தமிழகத்தின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் 'ஓனர்' ஷங்கர்!


Shankar
தமிழகத்தின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் கார் உரிமையாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர்.

தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பயன்படுத்துவதில் அலாதி ஆர்வம். சிவாஜி படத்தில் கூட ஒரு காட்சியில் இந்தக் கார் வருமாறு பார்த்துக் கொண்டார்.

இந்தக் காரை புக் செய்யும் அனைவருக்கும் அதைத் தயாரிக்கும் நிறுவனம் உடனே கார்களை வழங்குவதில்லை.

தங்கள் காரை பயன்படுத்துபவர்களின் ஸ்டேடஸைப் பார்த்துதான் கார்களை ஒதுக்கும்.

இந்தியாவில் சில குறிப்பிட்ட தொழிலதிபர்களும், அமிதாப் பச்சன், அமீர்கான், தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா, சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா உள்ளிட்ட சிலரும்தான் வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் முதன் முறையாக இந்த காரை வாங்கி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர். அவருக்கு ராசியான 8 எண் வருமாறு பதிவு செய்துள்ளார். பதிவு எண் 'TN 09 BQ 0008'!
 

3 ஹிட் கொடுத்துட்டேன் - நான்தான் இப்போ நம்பர் ஒன்! - அசின்


Houseful Movie
இந்தியில் இதுவரை நான்கு படம் நடித்துள்ளேன். அவற்றில் மூன்று சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டன. இன்றைய தேதிக்கு நானே பாலிவுட்டில் நம்பர் ஒன் என சிலுப்புகிறார் நடிகை அசின்.

கஜினியில் அறிமுகமானார் பாலிவுட்டுக்கு அசின். தொடர்ந்து லண்டன் ட்ரீம்ஸில் நடித்தார். அது ஓடவில்லை. ஆனால் அடுத்த படம் ரெடியில் நடித்தார் அது பெரிய வெற்றியைப் பெற்றது.

அதன் பிறகு, அக்ஷய் குமார், ஜான் ஆப்ரகாமுடன் அசின் நடித்த ஹவுஸ்புல் படம் இப்போது வெளியாகி நல்ல வசூலைப் பெற்றுள்ளது.

ஹவுஸ்புல் படம் கடந்த 5-ந்தேதி வெளியானது. இதுவரை ரூ. 80 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இப்படமும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை தாண்டும் என்கின்றனர்.

இதுகுறித்து அசின் கூறும்போது, "இந்தியில் நான் ஏற்கனவே நடித்த இரு படங்கள் ரூ. 100 கோடி வசூல் ஈட்டின. ஹவுஸ்புல் படமும் ரூ. 100 கோடி வசூலை நெருங்குகிறது. எனவே நானும் இந்தியில் நம்பர் ஒன் நடிகையாகி விட்டேன். கரீனா கபூருக்கு இணையாக என் படங்களும் வசூல் குவிக்கின்றன. இப்போதுதான் மகிழ்ச்சியாக உள்ளது," என்றார்.
 

ஐட்டம் நடிகைகளுக்கே ஷாக் கொடுத்த அஞ்சலி- ஓவியாவின் கிளுகிளு கவர்ச்சி!


அட நாம் பார்ப்பது நிஜம்தானா... என்று நம்ப முடியாமல் பார்க்க வேண்டியிருந்தது, கலகலப்பு படத்தின் கவர்ச்சி வழியும் அந்த பாடல் காட்சியை.

இதுவரை குடும்ப குத்து விளக்காகத் திகழ்ந்த அஞ்சலியும் ஓவியாவும் ஒரு கவர்ச்சிக் கண்காட்சியே நடத்தியிருந்தனர்.

சுந்தர் சி. இயக்கியுள்ள இந்தப் படத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஒவியா, சந்தானம் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவில்தான் அந்த அம்சமான பாடலைக் காணும் 'பாக்கியம்' கிடைத்தது செய்தியாளர்களுக்கு. பாடலில் குத்துங்க எஜமான் குத்துங்க என்றெல்லாம் வரிகளை எழுதி கதிகலங்க வைத்திருந்தனர்.

விழாவில் அஞ்சலியிடம் இந்தக் கவர்ச்சிப் புரட்சி பற்றிக் கேட்டபோது, "ஏதோ நான்தான் கவர்ச்சியா நடிச்ச மாதிரி கேட்காதீங்க. மீனா காலத்தில் இருந்தே கவர்ச்சி இருக்கிறது. அழகாக காட்டுவதுதான் கவர்ச்சி. எனக்கு படத்தில் நல்ல ரோல்.. ஒரு பாடல் காட்சியில் அது போல் நடிக்க வேண்டிய இருந்ததால் நடித்தேன். அது தவறல்ல. இது வித்தியாசமான கல கலப்பான படம். நான் கலர்புல் நாயகியாக வருகிறேன்," என்றார்.

ஓவியாவிடம் உங்களுக்கும் விமலுக்கு செம கெமிஸ்ட்ரி என்கிறார்களே, என்றால், "அதெல்லாம் ஒண்ணுமில்ல. இந்தப் படத்துல விமல் இருந்தாலும் அவருக்கு நான் ஜோடி இல்லையே. எனக்கும் சிவாவுக்கும்தான் கெமிஸ்டரி," என்றார்.

சிவாவோ, "இல்லையில்லை... அஞ்சலிக்கும் ஒவியாவுக்கும்தான் கெமிஸ்ட்ரி... அவங்கதான் ரகசியமா அடிக்கடி பேசிக்கிட்டே இருந்தாங்க," என்று கலாய்த்தார்.

இயக்குனர் சுந்தர் சி. கூறும்போது, "ஒரு பாடல் காட்சியில் ரொம்ப கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று அஞ்சலியிடமும், ஓவியாவிடமும் கேட்டேன். அவர்கள் சம்மதித்தனர். அதற்கான உடைகளை கூட அவர்களே தயார் செய்தார்கள். ஒவ்வொருத்தரும் கதையை உருவாக்கும் போது கேரக்டர்களுக்கு அந்தந்த நடிகர்களை கற்பனை செய்து வைத்திருப்பார்கள்.

இந்த படத்துக்கு நான் யாரெல்லாம் நடிக்க வேண்டும் என்று கதையை உருவாக்கிய போது நினைத்தேனோ அவர்களெல்லாம் கிடைத்தனர். சிறு கேரக்டரில் நடித்தவர்கள் கூட சிறப்பாக நடித்துள்ளனர்," என்றார்.

நடிகர்கள் விமல், சிவா, நடிகை ஓவியா, இசையமைப்பாளர் விஜய் எபிநேசர், ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில்குமார், யுடிவி தனஞ்செயன் உள்பட பலரும் பங்கேற்றனர்.
 

மோகன்லாலின் விஸ்மாயா ஸ்டுடியோவில் ரஜினி & டீம்!


Rajini
கோச்சடையான் டீம் இப்போது சித்ராஞ்சலி ஸ்டுடியோவிலிருந்து மோகன் லாலின் விஸ்மாயா ஸ்டுடியோவுக்கு இடம்பெயர்ந்துள்ளது.

இங்குதான் கோச்சடையான் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கவிருப்பதாக தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் அரசுக்கு சொந்தமான சித்ராஞ்சலி ஸ்டுடியோவில் ஷூட்டிங்கை முடித்துக் கொண்ட சௌந்தர்யா, அடுத்து நடிகர் மோகன்லாலுக்குச் சொந்தமான விஸ்மாயா மேக்ஸ் அனிமேஷன் ஸ்டுடியோவில்தான் முக்கியமான வேலைகளை மேற்கொள்ளவிருக்கிறார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறுகையில், "கோச்சடையான் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விஸ்மாயா மேக்ஸில் நடக்க உள்ளது. உலகத் தரமான அனிமேஷன் தொழில்நுட்ப வசதிகள் இந்த ஸ்டுடியோவில் உள்ளன. படத்தின் முழுப் பணிகளையும் முடிக்கும் அளவுக்கு இங்கு வசதிகள் உள்ளன," என்று கூறியுள்ளார்.

ரஜினி - தீபிகா படுகோன் இருவருமே இப்போது திருவனந்தபுரத்தில் உள்ளனர். ஷூட்டிங் முடிந்ததும் நேராக நவீன கேரவனுக்குச் சென்றுவிடுகிறார் சூப்பர் ஸ்டார். பொதுவாக கேரவனை பயன்படுத்தாத அவர், இந்த முறை க்ளைமேட் மற்றும் மீடியா பரபரப்பை கருத்தில் கொண்டு பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.

படத்தின் காட்சிகளை யாராவது சுட்டு இணையத்தில் வெளியிட்டுவிடப் போகிறார்கள் என்ற முன்யோசனையுடன், இந்த ஸ்டுடியோவில் உள்ள யாரும் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வார இறுதியில் படப்பிடிப்புப் பணிகள் முடிந்துவிடும் என்கிறார்கள். அடுத்து முழுக்க முழுக்க போஸ்ட் புரொடக்ஷன் வேலைதான்.
 

கமிஷனர் அலுவலகத்தில் எஸ்ஏசி மனு - 'எங்களை நீக்கியது செல்லாது'!


SA Chandrasekaran
பட அதிபர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.தாணு, தேனப்பன் ஆகியோர் போலீஸ் கமிஷனர் திரிபாதியை நேற்று மாலை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணனையும் சந்தித்து பேசினார்கள்.

பின்னர் வெளியில் வந்த அவர்கள், நிருபர்களை சந்தித்தார்கள். அப்போது எஸ்ஏ சந்திரசேகரன் கூறுகையில், "தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் நாங்கள். எங்கள் சங்கத்தில் 750 தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நான் 320 ஓட்டுகள் வாங்கி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன்.

எங்களை நீக்கி இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இது விளையாட்டு சமாச்சாரம் அல்ல. 15 நாட்களுக்கு முன்பு நோட்டீசு கொடுத்துதான் யாரையும் நீக்க முடியும். சங்கத்தின் செயல்பாடுகள் நடக்க வேண்டும்.

அது குறித்து கமிஷனரிடம் பேசினோம். நாங்கள் பாதுகாப்பு கேட்கவில்லை. எங்களுக்குள் பகை இல்லை. எங்கள் பிரச்சினையை நீதிமன்றம் தீர்த்து வைக்கும்," என்றார்.