நாய்கள் ஜாக்கிரதை சக்சஸ் பார்ட்டியில் நாய்க்கு இடமில்லை!!

சிபிராஜ் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். காரணம்... அவர் நம்பிய நாய் அவருக்கு புது வாழ்க்கை கொடுத்திருக்கிறது சினிமாவில்.

சத்யராஜ் மகனாக இருந்தாலும், சினிமாவில் நிலையான ஒரு இடத்தைப் பிடிக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்தார் சிபி.

நாய்கள் ஜாக்கிரதை சக்சஸ் பார்ட்டியில் நாய்க்கு இடமில்லை!!  

திருமணத்துக்குப் பிறகு ஏராளமான கதைகளைக் கேட்டவர் கடைசியாக, நாணயம் படத்தின் இயக்குநர் சக்திராஜன் சொன்ன நாய்கள் ஜாக்கிரதை கதைக்கு ஓகே சொல்லி நடித்து, தயாரித்து வெளியிட்டார்.

படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் சமீபத்தில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வெற்றி விருந்து அளித்தார்கள் சத்யராஜும் சிபிராஜும்.

இதில் திரையுலகினர் கலந்து கொண்டனர். நடிகர்கள் கார்த்தி, விஜய் ஆன்டனி, ஷாம், ஸ்ரீகாந்த், சாந்தனு, சுப்பு பஞ்சு, பிரசன்னா, இயக்குநர்கள் லிங்குசாமி, பார்த்திபன், சிபிராஜ் மனைவி ரேவதி உள்ளிட்டோர் இந்த விருந்தில் பங்கேற்றனர்.

படத்தின் வெற்றிக்குக் காரணமான நாயை மட்டும் விருந்தில் காணோம்!

 

ஜெய்க்கு ‘புகழ்’ ஜாஸ்தியாகுதே?

ஜெய்க்கு ‘புகழ்’ ஜாஸ்தியாகுதே?  

பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இளையதளபதி விஜய் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் படமெடுப்பதற்காக பதிவு செய்திருந்த டைட்டில்தான் 'புகழ்'. ஆனால் அதன்பின்னர் சில காரணங்களால் விஜய் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அந்த டைட்டிலை புதுப்பிக்க மறந்துவிட்டார். எனவே அந்த டைட்டிலை தற்போது இயக்குனர் மணிமாறன் தனது அடுத்த படத்திற்காக கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஜெய் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘புகழ்'. இந்த படத்தைப் பற்றி கூறிய தயாரிப்பாளர் சுஷாந்த் போது,‘ நம் வாழ்வில் நாம் எப்போதும் அறிந்தோ, அறியாமலோ ஜெயிக்க வாய்ப்பில்லை என கருதபடுபவர் ஜெயிக்க வேண்டும் என ஆசை படுவதுண்டு.

அவர்களின் வெற்றியில் நாம் நம்மை காண விழைவது உண்டு.'புகழ்' நாம் வாழ்வில்நாம் சந்திக்கும் அத்தகைய ஒரு நபரை பற்றிய கதை. கதாநாயகன் ஜெய் மற்றும் மற்றும் இயக்குனர் மணிமாறன் அந்த உணர்வுகளை பிரமாதமாகவெளிப்படுத்தி உள்ளார்கள் என்றார்.

கதாநாயகிக்கான தேர்வு நடை பெரும் போது பல்வேறு பெயர்கள் பரிசீலனையில் இருந்தது. ஆனால் இறுதியில் அந்த பாத்திரத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் ‘இவன் வேற மாதிரி' படத்தில் நடித்த சுரபிதான் அவர் அந்த பாத்திரத்துக்கு மிக சரியான தேர்வு என கண்டுபிடித்தோம் என்றார்.

‘இது ஒரு ஆக்சன் திரில்லர் படம் என்கிறார் இயக்குனர் மணிமாறன். புகழ் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது. வெற்றி வேண்டும் என முனைப்போடு செயல்படுகிறோம் என்று கூறியுள்ளார் மணிமாறன்.

பிலிம் டிபார்ட்மென்ட் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சுஷாந்த் பிரசாத் மற்றும் கோவிந்தராஜ் தயாரிக்கும் இந்த படத்தை ரேடியன்ஸ் மீடியா சார்பில் வெளியிடவிருப்பவர் தயாரிப்பாளர் வருண் மணியன்.

புகழ் படத்தின் கதாநாயகி தேர்வில் முதலில் இருந்தவர் திரிஷாவாம். தன் மனம் கவர்ந்த மங்கை தன் தயாரிப்பிலேயே நடிப்பதா என்று கடைசி நிமிடத்தில் கலங்கிய வருங்கால மணாளன் வருண் மணியன் சட்டென்று கதாநாயகியை மாற்றிவிட்டதாக கோடம்பாக்கம் முழுவதும் இப்போது பேச்சு அடிபடுகிறது.

சராசரியான வாலிபன் மற்றும் அப்பாவியான கதாபாத்திரங்களில் சோபிக்கும் ஜெய் சமீபமாக அதிரடி ஆக்க்ஷன் படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். புகழ் படமும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது.

ஜெய் தற்போது அர்ஜூனன் காதலி, தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும், வலியவன் போன்ற படங்களில் நடித்துவருகிறார். இதில் அர்ஜூனன் காதலி படம் விரைவில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தசைச் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய நெப்போலியன்!

திருநெல்வேலி: முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன் தனது 51வது பிறந்த நாளை திருநெல்வேலி அருகே உள்ள மயோம்பதி மருத்துவமனையில் கொண்டாடினார்.

இப்போதைய நடிகர்களில் அடுத்தடுத்து பெரும் பதவிகளில் இருந்த பெருமை நெப்போலியனுக்கு மட்டும்தான் உண்டு. நடித்துக் கொண்டிருந்தபோதே வில்லிவாக்கம் தொகுதியின் எம்எல்ஏ ஆனார். அடுத்து, பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் எம்பியானார். தொடர்ந்து மன்மோகன் சிங் அமைச்சரவையில் ஆற்றல் மேம்பாடு மற்றும் இளைஞர் நலத் துறையின் இணை அமைச்சரானார்.

தசைச் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய நெப்போலியன்!

பதவியிலிருந்த காலத்தில் எந்த சிறு குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல் கவுரவம் காத்துக் கொண்டவர் நெப்போலியன்தான்.

அமைச்சர் பதவியிலிருந்து விலகியதுமே, அரசியலிலிருந்து முழுவதுமாக விலகிய நெப்போலியன், தசைச் சிதைவு நோய் பாதித்த தன் மகன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். மகனின் நலன் கருதி அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

இப்போது மீண்டும் சென்னைக்கு வந்துள்ளார் நெப்போலியன். குடும்பம் அமெரிக்காவிலிருந்தாலும், படங்களில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார். ஏற்கெனவே ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில் பலரும் அவரை அணுகி கதை கூறி வருகின்றனர். பொருத்தமான, கவுரவமான வேடங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்துள்ளதால், தனக்கேற்ற கதைகளாகக் கேட்டு வருகிறார்.

கடந்த முறை தன் பிறந்த நாளை அமெரிக்காவில் கொண்டாடிய நெப்போலியன், இந்த முறை தமிழகத்தில் கொண்டாடினார். இது அவருக்கு 51வது பிறந்த நாள்.

இந்த நாளை அவர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வீரவநல்லூரில் கட்டியுள்ள மயோபதி தசைத் திறன் குறைபாடு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

மாவீரன் நெப்போலியன் ரசிகர் மன்றத் தலைவர் கவுரி சங்கர், செயலாளர் மாந்துறை ஜெயராமன், பொருளாளர் சீதாராமன், நேர்முக உதவியாளர் பி சத்யா, நெல்லை மாவட்டத் தலைவர் காந்தி பாண்டியன், மதுரை பாலன், சேலம் ஆத்தூர் ஜோ, கடலூர் பாலு, தேனி ராஜ்குமார் ஆகியோர் நெப்போலியனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நெப்போலியன் பிறந்த நாளையொட்டி மருத்துவமனையிலிருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

 

ஜெயலலிதா படித்த பள்ளியில் டீச்சராகிவிட்ட நடிகை தேவயானி!

சென்னையின் பிரபபல பள்ளிகளில் ஒன்றான சர்ச் பார்க் கான்வென்டில் ஆசிரியையாக பணியில் சேர்ந்துள்ளார் பிரபல நடிகை ஜெயலலிதா படித்த பள்ளியில் டீச்சராகிவிட்ட நடிகை தேவயானி!  

திருமணமாகி, படங்களில் வாய்ப்புக் குறைந்ததும் சொந்தப் படம் எடுத்தார். அது கையைச் சுட்டுவிட, தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர், பின்னர் டிவியில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

இப்போது சர்ச் பார்க் கான்வென்டில் ஆசிரியையாக வேலைப் பார்க்கிறார் டிவியில் நடித்துக் கொண்டே அஞ்சல் வழியில் ஆசிரியப் பயிற்சியை முடித்துள்ளார். அதற்கான செயல்முறைத் திட்டத்தை சர்ச் பார்க்கில்தான் முடித்தாராம். அதே பள்ளியில் வேலைக்கும் விண்ணப்பித்துள்ளார். ஒரு பணியிடம் காலியானதுமே அந்த வேலையை தேவயானிக்குக் கொடுத்துவிட்டார்களாம்.

ஆசிரியப் பணி குறித்து தேவயானி கூறுகையில், "இது எனக்கு நிறைவாக உள்ளது. பணம் மட்டுமே வாழ்க்கையல்ல. மன நிறைவு முக்கியம். இந்த வேலையில் என் பொறுப்பில் 45 குழந்தைகள் உள்ளனற். அவர்களுக்கு பாடம் எடுப்பது மனநிறைவு தருகிறது," என்கிறார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்தப் பள்ளியில்தான் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எங்கப்பாவுக்கு ஒரு கின்னஸ் தாங்கப்பா.. ப்ளீச்.. ப்ளீச்!.... கோரிக்கை வைக்கும் ஷ்ரத்தா கபூர்

மும்பை: எனது தந்தை சக்தி கபூர் 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இது ஒரு சாதனை, அசாத்தியமானது. எனவே அவருக்கு கின்னஸ் சாதனை அமைப்பு கின்னஸ் சாதனை படைத்தவர் என்ற அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்று நடிகை ஷ்ரத்தா கபூர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பழம்பெரும் இந்தி நடிகரான சக்தி கபூரின் மகள்தான் ஷ்ரத்தா கபூர். பல படங்களில் வில்லனாக, காமெடியனாக நடித்தவர் சக்தி கபூர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அவர் நடித்து வருகிறார்.

எங்கப்பாவுக்கு ஒரு கின்னஸ் தாங்கப்பா.. ப்ளீச்.. ப்ளீச்!.... கோரிக்கை வைக்கும் ஷ்ரத்தா கபூர்

தற்போது 56 வயதாகும் சக்தியின் மகளான ஷ்ரத்தாவும் பாலிவுட்டில் நடிகையாக வலம் வருகிறார். தனது தந்தைக்கு கின்னஸ் சாதனை விருது வழங்க வேண்டும் என்று ஷ்ரத்தா கோரிக்க வைத்துள்ளார்.

என் அப்பா 700 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். நிச்சயம் இது கின்னஸ் சாதனையாகும். எனவே அவருக்கு கின்னஸ் அமைப்பு விருது வழங்கிக் கெளரவிக்க வேண்டும்.

யாருமே இவ்வளவு படங்களில் நடித்ததில்லை. எனவே கட்டாயம் இது கின்னஸ் சாதனைதான் என்று அடித்துக் கேட்கிறார் ஷ்ரத்தா. வில்லத்தனத்துடன் காமெடியைக் கலந்து கொடுத்து கலக்கிய நடிகர் சக்தி கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நடிகையைக் கன்னத்தில் அறைந்த விவகாரம் - சுஷ்மிதாசென் கடும் கண்டனம்

மும்பை: நடிகை கெளஹர் கானை ஒரு ரசிகர் கன்னத்தில் அறைந்து, அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்ட சம்பவத்திற்கு நடிகை சுஷ்மிதா சென் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டார் பிளஸ் டிவியின் ரா ஸ்டார் நிகழ்ச்சியின்போது நடிகை கெளஹர் கானை நோக்கி ஓடி வந்த ஒரு ரசிகர், அவரது கன்னத்தில் பளார் பளார் என அறைந்தார். மேலும் அவரது உடலைத் தொட்டும் அநாகரீகமாக நடந்து கொண்டார்.

இதனால் நிகழ்ச்சி அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவரை போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் முகம்மது அகில் மாலிக் என்று தெரிய வந்தது.

நடிகையைக் கன்னத்தில் அறைந்த விவகாரம் - சுஷ்மிதாசென் கடும் கண்டனம்

அவரிடம் போலீஸார் ஏன் தாக்கினார் என்று விசாரித்தபோது, கெளஹர் கான் ஒரு முஸ்லீம் பெண். அரைகுறையாக ஆடை அணிந்து அவர் வந்ததை என்னால் ஏற்க முடியவில்லை. இப்படிப்பட்ட டிரஸ்ஸில் அவர் வரக் கூடாது. இதனால்தான் அவரை நான் அடித்தேன் என்றார். மாலிக்கை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் நடிகை சுஷ்மிதா சென் இந்த சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், மதத்தின் பெயரால் உடைக் கட்டுப்பாடு என்பது ஏற்க முடியாதது. ஒரு பெண்ணை இதுபோல அவமரியாதை செய்வது நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற செயல் இனியும் தொடரக் கூடாது. சம்பந்தப்பட்ட நபர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் சுஷ்மிதா சென்.

 

ரஜினியின் அடுத்த படம்... ஷங்கர் இயக்குகிறார்?

ரஜினியின் லிங்கா படம் முடிந்து, அதன் ரிலீஸ் கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. ரசிகர்கள் படத்தை வரவேற்கும் வேலைகளில் மும்முரமாக உள்ளனர்.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்த செய்திகள் மீடியாவில் உலா வர ஆரம்பித்துவிட்டனர்.

ரஜினியின் அடுத்த படம்... ஷங்கர் இயக்குகிறார்?

ரஜினி லிங்காவை முடித்ததும், தன் அடுத்த படத்தை மீண்டும் ரவிக்குமாருக்கே தரப் போகிறார் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் ஷங்கர் பெயர் அடிபடுகிறது.

இது ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் கதை என்பது மட்டுமே இப்போதைக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தயாரிப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

சமீபத்தில் நடந்த லிங்கா இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, தன் படங்கள் தயாராக அதிக நாட்கள் எடுத்துக் கொள்வதை விரும்பவில்லை என்றார். அதிக இடைவெளி இல்லாமல், படங்களை சீக்கிரம் எடுத்து வெளியிட வேண்டும் என்ற கருத்தைக் கூறினார். இந்த மேடையில் ஷங்கரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினியை வைத்து அவர் எடுத்த சிவாஜி வெளியாக இரண்டு ஆண்டுகள் விடித்தது. எந்திரனுக்கு இரண்டரை ஆண்டுகளானது. இப்படி காத்திருப்பது பிடிக்கவில்லை என்று ரஜினி கூறினார்.

எனவே ரஜினி - ஷங்கர் இணையும் படம் ஒரு ஆண்டுக்குள் முடிகிற மாதிரி எடுக்கப்படும் என்று தெரிகிறது.

 

'பரீட்சைக்கு படிக்கணும்'... சுசீந்திரன் - விஷால் படத்திலிருந்து விலகிய லட்சுமி மேனன்!

விஷாலின் அதிர்ஷ்ட தேவதையாகத் திகழ்ந்த லட்சுமி மேனன், அடுத்த படத்தில் அவருடன் ஜோடி சேருவதைத் தவிர்த்துவிட்டார்.

வேறொன்றுமில்லை.. அம்மணி 12-ம் வகுப்பு பரீட்சைக்குப் படிக்க வேண்டுமாம். படிப்பா, விஷால் படமா என்ற குழப்பம் வந்ததும், படிப்புதான் நிரந்தரம் என முடிவு செய்து, படத்தை நிராகரித்துவிட்டிருக்கிறார்.

'பரீட்சைக்கு படிக்கணும்'... சுசீந்திரன் - விஷால் படத்திலிருந்து விலகிய லட்சுமி மேனன்!  

விஷாலும் லட்சுமி மேனனும் இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்தனர். பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் ஆகிய அந்த இரு படங்களுமே விஷாலுக்கு நல்ல லாபம் தந்தன. இவை இரண்டுமே அவர் சொந்தமாகத் தயாரித்தது. எனவே அடுத்த படத்திலும் லட்சுமி மேனனே இருக்கட்டும் என இயக்குநர் சுசீந்திரனும் முடிவு செய்திருந்தார்.

இப்போது லட்சுமிக்கு பதில் காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

காஜல் அகர்வால் நடித்து தமிழில் வெற்றி பெற்ற படங்கள் இரண்டுதான். நான் மகான் அல்ல, அடுத்து துப்பாக்கி. ஜில்லா படத்துக்குப் பிறகு 10 மாதங்கள் வேறு பட வாய்ப்பின்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடங்கியது பாலாவின் தாரை தப்பட்டை!

இளையராஜா இசையில் பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பு தஞ்சையில் தொடங்கியது.

இந்தப் படத்தில் சசிகுமார் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக வரலட்சுமியும் நடிக்கின்றனர்.

இந்தப் படம் இளையராஜாவின் 1000வது படமாகும். இந்தப் படத்துக்காக 13 பாடல்களை ஏற்கெனவே போட்டுக் கொடுத்துவிட்டார் இளையராஜா.

தொடங்கியது பாலாவின் தாரை தப்பட்டை!

கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தின் திரைக்கதையை நேர்த்தியாக்க கூடுதல் அவகாசம் எடுத்துக் கொண்ட பாலா, படப்பிடிப்பை விறுவிறுவென நடத்தி வருகிறார்.

இதுகுறித்து நடிகை வரலட்சுமி, "தாரை தப்பட்டை பயணம் தொடங்கிவிட்டது. பாலா மாதிரி ஒரு மேதையுடன் பணியாற்றுவது மிகுந்த ஆர்வத்தைத் தருகிறது.. இந்தப் படம் பெரிய அளவில் வரும்," என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

 

பூ நடிகைக்கு தலையாட்டிய தளபதி

தளபதியை எப்படியாவது தனது தயாரிப்பில் நடிக்கவைத்துவிடவேண்டும் என்பது பூ நடிகையின் விருப்பம். ஆனால் அதற்கு தளபதி நடிகர் பிடிகொடுக்கவில்லை.

சமீபத்தில் உலக நாயகனின் பிறந்தநாள் பார்ட்டியில் தளபதி நடிகர் பங்கேற்றார். அப்போது பூ நடிகையும் அந்த பார்ட்டிக்கு வந்திருந்தார். அப்போது இருவரும் இணைந்து நடனமாடினர்.

பூ நடிகைக்கு தலையாட்டிய தளபதி

சமயம் பார்த்து கால்ஷீட் மேட்டரை காதில் போட்டார் பூ நடிகை. உடனே தளபதியும் சரி என்று தலையாட்டிவிட்டாராம்.

இத்தனை நாளாய் தளபதி தயங்கியதற்கு காரணம், சம்பளம் சரியாக வருமா என்பதுதானாம். எப்படியோ தளபதியின் கால்ஷீட்டை வாங்கிவிட்டதில் மலர்ந்து சிரிக்கிறாராம் பூ.


 

இந்த வாரம் என்னை அறிந்தால் டீசர்.. டிசம்பர் 5-ம் தேதி சென்சார்!

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படமான என்னை அறிந்தால் டீசர் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. படத்தை வரவேற்க அஜீத் ரசிகர்கள் இப்போதே மும்முரமாக உள்ளனர். மாவட்டந்தோறும் படத்துக்கு பேனர்கள், கட் அவுட்டுகளை வைத்துள்ளனர்.

இந்த வாரம் என்னை அறிந்தால் டீசர்.. டிசம்பர் 5-ம் தேதி சென்சார்!

இந்நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்களை வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

இந்த வாரத்தில் டீசர் வெளியாகவிருக்கிறது. டிசம்பர் இரண்டாம் வாரத்தில் படத்தின் இசையை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். டிசம்பர் 5-ம் தேதி இந்தப் படத்தை சென்சாருக்கு அனுப்புகிறார்கள்.

அஜீத் படத்துன் விக்ரம் நடித்த ஐ படமும் ரிலீஸ் ஆகும் என முதலில் தகவல் வெளியானது. இப்போது மோதலைத் தவிர்க்க ஐ படத்தை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

அரசு அனுமதி மறுப்பு: திருட்டு விசிடிக்கு எதிரான பேரணி, ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் ரத்து

சென்னை: திருட்டு விசிடிக்கு எதிராக திரையுலகினர் இன்று நடத்தவிருந்த பேரணி, ஆர்ப்பாட்டங்கள் கைவிடப்பட்டன.

அரசுத் தரப்பிலிருந்து திரையுலகினருக்கு எந்த அனுமதியும் கிடைக்காததாலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

அரசு அனுமதி மறுப்பு: திருட்டு விசிடிக்கு எதிரான பேரணி, ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் ரத்து

இந்த பேரணி, ஆர்ப்பாட்டத்தில் திரையுலகின் அனைத்து சங்கங்கள், அமைப்புகள், கலைஞர்கள் பங்கேற்பார்கள் என்று இரு வாரங்களுக்கு முன்பு நிர்வாகிகள் அறிவித்திருந்தனர்.

இதற்கான முறையான அனுமதி கேட்டும் காவல் துறையிடம் மனு கொடுத்திருந்தனர். ஆனால் இதற்கு அனுமதி தருவது குறித்து அரசிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் இப்போது வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டதால், அமைதியாகிவிட்டதாகத் தெரிகிறது.

திருட்டு விசிடியை ஒழிக்கக் கோரி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோன்ற போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை திரையுலகினர் நடத்தி வந்தாலும், திருட்டு விசிடி விற்பனை மற்றும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியாவதை முழுமையாகத் தடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

அக்காவை தேர்வு செய்துவிட்டு, தங்கையை ஜோடியாக்கிய பாக்யராஜ்! - ஒரு ப்ளாஷ்பேக்

ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.பாக்யராஜ் எழுதி இயக்கி நடித்த 'முந்தானை முடிச்சு' படத்தை யாராலும் மறக்க முடியாது. அன்றைய தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ''என்னுடைய கலையுலக வாரிசு பாக்யராஜ்'' என்று பொதுமேடையில் பெருமையாக அறிவிக்க வைத்த மாபெரும் வெற்றிப் படம் அது.

அந்தக் காலத்தில் இப்படம் ஒரு 'டிரென்ட் செட்டர்' என்றே சொல்லப்பட்டது. இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் மெகா ஹிட்டானது. பின்னணி இசை, படத்தை முன்னணிக்குக் கொண்டு வந்தது. அப்படத்தின் சாதனையை, பாக்யராஜின் வேறெந்தப் படமும் இதுவரை முறியடிக்கவில்லை.

அக்காவை தேர்வு செய்துவிட்டு, தங்கையை ஜோடியாக்கிய பாக்யராஜ்! - ஒரு ப்ளாஷ்பேக்

'முந்தானை முடிச்சு' உருவானபோது, யாரை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என்ற யோசனையில் மூழ்கிய பாக்யராஜ், கலாரஞ்சனி என்ற இளம் பெண்ணை வரவழைத்து 'டெஸ்ட் ஷ¨ட்' நடத்தினார். அப்போது அவருடன் வந்த பள்ளி மாணவி, துறுதுறுவென்று இருந்தார். பாக்யராஜ் கேட்ட கேள்விகளுக்கு கலாரஞ்சனி பதில் சொல்வதற்கு முன் முந்திக்கொண்டு பதிலளித்தார். ஒருகட்டத்தில் எரிச்சலடைந்த பாக்யராஜ், ''யார் இது முந்திரிக்கொட்டை மாதிரி தொணதொணன்னு பேசிகிட்டு...'' என்று கத்தினார். அவ்வளவுதான், அந்த மாணவி பம்மிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

பிறகு வீட்டுக்கு வந்த மாணவி, ''சரியான சிடுமூஞ்சி டைரக்டரா இருக்காரு. இவரோட டைரக்ஷன்ல எல்லாம் அக்காவை நடிக்க வைக்க வேணாம்'' என்றார். மனதில் உள்ளதை பட்டென்று போட்டுடைத்த தங்கையின் பேச்சைக் கேட்டு மிரண்ட கலாரஞ்சனி, ''ஏய்... அவரு பெரிய டைரக்டரு. இப்படி எல்லாம் பேசக்கூடாது'' என்று கண்டித்தார். ஆனால், 'முந்தானை முடிச்சு' படப்பிடிப்பு தொடங்கும் வேளையில், திடீரென்று கலாரஞ்சனியை நிராகரித்து விட்டார் பாக்யராஜ்.

அக்காவை தேர்வு செய்துவிட்டு, தங்கையை ஜோடியாக்கிய பாக்யராஜ்! - ஒரு ப்ளாஷ்பேக்

வேறொரு ஹீரோயினுக்கு வலைவீசி தேடிக் கொண்டிருந்தபோது, டெஸ்ட் ஷூட் நேரத்தில் முந்திரிக்கொட்டை மாதிரி தொணதொணவென்று பேசிக் கொண்டிருந்த மாணவி ஞாபகத்துக்கு வரவே, ''அந்த பொண்ணை கூட்டிகிட்டு வாங்கய்யா'' என்று பாக்யராஜ் ஆர்டர் போடவே, உதவி இயக்குனர்கள் ஆளுக்கொரு பக்கம் பறந்து, அந்த மாணவியை அழைத்து வந்தார்கள். தன்னைத் திட்டிய இயக்குனருக்கு எதிரில் வந்து நின்ற மாணவி, ''இப்ப எதுக்கு என்னை வரச் சொன்னீங்க?'' என்று துடுக்குத்தனமாகக் கேட்டார். அதைப் பெரிதும் ரசித்த பாக்யராஜ், ''நீதான் என் படத்துக்கு கதாநாயகி. ரெடியா இரு'' என்றார்.

இப்படித்தான் 'முந்தானை முடிச்சு' படத்தின் மூலம் ஊர்வசி ஹீரோயினாக அறிமுகமானார்.

அக்காவை தேர்வு செய்துவிட்டு, தங்கையை ஜோடியாக்கிய பாக்யராஜ்! - ஒரு ப்ளாஷ்பேக்

''அப்ப எனக்கு எந்த விவரமும் தெரியாது. டி.வியில் 'ஒளியும் ஒலியும்' பார்த்து முடிச்சதும் தூங்கிடுவேன். அப்படிப்பட்ட நான், ஷூட்டிங் ஸ்பாட்டுல பாக்யராஜ் சாருக்கு கொடுத்த தொல்லை ஏராளம்... ஏராளம். அதையெல்லாம் பொறுத்துகிட்டு, எப்படியோ என்னை ஒரு முன்னணி கதாநாயகியா மாத்திக் காட்டினாரு பாருங்க... அதான் எங்க டைரக்டரோட பெருந்தன்மை.

அக்காவை தேர்வு செய்துவிட்டு, தங்கையை ஜோடியாக்கிய பாக்யராஜ்! - ஒரு ப்ளாஷ்பேக்

ஒருநாள் நைட் ஷூட்டிங். பாக்யராஜ் சார், நான், அந்த கைக்குழந்தை நடிக்கும் ''சின்னஞ்சிறு கிளியே... சித்திரப் பூவிழியே'' பாட்டை படமாக்கிட்டு இருந்தாங்க. எனக்குதான் ராத்திரி ஏழு மணி ஆனவுடனே தூக்கம் வந்துடுமே. அப்படியே தூங்கித் தூங்கி வழிஞ்சேன். அதனாலயே அந்த பாட்டை ஷூட் பண்ண அதிக நாளாச்சி. என்னால நடிக்க முடியலன்னு, 'ஓ'ன்னு அழுவேன். இதையெல்லாம் பல்லை கடிச்சிகிட்டு, எங்க வாத்தியார் ஷூட் பண்ணி முடிச்சார். அவர் இல்லன்னா, இந்த ஊர்வசி இல்ல.

இன்னைக்கி நடிப்புல கமல் சார் கூட என்னை கம்பேர் பண்ணி ஆடியன்ஸ் பேசறாங்கன்னா, அதுக்கு பாக்யராஜ் சார் போட்ட பிச்சைதான் காரணம். அவரை என்னைக்குமே நான் மறக்க மாட்டேன்'' என்று, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் ஊர்வசி.

கல்பனா, கலாரஞ்சனி, ஊர்வசி சகோதரிகள் பல மொழிப் படங்களில் நடித்துள்ளனர். கே.பாக்யராஜின் 'சின்ன வீடு' படத்தில், கல்பனா ஹீரோயினாக நடித்திருந்தார். பொதுவாக இந்த சகோதரிகள், மலையாளத்தில் மட்டுமே அதிக படங்களில் நடித்துள்ளனர் அதுபோல், மூவருமே தாங்கள் காதலித்து மணந்தவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஊர்வசி, தனது நீண்ட நாள் நண்பர் சிவபிரசாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக அறிவித்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

நடிகர் யோகி தேவராஜின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து...

 

விஜய்யின் 60வது படத்தை இயக்கும் கே.வி.ஆனந்த்?

இளையதளபதி விஜய் நடிக்கும் 60 வது படத்தினை கே.வி.ஆனந்த் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அநேகன் ரிலீஸ் ஆக தயார் நிலையில் உள்ளது. அப்படத்தின் வெளியிட்டு வேலைகளில் பிசியாக இருக்கிறார் கே.வி. ஆனந்த்.

இதற்கிடையில் விஜய்யின் 60வது படத்தை இயக்கப்போவதாக கே.வி. ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

விஜய்யின் 60வது படத்தை இயக்கும் கே.வி.ஆனந்த்?

ஆக்சன், ரொமான்ஸ் கலந்த கதையாக விஜய் 60 படம் இருக்கும் என்றும் கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அநேகன் படம் விஜய்க்காக எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்தான் அதில் நடிக்க முடியாமல் போனதால் தனுஷ் நடித்தார். இந்த நிலையில் விஜய்க்காக அடுத்த கதையை தயார் செய்துள்ளார் கே.வி. ஆனந்த். அவரது கனவு இதன் மூலம் நனவாகப்போகிறதாம்.

தனது அடுத்த பட ஹீரோ விஜய் என்று அறிவித்துள்ள கே.வி. ஆனந்த், விஜய்க்கு ஜோடி யார் என்பதை கூறவில்லை.

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இதனையடுத்து 59வது படமாக "ராஜா ராணி " புகழ் அட்லி உடன் இணைகிறார் விஜய். தொடர்ந்து 60வது படத்திற்கும் தயாராகிவிட்டார் விஜய். 2015 ஆம் ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

நடிகை சனாகான் மீது போலீசில் மீண்டும் புகார்... கைதாவாரா?

மும்பை: பிரபல நடிகை சனா கான் மீது போலீசில் மீண்டும் புகார் கொடுத்துள்ளார் பூனம் கண்ணா. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழில் சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சனாகான். தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

கடந்த இரு ஆண்டுகளாகவே தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் சனாகான்.

நடிகை சனாகான் மீது போலீசில் மீண்டும் புகார்... கைதாவாரா?

தனது உறவினரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி 15 வயது பெண்ணை கடத்தியதாக ஏற்கனவே சனா கான் மீது குற்றம்சாட்டப்பட்டது. போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இதனை சனாகான் மறுத்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.

பின்னர் பெண் பத்திரிகையாளர் பூனம் கண்ணாவுக்கும், சனாகானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சனாகானும், அவரது நண்பர்கள் இஸ்மாயில்கான், ராமுகனோஜியா ஆகியோர் தன்னை மோசடி பேர்வழி என சித்தரித்து இன்டர்நெட்டில் செய்தி பரப்புவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் பூனம் கண்ணா போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை நடத்தி சனா கானையும், இஸ்மாயிலையும் கைது செய்தனர். பிறகு அவர்கள் ஜாமீனில் விடுதலையானார்கள்.

நடிகை சனாகான் மீது போலீசில் மீண்டும் புகார்... கைதாவாரா?

இதைத் தொடர்ந்து பூனம் கண்ணா வீடு வாங்கி தருவதாக ஏமாற்றி என்னிடம் பல லட்சங்கள் மோசடி செய்துவிட்டார் என்றும் சனாகான் போலீசில் புகார் அளித்தார். புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி பூனம் கண்ணாவை கடந்த மாதம் கைது செய்தனர்.

இந்த நிலையில் சனாகான் மீது பூனம் கண்ணா, இன்னொரு புதிய புகாரை போலீசில் அளித்துள்ளார். அதில் தன்னிடம் சனாகான் பணமோசடி செய்துவிட்டதாகவும், அடியாட்கள் வைத்து மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் சனாகான் மீண்டும் கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், அவர் முன்ஜாமீன் பெற முயற்சி செய்து வருகிறார்.

 

டிசம்பர் 19ம் தேதி வெளியே வருகிறது ‘பிசாசு’!

சென்னை: மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு படம் டிசம்பர் 19ம் தேதி ரிலீசாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், முகமூடி, யுத்தம் செய் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் மிஷ்கின். இவர் தற்போது பிரபல இயக்குனர் பாலாவின் ‘பி ஸ்டூடியோ' தயாரிப்பில், பிசாசு என்ற படத்தை இயக்கியுள்ளார்.

டிசம்பர் 19ம் தேதி வெளியே வருகிறது ‘பிசாசு’!

நாகா, பிரயாகா என்ற புதுமுகங்கள் அறிமுகமாகும் இப்படத்திற்கு அரோள் இசையமைத்துள்ளார். இப்படத்தை வரும் 19ந்தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

டிசம்பர் 19ம் தேதி வெளியே வருகிறது ‘பிசாசு’!  

ஏற்கனவே, டிசம்பர் மாதம் ரஜினியின் லிங்கா, லாரன்சின் முனி-3, எஸ்.ஜே. சூர்யா இயக்கி, இசையமைத்து நடித்துள்ள ‘இசை', பிரபு சாலமோன் இயக்கியுள்ள கயல், சித்தார்த்தின் எனக்குள் ஒருவன் ஆகிய படங்களும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நடிகை லிஸ்ஸி, இயக்குனர் பிரியதர்ஷன் விவாகரத்து!

சென்னை: இயக்குநர் ப்ரியதர்ஷனும் நடிகை லிஸியும் பரஸ்பர விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.

தமிழில் லேசா லேசா, சினேகிதியே, பிரியாத வரம் வேண்டும், சிறைச்சாலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட படங்களையும், மலையாளம் இந்தியில் ஏராளமான படங்களையும் இயக்கியவர் ப்ரியதர்ஷன். விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் லிஸ்ஸி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றது. பின்னர் நண்பர்களின் சமாதானம் காரணமாக மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர்.

நடிகை லிஸ்ஸி, இயக்குனர் பிரியதர்ஷன் விவாகரத்து!

இப்போது மீண்டும் விவாகரத்து செய்ய முடிவு செய்து, நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துவிட்டனர்.

இதுகுறித்து நடிகை லிஸ்ஸி வெளியிட்டுள்ள அறிக்கை:

24 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு நானும் பிரியதர்ஷன் அவர்களும் முழு மனதுடன் பிரிய முடிவெடுத்துள்ளோம் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் பிரிவை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்த இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி விண்ணப்பித்துள்ளேன். எங்களது இந்த முடிவை எங்களின் குழந்தைகளும், நண்பர்களூம் அறிவார்கள்.

இந்த கடினமான காலத்தில் தாங்கள் அனைவரும் எங்களின் கவலை அறிந்து, எங்களின் தனியுரிமை மதித்து செயல்படமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்.

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.