பேச்சுவார்த்தைக்கு அழையுங்கள் - இறங்கி வந்த அபிராமி ராமநாதன்

Exhibitors Ready Solve Viswaroopam Issue

சென்னை: விஸ்வரூபம் பட பிரச்சினை பற்றி பேச்சுவார்த்தை நடத்த திரையரங்க உரிமையாளர்கள் தயாராக இருக்கிறோம். எங்களை பேச்சு வார்த்தைக்கு அழையுங்கள், என்று அபிராமி ராமநாதன் கூறினார்.

சென்னை பிரசாத் லேப் அரங்கில் நடந்த ‘ஊராட்சி ஒன்றியம்' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கேயார், கே பாக்யராஜ், அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கேயார் பேசுகையில், "2012-ல் 146 படங்கள் வெளியாகியுள்ளன. அதில், வெற்றி பெற்ற 8 படங்களும் சிறு முதலீட்டு படங்கள். சிறு முதலீட்டு படங்கள் வளர்வதே சினிமா தொழிலுக்கு ஆரோக்கியம். ஆனால், இப்போது சின்ன படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அறிமுகமானது சிறு முதலீட்டு படங்களில்தான். 62 படங்கள் தணிக்கையாகி, வெளியிட முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன.

இப்போது, ‘விஸ்வரூபம்' பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்த படத்துக்கு திரையரங்கம் கொடுக்க மாட்டோம் என்கிறார்கள். இந்த பிரச்சினை வளரவிடாமல், சீக்கிரம் பேசி சுமூக முடிவு எடுக்க வேண்டும் என்று அபிராமி ராமநாதனை கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

அபிராமி ராமநாதன்

அதற்கு பதில் அளித்து, ‘அபிராமி' ராமநாதன் பேசுகையில், "சிறு முதலீட்டு படங்களை நம்பித்தான் தியேட்டர் அதிபர்கள் உயிர் வாழ்கிறோம். சிறு முதலீட்டு படம் எடுப்பவர்கள்தான் எங்களுடன் இருக்கிறார்கள். கேயார் பேசும்போது, டி.டி.எச். பிரச்சினையை பேசி தீர்க்கலாம் என்றார்.

பேசுவதற்கு யாரை அழைத்தார்கள்? 'சேனலில்' படம் போடுகிற பிரச்சினை கூப்பிட்டார்கள். பேசினோமே... நாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறோம். கண்டிப்பாக அழையுங்கள். வருகிறோம்,'' என்றார்.

இதன் மூலம், தியேட்டர் உரிமையாளர்கள் இறங்கிவந்துவிட்டது ஊர்ஜிதமாகியுள்ளது. விஸ்வரூபம் விவகாரத்தில் விரைவில் சமாதானப் படலம் அரங்கேறலாம்.

 

கஞ்சாவைக் கைவிட்டார் லேடி காகா

Lady Gaga Says No Marijuana

லண்டன்: தான் கஞ்சா அடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டதாக பாப் பாடகி லேடி காகா கூறியுள்ளார்.

லேடி காகா எதிலும் வெளிப்படையானவர், எதையும் வெளிப்படையாக பேசக் கூடியவர். தான் நீண்ட காலமாக கஞ்சாப் பழக்கத்திற்கு உட்பட்டவர் என்பதை அவர் வெளிப்படையாகவே சொன்னவர். கடந்த செப்டம்பர் மாதம் நெதர்லாந்தில் நடந்த நிகழ்ச்சியில் கூட மேடையிலேயே கஞ்சாவைப் புகைத்து அனைவரையும் அதிர வைத்தார். கூடவே தனக்கு கஞ்சா ரொம்பவே பிடிக்கும் என்றும் கூறி மெய் சிலிர்த்தவர்.

இந்த நிலையில் தற்போது கஞ்சாவை விட்டு விட்டதாக கூறியுள்ளார் காகா. தனது ஆர்ட்பாப் ஆல்பத்தைப் பதிவு செய்து முடித்த கையோடு கஞ்சாவையும் மறந்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.

எனது ஆர்ட்பாப் ஆல்பத்தில் நான் கஞ்சா புகைக்கும் காட்சி எதுவும் இல்லை. கஞ்சாவை நான் விட்டு விட்டேன் என்று கூறியுள்ளார் காகா.