பாலிவுட்டில் கவர்ச்சி காட்டுவது பற்றி எழுதக் கூடாது- நிருபர்களுக்கு டோஸ் விடும் ஆசின்


நடிகை ஆசின் தான் பாலிவுட்டில் மட்டும் தாராளமாய் கவர்ச்சி காட்டுவது பற்றி எழுதும் தமிழ் பத்திரிக்கை நிருபர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு டோஸ் விட ஆரம்பித்துள்ளாராம்.

கோலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த ஆசின், புகழ் மற்றும் பண ஆசையால் திடீர் என்று பாலிவுட்டிற்குத் தாவினார். அங்கு அவரால் கொடிக்கம்பத்தைக் கூட கட்ட முடியவில்லை. இருந்தாலும் அயராது, தளராது, சோர்வடையாது முயற்சி செய்து வருகிறார். வாய்ப்புகளைப் பெற இந்திப் படங்களில் மட்டும் தாராளமாய் கவர்ச்சி காட்டி நடிக்கிறார். பிகினி என்றாலும் பிரமாதமாக நடிக்கத் தயார் என்கிறார். மொத்தத்தில் பாலிவுட்டில் ஆசினின் 'லெவலே' மாறிப் போய் விட்டது.

இதையெல்லாம் பார்க்கும் தமிழ் ரசிகர்கள் அடேங்கப்பா ஆசினுக்கு ஓரவஞ்சனையாப் பாரு, அங்கு மட்டும் எவ்வளவு கவர்ச்சியாக நடிக்கிறார் என்று கூற, இதுதொடர்பாக செய்தியாளர்களும் செய்தி வெளியிடுகின்றனர். இதைப் பார்க்கும் ஆசினுக்கு வயிறு எரிகிறதாம். தனது தரப்பில் இருந்து யாரையாவது அவ்வாறு எழுதும் பத்திரிக்கையாளருக்கு போன் செய்து டோஸ் கொடுக்கச் சொல்கிறாராம்.

உண்மையைத் தானே எழுதுகிறோம் என்று அவர்கள் கூறினால், விளக்கம் என்ற பெயரில் எக்ஸ்ட்ரா டோஸ் விடுகிறாராம்.

செய்தியாளர்களுக்கு ஆசின் டோஸ் கொடுப்பது இருக்கட்டும், அவரது செயல்கள் ஓவர்டோஸ் ஆகி விடாமல் பார்த்துக் கொள்ளட்டும் முதலில்!
 

படிப்பையும், நடிப்பையும் சமமாக பார்க்கும் ஹர்ஷிகா பூனச்சா


கேரளத்து நடிகைகள்தான் பெரும்பாலும் படிப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் குடகு நாட்டிலிருந்து நடிக்க வந்துள்ள ஹர்ஷிகா பூனச்சாவும் படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

குடகு நாட்டைச் சேர்ந்த இந்த அழகுப் பெண் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் ஆனந்தத் தொல்லை என்ற படத்தில் தலை காட்டியுள்ளார். அழகு கொட்டிக் கிடக்கும் இவருக்கு நடிப்போடு, படிப்பும் ரொம்ப முக்கியமாம். அதனால்தான் நடிப்போடு என்ஜீனியரிங் படிப்பையும் தடபுடலாக படித்து முடித்து என்ஜீனியர் என்ற பெருமையையும் அடைந்துள்ளார்.

இவர் கன்னடப் படங்களில் நடிக்க வந்தபோது பியூசி படித்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர் காம்பிரிடிஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் இணைந்து என்ஜீனியரிங்கையும் முடித்து விட்டார்.

அங்கு படித்தபோது ஆசிரியர்களும் சரி, சக மாணவர்களும் சரி ஹர்ஷிகா படிப்பிலும் பட்டையைக் கிளப்பியதைப் பார்த்து பாராட்டித் தள்ளி விட்டார்களாம்.

சரி படிப்பு, நடிப்பு எது பெஸ்ட் என்று கேட்டால், எனக்கு இரண்டுமே கண்கள் போலத்தான். இருந்தாலும், என்ஜீனியரிங் படித்தபோது படப்பிடிப்புகளுக்கும் போனபோது மிகவும் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் நான் விடவில்லை. நடிப்புக்கு என்ன முக்கியத்துவம் கொடுத்தேனோ அதே முக்கியத்துவத்தை நான் படிப்புக்கும் தந்தேன். இதனால்தான் என்னால் என்ஜீனியரிங்கை முடிக்க முடிந்தது என்கிறார்.

இன்னொரு விஷயம், விரைவில் இன்னொரு தமிழ்ப் படத்தில் நடிக்கப் போகிறாராம் ஹர்ஷிகா. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். விரைவில் 'டீலிங்' முடியுமாம்.
 

தமிழ்ப்பொண்ணு, தெளிவானப் பொண்ணு காயத்ரி: பன்னீர்செல்வம்


18 வயசு படத்தின் மூலம் இயக்குனர் பன்னீ்ர்செல்வம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தும் புதுமுகம் காயத்ரி. சுத்தமான தமிழில் பேசும் நாயகி காயத்ரி என்பதுதான் இதில் விசேஷம்.

தடுக்கி விழுந்தால் வெளி மாநிலங்களைச் சேர்ந்த புது நடிகைகளின் மீதுதான் போய் விழ வேண்டும், கோலிவுட்டில். அதிலிருந்து வேறுபடுகிறார் காயத்ரி. இவர் தமிழ் பேசும் நடிகை. நம்ம ஊர் பொண்ணு, அது தான் ஸ்பெஷல்.

அது என்ன படத்தோட பெயர் 18 வயசு என்று கேட்கிறீர்களா. 18 வயசுல கதையோட நாயகன் இதுவரை தனக்கு கிடைக்காத அன்பையும், பாசத்தையும் தேடிச் செல்கிறான். அவன் பயணத்தின்போது ஏற்படும் சந்தோஷமும், துக்கமும் தான் கதை. அன்புக்கும், பாசத்துக்கம் ஏங்குறவங்களோட கதை. இதை ரேனிகுண்டா புகழ் இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்குகிறார்.

யார் இந்த காயத்ரின்னு பன்னீர்செல்வத்திடம் கேட்டதற்கு,

18 வயசு படத்தின் நாயகி காயத்ரி. தமிழ் பொண்ணு. நல்லா தமிழ் பேசினாங்க. படத்தில் வெயிட்டான கேரக்டர் அவங்களுக்கு.

அவருக்கு முதல் நாள் படபிடிப்பிலேயே சினிமாவுக்குத் தேவையான தெளிவு வந்துவிட்டது. இருந்தாலும் கொஞ்சம் பயப்படறாங்க. நீங்க கேட்குற மாதிரி தானுங்க எல்லாரும் யார் இந்த பொண்ணுன்னு கேட்கிறாங்க. இது வரைக்கும் அவங்களுக்கு 4 படத்தில நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த பொண்ணு தெளிவா இந்த படம் முடியட்டும் பார்க்கலாம் என்று சொல்லிட்டாங்க. அவங்க தெளிவு நல்ல பெயரை வாங்கித் தரும்.

இந்த படத்திலும் கேமராமேன் சக்தி தான். இதில் தினேஷ் - சார்லஸ் போஸ்கோ ஆகியோரை இசையமைப்பாளர்களாக அறிமுகப்படுத்துகிறேன். நா. முத்துக்குமார், யுகபாரதி பாடல் வரிகள் அனைவராலும் முணுமுணுக்கப்படும் என்றார்.

காயத்ரி பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிஏ படித்து வருகிறாராம். 18 வயசுப் படம் தவிர தற்போது பொன்மாலைப் பொழுது என்ற புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

காயத்ரி தெளிவாகத்தான் இருக்கிறார்!
 

ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா


சூப்பர் ஸ்டார் ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை என்று கூறியுள்ளார் பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா.

சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்தியில் தி டர்டி பிக்சர் என்ற பெயரில் தயாரிக்கிறார்கள்.

வித்யா பாலன் சில்க் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் நாயகனாக நஸ்ருதீன் ஷா நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மேனரிஸங்களை அப்படியே இமிடேட் செய்து அவர் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இதனை மறுத்துள்ளார் நஸ்ருதீன் ஷா.

அவர் கூறுகையில், "ரஜினி மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. அவரை அவமானப்படுத்தும் வகையில் எந்தக் காட்சியிலும் நடிக்கமாட்டேன். இந்தப் படத்தில் நான் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகராக நடிக்கிறேன். ஆனால் குறிப்பிட்ட யாரையும் நான் இமிடேட் செய்யவில்லை. பல தமிழ் நடிகர்களின் நடிப்பையும் கவனித்து, கேரக்டருக்கு பொகருத்தமான வகையில் நடித்துள்ளேன்," என்றார்.
 

சினிமாவுக்கு வெறும் தாடியோடுதான் வந்தேன்: டி. ராஜேந்தர்


நான் சினிமாவுக்கு கோடியோடு அல்ல வெறும் தாடியோடு தான் வந்தேன் என்று தன் ஸ்டைலில் கூறியுள்ளார் இயக்குனர் டி. ராஜேந்தர்.

"டூ" பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட டி. ஆர் பேசியதாவது,

இந்த காலத்து இளைஞர்கள் மிகவும் தெளிவானவர்கள். ஒரு காலத்தில் எந்த படமும் ஓடும். ஆனால் தற்போது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்கள் மட்டுமே ஓடுகின்றன. தாய் பாசம், தங்கை பாசம்னு இப்போ படம் எடுத்தேனா அது ஓடுவது சந்தேகம் தான். டிவி சீரியல்களிலேயே அதையெல்லாம் சொல்லி விடுவதால் சினிமாவிலும் அதையே சொன்னால் எடுபடாது.

வீட்டில் போரடிக்கும்போது தான் இளைஞர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். கொஞ்சம் காதல், கொஞ்சம் ஹீரோயிசம், காமெடி கலந்த கதை தான் அவர்களுக்கு பிடிக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக களவாணி படத்தைக் கூறலாம்.

தற்போது நான் எடுக்கும் ஒரு தலைக்காதலும் அந்த மாதிரியான படம் தான். அனைவரையும் கவரும். கடின உழைப்பு வீன்போகாது என்பது அனைத்து துறைக்கும் பொருந்தும். நான் சினிமாவுக்கு கோடியுடன் அல்ல வெறும் தாடியுடன் தான் வந்தேன்.

இன்றும் தாடியுடனே தான் இருக்கிறேன். வெற்றி என்னைத் தேடி வந்தது. என் உழைப்பால் தான் நான் இந்த தலைமுறைக்கும் ஏற்றவாறு இயங்கிக் கொண்டிருக்கிறேன். அனைவரும் உழைக்கத் தயாராகுங்கள் என்றார்.

தாடியோட வந்தாலும் பலகோடி (ரசிகர்களை) சம்பாதித்த கில்லாடியாச்சே டி.ஆர்....!
 

டோரன்டோ இஃபா விழாவில் ரஜினியின் ரோபோட்டுக்கு 3 விருதுகள்


டோரன்டோ: இந்தியா சர்வதேச திரைப்பட விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. ஷாருக் கான் சிறந்த நடிகராகவும், அனுஷ்கா சர்மா சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தி சினிமாவுக்காக, இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளில் மட்டுமே நடத்தப்படும் விழாதான் இஃபா எனப்படும் இந்தியா சர்வதேச திரைப்பட விழா. இதில் இந்தித் திரைப்படங்களுக்கும், இந்தி நடிகர், நடிகையருக்கும் மட்டுமே விருதுகள் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு கொழும்பில் இந்த விழா நடத்தப்பட்டது. ஆனால் உலகத் தமிழரக்ளின் ஒட்டுமொத்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர், நடிகைகள் விழாவை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விழாவையே சப்பென்றாக்கி, பெரும் பிளாப் ஷோவாக்கி ராஜபக்சே அன் கோ முகத்தில் கரியைப் பூசினர்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விழா டோரண்டோவில் நடந்தது. இதில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. தபாங் படம் நிறைய விருதுகளைப் பெற்றது. சோனு சூத் சிறந்த வில்லனாக தேர்வானார். சோனாக்ஷி சின்ஹா சிறந்த புதுமுக நடிகையாக தேர்வு பெற்றார்.

சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், மை நேம் இஸ் கான் படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதைத் தட்டிச் சென்றார். அப்படத்தை இயக்கிய கரண் ஜோஹர் சிறந்த இயக்குநராக தேர்வானார்.

சிறந்த நடிகை விருது அனுஷ்கா சர்மாவுக்குக் கிடைத்தது. பந்த் பாஜா பாராத் படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்தது.

சிறந்த பின்னணிப் பாடகியாக மம்தா சர்மா விருது பெற்றார்.

ரோபோட்டுக்கு 3 விருதுகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் இயக்கி, ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்த ரோபோட் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்தன.

சிறந்த மேக்கப் கலைஞர் பானு, சிறந்த கலை இயக்குநர் சாபு சிரில், சிறந்த ஸ்பெஷல் எபக்ட் ஆகிய மூன்று பேருக்கும் ரோபோட் படத்துக்காக விருது கிடைத்தன.