கமல் ஹாஸனை இயக்குகிறார் பிரபு தேவா!

அடுத்து கமல் ஹாஸனை இயக்கப் போகிறார் பிரபு தேவா என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடன இயக்குநர், நடிகர், இப்போது இயக்குநர் என பல முகங்கள் கொண்டவர் பிரபு தேவா. தெலுங்கு, தமிழ், இந்தியில் இவர் இயக்கும் படங்களுக்கு பெரும் மார்க்கெட் உள்ளது. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் பிரபு தேவா.

இப்போது இந்தியில் ஏபிசிடி என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்த களவாடிய பொழுதுகள் வெளிவராமல் உள்ளது.

கமல் ஹாஸனை இயக்குகிறார் பிரபு தேவா!

இப்போது மீண்டும் இந்தியில் படம் இயக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அவர் கமல் ஹாஸனை வைத்து அடுத்த படம் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை வாசன் விஷுவல் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. நான் கடவுள், பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களைத் தயாரித்தது இந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

கமலும் பிரபு தேவாவும் காதலா காதலா என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இப்போது மீண்டும் இணையவிருக்கின்றனர்.

 

காக்கி சட்டைக்கு கிடைத்த பெரிய ஓபனிங்... முதல் நாள் வசூல் ரூ 4.62 கோடி!

இதுவரை வந்த சிவகார்த்திகேயன் படங்களுக்கு கிடைக்காத பெரிய ஆரம்ப வசூல் காக்கி சட்டைக்குக் கிடைத்துள்ளது.

வெளியான முதல் நாளில் ரூ 4.62 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளது.

சின்னத்திரை தொகுப்பாளராக வாழ்க்கையை ஆரம்பித்து, இன்று முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

காக்கி சட்டைக்கு கிடைத்த பெரிய ஓபனிங்... முதல் நாள் வசூல் ரூ 4.62 கோடி!

அடுத்தடுத்த வெற்றி

சிவா நடித்த எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்றன. அடுத்து வந்த மான் கராத்தே சுமாராகப் போனது.

அதிக முக்கியத்துவம்

இந்த நிலையில்தான், தனுஷ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் காக்கி சட்டை படம் வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்த எந்தப் படத்துக்கும் இல்லாத முக்கியத்துவமும், அதிக அரங்குகளும் இந்தப் படத்துக்குக் கிடைத்தன.

800 அரங்குகள்

தமிழகத்தில் மட்டும் 372 அரங்குகளிலும், உலகெங்கும் 800 அரங்குகளிலும் இந்தப் படம் வெளியானது.

ரூ 4.62 கோடி

முதல் நாளன்று படத்துக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பெரும் திரளாகக் குவிந்து இந்தப் படத்தைப் பார்த்தனர். இந்தப் படம் முதல் நாளில் மட்டும் ரூ 4.62 கோடியை வசூலித்துள்ளது.

வசூல் விவரம்

செங்கல்பட்டு ஏரியாவில் ரூ 1.05 கோடியும், திருச்சி - தஞ்சையில் ரூ 50 லட்சமும், கோவையில் ரூ 75 லட்சமும், வட - தென்னாற்காட்டில் ரூ 62 லட்சமும், மதுரை ராமநாதபுரத்தில் ரூ 60 லட்சமும், சேலத்தில் ரூ 40 லட்சமும், திருநெல்வேலி கன்யாகுமரியில் ரூ 25 லட்சமும் வசூலாகியுள்ளது.

சென்னையில் மட்டும்

சென்னை மாநகரில் மட்டும் ரூ 45 லட்சம் வெள்ளிக்கிழமையன்று வசூலானது. சிவகார்த்திகேயன் படங்களில் இவ்வளவு ஆரம்ப வசூல் கிடைத்த படம் காக்கி சட்டைதான்.

தேர்வு நேரம்

படம் குறித்து வந்துள்ள கலவையான விமர்சனங்கள், இன்னும் மூன்று தினங்களில் அரசு பொதுத் தேர்வுகள் தொடங்கும் சூழல் காரணமாக, இன்றிலிருந்து பட வசூல் எப்படி இருக்கப் போகிறதோ என கவலையுடன் கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.

 

பிறந்த அன்றே ட்விட்டரை கலக்கும் 'குட்டி தல'

சென்னை: ட்விட்டரில் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் வார்த்தை #KuttyThala.

தல அஜீத்தின் மனைவி ஷாலினி இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனார். சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

பாசக்கார பயபுள்ளைகளால் ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் 'குட்டி தல'

இதையடுத்து பிரபலங்கள், ரசிகர்கள் அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதில் பலர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று காலையில் இருந்து பலரும் ட்விட்டரில் குட்டி தல பிறந்ததை பற்றி பேசி வருகின்றனர். அவர்கள் #KuttyThala என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்து வருகிறார்கள்.

ஏராளமானோர் குட்டி தல பற்றி பேசி வருவதால் #KuttyThala என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் முதல் இடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. பிறந்த அன்றே குட்டி தல ட்விட்டரில் அசத்திவிட்டார்.

குட்டி தலயின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது அஜீத் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

ஆசிட் வீசிடுவோம்... நடிகை மாலாஸ்ரீக்கு ரியல் எஸ்டேட் கும்பல் மிரட்டல்

பிரபல கன்னடப் பட நடிகை மாலாஸ்ரீக்கு, ரியல் எஸ்டேட் கும்பல் ஒன்று ஆசிட் வீட்டு மிரட்டல் விடுத்துள்ளது.

சென்னையில் பிறந்து, பெங்களூரில் செட்டிலாகி, கன்னட ஆக்ஷன் படங்களில் நடித்தவர் மாலாஸ்ரீ.

மாலாஸ்ரீக்கு கர்நாடகம், மற்றும் ஆந்திராவில் நிறைய சொத்துக்கள் உள்ளன.

ஆசிட் வீசிடுவோம்... நடிகை மாலாஸ்ரீக்கு ரியல் எஸ்டேட் கும்பல் மிரட்டல்

அவற்றில் ஒரு சொத்தை சமீபத்தில் விற்பனை செய்தார் மாலாஸ்ரீ. இதில் அவருக்கு சில பிரச்சினைகள் எழுந்தன. இதையடுத்து மாலாஸ்ரீக்கு மிரட்டல் வந்துள்ளது.

மூன்று பேர் அவரை போனில் தொடர்பு கொண்டு, முகத்தில் ஆசிட் அடிக்கப் போவதாக மிரட்டியுள்ளனர்.

இது கன்னடப் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசில் மாலாஸ்ரீ புகார் அளித்துள்ளார். தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

நடிகைக்கு பகிரங்கமாக ஆசிட் வீச்சு மிரட்டல் வந்திருப்பது இதுதான் முதல் முறை என்பதால் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மிரட்டல் விடுத்தவர்கள் சென்னையைச் சேர்ந்த சில ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் மற்றும் தரகர்கள் என்று தெரியவந்துள்ளது.

 

சாந்தி தியேட்டர் இடிக்கப்படுகிறது.. 4 அரங்குகள் கொண்ட மல்டிப்ளெக்ஸ் ஆக மாறுகிறது!

சிவாஜி குடும்பத்துக்கு சொந்தமான சாந்தி திரையரங்கம் இடிக்கப்படுகிறது. தனியார் கட்டுமான நிறுவனத்துடன் சேர்ந்து இந்த அரங்கை 4 திரைகள் கொண்ட 'பல்லடுக்கு வணிக வளாக'மாக (மல்டிப்ளெக்ஸ்) மாற்றப்படுகிறது.

இதனை நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் கூட்டாக இன்று அறிவித்தனர்.

சாந்தி தியேட்டர் இடிக்கப்படுகிறது.. 4 அரங்குகள் கொண்ட மல்டிப்ளெக்ஸ் ஆக மாறுகிறது!

சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் சாந்தி திரையரங்கைக் கட்டியவர் மறைந்த ஆனந்த் அரங்க அதிபர் ஜி உமாபதி. அவரிடமிருந்து இந்த அரங்கை விரும்பி வாங்கினார் நடிகர் சிவாஜி கணேசன்.

அதன் பிறகு சிவாஜி நடித்த அத்தனைப் படங்களும் சாந்தியில் வெளியாகி வந்தன. திரிசூலம் படம் இந்த அரங்கில் ஒரு ஆண்டு காலம் ஓடியது.

சிவாஜி மறைவுக்குப் பிறகு சில மாதங்கள் அரங்கை மூடி வைத்து, சில மாற்றங்களை மேற்கொண்டனர். விளைவு, சாந்தி தியேட்டரில், சாய் சாந்தி என்ற சிறு திரையரங்கம் உருவானது.

இவற்றில் ரஜினி நடித்த சந்திரமுகி திரைப்படம் 800 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது.

இன்றும் புதிய படங்களை வெளியிடுவதில் சாந்தி முன்னணியில் இருந்தாலும், சில வசதிக் குறைவுகள் உள்ளன. சென்னையில் தனி திரையரங்குகள் இடிக்கப்பட்டு பெரும்பாலும் பல திரைகள் கொண்ட பல்லடுக்கு வணிக வளாகங்களாக (மல்டிப்ளெக்ஸ்களாக) மாற்றப்பட்டு வருகின்றன.

சாந்தி தியேட்டரையும் இடித்து, புதிய பெரிய மல்டிப்ளெக்ஸாகக் கட்ட முடிவு செய்துள்ளனர் சிவாஜி குடும்பத்தினர்.

ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த மல்டிப்ளெக்ஸை சிவாஜி குடும்பத்தினர் கட்டவிருக்கினர். புதிய மல்டிப்ளெக்ஸில் 4 திரையரங்குகள் இருக்கும். பல வணிக அரங்குகள் இதில் இடம்பெறும்.

இத்தகவல்களை நடிகர் பிரபுவும், அவர் அண்ணன் ராம்குமாரும், மகன் விக்ரம் பிரபுவும் இதனைத் தெரிவித்தனர்.

 

ஆண் குழந்தைக்கு அப்பாவானார் பாண்டியநாடு இயக்குநர் சுசீந்திரன்

சென்னை: இயக்குநர் சுசீந்திரன் - ரேணுகா தம்பதியினருக்கு அழகான ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகில் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். தனது முதல் படமான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதை சுசீந்திரன் பெற்றுள்ளார்.

ஆண் குழந்தைக்கு அப்பாவானார் பாண்டியநாடு இயக்குநர் சுசீந்திரன்

2011 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளிவந்த அழகர்சாமியின் குதிரை படத்துக்கு சிறந்த மனமகிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. தற்போது விஷாலுடன் இணைந்து பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றை சுசீந்திரன் இயக்கி வருகிறார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு மே 28-ந் தேதி மணப்பாறையில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் சுசீந்திரன்-ரேணுகா திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஏற்கனவே தர்ஷன் என்ற 4 வயது மகன் உள்ளான். இந்நிலையில் இன்று காலை 9.23 மணியளவில் ஈரோடு அருகே உள்ள கொடுமுடியில் சுசீந்திரன்-ரேணுகா தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை சுசீந்திரன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நடிகர் அஜீத்துக்கு இன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மகிழ்ச்சியான தகவல் வெளியான நிலையில், இயக்குநர் சுசீந்திரனுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது கோலிவுட்டில் மகிழ்ச்சி அலைகளை பரவச் செய்துள்ளது.

 

என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா... நடிகையைப் பார்த்து புலம்பும் நடிகர்!

சென்னை: வெற்றி நடிகருடன் இணைந்து சக்தி மிகுந்த படமொன்றில் நடித்து வருகிறார் முத்த சர்ச்சையில் சிக்கிய நடிகை.

முந்தைய படங்களில் நடந்தது மாதிரி, மற்ற நடிகைகளைப் போலவே வெற்றி நடிகருடன் சேர்த்து இவரது பெயரும் கிசுகிசுக்கப் படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் நடிகரும் நாயகியைப் புகழ்ந்து ஆஹா, ஓஹோ வென பேட்டியெல்லாம் கூட கொடுத்தார்.

என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா... நடிகையைப் பார்த்து புலம்பும் நடிகர்!

ஆனால், உண்மை நிலவரம் அப்படி இல்லையாம். இனி தப்பித் தவறிக் கூட இந்த நடிகையுடன் ஜோடியாக நடித்து விடக் கூடாது என மனதிற்குள் சபதம் எடுத்திருக்கிறாராம் நடிகர்.

காரணம், படப்பிடிப்பு தளத்தில் நடிகை ஏகத்திற்கும் பந்தா செய்கிறாராம். நாயகன் சில நிமிடங்கள் ஸ்பாட்டில் காக்க வைத்தால் கூட, கோபத்துடன் கேரவனுக்குள் போய் உட்கார்ந்து கொள்கிறாராம்.

இதனால், நடிகருக்கும் இயக்குநருக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டு விடுகிறதாம். எனவே, தான் இனி இந்த நடிகையுடன் நடிக்கக் கூடாது என அதிரடியாக முடிவெடுத்துள்ளாராம் நடிகர்.

 

'இப்பல்லாம் யார் சிடி வாங்கறாங்க'... கமல் கணிப்பு எப்போதும் தவறுவதே இல்லை!

எல்பி ரிக்கார்டுகள் வந்த காலத்தில் இப்போது நடப்பது போல இசை வெளியீட்டு விழாக்கள் நடந்ததாக நினைவில்லை. கேசட்டுகள் வழக்கத்துக்கு வந்த பிறகு, ஆடியோ வெளியீட்டு விழாக்கள் என்றால், ஒரு அட்டையில் படத்தின் கேசட்டுகளை ஒட்டி வைத்துக் கொண்டு வந்து வெளியிடுவார்கள்.

பின்னர் கேசட்டுகள் அடியோடு வழக்கொழிந்தன. ரிக்கார்டுகள் கூட இன்றும் பலரிடம் உபயோகத்தில் உள்ளன. ஆனால் 2005 வரை உபயோகத்திலிருந்த டேப் ரிக்கார்டர்கள் - கேசட்டுகள் போயே போச்!

'இப்பல்லாம் யார் சிடி வாங்கறாங்க'... கமல் கணிப்பு எப்போதும் தவறுவதே இல்லை!

இப்போது சிடிக்களும் அதன் விளிம்பு காலத்தில் நிற்கின்றன. பாடல்களைப் பதிவிறக்கம் செய்ய பென் ட்ரைவ், மைக்ரோ சிப்கள் வந்துவிட்டன.

வழக்கமாக ஆடியோ விழாக்களில் அட்டையால் செய்யப்பட்ட சிடி கட் அவுட்டைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். அதை ஒரு விஐபி வெளியிட, இன்னொரு விஐபி பெற்றுக் கொள்வார்.

இனி அந்த முறையும் இருக்காது என்றுதான் தெரிறது.

சினிமா தொழில்நுட்பத்தில் மற்ற எல்லாரையும் விட ஒரு பத்தாண்டுகளாவது அட்வான்ஸாக இருப்பவர் கமல். டிவியால் சினிமா அழிந்துவிடும் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, "அதெல்லாம் கிடையாது. விஞ்ஞான வளர்ச்சியைத் தடுக்க முடியாது. எனவே டிவியை சினிமாவுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள்" என்று கூறியவர் அவர்.

அப்படித்தான் சினிமா வெளியீட்டு முறையிலும் இனி விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால் சினிமா அழிந்துவிடும். டிடிஎச், டிவிக்களில் வீடுகளுக்கே நேரடியாக கொண்டு செல்வதுதான் சிறந்த முறை என அறிவித்து, அதைச் செயல்படுத்தத் துணிந்தார். அதில் அவரது தடுமாற்றம் சற்றே கேலிக்குள்ளானது உண்மைதான். ஆனால் சரியான சந்தர்ப்பம் அமையாததால், அடுத்த வாய்ப்புக்குக் காத்திருக்கிறார்.

இப்போது, இசை வெளியீட்டு முறையில் ஒரு புதுமையைப் புகுத்தியிருக்கிறார் கமல்.

இசை வெளியீட்டு விழாவில் பாடல்களை சிடியில் வெளியிடாமல், இணையம் மூலம் டவுன்லோட் செய்து பாடல்களை வெளியிடும் முறையை தனது உத்தம வில்லன் படம் மூலம் ஆரம்பித்துள்ளார் (இதற்கு முன்பும் சிலர் பென் ட்ரைவ் மூலம் பாடல் வெளியிட்டது நினைவிருக்கிறது. ஆனால் அதையே கமல் செய்யும்போது கூடுதல் கவனம் கிடைக்கிறதல்லவா!).

நேற்று நடந்த உத்தமவில்லன் இசை வெளியீட்டு வேளையில் வழக்கம் போல சிடி வடிவ கட் அவுட் வர, "அட அது எதுக்கு? இப்போதெல்லாம் சிடி எங்கே வாங்குகிறார்கள், எல்லாம் டவுன்லோட்தானே, இதோ பெரிய ஸ்க்ரீனில்.." என்றவுடன், அப்லோட் பட்டனை கமல் தட்ட லோட் ஆனது.

உடனே லிங்குசாமி 'அதெல்லாம் இருக்கட்டும்.. இசையை வெளியிட யாரெனும் பெற்றுக்கொள்ள வேண்டுமே,' என கேட்க கமல், 'பொறுங்கள்.. அதுதானே வேணும்.. அதையும் செய்துவிடுவோம்," என்று கூறி தன் மொபைலில் போன் செய்தார்.

மறுமுனையில் அவர் மகள் ஸ்ருதி. அவருக்கு அந்த அப்லோட் லிங்கை அனுப்பி, பாடலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளச் சொன்னார். அவரும் செய்து கொள்ள, உத்தம வில்லன் பட ஆல்பத்தின் முதல் இ-பிரதி வெளியாகிவிட்டது.

அரங்கம் கைத்தட்டலில் அதிர்ந்தது!

 

ஷாலினி அஜீத்துக்கு பிரசவம் ஆனது: ஆண் குழந்தை

சென்னை: அஜீத்தின் மனைவி ஷாலினி இன்று அதிகாலை ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அஜீத், ஷாலினி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அன்பின் அடையாளமாக அவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஷாலினி இரண்டாவது முறையாக கர்ப்பமானார். என்னை அறிந்தால் படத்தை முடித்த கையோடு அஜீத் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் கர்ப்பிணியான ஷாலினியுடன் இருக்க அவர் 2 மாதம் பிரேக் எடுத்துள்ளார்.

ஷாலினி அஜீத்துக்கு பிரசவம் ஆனது: ஆண் குழந்தை

இந்நிலையில் ஷாலினிக்கு பிரசவ வலி எடுத்துள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை 4.30 மணிக்கு அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தாயும், சேயும் நலமாக உள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது.

அஜீத்தின் அடுத்த படம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி பூஜையுடன் துவங்குகிறது. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார். படத்தில் சந்தானமும் உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

அஜீத், ஷாலினி தம்பதிக்கு ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

தொடர் தோல்வி... ஆவேசமாக கரண்டியை கையில் எடுத்த நடிகர்!

சென்னை: சமீபத்தில் சொல்லிக் கொள்ளும் படி வெற்றிப் படம் எதுவும் அமையவில்லை இந்த வாரிசு நடிகருக்கு.

வாரிசு நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடித்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியான இரண்டெழுத்துப் படமும் எதிர்பார்த்த படி ஓடவில்லை. இதனால் மனம் நொந்து போயுள்ளார் நடிகர்.

எனவே, மீண்டும் ஒரு வெற்றிப் படம் கொடுத்து சினிமாவில் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவருக்கு. பல வருடங்களுக்கு முன்னர் நம்பர் நடிகையுடன் இவர் நடித்த ஓரெழுத்துப் படம் வெற்றிகரமாக ஓடியது. அதனை மனதில் கொண்டு மீண்டும் நடிகையுடன் ஜோடி சேர முயற்சித்தார்.

ஆனால், சம்பளத்தை ஓவராகக் கேட்டு நாசுக்காக வாய்ப்பை மறுத்து விட்டார் நம்பர் நடிகை. இதனால் மனம் வெறுத்துப் போன நடிகர், மீண்டும் பட வாய்ப்பு வரும் வகையில் வீட்டில் சும்மா இருக்க விரும்பவில்லையாம்.

அதனால், சாப்பாட்டுக் கடை நடத்தி வரும் தனது மனைவிக்கு உதவப் போய் விட்டாராம்.

பொழுதுக்கு பொழுதும் போகும்... புவாவுக்கு வழியும் ஆகும் என நினைக்கிறார் போலும் நடிகர் !