சுறாவுடன் சண்டை போடும் சூப்பர் ஸ்டார் - கோச்சடையான் ரகசியங்கள்

சுறாவுடன் சண்டை போடும் சூப்பர் ஸ்டார்- கோச்சடையான் ரகசியங்கள்
சென்னை: கோச்சைடையான் படத்தில் ராட்சத சுறாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சண்டை போடுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வரும் திரைப்படம் கோச்சடையான். 3 டியில் வெளியாகும் இந்தப் படத்தின் காட்சிகள் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடாமல் ரகசியம் காக்கிறார்கள்.

அதே போல, படத்தின் ஸ்டில்கள், ட்ரைலர்கள் எதையும் இன்னும் வெளியிடவில்லை. படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் தெளிவாக எந்த அறிவிப்பும் இல்லை.

இந்த நிலையில் படம் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ரஜினி ஒரு பிரமாண்ட சுறா மீனுடன் மோதுவது போன்ற காட்சியை ஹாலிவுட் தரத்துக்கு நிகராக உருவாக்கியிருக்கிறார்களாம். ஆனால் இதில் பெரும்பகுதி கிராபிக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காட்சி ரசிகர்களை மிரளவைக்கும் என கோச்சடையான் யூனிட்டைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோச்சடையானில் ரஜினி இரண்டு வேடங்களில் தோன்றுகிறார். அப்பா கேரக்டர் பெயர் கோச்சடையான். மகன் பெயர் ராணா.

ரஜினிக்கு ஜோடியாக முதன்முறையாக தீபிகா படுகோனே நடிக்கிறார். சரத்குமார், ஆதி, ஷோபனா, ருக்மணி விஜயகுமார், ஜாக்கி ஷெராப் மற்றும் நாசர் ஆகியோர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

 

சர்ச்சையை கிளப்ப ராம் கோபால் வர்மா கெளம்பிட்டாருய்யா, கெளம்பிட்டாருய்யா

சர்ச்சையை கிளப்ப ராம் கோபால் வர்மா கெளம்பிட்டாருய்யா, கெளம்பிட்டாருய்யா

ஹைதராபாத்: உத்தரகண்ட் வெள்ளம் குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் வழக்கம் போல் வில்லங்கமான கருத்தை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராம் கோபால் வர்மா என்றால் சர்ச்சைக்கு அவ்வளவு பிரியம். அவரும், சர்ச்சையும் இணை பிரியா இரட்டைப் பிறவிகள் போன்று. அவ்வப்போது கருத்து தெரிவிக்கிறேன் என்ற பெயரில் எதையாவது அவர் கூற அது பெரும் சர்ச்சையாகிவிடும்.

இந்நிலையில் அவர் உத்தரகண்ட் வெள்ளம் பற்றி ட்விட்டரில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் இருந்து கடவுள்களால் தங்களையே காத்துக்கொள்ள முடியவில்லை என்றால் பக்தர்களை எப்படி காப்பாற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

மீண்டும் நடிக்க வருகிறார் ஜோதிகா: யாராவது நல்ல ரோல் வச்சிருக்கீங்களா?

மீண்டும் நடிக்க வருகிறார் ஜோதிகா: யாராவது நல்ல ரோல் வச்சிருக்கீங்களா?

சென்னை: திருமணத்திற்கு பிறகு கணவன், குழந்தைகள் என்று செட்டிலான ஜோதிகா மீண்டும் நடிக்க வருகிறார்.

சூர்யாவை திருமணம் செய்த பிறகு ஜோதிகா திரையுலகிற்கு டாடா காட்டிவிட்டு வீட்டில் உட்கார்ந்துவிட்டார். தியா, தேவ் ஆகிய 2 குழந்தைகளின் தாயான அவர் சூர்யாவுக்காக ஒரு விளம்பர படத்தில் அவருடன் ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் திருமணமான பிறகும் சினேகாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிவது ஜோவுக்கு ஆச்சரியமாக உள்ளதாம்.

டிவி, பத்திரிக்கைகள் என்று சினேகா, பிரசன்னா ஜோடியாக வர என்னங்க நாமும் இவ்வாறு நடித்திருந்திருக்கலாமே என்று ஜோ சொல்ல இனிமேல் நடித்தால் போச்சு என்று சூர்யா தெரிவித்துள்ளாராம்.

தான் மீண்டும் சினிமாவில் நடிக்க விரும்புவதை ஜோ கூற சூர்யாவும் ஓகே சொல்லிவிட்டாராம். ஹரிதாஸ் சினேகா கதாபாத்திரம், இங்கிலீஷ் விங்கிலீஷ் ஸ்ரீதேவி கதாபாத்திரம் போல் கிடைத்தால் ஜோ நடிக்க ரெடியாம்.

 

புது ஒளிப்பதிவாளர் வந்தாச்சு... தொடருமா கஜபுஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்?

வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் கஜபுஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் படத்தின் புதிய ஒளிப்பதிவாளராக ராம்நாத் ஷெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியல் காரணங்களால் இரண்டு ஆண்டுகள் நடிக்காமலிருந்த காமெடிப் புயல் வடிவேலு, இப்போது கதாநாயகனாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். படத்துக்கு கஜபுஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என மகா நீளமான தலைப்பைச் சூட்டியுள்ளனர்.

இந்தப் படம் முதல் ஷெட்யூல் தொடங்கும்போதே வடிவேலுவுக்கும் படத்தின் இயக்குநர் யுவராஜுக்கும் மோதல் என செய்திகள் வெளியாகின. மேலும் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனுக்கும் இயக்குநர் யுவராஜுக்கும் ஒத்துவரவில்லையாம்.

புது ஒளிப்பதிவாளர் வந்தாச்சு... தொடருமா 'கஜபுஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்'?

இதனால் வடிவேலு, மீண்டும் மதுரைக்குப் போய் தங்கிவிட்டார். படப்பிடிப்பும் நின்றுபோனது.

இந்த நிலையில் படத்திலிருந்து ஆர்தர் வில்சனை தயாரிப்பாளர் நீக்கியுள்ளார். அவருக்குப் பதில் ராம்நாத் ஷெட்டியை நியமித்துள்ளார். யுவராஜூம் வடிவேலுவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளார்.

இதனால், கஜபுஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் எனத் தெரிகிறது.

 

மாணவர் போராட்டம் குறித்த படம் அறப்போர் - சுவிட்சர்லாந்தில் வெளியாகிறது!

ஜெனீவா: ஈழப் பிரச்சினையில் மாணவர்கள் முன்னெடுத்த வரலாறு காணாத போராட்டத்தை அறப்போர் என்ற பெயரில் ஆவணப்படமாக தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தை வரும் சனிக்கிழமை ஜூன் 29-ம் தேதி சுவிட்சர்லாந்தில் வெளியிடுகின்றனர்.

ஈழப் பிரச்சினையில் மாணவர்கள்.. படம் அறப்போர்- சுவிட்சர்லாந்தில் வெளியாகிறது!

கடந்த மார்ச் மாதம், ஐ.நா. மன்ற மனித உரிமைகள் அவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க அரசுத் தாக்கல் செய்த கண்துடைப்பு தீர்மானத்தை எதிர்த்தும், தமிழீழப் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்களை நடத்தினர். மாணவர்கள் முன்னெடுத்த விதவிதமான போராட்ட வடிவங்கள் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது.

போராட்டத்தின் நெருக்கடி காரணமாக, இந்திய மத்திய அரசின் கூட்டணியிலிருந்தே தி.மு.க. வெளியேறியது; ஐ.நா.அவையில் கொண்டு வந்த தீர்மானம் இந்தியாவின் ஒப்புதலோடுதான் கொண்டு வரப்பட்டது என்று அமெரிக்காவை ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கச் செய்தது; தமிழக சட்டப் பேரவையில் தனி ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேறச் செய்தது என மாணவர் போராட்டம் சாதித்தவை ஏராளம்.

இந்த மாணவர் போராட்டத்தை கருவாகக் கொண்டு, 'அறப்போர்' என்கிற ஆவணப்படம் உருவாகி இருக்கிறது. மூவர் மரண தண்டனைக்கு எதிராக தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த செங்கொடியின் வாழ்வைப் பதிவு செய்த 'இப்படிக்கு தோழர் செங்கொடி' ஆவணப்படத்தை இயக்கிய வெற்றிவேல் சந்திரசேகர், இப்படத்தை இயக்கியிருக்கிறார். கபிலன் சிவபாதம் தயாரித்துள்ளார்.

தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி நடைபெற்ற மாணவர் போராட்டத்தை, தமிழர் அல்லாத பிற மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் இப்படம் பல்வேறு மொழிகளில் குறிப்பெழுத்துகளுடன் (Sub title) வெளியிடப்படவுள்ளது.

இந்த ஆவணப்படம் வருகின்ற ஜூலை மாதம் சென்னையில் வெளியாகவுள்ள நிலையில், முதல் கட்டமாக வருகின்ற ஜூன் 29ம் நாள் சனிக்கிழமை அன்று மதியம் 2 மணியளவில், சுவிட்சர்லாந்தில் தமிழ் இளையோர் அமைப்பு சார்பில் நடைபெறும் தமிழீழ விடுதலைப் போராட்ட ஈகி சிவக்குமார் நினைவேந்தல் மற்றும் மாணவர் எழுச்சி நாள் நிகழ்வில் வெளியிடப்பட்டு திரையிடப்படுகின்றது.

சுவிட்சர்லாந்தின் Sala Aragonite, Via Al Boschetti 10, 6928 Manno என்ற இடத்தில் நடைபெறும் இந்நிகழ்வில், சுவிட்சர்லாந்து வாழ் புலம்பெயர்ந்த தமிழர்கள் பெருந்திரளாக பங்கேற்கவுள்ளனர்.

 

மன்மத லீலையை ரீமேக்குகிறார் 'தில்லு முல்லு' பத்ரி!

அடுத்து, மன்மத லீலையை ரீமேக்குகிறார் 'தில்லு முல்லு' பத்ரி!

கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடித்த வெற்றிப் படமான மன்மத லீலையை ரீமேக் செய்யப் போவதாக அறிவித்துள்ளார் தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்த பத்ரி.

இன்றைய சாதனை நடிகர் - நடிகைகள் பலருக்கு வாசலாக அமைந்தது மன்மதலீலை. ஜெயபிரதா, ஒய் விஜயா, ராதா ரவி என பலரும் இந்தப் படத்தில்தான் அறிமுகமானார்கள்.

இளம் பெண்களை ஏமாற்றி கற்புடன் விளையாடும் ப்ளேபாய் பாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். ஹலோ மைடியர் ராங் நம்பர், மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், மன்மதலீலை மயக்குது ஆளை உள்ளிட்ட பல பாடல்கள் எம்எஸ் விஸ்வநாதன் இசையில் ரசிகர்களை கிறங்கடித்தன.

பாலச்சந்தரின் தில்லுமுல்லு படத்தை ரீமேக் செய்து வெற்றி கண்ட பத்ரி, இப்போது மன்மத லீலையையும் இன்றை ட்ரெண்டுக்கு ஏற்றபடி ரீமேக் செய்யப் போகிறாராம்.

இதுகுறித்து பத்ரி கூறுகையில், "ரஜினியின் தில்லுமுல்லு படத்தை இந்த காலத்துக்கு ஏற்ற வகையில் காட்சிகள், வசனங்களை மாற்றி எடுத்து இருந்தேன். இப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அடுத்து கமலின் மன்மதலீலை படத்தையும் ரீமேக் செய்ய விருப்பம் உள்ளது. நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர் முடிவானதும் அறிவிக்கப்படும்," என்றார்.

 

இவர் ரேஞ்சுக்கு என்னால ‘டண்டணக்கா டணக்குணக்கா’ போட முடியாது: அலறி ஓடிய நடிகை

சென்னை: முதலில் சரக்கும், ஊறுகாயுமாக படப்பிடிப்பைத் தொடங்கியவர்கள் பின், சமூக நலன் கருதி படத்தின் பெயரை இரண்டு நடிகர்களின் பெயரில் மாற்றினார்கள். (இப்படியெல்லாம் படமெடுக்காம இருக்கறதே மக்களுக்கு நீங்க செய்யுற பெரிய சேவை தான். இது ஏன்யா உங்களுக்கெல்லாம் புரிய மாட்டேங்குது)

படத்தின் முக்கிய ஸ்டாரான பவருக்கு பீஸ் கட்டை பிடுங்கப்பட்ட காரணத்தால், அவருக்குப் பதில் மற்றொரு டெரர் நடிகரை நடிக்க வைக்க முடிவு செய்தது படக்குழு.

பட்த்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடும் அந்த தாடிக்கார டாடி நடிகருடன் ஆட்டம் போட, சமீபத்தில் காணாமல் போய் திரும்பி வந்த கான் நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டார். படப்பிடிப்பு தொடங்கியது. தாடியின் வேகத்தைப் பார்த்து அரண்டு விட்டாராம் கான்.

‘உங்க பையனே இதுக்கு தேவல' என்று சொல்லாமல் கொள்ளாமல் மீண்டும் தலைமறைவு ஆகி விட்டாராம் நடிகை. இப்போது ‘இவருக்கு' பதில் வேறு யாரைப் போடலாம் என தீவிர யோசனையில் இருக்கிறாராம் படத்தின் இயக்குநர்.

மிருகங்கள வச்சு படம் எடுத்தப்ப கூட நா இவ்ளோ கஷ்டப்படல. ஆனா, இந்த மனுஷங்க இருக்காங்களே... என இயக்குநரின் புலம்பல் எட்டுத்திக்கும் காற்றில் கல்ந்திருக்கிறதாம்.

 

அப்பா கமலுன் சேர்ந்து நடிக்க வேண்டும்! - ஸ்ருதி

அப்பா கமலுன் சேர்ந்து நடிக்க வேண்டும்!- ஸ்ருதி

ஹைதராபாத்: அப்பா கமல்ஹாஸனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் கூறினார்.

தெலுங்கில் பிசியாக உள்ள ஸ்ருதி ஹாஸன் ஹைதராபாதில் நேற்று நிருபர்களைச் சந்தித்தார். அவர் அளித்த பேட்டியில், "நான் நடிகையாக வேண்டும் என சினிமாவுக்கு வரவில்லை. இசையமைப்பாளராக வேண்டும் என்று வந்தேன். மாடலிங்கில் நுழைந்தேன். இப்போது ஹீரோயினாகிவிட்டேன்.

மாடலிங், இசை, சினிமா மூன்றுமே எனக்குப் பிடித்தவை. என்னைப் பற்றிய எல்லா விஷயகளையும் அப்பா கமல், அம்மா சரிகா, தங்கை அக்ஷரா ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அம்மாவுடன் எப்போதும் தொடர்பில் இருக்கிறேன். அவர் பல வகைகளில் எனக்கு வழிகாட்டியாக உள்ளார். என்னை வேதனைப்படுத்திய சம்பவங்களாக நான் கருதுவது அப்பா, அம்மா பிரிந்து போனது. அப்பாவுக்கு நேர்ந்த கார் விபத்து, அம்மா மாடியில் இருந்து கீழே விழுந்தது ஆகிய மூன்றும்தான்.

என் அப்பா கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்றும் ஆசை உள்ளது. என்னைப் பற்றி அப்பா பெருமையாக பேசும் அளவுக்கு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும்.

எல்லா முடிவுகளையும் நானே எடுக்க வேண்டும் என்று அப்பா அடிக்கடி சொல்வார். சினிமா பற்றி நான் ஏதேனும் பேசினாலும் அவர் ஆர்வம் காட்ட மாட்டார். வீட்டு வாசலோடு சினிமாவை விட்டுவிட்டு வருவார். எனக்கும் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்," என்றார்.

 

ஸ்ரீதேவியுடன் நடனமாடப் போகும் பிரபு தேவா!

ஸ்ரீதேவியுடன் நடனமாடப் போகும் பிரபு தேவா!

வயசானாலும் அழகும் இளமையும் மாறாதவர் ரஜினி மட்டுமல்ல, அவருடன் அதிகப் படங்களில் நடித்த பெருமைக்குரியவரான ஸ்ரீதேவியும்தான்.

இந்த வயதிலும் ஹீரோயினாகவே நடிக்கிறார். அதை ரசிக்கிறார்கள். அந்த அளவு அவருக்கு இன்னும் மார்க்கெட் ஸ்டெடியாகவே உள்ளது. சமீபத்தில் அவர் நடித்து வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ் நல்ல வரவேற்பைப் பெற்றது நினைவிருக்கலாம்.

அடுத்து புதிய படங்கள் பலவற்றுக்கும் நாயகியாக அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் சர்வேதேச திரைப்பட விழா ஒன்றில் நடனமாட ஒப்புக் கொண்டுள்ளார் ஸ்ரீதேவி.

ஆண்டுதோறும் ஐஃபா விருது விழா வழங்கும் விழா வெளிநாடுகளில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு இவ்விழா மக்காவ்வில் அடுத்த மாதம் 4,ம் தேதி நடக்க உள்ளது. இதன் சிறம்பம்சமாக ஸ்ரீதேவி நடனமாடுகிறார். அவருடன் இணைந்து ஆடப் போகிறவர்... பிரபுதேவா!

விழாவில் ஸ்ரீதேவி நடித்த படங்களில் இருந்து பாடல்களும் இடம்பெற உள்ளன. இதற்கான ஒத்திகையில் ஸ்ரீதேவியும், பிரபுதேவாவும் ஈடுபட்டு வருகிறார்கள்!

 

‘வருத்தப்படாத யூத் கிளப்’ல நடிப்பியா? மாட்டியா?... சொல்லு கைப்புள்ள, சொல்லு...

சென்னை: வருத்தமே படாமல் அடிவாங்கிய யூத் கிளப் பெயரில் தயாராகும் படத்திற்கு ஒரு சின்ன காட்சியிலாவது கைப்புள்ள தலையைக் காட்டுனா நல்லாருக்குமேனு 'நடிபீங்களா சார்'னு கேட்டாங்களாம்.

படமே இல்லாமல் இரண்டு வருடம் காற்றாடி அடியில் உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த கைப்புள்ளக்கு இந்த டீல் பிடிக்கவில்லையாம்.

நா யாருனு தெரியுமா, என்ன பாத்து இப்படி கேட்டுட்டீங்களேனு... உய்ங்ங்.... நு அழுது படக்குழுவ திருப்பி அனுப்பிட்டாராம் கைப்புள்ள.

செகண்ட் இன்னிங்ஸ டபுள் ரோல்ல ராஜா கெட்டப்புல பிரமாண்டமாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் போது இப்படிக் கேட்டா எப்படிங்க...

 

முதல் படத்திலேயே பாலிவுட்டை வென்ற தனுஷ்!

முதல் படத்திலேயே பாலிவுட்டை வென்ற தனுஷ்!

தனது முதல் படமான ராஞ்ஜனாவிலேயே பாலிவுட்டின் மனம் கவர்ந்த புதிய ஹீரோக்களில் ஒருவராக மாறியிருக்கிறார் நடிகர் தனுஷ்.

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், தனுஷ் - சோனம் கபூர் ஜோடியாக நடித்த ராஞ்ஜனா கடந்த வெள்ளியன்று இந்தியா முழுவதும் வெளியானது.

எடுத்த எடுப்பிலேயே தனுஷை தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்துள்ளன வட இந்திய மீடியாக்கள். பாலிவுட்டுக்குக் கிடைத்த மிகச்சிறந்த புது ஹீரோ என்று அவரைப் பாராட்டியுள்ளன.

தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட்டுக்குப் போய் வெற்றிக் கொடி நாட்டிய ஹீரோக்கள் இருவர்தான். ஒருவர் ரஜினி.. மற்றவர் கமல்ஹாஸன்.

கமல் ஹாஸன் சில படங்களுக்குப் பிறகு இந்தியில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். தான் நடிக்கும் தமிழ்ப் படங்களை நேரடியாக இந்தியில் வெளியிட்டு வருகிறார்.

ரஜினியோ ஒரு கட்டத்துக்குப் பிறகு நேரடி இந்திப் படங்களில் நடிக்க மறுத்து வருகிறார். இத்தனைக்கும் தமிழுக்கு இணையாக இந்தியில் அவருக்கு செல்வாக்கு உள்ளது.

இந்த இருவரைத் தவிர பாலிவுட்டுக்குப் போன நடிகர்கள் பெரும்பாலும் எடுபடவில்லை. சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி, நாகார்ஜுனா, வெங்கடேஷ் என எல்லோருமே இந்தியில் முயற்சி செய்து தோற்றவர்களே. மாதவன் நிலைமை கொஞ்சம் பரவாயில்லை.

ஆனால், ரஜினி - கமலுக்குப் பிறகு, எடுத்த எடுப்பிலேயே பாலிவுட்டை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் தனுஷ்.

அவர் நடித்த ராஞ்ஜனா முதல் மூன்று நாட்களில் மட்டும் ரூ 20 கோடியை வசூலித்துள்ளது. இந்த வார இறுதிக்குள் ரூ 40 கோடியை வசூலித்துவிடும் என பாக்ஸ் ஆபீஸ் கணித்துள்ளது.

இந்த வெற்றியின் விளைவு, அடுத்தடுத்து மூன்று பெரிய இயக்குநர்கள் தனுஷை வைத்து படம் பண்ண தயாராக உள்ளார்கள். ஆனால் தனுஷோ, இன்னும் ஒரு ஆண்டு அவர்களை காத்திருக்கச் சொல்கிறாராம்!

 

அஜீத்தை கவர்ந்த ஔவையின் ஆத்திச்சூடி

அஜீத்தை கவர்ந்த ஔவையின் ஆத்திச்சூடி

சென்னை: ஔவையாரின் ஆத்திச்சூடி அஜீத் குமாரை வெகுவாக கவர்ந்துள்ளது.

அஜீத் குமார் ஷூட்டிங்ஸ்பாட்டில் ஔவையாரின் ஆத்திச்சூடியை படிக்கிறாராம். படிப்பதோடுமட்டுமல்லாமல் தனக்கு நெருங்கிய நண்பர்களுக்கு தினமும் ஒரு ஆத்திச்சூடியை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கிறாராம்.

தினமும் காலையில் முதல் வேலையாக ஆத்திச்சூடியை எஸ்.எம்.எஸ். அனுப்புகிறாராம். அண்மையில் அவர் பெங்களூர் சென்றபோது அவரது நண்பர் ஒருவர் செல்போனில் ஆத்திச்சூடி அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யுமாறு கூறினாராம். அஜீத்தும் டவுன்லோட் செய்தாராம். அதில் இருந்து ஆத்திச்சூடியும் கையுமாக திரிகிறாராம்.

மேலும் தனது மகள் அனௌஷ்காவையும் ஆத்திச்சூடியை படிக்குமாறு கூறியுள்ளாராம். அஜீத் தற்போது விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இந்த வாரம் படப்பிடிப்பு முடிந்துவிடும்.