ஆபாச நடிப்பு: 90 கசையடியில் இருந்து தப்பிய ஈரான் நடிகை- விடுவிக்கப்பட்டார்


டெஹ்ரான்: ஆபாசமாக நடித்ததற்காக 1 ஆண்டு சிறையும், 90 கசையடியும் விதிக்கப்பட்ட ஈரான் நடிகை மர்ஜியா வபாமெஹர் கடந்த திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டார். 90 கசையடியும் ரத்து செய்யப்பட்டது.

'மை டெஹ்ரான் ஃபார் சேல்' என்ற படத்தில் ஆபாசமாக நடித்ததற்காக நடிகை மர்ஜியா வபாஹெர் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இந்த படம் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.

இந்த படம் ஆஸ்திரேலியாவுடன் கூட்டாக சேர்ந்து எடுக்கப்பட்டது. டெஹ்ரானில் உள்ள ஒரு நாடக நடிகையை அதிகாரிகள் நடிக்கவிடாமல் தடை செய்கிறார்கள். இதையடுத்து அந்த நடிகை தலைமறைவாக வாழ்கிறார். பின்னர் நாடு கடத்தப்பட்ட ஒருவரின் உதவியோடு ஈரானை விட்டு வெளியேறுகிறார் என்பது தான் கதை.

இதில் மர்ஜியா இஸ்லாமிய சட்டத்தை மீறி ஆபாசமாக நடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜூலை மாத இறுதியில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தான் அவருக்கு 90 சவுக்கடியும், 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த படத்தில் மர்ஜியா ஒரு காட்சியில் தலையில் துணியில்லாமலும், இன்னொரு காட்சியில் மது அருந்துவது போலவும் வந்ததற்காகத் தான் இந்த தண்டனை.

மர்ஜியாவின் ஓராண்டு தண்டனையை 3 மாதங்களாக குறைத்த நீதிமன்றம் கசையடியை ரத்து செய்தது. அதன்படி அவர் கடந்த திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

'மை டெஹ்ரான் ஃபார் சேல்' படத்தை ஈரானில் திரையிட அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் சட்டவிரோதமாக அந்த படம் வினியோகிக்கப்பட்டுள்ளது என்று பார்ஸ் நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

பிபிசியுடன் சேர்ந்து பணியாற்றியதற்காக ஈரானில் கடந்த மாதம் மட்டும் 6 இயக்குனர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

கமலின் 'ஷூ லேஸ்' டெக்னிக்!


உலக நாயகன் கமல் தன் தொப்பையைக் குறைக்க ஒரு 'டெக்னிக்' வைத்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாசனுக்கு 56 வயதாகிறது. ஆனால் இந்த வயதிலும் தொப்பையும், தொந்தியுமாக இல்லாமல் உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். அவர் மட்டும் எப்படி தொப்பை இல்லாமல் இருக்கிறார் ஒரு வேளை கடுமையான உடற்பயிற்சி செய்கிறாரோ என்று நினைக்கலாம்.

அதெல்லாம் இல்லை. தனக்கு தொப்பை வைத்துவிட்டதா இல்லையா என்பதை அறிய ஒரு படு சூப்பரான டெக்னிக் வைத்துள்ளாராம். இத்தனை வயதானாலும் ஷூ லேசை முட்டியை மடக்காமல் குனிந்து தான் கட்டுவாராம். அப்படி குனிந்து ஷூ லேசை மாட்ட சிரமமாக இருந்தாலோ அல்லது மூச்சு வாங்கினாலோ உடனே அடுத்த 2 நாட்களுக்கு பட்டினிதானாம்.

டயட்டில் இருந்து வயிற்றில் தேங்கிய தேவையில்லாத கொழுப்பைக் குறைத்து மறுபடியும் டிரிம்மாகி விடுவாராம். தொப்பையைக் குறைக்க ஒவ்வொருத்தரும் குண்டக்க மண்டக்க பாடுபாடுகின்றனர். உலக நாயகன் இப்படி ஒரு சூப்பரான டெக்னிக்கை கையாளுகிறார். பலேதான்..
 

சமந்தாவைக் 'கை கழுவிய' மணிரத்தினம்!


நடிகை சமந்தா ஒரே வருத்தத்தில் இருக்கிறாராம். காரணம் யார் தெரியுமா? இயக்குனர் மணிரத்னமாம்.

முதலில் டோலிவுட்டிலும், பிறகு கோலிவுட்டிலும் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தெலுங்கு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் திரிஷா வேடத்தில் நடித்தவர் சமந்தா.

இந்தப் படத்துக்குப் பின்னர் தெலுங்கில் சமந்தா காட்டில் பெரும் மழை. அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். சமீபத்தில் மகேஷ்பாபுவுடன் நடித்த தூக்குடு சமந்தாவை ஒரேயடியாகத் தூக்கிவிட்டு விட்டது. அதனால் இன்றைய தேதிக்கு தெலுங்கில் பெரிய நடிகை யார் என்றால் சமந்தா என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறார். சம்பளத்தை கூட கோடி ரூபாயாக்கிவிட்டார் என்று சொல்கிறார்கள்..

தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் சமந்தா. இந்த முறை, தமிழில் நடிக்கிறார் - நீ தானே என் பொன் வசந்தம் என்ற படத்தில். கெளதம் மேனன் இயக்கத்தில் சமந்தா இணைவது இது 2வது முறை. இந்நிலையில் கார்த்திக் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் இயக்குனர் மணிரத்னம் தனது படத்திற்கு சமந்தாவை நாயகியாக்க முயற்சித்துள்ளார். இதனால் சமந்தாவுக்கு ஒரே குஷி. ஆஹா, மணிரத்னம் படத்தில் நடிக்கப்போகிறோம் என்று சந்தோஷமாக இருந்தார்.

இடையில் என்னாச்சோ, ஏதாச்சோ தெரியவில்லை இல்லம்மா இந்த படத்திற்கு நீ வேண்டாம் என்று மணிரத்னம் கூறிவிட்டாராம். இப்படி ஒரு நல்ல வாய்ப்பு கைநழுவிவிட்டதே என்று அம்மணிக்கு ஒரே வருத்தமாம்.

மணி கைவிட்டா என்னா மேனன்தான் இருக்காரே, தொடர்ந்து 'ஆபர்' கொடுத்து சமந்தாவுக்குக் கை கொடுப்பார் என்று நம்பலாம்...!
 

எப்1 பார்ட்டியில் இன்று இரவு லேடி ககாவின் சிறப்பு நிகழ்ச்சி


இந்தியாவின் முதல் எப் 1 ரேஸ் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் அமெரிக்காவின், பிரபல பாப் பாடகி லேடி ககா நடத்தும் சிறப்பு இசை விருந்து இன்று இரவு டெல்லியில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க இந்திய ரசிகர்களுக்காகவே தான் சிறப்பு் பாடலைப் பாடப் போவதாக லேடி ககா உற்சாகத்துடன் கூறியுள்ளார்.

உலகப் புகழ் பெற்ற எப் 1 கார்ப் பந்தயம் இன்று இந்தியாவுக்குள்ளும் புகுந்தது. டெல்லி அருகே அமைக்கப்பட்டுள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் மைதானத்தில் இந்தியாவின் முதலாவது எப் 1 ரேஸ் இன்று வெற்றிகரமாக நடந்தது. இதில் ஜெர்மனி வீரர் வெட்டல் முதலிடத்தைப் பிடித்தார்.

இந்த நிலையில் எப் 1 விருந்து நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது. இதில் எப் 1 வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில் அமெரிக்க பாப் பாடகி லேடி ககா சிறப்பு இசை விருந்தினை அளிக்கிறார்.

கலக்கலாக டிரஸ் அணிவதில் பிரபலமானவர் ககா. ஆனால் இன்றைய நிகழ்ச்சியில் இந்திய உடையை அணிந்து அசத்தப் போகிறார். மேலும், இதுதான் அவர் இந்தியாவில் பங்கேற்கும் முதல் இசை நிகழ்ச்சி என்பதால் ரசிகர்களும் உற்சாகமாக காத்துள்ளனர்.

சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கவுள்ளனர். டிக்கெட்டும் படு சூடாக விற்றுள்ளது.

முன்னதாக வெள்ளிக்கிழமை இந்தியா வந்த ககாவுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரும் நமஸ்தே சொல்லி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். நேற்று டெல்லி ஹாட் பகுதியில் ஷாப்பிங் போனார். இன்று தனது இசை விருந்தால் ரசிகர்களை குளிர்விக்கவுள்ளார்.
 

ரேப் சீனுக்கு மட்டும் தான் கூப்பிடுறாங்க: ராக்கி சாவந்த் வருத்தம்


பாலியல் பலாத்கார காட்சிகள் நடிக்கத் தான் என்னை அதிகம் அழைக்கிறார்கள் என்று பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் வருத்தப்படுகிறார்.

நடிகை ராக்கி சாவந்த் தனது நடிப்பை விட சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஏதாவது வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்வார். சமீபத்தில் பாபா ராம்தேவை திருமணம் செய்து கொள்ள ஆசை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் ராக்கி வித்தியாசமாக ஒரு புலம்பலை வெளியிட்டுள்ளார். எனக்கு பலாத்கார காட்சிகளில் நடிக்கத் தான் வாய்ப்புகள் வருகின்றது. ஆனால் எனக்கு உடம்பைக் காட்டி நடிக்க எனக்கு விருப்பமில்லை. என்னை ஏன் இப்படிபட்ட காட்சியில் நடிக்க கூப்பிடுகிறார்கள் என்று வருத்தமாக உள்ளது என்று ராக்கி தெரிவித்துள்ளார். மேலும் கூடவே, ஜான் ஆபிரகாம் மற்றும் தீபிகா படுகோனேவையும் வம்புக்கிழுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

நான் ஆடும் பாடல்கள் ஆபாசமாக உள்ளது என்று தணிக்கை குழு நிராகரிக்கிறது. ஆனால் என் பாடல்களை விட ஆபாசமான 200 பாடல்களை என்னால் காட்ட முடியும்( எடுத்துக்காட்டாக ஜான் ஆபிகாம் மற்றும் தீபிகா படுகோனே பாடல்கள்). கான், கபூர், பச்சன் குடும்பத்தைச் சேர்ந்தவள் அல்ல என்பதற்காக தணிக்கைக் குழு என்னையே குறி வைக்கக் கூடாது.

இத்தனை நாட்களாக டிவியில் கவனம் செலுத்தினேன். தற்போது புதிய உதவியாளரை பணியமர்த்தியுள்ளேன். விரைவில் என்னை பெரிய திரையில் பார்க்கலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண் தேஜாவுடன் நடிக்க ஆசையாக உள்ளது என்றார்.
 

வாகை சூட வா படத்துக்கு எதிராக மாற்றுத் திறனாளிகள் போராட்டம்


விமல், இனியா நடித்து வெளியாகி ஓடி வரும் வாகை சூட வா படத்தில் மாற்றுத் திறனாளிகளை விமர்சனம் செய்து வைக்கப்பட்டுள்ள காட்சிகளைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று தென் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலச் சங்க அறக்கட்டளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளைக் கண்டிக்காமல் நடித்த நடிகர் விமல், இயக்குநர் கே.பாக்கியராஜ் மற்றும் படத் தயாரிப்பாளர் முருகேசன், இயக்குநர் சற்குணம் ஆகியோருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

உடனடியாக இந்தக் காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும், மாற்றுத் திறனாளிகள் மனதைப் புண்படுத்தும் வகையில் காட்சிகள் வைத்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

தொடை தெரியும் வகையில் உடை அணிய நடிகைகளுக்கு நடிகர் சங்கம் தடை?


பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் தொடை தெரிய உடை அணிவதற்கு தடைவிதிக்க நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்பவர்கள் படத்தை பற்றி மட்டும் தான் பேச வேண்டும். தேவையில்லாத விஷங்களைப் பற்றி பேசக் கூடாது. அவ்வாறு பேசுவதால் தான் பிரச்சனை கிளம்புவதால் இனி தேவையில்லாதவற்றை பேச தடைவிதிக்க இயக்குனர் சங்கர் முடிவு செய்துள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

இது மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் தொடை தெரியும் அளவுக்கு உடை அணியவும் தடை விதிக்கப் போவதாகப் பேசப்படுகிறது. சேலைக்கு பெயர் போன தமிழகத்தில் நடக்கும் சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகைகள் குட்டி, குட்டியாகத் தான் உடை அணிந்து வருகிறார்கள். தொடை தெரியும் அளவுக்கு உடை அணிந்து வந்துவிட்டு பிறகு இப்படி போட்டோ எடுக்காதீர்கள், அப்படி எடுக்காதீர்கள் என்று பத்திரிக்கை புகைப்படக்காரர்களிடம் கோபித்துக்கொள்வது அதிகரித்து வருகிறது.

பார்ப்பவர்கள் மனதை கலவரப்படுத்தும் வகையில் உடை அணிவது அப்புறம் நான் எனக்கு பிடித்த மாதிரி தான் டிரெஸ் போடுவேன் ஆனால் என்னை யாரும் குறை சொல்லக் கூடாது என்று குறை கூறுவது அதிகரித்து வருகிறது. தற்போது அதற்கு தடை விதிக்க நடிகர் சங்கம் யோசித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

கடந்த திமுக ஆட்சியின்போது முதல்வராக இருந்த கருணாநிதி முன்னிலையில் நடந்த பட விழாவின்போது படு கவர்ச்சிகரமாக நடிகை ஒருவர் உடை அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம்.

 

மதுரை தியேட்டரில் மகன் தயாரித்த 7ஆம் அறிவு படம் பார்த்த ஸ்டாலின்


மதுரை: தனது மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த 7 ஆம் அறிவு படத்தை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மதுரையில் உள்ள தமிழ் ஜெயா தியேட்டரி்ல் பார்த்து மகிழ்ந்தார்.

சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள 7 ஆம் அறிவு படத்தை தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின். தனது மகன் தயாரித்த படத்தை பார்க்க ஆசைப்பட்டார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.

இந்த நிலையில், பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை வந்த ஸ்டாலின் திமுக பிரமுகருக்கு சொந்தமான தமிழ் ஜெயா தியேட்டரில் 7 ஆம் அறிவு படத்தைப் பார்த்து ரசித்தார். நேற்று இரவு 10.30 மணிக்கு படம் பார்த்தார்.

படத்தை பார்த்துவிட்ட வெளியே வந்த ஸ்டாலின் கதை பற்றி முன்னாள் சபாநாயர் ஆவுடையப்பன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோரிடம் விவாதித்தார்.

 

தேவர் நினைவிடத்தில் நடிகர்கள் அஞ்சலி


பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் இன்று தேவர் குருபூஜையையொட்டி தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த நடிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் 104வது ஜெயந்தி தினம் மற்றும் குருபூஜை இன்று விமரிசையாக நடந்தது. இதையொட்டி பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவரின் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

அரசியல் கட்சியினர், தேவர் இன அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என பெரும் திரளானோர் காலை முதலே திரண்டு வந்து, நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

நடிகர்கள் சிங்கமுத்து, கருணாஸ் உள்ளிட்ட திரையுலகினரும் பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு வந்து தேவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

மனோரமாவுக்கு தலையில் ஆபரேஷன்-கோமாவில் இல்லை என மகன் தகவல்


குளியலறையில் வழுக்கி விழுந்ததால் தலையில் அடிபட்டுள்ள பழம்பெரும் நடிகை மனோரமாவுக்கு செவ்வாய்க்கிழமை அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளது. அதேசமயம், அவர் கோமாவில் இல்லை என்று மனோரமாவின் மகன் பூபதி கூறியுள்ளார்.

மனோரமாவுக்கு ஏற்கனே முழங்கால் வலி நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்காக அவர் கேரளா போய் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டார். அப்படியும் வலி தீரவில்லை. இதையடுத்து சென்னை திரும்பிய அவர் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் வீட்டிலேயே இருந்து ஓய்வெடுத்து வந்தார். படங்களில் நடிப்பதையும் கிட்டத்தட்ட நிறுத்தி விட்டார்.

இந்த நிலையில் 27ம் தேதி அவர் வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டார். அதில் அவருக்குத் தலையில் அடிபட்டது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் கோமாவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியதால் மனோரமாவின் ரசிகர்கள் சோகமடைந்தனர். ஆனால் அதை மனோரமாவின் மகன் பூபதி மறுத்துள்ளார். அவர் கூறுகையில், மனோரமா கோமாவில் இல்லை. அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்கேன் செய்து பார்த்ததில் ரத்தக்கசிவு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதை அகற்ற செவ்வாய்க்கிழமை அறுவைச் சிகிச்சை செய்யப்படவுள்ளது என்றார் பூபதி.
 

எனது பலமே வேகம்தான், அது இருக்கும் வரை நடிப்பேன்- ரஜினிகாந்த்


சென்னை: எனது பலம், மூலம் வேகம்தான். நான் சிவாஜி போல, கமல் போல நடிப்பாற்றல் கொண்டவன் அல்ல. எனவே எனது உடலில் வேகம் இருக்கும் வரை நான் தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் சங்கர ரத்னா விருது பெற்றுள்ளார். இதற்கான விழா சென்னை ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென வருகை தந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். படு டிரி்ம்மாக, ஆரோக்கியமாக, உற்சாகமாக காணப்பட்டார். அவரைப் பார்த்து அனைவரும் உற்சாகமடைந்தனர்.

ரஜினிகாந்த் நிகழ்ச்சியில் பேசும்போது எனது உடலில் வேகம் இருக்கும் வரை நான் ஓய்வ பெற மாட்டேன் என்று கூறி அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

ரஜினியின் பேச்சு:

சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். எனக்கு சங்கர ரத்னா விருது வழங்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் நீ கலந்து கொள்ளாவிட்டாலும், உன் வாழ்த்து மடலையாவது அனுப்ப வேண்டும் என்றும், அதை மேடையில் மகிழ்ச்சியுடன் படிப்பேன் என்றும் கூறினார். அதற்கு நானும் சம்மதம் தெரிவித்தேன்.

பின்புதான் யோசித்தேன், உடல் நிலை சரியான பிறகு, ஏதாவது ஒரு நல்ல நிகழ்ச்சியில்தான் கலந்து கொள்ள வேண்டும் என்று இருந்தேன். அப்படி பார்த்தால், என்னை சினிமாவில் வளர்த்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியை விட வேறு நல்ல நிகழ்ச்சி எதுவும் கிடையாது.

நான் முழுமையாக குணம் அடைய மக்களின் அன்பும், ரசிகர்களின் வேண்டுதலும்தான் காரணம். நான் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது வீட்டோடு இருந்து ரெஸ்ட் எடுக்கத்தான் விரும்பினேன். ஆனால் என்னால் அது முடியவில்லை. என்னை உருவாக்கிய ஜாம்பவான்கள் இருக்கிற இந்த மேடையில், நான் அதிகம் பேசினால், அது அதிக பிரசங்கித்தனம் ஆகிவிடும்.

எனக்கு வெற்றிப் படங்களை கொடுத்தார் என்பதால் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 25 படங்களில் நடிக்கவில்லை. அவர் மீது கொண்ட அன்பினால் தான் 25 படங்களில் நடித்தேன்.

என்னை உருவாக்கியவர்கள் என்னிடம் பேசும்போது, நீ தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்க வேண்டும், தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நான் சிவாஜியோ, கமல்ஹாசனோ கிடையாது. அவர்களை போல் நடிப்பாற்றல் எனக்கு கிடையாது. அவர்களைப் போல என்னால் நடிக்கவும் முடியாது. நான் ஒரு ஹீரோவாக மட்டுமே இருக்க முடியும். சினிமா துறையில் என் மூலதனம் என் உடலின் வேகம்தான். எனவே, என் உடலில் வேகம் இருக்கும் வரை நடிப்பேன் என்றார் ரஜினி.

நிகழ்ச்சியில் பேசிய எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பேசுகையில், எஸ்.பி.முத்துராமனின் தந்தை ராமசுப்பையா எனக்கு அரசியல் தந்தை. ஆகவே அவரை எனக்கு 70 ஆண்டுகளாக தெரியும். ஒரே நேரத்தில் ரஜினியையும், கமல்ஹாசனையும் இயக்கியவர். எஸ்.பி.முத்துராமனை பார்த்து உழைக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.