மீண்டும் இரண்டு கெட்டப்புகளில் தோன்றும் சூர்யா!

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாஸ் படத்திலும் இரட்டை கெட்டப்புகளில் தோன்றப் போகிறாராம் சூர்யா.

‘அஞ்சான்' படத்திற்குப் பிறகு சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘மாஸ்' படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் எமி ஜாக்சன் நடிக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

மீண்டும் இரண்டு கெட்டப்புகளில் தோன்றும் சூர்யா!

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு இரண்டு விதமான கெட்டப்புகளாம்.

ஒரு கெட்டப்பில் நீளமான முடி வைத்திருக்கும் கெட்டப்பில் வருகிறார் சூர்யா. மற்றொரு தோற்றம், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாம்.

இதற்காக மும்பையிலிருந்து ஸ்பெஷல் ஹேர் ஸ்டைலிஸ்ட் வரவழைக்கப்பட்டுள்ளாராம்.

இரு வேறு கெட்டப்புகளில் நடிப்பதில் சூர்யா தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கு முன் ஏழாம் அறிவு, மாற்றான், அஞ்சான் போன்ற படங்களில் அவர் இரட்டை அல்லது இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார்!

 

தலைப்பை பதிவு செய்வதில் மோசடி.. சினிமா கில்டு தலைவர் மீது ஜாகுவார் தங்கம் புகார்!

சென்னை: திரைப்படத் தலைப்பைப் பதிவு செய்வதில் பெரும் மோசடி செய்ததாக சினிமா கில்டு தலைவர் கிரிதாரிலால் மீது ஜாகுவார் தங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

தென்னிந்திய திரைப்படம் - தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்டு) கவுரவ செயலாளர் ஜாக்குவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், "தென் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் சங்க தலைவராக இருப்பவர் கிரிதாரிலால். இவர் 2009 ஆண்டு முதலே இந்த பதவியை வகித்து வருகிறார். இந்த சங்கத்தின் செயலாளராக இருப்பவர் தேவராஜ் குணசேகரன்.

தலைப்பை பதிவு செய்வதில் மோசடி.. சினிமா கில்டு தலைவர் மீது ஜாகுவார் தங்கம்  புகார்!

நீண்ட நாட்களாக இந்த பதவியை வகிக்கும் இவர்கள் பல்வேறு முறைகேடுகளை செய்து வருகிறார்கள். இவர்களது மோசடி காரணமாக சங்கத்துக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.

சினிமா படத்தின் தலைப்புகளை பதிவு செய்வதும், அதை பாதுகாப்பதும் சங்கத் தலைவரின் முக்கிய பணியாகும். ஆனால் யாராவது புதிய படத்தின் தலைப்பை பதிவு செய்ய வந்தால், ஏற்கனவே அதே தலைப்பு பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், பணம் கொடுத்தால் அதை வாங்கித் தருவதாகவும் பேரம்பேசி பல லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார்.

‘சரவணன் என்கிற சூர்யா', ‘இந்தியா-பாகிஸ்தான்' ஆகிய படத்தலைப்புகளை பதிவு செய்யும் போது இதுபோன்ற மோசடி நடந்துள்ளது. இதனால் சங்கத்துக்கு கெட்ட பெயரும் தலைகுனிவும் ஏற்பட்டிருக்கிறது. இதுதவிர, தியாகராய நகரில் ரூ.85 லட்சம் மதிப்புள்ள கட்டிடத்தை சங்கத்துக்கு ரூ.1 கோடியே 45 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளது. வெளியூர்களுக்கு தலைவரும், செயலாளரும் பயணம் செய்வதற்கு லட்சக்கணக்கில் வீண் செலவு செய்யப்பட்டுள்ளது.

செயலாளர் திருட்டு வி.சி.டி. விற்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. எனவே இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள சங்க தலைவர், செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

லைகா பெயரை தூக்கிவிட்டு கத்தி புதிய போஸ்டர் இன்று வெளியாகிறது!

கத்தி படத்தின் பிரச்சினையை, சீமான் ஆலோசனைப்படி மெல்ல தீர்த்துவிட முடியும் என நம்புகிறார்கள் முருகதாஸ் அன்ட் கோ.

சீமானின் ஆலோசனைப்படி, லைகா நிறுவனத்தின் பெயரை மட்டும் தூக்கிவிட்டு படத்தை வெளியிடலாம் என முடிவு செய்து அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டனர்.

லைகா பெயரை தூக்கிவிட்டு கத்தி புதிய போஸ்டர் இன்று வெளியாகிறது!

லைகாவுக்கு பதில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தை தயாரிப்பாளராக்கியுள்ளார்கள். லைகா போட்ட பணத்தை எப்படி செட்டில் செய்தார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. அந்த செட்டில்மென்ட் முடிந்ததா அல்லது எதிர்ப்புகளைச் சமாளிக்க பெயரை மட்டும் மாற்றிக் கொண்டு, சைலன்ட் தயாரிப்பாளர்களாக லைகாகாரர்கள் தொடர்கிறார்களா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

லைகா வெளியேறிவிட்டது என்பதைக் காட்டும் வகையில், இன்று மாலை கத்தி படத்தின் புதிய போஸ்டர்களை வெளியிடவிருக்கிறார்கள்.

அதில் லைகாவுக்கு பதில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் கத்தி என்ற மாற்றத்தைச் செய்துள்ளார்களாம். மாலை 6 மணிக்கு மேல் கத்தி புதிய போஸ்டர் வெளியாகும் எனத் தெரிகிறது.

 

ராஜபக்சே மகனுடன் ஆட்டம் போட்ட சமீரா ரெட்டியை புறக்கணிக்க வேண்டும் - ஆரம்பித்தது அடுத்த சர்ச்சை

சென்னை: ராஜபக்சே மகன் நமலுடன் ஆட்டம் போட்ட நடிகை சமீரா ரெட்டியைப் தமிழ் சினிமாக்காரர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. இதனால் இலங்கைக்கு நடிகர், நடிகைகள் யாரும் செல்லக் கூடாது என தமிழ் திரையுலக கூட்டமைப்பு ஏற்கனவே தடை விதித்துள்ளது.

ராஜபக்சே மகனுடன் ஆட்டம் போட்ட சமீரா ரெட்டியை புறக்கணிக்க வேண்டும் - ஆரம்பித்தது அடுத்த சர்ச்சை

இந்த தடையை மீறி இலங்கை சென்ற நடிகை அசினை, நடிகர் சங்கம் கண்டித்தது. இன்று வரை அவரால் மீண்டும் தமிழ் சினிமாவில் கால் வைக்கவே முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சே மகன் நமல் பக்சேவுடன் நடிகை சமீரா ரெட்டி கட்டிப் பிடித்தபடி மிக நெருக்கமாக இருக்கும் படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபக்சே மகனுடன் நெருக்கமாக இருக்கும் சமீரா ரெட்டியை கண்டித்து, இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை உலகமே கண்டிக்கிறது. இந்த நிலையில், அவரது மகன் நம்லுடன் சமீரா ரெட்டி நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி, தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது. சமீரா ரெட்டியை தமிழ் திரையுலகம் புறக்கணிக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

இன்னொரு முன்னணி நடிகையான கங்கனா ரணவத்தும் (தாம் தூம் பட நாயகி) இலங்கைக்குப் போய் ராஜபக்சே மாளிகையில் விருந்துண்டு, ஆட்டம் போட்டுவிட்டு வந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நடிகை நந்தனாவுக்கு திருமணம்.. மாப்பிள்ளை வழக்கம்போல 'சாஃப்ட்வேர் எஞ்ஜினியர்'!

சென்னை: நடிகை நந்தனாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கணிப்பொறியாளரை அவர் மணக்கவிருக்கிறார்.

'கிருஷ்ணவேணி பஞ்சாலை, உயிருக்கு உயிராக ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர், நந்தனா. இந்த படங்களுக்குப்பின், இவர் புதிய படங்களில் நடிக்காமல், ஒதுங்கியிருந்தார்.

நடிகை நந்தனாவுக்கு திருமணம்.. மாப்பிள்ளை வழக்கம்போல 'சாஃப்ட்வேர் எஞ்ஜினியர்'!

இப்போது அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகன் பெயர், ஹரி. திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். கணிப்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

நந்தனா-ஹரி திருமணம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 6-ந் தேதி, திருவனந்தபுரத்தில் வைதீக முறைப்படி நடக்கிறது.இது, காதல் திருமணம் அல்ல. பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம்.

திருமணம் குறித்து நந்தனா கூறுகையில், "கடந்த ஒரு வருடமாக எனக்கு என் பெற்றோர்கள் மாப்பிள்ளை தேடி வந்தார்கள். நல்ல வரன் வந்தது. எனக்கும், என் பெற்றோர்களுக்கும் பிடித்து இருந்தது.நடித்தது போதும் என்று நிறுத்திக் கொண்டேன். திருமணத்துக்குப்பிறகும் நான் நடிக்கப் போவதில்லை,'' என்றார்.

 

திருட்டு வி.சி.டிக்கு எதிராக நானே இன்றுமுதல் களமிறங்குகிறேன்! - இயக்குநர் பார்த்திபன்

சென்னை: திருட்டு விசிடிக்கு எதிராக இன்று முதல் தாமே களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் பார்த்திபன்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்'. இப்படத்தை பார்த்திபன் இயக்கியிருந்தார். முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருந்தனர்.

ஆர்யா, விஷால், பிரகாஷ்ராஜ், விஜய்சேதுபதி, அமலாபால், டாப்சி உள்ளிட்ட பலர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர்.

படத்தைப் பார்த்த பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஆரம்பத்தில் 200 அரங்குகளில் மட்டுமே வெளியான இந்தப் படத்துக்கு, மேலும் 100 அரங்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளன.

திருட்டு வி.சி.டிக்கு எதிராக நானே இன்றுமுதல் களமிறங்குகிறேன்! - இயக்குநர் பார்த்திபன்

இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பார்த்திபனும் அந்தப் படத்தின் குழுவினரும்.

அப்போது பார்த்திபன் பேசுகையில், "கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படம் வெற்றியடைந்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. படம் பார்த்த பலர் என்னை பாராட்டுகின்றனர்.

ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும் மறுபக்கம் துக்கமும் வந்துள்ளது. இப்படம் தற்போது திருட்டு வி.சி.டி.யில் வெளியாகியுள்ளது (இரண்டு டிவிடிகளை காட்டினார்). ஒரு டிவிடி வெறும் முப்பது ரூபாய்க்கு கிடைக்கிறது. குடும்பத்தோடு பார்த்திவிடுகிறார்கள்.

திருட்டி வி.சி.டி. என்பது தற்போது பரவி வரும் எபோலா நோய் போல் ஆகிவிட்டது. இந்நோய்க்கு மருந்து இல்லாதது போல் திருட்டி வி.சி.டி.யும் ஒழிக்க முடியாத ஒன்றாகி வருகிறது. ஆனால் நான் அதை விடமாட்டேன்.

பக்கத்து மாநிலங்களில் எங்கும் திருட்டு விசிடியே இல்லை.

நானே நேரடியாக களத்தில் இறங்குகிறேன். நாளையே அந்த கடைகளுக்குப் போய் திருட்டி வி.சி.டி. தயாரிப்பவர்களை போலீஸ் துணையோடு பிடிக்க போகிறேன். இப்படம் எப்படி திருட்டு வி.சி.டி.யில் வந்தது என்று கண்டறிய ஒரு தனி குழு இருக்கிறது. என்ன.. அதற்கு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். கொஞ்சம் கூடுதல் நஷ்டம்தான்.

இந்த டிவிடிகள் ஏதோ ஒரு தியேட்டரின் துணையோடுதான் தயாராகின்றன. அதைக் கண்டுபிடித்து, அந்த அரங்கை தடை செய்ய வேண்டும்," என்றார்.

திருட்டு விசிடி வர முக்கிய காரணம் வெளிநாடுகளுக்கு படத்தை முன்கூட்டியே அனுப்புவதுதான். வெளிநாட்டு உரிமையை விற்காமல் நிறுத்தி வைக்கலாமே? என்று பார்த்திபனிடம் கேட்டபோது, 'இந்த முறை வெளிநாட்டுக்கு பிரதிகளை அனுப்பும்போது மிகுந்த கவனத்துடன் இருந்தோம். ஒரு வாரம் முன்பு டம்மி பிரிண்டை அனுப்பினேன். ரிலீசுக்கு ஒரு நாள் முன்புதான் உண்மையான பிரதியை அனுப்பினேன். எனவே வெளிநாட்டிலிருந்து திருட்டு விசிடி வரவில்லை," என்றார்.

அரசிடம் ஏன் சரியாக முறையிடவில்லை? சினிமாக்காரர்களுக்குள் ஒற்றுமையில்லையே?

முறையிட்டுக் கொண்டுதான் உள்ளோம். ஆனால் சினிமா சங்கங்கள், தயாரிப்பாளர்களுக்குள் ஒற்றுமை இல்லாததுதான் இந்த நிலைக்குக் காரணம் என்ற கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். இதையெல்லாம் சரிப்படுத்தி, விரைவில் அரசிடமும் ஒரு கோரிக்கை வைக்கவிருக்கிறோம்.

 

இந்திரா காந்தி படுகொலை பற்றிய திரைப்படத்தை திரையிட முடியாது - சென்சார் போர்டு தடை

டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை மையமாக கொண்டு இயக்கப்பட்ட பஞ்சாபி திரைப்படமானது திரையிடுவதற்கு தகுதியான நிலையில் இல்லை. எனவே அதை திரையிட முடியாது என்று மத்தி சென்சார் போர்டு அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து இப்படம் இன்று திரையிடப்படவில்லை. முன்னதாக இப்படம் குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தன. இதையடுத்து இப்படத்தை மத்திய உள்துறை, செய்தி ஒளிபரப்புத்துறை மற்றும் சென்சார் போர்டு அதிகாரிகள் கூட்டாக பார்த்தனர். அதன் பின்னர் இப்படத்தைத் திரையிட்டால் வட மாநிலங்களிலும் பிற பகுதிகளிலும் பெரும் மோதல் ஏற்படலாம். எனவே இதைத் திரையிட அனுமதிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

இந்திரா காந்தி படுகொலை பற்றிய திரைப்படத்தை திரையிட முடியாது - சென்சார் போர்டு தடை

முன்னதாக பஞ்சாப் மாநிலத்தினைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியின் தலைவர்கள் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் இ்ந்தப் படத்திற்கு லஞ்சம் கொடுத்து சென்சார் சான்றிதழ் வாங்கப்ட்டதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து சென்சார் குழுவின் தலைவரான ராகேஷ் குமார், கடந்த திங்களன்று மும்பையில் கைது செய்யப்பட்டார்.

"காம் தே ஹேரே" என்னும் அப்படம் ஆங்கிலத்தில் டைமண்ட் ஆப் தி கம்யூனிட்டி என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தில் 1984 ஆம் ஆண்டு, இந்திரா காந்தியினை சீக்கிய பாதுகாவலர் சுட்டுக் கொன்ற சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திராவைச் சுட்டவர்களைப் புகழ்வது போலவும் இப்படம் அமைந்துள்ளது.

இப்படம் பற்றி இயக்குனர் ரவீந்தர் ரவி, "இப்படத்தில் ஹீரோக்களும் இல்லை, வில்லன்களும் இல்லை" என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்படத்திற்கு நிரந்தர தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சென்னையை சாக்கடைகள் கொண்ட நகராக மாற்றிய அவப்பெயர் நம் தலைமுறைக்கு உண்டு!- கமல்

சென்னை: இன்று 375 வது பிறந்த நாள் காணும் சென்னை மாநகருக்கு நடிகர் கமல் ஹாஸன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2004-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 22-ந் தேதியிலிருந்து சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை மாநகரம் பிறந்து 375 ஆண்டுகள் ஆவதையொட்டி, சமூக வலைத்தளங்களில் அவரவர் உணர்ச்சிகரமாக கருத்திட்டு வருகின்றனர். இந்த சென்னை தினத்தை முன்னிட்டு நடிகர் கமல் ஹாஸன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னையை  சாக்கடைகள் கொண்ட நகராக மாற்றிய அவப்பெயர் நம் தலைமுறைக்கு உண்டு!- கமல்

ஒரு கடற்கரை கிராமமாக தொடங்கி, கிழக்கிந்திய கம்பெனி, போர்த்துகீசியர், டச்சு, பிரெஞ்சு போன்ற பலர் படையெடுத்து வெல்ல முயன்று கடைசியில் ஆங்கிலேயர் தக்க வைத்துக்கொண்ட ஒரு அழகான தீவு.

இரண்டாற்றின் கரை என்று ஸ்ரீரங்கத்தை சொல்வார்கள். சென்னையும் இரண்டாற்றின் கரைதான். அதற்கு இன்று 375 வயதாகி இருக்கிறது. இந்த இளம் தாயை, இரு நதி கொண்ட இரண்டாற்றின் கரையாகிய இந்த ஊரை, இரண்டு சாக்கடைகள் கொண்ட நகரமாக மாற்றிய அவப்பெயர் நம் தலைமுறைக்கு உண்டு.

இதை மாற்றும் திறமையும் நமக்கு உண்டு. அதை செய்தால் சரித்திரத்தில் நாம் இரண்டு நதிகளை சுத்திகரித்து புதுப்பித்த வித்தகர்களாக போற்றப்படுவோம். இல்லையேல் நாம் வாழ்ந்த இக்காலத்தின் சரித்திரம் நல்ல இரு நதிகளை சாக்கடையாக மாற்றிய ஜனக்கூட்டத்தின் சரித்திரமாக எழுதப்படும்.

அதை நினைவில் கொண்டு பெற்றதை கொண்டாடுவோம், கற்றதை போற்றுவோம். பிறந்த நாள் வாழ்த்துக்கள் எனது சென்னைக்கு!

-இவ்வாறு கமல் ஹாஸன் கூறியுள்ளார்.

 

தொடரும் நடிகரின் புறக்கணிப்பு... வேறு நடிகர் பக்கம் ‘கடைக்கண்’ பார்வையை திருப்பிய நடிகை!

திமிரான நாயகனின் இரண்டு படங்களில் தொடர்ந்து நாயகியானார் யானை நடிகை. இதனால் நடிகருக்கும், அம்மணிக்கும் இடையில் ‘இல் தக்க சையா' என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பள்ளிப் படிப்பையே இன்னும் முடிக்காத நாயகியும், தன் உயரத்திற்கு ஏற்ற ஆஜானுபாகுவான நடிகர் இவர் தான் என மேடைகளில் புகழ்ந்து தள்ளினார்.

திடீரென இருவருக்கும் இடையில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. தனது அடுத்த படத்தில் உலக நடிகரின் வாரிசை தனக்கு ஜோடியாக்கினார் நடிகர். சரி, அடுத்த படத்திலாவது மீண்டும் நடிகருடன் ஜோடி சேரலாம் என நினைத்திருந்தார் நடிகை.

ஆனால், தனது புதிய படத்திலும் நடிகையை நடிக்க வைக்கும் எண்ணமில்லையாம் நடிகருக்கு. இதனால், லேசாக அப்செட் ஆனார் நடிகை. இது தொடர்பாக பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பிப் பார்த்தாராம். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை.

எனவே, தனது வழியை மாற்றிக் கொண்டார் நடிகை. இதனால், சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் விரல் நடிகரைப் புகழ்ந்து தள்ளி விட்டார். நான் பார்த்ததிலேயே இப்படி ஒரு நடிகரைப் பார்த்ததில்லை. எவ்வளவு அழகாக நட்பாக பழகுகிறார் என இமயமலை ரேஞ்சுக்கு ஐஸ் மழை பொழிந்துள்ளார்.

பார்ப்போம்... நடிகை கஷ்டப்பட்டு பேசியதற்கு கை மேல் பலன் கிடைக்கிறதா என்று.

 

நான் விக்ரமின் ரசிகன்: அபிஷேக் பச்சன்

நடிகர் விக்ரமின் தீவிர ரசிகன் நான் என்று இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.

சமீபத்தில் சென்னை வந்திருந்த அபிஷேக் பச்சன், நடிகர் விக்ரம் பற்றியும், தான் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பது பற்றியும் கூறியுள்ளார்.

"விக்ரம் நடித்த 'சாமி' படத்தை சத்யம் தியேட்டரில் முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன். 'தூள்' படத்தை 17 முறை பார்த்திருக்கிறேன். விக்ரமுடன் நடிப்பது ஒரு சுவாரஸ்யமான அனுபவம்.

நான் விக்ரமின் ரசிகன்: அபிஷேக் பச்சன்

இந்தியில் 'ராவண்' படத்தில் நான் ராவண் கதாபாத்திரத்தில் (கதை நாயகன்) நடிக்க, விக்ரம் ராம் கதாபாத்திரத்திலும் நடித்தார்.

தமிழில் ராவணன் படத்தில் நான் ராம் பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என மணிரத்னம் கேட்டுக் கொண்டார். ஆனால், நான் அதனை மறுத்து, எனது நிலமையை மணி சாரிடம் விளக்கினேன் (தமிழில் பிருத்விராஜ் அந்த பாத்திரத்தில் நடித்துள்ளார்)

ஐஸ்வர்யா ராய் 'இருவர்' படத்தின் மூலம்தான் அறிமுகம் ஆனார். அதனால் அவருக்கு தமிழில் நடிப்பது எளிதாக உள்ளது. நான் சிறுவனாக இருந்தபோது, சாப்பிடும் நேரத்தில் சினிமாவைப் பற்றி பேச மாட்டார் என் அப்பா. ஆனால், இப்போது அப்படி இல்லை. எங்கள் வீட்டில் நான்கு நடிகர்கள் இருக்கின்றோம். எனவே நாங்கள் பார்த்த / நடிக்கும் படங்களைப் பற்றி சாப்பிடும்போது பேசுகிறோம்.

ஆராத்தியாவோடு (மகள்) இருக்கும் பொழுது அவளிடம் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
நான் நடிக்கும் கதாபாத்திரங்களை கவனத்துடன் தேர்ந்தெடுக்கிறேன். ஆபாசமான காட்சிகளை முடிந்தவரை தவிர்க்கிறேன். பிற்காலத்தில் ஆராத்தியா 'என் தந்தை ஏன் இந்த மாதிரியான படங்களில் நடித்திருக்கிறார்' என நினைத்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்."

அபிஷேக் தமிழ் படங்களில் நடிப்பதற்கு இப்போது மிகுந்த ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். " என்னால் இப்போது ‘வணக்கம்' என்ற வார்த்தையைத் தாண்டி பல வார்தைகள் தமிழில் பேச முடியும்.
நான் இங்கே பலமுறை வந்து போய்க்கொண்டு இருக்கிறேன். அதுமட்டுமில்லை என்னால் தூள் படத்தின் ‘அருவா மீசை' பாடலை முழுதாக பாட முடியும்." என்று கூறினார் அபிஷேக் பச்சன்.

அபிஷேக்பச்சன் தற்பொழுது ஷாருக்கானின் ‘ஹாப்பி நியூ இயர்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.