ரஜினியை தெலுங்கில் இயக்கிய கேஎஸ்ஆர் தாஸ் மரணம்!

Director Ksr Das Died
பிரபல தெலுங்கு இயக்குனர் கே.எஸ்.ஆர்.தாஸ் சென்னையில் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76.

கடந்த சிலநாட்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்றபட்டதால் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

கே.எஸ்.ஆர்.தாஸ் தெலுங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை டைரக்டு செய்துள்ளார். ரஜினி நடித்த 'இப்தரு அசாத் ஜுலே', 'அன்னதம்முல சவால்' ஆகிய இரு தெலுங்கு படங்களையும் தாஸ் டைரக்டு செய்துள்ளார்.

முன்னணி தெலுங்கு நடிகரான கிருஷ்ணாவை வைத்து முப்பது தெலுங்கு படங்கள் இயக்கியுள்ளார். மோகன்பாபு நடித்து இவர் இயக்கிய 'மோசதாலு' என்ற தெலுங்கு படம் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப் பட்டது.

ஜேம்ஸ்பாண்ட் பட பாணியில் ஆக்ஷன் படங்களை எடுப்பதில் வல்லவர். தியேட்டரில் சாதாரண டிக்கெட் குமாஸ்தாவாக இருந்து இயக்குநராக உயர்ந்தவர். தாஸ் மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
 

'நீச்சல் உடை என்ன... எந்த விதமான கவர்ச்சி வேடத்துக்கும் தயார்' - அமலா ஆஃபர்!!

Amala Ready Do Glam Roles   
அமலா பால் தமிழில் அறிமுகமான படமே, கிட்டத்தட்ட பலான படம் ரேஞ்சுக்குதான் இருந்தது.

ஆனாலும் அவர் அடுத்து நடித்த மைனாவில் குடும்பப்பாங்காக வந்து, முதல் பட பலான பட முத்திரையை துடைத்துக் கொண்டார். அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியாக நடிக்க மறுத்துவிட்டார்.

இப்போதைக்கு அவர் மலையாளம், தெலுங்குப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் வரும் அனைத்துக் கதைகளையும் ‘சரியில்லை’ என்று கூறி தவிர்த்து வருகிறார்.

ஆனால் இப்போது என்ன மனமாற்றமோ… எல்லாவிதமான வேடங்களையும் செய்யத் தயார் என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அமலாபால் கூறுகையில், “சினிமா என்று வந்த பிறகு கவர்ச்சி தவறல்ல, என்னிடம் கதை சொல்லும்போது நீச்சல் உடையில் ஒரு காட்சி இருக்கிறது. ஓகேவா என்கிறார்கள். எனக்கு அதில் ஆட்சேபணை இல்லை. கதை, காட்சிக்கு அவசியம் என்றால் நீச்சல் உடையில் நடிப்பேன். தமிழில் உண்மையிலேயே நல்ல கதைகள் அமையவில்லை என்பதுதான் உண்மை. அமைந்தால் நிச்சயம் என் கால்ஷீட் தமிழ் படங்களுக்குத்தான்,” என்றார்.
 

மனம் கொத்திப் பறவை - விமர்சனம்

Manam Kothi Paravai Review   
நடிப்பு: சிவகார்த்திகேயன், ஆத்மியா, சூரி, சிங்கம்புலி, ரவி மரியா

இசை: டி இமான்

கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்: எஸ் எழில்

தயாரிப்பு: ஒலிம்பியா மூவீஸ்

நாயகன் சிவகார்த்திகேயனும் நாயகி ஆத்மியாவும் சின்ன வயசு நண்பர்கள். சிவகார்த்திகேயனுக்கு ஆத்மியா மீது காதல். ஆனால் ஆத்மியா அப்படி எதையும் காட்டிக் கொள்ளவே இல்லை. ஆனால் தன்னை ஆத்மியா விரும்புவதாக நண்பர்களிடம் ஹீரோ சொல்லி வைக்க, அதை நம்பி இன்னொரு மாப்பிள்ளைக்கு நிச்சயமான பெண்ணைத் தூக்கிவிடுகிறார்கள் நண்பர்கள்.

கேரளாவுக்கு தப்பிச் சென்று தங்கும்போதுதான், தானும் சிவகார்த்திகேயனை காதலிப்பதை உணர்கிறார் நாயகி. ஆனால் அதற்குள் ஆத்மியாவின் அண்ணன்கள் தேடி வந்து இழுத்துப் போகிறார்கள். ஹீரோ போராடிப் பார்க்கிறார். ஆனால் ஜோடியைப் பிரித்து விடுகிறார்கள். எப்படி சேருகிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

கொஞ்சம் கூட சிரத்தையே இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ோரளவு காப்பாற்றுகிறது எழில் ஆங்காங்கே தூவியிருக்கும் காமெடிக் கதம்பம்.

ஹீரோவாக சிவகார்த்திகேயன். அவர் இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும். இயல்பாக நடித்திருக்க வேண்டும். நல்ல வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

கதாநாயகி ஆத்மியாவும் அப்படியே. பார்க்க மீரா ஜாஸ்மின் குளோனிங் மாதிரி அழகாக இருக்கிறார். ஆனால் பல இடங்களில் அவருக்கு என்ன உணர்வைக் காட்டுவதென்றே தெரியவில்லை. ஹீரோவை காதலிக்கிறாரா இல்லையா என்பது கடைசி ரீலுக்கு முன்பு வரை தெரியாமல் இருப்பது திரைக்கதையின் ஓட்டையா... நாயகியின் திறமையின்மையா தெரியவில்லை.

சிங்கம்புலி, சூரி, ரவிமரியா, சாம்ஸ், ஸ்ரீநாத் கூட்டணிதான் உண்மையில் இந்தப் படத்தின் ஹீரோ. குறிப்பாக சிங்கம்புலி - சூர்யா நல்ல காம்பினேஷன். இது தொடர்ந்தால் சந்தானத்தையும் அசைத்துவிட முடியும்!

ரவி மரியா சிரிப்பு வில்லன். நிச்சயம் அவருக்கு இது புதிய திருப்பம்தான். 'அவன் என்னை 'மச்சான்'னு கூப்பிட்டுட்டாண்டா... அய்யோ!' என்று புலம்பும் இடங்களில் செம ரகளை.

படத்தின் கதையில் 90களில் வெளியான படங்களின் பாதிப்பு தெரிகிறது. சிவகார்த்திகேயன் - ஆத்மியா காதல் எந்த வகையிலும் நம்மைக் கவராமல் போவதுதான் இந்தப் படத்தின் மைனஸ். அதில் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால், காமெடியும் காதலுமாக சேர்ந்து இன்னொரு களவாணி கிடைத்திருக்கும்!

ஒளிப்பதிவும் இசையும் படத்துக்கு ப்ளஸ். குறிப்பாக இமானின் இசையில் மூன்று பாடல்கள் நன்றாகவே உள்ளன.

படத்தின் நகைச்சுவைக்காக, மனம் கொத்திப் பறவையை ஒருமுறை பார்க்கலாம்!
 

திடீர் உடல் நலக்குறைவு: நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

Tamilnadu Actor Karthik Hospitalised
பிரபல தமிழ் நடிகர் கார்த்திக் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அலைகள் ஓய்வதில்லையில் அறிமுகமாகி, எண்பது மற்றும் தொன்னூறுகளில் முன்னணி நடிகராகத் திகழ்ந்தவர் கார்த்திக்.

பின்னர் அரசியலில் குதித்து, நாடாளும் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினார். ஆனால் அதில் வெற்றி பெறவில்லை.

மீண்டும் நடிக்க வந்த அவர், மாஞ்சாவேலு, ராவணன், புலிவேஷம் படங்களில் நடித்தார். அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை.

மகன் கவுதமை ஹீரோவாக்கும் முயற்சிகளில் தீவிரமாக இருந்தார். மணிரத்னத்தின் கடல் என்ற படத்தில் இப்போது கவுதம் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார். மகனுக்கு உதவியாக பட வேலைகளையும் கவனித்து வந்தார் கார்த்திக்.

இந்த நிலையில் கார்த்திக்குக்கு திடீர் உடல் நலக்குறைவு எற்பட்டது. சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

ஃபெப்சி தலைவர் பதவிக்கு இயக்குநர் அமீர் போட்டி - இன்று வேட்புமனு தாக்கல்!

Ameer Files Nomination Papers Fefsi President Election
சென்னை: தமிழ் சினிமாவின் பலமிக்க தொழிலாளர் அமைப்பான பெப்சியியின் தலைவர் பதவிக்கு இயக்குநர் அமீர் போட்டியிடுகிறார்.

இதற்காக அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

23 சங்கங்களின் கூட்டமைப்பான ஃபெப்சிக்கு தற்போது ராமதுரை தலைவராகவும், ஜி சிவா செயலாளராகவும் உள்ளனர்.

ஃபெப்சி தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பேச, ஊதியக் குழுத் தலைவராக சில மாதங்களுக்கு முன் இயக்குநர் அமீர் நியமிக்கப்பட்டார். இந்தப் பேச்சுவார்த்தையின் போதுதான் பெரிய பிரச்சினை ஏற்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருந்து கொண்டே, தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் அமீர் என்று தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் தொழிலாளர்களை தனது தனிப்பட்ட பகையைத் தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்துவதாகக் கூறி அமீர் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து, அமீர் சிறிது நாட்கள் அமைதிகாத்தார். இன்னொரு பக்கம், இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக உடைந்து, பல்வேறு சட்டச் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இந்த களேபரங்களால் ஊதிய சீரமைப்பு விவகாரம் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில் ஃபெப்சிக்கு வரும் ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடக்கும் என சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.

இந்தத் தேர்தலில் பெப்சி தலைவர் பதவிக்கு இயக்குநர் அமீரே போட்டியிடுகிறார். தனது வேட்பு மனுவை இன்று அவர் ஃபெப்சி அலுவலகத்தில் சமர்ப்பித்தார்.

அவருக்கு இயக்குநர்கள் எஸ்பி ஜனநாதன், வெற்றிமாறன், ஜி சிவா உள்ளிட்டோர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
 

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா!

Lingusamy Direct Surya   
வேட்டைக்குப் பிறகு லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிப்பார் எனத் தெரிகிறது.

தற்போது, கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் மாற்றான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படம் முடிந்ததும் ஹரி இயக்கும் சிங்கம் 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு அனுஷ்கா ஜோடியாக நடிக்கிறார்.

இதற்கிடையே ரன், இயக்குநர் லிங்குசாமி சூர்யாவுக்காக ஒரு ஆக்ஷன் கதையை உருவாக்கியுள்ளார். இந்தக் கதையை சமீபத்தில் சூர்யாவைச் சந்தித்துக் கூறியுள்ளார் அவர்.

லிங்குசாமி சொன்ன கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டதால் உடனே ஓகே சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிங்கம் 2 முடிந்ததும் சூர்யாவும், லிங்குசாமியும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இதற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது.
 

சேரன் இயக்கத்தில் 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை!'

Cheran S Next Jk Enum Nanbanin Vaazhkai
சேரன் கடைசியாக இயக்கிய படம் பொக்கிஷம். 2009-ம் ஆண்டு வந்த அந்தப் படம் பெரும் தோல்வியைச் சந்தித்தது. அதன் பிறகு அவர் படங்கள் இயக்காமல், நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

இப்போது மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார் அவர். படத்துக்கு தலைப்பு 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை'.

இந்தப் படத்தின் நாயகன் அவர் இல்லை. எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த சர்வானந்த் நாயகனாகவும், 180 டிகிரி படத்தில் நடித்த நித்யா மேனன் நாயகியாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

முதன்முறையாக இப்படத்தில் சேரனுடன் நடிக்கவிருக்கிறார், காமெடியில் இப்போதைக்கு கோலோச்சி வரும் சந்தானம். சேரன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

விரைவில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வரவிருக்கிறது.
 

பத்திரிகையாளர் - எழுத்தாளர் தென்னிலவன் மரணம்!

Journalist Thennilavan Passes Away

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான தென்னிலவன் இன்று சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 47.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்தவர் தென்னிலவன். கும்பகோணத்தைச் சேர்ந்தவர்.

ஜெமினி சினிமா பத்திரிகையின் ஆரம்ப நாட்களில் தென்னிலவனின் பங்களிப்பு மிகப் பெரிய அளவில் இருந்தது.

பின்னர் பிலிம்டுடே உள்ளிட்ட 8 பத்திரிகைகளின் பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்தார்.

ஒரே நாளில் ஒரு குறுநாவலை எழுதி முடிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார் தென்னிலவன். ஏராளமான குறுநாவல்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதியுள்ள அவர், பிரபல பத்திரிகை தொடர்பாளரும் விஜய்யின் மேனேஜருமான பிடி செல்வகுமாரிடம் பணியாற்றி வந்தார். நடிகர் விஜய் மற்றும் அவர் தந்தை எஸ் ஏ சந்திரசேகரனுக்கு மிகவும் உதவியாக இருந்தார் தென்னிலவன்.

அவருக்கு குடலில் கேன்சர் இருப்பது மிகச் சமீபத்தில்தான் கண்டறியப்பட்டது. ஆனால் முற்றிய நிலையில் நோய் இருந்தது. அவருக்கு விஜயா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சக பத்திரிகையாளர்கள், நண்பர்கள் மற்றும் திரைத் துறையைச் சேர்ந்த சிலரது நிதி உதவியுடன் அவருக்கு ஆரம்ப சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனால், அறுவைச் சிகிச்சை செய்ய பெரும் பணம் தேவைப்பட்டது. இதற்கிடையே, புற்று நோய் குடலிலிருந்து நுரையீரல், கல்லீரல் பகுதிகளில் பரவி, அவரது உடல்நிலையை மிகவும் மோசமாக்கிவிட, எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் இன்று காலமாகிவிட்டார்.

தென்னிலவன் இறுதி ஊர்வலம் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள பிடி செல்வகுமார் இல்லத்திலிருந்து புறப்படுகிறது. முகவரி: 27/3, வ உசி தெரு / தேவராஜ் நகர், சாலிகிராமம், சென்னை. தொலைபேசி: ஜெ பிஸ்மி - 9444037638.

 

துப்பாக்கி படப்பிடிப்பில் விஜய் காயம்!

Vijay Injures At Thuppaki Sets   

துப்பாக்கி படப்பிடிப்பில் நடிகர் விஜய் எதிர்பாராத விதமாக காயமடைந்தார். அவருக்கு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் துப்பாக்கியின் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின்போது சண்டைக் காட்சி ஒன்றில் விஜய் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது கால்மூட்டில் அவருக்கு அடிபட்டது. வலியால் துடித்தார் விஜய். எனவே படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

லண்டன் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படப்பிடிப்பு முடிந்ததும், மெல்போர்னில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்க முடிவு செய்திருந்தார் விஜய். ஆனால் காலில் அடிபட்டதால் அந்த விழாவுக்கு செல்வதை ரத்து செய்துவிட்டதாகத் தெரிகிறது.

துப்பாக்கி படப்பிடிப்பு தொடர்ந்து விஜய்க்கு சோதனைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் படத்தில் இடம்பெற்ற புகைப் பிடிக்கும் காட்சிக்காக பெரிய சர்ச்சை கிளம்பியது. இதனால் புகைப்பிடிப்பது மாதிரி காட்சிகளே இந்தப் படத்தில் இருக்காது என்று இயக்குநர் முருகதாசும், விஜய்யும் அறிவித்தது நினைவிருக்கலாம்!

 

ஹூஸ்டனில் கிரேஸி மோகனின் 'சாக்லெட் கிருஷ்ணா' 500வது காட்சி!

Craz Mohan Chocolate Krishna Houston

ஹூஸ்டன்: பாரதி கலைமன்றத்தின் சார்பில் கிரேஸி மோகனின் சாக்லெட் கிருஷ்ணா நாடகம் இன்று நடைபெறுகிறது.

ஹுஸ்டன் ஸ்டெல்லா லிங்க் சாலையில் உள்ள எமரி/வெய்னெர் பள்ளி அரங்கத்தில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடக்கிறது. கிரேஸி மோகனுடன் அவரது தம்பி மாது பாலாஜி மற்றும் குழுவினர் நடிக்கிறார்கள்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலாக மேடையேறியது 'சாக்லெட் கிருஷ்ணா'. கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி சென்னை நாரத கான சபாவில் 400 வது காட்சி நடந்தது. ஒரு ஆண்டுக்குள்ளாகவே அடுத்த நூறாவது காட்சி அரங்கேறுவது குறிப்பிடத்தக்கது.

ஹூஸ்டன் மட்டுமல்லாமல், அமெரிக்காவின் பிற மாகாணத்திலிருந்தும் ரசிகர்கள் டிக்கெட்டுகள் கேட்பதாக பாரதி கலை மன்ற தலைவர் டாக்டர். ஜி.என். பிரசாத் தெரிவித்தார்.

ஏப்ரல் 13 ம் தேதி கனெக்டிகடில் ஆரம்பித்து இது வரை 23 அரங்கு நிறைந்த காட்சிகள் அமெரிக்கா முழுவதும் நடைபெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஜூன் 10 ம் தேதி டல்லாஸில் வைலி ஹைஸ்கூல் அரங்கத்தில் 501 தடவையாக சாக்லெட் கிருஷ்ணாவை அரங்கேற்றி விட்டு கிரேஸி மோகன் குழுவினர் தமிழகம் திரும்புகின்றனர்.

பாரதி கலை மன்றம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கலை, இலக்கிய, நடனம், இசை சார்ந்த நிகழ்ச்சிகளை ஹூஸ்டன் தமிழர்களுக்கு வழங்கி வருகிறது.

 

மீண்டும் இணையும் பாலா - விஷால்!

Bala Join Hands Again With Vishal

அவன் இவன் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலாவும் விஷாலும் மீண்டும் இணைகிறார்கள்.

நடிகர் விஷாலை ஒரு நல்ல நடிகராக ரசிகர்கள் மனதில் பதிய வைத்த பெருமை பாலாவுக்கு உண்டு.

அவன் இவன் படத்தில் ஒன்றரைக் கண்ணுடன் பன்முக பரிமானத்தை அவர் காட்டியிருந்தார்.

இப்போது 'சமர்', 'மத கத ராஜா' என இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் விஷால், இப்படங்கள் முடிவடைந்த பிறகு பாலாவுடன் இணைகிறார்.

இயக்குனர் பாலா தற்போது அதர்வா முரளியை வைத்து 'பரதேசி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்த பின் விஷாலுக்கான படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது.

இந்தப் புதிய படம், விஷாலுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தரும் அளவுக்கு அமையும் என பாலா கூறி வருகிறாராம்!

 

கார்த்திக் மகனுக்கு ஜோடி ராதாவின் இளைய மகள் துளசி!!

Radha S Daughter Tulasi Is Kadal Heroine

ஏற்கெனவே நாம் செய்தி வெளியிட்டபடி, கார்த்திக் மகன் கவுதம் ஜோடியாக முன்னாள் நடிகை ராதாவின் இளைய மகள் துளசியை அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர் மணிரத்னம்.

ராவண் படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படம் கடல். இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இந்தப் படம் குறித்து அறிவிப்பு வந்தபோதே, கவுதமுக்கு ஜோடி, பழைய நடிகை ராதாவின் மகள் துளசிதான் என நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் சமந்தா நாயகியாக ஒப்பந்தமானார்.

இப்போது சமந்தா அந்தப் படத்திலிருந்து தானாகவே விலகிக் கொண்டார். அவருக்கு பதில் ராதாவின் இளைய மகள் துளசியை ஹீரோயினாக அறிமுகம் செய்கிறார் மணிரத்னம்.

ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

30 ஆண்டுகளுக்கு முன் கார்த்திக்கும் ராதாவும் ஜோடியாக பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமானார்கள். இப்போது கார்த்திக்கின் மகனும் ராதாவின் மகளும் ஜோடியாக மணிரத்னம் படத்தில் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.