ரஜினியை சந்தித்து நலம் விசாரித்த நரேந்திர மோடி-நாயுடு!

Tags:


சென்னை: சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினியை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களாக சிகிச்சைப் பெற்று வருகிறார். இதையடுத்து அவரது உடல் நிலை குறித்து அதிர்ச்சி தரும் வதந்திகள் பரவி வருகின்றன.

ரஜினிகாந்தை திமுக தலைவர் கருணாநிதி உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மத்திய அமைச்சர் ஜிகே வாசனும் ரஜினியை மருத்துவமனையில் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வந்திருந்த மோடியும் நாயுடுவும் விழா முடிந்ததும் மருத்துவமனைக்குச் சென்று ரஜினியை சந்தித்தனர்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ரஜினி சுறுசுறுப்பாக உள்ளதால் 4 அல்லது 5 நாளில் வீடு திரும்புவார். வெளிநாடு சென்று சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை என்றார்.
 

பவதாரிணி இசையமைக்கும் 'அழகின் பொம்மி'

Tags:


இளையராஜாவின் மகள் பவதாரிணி இசையமைக்கும் புதிய படத்துக்கு அழகின் பொம்மி என பெயரிடப்பட்டுள்ளது.

தேசிய விருதி பெற்ற பிரபல பாடகியான பவதாரிணி ஏற்கெனவே சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால் சரியான வாய்ப்புகள் அமையாததால் புதிய படங்களை ஒப்புக் கொள்ளாமல் இருந்தார்.

இப்போது கேவிஎஸ் திரைக்கூடம் தயாரிக்கும் அழகின் பொம்மி எனும் படத்துக்கு இசையமைக்கிறார்.

ஆர்கே விஜயகுமார் இயக்கும் இந்தப் படத்தில் தலைப்பே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.

ஜெயமுரசு எழுதிய 'அத்திலக்கா பத்திலக்கா ஊரான் தோப்பு பப்பாளிக்கா' எனும் பாடல் பதிவுடன் "அழகின் பொம்மி" திரைப்பட துவக்க விழா சென்னை சித்ரா ஸ்டுடியோவில் நடைபெற்றது. கவிஞர்கள் பிறைசூடன், சிநேகன், இளையகம்பன் ஆகியோரும் இப்படத்திற்கான பாடல்களை எழுதுகிறார்கள்.

படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் தேனி, கம்பம் மலைக் கிராமங்களில் நடைபெற இருக்கிறது. ஆர்.எச்.அசோக் ஒளிப்பதிவு செய்ய, கலையை புவனா கவனிக்கிறார். சண்டைப்பயிற்சி டைகர் சுகு.
 

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி!

Tags:


சென்னை: பல்வேறு உடல் கோளாறுகள் காரணமாக மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

கடந்த 29-ம் தேதி சென்னையில் நடந்த ராணா படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரூவார சிகிச்சை முடிந்து ஒரே நாளில் வீடு திரும்பியவர், தொடர்ந்து ஓய்வு எடுத்து வந்தார்.

மீண்டும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. எனவே கடந்த 4-ம் தேதி அவர் மீண்டும் சிகிச்சைக்காக இசபெல் மருத்துவமனைக்குப் போனார். ஒரு வார காலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் வீடு திரும்பியவர் சில தினங்கள் ஓய்வெடுத்தார். ஆனால் கடந்த 13-ந் தேதி ரஜினிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் சி.டி.ஸ்கேன் உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டனர். அதில் அவருக்கு இரைப்பை மற்றும் நுரையீரலில் அழற்சி ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

புகைப் பழக்கத்தால் வந்த சிக்கல்...

ரத்தப் பரிசோதனையில் சிறுநீரக கோளாறு மற்றும் இரைப்பை தொடர்பான சில பிரச்சினைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு இரைப்பை கிருமிகளை நீக்கும் மருந்துகள் அளிக்கப்பட்டது.

அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் கூறும்போது, "ரஜினியின் உடல்நிலை பாதிப்புக்கு புகைப்பழக்கம் ஒரு காரணம். இதனால்தான் அவரது உடல்நிலை இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

இரைப்பை தொடர்பான கோளாறுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். சிறுநீரக பிரச்சினைக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரஜினிக்கு நிமோனியா காய்ச்சலும், சளியும் உள்ளது. அதற்கு தொடர்ந்து மருந்துகள் அளித்து வருகிறோம். புகைப்பழக்கம் காரணமாக அவரது நுரையீரலிலும் அழற்சி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவருக்கு லேசான மூச்சுத்திணறல் உள்ளது. அவருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் அளித்து வருகிறோம். விரைவில் குணமாகி விடுவார்," என்றார்.

ராமச்சந்திரா மருத்துவ மனையை சேர்ந்த டாக்டர் ஒருவர் கூறும்போது, "ரஜினிக்கு இதயத்தில் சிறு பிரச்சினை உள்ளது. இதை தீர்க்க 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்துவது அவசியம்" என்றார்.

ரஜினியின் உறவினர் ஒருவர் கூறும்போது, "ரஜினிக்கு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தால் அவரைப் பார்க்க ஏராளமானோர் வருகிறார்கள். இதை தவிர்ப்பதற்காக அவரை அமெரிக்கா கொண்டு சென்று சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

ரஜினியின் உடல்நிலை பற்றி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தவறான வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. இதனால் கவலை அடைந்த ரசிகர்கள் பலர் அவரை பார்ப்பதற்காக போரூர் ராமச்சந்திரா மருத்து வமனையை முற்றுகையிட்டனர். அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டனர்.

தனுஷ் சமாதானம்..

இந்த நிலையில் அங்கு வந்த ரஜினி மருமகனும் நடிகருமான தனுஷ் ரசிகர்கள் மற்றும் மீடியாவிடம் பேசினார். ரஜினி நலமுடன் உள்ளார் என்றும் அவருக்காக ரசிகர்கள் அமைதியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
 

விஜயகாந்துக்கு விஜய் நேரில் வாழ்த்து!

Tags:


தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கும் விஜயகாந்துக்கு நடிகர் விஜய் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் நேரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் நின்று பெரும் வெற்றி பெற்றுள்ளது விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் பொறுப்பேற்கிறார்.

அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க நேரில் சந்தித்த விஜய், மலர்க்கொத்துக் கொடுத்து வாழ்த்தினார். இச் சந்திப்பின் போது, இயக்குனர்கள் அமீர், சேரன் ஆகியோரும் உடன் சென்று விஜய்காந்துக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

வந்த அனைவரையும் வரவேற்ற விஜயகாந்த், அனைவருடனும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

அதிமுக ஆதரவாளரான நடிகர் விஜயகுமாரும், விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து முழுநேர அரசியல்வாதியான பிறகு, அவரை இந்த இயக்குநர்களும் நடிகர்களும் தேடிப்பபோய் சந்திப்பது இதுவே முதல்முறை.
 

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா!

Tags:


சென்னை: வரிசையாக ஒவ்வொரு சினிமா சங்கத்தின் நிர்வாகிகளும் ராஜினாமா செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் லேட்டஸ்ட் ராஜினாமா சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகை குஷ்புவுடையது.

திமுகவின் முக்கிய பேச்சாளரான இவர் தனது ராஜினாமா கடிதத்தை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்தார்.

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவிக்கு கடந்த முறை நடத்தப்பட்ட தேர்தலில், நடிகை குஷ்பு தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து தலைவர் பதவியை வகித்து வந்தார். திமுக-வில் இணைந்த அவர், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-வை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டதோடு, எதிர்க்கட்சியினரை கடுமையாக தாக்கியும் பேசினார். இப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை திடீரென அவர் ராஜினாமா செய்துள்ளார்.

அதுவும் சொல்லி வைத்த மாதிரி, "சொந்தப் பணி காரணமாகவும், தொடர் படப்பிடிப்புகள் இருப்பதாலும் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்,'' என ராஜினாமா கடிதத்தில் குஷ்பு குறிப்பிட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜிநாமா செய்தபோது, ராம நாராயணனும் இதே காரணத்தைத்தான் சொல்லியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
 

'ரஜினி உங்களைச் சந்திப்பார்... ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்!' - லதா ரஜினி

Tags:


ஆண்டவன் அருளாள் ரஜினி நலமுடன் உள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம். பரப்பவும் வேண்டாம். ரஜினி உங்களை விரைவில் சந்திப்பார். ரசிகர்களிடமும் பேசுவார்," என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

கடந்த மூன்று தினங்களாக ரஜினி உடல்நிலை குறித்த வதந்திகள் ரசிகர்களை நிலைகொள்ளாமல் செய்துள்ளன. திருச்சி அருகே ஒரு ரசிகர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் உள்ள ரசிகர்கள் பலர் மிகுந்த வேதனையுடன் தங்களுக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் போன் செய்து ரஜினி உடல்நிலை குறித்து பதட்டத்துடன் விசாரித்து வருகின்றனர்.

ரஜினி மனைவி லதா ரஜினி அவர்களிடம் இதுபற்றி பேசியபோது, ரசிகர்களுக்கு அவர் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

அவரது வேண்டுகோள்:

ரஜினி மிக நலமாக உள்ளார். நல்ல ஓய்வில் இருக்கிறார். அவருக்காக பிரார்த்திக்கும் ரசிகர்களின் அன்பு உள்ளங்களுக்கு நன்றி. வதந்திகளை தயவு செய்து நம்ப வேண்டாம். அதை பரப்ப துணை போகவேண்டாம்.

விரைவில் ரஜினி உங்களிடம் பேசுவார். பத்திரிகையாளர்களைச் சந்திப்பார். அதுவரை பதட்டம் கொள்ளாதீர்கள். ரஜினியின் உடல்நிலை குறித்து நாங்கள் கவனம் செலுத்தும் வேளையில், வெளியில் பரவும் இதுபோன்ற வதந்திகள் எங்களை மிகவும் வருத்ததுக்குள்ளாக்கியுள்ளது.

இதுபோன்ற வதந்திகள் ரஜினிக்கும் மிக்க வேதனையைத் தந்துள்ளது. ரசிகர்கள் யாரும் தவறான முடிவுக்குப் போகாதீர்கள். ரஜினி உங்களைச் சந்திப்பார்!"
 

சினேகா அறிமுகப்படுத்திய ‘நிஷா’!

Tags:


மலேசியாவில் புகழ்பெற்ற பிராண்டான ‘நிஷா’வின் மூலிகை அழகு சாதனப் பொருள்கள் முதல் முறையாக சென்னையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டன. புன்னகை இளவரசி நடிகை சினேகா இந்த அழகு சாதனப் பொருள்களை அறிமுகம் செய்து வைத்தார்.

மலேஷியாவின் நாஸியா நிறுவனத்தின் புகழ்பெற்ற பிராண்ட் நிஷா. மலேஷியாவில் பல ஆண்டுகளாகப் பிரபலமானதும் அதிகம் விற்பனையாவதும் நிஷாவின் அழகு சாதனப் பொருள்களே. எந்தவித ரசாயனக் கலப்புமின்றி, முழுக்க முழுக்க மூலிகைகளால் தயாரான அழகு சாதனப் பொருள்கள் இவை.

நிஷா அழகு சாதனப் பொருள்களை சென்னையில முதல்முறையாக அறிமுகப்படுத்தும் விழா மே 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை சவேரா ஓட்டலில் நடந்தது.

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் புன்னகை இளவரசி சினேகா பங்கேற்று நிஷா அழகு சாதனப் பொருள்களை அறிமுகப்படுத்தினார். முன்னாள் அமைச்சர் வேங்கடபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

விழாவில் சினேகா பேசுகையில், ‘இன்றைக்கு ஆறிலிருந்து அறுபது வரை எல்லோருமே தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்காக பலவித அழகுக் கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். என் அம்மா கூட அழகு கிரீம் விளம்பரங்களைப் பார்க்கும்போதெல்லாம், இவற்றைப் பயன்படுத்தினால் நானும் இந்த விளம்பரத்தில் வரும் பெண்களைப் போல அழகாகிவிடுவேனா என்று கேட்பார்.

டோனர், மாய்ஸரைசர், சன் பிளாக் என தனித்தனியாகத்தான் பொதுவாக வாங்க வேண்டியுள்ளது. ஆனால் நிஷா இவை அனைத்தையும் ஒரே பேக்காக தருகிறார்கள்.

நான் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிஷாவைப் பார்த்து வியந்தேன். அவர் வயது என்னவென்று நான் கேட்கவில்லை. காரணம் அப்படிக் கேட்பது நாகரீகமில்லை. ஆனால் அவரைப் பார்த்தால் ஒரு பெண்ணுக்கு அம்மா மாதிரியே தெரியவில்லை. அந்த அளவு இளமை.

இந்த அழகு சாதனப் பொருள்களை அவரது குடும்பத்தினர் அனைவருமே பயன்படுத்துவதாகக் கூறினார். முழுக்க முழுக்க மூலிகைகளால் ஆன இயற்கை அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது. அதை பல ஆண்டுகளாக மலேசியாவில் வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறது நிஷா.

நிஷா அழகு சாதனப் பொருள்களை சென்னையில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு நல்ல பொருளை அறிமுகம் செய்த திருப்தி இருக்கிறது, என்றார்.

நாஸியா நிறுவன மேலாண்மை இயக்குநர் முகமது ஜலீல் பேசுகையில், 'ஆண்களுக்கும் பெண்களுக்குமான அழகு சாதனப் பொருள் நிஷா. பேஷியல் டோனர், மாய்சரைஸர், சன் பிளாக், நைட் க்ரீம், கொலோஜன் சோப் மற்றும் ஹெர்பல் சோப் அடங்கிய ஒரு பேக்காக இதனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். பயன்பாடு முழுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. இந்த ஆறு அழகு சாதனப் பொருள்களும் கொண்ட ஒரு பேக்கின் அறிமுக சலுகை விலை ரூ 4100 மட்டுமே', என்றார்.

நாஸியா நிறுவனம் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலில் மலேசியாவில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது.