சூரத்தில் ஆடிப்பாடிய நமீதாவிற்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றிய மேனேஜர் “எஸ்கேப்”!

சூரத்: சூரத்தில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற நமீதாவிற்கு உரிய சம்பளத்தினைக் கொடுக்காமல் மேனேஜர் பணத்துடன் எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

நமீதா சினிமா படங்களில் நடிப்பதோடு கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். வெளிநாடுகளில் நடக்கும் நடன நிகழ்ச்சிகளுக்கும் போகிறார். உள்ளூர்களில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

நகை கடை ஜவுளிக்கடை திறப்புகளிலும் பங்கேற்கிறார். இதற்காக அவருக்கு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக கொடுத்து ஒப்பந்தம் செய்கின்றனர்.

சூரத்தில் ஆடிப்பாடிய நமீதாவிற்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றிய மேனேஜர் “எஸ்கேப்”!

சமீபத்தில் குஜராத் மாநிலம் சூரத்தில் நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். இதில் நடனமாடுவதற்கு நமீதாவை அழைத்தனர். குறிப்பிட்ட தொகையை சம்பளமாக தருவதாகவும் பேசினார்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் ஏற்கனவே பல தடவை நமீதாவை அழைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளனர். சம்பளமும் ஒழுங்காக கொடுத்து இருக்கிறார்கள். எனவே சூரத்தில் நடனமாட சம்மதித்தார். இதில் ஆடுவதற்காக சில பாடல்களில் நடன மாடி சூரத்தில் ரிகர்சலும் எடுத்தார்.

ஆனால், அக்கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடிய பிறகு பேசிய தொகையை நமீதாவுக்கு கொடுக்கவில்லை. பணத்துடன் மேனேஜர் தலைமறைவாகி விட்டார். அவரது போனில் நமீதா தொடர்பு கொண்டார்.

அதுவும் சுவிட்ச்ஆப் ஆகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நமீதா கூறும்போது, "நடன நிகழ்ச்சிக்கு எனக்கு தர வேண்டிய பணத்தை தராமல் மோசடி செய்து விட்டனர். சக நடிகைகளும் இதுபோல் ஏமாறக் கூடாது. பேசிய பணத்தை முன் கூட்டியே வாங்கி விட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

 

வாயால் தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட பவர்ஸ்டார்

சென்னை: பவர்ஸ்டாருக்கு ஆப்பு வைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.

பவர்ஸ்டார் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் படத் தயாரிப்பாளர்களை பற்றி குறைபாடுகிறாராம். மேலும் படப்பிடிப்பில் தன்னை சந்திக்க வரும் ரசிகர்களுக்கு பிரியாணி தான் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம்.

தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட பவர்ஸ்டார்

இது தவிர அவருடன் வரும் பாதுகாவலர்களுக்கு பேட்டா கொடுக்குமாறு கூறி தயாரிப்பாளர்களை படாதபாடு படுத்துகிறாராம். அவ்வப்போது சூப்பர் ஸ்டாருக்கு போட்டி என்றால் அது இந்த பவர் ஸ்டார் தான் என பஞ்ச் வசனம் வேறு பேசுகிறார்.

மேலும் தன்னை பிரபலமாக்கிய சந்தானத்தையும் தாக்கிப் பேசியுள்ளார். இதனால் தயாரிப்பாளர்கள் கடுப்பாகி இனி யாரும் பவருக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் அளிக்கக் கூடாது என்று இயக்குனர்களிடம் தெரிவித்துள்ளார்களாம்.

இது குறித்து அறிந்த பவர் சிறிது காலம் அடக்கி வாசிக்க முடிவு செய்துள்ளாராம்.

 

லிங்கா படத்துக்கு நஷ்டஈடு கேட்பதா?: தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்

சென்னை: ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைபடத்துக்கு வினியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து, கடந்த டிசம்பர் 12ம் தேதி, ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த படம் லிங்கா. ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார்.

லிங்கா படத்துக்கு நஷ்டஈடு கேட்பதா?: தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்

படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததால், பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி, தயாரிப்பாளரிடமும், ரஜினியிடமும் விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டனர். இதனை வலியுறுத்தி போராட்டத்திலும் விநியோகஸ்தர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு, துணைத் தலைவர்கள் கதிரேசன், பி.எல்.தேனப்பன், செயலாளர்கள் டி.சிவா, ராதா கிருஷ்ணன், பொருளாளர் டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

"‘லிங்கா' படபிரச்சினையில் விநியோகஸ்தர்கள் பட வெளியீட்டிலிருந்து தொடர்ந்து ‘லிங்கா' படத்தின் தயாரிப்பாளருக்கும், அப்படத்தில் நடித்த ரஜினிகாந்துக்கும், விநியோகஸ்தர்கள் போட்ட ஒப்பந்தத்தை மீறி பல்வேறு பிரச்சினைகள் செய்து வருகிறார்கள்.

கடந்த காலங்களில் ரஜினிகாந்த் நடித்த சுமார் 97 சதவீதம் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் ‘லிங்கா' படத்தில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இழப்பு ஏற்பட்டிருந்தால் அதை அவர்கள், அவர்களுக்கு சம்பந்தப்பட்ட சங்கத்தில் தெரிவித்து அந்த சங்கம் முறையாக கூட்டமைப்பில் விவாதித்து தீர்வு கண்டிருக்க வேண்டும்.

அதைவிடுத்து படத்தின் தயாரிப்பாளரையும், ரஜினிகாந்தையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உண்ணாவிரதம் மற்றும் பிச்சை எடுக்கும் போராட்டம் என்று அறிவித்தது நமது தொழில் தர்மத்திற்கு மாறானது. மேலும் அது கண்டனத்திற்குரியது.

திரையுலகம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. தேவையற்ற முறையில் அரசியல் தலைவர்களை உள்ளடக்கிக் கொள்வது மிகவும் வருந்தத்தக்கது. கண்டிக்கத்தக்கது. எனவே உண்மையில் பிரச்சினை இருக்கும் பட்சத்தில் அதற்காக உள்ள கூட்டமைப்பில் சங்கத்தின் மூலம் பேசி நல்ல முடிவு எடுக்க வழிவகை செய்ய வேண்டும்.

தவிர இதுபோன்ற சூழ்நிலையில் ஒற்றுமைக்கு விரோதமான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நமது திரையுலக்கிற்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாகும் " இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

மணிவண்ணன் மகன் இயக்கத்தில் மீண்டும் மிரட்ட வருகிறது... ‘நூறாவது நாள்’!

சென்னை : மணிவண்ணன் இயக்கத்தில் கடந்த 1984ம் ஆண்டு ரிலீசான படம் ‘நூறாவது நாள்'. வெற்றிப் படமான இப்படம், தற்போது நவீன வடிவில் அவரது மகன் இயக்கத்தில் உருவாக உள்ளது.

விஜயகாந்த், மோகன், நளினி, சத்யராஜ் நடிக்க, மணிவண்ணன் இயக்கிய படம் நூறாவது நாள். கடந்த 1984ம் ஆண்டு ரிலீசான இத்திகில் திரைப்படத்தில் சத்யராஜ் மொட்டைத் தலையுடன் வில்லனாக நடித்திருந்தார்.

மணிவண்ணன் மகன் இயக்கத்தில் மீண்டும் மிரட்ட வருகிறது... ‘நூறாவது நாள்’!

ஒரு கொலை மற்றும் நாயகியின் எதிர்காலத்தைச் சொல்லும் கனவு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப் பட்டிருந்தது. திக், திக் திருப்பங்களுடன் வித்தியாசமான திரைக்கதை என இப்படம் பாராட்டுக்களைப் பெற்றது.

இந்நிலையில், தற்போது இப்படத்தை மீண்டும் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். எ.டி.எம். புரொடக்‌ஷன் தயாரிப்பில், இப்படத்தை மணிவண்ணனின் மகன் ரகுமணிவண்ணன் இயக்க உள்ளார்.

தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியிடப் பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய முழு விவரத்தை விரைவில் வெளியிடவுள்ளனர்.

 

மனோரமா அபாய கட்டத்தில் இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி

சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஆனால், அது வெறும் வதந்தி என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி' என அன்போடு அழைக்கப்படும் நடிகை மனோரமா, இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரியவர் மனோரமா.

மனோரமா அபாய கட்டத்தில் இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி

அவர் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். தற்போது மனோரமாவிற்கு 72 வயதாகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட மனோரமாவுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மனோரமா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. மேலும், அவரது உடல்நிலை மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாகவும், அதில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், இத்தகவல் வெறும் வதந்தி என மனோரமாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மனோரமாவின் பேரனான டாக்டர் ராஜா கூறுகையில், ‘பாட்டி நலமுடன் இருக்கிறார். வழக்கம் போல் மருந்துகள் எடுத்துக் கொண்டு அவரது பணிகளை தொடர்ந்து வருகிறார். இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்' எனத் தெரிவித்துள்ளார்.

 

செக்ஸ் ஆசையை கட்டுப்படுத்துவது எப்படி: நடிகை பரினீத்தி சோப்ரா விளக்கம்

மும்பை: செக்ஸ் ஆசைகளை கட்டுப்படுத்த குளிர்ந்த நீரில் குளிக்கலாம், யோகா செய்யலாம் என்று பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தி சோப்ரா. பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பொண்ணுக்கு நன்றாக நடிப்பு வருகிறது என்று பெயர் எடுத்தவர். இந்நிலையில் அவர் செக்ஸ் ஆசைகள் பற்றி பேசியுள்ளார்.

நான் செக்ஸ் ஆசையை எப்படி கட்டுப்படுத்துகிறேன்?: நடிகை பரினீ்த்தி பதில்

இது குறித்து அவர் கூறுகையில்,

வயது வந்தோர் செக்ஸ் பற்றி நினைப்பது சாதாரண விஷயம். செக்ஸ் பற்றி நினைப்பது மற்றும் பேசுவது ஒன்றும் குற்றம் அல்ல. ஆனால் இளம் தலைமுறையினர் முதலில் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு அவர்களுக்கு செக்ஸ் நினைப்புகளை கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

நான் செக்ஸ் ஆசையை கட்டுப்படுத்த தியானம், யோகா செய்கிறேன். குளிர்ந்த நீரில் குளிப்பதும் நல்ல பலன் அளிக்கும் என்றார்.

பரினீத்தி துபாயைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக பாலிவுட்டில் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சங்கீத நாயகி காட்டில் மழை… வலை வீசி தேடும் இயக்குநர்கள்!

நடித்த முதல் படம் ப்ளாப் ஆனால் ராசியில்லை என்று முத்திரை குத்தி ஓரங்கட்சிவிடுவார்கள். ஆனால் சங்கீத படம் ப்ளாப் ஆனாலும் படத்தின் நாயகியின் நடிப்பை புகழ்கின்றனராம் கோலிவுட் பட உலகின்றனர். அடுத்த படத்தில் நடிக்க வைக்க தேடி அலைகின்றனராம்.

சமீபத்தில் திரைக்கு வந்த இரண்டெழுத்து சங்கீத படத்தின் நாயகின் அழகை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருந்தார் படத்தின் இயக்குநர் கம் ஹீரோ ஒளி நடிகர்.

படமும் ரிலீஸ் ஆனால் வந்த வேகத்தில் போய்விட்டாலும் நாயகியின் அழகும் நடிப்பும் பழைய நடிகையின் பெயரை காப்பாற்றியிருக்கிறார் என்று கோலிவுட்டில் பேசிக்கொண்டனர்.

பல மொழிகளில் நான்கு மாதங்களாக தேடி கண்டுபித்தவர் இந்த படத்தின் கதாநாயகி, பழைய நடிகையர் திலகம் போலவே இவரும் புகழ் பெருவார் என்று புகழோ புகழ் என்று பட ரீலீசுக்கு முன்போ புகழ்ந்திருந்தார் ஹீரோ. அதனை காப்பாற்றிவிட்டார்

அந்த நடிகை என்று பேச்சு அடிபடவே, தற்போது டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் அந்த புதுமுகத்தின் முகவரி தேடி அலைகிறார்களாம்.

அந்த திலகத்தைப் போல இவரும் தமிழ் பட உலகில் ஒரு ரவுண்டு வருவார் என்று பேசிக்கொள்கின்றனர். எப்படியோ தமிழ்சினிமாவிற்கு நடிக்கத் தெரிந்த புது கதாநாயகி ஒருவர் கிடைத்து விட்டார் என்றும் கூறுகின்றனர்.

எது எப்படியோ... முதல் கோணல் முற்றும் கோணல் ஆகவில்லையே என்று மகிழ்கிறார் நாயகி.

 

அனேகன் விமர்சனம்

Rating:
3.5/5
எஸ் ஷங்கர்

நடிகர்கள்: தனுஷ், அமைரா தஸ்தூர், கார்த்திக், ஆஷிஷ் வித்யார்த்தி

ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

தயாரிப்பு: ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்

இயக்கம்: கேவி ஆனந்த்

பேய்க் கதை அல்லது முன்ஜென்மக் கதைகள்தான் இன்றைய கோலிவுட் - டோலிவுட் ஃபேவர் என்பதால், அப்படி ஒரு கதையோடு களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் கேவி ஆனந்த்.

அனேகன் விமர்சனம்

1962-ம் ஆண்டு... பர்மாவில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்திய காலம். அங்கே அதிகாரத்திலிருக்கும் ஒரு தமிழனின் பெண்ணை காதலிக்கிறான் கூலித் தொழிலாளி. ஆனால் இந்தக் காதலைப் பிரிக்கப் பார்க்கிறார் பெண்ணின் தந்தை. அந்த நேரத்தில்தான் பர்மாவில் உள்நாட்டுக் கலவரம். தமிழர்களின் சொத்துகள் பறிக்கப்பட்டு விரட்டப்படுகிறார்கள். அந்த கலவரத்தில் காதல் நிறைவேறாமல் உயிர் துறக்கிறார்கள் காதலர்கள்... கட்... இது நாயகியின் கனவில் வரும் கதை. ஆனால் இந்த கதையின் மாந்தர்கள் அத்தனை பேரையும் நிஜத்திலும் சந்திக்கிறாள் நாயகி, காதலனைத் தவிர, கடைசியில் அவனையும் சந்தித்து காதல் கொள்கிறாள். இந்தக் காதலுக்கும் எதிர்ப்பு.

உண்மையில் இதுபோல வேறு இரு கனவுகளும் அவளுக்கு வருகின்றன. ஒன்றில் அவள் இளவரசி. காதலன் இளவரசன். அவர்களையும் பிரிக்கிறார்கள்.

அடுத்தது மட்டும், கனவென்று சொல்ல முடியாது. 1987-ல் நடந்த இரு காதலர்களின் நிஜ கொலைகளின் பின்னணியைச் சொல்லும் கதை. இந்தக் கதைதான் படத்தின் ஜீவன் என்பதால், அதை திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.

அனேகன் விமர்சனம்

இப்படி நான்கு வெவ்வேறு கதைகளை சரியான புள்ளியில் இணைக்க முயன்று, ஓரளவு வெற்றியும் பெறுகிறார் இயக்குநர் கேவி ஆனந்த்.

தனுஷ்.. வெளுத்துக் கட்டியிருக்கிறார் நான்கு வெவ்வேறு பாத்திரங்களிலும். குறிப்பாக காளியாக வரும் காட்சிகளில் பக்கா வியாசர்பாடி பையனாக மனதில் ஓட்டிக் கொள்கிறார். அந்த ஐடி பையன் பாத்திரமும் ஓகேதான். பர்மா எபிசோடில் மட்டும் அவர் தலைமுடி மாதிரியே கொஞ்சம் ஒட்டாமல் நிற்கிறார். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்.. 'ஆப்போனன்டே இல்லாம சோலோவாகிட்டேன்' என அவரே ஒரு பாட்டில் சொல்வதுதான் அவரது இன்றைய நிலை. தனுஷுக்கு நிகர் அவர்தான், இன்றைய தேதிக்கு.

நாயகியாக வரும் அம்ரியாவுக்கு நடிப்பு நன்றாக வருகிறது. ஆனால் ஆள்தான் பார்க்க ரொம்ப அந்நியமாகத் தெரிகிறார், அந்த வியாசர்பாடி 'அய்யராத்து பெண்' வேடம் தவிர்த்து!

அனேகன் விமர்சனம்

கார்த்திக்... ஹஹா... அட்டகாசமான அடுத்த இன்னிங்ஸ் இந்தப் படத்திலிருந்து ஆரம்பம் எனலாம். மனிதர் பின்னியெடுக்கிறார். அவரது வசன உச்சரிப்பு, குறிப்பாக ஐடி நிறுவன முதலாளியாக அவரது உடல் மொழி, வெறித்தனமாக வில்லத்தனம் காட்டும் அந்த க்ளைமாக்ஸ்... அத்தனை காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான இன்னொரு பாத்திரம் ஆசிஷ் வித்யார்த்தியும், மீராவாக வரும் ஐஸ்வர்யா தேவனும். சில காட்சிகளில் ஹீரோயினை விட ஐஸ்வர்யா தேவன் பிரமாதமாகத் தோன்றுகிறார்.

தலைவாசல் விஜய்யிடம் போய் தனுஷ் பெண் கேட்கும் காட்சி தளபதியை நினைவூட்டுகிறது.

ஜெகன், முகேஷ் திவாரி, கிரண், லெனா என அத்தனை பேரும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.

அனேகன் விமர்சனம்

பர்மா காட்சிகளில், ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர். அன்றைய நாட்களின் பத்திரிகை அட்டைகள், நாளிதழ்களின் முகப்புப் பக்கங்களைக் கூட பார்த்துப் பார்த்து வடிவமைத்திருக்கிறார். பர்மா தமிழன், சுதேசமித்திரன் நாளிதழ்களின் முகப்பு பக்கங்களைத் தேடிப் பிடித்து வடிவமைத்த நுணுக்கம் பாராட்டுக்குரியது.

அதேபோல 1987 காட்சிகளின் பின்னணியை உருவாக்கிய விதம் பிரமாதம். டங்காமாரி ஊதாரி.. அப்படியே வட சென்னைப் பகுதியில் பிரபலமான 'வா முனிமா..'வை நினைவூட்டியது.

திரைக்கதையில் ஒரு நெருடல்... பர்மா பகுதி மற்றும் இளவரசன் - இளவரசி காட்சிகளை முன்ஜென்ம தொடர்ச்சியாக காட்டியவர், அந்த காளி, அவன் காதலி காட்சிகளை மட்டும் நிகழ்காலத்தின் துப்பறியும் எபிசோடாக மாற்றியது ஒட்டாமல் நிற்கிறது. ஆனால் காட்சிகளின் உருவாக்கம் மற்றும் அந்த டங்கமாரி ஊதாரி.. பாடல் அந்த பகுதியை சுவாரஸ்யமாக்கிவிடுகிறது.

படத்தில் கேவி ஆனந்துக்கு இடது வலது கரங்களாக ஹாரிஸ் ஜெயராஜும், எழுத்தாளர்கள் சுபாவும். கேவி ஆனந்தும் அவர்களுடன் இணைந்து திரைக்கதை வசனத்தை உருவாக்கியிருக்கிறார். காட்சிகளுக்கு உயிர்ப்பும் விறுவிறுப்பும் தரும் பின்னணி இசைக்கும் பாராட்டுக்கள். கூடவே ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு. கேவி ஆனந்த் எத்தனை பெரிய ரசனைக்காரர் என்று காட்டுகின்றன பாடல் காட்சிகள். குறிப்பாக அந்த இளவரசன் - இளவரசி காதல் பாட்டு.

லாஜிக் என்று பார்க்கக் கிளம்பினால் படம் அம்பேல். ஆனால் கனவு, கற்பனை, முன்ஜென்மம் இதற்கெல்லாம்தான் லாஜிக்கே இல்லையே!

இரண்டே முக்கால் மணி நேரத்தை சுவாரஸ்யமாகக் கழிக்க அனேகன் உத்தரவாதம் தருகிறான்... இன்றைய சூழலில் வேறென்ன வேண்டும்!

 

"லிங்கா' திரைப்பட நஷ்டத்தை ரஜினியிடம் கேட்பது நியாயம் அல்ல- இயக்குநர் விக்ரமன்

ஈரோடு: "லிங்கா' திரைப்பட நஷ்டத்தை ரஜினியிடம் கேட்பது நியாயம் அல்ல என்று, திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் கூறினார்.

"புது வசந்தம்', "பூவே உனக்காக', "வானத்தைப் போல', "சூரியவம்சம்' உள்ளிட்ட மெகா ஹிட் படங்களுடன் 25 திரைப்படங்களை இயக்கி சூப்பர் ஹிட் இயக்குநராக வலம் வந்த இயக்குநர் விக்ரமனுக்கு ஈரோட்டில் கவிதாலயம் அமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை "சிகரம் தொட்ட இயக்குநர் விருது' வழங்கப்பட்டது.

விருதைப் பெற வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழ் சினிமா உலகம் தற்போது ஆரோக்கியமாக உள்ளது. உதாரணமாக, "சூது கவ்வும்', "பீட்சா', "மைனா', "அங்காடித் தெரு' போன்ற படங்களைக் கூறலாம். குறிப்பாக, "அங்காடித் தெரு' திரைப்படம் தமிழில் வராமல் வேறு மொழியில் வந்திருந்தால் உலகமே கொண்டாடியிருக்கும். அந்தளவுக்கு மிகச் சிறந்த படம் அது.

தற்போது சினிமா வியாபாரம் 99 சதவீதம் தோல்வி அடைவதற்கு திருட்டு விசிடி ஒரு காரணம் என்றாலும், தியேட்டர் டிக்கெட் விலையும் ஒரு காரணமாக உள்ளது. ஒரு குடும்பத்தில் உள்ள 5 பேர் திரையரங்குக்குச் சென்று படம் பார்க்க நினைத்தால் குறைந்த பட்சம் ரூ.1500 செலவாகும். அதையே ரூ.50 செலவில் சிடியில் பார்த்து விடலாம் என மக்கள் கருதத் தொடங்கிவிட்டனர்.

திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்பதை மக்கள் குறைத்துக் கொண்டதால்தான் 2,600 திரையரங்குகள் இருந்த தமிழகத்தில் தற்போது வெறும் 964 திரையரங்குகள்தான் உள்ளன. ஆனால், சினிமாவை அழிக்க முடியாது. சினிமாதான் எனக்கு எல்லாமே என நினைத்து தரமான இயக்குநர்கள் வந்து கொண்டிருக்கும் வரையில் சினிமா வாழும்.

எனவே, மக்களை திரையரங்குக்கு வரவழைக்க வேண்டும் என்றால், டிக்கெட் கட்டணத்தைக் குறைத்து முறைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. சினிமாவுக்கு வரி விலக்கு அளித்தாலும் அதன் பலன் ரசிகர்களுக்குச் செல்வதில்லை. அது இன்னொரு முக்கியப் பிரச்சினை. வரி விலக்கு பலனை ரசிகர்கள்தான் அனுபவிக்க வேண்டும்.

நான் இயக்கிய அனைத்துப் படங்களும் வேறு மொழிகளில் "டப்பிங்' செய்தபோது அந்தந்த மொழிகளிலும் சூப்பர் ஹிட்டானது. அடுத்து நான் இயக்கப் போகும் படமானது, "புது வசந்தம்' போல் திருப்புமுனையாக அமையும்.

நடிகர் விஜய்யை வைத்து "பூவே உனக்காக' இயக்கியபோது அவரது இமேஜ் வேறு விதமாக இருந்தது. தற்போது அவரும், அஜித்தும் அடுத்த கட்டத்துக்குச் சென்று விட்டனர். அதனால் அவர்களை வைத்து நான் படம் இயக்கினால் அவர்களது ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே.

வெற்றிக்கு பிரமாண்டம் தேவையில்லை. கதை, திரைக்கதை நன்றாக அமைந்து விட்டால் போதும்.

"லிங்கா' பட நஷ்டத்தை ரஜினியிடம் கேட்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல. ஏற்கெனவே "பாபா', "குசேலன்' படங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டியவர் ரஜினி.

ஆனால் "லிங்கா' பட நஷ்டத்தை தயாரிப்பாளரிடம், வாங்கி வெளியிட்டவர்களிடம்தான் கேட்கவேண்டும். நஷ்ட ஈடு கேட்பவர்கள் உண்மையான வசூல் கணக்கைக் காட்ட வேண்டும்," என்றார்.

பேட்டியின்போது கவிதாலயம் ராமலிங்கம் உடன் இருந்தார்.