என்னைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்து பெண்ணை மணந்தேனோ, அன்னைக்கே...: ரகுமான்

சென்னை: என்றைக்கு ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தில் பெண் எடுத்தேனோ அன்றே என் திரையுலக வாழ்க்கை டல்லடித்துவிட்டது என்று நடிகர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் பெரிய ஹீரோவாக இருந்தவர் ரகுமான். அவர் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு,

நான் எப்பொழுது இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் குடும்பத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டேனோ அப்போதில் இருந்து எனது திரையுலக வாழ்க்கை டல்லடித்துவிட்டது. பெயருக்கு எனக்கு வாய்ப்பு அளித்துவிட்டு ஏ.ஆர்.ரஹ்மானை தங்கள் படத்திற்கு இசையமைக்க வைக்க பேசுங்கள் என்று அவரிடம் நேரடியாக கேட்க முடியாதவர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள்.

சுபாஷ்கய் தனது படத்திற்கு ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என்று 4 ஆண்டுகள் காத்திருந்தார். ஆனால் ரஹ்மானுக்கு நேரம் இல்லாமல் போனது. ஏ.ஆர். ரஹ்மான் எங்கோ உள்ளார். அவர் எப்படி நான் நடிக்கும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைக்க முடியும். அவரை இசையமைக்க கேட்க மாட்டேன் என்றால் என் மீது கோபப்படுகிறார்கள். ரஹ்மானிடம் நான் கேட்டால் அவர் சம்மதிக்கலாம். ஆனால் அவரிடம் கேட்க கூச்சமாக உள்ளது. அவரை தர்மசங்கடத்தில் தள்ள விரும்பவில்லை என்றார்.

 

ஹரி-விஜய் கூட்டணி: ஆடி முடிந்த உடன் அறிவிப்பு?

ஹரி-விஜய் கூட்டணி: ஆடி முடிந்த உடன் அறிவிப்பு?

சென்னை: இயக்குனர் ஹரி விஜய்யை வைத்து படம் எடுக்க உள்ளாராம்.

இயக்குனர் ஹரி முதலில் விஜய்யிடம் தான் சிங்கம் கதையை தெரிவித்துள்ளார். ஆனால் விஜய் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்து தான் அந்த படத்தில் சூர்யா நடித்தார். சிங்கம் 2 படமும் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

சிங்கம் 2 படத்தை முடித்த உடன் ஹரி கார்த்தியை வைத்து அருவா என்ற படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஹரி விஜய்யை வைத்து படம் எடுக்க உள்ளார்.

இது குறித்து விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆடி மாதம் முடிந்த பிறகு புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

ஏராளமான ரசிகர்கள் உள்ள விஜய் ஹரியின் மாஸ் படத்தில் நடித்தால் சூப்பராகத் தான் இருக்கும்.

 

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்

Rating:
2.0/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: விஷால், சந்தானம், மயில்சாமி, ஐஸ்வர்யா அர்ஜுன்
இசை: தமன்
தயாரிப்பு: மைக்கேல் ராயப்பன்
இயக்கம்: ஜி பூபதி பாண்டியன்

திருச்சி மலைக்கோட்டை வரும் ஹீரோ, அங்கே ஒரு அழகான பெண் (கதைப்படி!), அவளைப் பார்த்ததும் காதல், அவளுக்கு ரவுடிகளால் பிரச்சினை, பிரச்சினைகளையே போத்திக்கிட்டுத் தூங்கும் ஹீரோ உதவப் போகிறார்... க்ளைமேக்ஸில் காதலியை கரம் பிடிக்கிறார். நடு நடுவே மானே தேனே பொன்மானே மாதிரி காமெடியன்களும் வில்லத்தனம் என்ற பெயரில் காமெடி பீஸ்களும் வந்து வந்து கிச்சு கிச்சு மூட்டுவார்கள். பாட்டு என்ற பெயரில் இசையமைப்பாளர் சீரியஸாகக் கொலை முயற்சியில் இறங்கியிருப்பார்!

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்

-அட இருய்யா... இந்தக் கதையை நான் நிறைய படங்களில் பாத்துட்டேன், என்கிறீர்களா... பாவம், இந்த பேருண்மை, இதே மாதிரி மலைக்கோட்டை என்ற படத்தை எடுத்து வெற்றியும் கண்ட இயக்குநர் பூபதிபாண்டியனுக்குத் தெரியவில்லை.

படத்தின் ஹீரோ என்று நியாயமாக சந்தானத்தின் பெயரைத்தான் போட்டிருக்க வேண்டும். அவ்வளவாக சிரிப்பு வரவில்லைதான் என்றாலும் அவரும் மயில்சாமியும் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் பார்ப்பவர் கழுத்தில் ரத்தம் வந்திருக்கும்!

முதலாளி சந்தானத்தை திருச்சிக்கு ஓட்டல் வைக்கலாம் என்று கூட்டி வரும் விஷால் அன்ட் கோ, திருச்சியில் இறங்கியதும் சந்தானத்தின் பணத்தை பத்திரமாக வைத்திருப்பதாகச் சொல்லி வாங்கிக் கொண்டு அவரை மட்டும் ஸ்ரீரங்கத்துக்குப் போகச் சொல்கிறார்கள். அவரும் போகிறார். நீங்க ஓட்டல்ல சாப்பிட்டுக்கிட்டே இருங்க, நாங்க பணத்தோட வர்றோம் என்று கூறுகிறார்கள். அவரும் சாப்பிட ஆரம்பிக்கிறார். ஹீரோ விஷால், ஹீரோயின் ஐஸ்வர்யாவைப் பார்த்து வழிந்து கொண்டே பணத்தைக் கோட்டை விடுகிறார். அதைத் தேடுகிறோம் பேர்வழி என இவர்கள் அடிக்கிற கூத்து, சிரிப்புக்கு பதில் மகா கோபத்தை வரவழைக்கிறது. நகைச்சுவை என்ற பெயரில் பொறுப்பின்மையை விதைக்கும் நச்சுக் காட்சிகள் இவை.

ஆனாலும் 'இந்தத் திருட்டில் இசைஞானிக்கும் பங்கிருக்கிறது' என போலீஸ் ஸ்டேஷனில் மயில்சாமி சொல்லுமிடம் குபீர்!

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்

விஷால் ஏதோ மெஷின் மாதிரி வருகிறார். அடிஅடியென்று அடிக்கிறார். சத்தம் காது கிழிகிறது. நியாயமாக அந்த அடிக்கு அப்போதே வில்லன்கள் அத்தனைபேரும் செத்து படமும் முடிந்திருக்க வேண்டும். ஆனால் அடிபட்டவர்கள் டாம் & ஜெர்ரியில் உடல் துண்டுத் துண்டான பிறகும் சேர்ந்து கொள்வது போல, மரண அடி வாங்குகிறார்கள்... திரும்ப வருகிறார்கள். போங்கய்யா நீங்களும் உங்க சண்டையும்!

ஹீரோயின் ஐஸ்வர்யா பற்றி மனதில் இருப்பதை அப்படியே சொன்னால் மனசு ரொம்ப கஷ்டப்படுவாங்க. அதனால் சிம்பிளாக... 'ஸாரி'!

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்

மெயின் வில்லனைப் பார்த்ததும் யார்றா இவன் ஜெராக்ஸ் எடுத்த காட்ஸில்லா மாதிரி என்று வர்ணிப்பார் சந்தானம். அந்தக் காட்சியில் அந்த வில்லன் நிஜமாகவே அப்படித்தான் தெரிகிறார்!

இடைவேளை கடந்து படம் க்ளைமாக்ஸை நெருங்க நெருங்க, வில்லன்களும் அவர்களின் அடியாட்களும் பக்கா காமெடியன்களாகி படத்தை பணாலாக்கிவிடுகின்றனர்.

ஏற்கெனவே நொண்டியடிக்கும் திரைக்கதையை இன்னும் தடுமாற வைக்கிறது தமனின் இசை. சிவாஜி கணேசனின் படத்தில் இடம்பெற்ற 'இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை...' பாடலை கொஞ்சம் ஸ்லோவாக்கி ஜவ்வாக ஒரு பாட்டுப் போட்டிருக்கிறார். இவ்வளவு மோசமாகக் கூட ஒரு ஆக்ஷன் படத்துக்கு பின்னணி இசை தரமுடியும் என நிரூபித்திருக்கிறார்.

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்

நகைச்சுவை - ஆக்ஷன் இரண்டையும் பக்காவாக மிக்ஸ் பண்ணுவதில் வல்லவரான பூபதி பாண்டியனின் கலவை இந்த முறை தப்பாகிவிட்டது.

காமெடிக்காக எதையும் தாங்கும் இதயம் இருப்பவர்களுக்கான பட்டத்து யானை இது!

 

படம் ரிலீஸாகாத வருத்தத்தில் கருவி பட இயக்குநர் கபிலன் செ தற்கொலை

சென்னை: கருவி பட இயக்குனர் கபிலன் சே தனது படம் ரிலீஸாகாத வருத்தத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பலர் கலைந்த கனவுகள் பட இயக்குநர் கபிலன் தற்கொலை செய்து விட்டதாக செய்தி வெளியிட்டு விட்டதால் குழப்பமாகி விட்டது.

பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் கபிலன்(28). சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். அவர் கடந்த 2012ம் ஆண்டு கபிலன் சே என்ற பெயரில் கருவி என்ற படத்தை இயக்கினார். ஆக்ஷன் த்ரில்லர் படமான அது நிதி பிரச்சனையால் ரிலீஸாகாமல் போனது. முதல் படமே முடங்கியதால் கபிலனுக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் பணக் கஷ்டத்தில் அவர் இருந்துள்ளார். இந்நிலையில் வளசரவாக்கம் திருமலை நகரில் வசித்த அவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி சத்யாவை அவரது தாயாரின் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்துள்ளார். வீட்டுக்கு வந்த உடன் மனைவிக்கு போன் செய்து முதல் படம் ரிலீஸாகவில்லை, கடன் தொல்லை தாங்க முடியவில்லை அதனால் நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை கேட்ட சத்யா பதறியடித்து வளசரவாக்கம் வந்துள்ளார். ஆனால் அவர் வந்தபோது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டியிருந்தது. இதையடுத்து அவர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு படுக்கையறையில் கபிலன் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கபிலன் சே தற்கொலை செய்து கொண்டது கலைந்த கனவுகள் இயக்குனர் கபிலன் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி பரவியது. இதையடுத்து கலைந்த கனவுகள் கபிலன் தான் உயிரோடு இருப்பதாக தெரிவித்தார். இதேபோன்று தான் நேற்று நடிகை கனகா புற்றுநோயால் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதைப் பார்த்த கனகா பிரஸ் மீட் வைத்து தான் உயிரோடு இருப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைவா - யுஏவை நீக்குமா ரிவைசிங் கமிட்டி?

விஜய் நடித்த தலைவா படத்தின் தணிக்கைச் சான்றிதழை மறுபரிசீலனை செய்ய, இன்று ரிவைசிங் கமிட்டிக்கு படத்தைப் போட்டுக் காட்டிகிறார்கள்.

யுஏ சான்றிதழை மறுபரீசீலனை செய்வார்களா இல்லையா என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

தலைவா - யுஏவை நீக்குமா ரிவைசிங் கமிட்டி?

விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியாகிறது.

படத்தை தணிக்கைக் குழுவுக்குப் போட்டுக் காட்டிய போது யுஏ சான்றிதழ் கொடுத்துவிட்டனர். இதனால் படத்துக்கு கேளிக்கை வரி விலக்குப் பெறுவது சாத்தியமில்லாமல் போய்விட்டது.

வரிவிலக்கு பெற அனைவரும் பார்க்கத்தக்கது என யு சான்று பெற வேண்டும். எனவே தலைவாவுக்கு வழங்கப்பட்ட சான்றிதழை எதிர்த்து ரிவைசிங் கமிட்டிக்கு கொண்டு போயுள்ளார் தயாரிப்பாளர்.

இன்று ஹைதராபாதில் ரிவைசிங் கமிட்டி தலைவா படத்தைப் பார்க்கிறது. யு சான்றிதழ் கிடைக்குமா தலைவாவுக்கு என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

 

'மூணாவது’ லட்டு தின்ன ஆசைப்படும் நடிகர்

கோட் சூட் போட்ட அல்டிமேட் நடிகர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் கடவுள் நடிகரும் நடித்து வருகிறார். கடவுள் நடிகருக்கு ஜோடி களத்தில் ஆடிய டாப் நடிகை.

ஷூட்டிங் சமயத்தில் எல்லாம் டாப் நடிகையுடன் தான் கடலையில் பொழுது போக்குகிறாராம் கடவுள் நடிகர். நைன் நடிகையுடன் காதல், யோகா டீச்சருடன் பார்ட்டியில் ஆட்டம், விரைவில் திருமணம் என ஏற்கனவே சார் ரொம்ப பிஸியோ பிசி.

அம்மணியும் பார்ட்டி ப்ராளத்தில் சிக்கியவர் தான். இப்போது ஜாடிக்கேத்த மூடியா இருவரும் போடும் கடலையைப் பார்த்து, யூனிட்டில் உள்ளவர்கள் ‘கண்ணா மூணாவது லட்டு தின்ன ஆசையா..?' எனக் கிண்டலடிக்கிறார்களாம்.

 

சூர்யாவின் அடுத்த கால்ஷீட் இயக்குநர் விஜய்க்கு... அப்போ கவுதம் மேனன்?

சூர்யாவின் அடுத்த கால்ஷீட் இயக்குநர் விஜய்க்கு... அப்போ கவுதம் மேனன்?

லிங்குசாமி படத்துக்குப் பிறகு இயக்குநர் விஜய் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.

‘சிங்கம்-2' படத்திற்கு பிறகு லிங்குசாமி மற்றும் கவுதம் மேனன் படங்களில் நடிக்க சம்மதித்திருந்தார் சூர்யா. ஆனால் கவுதம் மேனன் படத்தில் நடிப்பாரா இல்லையா என்று தெரியாத நிலை.

அதேநேரம், இயக்குநர் சீமானின் பகலவன் கதையை காப்பியடித்துதான் சூர்யாவுக்கு கதை பண்ணியிருக்கிறார் லிங்குசாமி என புகார் கிளம்பியது. உடனே கதையை மார்றினார் லிங்கு. சூர்யாவும் அதில் நடிப்பதை உறுதிப்படுத்திவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் 27-ந் தேதி சென்னை அல்லது மதுரையில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

லிங்குசாமி படம் முடிந்ததும் அடுத்து இயக்குநர் விஜய் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் சூர்யா.

‘தலைவா' படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இயக்குனர் விஜய்-சூர்யா இருவரும் சந்தித்து பேசி இருக்கிறார்கள். இந்த சந்திப்பில் இருவரும் அடுத்த படத்தில் இணைவதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

‘தலைவா' படம் வெளியானவுடன் இயக்குனர் விஜய் மிக குறுகிய பட்ஜெட்டில் ‘தெய்வத்திருமகள்' சாராவை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். அதற்குள் சூர்யாவும் லிங்குசாமி படத்தை முடித்துவிடுவார். அதன் பிறகு சூர்யா - விஜய் படம் தொடங்கும்.

ஆக, கவுதம் மேனன் காத்திருக்க வேண்டிய நிலை.

 

கமல்ஹாசனின் அடுத்த வாரிசு அக்ஷரா தெலுங்கில் அறிமுகம்?

சென்னை: கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் தெலுங்கு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

கமல் ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிக்ரகளின் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது தங்கை அக்ஷரா ஹாஸனும் நடிக்க வருகிறார் என்று கூறப்படுகிறது.

மும்பையில் தாய் சரிகாவுடன் தங்கியிருக்கிறார் அக்ஷரா. அவருக்கு திரையில் நடிப்பதை விட திரைக்குப் பின்னால் இருப்பிதிலேயே அதிக ஆர்வம். அதனால் பிரபல பாலிவுட் இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

கமல்ஹாசனின் அடுத்த வாரிசு அக்ஷரா தெலுங்கில் அறிமுகம்?

இந்நிலையில் அவர் ஸ்ருதியுடன் ஹைதராபாத்தில் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஸ்ருதி நடனமாட சென்றபோது அவருக்கு நாகர்ஜுனாவின் மகன் நாகசைதன்யா கம்பெனி கொடுத்துள்ளார். இதையடுத்து நாக சைதன்யா ஜோடியாக தெலுங்கு படத்தில் அக்ஷரா நடிக்கப் போவதாக டோலிவுட்டில் பேசப்படுகிறது.

 

இயக்குநர் கபிலன் தற்கொலை… தவறான செய்தி வெளியானதால் பரபரப்பு

இயக்குநர் கபிலன் தற்கொலை… தவறான செய்தி வெளியானதால் பரபரப்பு

சென்னை: கலைந்த கனவுகள் திரைப்பட இயக்குநர் கபிலன் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்றைய தினம் நடிகை மரணம், இயக்குநர் தற்கொலை போன்ற செய்திகள்தான் ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டது. மதிய நேரத்தில் கனகா மரணச் செய்தி பரபரப்பானது. பின்னர் கனகாவே ஊடகங்களின் முன்பு தோன்றி பேசி தெளிவு படுத்தினார்.

அதேபோல் கலைந்த கனவுகள் திரைப்பட இயக்குநர் கபிலன் தற்கொலை செய்து கொண்டதாக மாலை நாளிதழ்கள், சில தொலைக்காட்சி சேனல்களிலும் செய்தி ஒளிபரப்பானது.

இந்த செய்தியைப் பார்த்துப் பதறிப் போன கபிலன், நம்மைத் தொடர்பு கொண்டு, நாளிதழ்களில் தவறான செய்தியைப் போட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்பொழுது நான் சென்னையில்தான் இருக்கிறேன். கலைந்த கனவுகள் படப்பிடிப்பு லொகேசன் பார்ப்பதற்காகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காகவும் புதன்கிழமையன்று நாமக்கல் செல்ல உள்ளதாகவும் கூறினார்.

ஆகஸ்ட் 8ல் திரைப்பட படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் இயக்குநர் கபிலன் தெரிவித்தார். இதுபோன்ற தவறான செய்திகளைப் போடுவதன் மூலம் ஊடகங்களின் மீதான நம்பகத்தன்மை போய்விடும் என்றும் அவர் கூறினார்.

மறைந்த நடிகர் கே.ஏ. தங்கவேலுவின் பேரன் அஸ்வின் அறிமுகமாகும் படம் கலைந்த கனவுகள் என்பது நினைவிருக்கலாம்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.