ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த அஜீத்

சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜீத், படப்பிடிப்பு இடைவேளையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.

இந்த வீடியோதான் இப்போது சமூக வலைத் தளங்களில் பரபரவென பகிரப்பட்டு வருகிறது.

சென்னைக்கு அருகில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இந்தப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இப்படப்பிடிப்பின் போது கிடைத்த இடைவெளியில் அஜித், தனது படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.

விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித், நேரம் கிடைக்கும்போதேல்லாம் தனக்கு பிடித்தமான விளையாட்டுக்களை விளையாடி மகிழ்வது வழக்கம்.

தல 56 பட ஷூட்டிங்கில், படக்குழுவினருடன் அஜித் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தது அவர்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது.

இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

 

இன்று மாலையே ரஜினியின் புதிய பட அறிவிப்பு..?-. பரபரக்கும் ரசிகர்கள் மற்றும் மீடியா!

கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து சமூக வலைத் தளங்களில் ரஜினி ரசிகர்கள் பரபரப்பாக தகவல் பரிமாறிக் கொண்டுள்ளனர். மீடியாவும் அடுத்தடுத்து ரஜினி பட செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

லிங்கா படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் புதிய படம் குறித்து கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

Rajini's new movie announcement today?

ரஜினி அடுத்த மூன்றாண்டுகளில் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கப் போவதாகவும், அதற்கான இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களையும் அவர் முடிவு செய்துவிட்டார் என்றும் கூறப்பட்டது.

முதலில் அவர் கலைப்புலி தாணுவுக்கு ஒரு படம் நடித்துத் தரப் போகிறார் என்றும், அந்தப் படத்தை மெட்ராஸ் ரஞ்சித் இயக்குவார் என்று செய்தி வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை.

Rajini's new movie announcement today?

இதற்கிடையில் லிங்கா படப் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருப்பதால், அது சுமூகமாகவோ, சட்ட ரீதியாகவோ முடியும் வரை காத்திருக்குமாறு கூறிவிட்டார் ரஜினி. நாளை லிங்கா விவகாரம் பற்றி ரஜினியின் தூதுவர் எனப்பட்ட திருப்பூர் சுப்பிரமணியம் ஒரு அறிவிப்பை வெளியிடவிருக்கிறார். அத்துடன் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி விழும் என நம்பப்படுகிறது.

வரும் ஜூன் 10-ம் தேதிதான் ரஜினி - ரஞ்சித் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் இன்று மாலையே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.

 

சேதாரத்தை ... ஸாரி.. பாக்ஸ் ஆபிசை அடித்து நொறுக்கிய சான் ஆன்ட்ரியாஸ்!

லாஸ் ஏஞ்செல்ஸ்: எத்தனை பூகம்பம் கண்ணெதிரே வந்தாலும் அதனை மீண்டும் ஒருமுறை திரையிலும் பார்த்து ஆனந்தப்பட்டுக் கொள்ளும் நமது மக்கள் இருக்கும் வரை இந்த மாதிரி படங்களின் வசூலை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது போல.

பாஸ்ட் அண்ட் பியுரிஸ் படபுகழ் டுவைன் ஜான்சன் கதையின் நாயகனாக நடித்து மூன்று தினங்களுக்கு முன்பாக வெளிவந்த படம் சான் ஆன்ட்ரியாஸ்.

San Andreas Shakes Up Box Office With $113  Million Weekend

கடந்த வெள்ளிகிழமை திரைக்கு வந்த இந்த பூகம்பம்... ஸாரி... படம் இதுவரை வெளியான மூன்று தினங்களுக்குள் சுமார் 113 மில்லியனை வசூலித்து பாக்ஸ் ஆபிசையே அடித்து நொறுக்கியிருக்கிறது, மொத்தப்படத்திற்கான செலவே 100 மில்லியன்கள் தான். இதே வேகத்தில் ஓடினால் இந்த வருடம் வசூலில் இதுவரை வந்த ஹாலிவுட் படங்களிலேயே நம்பர் 1 படம் என்ற இடத்தைத் தட்டிச் செல்லக் கூடும்.

உலகமெங்கும் வெளியாகி வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் இப்படத்தில் அப்படி என்ன சொல்லியிருக்கிறார்கள்? பேரழிவு ஒன்றிலிருந்து தன் குடும்பத்தை காப்பாற்றும் நாயகனின் கதையைத்தான் இந்த ‘சான் ஆன்ட்ரியாஸ்' படத்திலும் காட்டியிருக்கிறார்கள்.

பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் அதை ரசிகர்களுக்கு படைத்திருக்கும் விதத்தில் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள். எதற்காக படம் இந்த ஓட்டம் ஓடுகிறது, எல்லாம் படத்தை எடுத்திருக்கும் முறை பின்னணி இசை, விஷுவல் எஃபெக்ட்ஸ், கிராபிக்ஸ் மற்றும் காலம்காலமாக நமக்குள் உள்ள அச்சம் போன்றவைகள் தான் படம் இப்படி வசூலை வாரிக் குவிக்க காரணங்களாக உள்ளன.

படத்தில் காட்டியிருக்கும் பேரழிவுகளைப் பார்த்தால் இப்படியெல்லாம் நடக்குமா? என கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தாலும் இன்றைய சூழ்நிலையைப் பார்க்கும்போது இப்போது இல்லாவிட்டாலும், இதுபோல் எதிர்காலத்தில் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. மலை உச்சியிலிருந்து உருண்டு விழுந்த காருக்குள் இருக்கும் பெண்ணை காப்பாற்றும் அந்த அறிமுகக் காட்சி அசத்தல். அதிலும் 3டியில் பார்க்கும்போது நாமே விழுவதுபோல் லேசாக பீதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இதுபோன்ற பூகம்பங்கள் வந்தால் வளர்ந்த நாடுகளின் மிகப்பெரிய அணைக்கட்டுகளால் எத்தகைய பேராபத்து ஏற்படும் என்பதை சமூக அக்கறையோடு இப்படத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அமெரிக்காவைப் பார்த்து நாம் ஆச்சரியப்படும் வானுயர்ந்த கட்டிடங்கள், பூகம்ப நேரங்களில் எவ்வளவு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை தத்ரூபமாக ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார்கள். சான்பிரான்ஸிஸ்கோ நகரமே இரண்டாகப் பிளந்து நிற்கும் காட்சியை ரசிகர்கள் வாய் பிளந்து ரசிக்கிறார்கள். பின்னணி இசை, விஷுவல் எஃபெக்ட்ஸ், கிராபிக்ஸ் ஆகியவை இப்படத்தில் உச்சபட்ச உழைப்பைக் கொட்டியிருக்கின்றன.

கதையும், காட்சிகளும் கொஞ்சம் ஏற்கெனவே பார்த்துவிட்ட உணர்வை ஏற்படுத்தினாலும் 2012, ஆர்ட்டிக் பிளாஸ்ட், தி டே ஆப்டர் டுமாரோ, ட்விஸ்ட்டர் போன்ற படங்களின் வரிசையில் இந்த ‘சான் ஆன்ட்ரியாஸு'ம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சான் ஆன்ட்ரியாஸ் - வசூல் "பூகம்பம்"!

 

"தலைவரை" அவமானப்படுத்துவதா.. சூர்யாவிற்கு எதிராக பொங்கும் அஜித், விஜய் ரசிகர்கள்!

சென்னை: சமீபத்தில் மூன்று முறை பெயர் மாற்றம் செய்து வெளிவந்த மாசு என்கிற மாசிலாமணி படத்திற்கு விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடம் இருந்து பயங்கரமான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அஜித் மற்றும் விஜயின் சூப்பர் ஹிட் படங்களின் வசனங்கள் மற்றும் அவர்கள் நடித்த படங்களின் கதாபாத்திரங்களின் பெயரை மாசு படத்தில் இஷ்டத்துக்கு உபயோகப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு என்பதுதான் இந்த கோபத்திற்குக் காரணம்.

Vijay-Ajith Fans Clash on Social Media due to Suriya's 'Masss'

விஜயின் துள்ளாத மனமும் துள்ளும், கத்தி, அஜித்தின் ஆரம்பம், வீரம் போன்ற படங்களின் வசனங்களை , பாடல்களை மாசு படத்தில் பயன்படுத்தியிருப்பது இரு தரப்பு ரசிகர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது பத்தாதென்று துப்பாக்கி படத்தில் விஜயின் பெயரான ஜெகதீஷை சூர்யாவின் பெயருக்கு சூட்டியிருக்கிறார்கள். அஜித்தின் மங்காத்தா படத்தில் அவரின் பெயரான விநாயக் மகாதேவ் பெயரை பிரேம்ஜிக்கு வைத்திருக்கிறார்கள்.

காமெடியனுக்குப் போய் தங்கள் தலைவரான அஜித்தின் பெயரை சூட்டியது அஜித் ரசிகர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. எனவே சமூக வலைதளங்களில் தொடர்ந்து மாசு படத்திற்கும் வெங்கட் பிரபுவுக்கும் எதிராக தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.

இதில் உச்சகட்டமாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தங்களுக்குள் இதனால் மோதிக் கொள்கிறார்கள் என்பதுதான் கொடுமை.

எதையுமே பிளான் பண்ணி செய்யனும்.. பிளான் பண்ணி செய்யாட்டி இப்படித்தான் ஆகும்!

 

உத்தம வில்லன்.... சோதனை இன்னும் தீரவில்லை!

கமல் ஹாஸனின் உத்தம வில்லன் பாக்ஸ் ஆபீஸில் ஒரு பக்கம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது.

இன்னொரு பக்கம் அந்தப் படத்துக்கான கடன் பிரச்சினை, தொலைக்காட்சி உரிமை பிரச்சினை என பிரச்சினைகள் நீண்டுகொண்டே போகின்றன.

Uthama Villain again in trouble

ஏற்கெனவே கடன் பிரச்சினையால் 'உத்தம வில்லன்' திட்டமிட்டபடி வெளியாகவில்லை. படத்துக்கு மக்களிடம் வரவேற்பும் கிடைக்காத நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

இப்படத்தை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது முன்னணி தொலைக்காட்சி நிறுவனம். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் இருந்து படம் அடங்கிய ஹார்ட் டிஸ்க் தரப்பட்டு விட்டாலும், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் நடந்த ஜெமினி நிறுவனத்திடமிருந்து இன்றும் தடையில்லா சான்றிதழ் பெறப்படவில்லையாம். இந்த சான்றிதழ் பெற்றால்தான் இப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடியும்.

தனக்கு சேர வேண்டிய கடன் தொகையைக் கொடுத்தால்தான் தடையில்லா சான்றிதழை தரமுடியும் என ஜெமினி நிறுவனம் கூறிவிட்டதால், இழுபறி நீடிக்கிறதாம்.

 

ஒரே நாளில் 'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்' மற்றும் 'குற்றம் கடிதல்'!

தனது குற்றம் கடிதல் மற்றும் நாலு போலீசும் நல்லாருந்த ஊரும் ஆகிய படங்களை ஒரே நாளில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார் ஜே சதீஷ்குமார்.

ஜேஎஸ்கே நிறுவனம் தயாரித்து 'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்' நகைச்சுவை படம். குற்றம் கடிதல் படம் ஏகப்பட்ட சர்வதேச விருதுகள் மற்றும் தேசிய விருதினைப் பெற்றுள்ளது.

இந்த இரு படங்களையுமே ஜூன் 19ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

J Sathish Kumar to release 2 movies simultaneously

இந்த இரு படங்களின் மீதும் தனக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாலேயே, ஒரே நாளில் வெளியிடுவதாகக் கூறுகிறார் ஜே சதீஷ்குமார்.

"ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிடும் தயாரிப்பாளர் JSK சதீஷ் குமாரின் இந்த முடிவு இவ்விரண்டு படங்களின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. " இந்த இரண்டு படங்களும் வெவ்வேறு பாணிகளை NJ ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் 'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்' ஒரு புதிதான கதைக்களத்தில் அமைந்த நகைச்சுவை திரைப்படம்.

என்ஜே கிருஷ்ணா இயக்கியுள்ள நாலு போலீசும் நல்லாருந்த ஊரும் படத்தில் நான்கு போலிஸ்காரர்கள் தங்கள் வேலையை தக்க வைக்க செய்யும் பல தந்திரங்களை நகைச்சுவை ததும்ப சொல்லியிருக்கிறார்களாம்.

குற்றம் கடிதல் விருது படம் மட்டுமல்ல, விறுவிறுப்பான பொழுதுபோக்கும் படமும் கூட என்கிறார் அந்தப் படத்தின் இயக்குநர்.

 

'இப்போ தமிழில் வெறும் அடிதடி, பேய், மசாலா படங்கள்தான் வருது!'- மலையாள இயக்குநர்

ஒவ்வொரு இயற்கைச் சீரழிவும் பல உயிர்களுக்கு முடிவுரை எழுதினாலும், சில உணர்ச்சிகரமான கதைகளுக்கு முன்னுரை எழுதவும் தவறுவதில்லை.

Irandu Manam Vendum, a movie for family audience

தமிழ்நாடு சந்தித்த மாபெரும் இயற்கை சீற்றத்திலிருந்து ஒரு நெகிழ்ச்சியான கதையை இழை பிரித்து 'இரண்டு மனம் வேண்டும்' என்கிற திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்.

குழந்தையை மையப்படுத்திய பாசப் போராட்டம்தான் கதை என்றாலும் காதல், நகைச்சுவையும் இயல்போடு கலந்த திரைக் கதையாக உருவாக்கப் பட்டுள்ளது.

Irandu Manam Vendum, a movie for family audience

இப்படத்தை பிரதீப் சுந்தர் இயக்கியுள்ளார், இவர் மலையாளத்தில் பல முன்னணி இயக்குநர்களிடம் பணியாற்றியவர். இது இவருக்கு முதல் படம். ஹோலிமேன் பிலிம்ஸ் சார்பில் அனில் கொட்டாரக்கரா தயாரிக்கிறார். கதை. திரைக்கதை வசனத்தை சி.ஆர்.அஜய் குமார் எழுதியுள்ளார்.

கடலோரப் பகுதியின் பின்புலத்தில் நிகழும் இக்கதை பார்ப்பவர்களின் மனசோரம் நிச்சயமாக இடம் பிடிக்கும் என்று நம்புகிறார் இயக்குநர் பிரதீப் சுந்தர்.

நாயகனாக சஜி சுரேந்திரன், நாயகியாக சிலங்கா நடித்துள்ளார்கள். மோகன் சர்மா, அழகு, கிரேன் மனோகர், சீமாஜிநாயர், சாய்னா, ரிந்துரவி, அருள்மணி, மணிமாறன், 11 மாத சிறு குழந்தை ப்யோனா ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

வி.கே.பிரதீப் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் 3 பாடல்கள். இசை அறிமுகம் முகமது அலி. பாடல்கள்- வேல் முருகன். படத்தொகுப்பு -ரஞ்சித் டச் ரிவர், கலை -ஜோசப் போபின், ஸ்டண்ட்- பயர் கார்த்திக், நடனம்- மதோ ஆர்., தயாரிப்பு மேற்பார்வை- சுகுமார், தயாரிப்புநிர்வாகம்- கார்த்திக்.

முழுக்க முழுக்க மலையாள தொழில் நுட்பக்குழு பின்புலமாக இருக்கிறதே என்றால், "இப்படம் மலையாளத்தை விட தமிழில் வரவேற்பைப் பெறும். இப்போது தமிழில் வெறும் சண்டை, அடிதடி, பேய் என்றுதான் படங்கள் வருகின்றன. முழுமையான பாசம், காதல், நேசம் பற்றி தமிழில் யாரும் எடுக்க முயல்வதில்லை.

ஆனால் அப்படிப்பட்ட படங்களை தமிழில் ரசிகர்கள் வரவேற்கத் தயங்கமாட்டார்கள். அந்த நம்பிக்கையில் எல்லாருக்கும் தெரிந்த ஒரு கதையை எடுத்துக் கொண்டு யதார்த்தமாகப் படமாக்கி இருக்கிறோம். இது ஒரு சாதாரண மனிதனின் அசாதரண கதை," என்கிறார் இயக்குநர் பிரதீப் சுந்தர்.

நாகர் கோவில், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் முப்பது நாட்களில் முழுப்படப் பிடிப்பை முடித்திருக்கிறார்கள். ஆகஸ்டில் வெளியிடவிருக்கிறார்கள்.

ஆகஸ்டில் வெளியிடும் நோக்கில் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

 

வசூலில் மாஸ் காட்டும் மாசு!

சென்னை: நடிகர் சூர்யா உள்பட பல பேய்கள் கூட்டாக நடித்து வெளிவந்திருக்கும் மாசு என்கிற மாசிலாமணி படம் தமிழ்நாட்டில் இதுவரை 17.30 கோடி ரூபாயை, வெளியான மூன்று தினங்களுக்குள்ளேயே வசூலித்து சாதனை புரிந்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரணிதா மற்றும் பிரேம்ஜி அமரன் நடிப்பில் கடந்த வெள்ளிகிழமை வெளியான மாசு படம் பாக்ஸ் ஆபிசில் எதிர்பார்த்த வசூலைக் குவித்துள்ளது.

Mass 3  Days Box  Office Collections

படத்திற்கு நல்ல விமர்சனங்களை மீடியாக்கள் கொடுத்திருந்தாலும் படம் வெளியாவதற்கு முன்பு மூன்று முறை வரிவிலக்கிற்காக பெயரை மாற்றியது, படம் வெளிவந்தவுடன் விஜய் மற்றும் அஜித் வசனங்களை படத்தில் இஷ்டத்துக்கு உபயோகப் படுத்தியதாக விஜய் அஜித் ரசிகர்களின் கண்டனங்கள் என்று படம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்தது.

அடிக்கடி மீடியாக்களை கூட்டி பேட்டி அளித்து அளித்து ரொம்பவே நொந்து போயிருந்த வெங்கட் பிரபுவுக்கு படத்தின் வசூல் தற்போது மனமகிழ்ச்சியைத் தந்துள்ளது.

படம் வெளியான மூன்று நாட்களுக்குள்ளேயே இதுவரை 17.30 கோடி ரூபாயை வசூலித்துள்ளது, அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியா நாட்டில் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களை விட மாசு திரைப்படம் வெளியான 3 தினங்களுக்குள்ளேயே அதிகமாக வசூ.லித்து உள்ளது.

பிரபல தமிழ் நடிகர்களின் படங்களை விட சூர்யாவின் மாசு திரைப் படத்திற்கு ஆஸ்திரேலியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் தமிழ் சினிமாவில் பேய்களின் வருடம் என்பதை நிரூபிப்பது போல தொடர்ந்து பேய்படங்கள் நன்றாக ஓடிவருகின்றன, தமிழ் சினிமாவில் தொடரும் ஆண் பேய்களின் ஹிட் பட வரிசையில் தற்போது புதிதாக சூர்யாவும் சேர்ந்திருக்கிறார்.

எந்த மந்திரவாதி வந்து தமிழ் சினிமாவ பிடிச்சிருக்கிற பேய ஓட்டப்போறாரோ...தெரியல!

 

என்னை நாய் என்றழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ஓயாத விஷால்

நடிகர் சங்க விவகாரத்தில் சரத்குமார் - விஷால் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

நடிகர் சங்க உறுப்பினர்களிடையே தவறான தகவல்களை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் விஷால் என்று அண்மையில் சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து இருதரப்பிலும் அறிக்கைப் போர் தொடரும் நிலையில் தயாரிப்பாளர் சங்கம், பிலிம் சேம்பர், நடிகர் சங்க பிரதிநிதிகள் சேர்ந்து சமரசம் செய்ய முயற்சி செய்து வருவதாகத் தெரிகிறது.

Vishal raises 3 questions against Sarath Kumar

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் விஷாலிடம் கேட்டோம். அவர் கூறுகையில், "நான் யாருடனும் மோதவோ அல்லது குழப்பத்தை விளைவிக்கவோ விரும்பவில்லை. நான் நடிகர் சங்கத்தில் ஒரு சாதாரண உறுப்பினர் என்ற முறையில் அதன் செயல்பாடுகளில் அதிக அக்கறை உள்ளவன்.

மூன்று கேள்விகள்

எனது மூன்று கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தேவை. இதைத்தான் நான் காலங்காலமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் சரியான விளக்கம் இதுவரை வந்தபாடில்லை.

ஒன்று...

நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவது தொடர்பாக...

இதைப் பற்றிக் கேட்கும் போது இது சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதை காரணம் காட்டுகிறார்கள். 'பூச்சி' முருகன் தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கினால் கட்டிடம் கட்டலாம் என்று சொல்லப்பட்டது.

இந்த வழக்கில் கட்டிடம் கட்டுவது தொடர்பான 'டீல்' செல்லாது என்று நீதிபதி சந்துரு ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளார். 9 பேருக்கு பதிலாக 2 பேர் கையெழுத்திட்டால் அந்த 'டீல்' செல்லாது என்று அந்த சிங்கிள் பெஞ்ச் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் டிவிஷன் பெஞ்ச் நீதிமன்றமும் இது செல்லாது என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புகள் தவறா..?

இரண்டு... கடந்த வருடம் நடந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில் 2015 பொங்கலுக்குள் வழக்கை உடைத்து கட்டிடம் கட்டாவிட்டால் விஷால் சொல்லும் திட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். பொங்கல் முடிந்து மாதங்கள் பல மாதங்கள் ஆகி விட்டன. இன்னும் அதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை.

திருவாளர் என்பது தவறான வார்த்தையா?

மூன்று... நடிகர் குமரிமுத்து அவர்கள் 'திருவாளர்' என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காகவே பைலா எண் 13-ன்படி நடவடிக்கை எடுத்து அவரை சங்கத்திலிருந்து நீக்கினார்கள். ஆனால் என்னை 'நாய்' என்று பேசி இழிவுபடுத்தியவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே...? அப்படியானால் பைலா எண் 13-ன் கீழ் நடவடிக்கை என்பது குமரிமுத்துவுக்கு மட்டும் தானா..?

ஏன் துணைத்தலைவர் காளைக்கு அந்த சட்டம் பொருந்தாதா...? இதற்கு மனசாட்சிப்படி அவர்கள் விளக்கம் சொல்லட்டும்.

இந்த மூன்று கேள்விகளில் உள்ள நியாயமான கருத்துகளை சொல்வது சங்கத்தின் மீது அவதூறான செய்திகளை பரப்பி வருவதாக ஆகி விடுமா..? இதற்கும் அவர்கள் மன்சாட்சி சரியான பதிலை சொல்லட்டும்," என்றார்.

ஆக.. இன்னும் ஏகப்பட்ட அறிக்கைகள் பாக்கியிருக்கு போல!

 

சினிமாவை அழிக்கும் நடிகர்கள்..! - தயாரிப்பாளர் டி.சிவா அதிரடிப் பேச்சு

சினிமாவை அழிக்கும் நடிகர்கள் இருக்கிறார்கள் என்று ஒரு சினிமா விழாவில் தயாரிப்பாளர் டி.சிவா பேசினார்.

இது பற்றிய விவரம் வருமாறு...

கார்த்திக் சுப்பராஜிடம் உதவியாளராக இருந்த ராகவேந்திர பிரசாத் இயக்கியுள்ள படம் '54321. இப்படத்தை பானு பிக்சர்ஸ் ராஜா மற்றும் மெயின் ஸ்ட்ரீம் புரொடக்ஷன்ஸ் ஜி.வி.கண்ணன் இணைந்து தயாரித்துள்ளனர்.

Producer T Siva's shocking speech at film event

இரண்டு மணிநேரத்தில் நடக்கும் கதையே இரண்டு மணி நேரப் படமாகியுள்ளது.

ஜி.ஆர். அர்வின், ஷபீர், பவித்ரா, ரோகிணி, ரவிராகவேந்திரா, ஜெயகுமார் நடித்துள்ளார்கள். இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்.

இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

ட்ரெய்லரை தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.

விழாவில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா பேசும் போது. "எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இங்கு வந்தேன். '54321' படத்தின் ட்ரெய்லரையும் பாடலையும் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. கார்த்திக் சுப்பராஜ் படமோ என்று நினைத்தேன். அவ்வளவு அற்புதமாக இருந்தது. பக்குவத்துடன் எடுக்கப்பட்டிருந்தது.

காட்சிகளைப் பார்த்தபோது எனக்குத் தோன்றியது இதுதான். இதில் நடித்த நடிகர்கள் பெரிய அளவுக்கு வளர வேண்டும். நாங்கள் நாலைந்து நடிகர்களிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு படுகிறோம். பத்து கதாநாயகர்கள், பத்து கதாநாயகிகள் புதிதாக வந்தால் தயாரிப்பாளர்களுக்கு நல்லது. பிரச்சினை இருக்காது. இவர்கள் வளர்ந்து தயாரிப்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.

சினிமாவில் நடிகர்களில் இரண்டு ரகத்தினர் இருக்கிறார்கள். சினிமாவை காக்கும் நடிகர்கள் ஒரு ரகம், சினிமாவை அழிக்கும் நடிகர்கள் இன்னொரு ரகம். இப்படி இருக்கிறது சினிமா. இவர்கள் வளர்ந்து தயாரிப்பாளர்களைக் காக்கும் நடிகர்களாக இருக்க வேண்டும்.

இந்த படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்," என்று டி.சிவா பேசினார்.

தயாரிப்பாளர்தான் தாய் - தந்தை: எஸ்.தாணு

இந்த நிகழ்ச்சியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு பேசுகையில், "இங்கே இயக்குநர் அம்மா, அப்பா, குரு, அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஆகிய முன்று பேருக்கு நன்றி கூறினார். இந்தப் படத்தின் இயக்குநர் எவ்வளவு உயர்ந்தாலும் தயாரிப்பாளர்களை மறக்கக் கூடாது. இயக்குநருக்கு தாய் தந்தையாக இருப்பவர் தயாரிப்பாளர்தான். இதை மறந்து விடக் கூடாது. நம்பி முதலீடு செய்பவர் தயாரிப்பாளர்தான்..

1984ல் நான், நண்பர் சேகரனின் எண்ணத்தில் 'யார்?' என்று ஒரு திகில் படம் எடுத்தேன்.

9 லட்சத்தில் முடிக்க நினைத்து வட்டி சேர்ந்து 36 லட்சத்தில் வந்து நின்றது. அதற்காக என்னிடம் இருந்த பல அருமையான படங்களின் நெகடிவ் உரிமைகளை விற்றேன். படம் பெரிய வெற்றி. அதே போல இப்படமும் வெற்றி பெற வேண்டும்.

இப்போது பெரிதாகி வரும் 'க்யூப்' பிரச்சினைக்கு விரைவில் முடிவு கட்டப்படும். பெரிய படங்களின் 'க்யூப்'பிற்கு அதிகமாக தொகை வாங்கிக் கொள்ளலாம். சிறிய படங்களுக்கு வாரம் மூவாயிரம் போதும் என்று கேட்டுள்ளோம்.

அதற்காக நானும் தயாரிப்பாளர் குழுவும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும் பேசி முடிவெடுத்திருக்கிறோம்," என்றார்.

 

பஞ்சாயத்துக்கு ஆள் மாறிப்போச்சு… புது நாட்டாமை யாரு தெரியுமா?

அந்த ஆங்கில எழுத்து சேனலில் ஒளிபரப்பாகும் பஞ்சாயத்து நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு இருக்கிறது. காரணம் சுவாரஸ்யமான வழக்குகள்தான். ஏழைமக்களின் கண்ணீரை டிவியில் போட்டு டி.ஆர்.பி ஏற்றினர். செய்தி வாசிப்பதில் சிறப்பு வணக்கம் வைத்தவர் சிலகாலம் நடத்திய அந்த நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பி ரேட்டிங் எகிறக் காரணம் கள்ளக்காதல், இருதார திருமணம், கணவன் சரியில்லை என வந்த வழக்குகள்தான். கணவன் மேல் புகார் வாசித்த மனைவி, மனைவி சரியில்லை என்று புகார் சொன்ன தாய் என குடும்ப பஞ்சாயத்து நாளுக்கு நாள் களை கட்டியது.

இந்த நிகழ்ச்சியில் நடந்த பஞ்சாயத்து மூலம் கொலையைக்கூட கண்டுபிடித்தார்கள். நாளொரு கதையும் பொழுதொரு சுவாரஸ்யமுமாய் போய்க்கொண்டிருந்த பஞ்சாயத்து காதல் விவகாரத்தில் காவல்நிலையம் வரை எட்டிப்பார்த்தது.

அப்புறம் என்ன நாட்டாமை தீர்ப்ப மாத்து என்று சொன்னது போய் நாட்டாமையையே மாற்றியது டிவி நிறுவனம். நடிகையான அந்த நாட்டாமை நடத்திய பஞ்சாயத்துக்கு ஆரம்பத்தில் ரசிகர்களிடையே வரவேற்பு குறைந்தாலும் அட இது கூட நல்லாத்தான் இருக்கு என்று நாளடைவில் ஏற்றுக்கொண்டார்கள்.

அந்த நாட்டாமை பேசிய டயலாக் வைரல் ஹிட் அடித்து ஊரையே கலக்கியது. ஊரெல்லாம் உன் பேச்சுத்தான் என்று நாட்டாமை புகழ் பரவியது. சினிமாவில் வசனம், பாடல்கள் கூட அந்த வசனத்தை வைத்து எழுதினர்.

அந்த வசனத்தையே தலைப்பாக வைத்து புது நிகழ்ச்சி ஒன்றை நடத்தப்போகிறார் நாட்டாமை. சினிமாவில் படங்கள் இயக்குவதிலும் பிசியாகிவிட்டதால் பஞ்சாயத்து நிகழ்ச்சி நடத்துவதில் இருந்து விலகிவிட்டாராம் நாட்டாமை.

அவருக்கு பதிலாக இனி பஞ்சாயத்துப் பண்ணப்போகிறவர் நாட்டிய நடிகையாம். சீரியலில் வில்லியாக கலக்கும் புதிய நாட்டாமையின் பஞ்சாயத்து செல்லுபடியாகுமா? தீர்ப்பை ரசிகர்கள் ஏற்றுகொள்வார்களா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

டிக்கெட், பார்க்கிங் கட்டணத்தை இப்படி வச்சிருந்தா எவன்யா படம் பார்க்க வருவான்? -கே.ராஜன்

தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் ஏழை மக்கள் படம் பார்க்க வர மறுக்கிறார்கள், என்றார் தயாரிப்பாளர் கே ராஜன்.

54321 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும் போது, "நான் நல்ல விஷயம் பேசினால் அதை பெரிதுபடுத்தி பிரச்சினையாக்கி விடுகிறார்கள். அதனால் என்னை யாரும் அழைப்பது இல்லை. அதுக்காக நான் கவலப்படல. என் ஸ்கூல் வேலைய பாக்கவே நேரம் சரியா இருக்கு.

K Rajan strongly condemned high ticket, parking prices

இப்போதெல்லாம் யாரும் மனுஷனை நம்பிப் படமெடுப்பதில்லை. பேய் பிசாசை நம்பி எடுக்கிறார்கள். பேய், பிசாசுதான் படங்களை ஜெயிக்க வைக்கிறது. ராம நாராயணன் இருபது -முப்பது படங்கள் குரங்கு நாயை நம்பி எடுத்தார். வெற்றியும் பெற்றார்.

இன்று ஏழைகள் யாரும் தியேட்டருக்கு வருவது இல்லை. டிக்கெட் 110 ருபாய் 5 பேர் தியேட்டருக்கு போனால் 550 ஆகிறது. ஒரு தியேட்டரில் பார்க்கிங் மணிக்கு 50 ரூபாய் வாங்குகிறான். படத்துக்கு டிக்கெட்110 ரூபாய். மூன்று மணி நேர பார்க்கிங் 150 ரூபாய் அப்புறம் எப்படி தியேட்டருக்கு ஏழைகள் வருவான்? பாப்கார்ன், கோகோ கோலாவுக்கு 150 ரூபாயாம். அதனால எவனும் வர பயப்படுகிறான். டிக்கெட் விலை குறையவேண்டும். 'டிமாண்டி காலனி' படம் ஓடுது. மவுத் டாக் பரவுது.
கோடி ரூபாய் விளம்பரத்தை விட வாயால் பரவும் மவுத் டாக் தான் பெரிய பப்ளிசிடி.

இப்போதெல்லாம் படம் நன்றாக இல்லை என்றால் 'மச்சி உள்ளே வராதே' என்று பேஸ்புக், வாட்ஸ் அப்பில் தட்டி விடுகிறான். இப்படி மவுத் டாக் அதிகமாக பரவுகிறது.
நான் திருட்டு விசிடியை எதிர்த்து போராடினேன். திருட்டு விசிடியை விற்கிறவன் சுகமாக இருக்கிறான். நான் கஷ்டப்பட்டேன்.

K Rajan strongly condemned high ticket, parking prices

இப்படத்தை சிக்கனமாக எடுத்துள்ளார்கள்.

நம் படங்களில் ஒரு கதாநாயகனை அடிக்க ஐநூறு பேர் கத்தியோடு வருவார்கள். ஐந்து ஐந்து பேராக அடி வாங்கிவிட்டு போவார்கள். இவை எல்லாம் தேவையில்லாத செலவுகள். இந்த '54321' படத்தில் ஒரு பாடல் காட்சியில் இரண்டு பேரை மட்டும் வைத்து ஒரே ரூமில் முடித்துள்ளார்கள். பின்னாடி கூட்டமாக ஆடும் பெண்கள் எல்லாம் இல்லை. சிக்கனமாக எடுத்துள்ளார்கள். நான் இவர்களைப் பாராட்டுகிறேன்,'' என்றார்.

தொடர்ந்து படத்தின் பாடலை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட தயாரிப்பாளர் சங்கத்தினர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், நடிகை ஜெயசித்ரா, நடிகர்கள் பாபி சிம்ஹா, அர்வின், ஜெயக்குமார், சபீர், இயக்குநர்கள் மனோஜ்குமார், கே.எஸ். அதியமான், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் '54321' படத்தின் இயக்குநர் ராகவேந்திர பிரசாத் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

இறுதியில் தயாரிப்பாளர்கள் ராஜா, ஜி.வி.கண்ணன் இருவரும் நன்றி கூறினார்கள்.