ஏ ஆர் முருகதாசை கலங்க வைத்த கம்பன் கழகம்!

ஏ ஆர் முருகதாசை கலங்க வைத்த கம்பன் கழகம்!

கம்பன் கழகம் படம் பார்த்து கண் கலங்கினார் இயக்குநர் ஏஆர் முருகதாஸ்.

இயக்குநர் ஏஆர் முருகதாசின் உதவியாளர் அஷோகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் கம்பன் கழகம்.

க்யூ சினிமாஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் அஷோகன் தயாரித்து, இயக்கும் இந்தப் படத்தில் பிரபு, ராய்சன், நவீன், ரத்தின் ராஜ், முரளி ஆகியோருடன் கிருத்திகா, ஸ்வப்னா என்ற இரண்டு புதுக்கதாநாயகிகள் அறிமுகமாகிறார்கள்.

இவர்களுடன் கிஷோர், ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு, டெல்லி கணேஷ், சிங்கமுத்து என பழகிய முகங்களும் உண்டு.

‘கம்பன் கழகம்' படத்தின் முதல் பிரதி தயாரான உடன், இப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான அஷோகன், தன் குரு ஏ.ஆர்.முருகதாஸுக்கு படத்தைப் போட்டுக் காட்ட விரும்பினார்.

ஒரு பிரிவியூ தியேட்டரில் ‘கம்பன் கழகம்' படத்தைப் பார்த்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இடைவேளையின் போதே கண்கள் கலங்க வெளியே வந்தார். ஒவ்வொரு காட்சிகளும் உருக்கமாகவும், மனசைத் தொடுமளவுக்கும் இருக்கின்றன என்று பாராட்டியவர், முழுப் படத்தையும் பார்த்த பிறகு ரொம்பவே உணர்ச்சி வயப்பட்டுவிட்டார்.

படம் குறித்து தன் சிஷ்யனிடம் முருகதாஸ் பேசுகையில், "கம்பன் கழகம் பார்த்த பிறகு 'எங்கேயும் எப்போதும்' சின்ன படம் போல் தோன்றுகிறது. புதுமுகங்களை வைத்துக் கொண்டு அந்தளவுக்கு பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறீர்கள்," என்று பாராட்டினார்.

 

ராசுமதுரவன் இயக்கிய சொகுசுப்பேருந்து- அவர் மரணத்துக்குப் பிறகு வெளியாகிறது!

மாயாண்டி குடும்பத்தார் படத்தை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அசலான தமிழ் குடும்பம் மற்றும் கலாச்சாரத்தை முன்னிறுத்திய படம் இது.

நல்ல வெற்றிப் படமும்கூட. இந்தப் படத்தை இயக்கிய ராசு மதுரவன், மேலும் சில படங்கள் தந்தார். யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் திடீரென புற்றுநோய்க்கு பலியானார்.

ஆனால் மரணத்துக்கு முன் அவர் தன்னையே பணயம் வைத்து தன் பாண்டிநாடு தியேட்டர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய படம் சொகுசுப் பேருந்து.

ராசுமதுரவன் இயக்கிய சொகுசுப்பேருந்து- அவர் மரணத்துக்குப் பிறகு வெளியாகிறது!

ஜானி - யுவன் - மனிஷா யாதவ் - சுவாதி நடித்துள்ள இந்தப் படம் நிறைவுறும் தருவாயில்தான் அவர் மரணத்தைத் தழுவினார்.

கஞ்சாகருப்பு, இளவரசு, சிங்கம்புலி, குருபரன், வெங்கல்ராவ், கிங்காங், தீப்பெட்டிகணேசன், அசத்தப் போவது யாரு ராஜ்குமார், போண்டாமணி, ஜெரால்டு, யோகி தேவராஜ்,ஜானகி, அவன் இவன் ராமராஜன், நந்தலாலா இவர்களுடன் ஒரு பாடல் காட்சியில் நிகோல் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார்.

யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, நந்தலால, முத்துவிஜயன், தமிழமுதன், கவிபாஸ்கர், அருண்பாரதி, பாடல்களுக்கு ஜான்பீட்டர் இசையமைத்துள்ளார்.

ராசுமதுரவன் இயக்கிய சொகுசுப்பேருந்து- அவர் மரணத்துக்குப் பிறகு வெளியாகிறது!

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் அமரர் ராசு.மதுரவன் பூமகள் ஊர்வலம், பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம், பாண்டி ஒலி பெருக்கி நிலையம் போன்ற படங்களைக் கொடுத்து ரசிகர்களிடம் அருமையான குடும்பப் பட இயக்குனர் என்று பெயரெடுத்த ராசு மதுரவன் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து சொகுசுப் பேருந்தை உருவாக்கி முடித்து விட்டு படம் வெளியாவதற்கு முன்பே இறந்து விட்டார்.

இந்தப் படத்தை அவரது நண்பர் ஸ்டில்ஸ் குமார் முன்னின்று வெளியிடும் வேலைகளைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

'புரட்சித் தலைவர்' சொன்னதைச் செய்த மயில்சாமி!

உடலால் மறைந்தாலும் தனது வள்ளல்தன்மையால், கருணை மனதால் இன்றும் பல கோடி மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு வீற்றிருப்பவர் அமரர் எம்ஜிஆர்.

அவரது வழியை இன்றும் பின்பற்றி பலருக்கும் உதவிகள் செய்யும் நல்ல உள்ளங்களைப் பார்க்க முடியும்.

நடிகர் மயில்சாமி ஒரு தீவிர எம்ஜிஆர் அபிமானி.. அதை விட பக்தர் என்று சொல்வதே சாலப் பொருந்தும். தன் நிலைமைக்கேற்ப உதவிகளை பலருக்கும் செய்து வருகிறார்.

'புரட்சித் தலைவர்' சொன்னதைச் செய்த மயில்சாமி!

நேற்று நடந்த, மறைந்த இயக்குநர் ராசு மதுரவனின் சொகுசுப் பேருந்து பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மயில்சாமி, பேச்சை விட செயல்தான் முக்கியம் என்பதை செயலால் காட்டினார்.

அவரை பேச அழைத்தபோது, "பேச்சைக் குறை.., முடிஞ்ச உதவியை முதலில் செய்.. நான் தெய்வமாக வணங்கும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கற்றுத் தந்தது இது. அந்த வகையில் ராசு மதுரவன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வது, அறிவுரை சொல்வதையெல்லாம் அப்புறம் வைத்துக் கொள்ளலாம். முதலில் அவர் குடும்பத்துக்கு அவரவரால் என்ன உதவி செய்ய முடியுமோ.. அதை இப்போதே செய்யுங்கள். அதுதான் இப்போது அனைவரும் செய்ய வேண்டிய விஷயம்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பெயரால்.. இதோ என்னால் ஆன தொகை ரூ 20000 ஆயிரத்தை அளிக்கிறேன்," என்று கூறிய மயில்சாமி, மேடையிலேயே அந்தப் பணத்தை ரொக்கமாக ஆர்கே செல்வமணியிடம் கொடுத்துவிட்டு கிளம்பினார்.

ஒருவர் மறைந்தாலும் அவரது குணங்கள் அவரைச் சார்ந்து இயங்குபவர்களிடம் இருந்தால், அவர் இன்னும் உயிரோடு இருப்பதாகவே அர்த்தம் என்பார்கள். எம்ஜிஆர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்!

 

ஏமாளியாகவே நாங்கள் செத்து மடிய வேண்டியது தானா?- இயக்குநர் சேரன் வேதனை

சென்னை: எடுத்த படத்தை முதல் நாளே திருட்டுத்தனமாகப் போட்டுவிடுவதால் 90 சதவீதம் நஷ்டம் வருகிறது. விஞ்ஞானத்தை தடுக்க முடியாது. ஏமாளியாகவே நாங்கள் செத்து மடிய வேண்டியது தானா? எங்கள் குழந்தைகளும் மனைவியும் கேட்பாரற்ற அனாதைகளாக கிடக்கட்டுமா? என வேதனை தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரன்.

தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று அவர் எழுதியிருப்பது:

திடீர் மரணம் ஒரு குடும்பத்தை எவ்வளவு நிலை குலைய வைக்கும் என்பதை இன்று என் கண்முன்னே பார்த்தேன். எதிர்கால சிந்தனை இல்லாத வாழ்க்கை அபாயகரமானது...

ஏமாளியாகவே நாங்கள் செத்து மடிய வேண்டியது தானா?- இயக்குநர் சேரன் வேதனை

இயக்குனர் ராசுமதுரவன் திடீரென இறந்துவிட்டார். இப்போது அவருடைய குடும்பத்தின் மீது அவர் திரைப்படம் எடுக்க வாங்கிய கடன் அசுரனை போல நின்று பயமுறுத்துகிறது.

எந்த விதமான கேரண்டியும் இல்லாத வாழ்க்கையே சினிமா வாழ்க்கை. எந்த தொழில் செய்தாலும் இவ்வளவு முதலீடு செய்தால் இவ்வளவு மிஞ்சும் என்ற கணக்கு உண்டு. சினிமாவில் மட்டும் அது கனிக்கமுடிவதே இல்லை.

ஒரு சில நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் தவிர பெரும்பாலோனோர் என்ன கிடைக்கும் எப்படி வாங்கிய கடன் அடையும் என்று தெரியாமலேயே திரைப்படம் எடுக்க வேண்டிய நிலை... (நான் உள்பட). ஆனால் வெளியில் இருந்து பார்க்கும் நிறைய பேருக்கு சினிமா கொட்டிக் கொடுக்கிறது என்ற எண்ணத்திலேதான் சினிமாக்காரர்கள் என்றால் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள்.

படம் எடுத்தவன் நிலை தெரிந்தால் எந்த மனிதனும் படத்தை திருட்டுத்தனமாக ஆன்லைன், விசிடி, டிவிடி இவைகளில் வெளியிடவோ பார்க்கவோ மாட்டார்கள்.

வெளியாகி ஒரு வாரம் திரைப்படம் ஓடினால் மட்டுமே போட்ட காசு திரும்ப வரும், தொலைக்காட்சி உரிமை நல்ல விலைக்கு போகும் என்ற நிலையில்தான் எல்லா படமும் வெளியாகிறது.

இதில் 90% நஷ்டமே வருகிறது. காரணம் முதல் நாளே எதோ ஒரு வழியில் திருட்டுத்தனமாக படம் போடும் கூட்டம் அதிகமாக இருப்பதே காரணம்.. அதே நேரம் விஞ்ஞான வளர்ச்சியை தடுக்கவும் முடியாது.

என்ன செய்யலாம்...ஏமாளியாகவே நாங்கள் செத்து மடிய வேண்டியது தானா? எங்கள் குழந்தைகளும் மனைவியும் கேட்பாரற்ற அனாதைகளாக கிடக்கட்டுமா???

-இப்படி கேள்வி எழுப்பியுள்ளார் சேரன். நேற்று நடந்த ராசு மதுரவன் பட நிகழ்ச்சியிலும் தனது குமுறலை வெளிப்படுத்தினார் அவர்.

 

'ஆன்ட்டி' என்ற ஹீரோ: அதிர்ந்து போய் ஓடிய சீனியர் ஹீரோயின்

சென்னை: மூனுஷா நடிகையை இளம் ஹீரோ ஒருவர் ஆன்ட்டி என்று அழைத்து அதிர வைத்துள்ளாராம்.

சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வருகிறார் மூனுஷா. அவருக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்ற செய்தி அவ்வப்போது வந்தாலும் அவர் நடிப்பில் கவனம் செலுத்தவே விரும்புகிறார் என்று கூறப்படுகிறது.

தற்போது பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்துள்ளதால் அவர் இளம் ஹீரோக்கள் மற்றும் புதுவரவுகளுடன் ஜோடி சேர அடிபோடுகிறாராம். பெரிய நடிகர்கள் யாரும் அவர் மீது ஆர்வம் காட்டவில்லையாம்.

இந்நிலையில் 2 வாரிசு நடிகர்களிடம் நட்பாக பேசிய நடிகை திடீர் என்று அவர்களுடன் ஜோடி சேர ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இதை கேட்ட ஒரு வாரிசு நடிகர் ஆன்ட்டி நீங்கள் என் அப்பாவுக்கேத்த ஜோடி எனக்கில்லை. நான் சின்ன பையன் ஆன்ட்டி என்று கூறியுள்ளார். தன்னை ஒரு ஹீரோ ஆன்ட்டி என்று அழைத்ததை கேட்ட நடிகை அதிர்ந்து ஓடிவிட்டாராம்.

இந்த ஆன்ட்டி சம்பவத்தை அடுத்து நடிகை இளவட்ட நடிகர்களை பார்த்தாலே தள்ளி இருக்கிறாராம்.

 

இளையராஜா எடுத்த புகைப்படத்தை திருட ஆசைப்பட்ட பாலா!

இளையராஜா எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி பற்றிய சுவாரஸ்ய செய்திகளுக்குப் பஞ்சமில்லை.

சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆர்ட் ஹவுஸில் வைக்கப்பட்டுள்ள இந்த புகைப்படக் கண்காட்சியை தினசரி பல விவிஐபிகள் வந்து பார்த்து பிரமித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒளி ஓவியர்களான பாலு மகேந்திராவையும் பிசி ஸ்ரீராமையுமே பிரமிக்க வைத்திருக்கின்றன ராஜா எடுத்த பல புகைப்படங்களின் ஒளி அமைப்பும், கோணங்களும்.

இளையராஜா எடுத்த புகைப்படத்தை திருட ஆசைப்பட்ட பாலா!

இத்தனைக்கும் இவற்றையெல்லாம் ராஜா தன் காரில் அமர்ந்தபடிதான் எடுத்திருக்கிறார், பழைய பிலிம் கேமராவில். டிஜிட்டல் கேமராவை அவர் தொடுவதே இல்லையாம்.

நேற்று முன்தினம் கண்காட்சிக்கு வந்திருந்த இயக்குநர் பாலா, ராஜாவின் போட்டோக்களைப் பார்த்து வியந்து போய், கண்காட்சி பொறுப்பாளரிடம் அந்தப் படங்கள் தொடர்பான தகவல்களைக் கேட்டுக் கொண்டே வந்தாராம்.

ஒரு போட்டோவைப் பார்த்ததும், 'இது கிடைக்குமா' என்றாராம். 'கண்காட்சிக்காக வைத்திக்கிறார்கள்' என பொறுப்பாளர் சொல்ல, "இல்லை நீங்க அந்தப் பக்கம் போனதும் திருடிட்டுப் போகலாம்னு தோணுது" என்றாராம் பாலா, சீரியஸாக!

 

கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு சாரல் விருது

ராபர்ட் - ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கும் 2014ம் ஆண்டுக்கான ‘சாரல் விருது - 2014' கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு வழங்கப்பட்டது.

சாரல் விருது என்பது ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியவாதிகளுக்கு வழங்கப்படும் விருதாகும்.

கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு சாரல் விருது

இந்த விருதுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் பரிசுத் தொகையாகவும், நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை எனும் இலக்கிய வகைகளைத் தாங்கி நிற்கும் தமிழன்னையை உருவகப்படுத்தும் இலக்கியா எனும் அழகிய வெண்கலச் சிற்பமும் பரிசாக வழங்கப்படும்.

இந்த அறக்கட்டளை சார்பில் திரைப்பட இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி ஆகியோர் இவ்விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் சாரல் விருதை சென்ற ஆண்டு எழத்தாளர் பிரபஞ்சன் பெற்றார். இந்த ஆண்டு கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு வழங்கப்பட்டது.

கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு சாரல் விருது

இந்த விருது விழா, சென்னை அண்ணா சாலையில் உள்ள புக் பாய்ண்ட்டில், 25.1.2014 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

இந்த விருது விழாவில், 'நக்கீரன்' வாரமிருமுறை ஆசிரியர் நக்கீரன்கோபால், இயக்குநர்கள் பாலா, கரு.பழனியப்பன், ஜெடி -ஜெர்ரி, நடிகை ரோகிணி மற்றும் பலர் பங்கேற்றனர்.

கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு சாரல் விருது

இதுவரை விருது பெற்றவர்கள்...

திலீப்குமார்(2009), கவிஞர் ஞானக் கூத்தன் (2010), அசோகமித்திரன் (2011), வண்ணநிலவன், வண்ணதாசன்(2012), பிரபஞ்சன்(2013), கவிஞர் விக்கிரமாதித்யன் (2014)