்கையைப் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.
நான் சிறுவயதிலிருந்தே நடித்துக் கொண்டிருக்கிறேன். சில காலம் மாடலிங் துறையில் இருந்தேன். தற்போது பத்து வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில்தான் இருக்கிறேன். எனக்கு அப்பா, அம்மா, இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள்.
சன் டி.வி.யில் மதியவேளையில் ஒளிபரப்பாகும் "உறவுகள்', தியாகம் தொடர்களிலும், மாலையில் முந்தானை முடிச்சு தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். கேப்டன் டி.வி.யில் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்று தயாரித்து வழங்குகிறேன்.
இதுவரை நடித்த எல்லா கேரக்டருமே பிடிக்கும். "ஊஞ்சல்', "அலைகள்', "சிகரம்' என எல்லாமே. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் "ஊஞ்சல்' தொடரில் நடித்த வேடம். அதில் முதல் பாதியில் நெகடீவ் கேரக்டர் செய்திருந்தேன். இரண்டாம் பாதியில் செய்த தவறை உணர்ந்து திருந்தி வாழும் பாஸிடீவான கேரக்டர். அது ரொம்ப பிடித்திருந்தது.
'உறவுகள்' சீரியல் சீக்கிரமே முடிவுக்கு வரப்போகுது. அதில் நான் பண்ணின 'கவிதா' கேரக்டரை மறக்கவே முடியாது. எந்த சூழ்நிலையிலும் கோபமே வராத குணவதி கேரக்டர். அந்த மாதிரி எல்லாரோட மனசுலயும் நிக்கற கேரக்டர்களா அமையணும்னு கடவுளை வேண்டிக்கிறேன்
ஜாலியாக மற்றவர்களை சிரிக்க வைத்து பார்க்கும் நகைச்சுவை கேரக்டர்கள் ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி கேரக்டர்கள் நிறைய கிடைக்கவில்லையே என்று வருந்தியது உண்டு. ஜெயா டிவியில் "பொய் சொல்ல போறோம்' என்ற தொடரில் ஒரு டிராக் மட்டும் காமெடி செய்திருப்பேன். அதில் ரொம்பவே விரும்பி நடித்தேன்.
ஒரு சில படங்கள் நடித்திருக்கிறேன். எனக்கு முக்கியத்துவம் இருப்பது போன்ற நல்ல வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். இப்போது சுசீந்திரன் இயக்கும் ஆதலால் காதல் செய்வீர் படத்தில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்து வருகிறேன்.
எனக்கு நடிப்பு தவிர பாடுவதும், ஆடுவதும் ரொம்ப பிடிக்கும். என் குடும்பமே ஒரு சங்கீத குடும்பம். நானும் முறைப்படி சங்கீதம் பயின்றிருக்கிறேன். அதனால் அந்தத் துறையில் வர வேண்டும் நினைப்பேன். அதுதவிர சின்ன வயதிலிருந்தே போட்டோகிராபி மேல் ஆசை உண்டு. அதனால் சினிமாடோகிராபராக வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. வருங்காலத்தில் இசைப்பள்ளி நடத்த வேண்டும் என்று ஆசை உண்டு. ஆர்வம் இருந்தும், படிக்க வசதியில்லாத குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை உண்டு என்று தனது லட்சியக்கனவு குறித்து ஆசையுடன் தெரிவித்தார் துர்கா.