சில்க் ஸ்மிதா சாவில் மர்மம்...! - சகோதரர் மீண்டும் புகார்


குடும்பப் பாங்காக நடிக்க விரும்பிய என் அக்கா ஸ்மிதாவை சொத்துக்காக சில்க் ஸ்மிதா என்ற கவர்ச்சி நடிகையாக்கிவிட்டனர். அவர் இறந்தது தற்கொலை அல்ல, சாவில் மர்மம் இருக்கிறது," என்று மீண்டும் புகார் கூறியுள்ளார் ஸ்மிதாவின் ஒரே தம்பி நாகவர பிரசாத்.

1996-ம் அண்டு சில்க் ஸ்மிதா உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் போஸ்ட்மார்ட்டத்துக்காக வந்தபோது, ஆந்திராவிலிருந்து பதறியடித்துக் கொண்டு வந்திருந்தனர் நாகவர பிரசாத்தும் அவர்கள் தாயாரும்.

மருத்துவமனை வளாகத்திலேயே, 'ஸ்மிதாவை கொலை செய்துவிட்டனர், சொத்துக்காக கொன்னுட்டாங்க. அதை விசாரிங்க', என்று கதறியழுதனர்.

ஆனால் போலீசார் எதையும் கண்டுகொள்ளவில்லை. இந்த சாவில் இயற்கையாவே ஒரு டஜன் சந்தேகக் கேள்விகளை அன்றைக்கு டிவி - பத்திரிகைகள் எழுப்பியும், போலீசார் பிடிவாதமாக அதை தற்கொலை என்று கூறி கோப்பை மூடிவிட்டனர். சில்க்கின் கூடவே இருந்தவர் என்று கூறப்பட்ட 'தாடிக்காரர்' என்ற நபரையும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர்.

15 ஆண்டுகள் கழித்து சில்க்கின் சாவை மீண்டும் நினைவூட்டியுள்ளது, அவரது வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர் இந்திப் படம்.

தன் அக்கா சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக எடுப்பதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தார் நாகவர பிரசாத். ஆந்திர உயர் நீதிமன்றத்தில் ரிட் வழக்கும் தொடர்ந்தார். ஆனால் அவர் மனு தள்ளுபடியாகி, இப்போது படமும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகிவிட்டது.

இந்த நிலையில், மீண்டும் சில்க் ஸ்மிதா சாவில் மர்மம் இருப்பதாக புகார் கூறியுள்ளார் நாகவர பிரசாத்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "நானும், சில்க் ஸ்மிதாவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தோம். அப்பா எங்கோ ஓடிப்போய்விட்டார். சாப்பாட்டுக்கே கஷ்டம். சில்க் ஸ்மிதாவுக்கு 17 வயது இருக்கும்போது அன்னபூர்னம் என்ற பெண் சென்னைக்கு அழைத்து போய் சினிமாவில் நடிக்க வைத்தார்.

சில்க் ஸ்மிதாவுக்கு சிறு வயதிலேயே திருமணம் நடந்தது, கணவன் ஓடிவிட்டான் என்றெல்லாம் அப்போது வதந்திகள் வந்தன. அவை எதுவும் உண்மை கிடையாது. சில்க் ஸ்மிதா முன்னணி நடிகையாக இருந்தபோது திருமணமாகி குழந்தைகளுடன் இருந்த ஒரு தாடிக்காரன் திடீரென வந்து ஒட்டிக்கொண்டார். கால்ஷீட் உள்ளிட்ட சினிமா சம்பந்தமான எல்லா வேலைகளையும் அந்த நபர்தான் கவனித்தார். அந்த நபரை சில்க் ஸ்மிதா ரொம்ப நம்பினார்.

ஒருநாள் வீடு ஒன்றை விலை பேசினார். அந்த வீட்டை தனது பெயரில் வாங்க அக்காள் விரும்பினார். ஆனால் கூட இருந்த நபர் தனது பெயரில் வாங்கும்படி நிர்ப்பந்தித்தார். இதனால் இருவருக்கும் தகராறு மூண்டது. சாவதற்கு சில நாட்களுக்கு முன் எனது தாய் சென்னை சென்று சில்க் ஸ்மிதாவுடன் தங்கிவிட்டு வந்தார். அவர் வந்த மூன்றாவது நாள் சில்க் ஸ்மிதா மின்விசிறியில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது.

நாங்கள் அலறியடித்து ஓடினோம். எங்களிடம் என் வாழ்க்கையில் நிறையபேர் விளையாடிவிட்டனர். வாழ்க்கையே நாசமாகிவிட்டது என்று சில்க் ஸ்மிதா எழுதியது போன்ற ஒரு கடிதம் கொடுத்தனர். அதில் இருந்தது சில்க்ஸ்மிதா கையெழுத்து இல்லை. ஆதாரங்களை அழித்துவிட்டனர். ஸ்மிதா சாவில் மர்மம் இருக்கிறது.

அலைகள் ஓய்வதில்லை போன்று குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்கத்தான் விரும்பினார். ஆனால் காசுக்காக அவரை கவர்ச்சி நடிகையாக்கி விட்டனர். அவரை வைத்து மற்றவர்கள் சம்பாதித்தனர். இப்போதும் அதுதான் நடக்கிறது. செத்த பிறகும் அவரை மோசமாக சித்தரித்து பணம் பார்க்கிறார்கள். பாவம் என் அக்கா, பரிதாபமாக உயிரை விட்டதுதான் மிச்சம்," என்றார்.
 

கோச்சடையான்... இசை ஏ ஆர் ரஹ்மான்!


ரஜினி அடுத்து நடிக்கும் முப்பரிமாண படம் கோச்சடையானுக்கு இசையமைக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.

இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் படத்தின் இயக்குநரான சௌந்தர்யா ரஜினி.

இந்த 2011ம் ஆண்டு ஏ ஆர் ரஹ்மான் ஒரு தமிழ்ப் படத்துக்குக் கூட இசையமைக்க ஒப்புக் கொள்ளவில்லை. 2010ன் இறுதியில் ராணாவுக்கு ஒப்புக் கொண்டார். அந்தப் படமும் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போன நிலையில், இவர் ஒப்புக் கொண்டுள்ள ஒரே தமிழ்ப் படம் கோச்சடையான்தான் என்கிறார்கள்.

இதுகுறித்து சௌந்தர்யா கூறுகையில், "நான் எப்போதுமே ரஹ்மானுடன் பணியாற்ற வேண்டும் என்று விரும்புபவள். அவர் மீது அத்தனை அன்பு, மரியாதை எனக்கு. அவர்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர்," என்று குறிப்பிட்டுள்ளார்.

முத்து, படையப்பா, பாபா, சிவாஜி, எந்திரனைத் தொடர்ந்து, கோச்சடையானில் ரஜினியுடன் கைகோர்க்கிறார் ரஹ்மான் (ரிசல்ட் தெரியாத சுல்தான், அடுத்த ஆண்டு தொடங்கப் போவதாக கூறப்படும் ராணாவுக்கும் இவர்தான் இசை!)
 

விஜய்யுடன் இணையும் விஜய்!!


இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவில் இரண்டு விஜய்கள் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். முன்னவர் நடிகர். முன்வரிசை நாயகர்களுள் ஒருவர் (அவ்வப்போது சறுக்கினாலும்). பின்னவர் திறமையான இயக்குநர் (ஹாலிவுட் படங்களை கொஞ்சம் ஜெராக்ஸ் எடுத்தாலும்!)

இந்த இருவரும் அடுத்து ஒரு படத்துக்காக இணையப் போகிறார்கள்.

பிரபல பைனான்ஸியரான சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பவர் ஜிவி பிரகாஷ் குமார் (பெரும்பாலும் அந்நிய இசைக்கலைஞர்களின் ஆல்பங்களே இவருக்கு துணை!). நடிகர் விஜய் படத்துக்கு இவர் முதல்முறையாக இசையமைக்கிறாராம். அந்த உற்சாகத்தில் படம் குறித்த தகவல்களை ட்விட்டரில் கொட்டியுள்ளார்!

ஏ ஆர் முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு இந்தப் புதிய படத்துக்கு நடிகர் விஜய் தேதிகள் கொடுப்பார் என்கிறார்கள்.

ஆனால் இடையில் கவுதம் மேனனின் 'யோஹன்' படத்துக்கும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் விஜய். சீமானுக்கு வேறு வாக்கு கொடுத்து கிட்டத்தட்ட ஏமாற்றியுள்ள நிலையில், இந்தப் புதிய படத்துக்கு கமிட் ஆகியுள்ளார் விஜய்!

விஜய் படமென்றால், அறிவிப்பு வந்த பிறகும் கூட ஒன்றும் உறுதியாக சொல்ல முடியாது போலிருக்கிறதே!

சரீ.... ஜோடி யாரு... அமலா பாலா?!
 

நாயைப் பிடிக்காதவரைக் கட்டிக்கிட்டு நான் என்ன பண்றது? - த்ரிஷா


திடீரென்று ஒரு நாள் மாப்பிள்ளை பார்ப்பதாக செய்தி வரும்... அடுத்த நாளே த்ரிஷா தெலுங்குப் படத்தில் ஒப்பந்தம் என்றொரு செய்தி.

இன்னொரு நாள் த்ரிஷாவுக்கு அமெரிக்க தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் என்ற செய்தி... இன்னும் இரு தினங்களில், தமிழில் விஷாலுடன் புதுப்படத்தில் ஒப்பந்தம் என்ற அறிவிப்பு...

என்னதான் நடக்கிறது? புதிய வாய்ப்புகளைப் பிடிக்க த்ரிஷா கையாளும் உத்தியா... 'கால்ஷீட் வேணும்னா இப்பவே வாங்க... இல்லன்னா கல்யாணம்தான்,' என்று மறைமுகமாக சொல்ல வருகிறாரா?

த்ரிஷாவிடம் கேட்டால், "ம்ஹூம்... நான் அப்படியெல்லாம் கிடையாது" என்கிறார்.

"இன்னமும் ஓடிப்போய் சான்ஸ் கேட்கும் நிலையிலா நான் இருக்கேன்.... எனக்கான ரோல்களை நான் மட்டும்தான் பண்ணமுடியும். அதனால்தான் என்னைத் தேடி வாய்ப்புகள் வருகின்றன. கல்யாணம் பண்றது பத்தி இன்னும் முடிவு பண்ணல. என்னைப் புரிந்தவர்தான் எனக்கு கணவனாக முடியும்.

காரணம், எனக்கு நாய்கள்னா ரொம்பப் பிரியம். நிறைய நாய்கள் வளர்க்கிறேன். ஆனால் நாயே புடிக்காத ஒருத்தரைக் கட்டிக்கிட்டு நான் என்ன செய்வேன்... என் லைஃபை அப்புறம் யோசிக்கவே முடியாதே. அதனால சகல விதத்திலும் என்னைப் புரிஞ்சவர்தான் கணவராக இருக்கணும். அப்படியொருத்தரை நான் இன்னும் பார்க்கவே இல்லையே," என்கிறார் த்ரிஷா.

அம்மா...டி!
 

அமிதாப்பைக் கவர்ந்த கொலவெறி-தனுஷுக்குப் பாராட்டு


மும்பையில் இந்தி நடிகர் அமிதாபச்சனை சந்தித்த தனுஷை, கொலவெறி பாடலுக்கான வாழ்த்துகளை பெற்று கொண்டார்.

3 படத்தில் தனுஷ் சொந்தமாக பாடல் எழுதி பாடியுள்ள கொலவெறிப் பாட்டுதான் இப்போது தமிழ் கூறும் நல்லுலகை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரை ரசிகர்களையும் ஆட்டிப்பைத்து வருகிறது. பாடல் மெகா ஹிட்டானதால் தனுஷ் புகழ் மழையில் நனைந்து வருகிறார். தனுஷின் கொலவெறி பாடலை கேட்ட அமிதாப், தனது டுவிட்டர் தளத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார்.

தனுஷின் மாமனாரும் தமிழ் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த்தும், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாபச்சனும் நெருங்கிய நண்பர்கள். இந்த நிலையில் மும்பை சென்ற தனுஷ், அமிதாப்பச்சனை நேரில் சந்தித்து பேசினார். இதற்காக தனது மகன் அபிஷேக்கை மும்பையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த தனுஷை அழைத்து வர அனுப்பினார் அமிதாப். இதைக் கண்டு சிலித்துப் போய் விட்டாராம் தனுஷ்.

அபிஷேக்பச்சனின் காரில் அவரது வீட்டுக்கு தனுஷ் சென்றார். அப்போது வீட்டு வாசலில் காத்திருந்த அமிதாப்பச்சன், அவரை வீட்டிற்குள் வரவேற்றார். அதன்பிறகு தனுஷுடன் அமிதாப்பச்சன் நீண்டநேரம் பேசினார். அப்போது கொலவெறி பாடல் குறித்து அமிதாப் பச்சன் பாராட்டினார்.

அந்த சந்திப்புக்கு பிறகு அபிஷேக்பச்சனுடன் மிஷன்இம்பாசிபிள் ஆங்கில படத்தின் சிறப்பு காட்சியை காண தனுஷ் தியோட்டருக்கு புறப்பட்டு சென்றார்.
 

எந்திரன் கதை உரிமை விவகாரம் - டிசம்பர் 9-ம் தேதி விசாரணை!


எந்திரன் படத்தின் கதைக்கு உரிமை கோரும் எழுத்தாளர் தமிழ்நாடன் மனு மீது வரும் டிசம்பர் 9-ம் தேதி விசாரணை தொடங்குகிறது. அன்றைய தினம் சன் பிக்சர்ஸ் அதிபர் கலாநிதி மாறன் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு ரோபோவுக்கு பெண் மீது காதல் வந்தால் என்ன ஆகும்? என்ற கதை முடிச்சுதான் எந்திரன் - தி ரோபோவாக வெளியானது. ஷங்கர் இயக்கி, சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த இந்தப் படம் இந்தியாவின் மிக பிரமாண்ட படமாகவும், அதிக வசூலைக் குவித்த படமாகவும் திகழ்கிறது. இந்தக் கதை தன்னுடையது என்றும் எழுத்தாளர் சுஜாதாவுடன் இணைந்து இதற்கு திரைக்கதை வசனம் எழுதியதாகவும் ஷங்கர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் படம் வெளியாகி சில வாரங்கள் கழித்து, அதன் கதைக்கு உரிமை கோரினார் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர். ஒரு மாதப் பத்திரிகையில் 1996-ல் இவர் எழுதிய ஜூகிபா என்ற கதைதான் எந்திரனாக படமாக்கப்பட்டது என அவர் போலீசில் புகார் செய்தார்.

ஆர்னிகா நாசர் என்பவரும் இதேபோல ஒரு புகாரைக் கிளப்பினார். பின்னர் அமைதியாகிவிட்டார்.

தமிழ்நாடன் புகாரைப் பதிவு செய்து கொண்டது காவல் துறை. ஆனால் கலாநிதி மாறனை புகாரில் சேர்க்க முடியாது என போலீஸ் மறுப்பதாக குற்றம்சாட்டிய தமிழ்நாடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் சங்கர், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீது சிவில் வழக்கு தொடர்ந்தார். எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கதைத் திருட்டு குறித்து இன்னொரு வழக்கையும் பதிவு செய்தார்.

இந்த வழக்கில் ஆஜராகுமாறு சங்கர் மற்றும் கலாநிதி மாறனுக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அவர்கள் இருவரும் ஆஜராகாமல் இருக்க இடைக்கால தடை பெற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், இந்த தடையை விலக்கி, அவர்களை ஆஜராக உத்தரவிடக்கோரி எழுத்தாளர் தமிழ்நாடன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, இனியும் கால நீட்டிப்பு தரமுடியாது. எனவே வழக்கில் ஆஜராகுமாறு கூறினார்.

ஆனால் கலாநிதிமாறன் தரப்பு மேலும் அவகாசம் கேட்டதால், ஒரு வாரம் அவகாசமளித்த நீதிபதி, வரும் 9-ம் தேதி கட்டாயம் நேரில் ஆஜராகவேண்டும் என்று கூறி, வழக்கை அதே தேதியில் விசாரணைக்கு எடுத்துக் கொல்வதாகக் கூறியுள்ளார்.

எனவே, அந்தத் தேதியில் இயக்குநர் சங்கரும், கலாநிதி மாறனும் நீதிமன்றத்தில் ஆஜராவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுவாக இந்த மாதிரி வழக்குகளின் நோக்கம் செட்டில்மெண்ட்டில் முடிந்துவிடும். எந்திரன் கதை உரிமை வழக்கில் சங்கர், கலாநிதி மாறன் தரப்பு கடைசி வரை வாதாடுமா... செட்டில்மெண்டுக்கு முன்வருமா? பார்க்கலாம்!
 

சன் பிக்சர்ஸுடன் சமரசமான திரையரங்க உரிமையாளர்கள்!


நீயா நானா என்று முஷ்டி உயர்த்திக் கொண்டிந்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கமும் சன் பிக்சர்ஸும் ஒருவழியாக சமாதானமாகிவிட்டனர்.

சன் பிக்சர்ஸ் தரவேண்டிய பாக்கித் தொகை ரூ 4 கோடி குறித்து வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் பேசித் தீர்த்துக் கொள்வதென தயாரிப்பாளர் சங்கம் முன்னிலையில், இருதரப்புக்கும் ஒப்பந்தமாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்களால் தடை அறிவிக்கப்பட்ட படங்கள் வெளியாவதில் நீடித்த சிக்கல் விலகியது.

முன்னதாக, "எங்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை சன் பிக்சர்ஸ் கொடுக்காததால், அந்த நிறுவனம் தயாரித்து வெளியிடும் படங்களுக்கும், சன் டி.வி. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை பெறும் படங்களுக்கும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை'' என்று திரையரங்க உரிமையாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர்.

இதைத்தொடர்ந்து, 'ஒஸ்தி', மம்பட்டியான் படங்கள் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த சிக்கல் நேற்று தீர்ந்தது.

இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "திரையரங்க உரிமையாளர்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் உள்ள பிரச்சினை குறித்து, ஜனவரி 31-ந் தேதிக்குள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முழு ஒத்துழைப்பை தருவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் உறுதி தரப்பட்டது. எனவே ஒஸ்தி உள்ளிட்ட படங்கள் வெளியாக முழு ஒத்துழைப்பு தருவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்று கூறப்பட்டுள்ளது.
 

மறுபடியும் ரஜினி - ஷங்கர்? - றெக்கை கட்டிப் பறக்கும் வதந்தி!


ரஜினிகாந்தும் இயக்குநர் ஷங்கரும் மீண்டும் இணைந்து படம் பண்ணப் போகிறார்கள் என்பதுதான் கோடம்பாக்கத்தை கலக்கி வரும் பரபரப்பான.... வதந்தி!

கோச்சடையானுக்கு 10 நாட்கள் மட்டும்தான் ரஜினி கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும், அந்த ஷூட்டிங் முடிந்த கையோடு ஷங்கர் படத்தில் அவர் நடிப்பார் என்றும், ரஹ்மான் இசை அமைப்பார் என்றும் அந்த வதந்தி தெரிவிக்கிறது. அது மட்டுமல்ல... கதை விவாதம் கூட தொடங்கிவிட்டதாம்.

அப்ப ராணா... அது சந்தேகம்தான் என்கிறது இந்த வதந்தி.

இதுகுறித்து ரஜினி தரப்பில் விசாரித்தபோது, எந்திரன் வெளியான நேரத்திலிருந்தே இப்படித்தான் ஏதாவது ஒரு கதையை கிளப்பிவிடுகிறார்கள். அதற்கெல்லாம் முக்கியத்துவம் தரவேண்டாம் என்கிறார்கள்.

இப்போதைக்கு ரஜினியின் அடுத்த படம் கோச்சடையான்தான். அதற்கடுத்த படம் ராணா. வேறு எந்தத் திட்டமும் இல்லை என்றனர் உறுதியுடன்.
 

கொலவெறி... தமிங்கிலீஷ் பாட்டுக்கு யு ட்யூப் கோல்ட் விருது!


தனுஷ் எழுதிப் பாடி இன்று மிகப் பிரபலமான வீடியோ எனப் பேசப்படும் கொலவெறி என்ற தமிங்கிலீஷ் பாட்டுக்கு யு ட்யூப்பின் கோல்ட் விருது கிடைத்துள்ளது.

தமிழும் இல்லாமல், ஆங்கிலத்திலும் சேராமல் இரண்டும் கெட்டானாக தனுஷ் எழுதிப் பாடிய இந்தப் பாடல் ஊடகங்களின் தயவால் மிகப் பிரபலமாகிவிட்டது.

இணைய செய்தித் தளங்கள் பற்றி மிகத் தவறான கண்ணோட்டம் கொண்டுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு, இணைய வலிமை குறித்து புரிய வைக்க ஒரு வாய்ப்பாகவே இந்தப் பாடல் பார்க்கப்படுகிறது.

ஒரு கோடி பேருக்கும் மேல் பார்க்கப்பட்ட இந்தப் பாடல் குறித்து டைம் பத்திரிகையே தனது இணைய தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த கொல வெறி பாடலுக்கு யு ட்யூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற வகையில் 'யு ட்யூப்கோல்ட்' விருது வழங்கப்பட்டுள்ளது.

ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கும் 3 படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. விரைவில் படத்தின் முழு ஆடியோவும் வெளியாக உள்ளது.

இந்தப் பாடலுக்கு இசையமைத்த அனிருத், ரஜினி குடும்பத்துக்கு மிக நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது!
 

டிசம்பர் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து - திரையுலகினர் உண்ணாவிரதம்!


சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் அக்கிரமங்களைக் கண்டித்தும், அணையைக் காக்கக் கோரியும் தமிழகம் முழுக்க வரும் டிசம்பர் 15-ம் தேதி ஒருநாள் முழுக்க அனைத்து திரைப்பட காட்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன.

இதனை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஏராளமான திரையரங்க உரிமையாளர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில், திரையரங்க உரிமையாளர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பின், சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் பேசுகையில், "முல்லைப்பெரியாறு பிரச்சினையில் கேரள அரசை கண்டித்து, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், சென்னையில் வருகிற 15-ந் தேதி உண்ணாவிரதம் நடைபெற இருக்கிறது.

அன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கும். மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் நடைபெறும். உண்ணாவிரதத்துக்கான இடம் முடிவு செய்யப்படவில்லை. அநேகமாக நடிகர் சங்கம் அல்லது 'பிலிம்சேம்பர்' வளாகத்தில் உண்ணாவிரதம் இருப்போம்.

தியேட்டர் அதிபர்களுடன், தமிழ் திரையுலகின் அனைத்து பிரிவை சேர்ந்தவர்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கிறார்கள்.

காட்சிகள் ரத்து

அன்று ஒருநாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும்.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 1,450 தியேட்டர்கள் உள்ளன. அத்தனை தியேட்டர்களிலும் 15-ந் தேதி, சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும்," என்றார்.

திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் ஸ்ரீதர் உடனிருந்தார்.
 

சென்னையில் திரைப்பட விழா இன்று துவக்கம்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம்


சென்னை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் திரைப்பட விழா சென்னையில் இன்று துவங்குகிறது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் திரைப்பட விழா இன்று(7ம் தேதி) துவங்குகிறது. இன்று துவங்கும் விழா வரும் 11ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடக்கிறது. இது வடபழனி பிரசாத் பிலிம் அன் டிவி அகாடமி அரங்கில் நடைபெறுகின்றது. இந்த விழாவை திரைப்பட இயக்குநர், தொகுப்பாளர் பி.லெனின் தொடங்கி வைக்கிறார்.

திரைப்பட ரசணை பயிலரங்கமாகவும் நடைபெற உள்ள இந்த விழாவிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன் தலைமை வகிக்கினறார்.

திரைப்பட இயக்குநர்கள் பாலுமகேந்திரா, எம். சிவக்குமார், ஹரிஹரன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இந்த விழாவில் மாநிலம் முழுவதிலும் இருந்து பார்வையாளர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.