4/4/2011 1:47:12 PM
விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்துக்கு 'தெய்வத் திருமகன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மே மாதம் ரிலீஸ் ஆகும் இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் இயக்குனர் விஜய் பேசியதாவது:
இந்த படத்தின் கதையை விக்ரமிடம் இரண்டு வருடங்களுக்கு முன்பே சொன்னேன். நடிக்க சம்மதித்தார். அவர் மறுத்திருந்தால் இந்தப் படத்தை இயக்கி இருக்க மாட்டேன். அவரைத் தவிர வேறு யாரும் நடிக்க முடியாத கேரக்டர் அது. விக்ரமுக்கு தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளித் தரும் கேரக்டர். மனவளர்ச்சி குன்றியவராக நடிக்கிறார். இதற்காக அவர் எடுத்துக் கொண்ட பயற்சி அதிகம். ஒவ்வொரு காட்சியும் பலமுறை ஒத்திகை செய்து பார்த்த பிறகே நடித்தார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷின் இசையும் படத்துக்கு பெரிய பலம். வரும் 14&ம் தேதி பாடலை வெளியிடுகிறோம். இவ்வாறு விஜய் கூறினார்.
விக்ரம் கூறும்போது, 'எனக்கு திருப்புமுனையைத் தரப்போகும் படம். உணர்வுப் பூர்வமாக நடித்த படம். நாசரும் நானும் போட்டிப் போட்டு நடித்திருக்கிறோம். நல்ல நடிகர்களோடு நடிக்கும்போது எனக்கு நடிப்பு நன்றாக வருகிறது. நிறைய கற்றுக் கொள்ளவும் முடிகிறது. அனுஷ்கா நடிப்பில் அசத்தியிருக்கிறார். அமலா பால் வேறு கோணத்தில் நடித்திருக்கிறார். நல்ல இயக்குனர்கள் அமைவது என் பாக்கியம். இந்தப் படத்தில் விஜய் அமைந்திருக்கிறார்' என்றார்.
நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் மோகன் நடராஜன், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இசை அமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், எட்டிடர் ஆண்டனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.