ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் அடுத்த ஷெட்யூலில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்கிறார் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
கேஎஸ் ரவிக்குமார் இயக்க, ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் படம் கோச்சடையான். இதில் அவருக்கு சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, லாரன் இர்வின் என மூன்று ஜோடிகள்.
நயன்தாரா சிறப்புத் தோற்றத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் மைசூரில் நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் முதல் ஷெட்யூல் முடியப் போகிறது.
படத்தில் நடிக்கும் சோனாக்ஷி சின்ஹா, முதல் கட்டப் படப்பிடிப்பில் ஒரு வாரம் கலந்து கொண்டார். ரஜினியுடன் அவர் நடிக்கும் காதல் காட்சிகள் மற்றும் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட்டது. பின்னர் அவர் மும்பை கிளம்பிவிட்டார்.
ஆனால் அப்படிக் கிளம்பியவர், தொடர்ந்து லிங்கா பற்றியும் ரஜினியுடன் தான் நடித்த அனுபவம் குறித்தும் புகழ்ந்து பேசி வருகிறார்.
அவர் கூறுகையில், "ரஜினி சார் ரொம்ப உயர்வான மனிதர். எனக்கு வசதியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார். 1940-ல் நடப்பது போல வரும் காட்சிகளில்தான் நான் அவருக்கு ஜோடியாக நடிக்கிறேன். மிக சுவாரஸ்யமான காட்சிகள். ரொம்ப அனுபவித்து நடித்தேன். இந்தப் படத்தில் நடிப்பது எனக்குப் பெருமையாக உள்ளது.
பொதுவாகவே, தென் இந்தியப் படங்கள் மிகவும் கற்பனை வளம் மிக்கவையாக உருவாகின்றன. ரஜினி சார் எனக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் மேடை, எனது தென்னிந்திய திரைப் பயணத்தை வெற்றிகரமாக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.
அடுத்து சூர்யா, மகேஷ் பாபு போன்ற ஹீரோக்களுடனும் நடிப்பேன் என நம்புகிறேன். ஷங்கர் போன்ற இயக்குநர்கள் படங்களில் இடம்பெற வேண்டும். இப்போதே அவரிடம் அப்ளிகேஷன் போட்டு வைக்கிறேன்," என்றார்.