பிரஷாந்தால்தான் ப்ளஸ் டூவில் குறைந்த மதிப்பெண் பெற்றேன்!- நா முத்துக்குமார்

பிரஷாந்தால்தான் ப்ளஸ் டூவில் நான் குறைந்த மதிப்பெண் பெற்றேன் என்றார் நா முத்துகுமார்.

பிரஷாந்த் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘சாஹசம்'. இதில் பிரசஷாந்த்துக்கு ஜோடியாக ஆஸ்திரேலிய அழகி அமண்டா நடிக்கின்றார்.

Na Muthukumar's speech at Sahasam audio launch

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேபில் நடந்தது. இதில் நடிகர் பிரஷாந்த், தயாரிப்பாளர் தியாகராஜன், நா.முத்துக்குமார், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

விழாவில் நா.முத்துக்குமார் பேசும்போது ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச் சொன்னார்.

"நான் பிளஸ்-2 படிக்கும் போது பிரஷாந்த் நடித்த ‘வைகாசி பொறந்தாச்சு' படம் வெளியானது. இந்த படத்தை பிரஷாந்த்திற்காக பத்து தடவை, தேவாவிற்காக பத்து தடவை என பல முறை இப்படத்தை பார்த்திருக்கிறேன். நான் பிளஸ்-2வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததற்கு பிரஷாந்த்தான் காரணம். எனக்கும் பிரஷாந்திற்கும் ஒரு வயதுதான் வித்தியாசம் இருக்கும். நான் படிக்கும் போது, பிரஷாந்த் போல் ஹேர் ஸ்டைல் இருக்கும். இப்போது ஸ்டைலும் இல்லை, ஹேரும் இல்லை.

நான் முதலில் சீமான் நடித்த ‘வீரநடை' படத்திற்குதான் பாடல்கள் எழுத ஆரம்பித்தேன். அதன் பிறகு பிரஷாந்த் நடித்த ‘ஹலோ' படத்தில் இடம் பெற்ற ‘சலாம் குலாமு...' என்ற பாடலை எழுதினேன். இப்படம் பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது. இப்பாடலின் வெற்றிக்குப் பிறகுதான் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன," என்றார் முத்துக்குமார்.

 

இனி இடைவெளி இருக்காது, அடிக்கடி என் படங்கள் ரிலீசாகும்!- பிரஷாந்த்

இனி எனது படங்கள் வெளியாவதில் பெரிய இடைவெளி இருக்காது. தொடர்ந்து என் படங்கள் வெளியாகும் என்றார் நடிகர் பிரஷாந்த்.

அருண்ராஜ் வர்மா இயக்கியுள்ள சாஹசம் பட இசை வெளியீட்டு விழாவில் பிரஷாந்த் பேசுகையில், "இங்கு பேசியவர்கள் எனது படங்கள் வெளியாவதில் நீண்ட இடைவெளி ஏற்பட்டதாக கூறினார்கள். பொன்னர் சங்கர் படம், மலையூர் மம்முட்டியான் படங்கள் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடந்தது. இதனால் அடுத்த படங்களில் நடிக்க முடியவில்லை. அந்த படங்கள் வித்தியாசமானவை.

Prashant assures to release his movies frequently

இப்போது நான் நடித்திருக்கும் ‘சாஹசம்' முற்றிலும் மாறுபட்ட படம். தமன் இசையில் 5 பாடல்களும் சிறப்பாக வந்து இருக்கிறது. அதற்கான நடன காட்சிகளும் வெளிநாடுகளில் அழகாக படமாக்கப்பட்டுள்ளன.

படத்துக்கு அதிக செலவு ஆனது பற்றி எனது தந்தை தியாகராஜன் கவலைப்படவில்லை. தாராளமாக செலவு செய்தார்.

நான் 17 வயதில் நடிக்க வந்தேன். இப்போது ஒன்றும் அதிக வயது ஆகிவிடவில்லை. இந்த படத்தில் நாசர், தம்பி ராமையா, மதன்பாபு, ரோபோ சங்கர், பிரியதர்ஷினி உள்பட அனைவரும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது.

இந்த படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பேன். இனி எனது படங்கள் தொடர்ந்து வரும்," என்றார்.

தியாகராஜன் பேசும் போது, "வெற்றி பெற்ற பல மொழி படங்கள் எங்கள் கைவசம் உள்ளன. அவற்றை தொடர்ந்து ரீமேக் செய்து வெளியிடுவேன். அதில் பிரசாந்த் நடிப்பார். இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. இசை சிறப்பாக உள்ளது," என்றார்.

நிகழ்ச்சியில் ஆற்காடு நவாப், ஜெர்மன், தாய்லாந்து தூதர்கள், டைரக்டர் அருண் குமார் சர்மா, இசை அமைப்பாளர் தமன் ரோகினி, நா.முத்துகுமார், உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். ரோபோசங்கர் தொகுத்து வழங்கினார்.

 

முதல் முறையாக விஜய்யுடன் இணையும் மொட்டை ராஜேந்திரன்!

இப்போதெல்லாம் மொட்டை ராஜேந்திரன் இல்லாத படங்களே இல்லை என்றாகிவிட்டது. வில்லனாக இருந்தவர், இப்போது முழு நேர காமெடியனாகிவிட்டார்.

கவுண்டமணியிடம் குட்டு வாங்கியதன் மூலம், இன்றைய நகைச்சுவை நடிகர்கள் பலருக்கும் கிடைக்காத வாய்ப்பையும் பெற்றுவிட்டார்.

Mottai Rajendiran joins with Vijay

இப்போது அடுத்த புரமோஷன்... விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

அட்லீ இயக்கும் புதிய படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருடன் நான் கடவுள் ராஜேந்திரனும் போலீசாக நடிக்கிறார். அதாவது போலீஸ் அதிகாரி விஜய்க்கு கார் ட்ரைவர் வேடம் இவருக்கு.

இதுவரை விஜய்யின் எந்தப் படத்திலும் ராஜேந்திரன் நடித்ததில்லையாம். அதுவே அவருக்கு கூடுதல் தகுதியாகவும் இருந்ததால், உடனே அவரை படத்தில் பயன்படுத்திக் கொண்டாராம் இயக்குநர்.

விஜய் - ராஜேந்திரன் கூட்டணியில் வித்தியாசமான நகைச்சுவைக் காட்சிகளை நீங்கள் எதிர்ப்பார்க்கலாம் என்கிறார் இயக்குநர்.

 

துல்கர் சல்மானுக்கு ஓகே சொன்ன ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி?

சென்னை: நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

கோலிவுட்டில் இருந்து சென்று பாலிவுட்டில் செட்டிலான நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி நடிகையாகத் தயாராகிவிட்டார். தாயுடன் சேர்ந்து பொது நிகழ்ச்சிகளுக்கு வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவரைத் தேடி பட வாய்ப்புகள் வருகின்றபோதிலும் அவர் இதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளாமல் இருந்தார்.

Jhanvi Kapoor to act with Dulquer Salman?

இந்நிலையில் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலியின் தந்தை கே.வி. விஜயேந்திர பிரசாத் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானை வைத்து படம் ஒன்றை எடுக்கிறாராம். அந்த படத்தில் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க ஜான்வியை கேட்டுள்ளாராம் பிரசாத். ஜான்விக்கும் கதை பிடித்துவிட்டது என்று கூறப்படுகிறது.

இந்த படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் மூலம் துல்கர் சல்மான் பாலிவுட் செல்கிறார். ஓ காதல் கண்மணி படம் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்த துல்கர் தற்போது தமிழில் ஒரு படத்திலும், மலையாளத்தில் 2 படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகை அமலாவின் மகன் அகில் ஜோடியாக ஜான்வி அறிமுகமாவார் என்று கூறப்பட்டது. ஆனால் அகில் படத்தில் நடிக்க ஜான்வி ஒப்புக்கொள்ளவில்லை.

 

ஒரு தலைப்பை அறிவிக்க இத்தனை அக்கப்போரா?

தல 56, அஜீத் 56, ஆரவாரம் என ஆளாளுக்கு தோன்றினபடி அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் அஜீத்தின் அடுத்த படத்தை. இன்னும் ஒரு மாதத்துக்குள் படம் வெளியாகவிருக்கும் சூழலில், இன்னும் கூட அந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவித்தபாடில்லை.

விநாயகர் சதுர்த்தியன்று இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகும் என கூறியிருந்தனர். குறிப்பாக அன்று பிற்பகல் 1 மணிக்கு பெரும் விருந்து ரசிகர்களுக்காக காத்திருப்பதாக ட்விட்டரில் கூறியிருந்தனர்.

Extraordinary delay in releasing Thala 56 title

ஆனால் அன்று எதுவுமே வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.

அன்றைய தினத்தில் கோலிவுட்டின் ஜாம்பவான்களான ரஜினி, கமல் ஆகியோர் படங்களின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகவிருந்ததால், அவர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு, தனது படத்தின் போஸ்டரை அஜித் வெளியிட விரும்பவில்லை என்று இப்போது விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

சரி.. அதான் கபாலி, தூங்காவனமெல்லாம் வெளியாகிவிட்டதே.. இனி இந்த 56வது பட தலைப்பு, பர்ஸ்ட் லுக்கை வெளியிடலாமே!

 

வரதட்சணை புகார்.. நடிகர் கிருஷ்ணாவின் வேண்டுகோள்!

சென்னை: மனைவியின் வரதட்சணை புகார் தொடர்பான விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு தருவேன். இதுகுறித்த செய்திகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன், என்று நடிகர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

நான் சினிமாவில் தடம் பதித்த நாள் முதல் இன்று வரை எனக்கு அளவில்லா ஆதரவையும் அன்பையும் அளித்தவர்கள் நீங்கள்.

Dowry case: Actor Krishna's statement

சற்றும் எதிர்பாராவிதமாக என்மீது வழக்கு தொடரப்பட்டு உயர்நீதிமன்றத்தின் படி இருவருக்குமிடையே சமரச பேச்சு வார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. எங்கள் இருவருக்குமான விவாகரத்து வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நம் நாட்டின் சட்ட வீதிமுறைகளை மதிப்பவன் நான். எனவே இவ்வழக்கினை உரிய முறையில் விசாரிக்க எனது முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன்.

இது என் தனிப்பட்ட விஷயம் என்பதால் ஊடகத்திலுள்ள என் நண்பர்களும் மற்றவர்களும் என் அந்தரங்கத்தை மதித்து எனக்கு உதவு வேண்டும் என்பதையே விரும்புகிறேன். ஏனென்றால் இது என்னை நேசிக்கும் பலரை பாதிக்கிறது.

தொடரும் உங்கள் ஆதரவுக்கும் புரிதலுக்கும் நன்றி," என்று கூறியுள்ளார்.