அமெரிக்காவை நனைக்கப் போகும் இசைஞானியின் இசை மழை

Ilayaraja Live New Jersey

இசைஞானி இளையராஜா பிப்ரவரி 23ம் தேதி அமெரிக்காவில் முதல் முறையாக நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐட்ரீம்ஸ் நிறுவனம் இந்த நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

நியூஜெர்சி, ப்ரூடென்ஷியல் மையத்தில் இந்த இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடக்கவுள்ளது. ரிஹானா போன்ற பெரிய பெரிய ஆட்களின் இசை நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் இது. இங்குதான் இசை ராஜாங்கம் நடத்த உள்ளார் ராஜா.

இளையராஜாவின் நிகழ்ச்சி குறித்து ஐட்ரீம்ஸ் நிறுவன இணை நிறுவனர் ராஜ்குமார் கூறுகையில், இளையராஜாவின் இசை யாருடனும் ஒப்பிட முடியாதது. மகத்தான இசை மேதை அவர். அவருக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவருடைய நிகழ்ச்சியை அதிலும் அமெரிக்காவில் அவரது முதல் நேரடி நிகழ்ச்சியை நடத்துவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவரும் இதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், அவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல நூறு பாடல்களைப் படைத்துள்ளார். அதிலிருந்து எதைத் தேர்வு செய்வது என்றே தெரியவில்லை. காரணம் அத்தனையுமே முத்துக்கள். இதில் எதை விடுவது... நேரத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. இதனால் நான்கு மணி நேரம் நடைபெறப் போகும் அந்த ஷோவில், இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்களைத் தேர்வு செய்து அதை இடம்பெறச் செய்யவுள்ளோம் என்றார் அவர்.

இளையராஜாவின் இந்த இசை நிகழ்ச்சிக்கு 100 டாலர் முதல் 500 டாலர் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஹரிஹரன், சித்ரா, மனோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாடவுள்ளனர். இந்த நிகழ்ச்சியைக் காண 18000 ரசிகர்கள் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

'பவர் ஸ்டாருடன்' குத்தாட்டம் போட்ட லட்சுமி ராய்!

Now Lakshmi Rai S Turn Get Power

ஒன்பதுல குரு படத்தில் ஹீரோயினாக நடிக்கும் லட்சுமிராய், பவர்ஸ்டார் சீனிவாசனுடன் செம குத்தாட்டம் போட்டுள்ளாராம்.

ஒன்பதுல குரு படத்தில் நடிகர் வினயுடன் ஜோடி சேர்ந்துள்ளார் லட்சுமி ராய். இப்படத்தில் சத்யன், பிரேம்ஜி ஆகிய காமெடியன்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

லட்டு பட பீவர் காரணமாக பவர் ஸ்டாரின் ரேஞ்ச் கண்டபடி உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திடீரென ஒன்பதுல குரு படத்தில் அவர் நுழைக்கப்பட்டார். மேலும், திடீரென ஹீரோயின் லட்சுமி ராயை பவர் ஸ்டார் உடன் சேர்ந்து ஒரு பாட்டுக்கு ஆடச் சொன்னாராம் டைரக்டர் செல்வகுமார்.

முதலில் அய்யய்யே... என்று அரண்டுபோன லட்சுமிராய்க்கு, தன் 'லட்சுமிகரமான' முகத்தை காண்பித்தாராம் பவர். அதன்பின் அதற்கு ஒப்புக் கொண்ட லட்சுமி, பவருடன் ஒரு அசத்தல் ஆட்டம் போட்டாராம். சத்யன் , பிரேம்ஜிக்கு கிடைக்காத வாய்ப்பு பவர் ஸ்டார்க்கு கிடைத்துவிட்டது என்று கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

 

சிக்கலில் சிக்கிய குஷ்பு... டிவிட்டரில் ஆறுதல் சொன்ன சின்மயி!

Chinmayi Supports Kushboo

சென்னை: தி.மு.க.வின் அடுத்தத் தலைவர் யார் என்பது தொடர்பாக குஷ்பு தெரிவித்த கருத்து, அவரது சொந்தக் கட்சிக்குள் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சையினால் குஷ்பு வீடு மீது கல்வீச்சும், திருச்சியில் அவர்மீது செருப்பு வீச்சும் நடந்தது. இது குறித்து குஷ்புவின் கருத்து என்ன என்பதும், அவர் எடுக்கப் போகும் அடுத்தக் கட்ட முடிவு என்ன என்பதும் இப்போது பரபரப்பான கேள்வியாக மாறியிருக்கிறது.

இது உள்கட்சி விவகாரம் ஆகையால் சினிமா பிரபலங்கள், பெரிதாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

பிரபலங்கள் ஆறுதல்

இது தொடர்பாக டுவிட்டரில் குஷ்புக்கு ஆறுதல் சொல்லியுள்ள எஸ்.வி.சேகர், ‘‘வெற்றியை நோக்கிச் செல்லும்போது திரும்பிப் பார்க்கக்கூடாது'' என்று குஷ்புவுக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார்.

சின்மயி ஆதரவு

குஷ்புவுக்கு பாடகி சின்மயி, குஷ்புவுக்கு ஆறுதலும் தேறுதலும் கூறியுள்ளார். ஜாக்கிரதை குஷ்பு, என்று பாடகி சின்மயி, ஆலோசனை வழங்கியுள்ளார்.

சின்மயிக்கு ஆதரவான குஷ்பு

சமீபத்தில், பாடகி சின்மயி சமூக வலைத்தள சர்ச்சையில் சிக்கியபோது, அவருக்கு ஆதரவு தெரிவித்தவர்களில் குஷ்புவும் ஒருவர். அப்போது குஷ்பு தன் ட்விட்டர் பக்கத்தில் "சில ஆண்கள் பெண்களை மட்டமாக நடத்தலாம் என கருதுகிறார்கள். அவர்களுக்கு சின்மயி கொடுத்த தண்டனைதான் சரியானது" என அதிரடியாக கூறியுள்ளார். அதற்கு பதிலாகவே சின்மயி இப்போது குஷ்புவுக்கு ஆறுதல் சொல்லியுள்ளார்.

நலமாக இருக்கிறேன்

குஷ்பு தமது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு ஆறுதல் சொன்ன ரசிகர்களுக்கு, ‘‘நண்பர்களே... நான் நலமாக இருக்கிறேன். ஒரு துரதிர்ஷ்டம் நடந்துவிட்டது. விசாரணை முடியும் வரை அதுபற்றி கருத்து எதுவும் சொல்ல முடியாது. நன்றி'' என்று கூறியுள்ளார்.

 

பெண்களின் மரியாதையை குறைப்பது சினிமா தான்... நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி

Movies Degrade Women S Dgnity Says Lakshmi Ramakrishnan

பெண்களுக்கு என்று தனி மரியாதை இருக்கிறது. அவர்களின் மரியாதையை குறைப்பது சினிமாக்கள்தான் என்று அதிரடியாக கூறியுள்ளார் நடிகையும், சினிமா இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன். சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் சிறப்பான இடத்தை தக்க வைத்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் தனது பயணத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டார் படியுங்களேன்.

சினிமாவில் கதாநாயகனின் அம்மா கதாபாத்திரம், விளம்பரம் என பிஸியாக நடித்தாலும் யுத்தம் செய்த திரைப்படம்தான் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

அந்த படத்திற்காக மொட்டை அடித்துக்கொண்டது ஒரு ஜாலியான அனுபவம். மொட்டை அடித்தால் எதையோ இழந்தது போல நினைப்பார்கள். ஆனால் எனக்கு அப்படி இல்லை. அதே மொட்டையுடன் பட்டுசேலை கட்டிக்கொண்டு, ஜிமிக்கு அணிந்து கொண்டு மலேசியா போயிருந்தேன். எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தார்கள்.

இயக்குநராக மாறினேன்

எனக்கு சினிமா மீதுள்ள காதலால் ஆரோகணம் படம் எடுத்தேன். அதுவரை குறும்படங்கள் மட்டுமே எடுத்த நான் விஜியை வைத்து ஆரோகணம் படம் எடுத்தது பெறும் வரவேற்பை பெற்றது. முதலில் சினிமா இயக்குவது பற்றி பயம் இருந்தது. இப்போது அப்படி இல்லை.

தயாராக இருக்கவேண்டும்

இந்த உலகத்தில் பெண்களுக்கு எதிரான பல கொடுமைகள் நடக்கின்றன. பெண்கள் எப்பவும், எதற்கும் தயாராக இருக்கவேண்டும். டெல்லியில் நடந்த பாலியல் வன் கொடுமை குரூரமானது. அதுபோல பல கொடுமைகள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள தயாராக இருக்கவேண்டும்.

ஆண்களின் மனநிலை மாறனும்

ஒரு பெண் நம்மை எதிர்ப்பதா என்ற எண்ணத்தில்தான் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய தூண்டியுள்ளது. அந்த மாணவி கவர்ச்சியாக உடை அணிந்திருக்கவில்லை. அந்த ஆணை எதிர்த்து பேசியதால்தான் அவளை பலாத்காரம் செய்துள்ளனர். ஆண் என்கின்ற இந்த மனநிலைதான் இதற்குக் காரணம்.

பெண்ணுக்கு மரியாதை

கவர்ச்சியான ஆடைகள் அணிவதுதான் ஆண்களின் மனது பாதிக்க காரணம் என்கின்றனர். பெண்களின் மரியாதை கெட்டுப்போவதற்கு சினிமாவும் விளம்பர உலகமும் காரணமாக இருக்கிறது. ஒரு ஆண் ஸ்ப்ரே அடித்துக் கொண்ட உடன் அவன் பின்னால் ஏராளமான பெண்கள் போவதைப் போல காட்டுகின்றனர். ஆனால் இது தவறுதானே.

சினிமாவிலும் பெண்கள் கவர்ச்சியாகத்தான் பயன்படுத்தப்படுகின்றனர். இதில் அந்த இயக்குநரை மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை. அந்த நடிகைக்கும் இதில் பங்கு உண்டு. நான் இந்த மாதிரி உடை அணிந்து நடிக்க மாட்டேன் என்று கூறலாமே. எனவே பெண்களும் தங்களின் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

குடும்பத்தை கவனிக்கணும்

சினிமா இயக்கம், சின்னத்திரையில் ‘சொல்வதெல்லாம் உண்மை'என்று பிஸியாக போய்க்கொண்டிருக்கிறது. என் பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கிறேன். கொஞ்சம் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்கி அவற்றை கவனித்துவிட்டு அடுத்த படத்தில் கவனம் செலுத்தலாம் என்று இருக்கிறேன் என்று பொறுப்பான அம்மாவாக பதில் சொன்னார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

 

சம்பள விவகாரம்.. மன்னிப்புக் கேட்டேனா? - பத்மப்ரியா விளக்கம்

I Never Apologised With Anyone Says Padmapriya   

சென்னை: சம்பள கமிஷன் விவகாரத்தில் மலையாள தயாரிப்பாளரிடம் மன்னிப்புக் கேட்டதாக வந்த செய்தி தவறானது என்று பத்மப்ரியா கூறியுள்ளார்.

பிரபல தமிழ், மலையாள நடிகை பத்மப்ரியா 'நம்பர் 66 மதுர பஸ்' என்ற மலையாள படத்தில் நடித்தபோது தனது மானேஜருக்கு ரூ.2 லட்சம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று படத்தின் இயக்குனர் நிஷாத் மற்றும் தயாரிப்பாளரிடம் வற்புறுத்தினார்.

ஆனால் மலையாள பட உலகில் இதுபோன்று கமிஷன் தர தடை உள்ளது. எனவே பத்மபிரியா மீது மலையாள தயாரிப்பாளர் சங்கத்தில் நிஷாத் புகார் செய்தார்.

இதையடுத்து படங்களில் நடிக்க அவருக்கு தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு எடுத்தது. உடனே பதறிப் போன பத்மபிரியா தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டதாகவும், இதனால் தடை விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் செய்தி வெளியானது.

இதுகுறித்து பத்மபிரியாவிடம் கேட்டபோது, "நாங்க சுமூகமாக பேசித் தீர்த்துக்கிட்டோம். இப்போ எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை. இது ஒரு கம்யூனிகேஷன் கேப் அவ்ளோதான். அதைப் போய் பெரிசுபடுத்திட்டாங்க," என்றார்.

இந்த விவகாரத்தை பெரிதாக மீடியை முன் கொண்டு வந்து முறையிட்டவரே பத்மப்ரியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரஜினியுடன் இணைகிறார் சஞ்சய் தத்?

Rajinikanth Sanjay Dutt Team Up For Film

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஒரு படத்தில் நடிக்கக் கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரடி இந்திப் படத்தில் நடித்து பல ஆண்டுகள் ஆகின்றன. புலந்தி என்ற படத்தில் அவர் கடைசியாக நடித்தார். அதன் பிறகு ஷாரூக்கானின் ரா ஒன் படத்தில் ஒரு நிமிடக் காட்சியில் தோன்றினார். இதனால் அவரது தமிழ்ப் படங்களை டப் செய்து இந்தியில் வெளியிட்டு வருகின்றனர்.

சிவாஜி, எந்திரன் போன்றவை இந்திப் படங்களுக்கு நிகரான வெற்றியை பாலிவுட்டில் ஈட்டின.

ராணா படத்தை அவர் நேரடியாக இந்தியிலும் உருவாக்க முயன்றார். ஆனால் உடல்நிலை பாதிப்பு அவரது முயற்சியில் தடங்கலாக அமைந்தது. இப்போது அவர் நடித்துவரும் மோஷன் கேப்சரிங் அனிமேஷன் படமான கோச்சடையானை நேரடியாக இந்தியில் வெளியிடுகிறார்.

இந்த நிலையில் ராணா படத்தை இயக்கவிருந்த கேஎஸ் ரவிக்குமார், இப்போது சஞ்சய் தத்தை வைத்து போலீஸ் கிரி என்ற படத்தை இயக்கி வருகிறார். இது தமிழில் வெளியான சாமி படத்தின் ரீமேக் ஆகும்.

இந்தப் படம் முடிந்ததும், மேலும் ஒரு இந்திப் படத்தை இயக்குகிறாராம் கேஎஸ் ரவிக்குமார். இந்தப் படத்தில் ரஜினி நடிக்கிறார் என்றும் அவருடன் சஞ்சய் தத்தும் நடிப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை டிபி அகர்வால் தயாரிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "போலீஸ் கிரி படம் முடிந்ததும் ஒரு மெகா பட்ஜெட் படம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதில் சூப்பர் ஸ்டாரிடம் நடிக்க பேசியுள்ளோம்.

அவருடன் சஞ்சய் தத்தும் நடிப்பார். இருவருக்கும் பொருத்தமான கதை ஒன்றை உருவாக்கி வருகிறார் கேஎஸ் ரவிக்குமார். இந்தப் படத்தை இந்தி மற்றும் தெலுங்கில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

வட இந்திய நாளிதழ்கள் இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்டவை இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. ஆனால் இது எந்த அளவு உண்மை என்பது ரஜினி தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.

 

ஜெயலலிதாவை சந்திக்க விரும்புகிறேன், நேரம் கேட்டுள்ளேன்: கமல்

Kamal Wants Meet Jayalalitha

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தை பெரும் சிக்கல்களுக்கு மத்தியில் நேற்று தமிழ்நாட்டில் திரையிட்டுள்ளார். படத்திற்குப் பெரும் வரவேற்பு. தியேட்டர்கள் நிரம்பி வழிகின்றன. கமல்ஹாசனும் நிம்மதியாகக் காணப்படுகிறார்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் கமல்ஹாசன். அப்போது தனக்கு உறுதுணையாக நின்ற ரசிகர்கள் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் நன்றி கூறினார். குறிப்பாக ரசிகர்கள் குறித்து மிகவும் உருக்கமாக, நெகிழ்ச்சியுடன் பேசினார்.

வீட்டுச் சாவியை அனுப்பிய ரசிகர்கள்

ரசிகர்களின் அன்பை தாம் என்ன செய்து தீர்ப்பேன் என்று கூறிய கமல், ரசிகர்கள் பலர் காசோலையாகவும், பணமாகவும், அவர்கள் வீட்டுப் பத்திரங்களையும், ஏன் வீட்டுச் சாவிகளையும் கூட அனுப்பி தம்மை நெகிழ்வுறச் செய்து விட்டதாக கமல் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இப்படிப்பட்ட ரசிகர்களின் அன்புக்கு, எனது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் கூட அது ஈடாகாது என்றும் கமல் உருக்கமாக பேசினார்.

மீடியா பங்காளிகள்

அதேபோல பத்திரிக்கையாளர்களையும் கமல்ஹாசன் வெகுவாகப் பாராட்டினார்.
மனதளவில் தனது பங்காளிகளாக செயல்பட்டன ஊடகங்கள் என்று கூறிய கமல், ஊடகங்களுக்கு நன்றி கூறிக் கொண்டார்.

மேலும், சககலைஞர்களின் பாராட்டு தமக்கு உழைக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார் கமல்.

இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தாமே எதிர்பார்க்காத அளவிற்கு ரசிகர்கள் வெற்றியை தந்துள்ளதாகக் கூறிய கமல், எனது கடன்களை அடைத்தே தீருவோம் என்ற வெறியுடன் ரசிகர்கள் இந்த வெற்றியை தமக்கு அளித்துள்ளதாகவும் சொன்னார்.

ஜெ.வை சந்திக்க விருப்பம்

முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விருப்பமாக உள்ளதாகவும் அவரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும் கமல் தனது பேட்டியின்போது தெரிவித்தார்.

 

‘ஆதிபகவான்’ படத்தைக் கைப்பற்றியது சன் டிவி

Sun Tv Bags Aadhi Bhagavan

அமீர் இயக்கத்தில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி வரும் ஆதிபகவான் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.

தமிழ் திரையுலகில் படத்தை ரிலீஸ் செய்வதற்கு ஒரு போட்டி ஏற்படுகிறது என்றால் அதன் சேட்டிலைட் உரிமையை யார் பெறுவது என்பதில் மற்றொரு போட்டி நிலவுகிறது. விரைவில் வெளியாக உள்ள ஆதிபகவான் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயம் ரவி, நீத்து சந்திரா ஆகியோரின் நடிப்பில் நீண்ட கால தயாரிப்பில் உள்ள படம் ஆதிபாகவான். இந்த திரைப்படத்தை அமீர் இயக்கியுள்ளார். சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைத்துள்ளார்.

வடசென்னையின் முக்கிய அம்சங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாம். இப்போது தணிக்கைத்துறையினர் கைவசம் படம் உள்ளது. பிப்ரவரி 14ம் தேதி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதால் தங்களுக்கு போட்டு காட்டவேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். விஸ்வரூபம் போல இந்த திரைப்படத்திற்கும் சிக்கல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆதிபகவான் படத்தின் சேட்டிலைட் உரிமை சன் டிவி வசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

விஸ்வரூபம் குறித்து காமிக்ஸ் செய்தி... என்டிடிவி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு

Tn Govt Sues Ndtv Viswaroopam News

சென்னை: விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து அவதூறு வழக்குகளைத் தாக்கல் செய்ய ஆரம்பித்துள்ளது தமிழக அரசு. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தைத் தொடர்ந்து தற்போது என்டிடிவி நிறுவனம் மீது அவதூறு வழக்குப் பாய்ந்துள்ளது.

விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூகப் பிரபலங்கள், மீ்டியாக்களைச் சேர்ந்தவர்கள், அமைப்புகளின் தலைவர்கள், சட்ட நிபுணர்கள் என பல தரப்பினரும் குரல் கொடுத்தனர். இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா, செய்தியாளர்களை அழைத்து விளக்கம் அளித்தார்.

அப்போது விஸ்வரூபம் படம் தொடர்பாக அரசு மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியோர் மீது வழக்குத் தொடரப்படும் என்று அவர் கூறியிருந்தார். அதன்படி தற்போது வழக்குகள் பாயத் தொடங்கியுள்ளன.

சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இந்த நிலையில் தற்போது என்டிடிவி நிறுவனம் மீது வழக்கு பாய்ந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் வழக்கறிஞர் ஜெகன் சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு...

ஜனவரி 31ம் தேதி என்டிடிவியில் விஸ்வரூபம் தடை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான செய்தி, காமிக்ஸ் முறையில் ஒளிபரப்பப்பட்டது. அதில், நடிகர் கமலஹாசன், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் டயலாக் பேசுவதுபோல் கருத்து வெளியிடப்பட்டது.

இந்த செய்தி தமிழக முதல்வரின் நற்பெயருக்கும், தமிழக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும் வகையில் உள்ளது.

சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய விளக்கம் எதுவும் கேட்காமல் மக்களிடம் முதல்வருக்கு உள்ள மரியாதையை கெடுக்கும் வகையில் செய்தியை வெளியிட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் காஷிஸ் குப்தா, என்டிடிவி தலைவர் பிரணாய் ராய், தலைமைச் செயல் அதிகாரி விக்ரம் சந்திரா, செயல் துணைத் தலைவர் கே.வி.எல்.நாராயண ராவ் ஆகியோர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500ன் கீழ் தண்டனைக்கு உரியவர்களாவார்கள்.

எனவே, அவர்கள் மீது அவதூறு சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 

அரசியலில் குதிக்குமாறு சின்ன வயசிலேயே கூப்பிட்டாங்க.. நான் மறுத்துவிட்டேன்! - கமல்

This Is Kamal S Politics

சென்னை: அரசியலில் குதிக்குமாறு என்னை சின்ன வயசிலேயே பல அரசியல் கட்சிகள் கூப்பிட்டனர். ஆனால் அவ்வளவு உயரத்திலிருந்து குதிக்க முடியாது என மறுத்துவிட்டேன், என்றார் கமல்ஹாஸன்.

விஸ்வரூபம் படம் தமிழகத்தில் நேற்று வெளியானது. நேற்று மாலையே நிருபர்களை அழைத்த கமல், படம் பெரும் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "முதல்வர் ஜெயலலிதா என் படத்தை பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்போது அவர் முதல்வராக இருக்கிறார். ஆனால், அவர் மூத்த கலைஞர். படம் பார்ப்பதில்லை என்ற அவருடைய உறுதியை கைவிட்டு, என் படத்தைப் பார்ப்பார் என்று நம்புகிறேன்.

எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது, எனக்கு தெரிந்தது எல்லாம் சினிமா மட்டும்தான். கலைஞர்களை கலைஞர்களாக பாருங்கள்.

இந்தப் பிரச்சினைகளுக்குப் பிறகு நான் அரசியலுக்கு வருவேனா என்று கேட்கிறார்கள். அதை 35 வருடங்களாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு அரசியல் வேண்டாம். தெரியாத விஷயத்தில் இறங்க மாட்டேன்.

நான் சின்ன வயசிலிருக்கும்போதே, அரசியலில் குதியுங்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்தனர். அவ்வளவு உயரத்திலிருந்து குதித்தார் அடிபடும் வேண்டாம் என்று நான்தான் கூறிவிட்டேன்!," என்றார்.

 

பாராட்டுகளைக் குவிக்கும் பாலாவின் பரதேசி!

Bala S Paradesi Gets Rare Reviews

பாலாவின் பரதேசி படத்துக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிய ஆரம்பித்துள்ளன.

இந்தப் படத்தில் நூறாண்டுகளுக்கு முந்தைய தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் இருண்ட வாழ்க்கையை படம்பிடித்துள்ளாராம் பாலா.

ரெட் டீ (எரியும் பனிக்காடு) என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள பரதேசியில், முரளி மகன் அதர்வா, வேதிகா, தன்ஷிகா நடித்துள்ளனர்.

பொதுவாக ஒரு படத்தை முடிக்க ஆண்டுக்கணக்கில் எடுத்துக் கொள்ளும் பாலா, இந்தப் படத்தை மாதக்கணக்கிலேயே முடித்துவிட்டிருக்கிறார். பாலா எடுத்த படங்களில் குறுகிய காலத்தில் உருவான படம் என்ற பெயர் இந்தப் படத்துக்கு கிடைத்துள்ளது.

இந்தப் படம் முடிந்து, பிப்ரவரி 15-ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. சிலர் 22-ம் தேதிதான் வெளியாகும் என்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர்கள் தரப்பில் உறுதியாக எதையும் கூறவில்லை.

இந்த நிலையில் படத்தின் சிறப்புக் காட்சிகளை முக்கிய இயக்குநர்களுக்குப் போட்டுக் காட்டி வருகிறார் பாலா.

படம் பார்த்த பாலாவின் குரு பாலு மகேந்திரா, பாலாவின் ஆகச் சிறந்த படைப்பு இதுவே என்று பாராட்டியுள்ளார். அப்ப விருது நிச்சயம் என திரையுலகம் பேச ஆரம்பித்துள்ளது.

பரதேசி பார்த்த இந்திப் பட இயக்குநர் அனுராக் காஷ்யப், "பாலாவின் படம் பரதேசி பார்த்தேன். நெகிழ்ந்துவிட்டன். அவரது பெஸ்ட் படம் இது," என்று பாராட்டியுள்ளார்.

 

விஸ்வரூபத்தை மிஞ்சிய ஆதிபகவன்... சென்னையில் 60 அரங்குகள்!!

Ameer S Aadhi Bhagavan Release 60 Plus   

சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் மட்டும் 60 தியேட்டர்களில் அமீரின் ஆதி பகவன் வெளியாகிறது.

அமீர் இயக்க, ஜெயம் ரவி - நீத்து சந்திரா நடிப்பில், திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் தயாரிப்பில் கடந்த இரண்டாண்டுகளாக உருவாகி வந்த படம் ஆதிபகவன்.

அதிரடி ஆக்ஷன் கமர்ஷியல் படமாக இதனை உருவாக்கியுள்ளார் அமீர். அவர் இயக்கிய கடைசி வெற்றிப் படம் பருத்திவீரன்தான் என்பதால், அதை மிஞ்சும் வகையில் இந்தப் படத்தை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வந்தார். ஆனால் இடையில் திரையுலக அரசியல், பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடிக்கப் போய் வந்தது என பல சிக்கல்களால் படம் தடைப்பட்டது.

இதில் ஜெயம் ரவிக்கும் அமீருக்கும்கூட மனஸ்தாபம் ஏற்பட்டு, ஆடியோ வெளியீட்டு விழாவில் பகிரங்கமாக வெடித்தது.

இப்போது வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது ஆதிபகவன். இம்மாத இறுதியில் 22-ம் தேதி ஆதிபகவன் வெளியாகிறது.

இந்தப் படத்துக்கு போட்டி போட்டுக் கொண்டு தியேட்டர்கள் அளித்துள்ளனர். சென்னை நகரில் மட்டுமே 40 அரங்குகளும் புறநகர்களில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகளும் அமீர் படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இப்போது விஸ்வரூபம் வெளியாகியுள்ள பெரும்பாலான அரங்குகளில் அடுத்து வெளியாகவிருப்பது ஆதிபகவன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் முதல் முறையாக ரஜினி, கமல், விஜய் அல்லாதவர்களின் படம் ஒன்றுக்கு இத்தனை அரங்குகளை ஒதுக்கியிருக்கிறார்கள். இது அமீர் என்ற படைப்பாளிக்குக் கிடைத்த மரியாதையாகப் பார்க்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 400 அரங்குகளுக்கும் மேல் ஆதி பகவன் வெளியாகிறது.

 

விஸ்வரூப வெற்றி.. தமிழக மக்களுக்கு கமல் நன்றி

சென்னை: விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் தமிழக மக்கள் காட்டிய அன்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

விஸ்வரூபம் திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி இன்று வெளியானது. தமிழ்நாட்டில் 600 தியேட்டர்களில் ஹவுஸ் புல் காட்சிகளாக திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. கமல் ரசிகர்கள் தியேட்டர்களில் உற்சாகமாக படம் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

i feel vindicated says kamal haasan
ரசிகர்களின் வார்த்தைகளில் சந்தோசம் கொப்பளிக்கிறது. இது ஹாலிவுட் தரத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற படத்தைக் கொடுத்த கமலுக்கு நன்றி என்று ரசிகர்கள் கூறினார்கள்.

இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், கூறியதாவது:

தடைகள் பல தாண்டி இன்று விஸ்வரூபம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்பட விவகாரத்தில் தமிழக மக்கள் காட்டிய அன்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

விஸ்வரூபம் விவகாரத்தையடுத்து திரைப்பட தணிக்கைச் சட்டத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு பாராட்டுகள். தணிக்கை வழங்குவதில் ஒரே சீரான முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு ஏற்பட்ட காலதாமதத்தினால் அடுத்த பட வேலை தாமதமாகிவிட்டது என கமல்ஹாசன் தெரிவித்தார். தொந்தரவு செய்தால் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்ற முடிவில் மாற்றமில்லை என்றும் அவர் கூறினார்.