காமெடி நடிகை ஷோபனா தற்கொலை 1/11/2011 10:06:37 AM
காமெடி நடிகை ஷோபனா சென்னையில் அவரது வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
சில்லுனு ஒரு காதல், சுறா உட்பட பல படங்களில் வடிவேலுவுடன் காமெடி வேடத்தில் நடித்தவர் நடிகை ஷோபனா (32). இவர் சென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரியத்தில் எச் பிளாக்கில் தாயார் 'வைரம்' ராணியுடன் வசித்து வந்தார். நேற்று காலை 10.30 மணியளவில் தாயார் ராணி வங்கிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். 12 மணிக்கு அவர் வீட்டிற்கு திரும்பி வந்து கதவை வெகுநேரம் தட்டியும், ஷோபனா கதவை திறக்கவில்லை. பயந்து போன ராணி, கதவின் அருகே இருந்த இடைவெளி வழியாக கையை விட்டு கதவை திறந்தார். அப்போது வீட்டின் உத்திரத்தில் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் ஷோபனா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர், அருகில் இருந்தவர்களின் உதவியுடன் ஷோபனாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தார். ஆனால் சிறிது நேரத்தில் ஷோபனா இறந்து விட்டார்.
இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஷோபனாவுக்கு திருமணமாகவில்லை. 3 மாதத்துக்கு முன் சிக்குன் குனியா நோய் தாக்கியது. அப்போது வயிற்று வலியும் ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்து ராணி கொடுத்த புகாரில், வயிற்று வலியால் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கல்யாண ஆசையே இல்லாமல் இருந்தார்:
ஷோபனாவின் தாயார் ராணி, வைரம் நாடக சபாவில் நடிகையாக இருந்துள்ளார். அவர் கூறியதாவது:
எங்களது சொந்த ஊர் திருச்சி. கணவர் மாவூர் ஜெயராமன். ஆனந்தி, ஷோபனா என்ற இரண்டு மகள்கள். ஷோபனாதான் இளையவள். அவளுக்கு வந்த செக்கைதான் வங்கியில் போடச் சென்றேன்.
திரும்பி வந்தபோது கதவு உள்பக்கம் சங்கிலியால் மட்டுமே பூட்டியிருந்தது. இதனால் நானே திறந்து விட்டு உள்ளே சென்றபோது அவள் தூக்கில் தொங்கி கொண்டிருந்தாள். என்ன செய்வது என்று நினைப்பதற்குள் துப்பட்டா அறுந்து அவள் கீழே விழுந்தாள். அப்போது உயிர் இருந்தது. போன் செய்து 45 நிமிடத்துக்கு பிறகுதான் ஆம்புலன்ஸ் வந்தது. அதற்குள் இறந்து விட்டாள்.
மூத்த மகள் ஆனந்தி கணவருடன் தி.நகரில் வசிக்கிறார். மருமகன் குருசங்கரும் திரைப்பட இயக்குனர் தான். எனக்காக ஷோபனா திருமணமே வேண்டாம் என்று இருந்தாள். ஷோபனா ஒருவனை காதலித்தார். அவனை திருமணம் செய்யவும் ஏற்பாடு நடந்தது.
ஆனால் சில காரணங்களால் திருமணம் நடைபெறவில்லை. அதன் பிறகு திருமணத்தில் ஆசையே இல்லை என்று என்னுடனே இருந்தாள். அவளுக்காக ஆப்பிள் வாங்கி வந்தேன். ஆனால் அவள் இறந்து விட்டாள் என்று கண்ணீர் விட்டார்.
வயிற்று வலிதான் காரணமா?
ஷோபனா 15 வயது முதலே நாடகங்களில் நடித்து வந்துள்ளார். தற்போதும் பல நாடகங்களில் நடித்து வந்துள்ளார். டிவிக்களில் சிரிப்பு நிகழ்ச்சியிலும் நடித்துள்ளார். பொங்கலுக்கு வெளிவரவுள்ள இளைஞன், சிறுத்தை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களிலும், சுமார் 100 படங்களிலும் அவர் நடித்துள்ளார். உடல் வலிக்காக ஒரு நடிகை தற்கொலை செய்திருக்க மாட்டார். வேறு காரணங்கள் இருக்கலாம். அல்லது சினிமாவில் யாராவது அவரை ஏமாற்றியிருக்கலாம் என்று சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர்.