வழக்கம்போல், தென்னிந்திய ப்ளாக்பஸ்டர் படங்கள், இந்த ஆண்டும் ரீமேக் ஆகின்றன. தெலுங்கில் ரவுண்டு கட்டி அடித்த 'விக்கிரமார்க்குடு' தமிழில் 'சிறுத்தை'யாகி வசூலில் பின்னி எடுத்த கையோடு 'ரவுடி ராத்தோர்' ஆக இந்தி பேச இருக்கிறது. 'நம்ம' பிரபுதேவாதான் இயக்குநர். அக்ஷய் குமார் ஹீரோ. சோனாக்ஷி சின்ஹா, ஹீரோயின்.
ஆனால், ஆண்டின் இறுதியில் அநேகமாக இந்த ஜோடி குறித்து கண், காது, மூக்கு வைத்து கிசுகிசு கிளம்பியிருக்கும். பின்னே... இந்தப் படம் தவிர, இந்தாண்டு வெளியாக இருக்கும் 'ஜோக்கர்', 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை & 2' ஆகிய படங்களிலும் இந்த இருவரும்தான் கைகோர்த்திருக்கிறார்கள். இது திட்டமிட்டு நடந்ததா அல்லது எதேச்சையாக ஒப்பந்தமானார்களா என்று நதிமூலம் தேடி அலைவதை விட, இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி, பக்காவாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என்ற நிகழ்காலத்துடன் சமாதானம் அடைவது போதுமானது. எப்படியோ, ராசியான ஜோடி என்ற திருநாமத்தை இருவரும் அடைந்தால் சரி.
இதில், ஷீரிஷ் குந்தர் இயக்கத்தில் உருவாகும் 'ஜோக்கர்', இந்தியாவில் தயாராகும் முதல் ஹை பட்ஜெட் படம், 3டி கேமராவில் படம் பிடிக்கப்படும் முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. 2010ல் வெற்றி பெற்ற 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை' படத்தின் இரண்டாம் பாகம்தான், 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை & 2' என்றாலும், முந்தைய படத்தில் நடித்த எந்த நடிகரும் இந்தப் படத்தில் இல்லை. புதிய நடிகர்கள், புதிய கதை. இயக்குநர் மட்டும் அதே மிலன் லூத்ரியா.
ரீமேக் படம் வழியே ரீ என்ட்ரி ஆகி, வசூல் சக்கரவர்த்தியாக இப்போது வலம் வரும் சல்மான் கான், இந்தாண்டும் தனது இடத்தை தக்க வைப்பதற்காக ஒரு ரீமேக் படத்தையே நம்பியிருக்கிறார். அந்தப் படம், 'கிக்'. தெலுங்கில் சில்வர் ஜூப்ளி கொண்டாடிய, 'கிக்', தமிழில் 'தில்லாலங்கடி'யாகி வெற்றி பெற்ற சூட்டோடு இந்திக்கு 'கிக்' என்ற பெயரிலேயே சென்றிருக்கிறது. இந்தப் படம் தவிர, 'தபங் 2', 'ஏக் தா டைகர்' ஆகிய படங்களும் சல்மான் நடிப்பில் வெளிவர இருக்கின்றன.
ஆமை போல் மெல்ல மெல்ல முன்னேறி வரும் அஜய்தேவ்கன், 'தேஸ்' படத்தை எவரெஸ்ட் அளவுக்கு நம்பியிருக்கிறார் என்றால், 'அக்னிபத்' படத்தை ஹிருத்திக் ரோஷன் எதிர்பார்க்கிறார். அமிதாப் பச்சனுக்கு தேசிய விருதை பெற்றுத் தந்ததுடன், வசூலிலும் சாதனைப் படைத்த அதே 'அக்னிபத்' படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். இதுதவிர, 'க்ரிஷ்' படத்தின் இரண்டாம் பாகத்துக்காகவும் இந்த இந்தி(ய) ஹேண்ட்ஸம், ரத்தம் சிந்தி வருகிறார். 'தலாஷ்' படத்தில் ஆமிர்கான் நடிக்கிறார் என்ற ஒரு வரி செய்தியே அப்படம் குறித்து போதுமானது. 'த்ரி இடியட்ஸ்' படத்துக்கு பிறகு ஆமிர் நடிப்பில் வெளியாகும் படம் இதுதான். 'டோபி கேட்', ஆர்ட் ஃபிலிம் என்பதால் அது கணக்கில் சேராது. இந்த த்ரில்லர் படத்தில் கரீனா கபூர் & ராணி முகர்ஜி என இரண்டு திறமைசாலிகளும் இருக்கிறார்கள் என்பது தயிர் வடையின் மீது தூவப்பட்ட பூந்திக்கு ஒப்பானது.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், ஷாருக்கான். ஆக்ஷன், சயின்ஸ் ஃபிக்ஷன் என ஒரு வட்டம் முடிந்த கையோடு மீண்டும் லவ்வர் பாய் இமேஜுக்கு திரும்பியிருக்கிறார். இந்தப் படத்தை தயாரிப்பது 'யாஷ்ராஜ்' பிலிம்ஸ்தான். எனவே மீண்டும் 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயிங்கே' மேஜிக் நடக்கக் கூடும்.இவை தவிர எப்போதும் போல் லோ பட்ஜெட் படங்களில் சில, சிக்ஸர் அடிக்கக் கூடும். ஸோ, துல்லியமான நிலவரம் ஆண்டின் இறுதியில்தான் தெரிய வரும். என்றாலும் இப்போதைக்கு பாலிவுட்டின் 'நேரம் நல்லா இருக்கு!'