விஜய் ட்விட்டரில் இல்லை... அந்த அறிக்கை எப்படி வந்ததென்றும் தெரியவில்லை! - விஜய் மேனேஜர்

விஜய் ட்விட்டரில் இல்லை... அந்த அறிக்கை எப்படி வந்ததென்றும் தெரியவில்லை! - விஜய் மேனேஜர்

சென்னை: விஜய் ட்விட்டரில் இல்லை. அவர் பெயரில் வந்த அறிக்கை யார் வெளியிட்டதென்றும் தெரியவில்லை என்று விஜய்யின் மேலாளர் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றத்தை கலைப்பேன் என்றும் நடிகர் விஜய் அறிவித்துள்ளதாக அவர் பெயரில் ட்விட்டரில் அறிக்கை வந்துள்ளது.

விஜய் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அவற்றை நிர்வகித்து வருபவர் எஸ்ஏ சந்திரசேகரன்தான்.

சமீபத்தில் மீனப்பாக்கம் விமான நிலையம் எதிரில் ரசிகர் மன்ற மாநாடு நடத்தி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க செய்யப்பட்ட ஏற்பாடு, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

விஜய் பிறந்த நாள் விழாவைக் கூட வெளிப்படையாகக் கொண்டாடவில்லை. அதைத் தொடர்ந்து வந்த தலைவா படப் பிரச்சினையில் விஜய் கெஞ்சும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். திரையுலகமும் அவருக்குக் கைக் கொடுக்கவில்லை.

ஒரு வழியாக படம் வெளியான பிறகு, "நான் அரசியலில் ஈடுபடமாட்டேன்" என்ற விஜய் அறிக்கை வெளியானது.

"எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. ரசிகர்கள் தயவு செய்து பேனர்களில் அரசியல் வசனங்களை எழுத வேண்டாம். என் வேண்டுகோளையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் ரசிகர் மன்றத்தை கலைப்பேன். ரசிகர் மன்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இனி நானே நேரடியாக ஈடுபடுவேன். என் தந்தையோ வேறு யாரோ ரசிகர் மன்ற விஷயங்களில் தலையிட மாட்டார்கள்," என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து நேற்று விஜய்யின் மக்கள் தொடர்பாளர் மற்றும் மேனேஜர் பி.டி.செல்வகுமாரிடம் கேட்டபோது, எனக்குத் தெரியாதே என்று கூறிவிட்டார். இன்று மீண்டும் தொடர்பு கொண்டபோது, "விஜய் ட்விட்டரில் இல்லை. நானும் எந்த சமூக வலைத் தளத்திலும் இல்லை. விஜய் பெயரில் இந்தச் செய்தி எப்படி வெளியானதென்று தெரியவில்லை. யாரும் இதை நம்ப வேண்டாம்,' என்றார்.

 

தேசிங்கு ராஜா - சினிமா விமர்சனம்

Rating:
3.0/5
-எஸ் ஷங்கர்

நடிப்பு: விமல், பிந்து மாதவி, சூரி, ரவி மரியா, சிங்கம் புலி, வினு சக்கரவர்த்தி

ஒளிப்பதிவு: சூரஜ் நல்லுசாமி

இசை: டி இமான்

பிஆர்ஓ: மவுனம் ரவி

தயாரிப்பு: எஸ்கேப் ஆர்ர்டிஸ்ட் & ஒலிம்பியா மூவீஸ்

எழுத்து - இயக்கம் : எஸ் எழில்

ஊர்ப்பகை, காதல், திருமணத்துக்குப் பின் கணவன் - மனைவி மோதல்... என வழக்கமான கிராமத்துக் கதை... ஆனால் பார்வையாளர்களை யோசிக்கவே விடக்கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு காமெடி கபடி ஆடியிருக்கிறார் இயக்குநர் எழில்.

கிளியூர், புலியூர் என இரண்டு கிராமத்துப் பெருசுகளுக்கும் இடையே தீராப் பகை. ஒரு கொட்டைப் பாக்கில் ஆரம்பித்த அந்தப் பகை, இரு குடும்பத்திலும் நான்கைந்து தலைகளை காவு வாங்குகிறது. இந்த சூழலில் இந்த இரு குடும்பத்தின் இப்போதைய தலைமுறையைச் சேர்ந்த இதயக் கனியும் (விமல்), தாமரை (பிந்து மாதவி)யும் காதலிக்கிறார்கள்.

தேசிங்கு ராஜா - சினிமா விமர்சனம்

இருவரும் திருமணம் செய்து கொண்டாலாவது 50 ஆண்டு கால பகை தீரும் என நினைத்து, காதலியின் தந்தையிடம் தனியாக வந்து திருமணத்துக்கு அனுமதி கேட்கிறான் இதயக்கனி. ஆனால் அவரோ இதயக்கனியைத் தீர்த்துக் கட்ட முயல்கிறார். அவர் கண்ணெதிரிலேயே தாமரைக்கு தாலி கட்டி, தன் நோக்கம் பகையை வளர்ப்பதல்ல, தீர்ப்பதுதான் என நிரூபிக்க முயல்கிறான் இதயக்கனி. அந்த நேரம் பார்த்து இதயக்கனியின் ஊர்க்காரர்கள் தாமரையின் கண்ணெதிரிலேயே அவள் தந்தையைக் கொல்கிறார்கள்.

இதயக்கனிதான் திட்டமிட்டு தன் தந்தையைக் கொன்றதாக நம்பிவிடுகிறாள் தாமரை. ஆனால் தாலிகட்டிய மனைவி தாமரையை தன்னோடு அனுப்புமாறு பஞ்சாயத்து வைக்கிறான் இதயக் கனி. தாமரையும் தன் தந்தையைக் கொன்ற கணவனை பழிவாங்க அவன் வீட்டுக்கு வருகிறாள்.

இதயக்கனியும் தாமரையும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு சேர்ந்தார்களா, இரண்டு ஊர் பகையும் தீர்ந்ததா என்பது க்ளைமாக்ஸ்.

இந்த மாதிரி கதையோடு வரும் நூத்தியோராவது படம் இது என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. ஆனால் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் நாலு அங்குல சிரிப்புக்கு கியாரண்டி தருகிறார் இயக்குநர் எழில்.

மருதமலை மாமணியே... பாடலுடன் தொடங்குகிறது முதல் காட்சி. பாடல் முடிந்து ஹீரோ அறிமுகமான சில நிமிடங்களில் ஹீரோயினுடன் காதல்... அப்புறம் கல்யாணத்துக்கு முன்பே பழமண்டியில் மேற்படி சமாச்சாரமும் முடிந்துவிடுகிறது! அடுத்த காட்சியில் திருமணம், முக்கிய பகையாளியும் செத்துப் போக.. இனி எப்படி நகரப் போகிறது கதை என்று பார்த்தால்... கணவனைப் பழிவாங்க மாமியார் வீட்டுக்கு வருகிறார் பிந்து மாதவி. கூடவே பாதுகாப்புக்காக பத்து அல்லக்கைகளோடு வருகிறார். அப்போது ஆரம்பிக்கும் காமெடி... க்ளைமாக்ஸ் வரை அதகளம்தான்!

முதலிரவைத் தடுக்க சூரி குரூப் ஒருபக்கம் திட்டம் போட, மாப்பிள்ளைக்குப் பாதுகாப்பு என சிங்கம்புலி - சாம்ஸ் குரூப் அடிக்கும் லூட்டி... வயிற்றைப் பதம் பார்க்கிறது.

கபடிக்கு சியர்ஸ் கேர்ள்ஸை அறிமுகப்படுத்தி, அற்காக ஐபிஎல்லுக்கு நன்றி சொல்லும் காட்சி செம குசும்பு!

தேசிங்கு ராஜா - சினிமா விமர்சனம்

ரவி மரியா டெரர் வில்லனாக அறிமுகமாகி, க்ளைமாக்ஸ் கபடி சீனில் கங்னம் ஸ்டைல் டான்ஸ் போட்டு கலகலப்பூட்டுகிறார்.

விமலுக்கு பழகிய வேடம். ரொம்பவே இயல்பாக நடித்திருக்கிறார். மனைவியிடம் பாவமாக கெஞ்சும்போது மவுனகீதங்கள் பாக்யராஜை நினைவுபடுத்துகிறார். சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதற்காக ஆக்ஷன் ஹீரோ என்றெல்லாம் இறங்காதீங்க பாஸ்.. தாங்காது!

பிந்துமாதவி இறக்கமாக ஜாக்கெட் அணிந்து கிறக்கமாகப் பார்த்தபடி வந்து போகிறார். கவர்ச்சி கைகொடுத்த அளவுக்கு காமெடி டைமிங் இன்னும் அவருக்கு கைவரவில்லை.

இந்தப் படத்தில் அதிக வேலை ஹீரோ ஹீரோயின்களுக்கல்ல... காமெடி டீமுக்குதான். பரோட்டா சூரி, சிங்கம்புலி, சாம்ஸ், சிங்கமுத்து என அத்தனை பேரும் சிறப்பாக கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். குறிப்பாக சிங்கம் புலி. விரசமில்லாத காமெடி, உச்சரிப்பில் இவர் இன்னொரு பாலையா!

வினுச் சக்கரவர்த்தி, ஞானவேல், வனிதா ஆகியோரும் தங்கள் வேடங்களைச் சிறப்பாக செய்துள்ளனர்.

காமிக் வில்லன் என்ற பதத்துக்கு சரியான உதாரணம் ரவி மரியா. நல்ல நகைச்சுவை நடிகராக ஒரு ரவுண்ட் வருவார்!

சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவும், இமானின் இசையும் படத்திக்கு ப்ளஸ். 'நிலா வட்டம்...' மெட்டு பழசு என்றாலும் கேட்க இனிமை.

குறைகள் என்று பார்த்தால்... ம்ஹூம்.. அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் இந்தப் படத்தின் முதல் காட்சியிலேயே எழுந்து வந்துவிட வேண்டியிருக்கும். எனவே சும்மா ஜாலியா பாருங்க...

வன்மமும் பகையும் நொடி நேரத்தில் பிறந்தாலும், தலை முறை தலைமுறையாகத் தொடர்கிறது. எப்படி உருவானதோ அதே வேகத்தில் அதற்கொரு முற்றுப் புள்ளியும் விழுந்தால்... இந்த சமூகம் எத்தனை சந்தோஷமாக இருக்கும் என சீரியஸாக யோசிக்க வைத்த சிரிப்புப் படம் தேசிங்கு ராஜா!

 

அரசியலுக்கு வரும் எண்ணமில்லை... ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைப்பு - நடிகர் விஜய்

'அரசியல் வேண்டாம்... ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைப்பு' - நடிகர் விஜய் அறிக்கையா இது?

சென்னை: எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. மீறி என் ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றத்தைக் கலைத்துவிடுவேன், என்று விஜய் பெயரில் உள்ள ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியாகியுள்ளது.

இனி ரசிகர் மன்ற விவகாரங்களில் தன் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் ஈடுபடமாட்டார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சில ஆண்டுகளுக்கு முன் தன் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றினார். அதற்கென தனி கொடியையும் நயன்தாராவை வைத்து வெளியிட்டார்.

தொடர்ந்து ஆங்காங்கே நிகழ்ச்சிகள் நடத்தி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இலவசத் திருமண நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார்.

திடீரென ஒரு நாள் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்துவிட்டு வந்து பிரஸ் மீட் வைத்து அறிவித்தார். ராகுல் காந்தியே தன்னை அழைத்ததாகக் கூறினார். ஆனால் ராகுல் காந்தியோ தான் யாரையும் அழைக்கவில்லை என்றும், அப்பாயின்ட்மென்ட் கேட்டு வந்ததால் விஜய்யைச் சந்தித்தேன் என்றும் கூறினார்.

தொடர்ந்து காவலன் படம் வெளியீட்டுக்கு அப்போதைய ஆளும்கட்சி திமுக முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறி பேட்டிகள் கொடுத்த விஜய், திடீரென ஒரு திருமணத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவைச் சந்தித்து வணக்கம் வைத்தார். தொடர்ந்து தேர்தலின்போது அதிமுகவை ஆதரிப்பதாகக் கூறினார். போயஸ் தோட்டத்துக்குப் போய் ஜெயலலிதாவை தன் தந்தையுடன் சந்தித்தார்.

அதன் பிறகு நடந்ததெல்லாம் அனைவரும் அறிந்ததே.எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. நண்பன், துப்பாக்கி என இரு படங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் வெளியாகி, வசூலையும் கொடுத்தன.

இந்த நேரத்தில் விஜய் பெரிய அளவில் அரசியலில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளதாக பேச்சுகள் கிளம்பின. அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் போகும் இடமெல்லாம் அப்படித்தான் பேசி வந்தார். ரசிகர் மன்ற விளம்பரங்களில் ஒரு பக்கம் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு புரட்சித் தலைவி அம்மா என்று குறிப்பிட்டிருந்த நிர்வாகிகள், அதற்கு எதிர்ப்பக்கம் எஸ் ஏ சந்திரசேகரன் படத்தைப் போட்டு புரட்சி இயக்குநர் அப்பா என குறிப்பிட்டிருந்தார்கள்.

இது அதிமுகவினரை மட்டுமல்ல, பார்த்த அனைவரையுமே முகம் சுழிக்க வைத்தது. நான் அண்ணாவைப் போன்றவன்.. என் மகன் எம்ஜிஆரைப் போன்ற ஆற்றல் மிக்கவன் என்று ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார் எஸ்ஏ சந்திரசேகரன்.

இந்த நேரத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு தலைவா என்று தலைப்பிட்டு, அதற்குக் கீழே தலைமை ஏற்கும் நேரம் இது என ஆங்கில வாசகம் வைத்திருந்தார்கள். படத்தில் வரும் பாத்திரங்களில், விஜய்யின் அப்பாவாக வரும் சத்யராஜுக்கு பெயர் அண்ணா. அண்ணாவுக்குப் பிறகு விஜய் தலைமை ஏற்க வருவதுபோல காட்சிகள் வசனங்கள் வைத்திருந்தனர்.

இந்தப் படம் வெளியாக பட்ட பாடுகள் எல்லாம் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த நிலையில்தான் நேற்று விஜய் திடீரென்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. தயவுசெய்து பேனர்களில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்களை போடவேண்டாம்.

அதையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட மன்றங்களை கலைக்கக்கூட தயங்க மாட்டேன்.

இனி ரசிகர் மன்ற விஷயங்களில் நானே நேரடியாக ஈடுபடுவேன். என் தந்தையோ, வேறு யாரோ மன்ற விஷயங்களில் தலையிடமாட்டார்கள்".

-இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கை ட்விட்டரில் வெளியாகியிருந்தது.

 

அனைத்து பெண்களையும் சகோதரிகளாக நினைத்து பாதுகாப்போம்: அமிதாப் பச்சன்

அனைத்து பெண்களையும் சகோதரிகளாக நினைத்து பாதுகாப்போம்: அமிதாப் பச்சன்

மும்பை: அனைத்துப் பெண்களையும் சகோதரிகளாக நினைத்து பாதுகாக்க வேண்டும் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மும்பையில் வியாழன்று மாலை பெண் போட்டோகிராபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமிதாப் பச்சன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மும்பையில் நடந்திருக்கும் இந்த கொடூர சம்பவம் அவமானத்திற்குறிய செயலாகும். இத்தகைய பண்பு வாய்ந்த நம் நாட்டில் இதைபோன்ற கொடூர சம்பவங்கள் நடப்பதை இனியும் நாம் அனுமதிக்கக் கூடாது. இது நம் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாம் கொண்டாடும் அனைத்து விதமான விழாக்களும் பெண்களை மதிப்பது எப்படி ? என்பதை நமக்கு கற்றுத் தருகின்றன. இச்சம்பவம் நடைபெற்ற ஒரு நாளைக்கு முன்னர்தான் பெண்களை சகோரரிகளாக ஏற்றுக்கொள்ளும் ராக்கி திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தோம். இனி அனைத்து பெண்களையும் சகோதரிகளாக நினைத்து பாதுகாப்போம் என்று நாம் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த குற்றத்தை செய்தவர்களை உடனடியாக கைது செய்து விரைவாக உரிய தண்டனை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

சேரன் மகள் மனமாற்றத்திற்கு காரணம் ‘ஆதலால் காதல் செய்வீர்’ திரைப்படமா?

சேரன் மகள்  மனமாற்றத்திற்கு காரணம் ‘ஆதலால் காதல் செய்வீர்’ திரைப்படமா?

சென்னை: காதல் விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இயக்குநர் சேரனின் மகள் தாமினி, ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்தை பார்த்து மனம் திருந்தி பெற்றோருடன் செல்ல ஒத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூளைமேட்டை சேர்ந்த டான்சர் சந்துருவை இயக்குநர் சேரனின் இளைய மகள் காதலித்த விவகாரம் கடந்த சில வாரங்களில் ஊடகங்களில் வெளியானது.

இது தொடர்பாக தாமினி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் அளித்தார். அதில் காதலன் சந்துருவை கொலை செய்வதற்கு சேரன் முயற்சிப்பதாக கூறியிருந்தார். சேரன் மீதான இந்த பரபரப்பான குற்றச்சாட்டை அடுத்து சேரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால், இந்த புகாரை கொடுப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு சந்துரு மீதே தாமினி புகார் கொடுத்திருந்தார். அதில் சந்துருவின் நடவடிக்கை பற்றியும் அவர் தனக்கு தொந்தரவு செய்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதன் அடிப்படையில் சந்துரு மீதும் வழக்கு பதியப்பட்டிருந்தது.

இந்த காதல் பிரச்சினை காரணமாக நீதிமன்ற உத்தரவுப்படி 2 வாரங்களுக்கு மேல் குடும்பத்தினரை பிரிந்து தலைமை ஆசிரியர் வீட்டில் தாமினி வைக்கப்பட்டிருந்தார். பின்னர் மனம் மாறிய தாமினி, சேரனுடன் செல்வதாகக்கூறி சென்றார். தாமினி சேரனுடன் சென்றதன் மூலம் சேரன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.

தலைமை ஆசிரியர் வீட்டில் 15 நாட்கள் தாமினி இருந்தபோது, அவருக்கு பல விதங்களில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது. 'ஆதலால் காதல் செய்வீர்' திரைப்படமும் போட்டு காண்பிக்கப்பட்டும் அவருக்கு வழங்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது. அதனடிப்படையில் மனம் திருந்திய தாமினி, பின்னர் பெற்றொருடன் செல்ல ஒப்புக்கொண்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அரைவேக்காட்டு திரைக்கதை, மட்டமான நடிப்பு... 'டமாலான' மெட்ராஸ் கபே!

ஜான் ஆபிரகாமின் மெட்ராஸ் கபே படம் ரசிகர்களைக் கவரவில்லை. முதல் நாளிலேயே வசூல் ரீதியாக பெரும் தோல்விப் படமாக சுருண்டுவிட்டது.

ராஜீவ் காந்தி கொலை மற்றும் இலங்கையில் நடந்த தமிழீழப் போரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.

படத்தில் ரா அதிகாரியாக வருகிறார் ஜான் ஆபிரகாம். இந்தப் படம் தமிழிலும் இதே பெயரில் டப் செய்யப்பட்டது.

தமிழர்களை நம்பத்தகாதவர்களாகவும், விடுதலைப் புலிகளை மிக மோசமானவர்களாகவும் சித்தரித்திருந்தனர் இந்தப் படத்தில்.

இந்த விஷயம் வெளியானதுமே தமிழகம் மற்றும் புதுவையில் எந்த மொழியிலும் படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது என்று தமிழ் கட்சிகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் அறிவித்துவிட்டனர்.

அரைவேக்காட்டு திரைக்கதை, மட்டமான நடிப்பு...  'டமாலான' மெட்ராஸ் கபே!

ஆனால் படத்தை வெளியிடுவதில் உறுதியாக இருந்தார் ஜான் ஆபிரகாம். இவர்தான் படத்தின் தயாரிப்பாளரும்கூட.

இந்தப் படத்தை தங்களால் திரையிட முடியாது என திட்டவட்டமாகக் கூறிவிட்டனர் தமிழக - புதுவை திரையரங்கு உரிமையாளர்கள். மற்ற இடங்களில் வெளியானது மெட்ராஸ் கபே.

ஆனால் எங்குமே இந்தப் படத்துக்கு போதிய கூட்டம் இல்லை. பார்த்தவர்களும் படு குப்பை இந்தப் படம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ரா அதிகாரிகள் பற்றிய ஆவணப்படம் மாதிரிதான் இதை எடுத்திருக்கிறார்கள். அதே போல படமெடுத்த இந்த குழுவுக்கு விடுதலைப் புலிகளைப் பற்றிய அடிப்படை உண்மை கூட தெரியவில்லை. நினைத்த மாத்திரத்தில் புலிகளின் தலைமையைச் சந்திப்பது போன்ற அபத்தமான காட்சிகள் நிறைய உள்ளன படத்தில், என கூறியுள்ளனர்.

காட்சிகளை அமைத்த விதத்தில் செயற்கைத் தனம் மிகுந்திருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளன.

இந்தப் படத்தில் வரும் கதை, கேரக்டர்கள் யாரையும் குறிப்பிடுவதல்ல என டைட்டில் போட்டுவிட்டு, பின்னர் ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகள் (எல்டிஎப்-என மாற்றி!), பிரபாகரன் (பாஸ்கரன்), ரா என உண்மைச் சம்பவங்களையும், மனிதர்களையும் தொட்டுள்ளனர். ஆனால் அதையும் உண்மையை உள்ளபடி சொல்லவில்லை.

படத்தின் வசனங்கள் மகா மட்டமாக உள்ளதாகவும் விமர்சனங்கள் குறிப்பிடுகின்றன. ஜான் ஆப்ரகாமுக்கு இந்த வேடமும் பொருந்தவில்லை, அவருக்கு சுத்தமாக நடிக்கவும் வரவில்லை என்றும் எழுதியுள்ளனர்.

பொழுது போக்கு அம்சங்களும் இல்லாமல், உண்மையை நேர்மையாக படமாக்கத் தெரியாமல் எடுக்கப்பட்ட இந்தப் படம் யாரையும் கவராமல் போய்விட்டதால், பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

 

வீரம் படத்துக்காக அஜீத்தின் வேட்டி டான்ஸ்!

வீரம் படத்துக்காக அஜீத்தின் வேட்டி டான்ஸ்!

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் வீரம் படத்துக்காக வேட்டி டான்ஸ் ஆடியுள்ளாராம் அஜீத்.

விஷ்ணுவர்தன் இயக்கும் ஆரம்பம் படத்துக்குப் பிறகு அஜீத் நடித்து வரும் படம் ‘வீரம்'. இப்படத்தை சிறுத்தை படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார்.

தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இது கிராமத்துக் கதை என்பதால் அஜீத் வேட்டி சட்டை அணிந்து நடித்துள்ளார். ரொம்ப நாளைக்குப் பிறகு அவர் நடிக்கும் கிராமப் படம் இது.

இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். கிராமத்து தெம்மாங்கு இசையில் அவர் போட்டுள்ள ஒரு பாடலுக்கு அஜீத் வேட்டியுடன் ஆட்டம் போடுகிறாராம். அவருடன் ஆட்டம் போடும் ஆண் டான்சர்கள் அனைவருக்கும் வேட்டிதான் யூனிபார்மாம்.

இந்தத் தகவல் அஜீத் ரசிகர்களுக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

ரஜினிக்கு மரியாதை செய்யும் விதத்தில் ஷாரூக் போட்ட லுங்கி டான்ஸ் இப்போது ஏக பிரபலமாகிவிட்டது. அடுத்து அஜீத்தின் வேட்டி டான்ஸ் ஒரு ரவுண்ட் வரும் போலிருக்கிறது!