5000 திரைகளில் நாளை ஷாருக்கானின் 'ரா ஒன்' திரையீடு


பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானின் ரா ஒன் திரைப்படம், வரலாறு காணாத வகையில் உலகம் முழுவதும் 5000 திரைகளில் நாளை திரைக்கு வருகிறது.

பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. மிகப் பெரிய அளவில் இப்படத்துக்கான புரமோஷன்களை ஷாருக் கான் மற்றும் அவரது அணியினர் முடுக்கி விட்டுள்ளனர். கடந்த ஆறு மாதமாகவே இந்த புரமோஷன் வேலைகள் நடந்து வந்தன. தீபாவளி தினமான நாளை இந்தப் படம் திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் 5000 திரைகளில் படத்தைத் திரையிடவுள்ளனர். இதுவரை எந்த இந்திப் படமும் இந்த அளவுக்கு அதிகமான திரைகளில் திரையிடப்படட்டதில்லையாம். இந்தியாவில் மட்டும் 3500 திரைகளில் படம் திரையிடப்படவுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு ரா ஒன்னுக்கு மிக்ப் பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஷாருக் கான் ரசிகர்கள் மட்டுமல்லாமல், பாலிவுட் பிரபலங்களும் எதிர்பார்க்கின்றனர். தீபாவளிக்கு முன்பு வரை டல்லடித்துக் கொண்டிருந்த பாலிவுட்டுக்கு ரா ஒன் எனர்ஜி பூஸ்டராக அமையும் என்று பிரபல விநியோகஸ்தர் ரமேஷ் சிப்பி தெரிவித்துள்ளார். அடுத்த ஒரு வாரத்திற்கும், அதைத் தாண்டியும் ரா ஒன் பெரும் வசூலை வாரிக் குவிக்கும் என கருதுகிறோம். இது பாலிவுட்டுக்கு நல்ல விஷயமாக இருக்கும் என்கிறார் அவர்.

இதற்கிடையே வாய்ப்பு கிடைத்தால், அனுமதி கிடைத்தால், தங்களது திரைகள் அனைத்திலும் ரா ஒன் படத்தை காட்டத் தயாராக இருப்பதாக பல்வேறு மல்டிபிளக்ஸ் அரங்கங்கள் அறிவித்துள்ளன.

தமிழகத்திலும் கூட ரா ஒன் திரைப்படம் பெரிய அளவில் திரைக்கு வருகிறது. தமிழ் சூப்பர் ஸ்டார்களான விஜய், சூர்யா ஆகிய படங்களுடன் மோதும் அளவுக்கு அதிக அளவிலான தியேட்டர்களில் ஷாருக் கானின் ரா ஒன் சென்னையில் ரிலீஸாகிறது. இதனால் தமிழிலும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரஜினிகாந்த் இந்தப் படத்தில் கெளரவக் காட்சியில் நடித்திருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
 

விஜய்யின் வேலாயுதம் திரைப்படம் இன்டர்நெட்டில் வெளியீடு- விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி


சென்னை: விஜய், ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா உள்ளிட்டோர் நடித்து, ஜெயம் ராஜா இயக்கத்தில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்புகளுடன் நாளை வெளியாகும் வேலாயுதம் திரைப்படத்தை சில விஷமிகள் இன்றே இணையதளங்களில் வெளியிட்டு விட்டனர். இதனால் விஜய் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட படம் வேலாயுதம். விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ளன. படமும் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.

தீபாவளிப் பண்டிகையன்று, நாளை இப்படம் திரைக்கு வருகிறது. அதேபோல சூர்யாவின் 7ஆம் அறிவு படமும் நாளயே திரைக்கு வருகிறது. இந்த இரு படங்களுக்கும் இடையேதான் கடும் மோதல் நிலவுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வேலாயுதம் படத்தை சில விஷமிகள் இணையதளத்தில் பரப்பி விட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் விஜய் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
 

பட்டாசு வெடிக்காதீங்க- ஷில்பா அழைப்பு


பட்டாசு வெடிப்பதை அறவே வெறுக்கிறாராம் ஷில்பா ஷெட்டி. கடந்த பல ஆண்டுகளாகவே இவர் தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பதில்லையாம்.

சரி சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்த அக்கறை உள்ளவர் போல என்று நினைத்தால் அதுதான் இல்லை. மாறாக, பட்டாசுக்காக பணத்தை செலவழிப்பதை விரும்பவில்லை என்பதால் பட்டாசு வெடிப்பதில்லையாம் ஷில்பா.

இதுகுறித்து அவர் கூறுகையில், சிறு வயதில் நானும் மற்றவர்களைப் போல பட்டாசு வெடிக்கத்தான் செய்தேன். ஆனால் வளர்ந்த பிறகு அதை விட்டு விட்டேன். பல ஏழைக் குழந்தைகள் பட்டாசு வெடிக்க முடியாமல் வேடிக்கை பார்ப்பது எனக்கு வேதனை தந்தது. இதனால் நான் பட்டாசு வெடிப்பது என்பது ஆடம்பரச் செயல் என்று உணர்ந்தேன். காசு இருப்பதற்காக பட்டாசு வெடிப்பது என்பது தவறு என்று புரிந்து அதை விட்டு விட்டேன்.

எனது தந்தையும் கூட பட்டாசைக் கொளுத்துவது என்பது பணத்தைக் கொளுத்துவது போல என்பார். எனவே நான் பட்டாசு வெடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தேன். இதனால் எனக்குக் கிடைக்கும் பட்டாசுகளை வசதியில்லாத ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுத்து விடுவேன். அதில் எனக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கும்.

இப்போது ஏழைக் குழந்தைகளுக்கு இனிப்பு, நல்ல சாப்பாடு போன்றவற்றைத் தருகிறேன். நம்மைச் சுற்றிலும் உள்ளவர்கள் நல்ல உடையுடன் சந்தோஷமாக இருக்கும்போது ஏழைக் குழந்தைகள் மட்டும் ஏக்கத்துடன் பார்ப்பது மிக மிக கவலை தருகிறது எனக்கு.

அனைவரிடமும் மகிழ்ச்சியைப் பரப்பும் நாளாக தீபாவளி அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம் என்கிறார் ஷில்பா.
 

என் தோழி நமீதா... - உருகும் சினேகா


நான் கவலையோடு இருக்கும்போது எனக்கு ஆறுதலாக இருப்பவர் என் அன்புத் தோழி நமீதாதான், என்று கூறியுள்ளார் சினேகா.

நான் அவனில்லை படத்தில் நடித்தது முதல் நடிகைகள் சினேகாவும் நமீதாவும் நெருங்கிய தோழிகள். நமீதா சென்னை வரும் போதல்லாம் சினேகாவை சந்திக்கிறார். இருவரும் ஒன்றாக விருந்து சாப்பிடுகிறார்கள். சமீபத்தில் கலை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்றனர்.

அங்கு இணைந்து ஆட்டம் பாட்டு என கலக்கினர். லண்டன் கடை வீதிகளிலும் ஒன்றாக சுற்றி ஷாப்பிங் செய்தனர்.

நமீதாவுடனான நட்பு பற்றி சினேகா கூறும்போது, "நடிகர், நடிகைகள் பிரபலங்களாக இருந்தாலும் நாங்களும் சாதாரண மனிதர்கள்தான். எங்களுக்கும் மற்றவர்கள் போல் எல்லா உணர்ச்சிகளும் உள்ளது.

எனக்கு கவலைகள் மன அழுத்தங்கள் வரும் போதெல்லாம் மும்பையில் இருக்கும் நமீதாவுக்குதான் போன் செய்வேன். அவர் எனக்கு ஆறுதலான வார்த்தைகளை சொல்வார். நான் மனம்விட்டு பேசுகிற தோழியாக நமீதா இருக்கிறார். அவரை மிகவும் நேசிக்கிறேன். எனது அம்மா, அப்பாவை தாண்டி எனக்குள்ள ஒரே பலம். நமீதாவின் நட்பு," என்றார்.

பலமான நட்புதான்!
 

செல்போனில் ரசிகர்கள் தொந்தரவா...? - மறுக்கும் ப்ரியாமணி


செல்போனில் ரசிகர்கள் தொல்லை கொடுப்பதாக வந்த செய்தியை மறுத்துள்ளார் ப்ரியாமணி.

முத்தழகி ப்ரியாமணிக்கு தினமும் நிறைய ரசிகர்கள் செல்போனில் ஐ லவ்யூ சொல்கிறார்கள் என்றும், சிலர் ஆர்வ மிகுதியில் செக்ஸியாக ஜோக்குகள் அனுப்புகிறார்கள், ன்னும் சிலரோ ஆபாச படங்கள், எஸ்எம்எஸ்களை அனுப்பி தொந்தரவு செய்வதாகவும் செய்தி வெளியானது.

இந்த தொந்தரவில் இருந்து மீள முடியாமல் பிரியாமணி தவிப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

இதனால் அதிக நேரம் போனை அணைத்துவைத்துவிடுகிறாராம் ப்ரியாமணி. இரவு நேரங்களிலும் போன் செய்து டார்ச்சர் செய்தார்களாம். தொல்லை கொடுத்தவர்களை போலீசார் பிடித்து விட்டனர் என்றும் தற்போது பிரியா மணி அந்த தொந்தரவிலிருந்து இருந்து மீண்டு விட்டார் என்றும் நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இதையெல்லாம் மறுத்துவிட்டார் ப்ரியாமணி.

இதுபற்றி பிரியாமணி கூறுகையில், "நான் பழைய செல்போன் நம்பரைத்தான் பயன்படுத்துகிறேன். நண்பர்களுடன் பேசுவதையும் நிறுத்தவில்லை. படப்பிடிப்புக்கு வழக்கமாக செல்கிறேன். என்னை சுற்றி உள்ள நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

எனக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பியும் பேசியும் தொல்லைகள் செய்வதாக செய்தி பரவியுள்ளது. அப்படி எதுவும் இல்லை. கற்பனையாக அந்த செய்தி பரப்பப்பட்டு உள்ளது. நான் தற்போது தெலுங்கு, கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன்," என்றார் அவர்.
 

சன் டிவி மூலம் நாளை தமிழர்களைக் கலக்க வரும் வடிவேலு- அதிரடியான தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி!


சட்டசபைத் தேர்தல் முடிந்த கையோடு கூட்டுக்குள் போய் விட்ட காமெடிப் புயல் வடிவேலு, நாளை சன் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியின் மூலம் உலகத் தமிழர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்க வருகிறார். மகா அதிரடியாக உருவாகியுள்ள இந்த காமெடி நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் வடிவேலுவின் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதுடன், அவரின் ஒட்டுமொத்த இமேஜையும் அப்படியே தூக்கி நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா கண்ட அதிரடி காமெடி சூப்பர் ஸ்டார்களில் வடிவேலுவுக்கு முக்கிய இடம் உண்டு. தமிழ்த் திரையுலகில் காமெடியில் அதகளம் செய்த முக்கிய ஸ்டார்களில் வடிவேலுவும் ஒருவர். அவரது பாணியில் சொல்வதானால், எல்லாம் நல்லாத்தான் போய்க் கொண்டிருந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் மூலம் அவரது திரையுலகில் பெரும் புயல் வீசி விட்டது.

சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரக் களம் கண்ட வடிவேலு, விஜயகாந்த்தைப் போட்டுக் கடுமையாக தாக்கி அனைவரையும் அதிர வைத்தார். அவரது பேச்சைப் பார்த்தால் திமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறுமோ என்ற எண்ணம்தான் அத்தனை பேரிடமும் இருந்தது. காரணம், விஜயகாந்த் பிரசாரத்தின்போது செய்த சின்னச் சின்னத் தவறுகளையும் மெகா மகா டைமிங்கோடு எடுத்து வைத்து பிரசாரத்தில் சூடேற்றினார் வடிவேலு. அதை மக்களும் ரசிக்கத்தான் செய்தார்கள். ஆனால் முடிவுதான் வடிவேலுவை திரையுலகிலிருந்து முடக்கி வைத்து விட்டது.

தேர்தல் முடிவுக்குப் பின்னர் அமைதியாக ஒதுங்கிக் கொண்ட வடிவேலு அதன் பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அவரே வந்த வாய்ப்புகளையெல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டார். எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் வடிவேலுவின் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றம். சினிமாக்களிலோ மாறி மாறி சந்தானத்தின் ஒரே டைப்பான காமெடியை மட்டுமே ரசிக்கும் நிலை ரசிகர்களுக்கு.

இந்த நிலையில் மறுபடியும் அதே துள்ளலுடன், துடிப்புடன், உற்சாகக் களிப்புடன் படையெடுத்து வருகிறார் வடிவேலு. இந்த முறை சின்னத் திரையில். சன் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியின் முக்கிய ஹைலைட்டாக வடிவேலுவின் காமெடி நிகழ்ச்சியை வைத்துள்ளனர். காட்டுக்குள் தீபாவளி என்ற பெயரிலான அந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டம் அட்டக்கட்டி மலை கிராமத்தில் மலை வாழ் மக்களுடன் சேர்ந்து வடிவேலு அதிரடியாக தீபாவளியைக் கொண்டாடும் அந்த நிகழ்ச்சியை ரசிகர்களுக்காக நாளை ஸ்பெஷல் நிகழ்ச்சியாக சன் டிவி ஒளிபரப்புகிறது.

நாளை மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த காட்டுக்குள் தீபாவளி காமெடி நிகழ்ச்சி வடிவேலு ரசிகர்களுக்கு சரியான விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
 

மகேஷ்பாபுவுக்கு நான் அண்ணியா... சேச்சே! - த்ரிஷா வெடுக்


மகேஷ் பாபுவுக்கு அண்ணியாக ஒரு படத்தில் தான் நடிக்கப்போவதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை த்ரிஷா.

மங்காத்தாவுக்குப் பின் த்ரிஷா நடித்து வரும் தெலுங்குப் படம் கங்கா. ஏற்கெனவே பாடிகார்ட் படத்தை முடித்துவிட்டார்.

இந்தப் படங்களுக்குப் பிறகு தெலுங்கில் அவருக்கு வாய்ப்புகளில்லை. தமிழில் விஷாலுக்கு ஜெடியாக சமரன் படத்தில் நடித்து வருகிறார். அதற்குப் பிறகு வேறு படம் இல்லை.

இந்த நிலையில் திரிஷாவை தெலுங்கு படமொன்றில் அண்ணி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருப்பதாக வதந்தி பரவியது. பட வாய்ப்புகள் இல்லாததால் அண்ணி கேரக்ட்டருக்கு இறங்கி வந்துள்ளதாகவும் கூறப்பட்டது. அப்படத்தில் வெங்கடேஷ், மகேஷ் பாபு என இரு நாயகர்கள் நடிக்கின்றனர்.

வெங்கடேஷின் தம்பியாக மகேஷ்பாபு நடிக்கிறார். வெங்கடேஷ் மனைவி வேடத்தில் திரிஷா நடிக்கிறார். அதாவது மகேஷ் பாபுவின் அண்ணியாக வருகிறார் என்று செய்திகள் வெளியாயின.

இது பற்றி திரிஷாவிடம் கேட்டதுமே கடுப்பாகிவிட்டார். அவர் கூறுகையில், "மகேஷ்பாபு, வெங்கடேஷ் இணைந்து நடிக்கும் படத்துக்கு நான் ஒப்பந்த மாகவில்லை. எனவே மகேஷ்பாபுவின் அண்ணியாக நடிக்கிறேன் என்ற கேள்வியே எழவில்லை. விஷால் ஜோடியாக நடிக்கும் சமரன் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் அமைந்துள்ளது. திறமையை காட்டுவதற்கு இப்படத்தில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்தப் படத்துக்குப் பிறகே வேறு படம்," என்றார்.
 

தமிழ் சினிமாக்காரர்களுக்கு பாலிவுட் தயாரிப்பாளர்கள் வழிகாட்ட வேண்டும்! - கலைப்புலி தாணு


தமிழ் சினிமாவிலிருந்து பாலிவுட் போய் படம் தயாரிக்க ஆசைப்படுபவர்களுக்கு பாலிவுட் தயாரிப்பாளர்கள் நல்ல வழி காட்ட வேண்டும், என்றார் கலைப்புலி தாணு.

கபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில், இந்திப் பட இயக்குநர் டினு வர்மா இயக்கியுள்ள புதிய படம் காட்டுப் புலி. தமிழ் மற்றும் இந்தியில் இந்தப் படம் வெளியாகிறது.

தயாரிப்பாளர் சங்கப் பொருளாளரும் முன்னணி தயாரிப்பாளருமான கலைப்புலி தாணு இந்தப் படத்தை தமிழில் வெளியிடும் பொறுப்பை ஏற்றுள்ளார்.

அர்ஜுன், சாயாலி பகத் மற்றும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படம், ஒரு ஆக்ஷன் த்ரில்லர். ஒரு காட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் டாக்டர் தம்பதியும் மூன்று இளம் ஜோடிகளும் எதிர்கொள்ளும் பிரச்சினைதான் இந்தப் படத்தின் கதை.

டினு வர்மா பல பிரமாண்ட இந்திப் படங்கள் மற்றும் முன்னணி நடிகர்களுடன் ஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றியவர். அவரது முதல் தமிழ்ப் படம் இது.

காட்டுப்புலியின் இசை வெளியீட்டு விழா சென்னை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் நடந்தது. விழாவில் அர்ஜூன், சாயாலி பகத், இயக்குநர் எஸ்ஜே சூர்யா, தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன், படத்தின் வசனம் பாடல்களை எழுதிய ஏஆர்பி ஜெயராம் உள்பட பலரும் பங்கேற்றனர்.

விழாவில் இசை குறுந்தகடை வெளியிட்டுப் பேசிய கலைப்புலி தாணு, "இந்தப் படம் மிகச் சிறந்த ஆக்ஷன் த்ரில்லராக வந்துள்ளது. படத்தைப் பார்த்து மிகவும் ஈர்ப்பாகி, அதை வெளியிடும் பொறுப்பை ஏற்றேன்.

படம் மிகச் சிறப்பாக ஓடும் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை. நம்மை நம்பி தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் டினு வர்மா, நல்ல லாபத்துடன்தான் மும்பை திரும்ப வேண்டும் என ஆசைப்படுகிறேன். எனவே இந்தப் படத்தின் லாபம் அவருக்கே சேரட்டும். ஆனால் நஷ்டமடைய விடமாட்டேன்.

நான் தயாரித்த 25 படங்களின் உரிமையையும் சமீபத்தில் பாலிவுட்டின் ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கேட்டது. நான் உடனே அனைத்தையும் கொடுத்துவிட்டேன். அதற்காக ஒரு பெரும் தொகையை எனக்கு அந்த நிறுவனம் காசோலையாகக் கொடுத்தது. ஆனால் நான் அதை வாங்கவில்லை.

பதிலுக்கு ஒரு கோரிக்கையை மட்டும் வைத்தேன். தமிழிலிருந்து பலர் பாலிவுட்டுக்குப் போய் படம் எடுக்க விரும்புகின்றனர். அப்படி வருபவர்களுக்கு நல்ல வழியை காட்ட வேண்டும், சரியாக வழிநடத்த வேண்டும். வேறு ஒன்றும் வேண்டாம் என்று கூறினேன். அவர்களும் மகிழ்ச்சியுடன் சம்மதித்ததனர்.

இந்தப் படத்தின் நாயகன் அர்ஜுன் எனது சகோதரர். அவ்ர குடும்பத்தில் நானும் ஒருவன். அவரது இந்தப் படம் மிகச் சிறப்பாக வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்றார்.

விழாவில் பேசிய அர்ஜூன், "கலைப்புலி தாணுதான் எனக்கு ஆக்ஷன் கிங் பட்டத்தைக் கொடுத்தார். அவர் படத்தில் என்றைக்கும் நடிக்க நான் தயார்.

இன்றைக்கு படம் பண்ணுவது பெரிதல்ல. அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே பெரிது. அதை உணர்ந்து, அதற்கு தகுதியான கலைப்புலி தாணுவிடம் இந்தப் படத்தை ஒப்படைத்திருக்கலாம். இந்தப் படத்தின் வெற்றிக்கு இது ஒன்றே போதும்," என்றார்.
 

வெற்றி மாறன் படத்தில் சிம்பு - அமலா - ஆன்ட்ரியா!


தனுஷ் படத்திலிருந்து வெளியேறிய அமலா பால், அடுத்து அதை விட பெரிய படமான 'வட சென்னை'யில் சிம்புவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆறு தேசிய விருதுகளை வென்ற ஆடுகளம் படத்துக்குப் பின் வெற்றி மாறன் இயக்கும் படம்தான் வட சென்னை.

இதுவரை வெற்றி மாறன் இயக்கிய இரண்டு படங்களிலும் தனுஷ்தான் ஹீரோ. மூன்றாவது படத்திலும் அவர்தான் நடிப்பார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், சிம்பு அந்த இடத்துக்கு வந்துள்ளார்.

தெலுங்கு நடிகர் டக்குபதி ராணாவுக்கும் இந்தப் படத்தில் முக்கிய கேரக்டர் உண்டாம்.

சிம்பு ஜோடியாக அமலாபாலை தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. ராணாவுக்கு ஜோடியாக ஆன்ட்ரியா வருகிறார். அமலா, ஆன்ட்ரியாவுக்கு இதில் சமமான கேரக்டராம். குறிப்பாக அமலாவுக்கு இணையாக காட்சிகள் வைத்தால்தான் நடிப்பேன் என்ற கண்டிஷனோடுதான் ஆன்ட்ரியா நடிக்கவே ஒப்பந்தமானாராம்.

'ஒஸ்தி' முடிந்ததும் வட சென்னை பட வேலையை துவக்குகின்றனர்.

அப்போ வேட்டை மன்னன் மற்றும் கெட்டவன்?
 

விக்ரம் கனவில் ஸ்ரேயா - ரீமா இத்தாலியில் குத்தாட்டம்!


ராஜபாட்டை படத்தில் ஹீரோ விக்ரம் கனவில் வரும் குத்துப் பாட்டில் ரீமா சென்னும் ஸ்ரேயாவும் குத்தாட்டம் போடுவதாக ஒரு காட்சியை வைத்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

இதுகுறித்து இயக்குநர் சுசீந்திரன் கூறுகையில், "ராஜபாட்டை பக்கா கமர்சியல் படம். விக்ரம் ஜிம்பாய் கேரக்டரில் வருகிறார். மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. நான் சொன்னதை உள்வாங்கி விக்ரம் மிக பிரமாதமாக நடித்துள்ளார். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். அவருக்கு இன்னும் ஒரு கதை சொல்லி உள்ளேன். கண்டிப்பாக மீண்டும் படம் செய்யலாம் என்று கூறியுள்ளார்.

விக்ரம் கனவு காண்பது போன்ற பாடல் காட்சியொன்று உள்ளது. இதில் ஸ்ரேயா, ரீமாசென் இருவரும் நடிகைகளாகவே வந்து நடனம் ஆடுகின்றனர். இப்பாடல் காட்சி இத்தாலியில் படமாக உள்ளது.

அடுத்து விஷ்ணுவை வைத்து படம் இயக்குகிறேன். இது தெலுங்கிலும் தயாராகிறது. தெலுங்கில் வேறு ஹீரோ.

எனக்கென்று தனி பாணி கிடையாது. வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல என்று வித்தியாசமான கதைகளை படமாக்குவதே திட்டம்," என்றார் சுசீந்திரன்.

ராஜபாட்டையில் ரீமா - ஸ்ரேயா இணைந்து குத்தாட்டம் போடுகின்றனர் என நாம் முதலில் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் அப்போது இயக்குநர் சுசீந்திரன் இதை மறுத்து பேட்டியளித்தது நினைவிருக்கலாம். இப்போது அவரே அந்த செய்தியை ஒப்புக் கொண்டுள்ளார்!