சென்னை: தமிழ்ப் படங்களுக்கென்று ஒரு முத்திரை இருக்கிறது.. அதிலும் ஆக்ஷன் படங்கள் என்றால் சில பல சமாச்சாரங்கள் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அதில் நடித்தவர்களுக்கே கூட ஒரு மாதிரி இருக்கும்.
அந்த அடிப்படை திரைப்பட விதிகளுக்குட்பட்டு கோலிவுட்டில் ஒரு படம் உருவாகிறது. பெயர் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்.
இது ஒரு ரஜினி பட பாட்டு வரிதான். ஆனால் இதையே இப்போது படத் தலைப்பாக்கி விட்டார்கள். கொஞ்சம் உற்றுக் கேட்டால் எவனா இருந்தா எனக்கென்ன என்ற அர்த்தம் தொணிக்கும் இதில்.
பரசுராமன் என்பவர் இயக்குகிறார். படத்தில் யார் நடிக்கிறார், நடிக்கவில்லை என்ற கதையை விட்டு விடுவோம். இந்த ஸ்டில்களைப் பார்த்தாலே படம் பக்கா ஆக்ஷன் படம் என்பதை மட்டும் புரிந்து கொள்ளமுடியும்.
வழக்கமாக தமிழ் சினிமாவில் சகதிச் சண்டை ரொம்ப பிரபலமானது. சகலகலாவல்லவன், முரட்டுக்காளை என அந்தக் காலத்து சூப்பர் ஹிட் படங்களில் தவறாமல் ஒரு சகதிச் சண்டை இடம் பெறும். விக்ரமின் சாமி படத்திலும் கூட ஒரு சண்டை வைத்து ஹிட் ஆக்கினர். இந்த ராமன் ஆண்டாலும் படத்திலும் கூட அது இருக்கிறது.
போலீஸ் யூனிபார்ம் போட்டு நடித்தால் கண்டிப்பாக ஒரு ஷாட்டில் அதி வேகமாக ஹீரோ முறைத்த கண்கள், விரைத்த மீசை, முறுக்கிய உடலுடன் படு வேகமாக ஓடி வருவது போல ஸ்லோ மோஷனில் காட்டுவார்கள் - காட்டியாக வேண்டும். அதை இந்தப் படத்திலும் ஹீரோ செய்கிறார்.
அடுத்து பறக்கும் கார்.. அதாவது பரபரப்பான கார் காட்சி. முன்பெல்லாம் அம்பாசடர் காரில் ஜெய்சங்கர் வில்லனைத் துரத்திக் கொண்டு ஓடுவார்..ஸாரி ஓட்டுவார். பிறகு படிப்படியாக மாறி டாடா சுமோவில் வந்து நின்றது. அதையும் விவேக் ஒரு படத்தில் கிண்டலடிக்க, இப்போது ஸ்கார்பியோ காரை வைத்துக் கொண்டு பட்டையைக் கிளப்புகிறார்கள்.
ஸ்கார்பியோ காரை ஓட்டியபடியே சைடில் சுடுவார்கள். நேரே சுடுவார்கள், கீழே சுடுவார்கள், நாலாபக்கத்திலும் சுடுவார்கள். காருக்கும் ஒன்றும் ஆகாது..அதன் டயர்களுக்கும் ஒன்றும் ஆகாது.. அதாவது அதை ஹீரோ ஓட்டினால். இதையே வில்லன் ஓட்டினால், ஸ்கார்பியோவை மேலே பறக்க விட்டு கீழே வரும்போது வெடிக்க வைத்து விடுவார்கள். இந்தப் படத்திலும் ஸ்கார்பியோ சண்டை இருக்கிறதாம்.
செங்கல் சுவர் ஒரு கூடுதல் ஆட் ஆன் வசதி. ஹீரோவை ஸோலோவாக சுவரோரமாக அல்லது சுவரைப் பார்க்க நிறுத்தி வைத்து சில பல போஸ்களைக் கொடுக்க வைப்பார்கள். அல்லது பாட வைப்பார்கள். பல படங்களில் பார்த்திருப்போம். இதிலும் ஒரு சுவர் வருகிறது.. ஹீரோவும் நிற்கிறார்.. சுவருக்கு பச்சை நிறத்தை அடித்து வைத்துள்ளனர்.!
எனவே ஆக்ஷன், ரொமான்ஸ் படங்களுக்குரிய பல்வேறு முக்கிய அம்சங்களும் கலந்து காணப்படுவதால் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் ஒரு பக்கா ஆக்ஷன் கதையாக மாறி ரசிகர்களை புல்லரிக்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றே தோன்றுகிறது.