பாடகி ஸ்ரேயா கோஷல் திடீர் திருமணம்.. மும்பை தொழிலதிபரை மணந்தார்

தேசிய விருது பெற்ற பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு நேற்று திருமணம் நடந்தது.

மும்பையைச் சேர்ந்த தனது இளம் வயது நண்பரும் தொழிலதிபருமான ஷைலாதித்யா முகோபாத்யாயாவை அவர் மணந்தார்.

இந்தியில் முதல் நிலை பாடகியாகத் திகழும் ஸ்ரேயா கோஷல் தமிழிலும் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் தனது பேஸ்புக் பக்கத்தில் திருமணம் குறித்து சூசகமாக ஒரு நிலைத் தகவல் போட்டிருந்தார்.

அதன் பிறகு இன்று தனக்கு திருமணம் நடந்துவிட்டதாக படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார்.

முழுக்க முழுக்க தனிப்பட்ட முறையில் நடந்த இந்த திருமணத்தில் திரையுலகப் பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை. வங்காளி முறைப்படி நடந்த இந்தத் திருமணம் குறித்து திரையுலகினர் பலருக்கே தெரியவில்லை.

திருமணம் முடிந்த பிறகுதான் அதுபற்றிய செய்தியை வெளியிட்டனர். விரைவில் பிரமாண்ட முறையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

ஷைலாதித்யா மும்பையில் உள்ள பெரிய ஐடி நிறுவனத்துக்கு சொந்தக்காரர். சிறுவயதிலிருந்தே ஸ்ரேயா கோஷலின் நண்பர்.

 

ஸ்ருதிக்கு அப்பா கமல் கொடுத்த வித்தியாசமான பிறந்தநாள் பரிசு

சென்னை: உலக நாயகன் கமல் ஹாஸன் தனது மகள் ஸ்ருதிக்கு பிறந்தநாள் பரிசாக திரைக்கதை எழுத உதவும் சாப்ட்வேரை பரிசாக அளித்துள்ளார்.

ஸ்ருதி ஹாஸன் கடந்த 28ம் தேதி தனது 29வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரை உலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஸ்ருதிக்கு அவருடைய அப்பா உலக நாயகன் கமல் ஹாஸன் அளித்த பிறந்தநாள் பரிசு பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.

ஸ்ருதிக்கு அப்பா கமல் கொடுத்த வித்தியாசமான பிறந்தநாள் பரிசு

கமல் தன்னுடயை மகளுக்கு உடையோ, மேக்கப் பொருட்களோ, செல்போனோ பரிசாக அளிக்கவில்லை. மாறாக திரைக்கதை எழுத உதவும் சாப்ட்வேரை பரிசாக அளித்துள்ளார். ஸ்ருதி விரைவில் குறும்படங்கள் எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் தான் கமல் ஸ்ருதிக்கு இந்த சாப்ட்வேரை பரிசளித்துள்ளார்.

இது குறித்து ஸ்ருதி கூறுகையில்,

நான் 15 வயதில் இருந்தே சிறுகதைகள், கவிதைகள், பாடல்கள் எழுதி வருகிறேன். ஆனால் என் படைப்புகளை ஒரு சிலரே படித்து பார்த்துள்ளனர். தற்போது நான் என் படைப்புகளை வெளியிட முடிவு செய்துள்ளேன். குறும்படங்களுக்கு திரைக்கதை எழுத உள்ளேன்.

வெளிநாட்டுப் படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை பார்க்குமாறு என் தந்தை அறிவுரை வழங்கினார். நானும் அவர் கூறியபடியே செய்கிறேன் என்றார்.

 

பொறியில சிக்கிடாதீங்கப்பா...! - ரசிகர்களுக்கு சிம்பு அட்வைஸ்

என்னை அறிந்தால் பட விஷயத்தில் ரசிகர்களுக்குள் சிலர் தேவையில்லாமல் பிரச்சினை உண்டாக்கப் பார்க்கிறார்கள். பொறியில் சிக்கிவிடாதீர்கள் என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு.

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் 'என்னை அறிந்தால்' படம் ரிலீஸ் ஆனது. படத்திற்கு பரவலாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பொறியில சிக்கிடாதீங்கப்பா...! - ரசிகர்களுக்கு சிம்பு அட்வைஸ்

இந்நிலையில் நேற்று அஜித் ரசிகரான சிம்பு படத்தை பார்த்து விட்டு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 'ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு நல்ல தமிழ் படம். சில மெண்டல்களைத் தவிர்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் படத்தை விரும்புவர்' என ட்வீட் செய்ய பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் படம் பிடிக்காத அல்லது மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். சிலர் 'எனக்கு படம் பிடிக்கவில்லை... அதற்காக நான் மெண்டலா' எனக் கேட்டு வருகின்றனர்.

இந்த எதிர்ப்பு அதிகரித்து வருவதைக் கண்ட சிம்பு, இப்போது தனது பதிலை பதிவு செய்துள்ளார்.

அதில் 'சிலர் தேவையில்லாமல் ரசிகர்களுக்குள் பிரச்னை உண்டாக்குகின்றனர். ரசிகர்கள் புரிந்துகொண்டு செயல்படுங்கள். சிலரது பொறியில் தேவையில்லாமல் சிக்க வேண்டாம்,' எனக் கூறியுள்ளார்.

 

24 மணி நேரத்துக்குள் டப்பிங் முடித்த 'வலியவன்' ஜெய்

எஸ்கே ஸ்டியோஸ் தயாரிப்பில் நீண்ட பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகும் படம் 'வலியவன்'.

ஜெய் நடித்த "எங்கேயும் எப்போதும்", விக்ரம் பிரபு நடித்த "இவன் வேற மாதிரி" போன்ற வெற்றி படங்களை இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.

24 மணி நேரத்துக்குள் டப்பிங் முடித்த 'வலியவன்' ஜெய்

வலியவன் படத்தின் கதாநாயகனாக ஜெய் மற்றும் நாயகியாக ஆண்டிரியா நடிக்கின்றனர். இவர்களுடன் அழகம் பெருமாள், "பண்ணையாரும் பத்மினியும்" பாலா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

படத்தின் தலைப்புகேற்றவாறு தன்னை காண்பிக்கவும், கதாபாத்திரத்தின் தன்னைமைக்காகவும் நடிகர் ஜெய் சுமார் 6 மாதங்களுக்கும் மேல் உடற்பயிற்சி மேற்கொண்டார். ஹாங்காங்கில் இருந்து ஒரு சிறப்பு உடற்பயிற்சியாளரை வரவழைத்து அவரின் வழிகாட்டுதலில் 6 பேக் கொண்டு வந்துள்ளார்.

படமாக்கமும், அதன் வெளிபாடும் மிகவும் சிறப்பாக வந்ததை கண்டு மகிழ்ச்சியுற்ற நடிகர் ஜெய், வலியவன் படத்தின் ஒலிச் சேர்க்கையை (டப்பிங்) தொடர்ந்து 24 மணிநேரத்தில் பேசி முடித்துள்ளார்.

 

ஐஸ்வர்யா ராய் ஆடிய பாடல் ரீமேக்கிற்கு சன்னி லியோன் குத்தாட்டம் – ஆர்வத்தில் ரசிகர்கள்

மும்பை: பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் நடனமாடிய பழைய பாடல் ஒன்றிற்கு புதியதாக நடனமாடியுள்ளார் பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன்.

கடந்த 1999 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்த திரைப்படம் ஹம் தில் தே சுக்கே சனம். இந்த படத்தில் சல்மான்கான் மற்றும் ஐஸ்வர்யாராய் நடித்திருந்தனர்.

ஐஸ்வர்யா ராய் ஆடிய பாடல் ரீமேக்கிற்கு சன்னி லியோன் குத்தாட்டம் – ஆர்வத்தில் ரசிகர்கள்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருந்த இந்த திரைப்படம் பாலிவுட் படவுலகில் மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் தோலி தரோ தோல் பாஜேஎன்று தொடங்கும் சூப்பர் ஹிட் பாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் தற்போது கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நடித்து வரும் ஏக் பகேலி லீலா என்ற படத்திற்காக ஒருசில மாற்றங்கள் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பாடலின் படப்பிடிப்பு மிகவும் பிரமாண்டமாக சுமார் 500 நடனக்கலைஞர்களுடன் மிகப்பெரிய செட் அமைத்து படமாக்கப்பட்டுள்ளது. பாபிகான் இயக்கி வரும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

முதல் நாள் வசூல்.. லிங்காவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது என்னை அறிந்தால்!

முதல் நாள் வசூலில் ரூ 28 கோடியை வசூலித்து, ரஜினியின் லிங்கா படத்துக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது என்னை அறிந்தால்.

நேற்று உலகம் முழுவதும் வெளியானது அஜீத் நடித்த என்னை அறிந்தால்.

இந்தப் படத்துக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ 12 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் செய்திகள் கூறுகின்றன.

முதல் நாள் வசூல்.. லிங்காவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது என்னை அறிந்தால்!

கேரளாவில் ரூ.3.5 கோடியும், கர்நாடகாவில் ரூ.2.54 கோடியும், பிற மாநிலங்களில் ரூ.1.36 கோடியும், வெளிநாடுகளில் ரூ.8 கோடியும் என மொத்தம் கிட்டத்தட்ட 28 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது இந்தப் படம். இது தோராய கணக்குதான். முழு விவரங்கள் திங்களன்று கிடைத்துவிடும்.

ரஜினி நடிப்பில் வெளியான ‘லிங்கா' படத்தின் முதல்நாள் வசூல் ரூ.37 கோடி என கணக்கிடப்பட்டிருக்கிறது. லிங்கா முதலிடத்திலும் என்னை அறிந்தால் இரண்டாவது இடத்தில் உள்ளது.

விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஐ' ரூ.27 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்திலும், விஜய்யின் ‘கத்தி' ரூ.23 கோடி வசூல் செய்து நான்காவது இடத்திலும் உள்ளது.

 

இன்று ஷமிதாப்... தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் இந்திப் படம்!

அமிதாப் பச்சன், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஷமிதாப் படம் இன்று உலகெங்கும் வெளியாகிறது.

தமிழகத்தில் அதிக அரங்குகளில் வெளியாகும் முதல் இந்திப் படம் என்ற பெருமையை ஷமிதாப் பெற்றுள்ளது.

தனுஷ் - அக்ஷரா ஜோடியாக நடிக்க, முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். ஆர் பால்கி எழுதி இயக்கியுள்ளார்.

இன்று ஷமிதாப்... தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் இந்திப் படம்!

இதுவரை தன் எந்தப் படத்துக்கும் செய்யாத அளவு விளம்பரப் பணிகளை இந்தப் படத்துத்து செய்தார் பால்கி. இளையராஜா இசையமைத்துள்ளார்.

இன்று உலகம் முழுவதும் அதிக அளவு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ஷமிதாப்.

இன்று ஷமிதாப்... தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் இந்திப் படம்!

சென்னையில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட அரங்குகளிலும், தமிழகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட அரங்குகளிலும் ஷமிதாப் வெளியாகிறது. படத்துக்கான முன்பதிவும் சிறப்பாக இருந்தது.

தமிழகத்தில் இத்தனை அரங்குகளில் வெளியாகும் முதல் திரைப்படம் ஷமிதாப்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கேரளாவில் 'என்னை அறிந்தால்' வசூல் வேட்டை! மம்முட்டியின் ஃபயர்மேன் ரிலீஸ் ஒத்திவைப்பு!

திருவனந்தபுரம்: கேரளாவில் 'என்னை அறிந்தால்' திரைப்படம் சக்கைபோடு போட்டுவருவதால், மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி நடித்து வெளியாக இருந்த ஃபயர்மேன் திரைப்படத்தின் ரிலீஸ் ஒரு வாரம் தள்ளிப்போயுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில், அஜித் ஹீரோவாக நடித்து நேற்று வெளியாகியுள்ள திரைப்படம் 'என்னை அறிந்தால்'. இந்த படத்துக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இதுவரை மார்க்கெட் இல்லாத கேரளாவிலும் அஜித்துக்கு புதிய மார்க்கெட்டை அமைத்துக் கொடுத்துள்ளது.

கேரளாவில் 'என்னை அறிந்தால்' வசூல் வேட்டை! மம்முட்டியின் ஃபயர்மேன் ரிலீஸ் ஒத்திவைப்பு!

முதல்முறையாக அஜித் திரைப்படம் ஒன்று கேரளாவில் 107 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ள பெருமை என்னை அறிந்தால் மூலம் கிடைத்துள்ளது. 'என்னை அறிந்தால்' வெளியாகியுள்ள திரையரங்குகளில் புக்கிங் படுவேகமாக நடந்து வருகிறதாம். எனவே, இன்று வெளியாக இருந்த கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த ஃபயர்மேன் திரைப்படம் அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, லிங்கா மற்றும் ஐ திரைப்படங்களும் கேரளாவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், என்னை அறிந்தால் வசூல் வேட்டையும், கேரள திரைப்பட கலைஞர்களை கலக்கத்திற்குள்ளாக்கியுள்ளது. கத்தி, ஜில்லா போன்ற விஜய் நடித்த திரைப்படங்களும் கேரளாவில் வரவேற்பை பெற்றவையாகும்.

 

இந்தி படத்துக்காக ஸ்டைல் நடிகரை புகழும் சுள்ளான்?

சென்னை: சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் ஸ்டைல் நடிகரை விமர்சித்து வந்த சுள்ளான் தற்போது ஒரேயடியாக புகழ்ந்துதள்ளிக் கொண்டிருக்கிறார்.

சுள்ளானுக்கு தன்னை பெரிய வீட்டு மாப்பிள்ளை என்று பிறர் கூறுவது பிடிக்காது. இதனால் சில நேரங்களில் அவர் கோபம் அடைந்து மீடியாக்கள் மீது பாய்ந்ததும் உண்டு. எனக்கு என்று ஒரு அடையாளம் உண்டு, அதை தவிர்த்து இன்னாரின் மருமகன் என்றே எப்பொழுது பார்த்தாலும் கூறாதீர்கள் என்றார்.

இவர் இப்படி பேச பாலிவுட்டில் உள்ள ஒரு கான் தன் படம் ரிலீஸாகும்போது எல்லாம் ஸ்டைல் நடிகரை புகழ்ந்து புகழ்ந்தே விளம்பரம் தேடி வருகிறார். இந்நிலையில் தான் சுள்ளான் நடித்துள்ள இந்தி படம் ரிலீஸாகியுள்ளது.

அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் சுள்ளான் தனது மாமனாரான ஸ்டைல் நடிகரை விமர்சிக்காமல் மாறாக கடவுள், ராஜா, சிறந்தவர் என்று ஒரேயடியாக புகழ்ந்துள்ளார். இந்தி திரை உலகில் ஸ்டைல் நடிகருக்கு பெரும் மதிப்பு உள்ளது. அதிலும் சுள்ளானுடன் அந்த படத்தில் நடித்துள்ள பாலிவுட் ஜாம்பவான் ஸ்டைல் நடிகருக்கு நெருக்கமானவர்.

இதை எல்லாம் மனதில் வைத்து தான் சுள்ளான் அங்கு அடங்கி வாசிக்கிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

 

அஜீத்துக்கு சிலை அமைத்த சேலம் ரசிகர்கள்!

நடிகர் நடிகைகளுக்கு சிலை எடுப்பதிலும் கோயில் கட்டுவதிலும் தமிழ் ரசிகர்களை மிஞ்ச ஆளில்லை.

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என மூத்த நடிகர்களுக்கு சிலை வைத்த ரசிகர்கள், இப்போது விஜய், அஜீத்துக்கும் வைக்க ஆரம்பித்துள்ளனர்.

அஜீத்துக்கு சிலை அமைத்த சேலம் ரசிகர்கள்!

கத்தி வெளியான சமயத்தில் விஜய்க்கு அவரது ரசிகர்கள் சிலை வைத்து மகிழ்ந்தனர்.

இப்போது என்னை அறிந்தால் படத்துக்காக அஜீத்துக்கும் சிலை வைத்துள்ளனர் அவரது ரசிகர்கள்.

சேலத்தைச் சேர்ந்த ரசிகர்கள் சிலர், அஜித்துக்கு சிலை அமைத்து அதை ஒரு மினி வேனில் எடுத்து வந்தனர். என்னை அறிந்தால் படத்தில் வரும் அஜித்தின் புதிய கெட்டப்பில் அந்த சிலையை உருவாக்கியிருந்தனர்.

 

ஆல் இஸ் பேட்... டும், டும், டும் -க்கு தயாராகும் நடிகை!

சென்னை: தமிழில் ஓஹோ வென இருந்த காலத்திலேயே, மறதி படம் மூலம் அக்கட தேசம் சென்ற நடிகை இவர். அரசனை நம்பி புருஷனையும் கை விட்ட கதியாக, தற்போது பட வாய்ப்புகளே இல்லாமல் தவித்து வருகிறார்.

இவரை விட வயதில் மூத்தவர்கள் எல்லாம் இன்னமும் டூயட் பாடிக் கொண்டிருக்க, நடிகையை அணுகும் தயாரிப்பாளர்கள் மட்டும், அக்கா, அண்ணி வேடத்தோடு தான் செல்கிறார்களாம். அதிகம் நம்பிய வடக்கிலும், எல்லாம் நல்லதுக்குத் தான் என ஒரே ஒரு படம் தான் கையில் உள்ளதாம்.

எனவே, நடிகை கையில் உள்ள ஒரு படத்தைத் தான் மலையாக நம்பியுள்ளாராம். வழக்கம் போல, அதுவும் சொதப்பி விட்டால், அடுத்து டும் டும் டும் தான் என தெரிந்தவர்களிடம் புலம்பி வருகிறாராம்.

இது தொடர்பாக ஏற்கனவே வீட்டில் சொல்லி விட்டாராம். மற்ற நடிகைகளைப் போலவே நல்ல தொழிலதிபர் மாப்பிள்ளையாகப் பார்க்கச் சொல்லி இருக்கிறாராம். அப்படிக் கிடைத்தால் பிசின் போல ஒட்டிக் கொண்டு குடும்பத்தலைவியாக செட்டில் ஆகி விடலாம் என்பது நடிகையின் திட்டமாம்.

 

'ஆளேத்த' ஆயத்தம் நடக்குது.. அமெரிக்கா உஷார்!

ஆளேத்தறது... இந்த வார்த்தை, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு வாங்கித் தரும் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல.. தமிழ் சினிமாவிலும் ரொம்பப் பிரபலம்.

கும்பலாகப் படப்பிடிப்புக்குப் போவது, அல்லது கலை நிகழ்ச்சி நடத்தப் போவதுபோல போய், அங்கேயே சிலரை விட்டுவிட்டு வருவதுதான் இந்த 'ஆளேத்தறது'. அதாவது சட்டவிரோத குடியேற்றம்.

'ஆளேத்த' ஆயத்தம் நடக்குது.. அமெரிக்கா உஷார்!

இந்த மாதிரி ஒரு வேலையைப் பார்த்தார் என்றுதான் சில ஆண்டுகளுக்கு முன் ப்ளோரா என்ற நடிகை மீது குற்றம் சாட்ட, அவர் பிரஸ் மீட் வைத்து விளக்கமெல்லாம் கொடுத்தார்.

ஆனாலும் சத்தமின்றி இந்த வேலையை சில சீனியர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்களாம்.

குறிப்பாக அமெரிக்கா, கனடாவுக்கு இந்த மாதிரி சட்டவிரோதமாக நபர்களை அனுப்ப கலை நிகழ்ச்சிகளை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்களாம்.

அடுத்த சில மாதங்களில் அமெரிக்கா, கனடாவில் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு பெரிய குழுவே சென்னையிலிருந்து கிளம்பப் போவதாகக் கூறப்படுகிறது. சில நடிகைகள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்களாம். அதில் கலைஞர்களுடன், சம்பந்தமே இல்லாத சில இளைஞர் - இளைஞிகளும் கிளம்பப் போகிறார்கள் என்று தகவல் கசிந்துள்ளது.