பிறந்தநாள் வாழ்த்துக்கள் சரத் சார்- ட்விட்டரில் வாழ்த்திய விஷால்

சென்னை: இன்று அரசியல்வாதியும், நடிகர் சங்கத் தலைவருமான சரத்குமார் 61 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். இதனை முன்னிட்டு ஏராளமான தமிழ் நடிகர்கள் ட்விட்டரில் சரத்குமாரை வாழ்த்தி வருகின்றனர்.

சரத்குமார் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை எனினும் நடிகர்களின் வாழ்த்துகளுக்கு, சரத்குமாருக்கு பதிலாக அவரது மனைவி ராதிகா சரத்குமார் ட்விட்டர் பக்கத்தில் நன்றிகளைத் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஷாலும் நடிகர் சரத்குமாருக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார், நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் ஊரே அறிந்ததுதான்.

ஆனாலும் அதனைப் பொருட்படுத்தாமல் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் சரத் சார், இன்னும் நிறைய ஆண்டுகள் நீங்கள் நலமாக வாழ கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்" என்று சரத்குமாருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து இருக்கிறார் விஷால்.

மற்ற நடிகர்களின் பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு நன்றிகளைத் தெரிவித்து இருந்த ராதிகா சரத்குமார், விஷாலின் வாழ்த்துக்கு எந்த பதிலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

மெல்லிசை மன்னர் மறைவையொட்டி நாளை படப்பிடிப்புகள் ரத்து: பெப்சி அறிவிப்பு

சென்னை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவையொட்டி நாளை ஒருநாள் படப்பிடிப்புகளை ரத்து செய்வதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

1200 படங்களுக்கும் மேல் இசையமைத்த பழம் பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று காலை சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளது. அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

Tamil film shooting cancelled tomorrow

இந்த சூழ்நிலையில், எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவையொட்டி நாளை ஒருநாள் படப்பிடிப்புகளை ரத்து செய்துள்ளது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ் திரையுலகில் அழிக்க முடியாத பொக்கிஷம், இசையுலகில் முடிசூடா மன்னன், திரையுலகில் புராண வரலாற்று படங்கள் வந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமாகி தனக்கென்று ஒரு பாணி வகுத்து மெல்லிசை மன்னர் என பட்டம் பெற்ற இசைத்தாயின் மூத்த மகன் பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று நம்மை எல்லாம் விட்டு பிரிந்து இறைவனிடமும், இயற்கையிடமும், இசையிடமும் கலந்து விட்டார்.

அவருடைய ஆத்மா சாந்தி அடைய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக இறைவனை பிரார்த்தனை செய்வதோடு, அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் நாளை ஒரு நாள் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது' என இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

அப்படியே தூக்கி அடிக்க ஆசைப்படும் திரிஷா

சென்னை: திரிஷாவுக்கு ஒரு வித்தியாசமான ஆசை வந்துள்ளதாக சொல்கிறார்கள். அதிரடியான, அதிரிபுதிரியான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசைதான் அது.

நடிப்பில் பல ரகம் உண்டு. இந்த பல ரகங்களையும் பலகாரம் போல சாப்பிட்டு அனுபவிக்கும் "பாத்யதை"யை தமிழ் சினிமா உலகம், நடிகர்களுக்கு மட்டுமே கொடுத்து வந்துள்ளது.

Trisha willing to don fighter characters

ஹீரோயின்களுக்கு எப்பவுமே லிமிட்டெட் மீல்ஸ் மட்டுமே. காதல் செய்ய வேண்டும், மரத்தைச் சுற்றி வந்து ஆட வேண்டும், ஹீரோ, வில்லன்களுடன் சண்டை போடும்போது காதை மூடிக் கொண்டு கத்த வேண்டும், ஹீரோவின் பின்னால் மறைந்து பம்மிப் பதுங்கி முகத்தில் பயம் காட்டவேண்டும். இதுபோல சின்னச் சின்ன விஷயங்கள் வரைதான் ஹீரோயின்களுக்கு எல்லை.

சில நேரங்களில் இதைத் தாண்டி அதிரடி நாயகிகளும் வந்து போவதுண்டு. அந்த வகையில் சாதனை படைத்தவர் விஜயசாந்தி மட்டுமே. அதற்குப் பிறகு அவரைப் போல சகலகலாவல்லி ஹீரோயின்களை தென்னகத் திரையுலகம் கண்டதில்லை.

இந்த நிலையில் திரிஷாவுக்கு திடீரென அதிரடியான ரோல்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளதாம். எதிரிகளை அடித்து நொறுக்கி அள்ளிப் போட வேண்டும், அதிரடியான, அடிதடியான ரோல்களில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் அவரை உந்தித் தள்ளுகிறதாம்.

Trisha willing to don fighter characters

இந்த ஆசை காரணமாக சமீப காலமாக அவர் ஆக்ஷன் படங்களை அதிகமாக பார்க்கிறாராம். அதுவும் அதிரடி நாயகிகளின் படங்களை அதிகமாக பார்க்கிறாராம்.

ஏன் இந்தத் திடீர் ஆசை என்று தெரியவி்ல்லை. அது மட்டும்தான் பாக்கி. அதையும் ஏன் விட்டு வைக்க வேண்டும் என்ற நினைப்பில் இப்படி ஆசைப்படுகிறாரோ என்று தெரியவில்லை.

 

மறக்க முடியாத மெல்லிசை.. உயிருக்குள் ஊடுறுவிய எம்.எஸ்.வி

சென்னை: எத்தனை எத்தனை பாடல்கள்.. எத்தனை உயிரோட்டமான பாடல்கள்.. எண்ணி முடியாது எம்.எஸ்.வியின் பெருமைகளை எடுத்து வைத்தால். ஜாம்பவான்கள் முதல் சாதாரணர்கள் வரை இவருக்குத்தான் எத்தனை எத்தனை ரசிகர்கள்.

கண்ணதாசனும், இந்த மெல்லிசை மன்னரும் சேர்ந்து விட்டால், அங்கு தமிழ் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும், இசை மழை பொழியும்..

குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்.. ஆனால் இந்த மெல்லிசை மலர் நமது வாழ்க்கையில் ஒருமுறைதான் பூக்கும்.. ஆனால் பல தலைமுறைகளுக்கும் இதன் வாசம் தொடரும்...

எம்.ஜி.ஆருக்கென்று இவர் தொடுத்து வைத்த பாடல்கள் எத்தனை.. தத்துவம், சோகம், வீரம்.. ஆனால் இந்தத் தாலாட்டுக்கு மயங்காதவர்கள் யாரேனும் உண்டா?

நடிகர் திலகத்தின் உடல் முழுவதும் நடிப்பு என்றால், எம்.எஸ்.வியின் காதல் பாடல்களில் எந்த இடத்தைத் தொட்டாலும் துடிப்புதான்.. இசையில் துடித்த காதல்.. பாடர்களின் இதழ் வழியாக நமது காதுகளுக்குள் பாயும்போது ஏற்படும் சிலிர்ப்பு... சொல்ல முடியாது.. அனுபவியுங்கள்

இந்தப் பாட்டைக் கேளுங்கள்.. எத்தனை எத்தனை முத்துக்கள்... பாடலை ரசிப்பதா, நடிகர்களை ரசிப்பதா, இசையை ருசிப்பதா.. எம்.எஸ்.வி - கே.பி. - கமல் மாஸ்டர்பீஸின் பெஸ்ட் பீஸ் இது.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.. அதை எம்.எஸ்.வி. எவ்வளவு அழகாக பிடித்திருக்கிறார் என்பதற்கு பில்லா ஒரு உதாரணம். பலருக்கும் இது எம்.எஸ்.வி பாட்டா என்று கேட்கத் தோன்றும். அப்படி ஒரு அதிரடி மாற்றத்தை பில்லா பாடல்களில் காட்டியிருப்பார் எம்.எஸ்.வி.

எத்தனைப் பாடல்களைக் கேட்டாலும், இந்தப் பாடலைக் கேட்டு அழாத உள்ளம் இருக்க முடியாது.. டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து அவர் படைத்த அற்புத விருந்து இது...

எல்லாவற்றையும் கொடுத்து விட்டு போய் விட்டார் எம்.எஸ்.வி.. மறக்க முடியாத கனத்த நினைவுகளை நம்மிடம் விட்டு விட்டு.

 

என்னை ஏத்துக்கிட்டதுக்கு நன்றி: கௌதமி ஹேப்பி அண்ணாச்சி

சென்னை: பாபநாசம் படம் மூலம் பல காலம் கழித்து பெரிய திரைக்கு வந்த தன்னை ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு கௌதமி தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

பலகாலம் பெரிய திரை பக்கமே வராமல் இருந்தார் கௌதமி. இந்நிலையில் தான் அவர் உலக நாயகன் கமல் ஹாஸன் கை பிடித்து பாபநாசம் படம் மூலம் மீண்டும் பெரிய திரையில் பிரவேசம் செய்தார். அவர் கமலுடன் ஜோடி சேர்ந்த பாபநாசம் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

Gautami thanks audience for accepting her Comeback

இதனால் கமல், கௌதமி உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். படத்தை வெற்றிப்படமாக்கியதற்காக அவர்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கௌதமி படம் பற்றி கூறுகையில்,

எங்கள் படத்தை இவ்வளவு பெரிய அருமையான வெற்றியாக்கியதற்கு நன்றி சொல்ல வந்துள்ளோம். அதையும் மீறி தனிப்பட்ட முறையில் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு நான் நடிக்க வந்துள்ள நிலையில் இவ்வளவு அன்பான, அருமையான, அழகான வரவேற்பு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

நான் மீண்டும் நடிக்க வந்த படம் அருமையாக அமைந்ததில் மகிழ்ச்சி. அனைவருக்கும் என் நன்றி என்றார்.

 

இந்த நூற்றாண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது!

-கவிஞர் வைரமுத்து

மெல்லிசை மன்னரின் இசைமூச்சு நின்றுவிட்டது என்று சொல்வதா? இந்த நூற்றாண்டில் அதிகமாக வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது என்று சொல்வதா? ஒரு பாட்டுச் சக்ரவர்த்தி மறைந்துவிட்டார் என்று சொல்வதா? எங்கள் பால்ய வயதின் மீது பால்மழை பொழிந்த மேகம் கடந்துவிட்டது என்று சொல்வதா?

தமிழ்த் திரையிசைக்குப் பொற்காலம் தந்தவரே! போய்விட்டீரா என்று புலம்புகிறேன்.

Vairamuthu's condolence to MS Viswanathan

அரை நூற்றாண்டு காலமாய்த் தமிழர்களைத் தாலாட்டித் தூங்கவைத்த கலைஞன் இன்று இறுதியாக உறங்கிவிட்டார். அவரது இசை இன்பத்துக்கு விருந்தானது; துன்பத்துக்கு மருந்தானது. அவரது இசை தமிழின் ஒரு வார்த்தையைக்கூட உரசியதில்லை.

எம்.ஜி.ஆர் - சிவாஜி என்ற இருபெரும் பிம்பங்களைக் கட்டியெழுப்பிய இசைச் சிற்பி. திராவிட இயக்க அரசியலைக் கட்டியெழுப்புவதற்கும் அவரது பாட்டு பயன்பட்டிருக்கிறது. தமிழர்களின் வாழ்வின் எல்லாச் சம்பவத்திலும் அவர் பாடல் புழங்காத இடமில்லை. தாலாட்டு முதல் ஒப்பாரி வரை எங்கள் வாழ்வோடு நடந்து வரும் பாடல்கள் மெல்லிசை மன்னர் படைத்தவை.

ஒரு நகைக் கலைஞன் ஆபரணம் செய்வதற்காக சுத்தத் தங்கத்தில் கொஞ்சம் செம்பு கலப்பது மாதிரி கர்நாடக இசையில் மேற்கத்திய இசையைப் பொருத்தமாய்க் கலந்து புதுமை செய்தவர். அவர் தொடாத ராகமில்லை; தொட்டுத் தொடங்காத பாடலில்லை.

Vairamuthu's condolence to MS Viswanathan

கடந்தவாரம் மருத்துவமனையில் அவரது கடைசிப் படுக்கையில் மெல்லிசை மன்னரைச் சந்தித்தேன். அவரது வலதுகை விரல்களை வருடிக்கொண்டே இந்த விரல்கள்தானே ஆர்மோனியத்திலிருந்து அமிர்தம் பொழிந்த விரல்கள் - காற்று மண்டலத்தையே கட்டியாண்ட விரல்கள் - நீங்கள் தொட்ட உயரத்தை யாரும் தொடமுடியாது. பல தலைமுறைகளுக்கு நீங்கள் நினைக்கப்படுவீர்கள் என்று உரத்த குரலில் சொன்னேன். அவரது ஒரு கண்ணின் ஓரத்தில் ஒரு கண்ணீர் முத்து திரண்டு விழுந்து உடைந்தது. அதுதான் அவரை நான் கடைசியாய்ப் பார்த்தது.

பதி பக்தி - மகாதேவி - பாசமலர் - பாலும் பழமும் - பாவமன்னிப்பு - கர்ணன் - ஆயிரத்தில் ஒருவன் - ஆனந்த ஜோதி - சந்திரோதயம் - உலகம் சுற்றும் வாலிபன் - அபூர்வ ராகங்கள் என்று பலநூறு படங்களின் பாடல்கள் காலமெல்லாம் அவர் பெருமை பேசும்.

அவர் இசையமைத்த ‘நீராருங் கடலுடுத்த' என்ற தமிழ்த்தாய் வாழ்த்து அவர் புகழைத் தாங்கிப் பிடிக்கும்.

"விடைகொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே"
- என்ற பாடல்தான் நான் எழுதிக் கடைசியாய் அவர் பாடிய பாடல்.

ஒரு சகாப்தத்திற்கு எப்படி விடை கொடுப்பது? நெஞ்சு விம்முகிறது. காற்றுள்ள வரையில் அவர் கானங்கள் வாழும்.

"வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை எம்.எஸ்.வி"

அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

வாலு மீது மேலும் 6 வழக்குகள்... ரம்ஜானுக்கு வெளியாவது சந்தேகமே

சென்னை: சிம்பு - ஹன்சிகா நடிப்பில் உருவான வாலு படத்தின் மீதான விசாரணை, சற்று முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி நடந்து வருகிறது.

2 வருடங்களுக்கு முன்பு வாலு படத்தின் வெளியீட்டு உரிமையை எங்களுக்கு கொடுத்து விட்டு தற்போது வேறு நிறுவனம் மூலமாக, வாலு படத்தை வெளியிட இருக்கின்றனர். எனவே இதனைத் தடை செய்ய வேண்டும் என்று மேஜிக் ரேஸ் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருக்கிறது.

Vaalu Movie Issue

மேஜிக் ரேஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று, வாலு படத்தைத் தயாரித்த நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சென்னை உயர்நீதிமன்றம் காலஅவகாசம் கொடுத்து வழக்கை இன்று ஒத்தி வைத்தது.

இந்த நிலையில், இன்னும் 6 வழக்குகள் வாலு படத்தின் மீது போடப்பட்டு இருக்கிறதாம். இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவிருக்கிறார்களாம்.

நடப்பதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது வாலு இப்போதைக்கு வெளியாவது போலத் தெரியவில்லை, இதனால் தனுஷின் மாரி படம் ரம்ஜான் ரேஸில் தனியாகக் களம் காணுகிறது.

Vaalu Movie Issue

சிம்புவின் ரசிகர்கள் சோகமாக இருக்க தனுஷின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். வாலு படம் வழக்கில் உள்ளது எனவே இந்த வெள்ளியன்று தனுஷின் மாரி சோலோவாக ரிலீஸ் ஆகின்றது என்று ட்விட்டரில், தங்கள் வாழ்த்துகளை தொடர்ந்து பதிவிட்டு மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் தனுஷின் ரசிகர்கள்.

 

கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார்.. ஆறுதல் சொன்ன தனுஷ்.. நெகிழ்ந்து போன சிம்பு

சென்னை: வாலு பட விவகாரத்தால் நொந்து போயுள்ள சிம்பவுக்கு போன் செய்து ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் தனுஷ்.

வாலு பட விவகாரம் சாதகமாக அமையட்டும் என்று நடிகர் தனுஷ் சிம்புவை வாழ்த்தி இருக்கிறார்.

"நான் சற்று முன்னர் STR உடன் போனில் பேசினேன், வாலு படம் இவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தும் கூட சிம்புவின் தன்னம்பிக்கை சற்றும் குறையவில்லை. முழுப் பிரச்சினையையும் பாசிட்டிவாகவே எடுத்துக் கொண்டுள்ளார். எனது நெருங்கிய நண்பா உன்னைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என்று தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

பதிலுக்கு சிம்புவும் "உங்கள் அன்பிற்கு நன்றி. மாரி படவெளியீட்டிற்கு எனது வாழ்த்துக்கள், கலக்குங்க" என்று பதிலுக்கு ட்வீட் செய்து இருக்கிறார்.

 

மாரி படத்தின் தரலோக்கல் பாடல் டீசர் ரிலீஸ்

சென்னை: தனுஷ் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் மாரி படத்தின் தர லோக்கல் பாடல் டீசர் வெளியாகியுள்ளது.

இதற்கான அறிவிப்பை காலையிலேயே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார் நடிகர் தனுஷ்.

மாரி படத்தின் புதிய டீசர் உற்சாகத்துடன் கூடிய வெறித்தனமாக அமைந்துள்ளது, உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என நம்புகிறேன். என்று டீசர் குறித்த தனது கருத்தைக் குறிப்பிட்டு இருக்கிறார் தனுஷ்.

வரிசையாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்க அவற்றின் மீது ஏறி ஒவ்வொரு வாகனமாகத் தாவி ஆடி இருக்கிறார் தனுஷ், சுற்றிலும் நிற்பவர்கள் குடங்களுடன் அவரை உற்சாகப்படுத்துகின்றனர்.

கொலைவெறி புகழ் அனிருத் இசையமைத்து இருக்கும் இந்தப் பாடல் கண்டிப்பாக பெரிய அளவில் ஹிட்டடிக்கும் என்று, இப்போதே ரசிகர்கள் கூறத் தொடங்கி விட்டனர்.

33 நொடிகளில் முடியும் டீசரின் இறுதியில் ஜூலை 17 வர்றோம் என்று கூறுவது போன்று முடிகிறது. நிச்சயம் தனுஷ் ரசிகர்களுக்கு இந்த டீசர் உற்சாகத்தைக் கொடுக்கும் என்று நம்பலாம்.

ஆக மொத்தம் ரம்ஜானுக்கு தனியாகக் களம் காணுகிறார் நடிகர் தனுஷ், தனுஷின் ஒட்டுமொத்த ரசிகர்களும் பிரியாணியுடன் சேர்த்து மாரி படத்தையும் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

 

மாமேதையைக் கண்டுகொள்ளாமல் மானம் இழந்த மத்திய, மாநில அரசுகள்!

1200 படங்கள்.. பல ஆயிரம் பாடல்கள்... பல நூறு பாடல்களுக்கு குரல் கொடுத்தவர்... இப்படி நினைத்துப் பார்க்க முடியாத பெருமைகளுக்கும் சாதனைகளுக்கும் சொந்தக்காரரான எம் எஸ் விஸ்வநாதனுக்கு, இந்த அரசுகள்.. நாடு திரும்பக் கொடுத்த மரியாதை என்ன? ஒன்றுமே இல்லை.

'அவருக்கு எதுக்கு மரியாதை.. விருது.. பணம் வாங்கினார்.. பாட்டுப் போட்டார். இது சினிமா வியாபாரம்தானே' என சிலர் கேட்கக் கூடும். மிகத் தவறான வாதம்.

MSV never recognised by State and Union Govts

பல ஆண்டுகளுக்கு முன்பே பாரத ரத்னா பெற்ற லதா மங்கேஷ்கரையோ, இதோ இப்போது பல சர்ச்சைகளுக்கிடையே வாங்கிய சச்சின் டெண்டுல்கரையோ இப்படிக் கேட்டால் பொறுத்துக் கொள்வார்களா...

ஆனால் இவர்களையெல்லாம் விட மிகப் பெரிய பங்களிப்பை திரை இசைக்குத் தந்த, நல்ல இசை தந்த ஒரு மாமேதையை இந்த நாடு கவுரவிக்கத் தவறியிருக்கிறது. அவர்தான் எம்எஸ் விஸ்வநாதன்.

இதுவரை அவருக்கு ஒரு படத்துக்குக் கூட சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது.. அட மாநில அரசு விருது கூட அவருக்குக் கிடைத்ததில்லை. அவர் இசையமைத்த பல நூறு படங்கள் பெரும் வெற்றிப் படங்கள். பல ஆயிரம் பாடல்கள் மக்களின் நெஞ்சில் குடிகொண்ட காவிய கீதங்கள்.

இந்த விருது அரசியல் பற்றி அவர் அக்கறை கொண்டதில்லை என்றாலும், இவருக்கு உரிய மரியாதை செய்யுங்கள் என தமிழ் திரையுலகினரும், மீடியாக்களும் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை மத்திய அரசு. தமிழகத்தின் எந்தக் கோரிக்கையைத்தான் அவர்கள் மதித்திருக்கிறார்கள்.

மாநில அரசு மட்டுமென்ன... எந்த மாநில அரசு அங்கீகாரத்தையும் அவருக்கு வழங்கவில்லை. வாழ்நாள் சாதனைக்கான எம்ஜிஆர் விருதையாவது தந்திருக்கலாம். அதைக்கூடத் தரவில்லை. இத்தனைக்கும் இந்த மனிதர் எந்த விருது அரசியலிலும் இம்மி அளவுகூட ஈடுபாடு காட்டாதவர். கூப்பிட்ட கூட்டங்களுக்கு தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் போய் வந்தவர். எம்எஸ்வி பெற்ற ஒரே அரசு விருது கலைமாமணி. அதற்கான மதிப்பு என்ன என்பதை பத்திரிகை படிக்கும் அத்தனைப் பேரும் அறிவார்கள் (முதல்வர் ஜெயலலிதா கொஞ்சம் பரவாயில்லை. ஜெயா டிவி நிகழ்ச்சில் பொன் முடிப்பும், வாழ்நாள் சாதனைக்கு ஒரு விருதையும் கொடுத்தார்).

சரி, தேசிய, மாநில விருதுகள்தான் கிடைக்கவில்லை. அவரது சாதனையை மதித்து ஒரு பத்ம விருதாவது கொடுத்திருக்கலாமே... ம்ஹூம் அதுவும் வழங்கப்படவில்லை.

ஏன்... அது எம்எஸ்விக்கே புரியாத விஷயம். ஒரு பேட்டியில் இதுகுறித்த கேள்விக்கு அவர் சொன்ன பதில்: "நான் எதையும் எதிர்ப்பார்த்ததில்லை. எனக்கு என்ன நடக்கிறதுன்னும் தெரியாது. இசையமைப்பது ஒன்றைத் தவிர வேற ஒண்ணும் எனக்குத் தெரியாது. அந்த இசைக்கு மக்கள் பெரிய மதிப்பு கொடுத்திருக்காங்க. அந்த ஒண்ணு போதும்."

 

எம்எஸ்வி அறிமுகப்படுத்திய பாடகர்கள் மற்றும் கவிஞர்கள்!

தனது 60 ஆண்டு கால இசைப் பயணத்தில் சிறந்த பாடகர்கள் சிலரையும், கவிஞர்களையும் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் எம்எஸ் விஸ்வநாதன்.

Singers, Lyricists introduced by MSV

அப்படி அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடகர்கள்:

  • ஜெயச்சந்திரன் - திரைப்படம் - மணிபயல் (தங்கச் சிமிழ் போல் இதழோ)
  • வாணிஜெயராம் - திரைப்படம் - தீர்க்க சுமங்கலி (எஸ் எம் சுப்பையா நாயுடுவால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், எம்எஸ்வி இசையில் பாடிய மல்லிகை என் மன்னன் மயங்கும்... பாடல்தான் அவரை சிகரம் தொட வைத்தது!)
  • வசந்தா - திரைப்படம் - சுமதி என் சுந்தரி (பொட்டு வைத்த முகமோ)
  • எம்.எல்.ஸ்ரீகாந்த் - திரைப்படம் - உத்தரவின்றி உள்ளே வா
  •  ஜி.கே. வெங்கடேஷ் - திரைப்படம் - பாவ மன்னிப்பு
  • கல்யாணி மேனன் - திரைப்படம் - சுஜாதா (நீ வருவாய் என நான் இருந்தேன்)
  • புஷ்பலதா - திரைப்படம் - ராஜபாட் ரங்கத்துரை
  • சாவித்திரி - திரைப்படம் - வயசு பொண்ணு
  •  ஷேக் முகமது - திரைப்படம் - ஆபூர்வ ராகங்கள் (கை கொட்டிச் சிரிப்பார்கள்... )
  • ஷோபா சந்திரசேகர் - திரைப்படம் - நம்நாடு

கேஜே ஜேசுதாஸ், எஸ்பி பாலசுப்பிரமணியம் போன்றவர்கள் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் மூலம் அறிமுகமாகியிருந்தாலும், அவர்களுக்கு பெரும் புகழ் பெற்றுத் தந்தவர் எம்எஸ்விதான்.

எம்.எஸ்.வி அறிமுகப்படுத்திய கவிஞர்கள்

புலமைப்பித்தன்
முத்துலிங்கம்
நா.காமராசன்
ரோஷானாரா பேகம் - குங்குமப்பொட்டின் மங்கலம் பாடல் (குடியிருந்த கோயில்)

கவிஞர்கள் கண்ணதாசனும் வாலியும் அறிமுகமானது வேறு இசையமைப்பாளர்கள் மூலம் என்றாலும், புகழின் உச்சிக்குச் சென்றது எம்எஸ்வி மூலம்தான்.

 

1200 படங்கள்... மெல்லிசை மன்னரின் அசுர சாதனை!

தான் செய்த சாதனைகளை நினைவில் கூட வைத்துக் கொள்ளாமல் இந்த உலகை விட்டு மறைந்திருக்கிறார் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன்.

எம்ஜிஆர் நடித்த ஜெனோவா படத்தில் இணை இசையமைப்பாளர் என்று போடப்பட்டாலும், அந்தப் படத்துக்கு உண்மையில் இசையமைத்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்திதான். மறைந்த தனது குரு சிஆர் சுப்பாராமனை கவுரவிக்க இணை இசையமைப்பாளர் என்று தன் பெயரைப் போட்டுக் கொண்டாராம்.

MSV's rare feat in Film music

எம்எஸ் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளனர். ஆனால் எத்தனைப் படம் என்பதை துல்லியமாக பதிவு செய்து வைத்துக் கொள்ளவில்லை.

1952-ல் தொடங்கி, 1965 வரையான 13 ஆண்டுகளில் இருவரும் இணைந்து இசையமைத்த 75 படங்களின் பெயர்கள்தான் பதிவுகளில் உள்ளன. எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பிரிந்த இருவரும், மீண்டும் 1995-ல் சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் படத்தில்தான் இணைந்தனர். ஆனால் எதிர்ப்பார்த்த வெற்றி அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

இடைப்பட்ட காலத்தில் மீதிப் படங்கள் அனைத்தும் எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்தவைதான். இவற்றில் தமிழ் தவிர, 115 மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களும் அடங்கும்.

எம்எஸ் வியின் இசைப் பயணத்துக்கு வயது 65 நீண்ட நெடிய ஆண்டுகள். இந்தப் பயணத்தில் அவர் இசையமைப்பதை, பாடுவதை மட்டுமே சிரத்தையாய் மேற்கொண்டாரே தவிர, அவற்றைப் பதிவாக ஆவணப்படுத்துவதில் கவனம் செலுத்தவே இல்லை. ஊடகம் வளர்ந்து விரிந்த பின்னாளில் அவரது ரசிகர்கள்தான் இதைப் பதிவு செய்தனர்.

தனது இந்த சாதனையை அவர் எந்த மேடையிலும் காட்டிக் கொண்டதுகூட இல்லை.

 

எனக்கு தொழில் கற்றுக்கொடுத்த தெய்வம் எம்.எஸ்.வி: சங்கர் கணேஷ் கண்ணீர் அஞ்சலி

சென்னை: மறைந்த எம்.எஸ்.விஸ்வநாதனின் உடலுக்கு ஏராளமான திரை உலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கண்ணீர் அஞ்சலி செலுத்திய இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், எனக்கு தொழில் கற்றுக்கொடுத்த கடவுள் எம்.எஸ்.வி, நான் முன்னேற எனக்கு துணை நின்றவர் என்று கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படுவர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். எனினும் எம்.எஸ்.விஸ்வாநனின் உடல்நிலை மோசம் அடைந்தது.

Sankar Ganes pays tribute to veteran music director M.S.Viswanathan

இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அதிகாலை 4:15 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது. அவருடைய உடல் சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் இருந்தே திரை உலக பிரமுகர்களும், ரசிகர்களும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ஒய்.ஜி மகேந்திரன், பிரபல பாடகி வாணி ஜெயராம் ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தினர்.

நீண்ட காலமாக எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பணியாற்றிய சங்கர் கணேஷ், கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாவை பற்றி சொல்ல வார்த்தையே இல்லை.

எத்தனையோ ஜாம்பாவான்களை அவரோட இசையில பாட வச்சிருக்கார். பாசமலர்ல இருந்து பெர்மனென்டா அவர் கூடவே இருக்கேன். எங்கே போனாலும் என்னை கூட்டிக்கொண்டு போவார். இசையமைப்பது, மிக்சிங், ரீ ரிக்காட்டிங் என பலவிசயங்களை நுணுக்கமாக கற்றுக்கொடுத்தார். எனக்கு தொழில் கற்றுக் கொடுத்த தெய்வம் அவர், வாழ்க்கை பிச்சை போட்டவர் என்று கண்ணீர் மல்க கூறினார் சங்கர் கணேஷ்.

 

மீண்டும் மணி ரத்தினம் படத்தில்.. ஐஸ்!

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்குத் திரும்புகிறார், நடிகை ஐஸ்வர்யாராய். ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கப் போகும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்கிறார்.

2 நாயகர்களைப் பற்றிய படம் என்பதால் தளபதி படத்தில் நடித்த மம்முட்டி, கார்த்தியுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார். படத்தின் கதையை முடித்து நடிகர்களைத் தேர்ந்தெடுத்த மணிரத்னம் அடுத்து நாயகியையும் தேர்வு செய்து விட்டார் என்று கூறுகிறார்கள்.

Mani Rathnam and Aishwarya Rai   Hands again?

மணிரத்னத்தின் விருப்பமான நாயகியான ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்று கூறுகிறார்கள். இருவர், குரு, ராவணன் என்று ஏற்கனவே மணிரத்னத்தின் படங்களில் நடித்திருப்பதால் மீண்டும் அவரையே இந்தப் படத்தில் நடிக்க வைக்க மணிரத்னம் விரும்புகிறாராம்.

மணிரத்னம் படங்களில் நடிப்பதை மிகவும் விரும்பும் ஐஸ்வர்யா இந்த வாய்ப்பை கண்டிப்பாகத் தவற விட மாட்டார் என்று, திரையுலகைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.

விரைவில் படத்தைப் பற்றிய முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்க்கலாம் ஐஸ்வர்யா மீண்டும் தமிழில் நடிக்கப்போகிறாரா, அல்லது வாய்ப்பை நழுவவிடப் போகிறாரா என்று.