ஷங்கரின் நாயகியான அசின்!

Asin Is Shankar S Heroine
இயக்குனர் ஷங்கர் விக்ரமை வைத்து எடுக்கும் தேர்தல் படத்தின் நாயகி அசின் தானாம்.

இயக்குனர் ஷங்கர் படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் பேரார்வம் காட்டுவார்கள். அதற்கு காரணம் ஷங்கர் இயக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் தான். 3 இடியட்ஸ் படத்தை தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்து அதுவும் ஹிட்டாகிவிட்டது. அதில் நடித்த விஜய் கூட தான் நடித்ததால் படம் ஹிட்டாகவில்லை, கதை அப்படி என்றார்.

இந்நிலையில் அடுத்த படத்தை இயக்க சங்கர் தயாராகிவிட்டார். ஹீரோவாக சீயான் விக்ரமை தேர்வு செய்துள்ளார். இவர்கள் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய அந்நியன் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த கூட்டணி சேரும் படத்திற்கு தேர்தல் என்று பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் நாயகியாக பிரியங்கா சோப்ரா அல்லது அசின் நடிக்கலாம் என்று கூறப்பட்டது.

மும்பை பக்கம் சென்ற ஷங்கரை அசின் நேரில் சந்தித்து இந்த வாய்ப்பை தனக்கே தருமாறு கேட்டுக் கொண்டாராம். (இது பிரியங்காவுக்கு தெரியுமா?) ஆனால் இலங்கை சென்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்த அசினை ஷங்கர் தனது படத்தில் நடிக்க வைக்கக் கூடாது என்று இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எல்லாம் தாண்டி தற்போது படத்தின் நாயகி அசின் என்பது உறுதியாகிவிட்டதாம்.

இந்த படத்தின் மூலம் முதன் முறையாக சங்கருடன் இணைகிறார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். மேலும் தேர்தல் தெலுங்கிலும் தயாராகவிருக்கிறது. அங்கு கப்பார் சிங் நாயகன் பவன் கல்யாண் நடிக்கிறார்.

ஆடிய கூத்து ஆடினாலும் அசின் காரியத்தில் கண்ணாகத் தான் இருக்கிறார்.
Close
 
 

சரியான நேரத்தில் மீண்டும் நடிக்க வருவார் ஜோதிகா: சூர்யா

Jyothika Loves Return Back Acting    | ஜோதிகா  
ஜோதிகா சரியான நேரத்தில் மீண்டும் நடிப்பைத் தொடர்வார் என்று அவரது கணவரும், நடிகருமான சூர்யா தெரிவித்துள்ளார்.

நடிகை ஜோதிகா குடும்பம், குழந்தை என்று ஆன பிறகு நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளார். ஆனால் விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்த மலையாள படமான சீதா கல்யாணம் தான் அவர் கடைசியாக நடித்த படம். அதன் பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் அவருக்கு மீண்டும் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளதாக அவரது கணவர் சூர்யா தெரிவித்துள்ளார்.

இது குறி்த்து சூர்யா கூறுகையில்,

மீண்டும் படங்களில் நடிக்க ஜோதிகா ஆசைப்படுகிறார். நான் அவரை நடிக்க வேண்டாம் என்று ஒருபோதும் கூறியதில்லை. விளம்பரங்களில் நடித்தால் ஓரிரு நாள் தான் ஷூட்டிங் நடக்கும். ஆனால் படங்களில் நடித்தால் அவ்வளவு சீக்கிரம் ஷூட்டிங் முடியாது. அதனால் அவர் குழந்தைகளைப் பிரிந்திருக்க வேண்டி வரும். குழந்தைகளுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவர் நடிக்காமல் உள்ளார். இது தான் நடிப்பைத் தொடர சரியான நேரம் என்று அவருக்கு தோன்றும்போது மீண்டும் நடிக்க வருவார் என்றார்.

சூர்யா, ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Close
 
 

காதலரை பெற்றோர் சம்மதத்துடன் மணந்த 'வெயில்' பட நாயகி பிரியங்கா

Priyanka Marries Director Lawrence Ram
வெயில் படத்தில் பசுபதிக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா தனது காதலர் இயக்குனர் லாரன்ஸ் ராமை பெற்றோர் சம்மதத்துடன் மணந்தார்.

பரத், பசுபதி, பாவனா நடித்த வெயில் படத்தில் பசுபதிக்கு ஜோடியாக நடித்தவர் பிரியங்கா. இதையடுத்து அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தார். தமிழில் பெரிய அளவில் பெயர் வாங்க முடியாத அவருக்கு விலாபங்களுக்கு அப்புறம் என்ற மலையாள படத்திற்காக கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

இந்நிலையில் பிரியங்காவுக்கும், ஓம்கராம் என்ற படத்தின் இயக்குனர் லாரன்ஸ் ராமுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்தனர். பிரியங்காவின் காதல் விவகாரம் அவரது வீட்டுக்கு தெரிந்தபோது முதலில் அவர்கள் எதிர்த்தாலும் பிறகு பச்சைக் கொடி காட்டினர்.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் வைத்து அவர்களின் திருமணம் நேற்று நடந்தது. இதில் அவர்களின் பெற்றோர்களும், முக்கிய உறவுக்காரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அதன் பிறகு பிரியங்கா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மனதிற்கு பிடித்தவரையே மணந்துள்ளேன். திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பதற்கு எனது கணவர் தடை போடவில்லை. அதனால் வாய்ப்பு கிடைத்தால் நல்ல கதாபாத்திரங்களில் மட்டும் நடிப்பேன். தற்போது 2 மலையாள படஙகளில் நடித்து வருகிறேன் என்றார்.
Close
 
 

ஜூனியர் ஆட்டிஸ்டுகளை விபச்சாரத்தி்ல் தள்ளிய 'கோலங்கள்' துணை இயக்குனர் கைது

Flesh Trade Kolangal Serial Assistant Director Held
சென்னை: கோலங்கள் மெகா சீரியலின் துணை இயக்குனர் அன்பு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடிக்கும் இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் வெள்ளித்திரை மற்றும் சின்னதிரையில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் வந்து போகும் இளம் பெண் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் பணத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இந்த தொழில் ஈடுபடுபவர்களை தொடர்பு கொண்டனர். அவர்களும் போலீசாரை வடபழனி சரவணபவன் ஹோட்டல் அருகே வந்து பெண்ணை அழைத்துச் செல்லுமாறு தகவல் கொடுத்துள்ளனர்.

யூனிபார்மில் போனால் வேலைக்கு ஆகாது என்று நினைத்து மஃப்டியில் சென்ற போலீசார் குறிப்பிட்ட இடத்தை அடைந்தனர். அங்கு இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக அவரை அன்பு என்பவர் அங்கு அழைத்து வந்துள்ளார்.

போலீசார் அந்த இளம் பெண்ணை மீட்டு, அன்புவை கைது செய்தனர். அன்புவிடம் நடத்திய விசாரணையில் அவர் கோலங்கள் உள்ளிட்ட மெகா தொடர்களில் துணை இயக்குனராகவும், மேடை கச்சேரிகளில் நடன இயக்குனராகவும் பணியாற்றியது தெரிய வந்தது.
Close
 
 

திரைப்பட அதிபர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு சென்னை ஹைகோர்ட் தடை

திரைப்பட அதிபர் சங்க அட்ஹாக் கமி்ட்டி தலைவர் இப்ராகிம் ராவுத்தர் கூட்டவிருக்கும் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திரைப்பட அதிபர் சங்க அட்ஹாக் கமி்ட்டி தலைவர் இப்ராகிம் ராவுத்தர் வரும் 30ம் தேதி சங்க பொதுக்குழு கூட்டத்தை கூட்டியுள்ளார். இதை எதிர்த்து தயாரிப்பாளர் சங்க பொருளாளர் கலைப்புலி எஸ். தாணு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

கடந்த ஏப்ரல் 15ம் தேதி தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் அட்ஹாக் கமிட்டி அமைக்கப்பட்டது. அவரது தலைமையில் நடந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் தேனப்பன், பொருளாளராகிய நான் ஆகிய மூவரும் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அட்ஹாக் கமிட்டியில் எடுத்த முடிவை எதிர்த்து தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அது நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் வருகிற 30ம் தேதி பட அதிபர் சங்க பொதுக்குழு கூடும் என இப்ராகிம் ராவுத்தர் அறிவித்துள்ளார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதி தனபாலன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி திரைப்பட அதிபர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதித்ததோடு வழக்கு விசாரணையை வரும் ஜூன் மாதம் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
Close
 
 

சிம்புவையடுத்து 6 பேக் வைக்கும் பரத்

Bharath Sport 6 Pack 555
நடிகர் பரத் தன்னுடைய புது படத்திற்காக 6 பேக் வைக்கிறார்.

நடிகர் பரத்திற்கு காதல் படம் போன்று பிரேக் கொடுக்கும் மற்றொரு படம் இன்னும் அமையாமல் உள்ளது. இந்நிலையில் அவர் திருத்தணி மற்றும் 555 ஆகிய இரண்டு படங்களில் நடிக்கிறார். இதில் 555 என்பது ஆக்ஷன் படம். அதற்காக அவர் 6 பேக் வைக்கிறார்.

இது குறித்து பரத் கூறுகையில்,

சசி இயக்கும் ஆக்ஷன் படமான 555 எனக்கு நிச்சயம் ஒரு பிரேக் கொடுக்கும் என்று நம்புகிறேன். அந்த படத்தின் கதை அருமையாக உள்ளது. சசி எப்படி நடிக்கச் சொல்கிறாரோ அதே போன்று நடிப்பேன். படத்தில் நான் 6 பேக் வைத்திருக்க வேண்டும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். அதனால் ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்கிறேன் என்றார்.

இந்த படத்தில் பரத்துக்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். சில முக்கிய காட்சிகள் மலேசியாவில் காட்சியாக்கப்பட்டுள்ளனவாம்.

முதலில் பாலிவுட்டில் தான் ஹீரோக்கள் 6 பேக் வைத்தனர். தற்போது அந்த டிரென்ட் கோலிவுட்டுக்கும் வந்துவிட்டது. ஒஸ்தி படத்திற்காக சிம்புவும் 6 பேக் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Close
 
 

'பங்காளி' தயாநிதி அழகிரியின் படத்தில் ஹீரோவாக நடிக்கும் அருள் நிதி!

வம்சம் பட நாயகன் அருள்நிதி, தனது ஒன்று விட்ட சகோதரர் தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் தயாரிக்கும் சம்பவம் படத்தில் நடிக்கிறார்.

வம்சம் படம் மூலம் கோலிவுட்டுக்கு கிடைத்த இன்னொரு ஹீரோ அருள்நிதி. வம்சத்தை தொடர்ந்து அவர் நடித்த உதயன் வந்ததும், போனதும் தெரியாவிட்டாலும் மௌனகுருவில் அருள்நிதியின் நடிப்பு பேசப்பட்டது. இதையடுத்து அவர் கரு. பழனியப்பனின் அசோகமித்திரனில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படம் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டது.

இந்நிலையில் அவர் தனது ஒன்றுவிட்ட சகோதரர் தாயநிதி அழிகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் தயாரிக்கும் சம்பவம் படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பூர்ணா நடிக்கிறார். இந்த படத்தை கணேஷ் விநாயக் இயக்குகிறார்.

வம்சம் படத்தில் நடிக்க உதயநிதி ஸ்டாலினிடம் தான் முதலில் கேட்டார்களாம். அவர் நடிக்க மறுத்ததால் திமுக தலைவர் கருணாநிதியின் இன்னொரு பேரனான அருள்நிதி ஹீரோவானார். வம்சம் படத்தில் நடிக்க மறுத்த உதயநிதி ஸ்டாலின் தற்போது ஓ.கே.ஓ.கே. படத்தின் மூலம் ஹீரோவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Close
 
 

காஜல் தங்கச்சி தேருவாரா? நாளை தெரியும்

Nisha Agarwal S Debut Ishtam Hit Screen   
காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் அறிமுகமாகும் இஷ்டம் படம் நாளை ரிலீஸாகிறது.

தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் கோலிவுட்டில் அறிமுகமாகும் படம் இஷ்டம். பிரேம் நிஜார் இயக்கியுள்ள இந்த படத்தில் விமல் ஹீரோவாக நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். காதலும், காமெடியும் கலந்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ப்ரிவியூவில் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

இஷ்டம் நாளை ரிலீஸாகிறது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று தயாரிப்பு வட்டம் தெரிவித்துள்ளது.

இஷ்டம் ரசிகர்களுக்கு பிடிக்குமா, நிஷா தமிழ் ரசிகர்களின் இஷ்ட தேவதையாவாரா என்பது நாளை தெரிய வரும். படத்தைப் பார்த்துவிட்டு படம் எப்படி, நிஷா எப்படி என்று எங்களுக்கும் சொல்லுங்கள்.
Close
 
 

விஜய்க்கு என்ன 17 வயசா? பிரபுதேவாவை கேட்ட அக்ஷய் குமார்

Is Vijay Just 17 Asks Akshay Kumar
பிரபுதேவா இயக்கும் இந்தி படமான ரவுடி ரத்தோரில் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட வந்த இளைய தளபதி விஜயை பார்த்த அக்ஷய் குமார் அவருக்கு என்ன 17 வயதா என்று கேட்டுள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் பிரவுதேவா இயக்கி வரும் இந்தி படம் ரவுடி ரத்தோர். நம்ம கார்த்தி நடித்த சிறுத்தையின் ரீமேக். இதில் அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா நடிக்கின்றனர். இதில் ஒரு பாடலுக்கு இளைய தளபதி விஜய் நச்சுன்னு ஆடியுள்ளார் என்று நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டோம்.

ஆனால் கோலிவுட்டில் பெரிய ஹீரோவான விஜயை எப்படி ஒரு பாட்டுக்கு வந்து ஆடுங்க என்று சொல்வது என்று பிரபுதேவா முதலில் தயங்கினாராம். பிறகு சரி கேட்டுத் தான் பார்ப்போம் என்று விஜயிடம் கேட்டுள்ளார். பிரபுதேவா சற்றும் எதிர்பாராவிதமாக ஓ.கே. சொன்ன விஜய் அடுத்த 1 மணி நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட் வந்துவிட்டாராம்.

விஜயை பார்த்தவுடன் படத்தின் ஹீரோ அக்ஷய்க்கு ஒரே ஆச்சரியமாம். உடனே வந்து விஜயை ஆரத் தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதன் பிறகு பிரபுதேவாவைப் பார்த்து விஜயக்கு என்ன 17 வயசா என்று அக்ஷய் கேட்டுள்ளார்.

இது குறித்து பிரபுதேவா கூறுகையில், இந்த பாடல் மூலம் விஜயை பாலிவுட்டில் அறிமுகம் செய்ய முயற்சிக்கவில்லை. அவரை யாரும் பாலிவுட்டுக்கு சிபாரிசு செய்யத் தேவையில்லை. பாலிவுட்டே அவரை வரவேற்கும் என்றார்.
Close
 
 

கொடைக்கானலில் கணவருடன் ரெஸ்ட் எடுக்கும் சௌந்தர்யா ரஜினி

Rajini S Daughter Takes Break From Kochadaiyaan
கோச்சடையான் படத்தின் இயக்குனரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளுமான சௌந்தர்யா தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தனது தந்தை மற்றும் பாலிவுட் நடிகை தீபிகாவை வைத்து கோச்சடையான் படத்தை எடுத்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக படக்குழுவினர் லண்டன், கேரளா, ஹாங் காங் என்று ஓடி, ஓடி உழைத்துள்ளனர்.

தற்போது ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்துள்ள சௌந்தர்யா தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தாருடன் கொடைக்கானலுக்கு ஓய்வு எடுக்கச் சென்றுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நான் எனது குடும்பத்துடன் கொடைக்கானலில் ஓய்வு எடுக்க விரும்புகிறேன். அங்கு கோல்ப் விளையாடி எனது பேட்டரியை ரீசார்ஜ் செய்ய வேண்டும். அப்பொழுது தான் திரும்பி வந்து கோச்சடையானுக்காக ஓட முடியும் என்றார்.
Close
 
 

புதுக்கோட்டை தேர்தலில் போட்டியிடக் கூடாது... மன்றச் செயலாளருக்கு ரஜினி உத்தரவு?

Rajni Upset Over His Fan Club Functionary Contesting
சென்னை: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் போட்டியிடும் புதுக்கோட்டை மாவட்ட ரசிகர் மன்றச் செயலாளர் ஸ்ரீதர் மீது நடிகர் ரஜினிகாந்த் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் மன்றம் சார்பில் போட்டியிடக் கூடாது, தேர்தலிலிருந்து வாபஸ் பெற வேண்டும் என்று ரஜினி சார்பில் உத்தரவு போயுள்ளதாக கூறப்படுகிறது.

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது, தேமுதிக போட்டியிடுகிறது, இந்திய ஜனநாயகக் கட்சியும் போட்டியிடுகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் ஸ்ரீதர் என்பவரும் போட்டியிட மனு செய்துள்ளார்.

இவர் ரஜினி மன்றம் சார்பில் போட்டியிடுகிறார். மேலும் மன்றக் கொடியையும் பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருகிறார். வேட்பு மனு தாக்கலின்போது ரஜினி ரசிகர்கள் புடை சூழ, மன்றக் கொடி, பேனருடன் ஊர்வலமாக சென்று பரபரப்பையும் ஏற்படுத்தினார்.

இது ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மன்றத்தின் பெயரில் ஸ்ரீதர் போட்டியிடுவதை அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே போட்டியிலிருந்து வாபஸ் பெறுமாறு ஸ்ரீதருக்கு அறிவுரை போயிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ரஜினி அப்படி உத்தரவிட்டுள்ளாரா என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

இந்த விவகாரம் குறித்து ரஜினி ரசிகர் மன்றப் பொறுப்பாளரான சுதாகர் என்பவர் கூறுகையில், ரசிகர்கள் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம், எந்தக் கட்சிக்காகவும் தேர்தல் வேலை செய்யலாம். அதை ஒருபோதும் ரஜினிகாந்த் தடுத்ததில்லை.

ஆனால் தேர்தல் பணியில் ஈடுபடும் யாரும் ரஜினியின் பெயரையோ, மன்றக் கொடியையோ பயன்படுத்தக் கூடாது. முதலில் ரசிகர்கள் தங்களது குடும்பங்களைத்தான் கவனிக்க வேண்டும். இதைத்தான் எப்போதும் ரஜினி சொல்லி வருகிறார், ஆசைப்படுகிறார்.

ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஸ்ரீதர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தகவலை பத்திரிகை மூலம் அறிந்தோம். நான் அவரிடம் ரஜினி பெயரையோ ரசிகர் மன்றத்தின் பெயரையோ மன்ற கொடியையோ பயன்படுத்தி தேர்தலில் நிற்கக் கூடாது என்று கூறி இருக்கிறேன் என்றார்.

ஆனால் தான் ரஜினி மன்றம் சார்பில் போட்டியிடுவது என்று அனைத்து ரசிகர்களும் கூடி எடுத்த முடிவு என்று ஸ்ரீதர் கூறுகிறார். இதனால் இவர் வாபஸ் பெறுவாரா, மாட்டாரா என்பது குழப்பமாகியுள்ளது.
Close
 
 

ஓரத்துல ஓரத்துல உக்காந்து பேசலாமா... ஷோபா சந்திரசேகரின் குத்துப் பாட்டு

Shoba Chandrasekhar Lends Her Voice Item Song   
விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் ஒரு நல்ல கிளாசிகல் பாடகி என்று அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் அவரால் குத்துப்பாட்டுக்கும் கோலாகலமாக பாட முடியும் என்பதை திரை ரசிகர்கள் அறிவர்.

தனது மகன் விஜய்யுடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒருகுத்து்ப பாட்டுக்குப் பாடியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் ஒரு குத்துப் பாட்டுக்கு அவர் குரல் கொடுத்துள்ளார்.

தனது கணவர் எஸ்.ஏ.சந்திரேசகரின் உதவியாளரான எஸ்ஏசி ராம்கி இயக்கி வரும் இதயம் திரையரங்கம் படத்தில்தான் இந்தப் பாட்டைப் பாடியுள்ளார் ஷோபா. ஓரத்துல ஓரத்துல உக்காந்து பேசலாமா என்று தொடங்கும் இந்தப் பாடலை அவருடன் இணைந்து பாடியிருப்பவர் நாட்டுப் புற பாடல்களில் பிரபலமாகி வரும் ஜெயமூர்த்தி ஆவார்.

வெஸ்டர்ன் மற்றும் நாட்டுப் புற வடிவம் இணைந்து இந்தக் குத்துப் பாட்டில் வெஸ்டர்ன் பீட்டை ஷோபாவும், நாட்டுப் புற பாடலை ஜெயமூர்த்தியும் பாடியுள்ளனர்.

தேனியில் இந்தப் பாடலை படமாக்கியுள்ளனராம். அப்பாடலுக்காக 100 தாத்தா, பாட்டிகளை கூட்டி வந்து ஆட வைத்து களேபரமாக ஷூட் செய்துள்ளாராம் ராம்கி. பாடலை எழுதியவர் விவேகா. மரியா மனோகர் இசையமைத்துள்ளார்.

ஒரு மெக்கானிக்குக்கும், பணக்காரப் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலைச் சொல்லும் படமாம் இது. தெலுங்கு நடிகர் ஆனந்த் நாயகனாகவும், ஷ்வேதா பாசு நாயகியாகவும் நடித்துள்ளனர். ஜூன் 1ம் தேதி படம் திரைக்கு வருகிறதாம்.
Close
 
 

சொல்வதெல்லாம் உண்மை..: அரங்கிலிருந்து அவுட்டோருக்கு

Zee Tamil Solvathellam Unmai
சொல்வதெல்லாம் உண்மை ரியாலிட்டி நிகழ்ச்சி இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங் எகிறிவிட்டது என்றே கூறவேண்டும். ஏனெனில் கடந்த வாரம் நிகழ்ச்சி ஒளிப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஜீ தமிழ் சேனலுக்குள் நுழைந்து அங்கு பணிபுரியும் பணியாளர்களை அடித்து விட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்ணை இழுத்துச் சென்றதுதான். அதைத்தான் இந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவிலும் அதை ஒளிபரப்பினார்கள்.

ஊடகங்களிடம் பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நிர்மலா பெரியசாமி போலீசாரின் அராஜகச் செயல் என்று தெரிவித்தார். சம்பத்தப்பட்ட பெண்ணோ போலீசாருக்கும், பெற்றோருக்கும் சாபம் விட்டார். போலீஸ் அதிகாரிகளோ தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறினார்கள். இந்த நிகழ்ச்சியின் பரபரப்பான காட்சிகள் பிரபல ஆங்கில சேனல்களில் ஒளிபரப்பானதுதான் இதன் ஹைலைட் ஆக இருந்தது.

இந்த சூட்டோடு சூட்டாக தற்போது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நேரடியாக களம் இறங்கிவிட்டார் நிர்மலா பெரியசாமி. முதன் முறையாக கோயம்புத்தூரில் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டு ஒளிப்பதிவு செய்ய உள்ளனர். கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாமாம்.
Close