கருணாஸின் ரகளைபுரம்
கென் மீடியா சார்பில் கருணாஸ் தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் படம் 'ரகளைபுரம்'. அங்கனா ஹீரோயின். முக்கிய வேடத்தில் கோவை சரளா, பரத் ரெட்டி, எம்.எஸ்.பாஸ்கர், பவன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, வேல்ராஜ். இசை, ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள், வைரமுத்து. இப்படத்தை இயக்கும் மனோ கூறுகையில், 'ரசிகர்கள் தொடர்ந்து சிரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் முழுநீள காமெடி படமாக இது உருவாகிறது. சுந்தர்.சி, சுராஜ், ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணியாற்றிய நான், காமெடி நடிகர்களுக்கான நகைச்சுவைப் பகுதிகளை எழுதிய அனுபவம் கைகொடுத்துள்ளது. கருணாஸ், நடிப்பில் இன்னொரு எல்லையைத் தொடுவார். படம் பிரமாண்டமான முறையில் உருவாகிறது' என்றார்.
யானைக்கூட்டத்தில் சிக்கிய மதில் மேல் பூனை படக்குழு
பீனிக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் கண்ணன்ஜி தயாரிக்கும் படம், 'மதில் மேல் பூனை'. விஜய் வசந்த், விபா ஜோடியாக நடிக்கிறார்கள். படத்தை இயக்கும் பரணி ஜெயபால் கூறியதாவது: இது ஆக்ஷன், திரில்லர் படம். விஜய் வசந்த், விபா கதை ஒன்றாகவும் சிறுவர்களின் கதை மற்றொன்றாகவும் இரண்டு கதைகள் செல்லும். இடைவேளையில் இரண்டும் இணையுமாறு திரைக்கதை அமைத்துள்ளேன். பிற்பகுதி கதை அடர்ந்த காடுகளில் நடக்கிறது. இதற்காக தமிழக, கேரள காடுகளில் சிறப்பு அனுமதி பெற்று படமாக்கியுள்ளோம். அச்சன்கோவிலுக்கு மேலே நான்கு கி.மீ உள்ளே சென்றால் பெரிய பள்ளதாக்கு மாதிரியான இடம் இருக்கிறது. இங்கு செல்ல ஒற்றையடி பாதைதான் உண்டு. நடந்து சென்று ஹீரோ, ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தோம். திடீரென்று பத்து பனிரெண்டு யானைகள் கூட்டமாக எங்களை நோக்கி வந்தது. எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கேமரா, உள்ளிட்ட ஷூட்டிங் பொருட்களை அப்படியே போட்டுவிட்டு தூரமாக ஓடினோம். ஆனால், எங்களை நோக்கி வந்த யானைகள் அருகில் இருந்த ஆற்றில் தண்ணீர் குடிக்க இறங்கியதும்தான் எங்களுக்கு நிம்மதி வந்தது. பிறகு ஒரு மணிநேரம் கழித்து யானைகள் சென்ற பின் படமாக்கினோம். படம் முடிந்துவிட்டது. கணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்கள் பிரமாதமாக வந்துள்ளன. ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார்.
பெப்சி அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும்
சின்னத்திரையிலும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள பெப்சி நிர்வாகம், தங்கள் முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் ராதிகா சரத்குமார் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திரைப்பட தயாரிப்பளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிளாலர்கள் சம்மேளனத்துக்கும் (பெப்சி) ஏற்பட்டுள்ள பிரச்னையை தொடர்ந்து, 7ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய, பெப்சி அறிவித்துள்ளது. அத்துடன் வரும் 10-ம் தேதி முதல் சின்னத்திரை தயாரிப்பு தொடர்பான வேலைகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெப்சி நிர்வாகம் எடுத்துள்ள இந்த முடிவு ஏற்கனவே 'சின்னத்திரை தயாரிப்பளர்கள் சங்கத்துடன், எந்த சூழ்நிலையிலும் வேலை நிறுத்தம் செய்ய மாட்டோம்' என்ற ஒப்பந்த விதிக்கு எதிரானது. பெப்சிக்கும், சின்னத்திரை தயாரிப்பளர்களுக்கும் இடையே எந்தபிரச்னையும் ஏற்படாத சூழலில் இந்த அறிவிப்பு சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்கும், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் இன்னல்களையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இதனால் பல தயாரிப்பாளர்கள் வெளி நபர்களை வைத்து வேலை செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். எனவே, அவசர கதியில் பெப்சி எடுத்த வேலை நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முடிவை உடனடியாக வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதனால் பல தயாரிப்பாளர்கள் வெளி நபர்களை வைத்து வேலை செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். எனவே, அவசர கதியில் பெப்சி எடுத்த வேலை நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முடிவை உடனடியாக வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கண்டதும் காணாததும் என்ன கதை?
எஸ்.பி பிலிம்ஸ் மற்றும் பெரியம்மாள் கலைக்கூடம் சார்பில் எஸ்.சங்கரநாராயணன், எஸ்.இந்து, எஸ்.சத்தியமூர்த்தி, எஸ்.மணிமாறன் தயாரிக்கும் படம், 'கண்டதும் காணாததும்'. விகாஷ், சுவாசிகா, ஆர்.சுந்தர்ராஜன், சூரி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, வின்ஷி பாஸ்கி. இசை, வி.ஏ.சார்லி. பாடல்கள்: நந்தலாலா, தமிழமுதன், வசீகரன். படத்தை இயக்கும் சீலன் நிருபர்களிடம் கூறியதாவது: கல்லூரியில் படிக்கும் விகாஷ், சுவாசிகா நட்புடன் பழகுகின்றனர். ஒரு சம்பவத்தால் இருவரும் பிரிய நேரிடுகிறது. அவர்களைப் பிரித்த சம்பவம் எது? அதற்கு காரணமானவர்கள் யார் என்பது கதை. கல்லூரி பின்னணியில் நடக்கும் கதை. புதுமையான கோணத்தில் படமாக்கியுள்ளேன். ஷூட்டிங் முடிந்துவிட்டது. மே மாதம் ரிலீசாகிறது.
இந்தியில் பாட்ஷா
ரஜினி, நக்மா, ரகுவரன் நடித்து தமிழில் ஹிட்டான படம், 'பாட்ஷா'. சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்த இந்தப் படத்துக்கு தேவா இசை அமைத்துள்ளார். 17 வருடங்களுக்கு பிறகு இது, இந்தியில், 'பாஷா'வாக 'டப்' ஆகிறது. பத்ரகாளி பிலிம்ஸ் சார்பில் பிரசாத் தயாரித்துள்ளார். டிஜிட்டல் கலர் டெவலப்பிங் செய்து, புது நெகட்டிவ் உருவாக்கியுள்ளனர். ஒளிப்பதிவு, பி.எஸ்.பிரகாஷ். வசனம், பாடல்கள்: கோபால் ராம். இம்மாத இறுதியில் ரிலீசாகிறது.
பாடகி அனுஷாவின் ஃபேஷன் ஷோவில் சிம்பு, டாப்ஸி
'மங்காத்தா' படத்தில் பாடியவர், அனுஷா தயாநிதி. இவர், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மருமகள். தற்போது 'நெஃபர்டரி' என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் சார்பில் கிண்டி லீ ராயல் மெரிடியன் ஓட்டலில், வரும் 15-ம் தேதி பேஷன் ஷோ நடத்துகிறார். இதுபற்றி நிருபர்களிடம் அனுஷா தயாநிதி கூறியதாவது: ஃபேஷன் ஷோவுக்காக எகிப்து அரண்மனை மாதிரி பிரமாண்ட அரங்கு அமைக்கப்படுகிறது. அதிநவீன 3 டி தொழில்நுட்ப முறையில், நிகழ்ச்சியை 3டி கண்ணாடி இல்லாமல் பார்த்து ரசிக்கலாம். டாப் மாடல்கள் 26 பேர் பங்கேற்கும் பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பாலிவுட்டைச் சேர்ந்த நர்கீஸ் பஹ்ரி மற்றும் சிம்பு, ஆர்யா, ஜீவா, சித்தார்த், டாப்ஸி, சோனியா அகர்வால் ஆகியோர் பங்கேற்கின்றனர். இறுதியில் எங்கள் அமைப்பு சார்பில், அரவிந்த் பவுண்டேஷன் மூலமாக, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நல்வாழ்வுக்காக நிதியுதவி வழங்கப்படுகிறது.
வாழ்க்கை டிஜே ஆல்பம் வெளியீடு
தமிழில், 'சக்கரகட்டி' படத்தில் 'டாக்ஸி டாக்ஸி', 'விண்ணைத்தாண்டி வருவாயா'வில், 'ஓமணப்பெண்ணே', '7ஆம் அறிவு' படத்தில், 'ஓ ரிங்கா ரிங்கா', 'வாரணம் ஆயிரம்' படத்தில், 'அடியே கொல்லுதே' உட்பட ஏராளமான பாடல்களை பாடியிருப்பவர் பென்னி தயாள். இவர் பாடி 'வாழ்க்கை டிஜே' என்ற ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இதில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கிறிஸ்டோபர் பிரதீப் என்பவர் பாடல்களை எழுதியுள்ளார். இசை அமைப்பாளர் சார்லஸ் பாஸ்கோ தயாரித்துள்ளார். இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பிறகு நிருபர்களிடம் பென்னி தயாள் கூறியதாவது:
சினிமாவில் பாட ஆரம்பித்து நான்கு வருடங்கள்தான் ஆகிறது. சில வருடங்களுக்கு முன் லண்டனில் ஒரு விழாவில் கலந்துகொண்டபோதுதான் இப்படியொரு ஆல்பம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. இதில் சார்லஸ் பாஸ்கோவுடன் இணைந்து நானும் இசை அமைத்துள்ளேன். சினிமாவுக்கு இப்போது இசை அமைப்பேனா என்பது தெரியாது. தொடர்ந்து இதுபோன்ற ஆல்பங்களை வெளியிட ஆர்வமாக இருக்கிறேன். இவ்வாறு பென்னி தயாள் கூறினார்.
சினிமாவில் பாட ஆரம்பித்து நான்கு வருடங்கள்தான் ஆகிறது. சில வருடங்களுக்கு முன் லண்டனில் ஒரு விழாவில் கலந்துகொண்டபோதுதான் இப்படியொரு ஆல்பம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. இதில் சார்லஸ் பாஸ்கோவுடன் இணைந்து நானும் இசை அமைத்துள்ளேன். சினிமாவுக்கு இப்போது இசை அமைப்பேனா என்பது தெரியாது. தொடர்ந்து இதுபோன்ற ஆல்பங்களை வெளியிட ஆர்வமாக இருக்கிறேன். இவ்வாறு பென்னி தயாள் கூறினார்.
ரீ என்ட்ரிக்கு காத்திருக்கிறார் சுபா
தமிழில் 'மச்சி', 'திருடிய இதயத்தை', 'சுட்ட பழம்' படங்களில் நடித்த சுபா புஞ்சா கூறியதாவது: தமிழில் சில படங்களில் நடித்துவிட்டு கன்னடத்துக்கு சென்றேன். வாய்ப்புகள் தொடர்ந்து வந்ததால் அங்கேயே தங்கிவிட்டேன். இப்போது கன்னடத்தில் மூன்று படங்களில் நடித்துவருகிறேன். கிளாமராகவே நடித்து வருகிறீர்களே என்கிறார்கள். நானாக கிளாமர் வாய்ப்பைத் தேடி செல்லவில்லை. எனக்கு வரும் கதைகள் அப்படி இருக்கிறது. இப்போது தமிழ், மலையாளப் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளேன். இதற்காக சென்னை வருகிறேன். தமிழில் ரீ என்ட்ரி நன்றாக அமையும் என நம்புகிறேன்.
நமீதாவின் இளமை ஊஞ்சல்
பிரியம் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஆர்.மனோகரன் தயாரிக்கும் படம், 'இளமை ஊஞ்சல்'. மங்கை அரிராஜன் இயக்குகிறார். நமீதா, கிரண், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஷிவானி சிங், ஆர்த்தி ஆகியோருடன் புதுமுகங்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஜே.ஜி.கிருஷ்ணா. இசை, கார்த்திக் பூபதிராஜா. பாடல்கள், பிறைசூடன். படம் பற்றி அரிராஜன் கூறுகையில், "கவர்ச்சியுடன் கூடிய திகில் படம் இது. வித்தியாசமான அனுபவமாக படம் இருக்கும்" என்றார்.