நடிக்க வந்தாச்சுன்னா... சாயா 'பலே' பதில்!


நடிப்பதற்கென்று வந்து விட்டால் சின்னத்திரை, பெரிய திரை என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. நமக்கு நடிக்க நல்ல ஸ்கோப் உள்ளதா என்று மட்டுமே பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் 'மன்மத ராணி' சாயா சிங்.

திருடா திருடி மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை திருட வந்தவர் சாயா சிங். மன்மத ராசா பாட்டுக்கு இவர் போட்ட ஆட்டம் இன்னும் ரசிகர்களின் மன மேடையிலிருந்து அகலவில்லை. இப்படிப்பட்ட சாயா சிங்குக்கு தொடர்ந்து தமிழில் நல்ல வாய்ப்புகள் வரவில்லை. குத்துப் பாட்டுக்கும் கூட ஆடிப் பார்த்து விட்டார் சாயா சிங்.

இந்த நிலையில் இப்போது சின்னத் திரைக்கு வந்து விட்டார் சாயா. நாகம்மா என்ற டிவி சீரியலில் சாயா சிங் நடித்து வருகிறார். அதுவும் டபுள் ஆக்ட் வேறு. இதுகுறித்து அவரிடம் கேட்டால், நடிக்க வந்து விட்டால், நடிப்பதற்கான ஸ்கோப்பை மட்டுமே நான் பார்ப்பேன். சின்னத் திரை, பெரிய திரை என்ற வித்தியாசம் எல்லாம் எனக்குக் கிடையாது.

மற்றபடி, சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் நான் டிவிக்கு வரவில்லை. இப்போதும் கூட எனக்கு சினிமா வாய்ப்புகள் வரத்தான் செய்கின்றன. ஆனால் எனக்குப் பிடித்த கேரக்டர் கிடைத்தால்தானே நடிக்க முடியும் என்றார் சாயா சிங்.

கீழே விழுந்தாலும் 'சாயா'த பெண் 'சிங்'கம்தான் சாயா!
 

இந்தியன் 'தாத்தா'வும், அன்னா ஹஸாரேவும்!


ஊழல் இல்லா இந்தியா என்ற 'இந்தியன் தாத்தா' சேனாபதியின் கனவு 15 ஆண்டுகள் கழித்து நனவாகியுள்ளது-இன்னொரு தாத்தா அன்னா ஹஸாரேவின் மூலம்.

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடித்த படம் இந்தியனை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த படத்தில் வரும் இந்தியன் தாத்தாவை நினைவுபடுத்துவதாக உள்ளது அன்னா ஹஸாரேவின் போராட்டம்.

அன்னா ஹஸாரே இந்தியன் படத்தை எத்தனை முறை பார்த்திருப்பார்? இதுதான் இந்தியன் படத்தைப் பார்த்துச் சிலாகித்த, ஏங்கிய பலருக்குள்ளும் எழுந்த கேள்வியாக இருந்திருக்கும். காரணம், இந்தியன் படத்தின் இந்தியன் தாத்தா கேரக்டருக்கும், அன்னா ஹஸாரேவுக்கும் இடையே உள்ள பல ஒற்றுமைகள்.

கிட்டத்தட்ட இந்தியன் தாத்தா சேனாபதியைப் போலவே அமைந்துள்ளது அன்னா ஹஸாரேவின் போராட்டமும்.

இந்தியன் படத்தில் ஊழல் இல்லாத இந்தியா அமைய சேனாபதி தனி மனிதராகப் போராடினார். லஞ்சத்திற்கு அடிமையாகி விட்ட தனது மகனைக் கூட கொல்லத் துணிந்தவர் அந்த சேனாபதி என இந்தியன் படத்தின் கதை வரும்.

இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகள் கழித்து நிஜத்தில் ஒரு இந்தியன் தாத்தாவாக உருவெடுத்து வந்திருக்கிறார் அன்னா ஹஸாரே. இதை ஷங்கரும், கமலும் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த படத்தில் இந்தியன் தாத்தா வந்த பிறகு லஞ்சம் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த அதிகாரிகள் எல்லாம் உயிருக்கு பயந்து லஞ்சம் வாங்க பயப்படுவது போல காட்சி அமைந்தது.

தற்போது நிஜத்தில் லஞ்சம், ஊழலில் ஊறிப்போயிருந்தவர்களை எல்லாம் நடுநடுங்க வைத்துள்ளார் அன்னா. யாராவது அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் நான் அன்னா ஆதரவாளர் என்னிடமா லஞ்சம் கேட்கிறாய் என்று மக்கள் தைரியமாகச் சொல்லும் நிலை உருவாகியுள்ளது.

இதன் மூலம் ஊழலில்லா இந்தியா என்ற கனவு நனவாகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்தியன் கதைக்கும், அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற போதிலும் இந்தியன் படத்தின் கதையைப் பார்த்து ஏங்கியவர்களுக்கெல்லாம் இன்று சரியான வடிகாலாக வந்து சேர்ந்துள்ளார் 'தாத்தா' ஹஸாரே.

கமல்ஹாசனும் சரி, இந்தியன் படத்தை இயக்கிய ஷங்கரும் சரி, எதிர்காலத்தில் இப்படி ஒரு கேரக்டர் வரும், இந்தியாவை உலுக்கியெடுக்கும் என்று நிச்சயம் கணித்திருக்க மாட்டார்கள். அது ஒரு தற்செயலான நிகழ்வுதான். ஆனால் இன்று அன்னா வந்திருப்பதைப் பார்த்து அத்தனை பேர் மனதிலும் இந்தியன் தாத்தாதான் நிழலாடுகிறார்.

உண்மையில், 1960களிலேயே லோக்பால் மசோதா குறித்து பேச்சுக்கள் இருந்தன. இதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தியன் தாத்தா கேரக்டரை உருவாக்கினார் ஷங்கர். அந்தக் கேரக்டராக வாழ்ந்ததோடு, அத்தனை பேர் மனதிலும் அப்படிப்பட்ட ஒரு நிஜ கேரக்டர் வராதா என்ற ஏக்கத்தை, பாதிப்பை ஏற்படுத்தியது கமல்ஹாசனின் நடிப்பு.

இன்று நிஜமான இந்தியன் தாத்தாவாக உருவெடுத்து நிற்கிறார் அன்னா ஹஸாரே.

தான் அன்று திரையில் நிகழ்த்திய மாயாஜாலத்தை இன்று நிஜத்தில் நிகழ்த்தி வரும் அன்னாவைப் பார்த்து கமல்ஹாசன் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

இந்தியன் படத்தில் இந்தியன் தாத்தாவைப் பார்த்து ஊழல்வாதிகளும், லஞ்சதாரிகளும் அரண்டு ஓடினர். இன்று அன்னாவைப் பார்த்து லஞ்ச, ஊழல் பேர்வழிகள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. என்ன ஒரு ஒற்றுமை!

1996-ம் ஆண்டு ஷங்கர் படத்தில் இந்தியன் தாத்தாவைப் பார்த்து இப்படி ஒருவர் நிஜத்திலும் வரமாட்டாரா என்று ஏங்கிய மக்களுக்கு, 15 ஆண்டுகள் கழித்து நிஜ இந்தியன் தாத்தாவாக வந்துள்ளார் அன்னா ஹஸாரே என்பது பெரும் ஆச்சரியரகரமான ஒற்றுமைதான்.
 

நிறைய தெலுங்குப் படம் பார்... அமலா பாலுக்கு அனுஷ்கா அட்வைஸ்


நிறைய தெலுங்கு படங்கள் பார் அமலா என்று நடிகை அமலா பாலுக்கு அனுஷ்கா அறிவுரை வழங்கியுள்ளாராம்.

கேரள அழகி அமலா பால் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராகிவிட்டார். அன்மையில் வெளிவந்த தெய்வத்திருமகள் பற்றி பெருமையாய் பேசி வருகிறார். இந்நிலையில் கோலிவுட்டை பார்த்தாச்சு, டோலிவுட்டை ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்திருக்கிறார் அமலா பால்.

அதற்காக தெலுங்கு கற்றுக் கொண்டிருக்கிறாராம். இது பற்றி தெரிய வந்த அனுஷ்கா நிறைய தெலுங்கு படங்கள் பார் அமலா. அது உனக்கு உதவியாக இருக்கும் என்று அட்வைஸ் கொடுத்துள்ளாராம். அமலாவும் தெலுங்குப் படங்களைப் பார்க்கத் துவங்கியிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

அட அனுஷ்கா அமலாவுக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு ஆகியாச்சா என்றால் ஆம் என்று தான் கூற வேண்டும். அவர்கள் இருவரும் சேர்ந்து தெய்வத்திருமகள் படத்தில் நடித்ததில் இருந்தே தோழிகளாகி விட்டனர். ஸாரி.. நெருக்கமான தோழிகளாகிவிட்டனராம்.

'சீயானுக்கும்' கூட அமலா பால் நெருங்கிய தோழியாகி விட்டதாக கோலிவுட்டில் கூறுகிறார்கள்...!
 

கலை... தாகம்.. தொழில் அதிபர்...அசின்


நடிகை அசின் தீராத கலைத்தாகத்தால் தான் திரையுலகிற்கு வந்தார் என்று கூறப்படுகிறது.

கேரளாவில் நடிகை அசினுக்கு சொந்தமாக பல தொழிற்சாலைகள் உள்ளன. அம்மணி அதை நிர்வகிப்பதில் கில்லாடியாகவும் உள்ளார். கைவசம் தொழில் இருக்க அசின் எதற்கு நடிக்க வந்தார் என்று தானே நினைக்கிறீர்கள். அவருக்கு தீராத கலைத்தாகமாம். அதனால் தான் நடிக்க வந்தாராம்.

ஆரம்பத்தில் கோலிவுட்டிலும், பின்னர், தெலுங்கிலும் பிரமாதப்படுத்திய அசின் தற்போது பாலிவுட்டிலும் தனது கொடியை உயரப் பறக்க விட பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார். பாலிவுட்டில் எப்பாடுபட்டாவது பெரிய ஆளாகிவிட வேண்டும் என்பதில் குறியாய் உள்ளார். இதனால் கோலிவுட், தெலுங்கில் வரும் வாய்ப்புகளைப் புறம் தள்ளி வருகிறார்.

கஜினி தன்னை உயரத்தில் உட்கார வைத்ததைத் தொடர்ந்து அங்கேயே நிரந்தரமாக உட்கார்ந்து கொள்ளும் திட்டத்தில் இருக்கும் அசினுக்கு, கஜினிக்குப் பிறகு அதேபோல ஒரு சூப்பர் டூப்பர் படம் அமையாதது கவலையாகவும், வருத்தமாகவும் இருக்கிறதாம்.இருந்தாலும் விடாமல் தொடர்ந்து முன்னணி நடிகையாக திகழத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

எப்படியோ 'தாகம்' தீர்ந்தா சரிதான்...!
 

கோலிவுட்டுக்கு நோ சொன்ன ஷ்ரேயா கோஷல்


நடிக்க ஆரம்பித்தால் பாட முடியாமல் போய்விடும் என்பதால் நடிக்க வரும் வாய்ப்புகளை தட்டிக் கழிக்கிறார் பாடகி ஸ்ரேயா கோஷல்.

பாடகிகளில் இனிமையான குரலை உடையவர் ஷ்ரேயா கோஷல். இனிமையான குரல் மட்டுமல்லாமல் அசரடிக்கும் அழகையும் கொண்டவர் இந்த 27 வயது பாட்டுக் குயில்.வசீகரமான முகம் கொண்ட இவரையும் நடிக்க வைத்து விட கோலிவுட்டில் தீவிரமாக முயற்சிக்கிறார்களாம் சிலர். எப்படியாவது கோஷலை நடிகையாக்க அவர்கள் முயற்சித்து வருகின்றனராம்.

நினைப்புக்கு செயல் வடிவம் கொடுக்க ஷ்ரேயாவை அணுகினர். எப்படியாவது அவரை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் ஸ்ரேயாவோ நான் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். ஏன் ஸ்ரேயா இப்படி அடம்பிடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நான் ஒரு பாடகி. நடிக்க வந்தால் பாட்டில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். அதனால் நடிக்க மாட்டேன் என்றார்.

பரவாயில்லையே, தனது பாதையில் படு தெளிவாகத்தான் இருக்கிறார் ஷ்ரேயா.