'கிஸ்ஸெல்லாம் அடிக்கச் சொன்னா...!'- 'அப்பாவி' அருள்நிதி


வம்சம், உதயன் ஆகிய படங்களுக்குப் பிறகு அருள்நிதி நடிக்கும் புதிய படம் மவுன குரு.

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக இனியா அறிமுகமாகிறார். படத்தின் பாடல் வெளியீட்டுக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர் அருள் நிதி, இனியா உள்ளிட்ட குழுவினர்.

அருள்நிதி கூறுகையில், "ஒரு கோபக்கார ஆனால் அமைதியான இளைஞராக வருகிறேன். இந்தப் படத்தின் கதையை கேட்டபோது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. எனக்கு மிகத் திருப்தியாக இருக்கிறது. படத்திலேயே எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது ஆக்ஷன் காட்சிகள் அல்ல, இனியாவுடனான காதல் காட்சிகள்தான்", என்றார்.

ஏன் அப்படி... ? என்று கேட்டபோது, "பொதுவாகவே பொண்ணுங்க கூட பேசவே எனக்கு ரொம்ப கூச்சம். அப்படிப்பட்ட என்னைப் போய் ஹீரோயினுக்கு கிஸ்ஸெல்லாம் அடிக்கச் சொன்னா... கஷ்டமாத்தானே இருக்கும். ஆனாலும் சமாளிச்சிக்கிட்டேன்," என்றார்.

மவுனகுருவில் நடித்த அனுபவம் குறித்து இனியா கூறுகையில், "ஹீரோ அருள்நிதி அவர் உண்டு அவர் வேலை உண்டுன்னு இருப்பார். படத்தின் தலைப்புக்கேத்தமாதிரி மவுனகுருதான் அவர்," என்றார்.
 

கே.ஆர்.விஜயா, குஷ்பு பாணியில் அஞ்சலி


புன்னகை அரசி கே. ஆர். விஜயா, நடிகை குஷ்பு ஆகியோர் மாதிரி தெளிவான பெண்ணாக இருக்கிறார் நடிகை அஞ்சலி.

நடிகை அஞ்சலி என்றால் நம் நினைவுக்கு வருவது அங்காடித் தெரு படம் தான். அந்த படத்தின் மூலம் தான் அவர் புகழ் பட்டி, தொட்டியெல்லாம் பரவியது. அண்மையில் வெளிவந்த எங்கேயும் காதல் படத்திலும் அவர் நடிப்பு பேசப்பட்டது. அதற்கு காரணம் அவர் கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்கிறார்.

அந்த காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த புன்னகை அரசி கே. ஆர். விஜயா ஹீரோக்களை விட கதாபாத்திரங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு புறம் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய ஜாம்பவான்களோடு ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மறுபுறம் நகைச்சுவை நடிகர் நாகேஷுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். அவரது பாணியில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ளதா என்று பார்த்து, பார்தது நடித்தவர் குஷ்பு.

தற்போது அந்த வரிசையில் நடிகை அஞ்சலி சேர்ந்துள்ளார். ஹீரோ யார் என்று பார்க்காமல், இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் எனக்கு பெயர் வருமா என்று பார்த்து நடிக்கிறார். அதனால் வெயிட்டான கதாபாத்திரங்களாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

உஷாரான பொண்ணு தான்...
 

விஸ்வரூபம் படத்தை தானே தயாரிக்கும் கமல்!


விஸ்வரூபம் படத்தின் தயாரிப்புப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டார் கமல்ஹாஸன்.

இந்தப் படத்தை ஆரம்பத்தில் இயக்குவதாக இருந்தவர் செல்வராகவன். எல்லாம் தயாராக இருந்த நிலையில் தன் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார் செல்வராகவன்.

இயக்குநர் பொறுப்பை கமல் ஹாஸன் ஏற்றார். இப்போது படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் என்ற பொறுப்பையும் தானே ஏற்றுள்ளார் கமல்.

இந்தப் படத்தை முதலில் தயாரித்தது பிவிபி சினிமாஸ் பொட்லூரி பிரசாத். இவர் செல்வராகவனுக்கு நெருக்கமானவரும் கூட. இவரை விஸ்வரூபம் படத் தயாரிப்பாளராக்கியவரே செல்வராகவன்தான்.

இப்போது பிரசாத்தும் விலகிக் கொள்ள, கமல்ஹாஸன் தயாரிப்பாளராகிவிட்டார்.
 

'இசை'யில் இசையமைப்பாளராகும் எஸ் ஜே சூர்யா!


இசையமைப்பாளர் அவதாரமெடுக்கும் இயக்குநர் பட்டியலில் இப்போதைய வரவு எஸ் ஜே சூர்யா.

தான் அடுத்து தயாரித்து, நடித்து இயக்கும் படத்துக்கு இவரே இசையமைக்கவும் செய்கிறார்.

ஆரம்பத்திலிருந்தே எஸ்ஜே சூர்யா படங்களின் வெற்றியில் இசைக்கு பிரதான பங்கிருக்கும். ஆரம்ப இரு படங்களுக்கு தேவாவும், அடுத்தடுத்த படங்களுக்கு ஏ ஆர் ரஹ்மானும் இசையமைத்தனர். கடைசியாக அவர் இயக்கிய புலி படத்துக்கும் ரஹ்மான்தான் இசை.

ஆனால் எஸ்ஜே சூர்யா தயாரித்து இயக்கி நடிக்கும் 'இசை'க்கு அவரே இசையமைக்கவும் செய்கிறார். இதுகுறித்து எஸ்ஜே சூர்யாவிடம் கேட்டபோது, "உண்மைதான். அந்தப் படத்துக்கு நானே இசையமைக்க முடிவு செய்துவிட்டேன். இசையில் எனக்கு உள்ள ஈடுபாட்டைப் பார்த்து, ஏற்கெனவே என்னை இசைமைக்கச் சொன்னார்கள். நான்தான் அப்போதெல்லாம் மறுத்து வந்தேன்," என்றார்.

'இசை' படத்துக்கு முதலில் ரஹ்மான்தான் இசையமைக்கவிருந்தாராம். ஆனால் அவருக்கு வேறு புராஜெக்டுகள் வரிசையாக வரவே, இந்தப் படத்துக்கு நீங்களே இசையமைக்கலாமே என எஸ்ஜே சூர்யாவிடம் சொன்னாராம்.
 

நயன்தாரா பிறந்த நாளில் திருமணத்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு?


நயன்தாரா பிறந்த நாளான நவம்பர் 18-ம் தேதி அவருக்கும் பிரபு தேவாவுக்கும் நடக்கவிருக்கும் திருமணதேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.

பிரபு தேவாவுக்கும் நயன்தாராவுக்கும் வரும் பிப்ரவரியில் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி 14ம் தேதி திருமணம் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், நயன்தாராவின் பிறந்த நாளான நவம்பர் 18-ம் தேதி திருமணத் தேதி அறிவிக்கப்படும் என்று இப்போது கூறத் தொடங்கியுள்ளனர்.

வில்லு படத்திலிருந்து, நயன்தாராவின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் காஸ்ட்லி பரிசு கொடுத்து அசத்துவது பிரபுதேவா ஸ்டைலாம்.

இந்த ஆண்டு பிறந்த நாளுக்கு திருமண தேதி அறிவிப்புதான் சிறப்புப் பரிசு போலிருக்கிறது!
 

அக்கா பிரிட்னி ஸ்பியர்ஸ் வழியில் இசைப் பயணத்தைத் தொடங்கும் தங்கை ஜேமி லின்


அக்கா பிரிட்னி ஸ்பியர்ஸ் பாப் இசையில் கலக்கி வருவதைப் போல அவரது தங்கை ஜேமி லின்னும் தற்போது இசைப் பயணத்தை தொடங்கவுள்ளார் பிரிட்னி ஸ்பியர்ஸ், அமெரிக்காவின் டாப் 10 பாடகிகளில் 8வது இடத்தில் இருப்பவர். இவரது இசைப் பதிவுகள் உலகெங்கும் சக்கை போடு போடுகின்றன. இதுவரை உலகெங்கும் 10 கோடி கேசட்டுகள், டிவிடிக்கள் விற்றுள்ளன. தற்போது அதே போல தானும் சாதனை படைக்க வேண்டும் என்ற வேகத்துடன் களம் குதித்துள்ளார் தங்கை லின்.

அக்காவைப் போலவே உலகப் புகழ் பெற வேண்டும். அதற்காக கடுமையாக முயற்சித்து வருகிறேன் என்றும் லின் கூறுகிறார். 20 வயதாகும் லின்னுக்கு ஒரு மகள் உள்ளாள். மேடி எனப்படும் அக்குழந்தையை வளர்ப்பதற்காக இத்தனை நாட்களாக தனது இசை ஆர்வத்தை அமுக்கி வைத்திருந்த லின் தற்போது முழு மூச்சாக பாடலில் கலக்கப் போகிறாராம்.

கடந்த வாரம் டென்னஸியில் உள்ள தனது சொந்த ஊரான நாஷ்வில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடிப் பாடி அசத்தினார் லின். அவர் பாடிய இரண்டு பாடல்களுக்கும் ஏகப்பட்ட அப்ளாஸ்கள் கிடைத்தனவாம். இடை இடையே குரலில் பிசிறடித்தாலும் கூட அவரது குரல் இனிமையில் அதைமறந்து போய் ரசித்தனர் கூடியிருந்த மக்கள். இந்த நிகழ்ச்சியின்போது லின்னின் பெற்றோர் ஜேமி மற்றும் லின் ஆகியோரும் அங்கிருந்து ரசித்தனர். தங்களது இளைய மகள் பாடிய அழகைப் பார்த்து சிலிர்த்துப் போனார்களாம். அதேபோல ஜேமியின் தாத்தாவும் கூட வந்திருந்து பார்த்து பேத்தியின் பாடலை ரசித்தாராம்.

ரசிகர்களும் சிலிர்த்துப் போக காத்துள்ளனர், கலக்குங்க லின்!.
 

இல்ல இல்ல.... கல்யாண தேதிய நாங்கதான் சொல்லுவோம்! - ஜெனிலியா


சினிமாக்காரர்கள் கல்யாணத்தை மட்டும் இந்தத் தேதியில் நடக்கும் என்று யாரும் கணித்துச் சொல்லிவிட முடியாது. அட.. அது அவர்களே் அறிவிக்கிற தேதியிலாவது நடக்குமா என்றால், அதையும் உறுதியாக சொல்ல முடியாது!

காதலிப்பார்கள்... ஆனால் கேட்டால் இல்லவே இல்லை என்பார்கள். ரகசியமாக திருமணம் நிச்சயமாகியிருக்கும்.. ஆனால் விசாரித்தால் சத்தியமாய் இல்லை, பொய்ச் செய்தி என்பார்கள். ஆனால் ஒருநாள் மாலையும் கழுத்துமாக காட்சி தருவார்கள். இதற்கு முக்கிய காரணம், கிடைக்கிற வாய்ப்பை எல்லாம் பணமாக்கிக் கொள்ள வேண்டும் எனும் அவர்களின் நோக்கமே.

கைவசம் படங்களே இல்லாத நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் காதல் ஜோடிகள், புதிதாக இரண்டு பட வாய்ப்புகள், துபாயில் இரண்டு கச்சேரி, ஏதாவது விளம்பரப் பட வாய்ப்பு என்று வந்தால், அப்படியே திருமணத்தை தள்ளிப் போடுவது வழக்கம். ஆனால் கல்யாண தேதியை அறிவித்துவிட்டால், யாரும் வாய்ப்பு தரமாட்டார்கள். எனவே தொழில்ரீதியான பயம்தான் இந்த ரகசிய காத்தலுக்கு காரணம்.

ஜெனிலியாவின் கல்யாண சமாச்சாரமும் அப்படித்தான் ஆகிவிட்டது. இவருக்கும் இந்தி நடிகர் ரிதேஷுக்கும் நிச்சயமாகிவிட்டாலும், அதை இருவருமே வெளியில் சொல்லவில்லை. அதற்குள் ஜெனிலியாவுக்கு புதுப்புது பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. வேலாயுதம் வேறு எதிர்பாராமல் நன்றாக ஓடுவதாக கூறப்படுவதால், மேலும் இரு பெரிய பட வாய்ப்புகள். இவற்றை விட நிச்சயம் எந்த நடிகைக்கும் மனசு வராதல்லவா...

பிப்ரவரி 4-ம் தேதி இவருக்கும் ரிதேஷுக்கும் திருமணம் என்று முடிவு செய்திருந்த நிலையில், கைவசம் இன்னும் பட வாய்ப்புகள் இருப்பதால், தேதியை தள்ளிப் போட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜெனிலியா கூறுகையில், எனக்கு என்றைக்கு திருமணம் என்பதை நாங்கள்தான் அறிவிப்போம். நிச்சயம் இந்தக் கல்யாணம் ரகசியமாய் நடக்காது. விரைவில் நாங்களே சொல்கிறோம். அதுவரை மீடியா இதுபற்றி எதுவும் சொல்லக் கூடாது, என்றார்.
 

எனக்கு பேத்தி பிறந்திருக்கா: அமிதாப் மகிழ்ச்சி


நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இன்று காலை 10 மணி அளவில் சுக பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக உள்ளார் என்று என்றைக்கு அவரது மாமனார் அமிதாப் அறிவித்தாரோ அன்றில் இருந்து மீடியாக்களின் பார்வை ஐஸ்வர்யா மீது தான். நவம்பர் இரண்டாம் வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் அறிவித்ததில் இருந்து ஐஸ்வர்யாவின் ரசிகர்களும், மீடியாக்களும் எப்பொழுது குழந்தை பிறக்கும், என்ன குழந்தை பிறக்கும் என்று டென்ஷனாக சுற்றிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யவை பிரசவத்திற்காக மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. கடந்த 11-11-11ம் தேதி ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறக்கும் என்று ஆளாளுக்கு பந்தயம் கட்டினர். இறுதியில் இன்று அதிகாலை 4 மணிக்கு அவருக்கு பிரசவ வலி எடுத்தது. இதையடுத்து அவர் பிரசவ வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். 10 மணி அடிக்க சில நிமிடங்களே இருக்கையில் அவருக்கு சுக பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து அபிஷேக், அமிதாப் ஆகியோர் டுவிட்டரில் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

அபிஷேக் டுவீட்:

எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது!!!!!

அமிதாப் டுவீட்:

எனக்கு பேத்தி பிறந்திருக்காள் ....

வாழ்த்துக்கள் ஐஸ், அபி
 

18ம் தேதி தமிழகத்தில் ஜாக்கிசானின் 100வது படம் '1911' வெளியீடு


ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் தயாரித்து நடித்துள்ள '1911' என்ற திரைப்படம், தமிழில் டப் செய்யப்பட்டு வரும் 18ம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீசாகிறது.

அதிரடி சண்டை காட்சிகள் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றவர் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான். இவர் சமீபத்தில் தயாரித்து நடித்த படம் '1911'. ஜாக்கிசானுக்கு இது 100வது படம்.

கடந்த 1644 முதல் 1912ம் ஆண்டு வரை சீனாவில் நடந்த மன்னராட்சிக்கு எதிரான சுதந்திர போராட்டம் குறித்த சம்பவங்களை கருவாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சீன மன்னர் ஆட்சிக்கு எதிராக மக்களை திரட்டிப் போரிடும் வீரர் கதாபாத்திரத்தை ஜாக்கிசான் ஏற்றுள்ளார். ஜாக்கிசானின் படங்களில் இருக்கும் வழக்கமான அதிரடி சண்டை காட்சிகள் இந்த படத்திலும் இடம் பெற்றுள்ளது.

சுமார் ரூ.250 கோடி செலவில் உருவான இந்த படம் தமிழில் டப் செய்து வெளியிடப்படுகிறது. வரும் 18ம் தேதி வால்மார்ட் பிலிம்ஸ் சார்பில் சாய் இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார். இதற்காக 200 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் டப் செய்து வெளியிடப்படும் படங்களுக்கு 200 பிரிண்டுகள் போட்டு வெளியிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 

வாய்ப்பு கிடைத்தால் சினிமாவிலும் தமிழ் வளர்க்கலாம் - கமலுக்கு வைரமுத்து பதில்


சென்னை: சினிமாவில் தமிழை வளர்க்க முடியவில்லையே என நண்பர் கமல்ஹாஸன் வேதனைப்பட்டிருந்தார். அவர் சொன்னதில் உண்மை இருக்கிறது. ஆனால், சரியான வாய்ப்பு வந்தால் சினிமாவில் தமிழ் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, என்றார் வைரமுத்து.

பிரபுதேவா, பிருதிவிராஜ், ஆர்யா, ஜெனிலியா ஆகியோர் நடிப்பில், பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள படம், 'உருமி.' இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.

பாடல்களை நடிகர் விஜய் வெளியிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். விழாவில், வைரமுத்து பேசுகையில், " சந்தோஷ் சிவனின் காமிரா கண்கள் மிகவும் ஆழமானவை. இந்த உலகத்தை அவர் கலைக்கண்களோடு பார்க்கிறார்.

உலகப்பேரழகி லைலா ஒன்றும் அத்தனை அழகியில்லையாம். நிறம், மாநிறமாம். மூக்கு கூட சப்பை மூக்காம். அவள் மீது எப்படி பைத்தியமானாய்? என்று மஜ்னுவை நண்பர்கள் கேட்டபோது, அவன் சொன்னானாம்-'லைலாவை நீங்கள் மஜ்னுவின் கண்களால் பார்க்க வேண்டும்.'

அதைப்போல் இந்த உலகத்தை நாம் சந்தோஷ் சிவனின் கண்களால் பார்க்க வேண்டும். 'உருமி,' ஒரு வரலாற்று படம். வாஸ்கோடகாமா மிளகுக்காக இந்தியாவை அடிமைப்படுத்திய கதையை சொல்லும் படம். இதன் பாடல்களை இலக்கிய மொழியில் எழுதியிருக்கிறேன்.

சினிமாவிலும் தமிழ் வளர்க்கலாம்

சினிமாவில், தமிழ் வளர்ப்பது சிரமமாக இருக்கிறது என்று கமல்ஹாசன் பேசியிருக்கிறார். அவர் சொன்னதில் உண்மை இருக்கிறது. அந்த வலியின் அதே அலைவரிசையில்தான் என் நெஞ்சும் துடிக்கிறது. ஆனால், சினிமாவில் தமிழ் வளர்க்கும் வாய்ப்பு முற்றிலும் அற்றுப்போகவில்லை. அதற்கு இந்த 'உருமி' பாடல்கள் கூட உதாரணமாகலாம்.

இந்த படத்தின் சில பாடல்களுக்கு, நான் சங்க இலக்கிய தமிழைப் பயன்படுத்தியிருக்கிறேன். காதல் கொண்ட ஒரு இளவரசி பாடுகிறாள்- "இருகரம் கொண்டு ஒரு யானையை அடக்கிய வீரன், என் இரு யானைகளை அடக்க என் குடில் வருகின்றான்'' என்ற பொருள் தரும் பாடலை, சங்க தமிழில் எழுதியிருக்கிறேன். மொழி தெரிந்தவர்களுக்கு இதன் அர்த்தம் புரியும்.

காலத்தை வென்ற தமிழ் மொழி

15-ஆம் நூற்றாண்டு கதைக்கு, 2-ஆம் நூற்றாண்டு தமிழை எடுத்து 21-ஆம் நூற்றாண்டில் எழுத முடிகிறது என்றால், தமிழ் காலம் கடந்த மொழி என்பது மீண்டும் விளங்குகிறது அல்லவா?

சங்க தமிழை ஏற்றுக்கொண்ட சந்தோஷ் சிவனுக்கு நன்றி சொல்கிறேன்.

வரலாறு என்பது இன்று கருவாடுதான். கருவாடும் ஒரு காலத்தில் மீன் என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த படம், வெறும் வரலாறு மட்டுமல்ல. நிகழ்காலத்துக்கு பாடமாகவும் விளங்குகிறது.

கார்ப்பொரேட் கொள்ளையை அனுமதிக்கலாமா?

அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய அதே இந்தியா, இன்று அன்னிய முதலீடுகளை அளவுக்கு மீறி இந்தியாவுக்குள் அனுமதிப்பது ஏன்? கார்ப்பொரேட் நிறுவனங்கள், வளரும் நாடுகளின் நிலங்களை கொள்ளையடிப்பது ஏன்? இந்த கேள்விகளை பாராளுமன்றத்தை நோக்கி, ஐ.நா.சபையை நோக்கி வீசுகிறது, `உருமி.'

இந்த படம் புரிந்துகொள்ளப்படுவதே இதன் முதல் வெற்றி,'' என்றார் வைரமுத்து.

விழாவில் நடிகர்கள் விஜய், அரவிந்தசாமி, பரத், டைரக்டர்கள் மணிரத்னம், எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் தீபக்தேவ், வசனகர்த்தா சசிகுமரன், நடிகர் பிருதிவிராஜின் தாயாரும், நடிகையுமான மல்லிகா சுகுமாரன், பட அதிபர் சாஜி நடேசன், ஒளிப்பதிவாளர்-இயக்குநர் சந்தோஷ்சிவன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இந்தப் படத்தை தயாரித்திருப்பவர் பிருத்விராஜின் தாயார் மல்லிகா சுகுமாறன்தான். தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் அவர் இந்த விழாவில் வெகு இயல்பாக, சுத்தமான தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியது அனைவரையும் கவர்ந்தது. அவரது பேச்சுக்கு ஏக கைத்தட்டல்கள்!
 

திருமணத்துக்குப் பின் பஹ்ரைனில் செட்டிலாகிறோம் - மம்தா


திருமணத்துக்குப் பிறகு, கணவரோடு பஹ்ரைனில் செட்டிலாகப் போவதாக நடிகையும் பாடகியுமான மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் நடித்துவரும் பிரபல நடிகையான மம்தாவுக்கும் அவரது நண்பர் தொழிலதிபர் பிரஜித் கர்த்தாக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

இருவருக்கும் சமீபத்தில் கொஞ்சி அருகே உள்ள மணமகன் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் டிசம்பர் 28 -ம் தேதி திருமணம் நடக்கிறது.

இந்தத் திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். டிசம்பர் 30-ம் தேதி கொச்சியில் வரவேற்பு நடக்கிறது. இதில் திரையுலகினர் பங்கேற்கிறார்கள்.

திருமணத்துக்குப் பின் நடிப்பீர்களா என்று மம்தாவிடம் கேட்டபோது, "இல்லை, நடிக்க மாட்டேன். திருமணத்துக்குப்பின் பக்ரைனில் கணவருடன் செட்டிலாகப் போகிறேன். அதற்குள் என் கமிட்மெண்டுகளை முடித்துவிடுவேன்," என்றார்.
 

நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்.பி. நடிகர் ரிதீஷ் குமார் கைது


சென்னை: நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்.பியும், நடிகரும், முன்னாள் திமுக அமைச்சர் சுப, தங்கவேலனின் பேரனுமான ரிதீஷ்குமார் இன்று கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரிதீஷ்குமார். சில படங்களில் நடித்துள்ளார். இவரது தாத்தா சுப.தங்கவேலன் திமுக அமைச்சராக இருந்தவர். இந்த நிலையில் இன்று காலை ரிதீஷ் குமாரை போலீஸார் நிலஅபகரிப்பு வழக்கில் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பாப்பாங்குடி கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவர் போலீஸில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், தனக்குச் சொந்தமான 1.47 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ரிதீஷ்குமார் பறித்துக் கொண்டதாகவும், அதை மீட்டுத் தருமாறும் அவர் கோரியிருந்தார்.

இதன் பேரில்வழக்குப் பதிவு செய்த போலீஸார் ரிதீஷ் குமாரைக் கைது செய்துள்ளனர்.

கடந்த திமுக ஆட்சியின்போது யாரும் எதிர்பாராத வகையில் எம்.பி சீட் கொடுக்கப்பட்டு அரசியலில் நுழைக்கப்பட்டார் ரிதீஷ்குமார்.இதனால் ராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் மேலிடத்தில் தனது தாத்தாவுக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி எம்.பியானார் ரிதீஷ்குமார்.

திரைத் துறையிலும் கூட சில காலம் இவரது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. தனது முதல் படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்காக பிரியாணியும், கையில் காசும் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ரிதீஷ்குமார் என்பது நினைவிருக்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது பல்வேறு மோதல்களில் ஈடுபட்டு சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார் ரிதீஷ் குமார்.இதுதொடர்பாக சில வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

நேற்றுதான் மக்கள் நலப் பணியாளர்களுக்கு ஆதரவாக ராமநாதபுரத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஆக்ரோஷமாக குரல் கொடுத்தார் ரிதீஷ். இந்த நிலையில் இன்று போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நிலஅபகரிப்பில் ஈடுபட்டவர்களை வளைத்து வளைத்துப் பிடித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் திமுகவினர் ஆவர். பல முக்கியத் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டனர். சிலர் ஜாமீனில் வெளியே உள்ளனர், பலர் உள்ளேயே இருக்கின்றனர்.

இந்த நிலையில் எம்.பி. ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

நான் அண்ணன் இல்லை, சல்மான் எரிச்சல்!


எனக்கு இரண்டு தங்கச்சிங்க இருக்காங்க. அது போதும், இனியும் யாரும் என்னை அண்ணா என்று கூப்பிட வேண்டாம் என்று எரிச்சலுடன் கூறுகிறாராம் சல்மான் கான்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வரும் டிசம்பர் மாதம் 27ம் தேதி தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கிறார். அவரை ரசிகர்கள், நண்பர்கள், திரையுலகினர் என பலரும் அன்புடன் அண்ணா என்றே அழைக்கின்றனர். இதைப் பார்த்த கதாநாயகிகளும் சேஃபாக சல்மான் அண்ணா என்று அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

இன்னும் திருமணம் ஆகாத தன்னை நடிகைகள் வாய் நிறைய அண்ணா என்று அழைப்பது சல்மானுக்கு எரிச்சலூட்டுகிறது.

அண்மையில் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சல்மான் கான் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தென்னிந்திய நடிகை ஒருவர் சல்மானை அண்ணா என்று அழைத்துள்ளார். அவ்வளவு தான் போங்க, சல்மானுக்கு கோபம் வந்துவிட்டது.

எனக்கு ஏற்கனவே 2 சகோதரிகள் உள்ளனர். அதுவே போதும். இனி அண்ணா என்று அழைக்காதீர்கள். சல்மான் என்று கூப்பிட்டால் போதும் என்று பொரிந்து தள்ளியுள்ளார்.

சல்மான் கானை அவரைவிட பெரியவரான பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியும் அண்ணா என்று அழைத்தவுடன் அவருக்கு ஆத்திரம் தாங்கமுடியவில்லை. இது என்னடா என்னைய விட வயதில் மூத்தவரெல்லாம் அண்ணா என்கிறார் என்று நொந்துவிட்டார்.

நான் உங்க திருமணத்திற்கு வந்தபோது எனக்கு 10வயது தான். அப்படி இருக்கையில் நீங்கள் ஏன் என்னை அண்ணா என்கிறீர்கள் என்று சுனிலிடம் கேட்டுள்ளார் சல்லு.