மெட்டி ஒலி தொடரில் அலட்டல் மாப்பிள்ளையாக நடித்து கோலங்கள் இயக்கிய திருச்செல்வத்தை அத்தனை சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. வெற்றிகரமான அந்த தொடருக்குப் பின்னர் மாதவியை ஆரம்பித்த வேகத்தில் பாதியிலேயே அதிலிருந்து விலகிவிட்டார். இப்பொழுது கலைஞர் தொலைக்காட்சியில் பொக்கிஷம் தொடரை தயாரித்து இயக்கிவருகிறார். தனது இனிய பயணங்களை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுக்காவிலுள்ள 'நாடியம்' தான் எனக்கு சொந்த ஊர், எங்களது விவசாயக் குடும்பம், அப்பா வேலுச்சாமி, அம்மா சரஸ்வதி, இரண்டு அக்கா செல்வி, மாதவி. நான் தான் கடைக்குட்டி, என் மனைவி பெயர் பாரதி. ஒரே மகள் பிரியதர்ஷினி. வீட்டில் மகளை 'அபி' என்று செல்லமாக அழைக்கிறேன். அழகான அன்பான சிறிய குடும்பம்.
தஞ்சை பூண்டி கல்லூரி பி.எஸ்.சி., பிசிக்ஸ் படித்தேன். 1988ல் சென்னை திரைப்படப் பயிற்சி கல்லூரி சேர்ந்து, 1991ல் படிப்பை முடித்து வெளியே வந்து சவுண்ட் என்ஜினியராக ஐந்தாண்டு பணியாற்றினேன். நான் திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் திருமுருகன் என்னுடன் கூடப் படித்தவர். இருவரும் ஒரேசெட். அப்போது திருமுருகன் 'காவேரி' என்றொரு சீரியலை இயக்கினார் அவருடன் அசிஸ்டெண்ட் டைரக்டராக சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார்.
அடுத்து திருமுருகன் இயக்கிய மெகா சீரியலான 'மெட்டிஒலி'யிலும் நான் அசோஸியேட் டைரக்டராக என் பணியை தொடர்ந்தேன். அசோஸியேட் வேலையோடு 'மெட்டிஒலி'யில் மாப்பிள்ளை சந்தோஷ் கதாபாத்திரத்தில் என்னை நடிக்கும்படி சொன்னார். அதனால் நடிப்பிலும் நல்ல பெயரும் கிடைத்தது. எனக்கும் நடிப்பு வரும் என்கிற நம்பிக்கை எனக்குள் ஏற்படுத்தியது. இயக்குநர் பயிற்சியோடு நடிப்பும் தெரிந்துகொண்டேன். பின்னர் 'கோலங்கள்' மெகா தொடர் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'கோலங்கள்' நெடுந்தொடர் ஐந்து வருடங்கள் ஒளிபரப்பானது.
இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் பொக்கிஷம் தொடர் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. என்னைப் பொருத்தவரை நல்ல மனித நேயம் உள்ள மனிதர்களின் குணத்தை தான் பொக்கிஷம் என்பேன். கதை, திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம் நடிப்பு என இதில் எனக்கு பல வேலைகள் இருக்கின்றன. அதனால் ரொம்ப பிஸியாக இருக்கிறேன். இந்த தொடரின் நாயகி மீரா கிருஷ்ணா. மலையாளத்தில் ரெண்டு படங்கள் நடிச்சிருக்காங்க. மலையாள தொடர்களிலும் நடிச்சிருக்காங்க. இந்தக் கதைக்கு புதுசா யாராவது இருந்தால் நல்லா இருக்கும்னு தேடினோம். அப்ப நடிகை வனிதா மேடம்தான் மீராவை பற்றி சொன்னாங்க. சரின்னு வரச் சொல்லி பார்த்தோம். கதைக்கு பொருத்தமா இருந்தாங்க. அவங்களையே செலக்ட் பண்ணிட்டோம்.
பொக்கிஷம்ங்கிற வார்த்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தையும் கூட, கோலங்கள் தொடரில் கூட நிறைய இடத்தில் நட்பை பற்றி சொல்லும் போது பொக்கிஷம்ங்கிற வார்த்தையை உபயோகப்படுத்தியிருப்பேன்.
அப்போதே அடுத்த தொடர் பண்ணும்போது பொக்கிஷம்னு தான் டைட்டில் வைக்கணும்னு நினைத்திருந்தேன். இந்த தொடரின் கதையும் அதற்கு பொருத்தமா அமைந்ததால் அந்த தலைப்பையே வைத்துவிட்டேன்.
ஒரு தாய்க்கு மகன் பொக்கிஷம், ஒரு மனிதனுக்கு நல்ல நண்பன் ஒரு பொக்கிஷம். இப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நல்ல கேரக்டர்கள் வருவார்கள். அதை நீங்கள் தொலைத்துவிட்டீர்கள் என்றால். உங்கள் பொக்கிஷத்தை இழந்து விடுவீர்கள் ஆனால் அதன்பிறகு நீங்கள் தேடி அடைகிற பொக்கிஷம் என்பது உயிரற்ற வெறும் பொருட்களாக தான் இருக்கும் அதில் முழுமையான சந்தோஷம் கிடைக்காது எனவே நமக்கு கிடைத்த பொக்கிஷத்தை தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறிவிட்டு சூட்டிங்கிற்கு கிளம்பினார் திருச்செல்வம்.