2011 சினிமா... ஜூன் வரை ரிலீஸ் 65... தேறியவை வெறும் எட்டு!


பில்டிங் ஸ்ட்ராங்... பேஸ்மெண்ட் வீக் என்பாரே வடிவேலு... அதற்கு சரியான உதாரணம் தமிழ் சினிமாதான்!

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் மார்க்கெட் பரந்து விரிந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் இந்திய சினிமாவின் அடையாளமாகப் பார்க்கப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் அவரது படங்களை பார்த்துப் பார்த்து செதுக்கும் கமர்ஷியல் விற்பன்னர்களும்தான்.

இந்த மார்க்கெட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பு மட்டுமே இன்றைய ஹீரோக்கள், இயக்குநர்களுக்கு உள்ளதே தவிர, படங்களில் நல்ல கதை, செறிவான காட்சிகளை அமைப்பதில் இல்லை என்பதே வருத்தம் தரும் உண்மை.

மாஸ் படம் என்ற பெயரில் அரைவேக்காட்டுத்தனமாக படங்களை எடுத்து மக்களை வெறுப்பேற்றுவது அதிகரித்து வருகிறது. உதாரணம் தனுஷ் நடித்த மாப்பிள்ளை, வேங்கை!

இதன் காரணமாக, தமிழ் சினிமா வளர்ந்த வேகத்திலேயே பெரும் வீழ்ச்சி கண்டு தயாரிப்பாளர்களின் தலையில் துண்டு போட வைக்கிறது.

2011 தமிழ் சினிமாவின் முதல் அரையாண்டுக்கான லாப நஷ்டக் கணக்கு என்று பார்த்தால், நாம் மேலே சொன்னது எந்த அளவு உண்மை என்பது புரிய வரும்.

இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஜூன் 30ம் தேதி வரை வெளியான நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை (ஆங்கில, தெலுங்கு, இந்தி டப்பிங் படங்கள் சேர்க்கப்படவில்லை) 65.

இவற்றில் சூப்பர் ஹிட் என்று பார்த்தால் இரண்டு படங்கள்தான். ஒன்று ஜீவாவின் கோ. இரண்டாவது கார்த்தி நடித்த சிறுத்தை.

ஹிட் ரகம் என்றால், பாலாவின் அவன் இவன், சிம்பு நடித்த வானம், விஜய்யின் காவலன் போன்றவற்றைச் சொல்லலாம்.

6 தேசிய விருதுகளை வென்றாலும், சன் பிக்சர்ஸின் மெகா விளம்பரங்களை கழித்துவிட்டுப் பார்த்தால் ஆடுகளம் பாக்ஸ் ஆபீஸில் மகா சுமார் படம்தான். ஆரண்ய காண்டம் பெரிதாக பாராட்டப்பட்டாலும் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியைத் தழுவியது.

சுசீந்திரனின் அழகர்சாமியின் குதிரை குறிப்பிடத்தக்க படமாக நின்றது. ஓரளவு நன்றாகவும் போனது.

விமல் நடித்த எத்தன், விஷ்ணு நடித்த குள்ளநரிக் கூட்டம் போன்றவை முதலுக்கு மோசமில்லாமல் ஓடின.

வேறு எந்தப் படமும் இந்த 6 மாதங்களில் முதல் இரு வாரம் கூட தாக்குப் பிடிக்கவில்லை. இன்றைய நிலவரப்படி 100 நாட்கள் ஓடினால்தான் வெற்றி என்று சொல்ல முடியாது. முதல் இரண்டு வாரங்கள் நல்ல வசூல், போட்ட முதலுக்கு மேல் லாபம் வந்தால் போதும் என்பதுதான் மார்க்கெட் நிலவரம். அந்த கணக்கின்படிதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள படங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் படங்கள் ஓடாமல் போக ஏதாவது ஒரு காரணத்தை கண்டுபிடிப்பது சினிமாக்காரர்கள் வழக்கம். அதன்படி கடந்த காலங்களில் குறிப்பிட்ட குடும்ப ஆதிக்கத்தை சொல்லி வந்தார்கள். ஆனால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து இத்தனை நாட்களில் வெளியான படங்களில் ஒரே ஒரு படம்... தெய்வ திருமகள் மட்டுமே தேறியுள்ளது.

இப்போது யாருடைய ஆதிக்கமும் இல்லாத நிலையில், வெளியாகும் படங்கள் ஓரளவு வசூலையாவது எடுத்திருக்க வேண்டும் அல்லவா? ஏன் முடியவில்லை?

"குடும்ப ஆதிக்கம், டிவி ஆதிக்கம்... இப்படி ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், நல்ல சரக்குள்ள படம் சந்தையில் யார் தயவும் இல்லாமல் ஓஹோவென்று ஓடும். அதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே இயக்குநர்கள் நல்ல படங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்ட வேண்டும். ஆனால் அவர்களோ ஆயிரம் அரசியல் பண்ணிக்கொண்டு படைப்பாற்றலை இழந்து விடும் போக்கு உள்ளது. தோல்விக்கு அடுத்தவரை நோக்கி விரல் நீட்டாமல், தங்கள் தவறை உணர்ந்து கதைகளை உருவாக்க வேண்டும்," என்கிறார் விநியோகஸ்தர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர்.

தயாரிப்பாளர் ஒருவரிடம் இதுகுறித்து பேசினோம்.

2011-ல் இதுவரை வெளியான எந்தப் படமும் ஹீரோக்களுக்காகவோ, ஹீரோயிசத்துக்காகவோ ஓடவில்லை. ஆனால் இன்னும் கூட ஹீரோயிசத்தோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தனுஷ் போன்ற ஹீரோக்கள். தமிழ் சினிமா சாண் ஏறினால் முழம் சறுக்கக் காரணம் இதுவே. இந்த நிலை மாற வேண்டும். அது இயக்குநர்கள் கையில்தான் இருக்கிறது. பலர் அவன் இவன் படத்தை விமர்சித்தாலும் அந்தப் படம் வெகுஜன ரசனையைத் திருப்திப்படுத்தியது. ஓரளவு லாபமும் கிடைத்தது. இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பு தமிழை விட நன்றாக சம்பாதித்துக் கொடுத்துவிட்டது. வித்தியாசம் மற்றும் ரசனைக்குத் தீனிபோடும் சமாச்சாரங்கள் நிறைய வேண்டும்," என்றார்.

இயக்குநர்கள் யோசிப்பார்களா?
 

காஜல் அகர்வாலுடன் பிறந்த நாள் கொண்டாடிய சூர்யா!


நடிகர் சூர்யா தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு ஹீரோயின் காஜல் அகர்வால் வாழ்த்துக் கூறினார்.

கல்பாத்தி அகோரம் வழங்கும் ஏஜிஎஸ் மூவீஸின் மாற்றான் படப்பிடிப்பில் குழுவினருடன் இந்த பிறந்த நாளை அவர் கொண்டாடினார்.

இயக்குநர் கேவி ஆனந்த், படத்தின் வசனகர்த்தாக்கள் சுபா மற்றும் படக்குழுவினர் சூர்யாவுக்கு கேக் ஊட்டி வாழ்த்துக் கூறினர்.

மாற்றான் படம் வித்தியாசமான கதையமைப்புடன் உருவாகிறது. ஏழாம் அறிவு படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சவுந்தரராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங்கை ஆன்டனி கவனிக்கிறார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மாற்றான் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கிறது.
 

கத்ரீனாவை குத்திக்காட்டிய தீபிகா!


பாலிவுட்டில் எந்த முன்னணி நடிகைக்கும் சக நடிகையைப் பிடிப்பதே இல்லை. பட்டியல் இட்டால் அது நீண்டு கொண்டே போகும். தீபிகா படுகோனேவுக்கும், கத்ரீனாவுக்கும் லடாயாக இருந்தது.

இந்நிலையில் அவர்கள் சமாதானமாகி தோழிகளாகிவிட்டதாக செய்திகள் வந்தன. தப்பு, தப்பு நாங்கள் ஒன்றும் தோழிகள் எல்லாம் கிடையாது என்று கூறுவது போல் தீபிகா படுகோன் ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார்.

அண்மையில் பேட்டி ஒன்றில் கத்ரீனா வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பாதி இந்தியர், பாதி இத்தாலியர் என்று கூறி கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் பிரச்சனை பெரிதாவதை உணர்ந்து மன்னிப்பும் கேட்டார்.

தீபிகா தனது 'ஆரக்ஷன்' பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் படத்தின் கதை பற்றி அவருடைய கருத்து கேட்கப்பட்டது. அதற்கு தீபிகா 'இது அரசியல் விவகாரம்... நான் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள விரும்பவில்லை' என்று கூறிவிட்டார்.

இப்பொது புரிகிறதா அவர் யாரை மனதில் வைத்து இவ்வாறு கூறியிருக்கிறார் என்று. வேறு யாரு ராகுலைப் பற்றி பேசி மன்னிப்புக் கேட்ட கத்ரீனாவைத் தான்.

குத்திக்காட்டுவதி்ல் அப்படி என்னதான் அலாதி சந்தோஷமோ....
 

ரஜினியுடன் யாரையும் ஒப்பிடாதீர்கள், ப்ளீஸ்! - சல்மான்கான்


மனதில் தோன்றியதை பட்டென்று யாரைப் பற்றியும் யோசிக்காமல் பேசி விடுபவர் சல்மான்கான். அதனால்தான் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர், சக நடிகர்கள் மத்தியில் கொஞ்சம் கெட்ட பெயர்.

சமீபத்தில் சல்மான் கானை நமது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒப்பிட்டு சக நடிகர் நடிகைகள் சிலர் பேசினர்.

பாடிகார்ட் படத்தில் சல்மான்கானுடன் நடிக்கும் கரீனா கபூர் கூறுகையில், "இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இணை யாருமில்லை. அவர் ஒரு பிறவி நடிகர். அவர் என்ன செய்தாலும் அது புதிய ட்ரெண்ட். அவரைப் போல மக்கள் மனம் கவர்ந்தவர், ஈர்ப்பு மிக்கவர் யாருமில்லை. என்னைப் பொருத்தவரை பாலிவுட்டின் ரஜினிகாந்த் என்றால் அது சல்மான்கான்தான்," என்று கூறியிருந்தார்.

ஆனால் இதனை மறுத்துள்ளார் சல்மான்கான். இந்திய சினிமாவில் ரஜினிக்குள்ள இடம் தனி. இங்கு எனக்கென ஒரு இடம் உள்ளது. எனக்கான இடத்தை நான் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். ரஜினியுடன் யாரையும் ஒப்பிட வேண்டாம் ப்ளீஸ்," என்று கூறியிருந்தார்.

இதை அவர் தன்னடக்கத்தில் கூறினாரா... அல்லது ரஜினி பெயரைச் சொல்லி நாம் வளர வேண்டிய நிலையில் இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளன பாலிவுட் பத்திரிகைகள்.

எப்படியோ... ரஜினி பெயரை இழுத்ததால்தான் இந்த விஷயம் கூட செய்தியாக மாறியது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரிந்தால் சரி, என இன்னொரு பத்திரிகை கமெண்ட் அடித்துள்ளது!
 

நிறைய கஷ்டங்களைப் பார்த்துட்டேன்! - கண்கலங்கும் சோனியா


தினமும் ஷூட்டிங், விசேஷங்களில் பார்ட்டி, நண்பர்களுடன் விருந்துகள் என நாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார் சோனியா அகர்வால்.

நேற்று முன்தினம் அவர் தனது தாயின் பிறந்தநாளை மெகா விருந்துடன் கொண்டாடினார். இந்த விருந்துக்கு ஏராளமான நண்பர்களையும் அவர் அழைத்திருந்தாராம்.

விருந்தின் போது அவர் நண்பர்களுடன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாராம் மனம்விட்டு.

அவர் கூறுகையில், "நான் இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். எனது சினிமா வாழ்க்கையை புதுப்பித்துக் கொண்டுவிட்டேன்.

முன்பை விட இப்போது நல்ல கேரக்டர்கள் வருகின்றன. தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இளம் வயதிலேயே நிறைய பிரச்சினைகளைப் பார்த்துவிட்டேன். என்னை இன்னும் உறுதியாக்க இந்த சோதனைகள் உதவியிருக்கின்றன. கடவுள் என்னோடு இருப்பதாக உணர்கிறேன்," என்றார்.

இப்போது ஒரு நடிகையின் வாக்கு மூலம், மாதா பிதா குரு மற்றும் இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.
 

விஷால் படப் பெயர் மாற்றம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விஷால் படப் பெயர் மாற்றம்

7/23/2011 12:30:56 PM

விஷால் நடிக்கும் 'பிரபாகரன்' படத்தின் பெயர் 'வெடி' என்று மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி விஷால் கூறியதாவது: 'பிரபாகரன்' என்ற பெயர் மாற்றப்பட இருப்பது உண்மை. ஒரு சென்சிட்டிவான பெயரை வைத்து மற்றவர்களுக்கு தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டாம் என்பதால் பெயரை மாற்ற முடிவு செய்திருக்கிறோம். படத்தில் என் கேரக்டர் பெயர் பிரபாகரன். அதனால் அந்த பெயரை வைக்க முடிவு செய்திருந்தோம். புதிய பெயரை இயக்குனர் பிரபுதேவா முடிவு செய்வார். அது 'வெடி'யா என்பது பற்றி முடிவு செய்யவில்லை. தற்போது கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 'அவன் இவன்' படத்துக்குப் பிறகு இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டுகளில் நடிக்க நிறைய வாய்ப்பு வந்தது. இப்போதைக்கு ஒப்புக் கொள்ளவில்லை. இரண்டு ஹீரோக்கள் படங்கள் வருவது சினிமாவுக்கு ஆரோக்கியமானது. ஒரே டிக்கெட்டில் இரண்டு ஹீரோக்கள் படம் பார்த்த திருப்தி ரசிகனுக்கு கிடைக்கும். ஆனால் இரண்டு ஹீரோ கதைகளை நல்ல இயக்குனர்களால் மட்டுமே கையாள முடியும்.




 

பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் பிந்து மாதவி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் பிந்து மாதவி

7/23/2011 12:07:04 PM

போட்டோன் கதாஸ் நிறுவனத்துக்காக கவுதம் வாசுதேவ் மேனன், ரேஷ்மா, வெங்கி, மதன் தயாரிக்கும் படம், 'வெப்பம்'. கார்த்திக் குமார், நானி, நித்யா மேனன், பிந்து மாதவி, முத்துக்குமார் நடிக்கின்றனர். வசனம், பிரபு. கதை, திரைக்கதை எழுதி அஞ்சனா இயக்குகிறார். வரும் 29-ம் தேதி ரிலீசாகும் இப்படம் பற்றி பிந்து மாதவி கூறியதாவது: இதில் விஜி என்ற கேரக்டராக வருகிறேன். சென்னை குடிசை பகுதியில் தங்கியிருந்து நடித்தது வித்தியாசமான அனுபவம். இதில் பாலியல் தொழிலாளி வேடமேற்றுள்ளேன். முதல் படத்திலேயே இதுபோன்ற கேரக்டரில் நடிப்பது குறித்து சிலர் பயமுறுத்தினர். ஸ்கிரிப்ட் மீது நம்பிக்கை வைத்து நடித்தேன். உண்மையில், இந்த வேடத்தில் நடித்தது சவாலாக இருந்தது.  பெண் இயக்குனர் என்பதால், அவரது படத்தில் நடிப்பது சவுகரியமாக இருந்தது. படுக்கையறை காட்சி, முத்தக்காட்சி என்ற வலுக்கட்டாயமான திணிப்புகள் கிடையாது. இது சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லர் படம். இவ்வாறு பிந்து மாதவி கூறினார். அஞ்சனா கூறுகையில், 'மெக்கானிக் கார்த்திக் குமார், விளம்பர போர்டு எழுதும் முத்துக்குமார், மாணவர் நானி, பாலியல் தொழிலாளி பிந்து மாதவி, ஜெராக்ஸ் கடையில் பணிபுரியும் நித்யா மேனன் ஆகியோரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும், தீர்வுகளும்தான் கதை' என்றார்.




 

விஐய் ஒரு பிரம்மாண்டம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விஐய் ஒரு பிரம்மாண்டம்

7/23/2011 11:44:12 AM

'வேலாயுதம்' படத்தில் விஜய்யின் பிரம்மாண்டம், பேசப்படுவதாக இருக்கும் என்று இயக்குனர் ஜெயம் ராஜா கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: 'வேலாயுதம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இது கிராமம், நகரம் என மாறி மாறி வரும் கதையை கொண்டது. ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி, சரண்யா மோகன் மற்றும் 15 வில்லன்கள் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார். வழக்கமான விஜய்யின் படங்களில் என்ன இருக்குமோ, அதைவிட பத்து மடங்கு கமர்சியல் அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கிறது. பொதுவாகவே விஜய்யை பிரம்மாண்டம் என்பார்கள்.

இதில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமாக இருக்கும். இந்தப் படத்துக்காக விஜய் கொடுத்த ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் பார்த்து மிரண்டு போனேன். அவரால் 5 நிமிடம் கூட ஷூட்டிங் தாமதமானதில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். படப்பிடிப்பின்போது பல்வேறு பிறந்தநாள்கள் கொண்டாடப்பட்டன. சம்பந்தபட்டவர்களுக்கு தெரியாமலேயே சொந்த செலவில் 'கேக்' வாங்கி வந்து ஷாக் கொடுப்பார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கை மறக்கவே முடியாது. விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே காமெடி காட்சிகள் அதிகம் உள்ள படமாகவும் இது இருக்கும். விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. விரைவில் பாடல் வெளியீடு இருக்கும். இவ்வாறு ஜெயம் ராஜா கூறினார்.

 

பிரீத்தி ஜிந்தாவை விட டாப்ஸி ரொம்ப அழகு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிரீத்தி ஜிந்தாவை விட டாப்ஸி ரொம்ப அழகு!

7/23/2011 11:45:15 AM

வாசன்ஸ் விஷூவல் வெஞ்சர் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் தயாரிக்கும் படம், 'வந்தான் வென்றான்'. ஜீவா, டாப்ஸி ஜோடி. முக்கிய வேடங்களில் நந்தா, சந்தானம், ரகுமான். ஒளிப்பதிவு, பி.ஜி.முத்தையா. இசை, தமன். பாடல்கள்: நா.முத்துக்குமார், கார்க்கி, தாமரை. வசனம், பட்டுக்கோட்டை பிரபாகர். ஆர்.கண்ணன் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கே.எஸ்.சீனிவாசன் வரவேற்றார். எஸ்.ஏ.சந்திரசேகரன், பாலா இணைந்து வெளியிட்டனர். ஜெயம் ரவி பெற்றுக்கொண்டு பேசியதாவது:

இந்த விழாவில்தான் டாப்ஸியை பார்க்கிறேன். அவரை, பாலிவுட் ஹீரோயின் பிரீத்தி ஜிந்தா மாதிரி இருப்பார் என்று வர்ணிப்பார்கள். நேரில் பார்த்த பிறகு கருத்தை மாற்றிக்கொண்டேன். பிரீத்தி ஜிந்தாவை விட, ரொம்ப அழகாக இருக்கிறார். ஜீவாவும், நானும் நண்பர்கள். எட்டு வருடங்களுக்கு முன் எப்படி பழகினாரோ, இப்போதும் அதுபோல்தான் பழகுகிறார். எந்த நிலையிலும் ஒரேமாதிரி இருக்க வேண்டும் என்ற குணத்தை அவரிடம் கற்றுக்கொண்டேன். ஜீவாவுக்கு 'கோ' படம் வெற்றி. அடுத்து 'ரவுத்திரம்', 'வந்தான் வென்றான்' படங்களும் வெற்றிபெற வாழ்த்துகிறேன். இவ்வாறு ஜெயம் ரவி பேசினார். விழாவில் எடிட்டர் மோகன், பிரமிட் நடராஜன், சத்யஜோதி தியாகராஜன், கே.முரளிதரன், டி.சிவா, கே.ராஜன், எல்.சுரேஷ், சுசீந்திரன், சீனு ராமசாமி, தம்பி ராமய்யா, சமுத்திரக்கனி, ராஜேஷ்.எம் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்.கண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை சின்மயி தொகுத்து வழங்கினார்.

 

நாகார்ஜுனா மகனை அடிக்கவில்லை! - காஜல்


நாகார்ஜுனா மகனை நான் அடித்ததாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று கூறியுள்ளார் காஜல் அகர்வால்.

நாகார்ஜுனா மகன் நாகசைதன்யாவும், காஜல் அகர்வாலும் தெலுங்கு படமொன்றில் இணைந்து நடிக்கின்றனர். படப்பிடிப்பில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும்,

இந்த மோதலில் நாக சைதன்யாவை காஜல் அகர்வால் அடித்ததாகவும் கூறப்பட்டது.

இது தெலுங்கு, தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. சூர்யா ஜோடியாக 'மாற்றான்' தமிழ் படத்தில் காஜல் நடித்து வருகிறார்.

நாக சைதன்யாவுடனான மோதல் பற்றி காஜலிடம் நிருபர்கள் கேட்டனர்.

அவர் பதிலளிக்கையில், "நாகசைதன்யாவை நான் அடித்ததாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. இதுபோன்று ஆதாரமில்லாத தகவல்கள் எப்படி பரவுகின்றன என்று எனக்கு புரியவில்லை. படப்பிடிப்பில் நானும், நாகசைதன்யாவும் மிக அந்நியோன்னியமாகப் பழகினோம். எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை," என்றார்.
 

ரசிகர்களைப் பரவசப்படுத்திய 'ரஜினி படங்கள்!'


சிகிச்சை முடிந்து சிங்கப்பூரிலிருந்து ரஜினி சென்னை திரும்பிய நாளன்று அவரைப் பார்க்க தமிழகமே திரண்டு வந்ததைப் போன்றதொரு தோற்றம் சென்னை விமான நிலையத்தில்.

ரஜினி விமானநிலையத்திலிருந்து வெளியேறி ரசிகர்களைப் பார்த்து கும்பிட்டபோது, அவரை ரசிகர்களில் பலரால் முழுமையாக பார்க்க முடியவில்லை. போலீஸ் தள்ளு முள்ளு தடியடி என ஏக கலாட்டா. ஆனால் இதைவிட ரசிகர்களை வேதனைப்படுத்தியது, 'தலைவரைப் பார்க்க முடியவில்லையே' என்பதுதான்.

அன்றைய தினம் நடந்த கலாட்டாவில், ஒரு பத்திரிகை புகைப்படக்காரரால் கூட ரஜினியை தெளிவாக படம் எடுக்க முடியவில்லை. இதுவும் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தந்தது.

அந்த வேதனை / ஏமாற்றத்தைப் போக்கும் வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ளன ரஜினியின் புதிய புகைப்படங்கள்.

இந்தப் படங்கள் அவர் சிங்கப்பூரிலிருந்து கிளம்பியபோது எடுக்கப்பட்டவை.

தனக்கே உரிய மிடுக்கு மற்றும் ஸ்டைலில் அவர் நடந்து வருவது, பேசிக் கொண்டிருப்பது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூர் மருத்துவமனை ஊழியர்களுடன், சிங்கப்பூரில் தனக்கு உதவிய நண்பர்களுடன் சேர்ந்து நின்று அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இதில் உள்ளன.

ரஜினியை நேரில் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளன இந்தப் படங்கள்.
 

மம்முட்டியிடம் விடிய, விடிய விசாரணை


மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியிடம் வருமான வரித்துறையினர் விடிய, விடிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் நேற்று காலையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த நட்சத்திரங்களின் சென்னை, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 80 அதிகாரிகள் சோதனை நடத்தியதாகத் தெரிகிறது.

இந்த சோதனைகளில் ரொக்கம், ஆவணங்கள், யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டது.

இதில் மம்முட்டியின் கொச்சி வீட்டில் இருந்து மட்டும் ரூ. 20 லட்சம் ரொக்கம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இந்த சோதனைகள் நடந்தபோது மம்முட்டி சென்னையில் இருந்தார். நேற்றிவு 9 மணிக்கு கொச்சி சென்ற அவரிடம் வருமானவரித்துறையினர் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.

அவரிடம் ரூ. 20 லட்சம் ரொக்கம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே மோகன் லால் அனுமதி பெற்றுத் தான் வீட்டில் தந்தங்கள் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெளிநாடு செல்ல நடிகர் சஞ்சய் தத்துக்கு அனுமதி


மும்பை: நடிகர் சஞ்சய் தத் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

1993-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நடிகர் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. சட்டத்துக்கு புறம்பாக ஆயுதம் வைத்திருந்தது தொடர்பாக அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது அவர் நிபந்தனை ஜாமீனில் இருக்கிறார். இந்த நிலையில் வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர் 2012-ஆம் ஆண்டு ஜனவரி 10-ந்தேதி வரை வெளிநாடு சென்று வர அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அவர் இந்தியா திரும்பியதும் ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

சஞ்சய் தத் ஏற்கனவே உச்சநீதிமன்ற அனுமதி பெற்று படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

படப்பிடிப்பில் விபத்து: குஷ்பு கால் எலும்பு முறிந்தது!


சென்னை: மிஸ்டர் மருமகன் என்ற மலையாளப் படத்தின் ஷூட்டிங்கில் குஷ்பு நிலை தடுமாறி விழுந்ததில் அவரது கால் எலும்பு முறிந்தது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திலீப் நடிக்கும் ‘மிஸ்டர் மருமகன்’ என்ற மலையாள படத்தில் நடித்து வந்தார் குஷ்பு. கொச்சியில்இந்தப் படப்பிடிப்பு நடந்தது. இதற்காக ஒரு பங்களா செட் போடப்பட்டு இருந்தது. நேற்று அங்கு படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. குஷ்பூ மாடிப்படிகள் வழியாக இறங்கி வருவது போல் ஒரு காட்சியை படமாக்கினார்கள்.

அப்போது மாடிப்படி செட் உடைந்ததால் குஷ்பூ கால் இடறி கீழே விழுந்தார். அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

குஷ்பூவை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் மயக்கம் தெளிய வைத்தனர். குஷ்பூவை பரிசோதித்த போது அவருடைய இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதைக் கண்டு பிடித்தனர்.

அதை தொடர்ந்து குஷ்பூ அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் 2 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். இந்த விபத்து காரணமாக ‘மிஸ்டர் மருமகன்’ படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.