இந்திய சினிமாவின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்குரிய படமாகப் பார்க்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வரலாற்றுப் படம் கோச்சடையான் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது.
ரஜினி இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் கோச்சடையான். கேஎஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் சௌந்தர்யா ரஜினி இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்.
தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராப், ஷோபனா, ருக்மணி என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. ஆரம்பத்தில் அனிமேஷன் என்று சொல்லப்பட்டு, பின்னர் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் நிஜ நடிகர்களே நடிக்கும் படமாக மாற்றப்பட்டது.
அத்துடன் மறைந்த சாதனை நடிகர்கள் நாகேஷ், நம்பியார் போன்றவர்களும் இந்தப் படத்தில் தோன்றுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல, இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் அனிமேஷன் படம் என்ற அறிவிப்புடன் இந்தப் படம் வருகிறது.
ஆரம்பத்தில் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. பின்னர் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளன்று வெளியாகும் என்றார்கள். ஆனால் மூன்று நாடுகளில் படத்தின் போஸ்ட்புரொடக்ஷன், எடிட்டிங் பணிகள் நடப்பதால், தாமதம் ஏற்பட்டு வந்தது.
இப்போது கிராபிக்ஸ் மற்றும் ஒலிக் கலவை போன்ற பணிகள் முடிந்து எடிட்டிங் நடந்து வருகிறது.
இதுகுறித்து சௌந்தர்யா கூறுகையில், "இப்போது சென்னை, லண்டன் நகரங்களில் உள்ள நான்கு ஸ்டுடியோக்களில் கோச்சடையான் பணிகள் நடந்து வருகின்றன. பாடல்கள் அனைத்தும் தயார். ஆல்பம் தயாராகிக் கொண்டிருக்கிறது. முதல் பாதியின் எடிட்டிங் முழுமையடைந்துவிட்டது. இப்போது இரண்டாம் பாதியின் பணிகள் நடக்கின்றன.
டப்பிங் வேலைகள் அடுத்த மாதம் தொடங்குகின்றன. தீபிகா படுகோன் சொந்தக் குரலில் டப் பண்ணுகிறார். ஏப்ரலில் படத்தைத் திரையிட முயன்று வருகிறோம்," என்றார்.
கோச்சடையான் தமிழ், தெலுங்கு, இந்தி, ஜப்பான் மற்றும் ஆங்கிலம் என 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.