கையில் ஆபரேசன்... செல்ஃபி எடுத்து லைவ் வர்ணனை செய்த ரன்வீர் சிங்

மும்பை: நின்றால் செல்ஃபி... நடந்தால் செல்ஃபி... தூங்கினால் கூட அதை செல்ஃபி எடுத்துப்போடும் பழக்கம் இன்றைக்கு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது ஆபரேசன் தியேட்டரில் நடக்கும் விசயங்களைக்கூட செல்ஃபி எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பகிரும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

திரைப்படத்துறை பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் தங்களது வாழ்வில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை ‘பேஸ்புக்', ‘டுவிட்டர்' போன்றவற்றின் மூலம் அவ்வப்போது தங்களை பின்தொடரும் அபிமானிகளுடன் பகிர்ந்தபடி உள்ளனர். இதன் மூலம் அவர்களுடன் நெருக்கமாக இருப்பதை போன்ற உணர்வு ஏற்படுவதாக பிரபலங்கள் நம்புகின்றனர்.

ஹீரோக்கள் தொடங்கி காமெடியன்கள் வரை தினசரி ஏதாவது செல்ஃபி போட்டு ஸ்டேட்டஸ் போடுவது வழக்கம். இந்த வரிசையில் பிரபல பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் தனது படப்பிடிப்பின்போது நிகழும் அரிய சம்பவங்களை படம் பிடித்து, தனது ‘ட்விட்டர்' அபிமானிகளுடன் பகிர்ந்து கொள்வது வாடிக்கை.

சமீபத்தில் ‘பாஜிராவ் மஸ்தானி' படத்தில் நடித்து கொண்டிருந்தபோது ரன்வீருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இந்த காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆபரேஷன் மேஜையில் படுத்தபடி, தனது ‘செல்ஃபி' படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட ரன்வீர், கிரிக்கெட் போட்டி பாணியில் முழு ஆபரேஷனையும் நேர்முக வர்ணனை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.

ஆபரேஷனுக்கு பின்னர் உடல்நலம் தேறிவரும் ரன்வீர் சிங், வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

 

'தம்பி, இந்த பேஸ்புக்கு, டுவிட்டரிலெல்லாம் 'எலி'ய ஓடவிடப்பா...'- வடிவேலு

எலி படத்தை சமூக வலைத் தளங்களில் பிரபலப்படுத்த ஒரு தனி குழுவையே நியமித்துள்ளார் வடிவேலு.

வடிவேலு நாயகனாக நடித்து வரும் புதிய படம் எலி. இதில் வடிவேலு ஜோடியாக சதா நடிக்கிறார். வழக்கமாக வடிவேலுவுடன் நடிக்கும் நடிகர்களும் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் முதல் போஸ்டர் மற்றும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டனர்.

'தம்பி, இந்த பேஸ்புக்கு, டுவிட்டரிலெல்லாம் 'எலி'ய ஓடவிடப்பா...'- வடிவேலு

முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக உருவாகி வரும் எலியை சமூக வலைத் தளங்களில் பிரபலப்படுத்த தனி குழுவையே நியமித்துள்ளாராம் வடிவேலு.

'பேஸ்புக்கு, டுவிட்டரு, வாட்ஸப்பு, யு ட்யூபு என பார்க்கிற இடங்களிலெல்லாம் எலியை கொண்டு போங்கப்பா' என அந்தக் குழுவினருக்கு உத்தரவும் போட்டிருக்கிறாராம்.

'தம்பி, இந்த பேஸ்புக்கு, டுவிட்டரிலெல்லாம் 'எலி'ய ஓடவிடப்பா...'- வடிவேலு

சமீபத்தில் இந்தக் குழு வடிவேலுவை நேரில் போய்ச் சந்தித்து, எலி படத்துக்காக உருவாக்கப்பட்ட பக்கஙகளைக் காட்டினர். சமூக வலைத் தளப் பக்கங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் வடிவேலு. அவர்களுடன் நின்று வடிவேலுவும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின்போது படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளனும் உடனிருந்தார்.

கோடை ஸ்பெஷலாக வருகிறது எலி.

 

யோக்கியன் வாரான் செம்பதூக்கி உள்ள வை- இப்படி ஒரு தலைப்பு!

ஊரில் புழங்கும் புகழ்பெற்ற பழமொழியான யோக்கியன் வரான் சொம்பத் தூக்கி உள்ள வை என்பதையே ஒரு படத்துக்கு தலைப்பாக்கியுள்ளனர். சுவாமி ராஜ் என்ற புதியவர் இயக்குகிறார்.

இந்தப் படத்துக்காக ஒரு பாடலை சமீபத்தில் படமாக்கினர்.

யோக்கியன் வாரான் செம்பதூக்கி உள்ள வை- இப்படி ஒரு தலைப்பு!

அந்தப் பாடல்..

அன்பு கெட்ட பொண்ணு மேல ஆசை உனக்கு எதுக்குடா

அவசரமா எதையும் செய்யும் பொண்ண தூர ஒதுக்குடா

இதயம் இல்லா பொண்ண நெனச்சி ஏங்குறத நிறுத்துடா

பாதை மாறி போகும் மனச பக்குவமா திருத்துடா...

இந்தப் பாடலை வடபழனியில் உள்ள ஒரு ரெகார்டிங் தியேட்டரில் பதிவு செய்தனர்.

ஆதிஷ் உத்ரியன் இசையில், பாடலாசிரியர் தவசிமணி இயற்றி, கானா பாலா பாடியுள்ளார்.

இந்தப் பாடல் மிகச் சிறப்பாக வந்துள்ளதாக இசையமைப்பாளரைப் பாராட்டினார் கானா பாலா.


 

'படத்தோட லாபத்துல பாதிய கேக்கறீங்களாமே... நிஜமா பாபி சிம்ஹா?'

தன் சம்பளத்துடன் படத்தின் லாபத்திலும் பங்கு கேட்பதாக எழந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்தார் நடிகர் பாபி சிம்ஹா.

பாபி சிம்ஹா முதல் முறையாக நாயகனாக நடிக்கும் உறுமீன் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடந்தது.

'படத்தோட லாபத்துல பாதிய கேக்கறீங்களாமே... நிஜமா பாபி சிம்ஹா?'

நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் பாபி சிம்ஹா, நாயகிகள் ரேஷ்மி மேனன், சான்ட்ரா, கலையரசன், அப்புக்குட்டி, காளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். படத்தின் இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி, இசையமைப்பாளர் அச்சு ஆகியோரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பாபி சிம்ஹா, "இந்தப் படம் நிறைய தடைகளைத் தாண்டி வருகிறது. சக்திவேல் இந்தக் கதையை ஆரம்பத்திலேயே என்னிடம் கூறினார். இந்தப் படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அனைத்தும் நல்லபடியாக நடக்க எங்கள் தயாரிப்பாளர் டில்லி பாபுதான் காரணம். நாங்கள் கேட்ட எதையும் அவர் மறுக்காமல் செய்து கொடுத்தார்," என்றார்.

அவரிடம், "நீங்கள் முதலில் அறிமுகமான சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' படத்தில் டப்பிங் பேசி முடிக்க, லாபத்தில் பாதியைக் கேட்கிறீர்கள் என்று புகார் எழுந்துள்ளதே?" என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த பாபி சிம்ஹா, "முதலில் ஒரு குறும்படம் என்று சொல்லித்தான் அதில் என்னை நடிக்க வைத்தனர். ஆனால் இப்போது பெரிய படமாக ரிலீஸ் பண்ணுகிறார்கள். அதற்குரிய சம்பளத்தைத் தர மறுக்கிறார்கள். இதை யாராவது கேட்டீர்களா?" என்றார்.

நியாயமான கேள்வி.. அதான் இப்ப நீங்க கேட்டதையே போட்டாச்சே பாபி!

 

கேரளத்துக் கேமராமேனைக் காதலித்து மணந்தார் ஜோதிர்மயி...!

கொச்சி: மலையாள கேமராமேன் மற்றும் இயக்குநர் அமல் நீரத்தைக் காதலித்து மணந்துள்ளார் நடிகை ஜோதிர்மயி. இது அவருக்கு 2வது திருமணமாகும்.

கேரளாவைச் சேர்ந்தவர் ஜோதிர்மயி. இவர் தமிழில் தலைநகரம், நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நடிக்க வருவதற்கு முன்பே திருமணமானவர் இவர்.

கேரளத்துக் கேமராமேனைக் காதலித்து மணந்தார் ஜோதிர்மயி...!

கல்லூரியில் படித்த காலத்தில் நிஷாந்த் என்பவரை காதலித்து மணந்தார். 2004ல் திருமணம் செய்த இவர்கள் 2011ல் முறைப்படி பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில், மலையாள தயாரிப்பாளர், இயக்குநர், கேமராமேன் அமல் நீரத் என்பவரை காதலித்து வந்தார் ஜோதிர்மயி. சாகர் அலயஸ் ஜாக்கி என்ற படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடியிருந்தார் ஜோதிர்மயி. அப்போதுதான் அமலுக்கும், அவருக்கும் இடைேய காதல் மலர்ந்தது.

இவர்கள் இருவரும் கொச்சியில் வைத்து இன்று பதிவு திருமணம் செய்து கொண்டனர். இரு தரப்பு குடும்பத்தினர், உறவினர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டனர்.

அமல் நீரத், பிரபலமான கேமராமேன் ஆவார். ராம் கோபால் வர்மாவிடம் முன்பு பணியாற்றியுள்ளார். ஹாலிவுட்டிலும் பணியாற்றியுள்ளாராம். தற்போது மலையாளத்தில் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

 

ஓ காதல் கண்மணி இசை விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.5/5

இசை: ஏ ஆர் ரஹ்மான்

பாடல்கள்: வைரமுத்து

இயக்கம்: மணிரத்னம்

1.ஏ.. சினாமிகா...

கார்த்திக் பாடியிருக்கும் இந்தப் பாடலின் மெட்டும் இசையமைப்பும் விண்ணைத் தாண்டி வருவாயா பாடல்களை நினைவூட்டுகிறது.

ஓ காதல் கண்மணி இசை விமர்சனம்

ஆனால் வைரமுத்துவின் வரிகள்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. சந்தத்துக்காக சொற்களைப் போட்டுவிட்டார் போலிருக்கிறது. அனாதிகா என்பது குழந்தைக்கு வைக்கும் பெயராக இருக்கலாம். ஆனால் இந்தப் பாடல் வரிகளில் அர்த்தமுள்ளதாக அமைந்திருக்கிறதா பாருங்கள்...

ஏ சினாமிகா..
சீறும் சுனாமிகா
நீ போனால்
கவிதை அனாதிகா...


2.தீரா உலா..

தர்ஷனா - நிகிதா காந்தி பாடியிருக்கிறார்கள். ஆயுத எழுத்தில் வரும் யாக்கைத் திரியின் எக்ஸ்டென்ஷனாகத் தெரிகிறது இந்தப் பாடல். டிஸ்கொதேக்களில் நீக்கமற நிறைந்திருக்கும் அளவுக்கு ஈர்ப்பாடன பாடல் இது.

3.காரா ஆட்டக்காரா காத்திருக்கேன்...

ஆர்யன் தினேஷ் கனகரத்னம், தர்ஷனா, சாஷா திருப்பதி பாடியிருக்கிறார்கள். பாடல் ஆரம்பத்தில் வரும் காரா ஆட்டக்காரா காத்திருக்கேன் மட்டும்தான் தெளிவாக காதில் விழுகிறது. மற்றபடி நமநம நமநம ஹே ஹோ.. தத்தத் தரகிட மோ மோ... போன்ற ஒலிகள்தான் பாட்டு முழுக்க. மெட்டும் பீட்டும் ஒரு காக்டெயில் மாதிரி கிறுகிறுக்க வைக்கிறது. கல்லூரி இளசுகளைக் குறிவைத்திருக்கிறார்கள். குறி தப்பாது என்றுதான் தோன்றுகிறது!

4.பறந்து செல்ல வா...

கார்த்திக், சாஷா திருப்பதி பாடியிருக்கிறார்கள்.

புத்தம் புது வெளி
புத்தும் புது மொழி
திக்கியது விழி
தித்திக்குது வலி..

யோசிக்காதே போ..
யாசிக்காதே போ...

-என்கிறார் பாடலில் வைரமுத்து. யோசிக்காமல் 'ஜஸ்ட் லைக் தட்' கேட்க வேண்டிய பாட்டு. ஒலியமைப்பு, ரிதமில் புது ஜாலம் காட்டியிருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.

5.நானே வருகிறேன்

சாஷா திருப்பதி, சத்ய பிரகாஷ் பாடியிருக்கிறார்கள் இந்தப் பாடலை. மெட்டும் இசையமைப்பும் மேற்கத்திய பாணியில் இருக்க, பாடல் வரிகளை சாஷா கர்நாடக பாணியிலும், சத்ய பிரகாஷ் ஹிந்துஸ்தானி பாணியிலும் பாடியிருக்கிறார். முதல் முறை கேட்கும்போது பெரிய ஈர்ப்பில்லை.

6.மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை..

சித்ராவும் ஏ ஆர் ரஹ்மானும் பாடியுள்ள இந்தப் பாடலின் வரிகளும் மெட்டும் மனசில் ஒட்டிக் கொள்கின்றன. சித்ரா பாடி முடிக்க, அங்கிருந்து அடக்கமாக ரஹ்மான் ஆரம்பித்து பாடலை முடிக்கும் விதம் அருமை. இந்த ஆல்பத்தின் பெஸ்ட் என்று கூடச் சொல்லலாம்.

7.மென்டல் மனதில்...

ஜோனிதா காந்தி குழுவினருடன் பாடியுள்ள இந்தப் பாடல் ஏற்கெனவே பாப்புலராகிவிட்டது. பாடல் வரிகளைப் பற்றி கவலையே படாமல் ஜஸ்ட் அந்த இசை அமைப்புக்காகவே கேட்கலாம்.

8.மௌலா வா சல்லிம்...

ஏ ஆர் ரஹ்மான் மகன் ஏ ஆர் அமீன் தன் மாசு மருவற்ற குரலில், இறைவனிடம் பேசுவதுதான் இந்தப் பாடல். பாரம்பரிய அரபு மொழிப் பாடலை அதே மெட்டை வைத்து தன் இசையமைப்பில் தந்திருக்கிறார் ரஹ்மான். பரவசம்.

மனசுக்கு மகிழ்ச்சியைத் தருவதுதான் இசை... அதை பூர்த்தி செய்கிறது ஓ காதல் கண்மணி இசை.

ஓகே கண்மணி இசை... டபுள் ஓகே ரஹ்மான் பாய்!

 

விஜய் அண்ணாதான் என் பலம்.. அவரால்தான் நான் சினிமாவில் இருக்கிறேன்!- விக்ராந்த்

என் அண்ணா விஜய்யால்தான் சினிமாவுக்கு வந்தேன். அவரால்தான் இத்தனை நாளும் இங்கு தாக்குப் பிடிக்கிறேன் என்றார் நடிகர் விக்ராந்த்.

நடிகர் விஜய்யின் உறவுக்காரர் விக்ராந்த். சொந்த சித்தி மகன். கற்க கசடற படத்தில் அறிமுகமான இவர் பத்து ஆண்டுகளாக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கப் போராடி வருபவர் விக்ராந்த்.

விஜய் அண்ணாதான் என் பலம்.. அவரால்தான் நான் சினிமாவில் இருக்கிறேன்!- விக்ராந்த்

பல படங்களில் நடித்திருந்தாலும், விக்ராந்துக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது விஷாலின் பாண்டிய நாடு படம்தான்.

இப்போது விக்ராந்த் ‘பிறவி' படத்தில் நடித்து வருகிறார். இதில் இடம்பெறும் ‘தாக்க தாக்க' என்ற அறிமுக பாடலுக்காக விக்ராந்த்துடன் விஷால், ஆர்யா, விஷ்ணு ஆகியோர் நடனமாடி உதவியுள்ளனர்.

இந்தப் பாடலுக்கு விஜய் ஆடவில்லையா என்று கேட்டபோது, "விஜய் அண்ணா பிஸியாக இருக்கிறார். அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது. நான் விஜய்யின் சகோதரன் என்பதால் சினிமா உலகிற்குள் எளிதாக நுழைந்துவிட்டேன். அவரது உறவினராக இருப்பதனால்தான் என்னால் பத்து வருடங்களாக இங்கே நீடிக்க முடிந்திருக்கிறது.

விஜய் எனக்கு மிகப்பெரிய வலிமையாகவும் உத்வேகமாகவும் இருக்கிறார். அவர் பெரிய நடிகராக இருந்தபோதும், எப்போதும் அடக்கத்துடனே இருக்கிறார்," என்றார்.

 

இனி இளையராஜா லண்டன் போக வேண்டாம்... சென்னையிலேயே சிம்பொனி குழு!- ஏஆர் ரஹ்மான்

இளையராஜா போன்ற இசையமைப்பாளர்கள் சிம்பொனியை உருவாக்க லண்டன் அல்லது புடாபெஸ்ட் செல்கிறார்கள். இங்கு நம் ஊரிலேயே உலகத் தரத்திலான சிம்பொனி இசைக்குழுவை உருவாக்க சன்ஷைன் குழுவை தயார்படுத்தி வருகிறேன், என்று ஏ ஆர் ரஹ்மான் கூறியுள்ளார்.

சென்னையில் கேஎம் இசை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியை உருவாக்கி நடத்தி வருகிறார் ஏ ஆர் ரஹ்மான். இக்கல்லூரியின் சன்ஷைன் இசைக்குழு மூலம் மாணவர்களுக்கு இசைப்பயிற்சி அளிக்க ஹர்மேன் இந்தியா நிறுவனம் இணைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளில் 200 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர்.

இனி இளையராஜா லண்டன் போக வேண்டாம்... சென்னையிலேயே சிம்பொனி குழு!- ஏஆர் ரஹ்மான்

இதுகுறித்த அறிவிப்பை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து கூறினார் ரஹ்மான்.

அவர் கூறுகையில், "சன்ஷைன் இசைக்குழுவில் பயிலும் மாணவர்களை பெர்க்லீ பல்கலைக்கழகத்தில் இசைப் படிப்பு படிக்க அனுப்ப உள்ளோம்.

இசை குறித்த படிப்பை வழங்குவதில் முன்னணியில் உள்ள பெர்க்லீ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பயிற்சி பெற வேண்டும் என்பது என் ஆசை.

அந்த பல்கலைக்கழகத்தில் நான் சேர விரும்பி விண்ணப்பிக்க தயாரானபோதுதான் ‘ரோஜா' வாய்ப்பு வந்தது. இதுவா, அதுவா? என்ற சூழல் வந்தபோது ‘ரோஜா' படத்துக்கு இசையமைக்கும் வேலையில் இறங்கினேன். பின்னாளில் அதே பல்கலைக்கழகம் எனக்கு டாக்டர் பட்டம் அளித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

இளையராஜா போன்ற முக்கிய இசையமைப்பாளர்கள் சிம்பொனி இசைக்கோர்ப்புக்காக லண்டன், புடாபெஸ்ட் செல்கின்றனர். இங்கு நம் ஊரிலேயே உலகத் தரத்திலான சிம்பொனி இசைக்குழுவை உருவாக்கவே சன்ஷைன் குழுவை தயார்படுத்தி வருகிறேன்.

அடுத்த 5 ஆண்டுகளில் இங்கு இசை பயில்பவர்கள் சர்வதேச அளவில் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். சிம்பொனி இசை என்றாலே வெளிநாட்டுக்குதான் செல்லவேண்டும் என்ற நிலை இனி இருக்காது. தமிழ்நாட்டிலேயே அதை பெறமுடியும்," என்றார்.

 

ரஜினி கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறேன்.. எமன் கால்ஷீட் வேண்டாம்.. நடிகர் "தாடி" பாலாஜி!

சென்னை: ரஜினி, கமல், அஜீத், விஜய், தனுஷ் போன்றோருடன் நடிக்க கால்ஷீட் கொடுக்க காத்திருக்கிறேன். இந்த நிலையில் எமனுக்கு நான் கால்ஷீட் கொடுப்பேனா என்று நடிகர் பாலாஜி கூறியுள்ளார்.

சின்னத்திரை இயக்குநர் பாலாஜி யாதவ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவர் லட்சுமி, துளசி, பயணம், உறவுகள், செல்வி என பல சீரியல்களை இயக்கியவர். சமீப காலமாக அவருக்கு இயக்கும் வாய்ப்புகள் வரவில்லை. இதனால் வருமானம் இல்லை, கடன் தொல்லையும் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

ரஜினி கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறேன்.. எமன் கால்ஷீட் வேண்டாம்.. நடிகர்

இந்த நிலையில் பாலாஜி தற்கொலை என்ற செய்தியை சிலர் நடிகர் பாலாஜி தற்கொலை என்று பரப்பி விட்டு விட்டனர். இவரும் சின்னத்திரை நடிகர்தான். சினிமாவிலும் நடித்துள்ளார். டிவி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். தாடி பாலாஜி என்று நட்பு வட்டாரம் செல்லமாகவும் அழைக்கும்.

இயக்குநர் பாலாஜி மறைவை பலர் தாடி பாலாஜி மறைவு என்று செய்தி பரப்பி படத்துடன் சமூக வலைதளங்களில் செய்தியும் பரப்பி இரங்கலும் போட்டு விட்டனர்.

இதுகுறித்து நடிகர் பாலாஜி கூறுகையில், என் உடல் நிலை பற்றி வதந்திகள் பரவி உள்ளன. தேசிய விருது, ஆஸ்கர் விருது, தமிழக அரசு உள்ளிட்ட பல விருதுகளை பெறவும், அதே மாதிரி கமல், ரஜினி, அஜீத், விஜய், தனுஷ் போன்றோருடன் நடிப்பதற்கு கால்சீட் கொடுக்கவும் நான் காத்துக்கொண்டு இருக்கிறேன். அப்படி இருக்கும் போது, எமன் எனக்கு கால்சீட் கொடுத்து விடுவானா. கொடுக்கவே மாட்டான்.

உங்கள் ஆசிர்வாதத்தால் நல்லாவே இருப்பேன். இன்று என் உடல் நிலை பற்றி இப்படி ஒரு விஷயம் பரவி இருக்கிறது. பங்குனி உத்திரத்தில் எப்போதுமே இதுமாதிரி வதந்தி வந்தால் நூறு ஆயுசு என்று சொல்வார்கள், நன்றி என்று கூறியுள்ளார் பாலாஜி.

 

ஓ காதல் கண்மணி பாடல்களைக் கேட்கணுமா... இந்தப் பக்கத்துக்கு வாங்க!

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் ஓ காதல் கண்மணி பாடல்கள் நேற்று நள்ளிரவு இணையத்தில் வெளியாகின.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.

ஓ காதல் கண்மணி பாடல்களைக் கேட்கணுமா... இந்தப் பக்கத்துக்கு வாங்க!

மலர்கள் கேட்டேன், ஹேய் சினாமிகா, காரா ஆட்டக்காரா, பறந்து செல்ல வா, பறந்து செல்ல வா, நானே வருகிறேன், தீரா உலா, மெண்டல் மனதில், மௌலா வா சலீம்... என மொத்தம் எட்டுப் பாடல்கள் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன.

ரஹ்மான் ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு பாடல்கள் வந்துள்ளதாக விமர்சனங்கள் சொல்கின்றன.

பாடல்களின் யு ட்யூப் லிங் மற்றும் ஐ ட்யூன் லிங்குகள்.. கீழே..

ஓ காதல் கண்மணி பாடல்கள் தொகுப்பு:

ஐட்யூன்

ஓ பங்காரம் (தெலுங்கு..)