நடிகர் சங்கப் பொதுக்குழு: சரத்குமாருடன் மோதத் தயாராகும் விஷால் குரூப்

சென்னை: நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நாளை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். இந்தக்கூட்டத்தில் இளம் நடிகர்கள் பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்பத் தயாராகிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்காக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் தனித் தனியாக கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, விஷால், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கும் பொதுக்குழுவில் பங்கேற்குமாறு கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளது.

நடிகர் சங்கப் பொதுக்குழு: சரத்குமாருடன் மோதத் தயாராகும் விஷால் குரூப்

இக்கூட்டத்தில் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதா ரவி, துணைத் தலைவர்கள் விஜயகுமார், காளை, பொருளாளர் வாகை சந்திர சேகர், செயற்குழு உறுப்பினர்கள் சிலம்பரசன், ஸ்ரீகாந்த், மனோபாலா, சத்யபிரியா, நளினி, சார்லி, சின்னி ஜெயந்த், சி.ஐ.டி. சகுந்தலா, பாத்திமாபாபு, சவுண்டப்பன், குண்டு கல்யாணம், பசி சத்யா, கே.ஆர்.செல்வாஜ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நடிகர் சங்கத் தேர்தல்

நடிகர் சங்க அறக்கட்டளை நடவடிக்கைகள், 2015-2018 ஆம் ஆண்டுக்கான நடிகர் சங்க தேர்தல் தேதி முடிவு செய்தல், வரவு-செலவு கணக்குகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

மோதத் தயாராகும் நடிகர்கள்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூடியபோதே சரத்குமார் அணிக்கும் விஷால் அணிக்கும் பயங்கர மோதல் நடக்கும் சூழ்நிலை உருவானது.

''நடிகர் சங்கத்துக்காக பாரம்பரியமாக இருந்த கட்டடத்தை தனியார் நிறுவனத்துக்கு கொடுத்து ஷாப்பிங் மால் கட்டத் திட்டமிட்டார்கள். ஆனால், சிலர் நீதிமன்றத்துக்குப் போய்விட்டார்கள். இந்த ஒப்பந்தம் பற்றி நாசர், விஷால் உள்ளிட்டவர்கள் கேள்வி கேட்டார்கள்.

இந்த ஆண்டும் சிக்கல்

மூன்று மாதத்துக்குள் இந்தப் பிரச்னையை முடித்து கட்டுமானப் பணித் தொடங்கும் என்று அப்போது சரத்குமார் வாக்குறுதி கொடுத்தார். ஒரு வருஷம் ஆகியும் ஒரு செங்கல்கூட எடுத்துவைக்க முடியவில்லை. மறுபடியும் நாங்கள் கேள்வி கேட்க இருக்கிறோம்'' என்று விஷால் கோஷ்டி நடிகர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.

நீதிமன்றத்தில் வழக்கு

இந்நிலையில் பூச்சி முருகன், எம்.சுந்தரம், பி.எ.காஜா முகைதீன் ஆகியோர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வரும் 17ம் தேதி நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூடுகிறது. இதில் நாங்கள் கலந்துகொள்ளவிருக்கிறோம். அப்போது, எங்களை கூட்டத்தில் கலந்துகொள்ளவிடாமல் தடுத்து நிறுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, நாங்கள் பொதுக்குழுவில் பங்கேற்க உரிய பாதுகாப்பு தருமாறு போலீசுக்கு உத்தரவிட வேண்டும். என்று கூறியுள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு

இந்த மனு 13வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதி கே.கணேசன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வரும் 17ம் தேதி நடைபெறும் நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்காக மனுதாரர்களுக்கு உரிய பாதுகாப்பு தேனாம்பேட்டை போலீசார் தரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

தலைவர் பதவிக்குத் தேர்தல்

நடிகர் சங்கத்தில் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சரத்குமார் தொடர்ந்து இரண்டு முறை தலைவராக இருக்கிறார். கடந்த முறை முக்கிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இளம் ஹீரோக்கள் போட்டி

நடிகர் சங்கத்திற்கு இந்த முறை தேர்தல் நடக்கலாம் என்று தெரிகிறது. தேர்தல் நடந்தால் விஷால் தலைமையிலான இளம் ஹீரோக்கள் போட்டியிடுவது உறுதி என்று கூறப்படுகிறது.

பரபரப்பான பொதுக்குழு

விஷால், நாசர் கோஷ்டி ஒருபக்கம் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், நடிகர் சங்க இடத்தை தனியாருக்கு தாரை வார்த்துள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து வரும் பூச்சி முருகன், எம்.சுந்தரம், பி.எ.காஜா முகைதீன் ஆகியோரும் பொதுக்குழுவில் பங்கேற்க உள்ளனர். எனவே இந்த ஆண்டு மிகவும் பரபரப்பான காட்சிகள் நடிகர் சங்க பொதுக்குழுவில் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அஞ்சான் முதல் நாள் வசூல் 11.5 கோடி.. தயாரிப்பாளர் அறிவிப்பு!!

சூர்யா நடித்த அஞ்சான் படம் வெளியான முதல் நாளே ரூ 11.5 கோடியை அள்ளியுள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா - சமந்தா ஜோடியாக நடித்துள்ள படம் அஞ்சான். மும்பை தாதாவாக வருகிறார் சூர்யா இந்தப் படத்தில்.

உலகம் முழுவதும் 1400 அரங்குகளில் இந்தப் படம் நேற்று வெளியானது. தமிழகத்தில் 450க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது.

அஞ்சான் முதல் நாள் வசூல் 11.5 கோடி.. தயாரிப்பாளர் அறிவிப்பு!!

படம் குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், இதுவரை சூர்யாவின் எந்தப் படத்துக்கும் கிடைக்காத ஆரம்ப வசூல் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது.

முதல் நாளில் தமிழகம், ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ரசிகர்கள் படம் பார்க்க அலைமோதினர்.

முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே ரூ 11.5 கோடி இந்தப் படத்துக்கு ஆரம்ப வசூலாகக் கிடைத்துள்ளது. சூர்யாவின் படங்களின் வசூலில் இது புதிய சாதனையாகும்.

ஆஸ்திரேலியாவில் நேற்று ஒரே நாளில் ரூ 22.82 லட்சத்தைக் குவித்துள்ளது இந்தப் படம்.

பிரிட்டனில் ரூ 41.59 லட்சத்தை வசூலாகக் குவித்துள்ளது அஞ்சான். அங்கு இன்னும் பத்து அரங்குகளின் வசூல் நிலவரம் வெளிவரவேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

பாலச்சந்தர் மகன் கைலாசம் உடலுக்கு மு.க. ஸ்டாலின், கமல், லதா ரஜினி அஞ்சலி!

சென்னை: மூத்த இயக்குநர் கே பாலச்சந்தர் மகன் கைலாசம் உடலுக்கு திமுக பொருளாளர் முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மகனை இழந்து வாடும் பாலச்சந்தருக்கு அவர் ஆறுதல் கூறினார்.

இயக்குநர் கே.பாலசந்தரின் மூத்த மகன் கைலாசம். சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 53.

பாலச்சந்தர் மகன் கைலாசம் உடலுக்கு மு.க. ஸ்டாலின், கமல், லதா ரஜினி அஞ்சலி!

கைலாசத்துக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருந்ததை டாக்டர்கள் கண்டு பிடித்தனர். சிறுநீரகப் பிரச்சினையும் இருந்தது.

கைலாசத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி அவர் மரணம் அடைந்தார்.

பாலச்சந்தர் மகன் கைலாசம் உடலுக்கு மு.க. ஸ்டாலின், கமல், லதா ரஜினி அஞ்சலி!

முக ஸ்டாலின்

கைலாஷ் உடலுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல், நடிகைகள் கவுதமி, குஷ்பு, பிரமிடு நடராஜன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

ரஜினி சார்பில்..

பாலச்சந்தர் மகன் கைலாசம் உடலுக்கு மு.க. ஸ்டாலின், கமல், லதா ரஜினி அஞ்சலி!

ரஜினி, லிங்கா படத்துக்காக ஷிமோகாவில் இருப்பதால் வரமுடியவில்லை. அவர் நேற்று இரவு பாலச்சந்தரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார். அவர் சார்பில் அவரது மனைவி லதா ரஜினி, பாலச்சந்தர் இல்லத்துக்குச் சென்று கைலாசம் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

 

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - விமர்சனம்

Rating:
3.5/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: தம்பி ராமையா, அகிலா கிஷோர், சந்தோஷ், மகாலட்சுமி (அவ்வப்போது இயக்குநர் பார்த்திபன்!), ஆர்யா, விஷால், விஜய் சேதுபதி, அமலா பால், பிரகாஷ் ராஜ், டாப்சி மற்றும் சேரன் (ஆளுக்கு ஒரு காட்சி)

ஒளிப்பதிவு: ராஜரத்னம்

இசை: விஜய் ஆன்டனி, எஸ்எஸ் தமன், ஷரத், அல்போன்ஸ் ஜோசப்

மக்கள் தொடர்பு: நிகில்

தயாரிப்பு: கே சந்திரசேகர்

கதை திரைக்கதை வசனம் இயக்கம்: ராதாகிருஷ்ணன் பார்த்திபன்

தமிழ் சினிமாவில் படைப்பாளிகளுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது.. படம் இயக்க வந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு 'Updated' ஆக இல்லாததால், 'Outdated' ஆகிவிடுவார்கள்!

இரு ஆண்டுகளுக்கு முன் 'வித்தகன்' பார்த்திபனைப் பார்த்தபோது நமக்கும் இதே நினைப்பு வந்தது. ஆனால் அந்த நினைப்பை அழித்துவிட்டார் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' பார்த்திபன்!

படத்தின் தலைப்பு, தொழில்நுட்ப கலைஞர்களைத் தேர்வு செய்தது, காட்சிகள், கேமிரா கோணங்கள் என அனைத்து விஷயங்களும் புதிதாக இருக்க வேண்டும் என்பதில் ஏக கவனமாக இருந்திருக்கிறார் பார்த்திபன். வசனங்களில் மட்டும், அதே நக்கல், நையாண்டி, குத்தல், புத்திசாலித்தனம்!

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - விமர்சனம்

ஆரம்ப நிமிடங்களிலிருந்து இடைவேளை வரையிலான ஒவ்வொரு காட்சிக்கும், வசனத்துக்கும் கைத்தட்டல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது... அடுத்த வசனத்தை கேட்க விடுங்கய்யா என்று சொல்லும் அளவுக்கு!

கதை இல்லாத படம் இது என்றுதான் பார்த்திபன் இந்தப் படத்தை அறிமுகப்படுத்துகிறார். ஆனால் வெள்ளைத்திரையைக் காட்ட முடியாதே. எனவே படத்தில் சில கதைகள் இருக்கவே செய்கின்றன.

திரைப்பட இயக்குநராகப் போராடும் இளைஞன் சந்தோஷ், தன்னைத் தீவிரமாகக் காதலிக்கும் மனைவி அகிலா கிஷோரின் சம்பளத்தில், தன்னைப் போலவே போராடும் சில உதவி இயக்குநர்களுடன் கதை விவாதத்தில் ஈடுபடுகிறான்.

இந்தக் குழுவில் முதுமை எட்டிப்பார்க்கும் தருவாயில் உள்ள இரண்டு பெண்டாட்டிக்கார தம்பி ராமையாவும். கதை விவாதக் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - விமர்சனம்

இந்தக் குழு ஏகப்பட்ட கதைகளை விவாதிக்கிறது. சுனாமி கதை, சிங்கள இனவெறியால் சீரழிக்கப்பட்ட இசைப்பிரியாவின் கதை என பலவற்றை யோசித்தாலும், அவற்றையெல்லாம் தாண்டிய ஒரு வித்தியாசமான கதைக்காக மண்டையைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.

இந்த விவாதங்களெல்லாம் வீட்டுக்குள்ளேயே நடக்க, தங்கள் தாம்பத்யத்துக்கு அது பெரும் தொந்தரவாக இருப்பதாக உணர்கிறாள் அகிலா. தம்பதிகளுக்குள் சண்டை!

அப்போது குறுக்கிடுகிறாள், நடப்பதை முன்கூட்டியே தன் உள்ளுணர்வால் சொல்லும் ஒரு இளம் பெண். சந்தோஷை விழுந்து விழுந்து காதலிக்கிறாள். ஆனால் தனக்கு திருமணம் ஆகிவிட்டதைச் சொல்லி அவளிடமிருந்து விலகுகிறான். அப்போது அந்தப் பெண்ணின் வீட்டில் நடக்கும் ஒரு தற்கொலையால், காவல் நிலையம் போக வேண்டி வருகிறது.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - விமர்சனம்

அந்த முன்கூட்டியே உணரும் பெண்ணையும் தன் மனைவியையும் மனதில் வைத்து ஒரு கதையை உருவாக்கும் சந்தோஷ், அதை தயாரிப்பாளரிடம் சொல்லி, ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறான். அவன் உருவாக்கிய அந்தக் கதையில் வரும் கணவன் - மனைவிக்கிடையே பிளவு.. அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்று பார்வையாளர்கள் முடிவுக்கு விட்டுவிடுகிறான் சந்தோஷ். ஆனால் இந்த முடிவு தயாரிப்பாளருக்குப் பிடிக்கவில்லை. அதனால், இந்தப் படத்தைத் தயாரிக்கிறேனா இல்லையா என இரண்டு நாட்கள் கழித்துச் சொல்கிறேன் என்கிறார்.

அவர் என்ன பதில் சொன்னார்? என்பது க்ளைமாக்ஸ்.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஆடம்பரமும் சுவாரஸ்யமும் நிறைந்ததாய் ஜொலிக்கும் சினிமா உலகின், தகிடுதத்தங்களை வெளுத்து வாங்கியிருக்கிறார் பார்த்திபன், அதில் தானும் ஒரு அங்கம் என்பதை உணர்ந்தே!

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - விமர்சனம்

தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியில் வருபவர்களிடம் கேட்கிறான் ஒருவன் : "படம் எப்படிங்க?"

"ஓகேங்க"

"என்ன இப்படிச் சொல்லிட்டீங்க... இன்னொரு வாட்டி பாக்கலாம்னு சொல்லுங்க"

"இப்பல்லாம் படம் பார்க்கிற இடத்துலகூட ஆள் செட் பண்ணி வச்சிருக்காங்கப்பா!"

இப்படி ஏகப்பட்ட வாறல்கள்!

'கொய்யாப் பழம்னா அது மரத்துலல்ல இருக்கும்... இது கொய்த பழம்', 'கையை காலா நினைச்சி கேக்கறேன்.. முதல்ல கால்லருந்து கையை எடு..' மாதிரி வசனங்களில் அக்மார்க் பார்த்திபனிஸம்!

கடவுளால் மூளையில்லாமல் படைக்கப்பட்ட மனிதர்கள் என ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார் பார்த்திபன். மகா துணிச்சல் வேண்டும் அதற்கு. லிஸ்டில் விஜயகாந்துக்கும் இடம் உண்டு!!

அதேநேரம், திரையுலகுக்கு வெளியில் உள்ளவர்களுக்கு இந்தப் படத்தின் சில காட்சிகள் புரியுமா தெரியவில்லை. ஆனால் 'எட்டிப் பார்த்தாவது' புரிந்து கொள்வார்கள்... சினிமாக்காரர்கள் மீது மக்களின் ஆர்வம் அப்படி!

படத்தில் ஆர்யா, விஷால், விஜய் சேதுபதி, அமலா பால், டாப்சி, பிரகாஷ் ராஜ், சேரன் ஆகியோரும் உண்டு. ஒவ்வொரு காட்சிதான் என்றாலும் மகா சுவாரஸ்யம்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - விமர்சனம்

மற்றவர்களில் தம்பி ராமையா மட்டுமே பழகிய முகம்... படத்தின் முக்கிய பலமும் அவர்தான். வெகு அருமையாக நடித்திருக்கிறார். சினிமாவில் நீண்ட நாள் போராடி, வாய்ப்புக் கேட்பதிலேயே வயதை இழந்துவிட்டு நிற்கும் பல வயதான உதவி இயக்குநர்களின் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் அவர்.

நாயகன் சந்தோஷ், நாயகி அகிலா கிஷோர் இருவருமே கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். லேட்டாக வந்த கணவன் முகத்தில் தாலியைக் கழற்றி எறிந்துவிட்டு, 'என்னை கன்வின்ஸ் பண்ண 5 நிமிஷம் தர்றேன்'.. என கணவனை வீழ்த்தும் அந்தத் திமிரில் ஜொலிக்கிறார் அகிலா.

விஜய் ராம், தினேஷ், லல்லு, மகாலட்சுமி, சாஹித்யா என எல்லோருமே புதுமுகங்களாக இல்லாமல், பழகிய முகங்களாக மாறிப் போகிறார்கள்.

ஒளிப்பதிவாளருக்கு பெரிய வேலை இல்லை. விஜய் ஆன்டனி, எஸ்எஸ் தமன், ஷரத், அல்போன்ஸ் ஜோசப் என நான்கு இசையமைப்பாளர்கள். பாடல்கள் கேட்கும்படி உள்ளன.

இந்தப் படத்தில் எடிட்டரின் (ரா சுதர்சன்) பணியைப் பாராட்டியாக வேண்டும். காரணம் கதை இருக்கா.. இல்லையா.. இது கதையா... கதைக்குள் கதையா.. என ஏக சிக்கல்மிக்க இந்தப் படத்தை கச்சிதமாக வெட்டி ஒட்டித் தருவது சாதாரண காரியமல்ல.. ஆனாலும் இரண்டாம் பாதியில் இன்னும் கூட வெட்டியிருக்கலாம்!

படத்தில் அவ்வப்போது தோன்றி, கதையைக் கைப்பிடித்து அடுத்த கட்டத்துக்கு இழுத்துப் போகும் இயக்குநராகவே தோன்றுகிறார் பார்த்திபன். இன்றைய சூழலில் அவரை இந்த மாதிரி பார்ப்பதுதான் பிடிக்கிறது.

இந்தப் படத்தில் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம்... நேர்த்தி!

 

சமத்தான நடிகை சமந்தா இப்படி பண்ணிட்டாரே...

சென்னை: இதுவரை சமத்து பொண்ணாக இருந்த சமந்தா, அஞ்சான் மூலமாக முதன் முறையாக தமிழில் பிகினி அவதாரம் எடுத்துள்ளார்.

நான் ஈ, நீதான் என் பொன் வசந்தம், போன்ற திரைப்படங்களில் மிகவும் கண்ணியமான ஆடை அணிந்து தமிழ் கூறும் நல்லுலக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சமந்தா.

சமத்தான நடிகை சமந்தா இப்படி பண்ணிட்டாரே...

ராமய்யா ஒஸ்தாவய்யா தெலுங்கு திரைப்படத்தில் பிகினியில் நடித்திருந்தாலும், தமிழர்கள் பலருக்கும் இதை பார்க்கும் பாக்கியம் (!) கிடைக்கவில்லை. அந்த ஏக்கத்தையும், வாட்டத்தையும் போக்க, நான் எதற்கும் அச்சமாட்டேன் என்று அஞ்சான் தமிழ் படத்தில் பிகினி உடைக்கு மாறியுள்ளார் சமந்தா.

படம் நெடுகிலும் குட்டை ஆடை கட்டி வந்தாலும், பாடல் காட்சி ஒன்றில் நான்கைந்து செகண்டுகளில் பிகினியில் தோன்றி மறையும் சமந்தாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தனர் ரசிக சிகாமணிகள். ஹோம்லி பொண்ணு இப்படி ஆயிடுச்சே என்று பச்சாதாபபட்டவர்களும் உண்டு. சிலருக்கோ இந்த பொண்ணு உடம்புக்கு இதெல்லாம் ஓவரா இல்லை என்ற நினைப்பும் வந்து சென்றது.

எது எப்படியோ, தெலுங்கருக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கும் நான் தாராளமானவர்தான் என்று காண்பித்துள்ளார் சமந்தா. அந்த வகையில் தமிழகத்துக்கு மற்றொரு பிகினி நாயகி கிடைத்துவிட்டார். இந்நிலையில் இளைய தளபதி விஜய்யுடன், சமந்தா நடிக்கும், கத்தியிலும் இதுபோன்ற காட்சி இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது இயற்கைதான்.

 

ஆகஸ்ட் 18ல் காவியத்தலைவன் ஆடியோ ரிலீஸ்: ஏ.ஆர்.ரகுமான்

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள காவியத்தலைவன் படத்தின் ஆடியோ ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகும் என அப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

அரவான் படத்தை தொடர்ந்து வசந்தபாலன் இயக்கி வரும் படம் காவியத்தலைவன். 1920-களில் கொடிக்கட்டி பறந்த நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகிவரும்

ஆகஸ்ட் 18ல் காவியத்தலைவன் ஆடியோ ரிலீஸ்: ஏ.ஆர்.ரகுமான்

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாக செய்திகள் வெளியான நாள் முதலே ரசிகர்களுக்கு இப்படத்தின் இசை மீதுள்ள ஆர்வம் அதிகரித்தது.

அதற்கேற்ப, தான் இசையமைத்த படங்களிலே காவியத்தலைவன் படத்திற்காகத்தான் தான் அதிக சிரமம் மேற்கொண்டதாக ஏ.ஆர்.ரகுமான் பேட்டியளிக்க, எதிர்பார்ப்பின் அளவு உச்சத்தை தொட்டது.

ஆடியோ ரிலீஸ்

காவியத்தலைவன் பாடல்கள் கடந்த ஜூலை 31 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அது நிறைவேறாமல் போக தற்போது ஆகஸ்ட் 18 ஆம் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரியன் எப்.எம்

படத்தின் ஆடியோ ரிலீஸை ஆகஸ்ட் 18ம் தேதி காலை 9 மணிமுதல் 11 மணிவரை சூரியன் எப்.எம் லைவ் ஆக ஒளிபரப்புகிறது. என்னுடன் லைவ் ஆக உரையாடுங்கள் என்று ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிந்துள்ளார்.

சித்தார்த், பிரிதிவிராஜ்

சித்தார்த் மற்றும் பிரித்திவ்ராஜ் ஹீரோக்களாக நடிக்க வேதிகா இப்படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார். நாசர், தம்பி ராமையா, பொண்வண்ணன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ரசிகர்களிடம் வரவேற்பு

ஏற்கனவே வாங்க மக்கா வாங்க என்னும் ஒரு முழு பாடலும், கர்ணமோட்சம், ஏய் மைனர் என்னும் இரண்டு ப்ரோமோ பாடல்களும் வெளியாகி இணையதள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் பா.விஜய் வரிகளில் உருவாகியுள்ள யாருமில்லா என்னும் மற்றொரு முழு பாடலும் வெளியாகி வரவேற்பினைப் பெற்றுள்ளது.

 

போராடும் மாணவர்களுக்கு துணை நிற்போம்- திருமுருகன் காந்தி

சென்னை: கத்தி மற்றும் புலிப்பார்வை போன்ற படங்களுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு துணை நிற்போம் என்று மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

புலிப்பார்வை படத்தின் இசை வெளியீட்டு விழாவில், எதிர்க்குரல் எழுப்பிய மாணவர்களை நாம் தமிழர் கட்சி மற்றும் ஐஜேகே கட்சியினர் தாக்கி ரவுடித்தனம் செய்தனர்.

இரும்புத் தடிகளைக் கொண்டு அடித்து காயம் ஏற்படுத்தினர். இதில் 12 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

மேடையில் சீமான் மற்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை வைத்துக் கொண்டே இந்த வன்முறையை அரங்கேற்றினர்.

இந்த தாக்குதலுக்கு தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் இப்போது கண்டனம் வெளியிட்டுள்ளார். அவரது கண்டனம்:

"ஈழ விடுதலை அரசியலுக்கு விரோதமான, இந்திய பார்ப்பனிய அரசின் 'விடுதலைப் புலிகள் எதிர்ப்பு அவதூறு பிரச்சாரத்திற்கு' துணை செய்யும் திரைப்படமாக அமைந்திருந்த "புலிப்பார்வை" எனும் மூன்றாம்தர திரைப்படைப்பிற்கு ஜனநாயக வழியில் தமது எதிர்ப்பினை பதிவு செய்த மாணவ தோழர்கள் மிக மோசமாக தாக்கப்பட்ட்தை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

போராடும் மாணவர்களுக்கு துணை நிற்போம்."

 

இயக்குநர் பாலச்சந்தரின் மகன் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்

சென்னை: திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தரின் மகன், காலமான கைலாசத்தின் உடல், பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைலாசம் நேற்று பிற்பகல் மரணமடைந்தார்.

கைலாசத்திற்கு கீதா என்ற மனைவியும், விலாசினி என்ற மகளும், விஷ்ணு என்ற மகனும் உள்ளனர். சென்னை வாரன் சாலை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கைலாசத்தின் உடலுக்கு திரையுலகினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

கைலாசத்தின் உடல், பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று பிற்பகலில் தகனம் செய்யப்பட்டது. கைலாசத்தின் உடலுக்கு அவரது மகன் விஷ்ணு இறுதிச் சடங்குகள் செய்தார். அப்போது பாலசந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் உடன் இருந்தனர்.

மறைந்த கைலாசம், கவிதாலயா திரைப்பட நிறுவனத்தையும், மின் பிம்பங்கள் என்ற தொலைக்காட்சி தொடர் தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வந்தார். மேலும், தூர்தர்ஷனில் பணியாற்றிய போதே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளை புகுத்தினார். சமூக அவலங்களை தொடர்ந்து சாடி வந்த அவர், ஆவணப்பட இயக்குநராகவும் திகழ்ந்தார். அவர் இயக்கிய வாஸ்து மரபு என்ற ஆவணப்படம் தேசிய விருது பெற்றது.

 

ரஜினியைச் சந்தித்த பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி!

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் ரோஹித் ஷெட்டி, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசினார். ரஜினியை வைத்து நேரடி பாலிவுட் படம் இயக்கும் ஆசையை அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஷாரூக்கான் - தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை இயக்கியவர்தான் ரோஹித் ஷெட்டி. அந்தப் படத்தில் ரஜினிக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் உருவாக்கிய லுங்கி டான்ஸ் பாடலுக்குக் கிடைத்த வரவேற்பு உலகம் அறிந்தது.

ரஜினியைச் சந்தித்த பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி!

சில தினங்களுக்கு முன் ஹைதராபாதிஸல் லிங்கா படப்பிடிப்பிலிருந்த ரஜினியை நேரில் சந்தித்தார் ரோஹித் ஷெட்டி. தான் அடுத்து இயக்கப் போகும் படத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். அத்தோடு அவரிடம் கதையையும் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

ரஜினியின் அனைத்துப் படங்களும் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகின்றன. ஆனாலும் அவர் நேரடியாக நடித்த கடைசி இந்திப் படம் புலந்தி. வெளியான ஆண்டு 2000.

தன் படத்தில் ரஜினி நடிப்பாரா? நடிப்பார் என்று அழுத்தமாக நம்புகிறார் ரோஹித் ஷெட்டி!

 

சிறையிலுள்ள சஞ்சய்தத் தயாரிப்பில் ஹிந்தி படம் இயக்கும் பிரபுதேவா

மும்பை: பாலிவுட் முன்னணி நடிகர் சஞ்சய் தத் தயாரிக்கும் படத்தை பிரபுதேவா இயக்குகிறார்.

தமிழில் இருந்து ஹிந்திக்கு சென்ற பிரபுதேவா, அங்கு முக்கியமான இயக்குனராகி விட்டார். அவர் இயக்கிய, வான்டட், ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா ஆகிய படங்கள் தொடர்ந்து ஹிட்டானதால் பாலிவுட் உலகம் பிரபுதேவாவுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்து வருகிறது.

சிறையிலுள்ள சஞ்சய்தத் தயாரிப்பில் ஹிந்தி படம் இயக்கும் பிரபுதேவா

இப்போது அவர் அஜய் தேவ்கன் நடிக்கும் ஆக்ஷன் ஜாக்சன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுபற்றி பிரபுதேவா கூறியதாவது: ஆக்ஷன் ஜாக்சன் படத்துக்கு இன்னும் 15 நாள் ஷூட்டிங் இருக்கிறது. அதோடு படம் முடிந்துவிடும்.

அடுத்து அக்ஷய் குமார் நடிக்கும் படத்தை இயக்குகிறேன். ரெமோ இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். இதற்கிடையில் சஞ்சத் தத் தயாரிக்கும் படத்தை இயக்க இருக்கிறேன். கதையோ மற்ற விஷயங்களோ முடிவாகவில்லை. இவ்வாறு பிரபுதேவா கூறினார்.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி சிறையிலுள்ள சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா தயாரிப்பு நிர்வாகத்தை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

திரிஷ்யம் ரீமேக்கில் கமல்ஹாசன் மகளாக நிவேதிதா தாமஸ் தேர்வு!

சென்னை: மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் சக்கைப்போடு போட்ட திரைப்படமான திரிஷ்யம்தான் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் படமாகின்றது.

இப்படத்தில் மோகன்லால் கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசனும், மீனா கதாப்பாத்திரத்தில் கெளதமியும் நடிக்கின்றனர்.

திரிஷ்யம் ரீமேக்கில் கமல்ஹாசன் மகளாக நிவேதிதா தாமஸ் தேர்வு!

தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் பெண் காவல் அதிகாரி ஒருவரின் மகனை மீனா அடித்துக் கொலை செய்து விடுவார். பின்னர் தன்னுடைய மகளுடன் இணைந்து அப்பிணத்தை தோட்டத்தில் புதைத்து விடுவார்.

இதனை அறியும் மோகன்லால் தன்னுடைய மனைவியிம், மகளும் போலீசில் சிக்கிவிடாமல் காப்பாற்ற போராடுவதே இப்படத்தின் கதையாகும்.

அம்மகள் கதாபாத்திரத்தில் தமிழில் நடிப்பதற்கு ஜில்லா, நவீன சரஸ்வதி சபதம் படங்களில் நடித்த நிவேதிதா தாமஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. மலையாளத்தில் இந்த கேரக்டரில் அன்சிபா நடித்து இருந்தார்.

பெண் போலீஸ் அதிகாரி வேடத்தில் மலையாளத்தில் நடித்த ஆஷா சரத்தே தேர்வாகியுள்ளார். வில்லன் வேடத்தில் கலாபவன்மணி நடிக்க இருக்கின்றார்.

தமிழிலும் ஜீது ஜோசப்பே இயக்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

புலிப்பார்வை இசை வெளியீட்டு விழா... மாணவர்கள் முற்றுகை.. சீமானைக் கைது செய்ய கோரிக்கை!

சென்னை: புலிப்பார்வை பட இசை வெளியீட்டு விழாவில் திடீரென புகுந்து போராட்டம் நடத்தினர் முற்போக்கு மாணவர் முன்னணியைச் சேர்ந்த மாணவர்கள்.

மாணவர் அமைப்பின் தலைவர் மாறன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தின்போது, சீமானைக் கைது செய்யக் கோரி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

புலிப்பார்வை இசை வெளியீட்டு விழா... மாணவர்கள் முற்றுகை.. சீமானைக் கைது செய்ய கோரிக்கை!

சிங்கள வெறியர்களால் கோரமாக படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பாலச்சந்திரனை, சிறார் போராளியாகச் சித்தரித்துள்ளதாக புலிப்பார்வை படத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாலச்சந்திரன் படுகொலை, ஈழத்தில் நடந்த இனப்படுகொலை குறித்தெல்லாம் சர்வதேச விசாரணை நடக்கும் வேளையில், அதை திசை திருப்பும் ராஜபக்சேவின் முயற்சியே புலிப்பார்வை போன்ற படங்கள் என்று கூறி தமிழ் உணர்வாளர்கள், மாணவர் அமைப்பினர் போராடி வருகின்றனர்.

ஆனால் புலிப்பார்வை படத்துக்கு ஆதரவு அளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இன்று கலந்து கொண்டார்.

சென்னை சத்யம் திரையரங்கில் இன்று காலை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடங்கியது. அதற்கு முன்பே மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திரையரங்குக்குள் வந்துவிட்டனர்.

விழா நடந்து கொண்டிருந்தபோது, திரையரங்குக்குள் இருந்த மாணவர்கள் - இளைஞர்கள் சுமார் 50 பேர், திடீரென எழுந்து, மேடையில் இருந்த பாரிவேந்தரையும், சீமானையும் பார்த்து, "எங்களுக்கு சில கேள்விகள் இருக்கின்றன. முதலில் அதற்கு பதில் சொல்லுங்கள்" என்று உரக்க குரல் கொடுத்தனர்.

ஆனால் அதை காதில் வாங்காமல் தொடர்ந்து பேசினர். எனவே 'துரோகி சீமானைக் கைது செய்யுங்கள்.. அவரிடம் நாங்கள் சில கேள்விகளைக் கேட்க வேண்டும்', என்று தொடர் முழக்கமிட, அங்கிருந்த நாம் தமிழர், ஐஜேகே, பாஜக கட்சியினர் மாணவர்களைத் தாக்கினர்.

பாதுகாப்புக்காக இருந்த போலீசார் தலையிட்டு, மாணவர்களைக் கைது செய்து வெளியே அழைத்துச் சென்றனர்.

 

பொங்கலுக்கு வரும் அஜீத் படம்!

நவம்பரில் வெளியாகும் என்று கூறப்பட்ட அஜீத்தின் புதிய படம், பொங்கலுக்கு தள்ளிப் போயிருக்கிறது.

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் பெயர் சூட்டப்படாத புதிய படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது.

இந்தப் படம் நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டது.

பொங்கலுக்கு வரும் அஜீத் படம்!

ஆனால் அதில் இப்போது மாற்றம். மேலும் கொஞ்சம் அவகாசமெடுத்து, மிக நேர்த்தியாக இந்தப் படத்தைத் தரலாம் என்பதாலும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இசையமைக்கவிருப்பதாலும், இரண்டு மாதங்கள் தள்ளிப் போட்டுள்ளனர்.

படத்தை பொங்கலுக்கு வெளியிட்டால் நல்ல வசூலை அள்ளலாம் (வீரம் அனுபவம்!) என்பதால், ஜனவரி 15-அன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

ஏஎம் ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தில் அனுஷ்கா, த்ரிஷா நாயகிகளாக நடிக்கின்றனர். அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார்.

 

அஞ்சான் சஸ்பென்ஸ்.. கேட்டாலும் சொல்லிடாதீங்க! - லிங்குசாமி வேண்டுகோள்

சென்னை: அஞ்சான் படத்தின் இறுதிக் காட்சி பற்றி யாருக்கும் சொல்லிடாதீர்கள், விமர்சனத்திலும் எழுதிவிடாதீர்கள் என்று இயக்குநர் லிங்குசாமி மீடியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சூர்யா நடித்த அஞ்சான் படம் இன்று வெளியாகியுள்ளது. உலகமெங்கும் 1400 அரங்குகளில் வெளியாகியுள்ளதாகக் கூறப்படும் இந்தப் படத்தின் முதல் காட்சி முடிந்த நிலையில், படம் குறித்து பலவிதமான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

அஞ்சான் சஸ்பென்ஸ்.. கேட்டாலும் சொல்லிடாதீங்க! - லிங்குசாமி வேண்டுகோள்

இந்த நிலையில், மீடியாக்காரர்களுக்கு இயக்குநர் லிங்குசாமி ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், 'அஞ்சான் படத்தில் சூர்யாவின் இரட்டை வேடங்களுக்குப் பின்னேயுள்ள சஸ்பென்ஸை வெளியில் சொல்லிவிடாதீர்கள். உங்கள் விமர்சனங்களிலும் அதுபற்றி எழுதிவிடாதீர்கள். ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் போய்விடும்," என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

பத்திரிகைகாரங்களுக்கு சொல்லிட்டீங்க... ஆனா பேஸ்புக், ட்விட்டர் விமர்சகர்களை என்ன பண்ணுவீங்க!

 

'கத்தி' படத்தில் விஜய் இளம் அரசியல் தலைவராக நடிக்கிறாரா?

சென்னை: கத்தி படத்தில் விஜய் இளம் அரசியல் போராளியாக வருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வரும் கத்தி படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. படத்தை தயாரிக்கும் லைக்கா மொபைல்ஸ் நிறுவனர் சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இதனால் தான் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

'கத்தி' படத்தில் விஜய் இளம் அரசியல் தலைவராக நடிக்கிறாரா?

படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று சிலரும், அதில் என்ன கூறுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளாமல் ஏன் எதிர்க்க வேண்டும் என்று சிலரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் கத்தி படத்தில் வரும் கதிரேசன் என்ற கதாபாத்திரம் அதாவது இரண்டில் ஒரு விஜய் இளம் அரசியல் போராளியாம். அவர் இளைஞர் படையை வழிநடத்துபவராக வருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கத்தி படம் பிரச்சனைகள் எல்லாவற்றையும் மீறி ரிலீஸாகி நிச்சயம் வெற்றி பெறும் என்று விஜய்யின் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். படத்தில் அனிருத் இசையில் விஜய் ஸ்ருதியுடன் டூயட் பாடுகிறார்.

கத்தி படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

விஜய்க்கு மாணவர்களில் ஒரு பிரிவினர் நேரில் சந்தித்து ஆதரவு!

விஜய் - சமந்தா ஜோடியாக நடிக்கும் கத்தி படத்துக்கு மாணவர்களில் ஒரு பிரிவினர் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் இலங்கை அரசுக்கு ஆதரவானது, ராஜபக்சேவுக்கு நெருக்கமானது என்று ஆதாரங்கள் வெளியானதால் படத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.

விஜய்க்கு மாணவர்களில் ஒரு பிரிவினர் நேரில் சந்தித்து ஆதரவு!

அந்த சிக்கலை சரிகட்ட, எதிர்ப்பு காட்டிய கட்சித் தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசி வந்தனர் முருகதாஸும் விஜய்யும்.

லைக்கா நிறுவனம் இலங்கை தமிழருக்கு சொந்தமானது என்றும் ராஜபக்சேவுடன் எந்த தொடர்பும் கிடையாது என்றும் படக்குழு விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் நாம் தமிழ் கட்சி தலைவர் சீமான், இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் ஆகியோர் இப் பிரச்சினையில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். லைகாவை எதிர்த்துப் போராட மாட்டேன் என்று கூறிவிட்டார் சீமான்.

ஆனால் முற்போக்கு மாணவர் முன்னணி அமைப்பின் மாறன் போன்றவர்கள், கத்தி, புலிப்பார்வை படங்களை தமிழகத்தில் வெளியாக விட மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த சில மாணவர்கள் ஒன்று திரண்டு, விஜய்யை நேரில் போய்ச் சந்திக்க படக்குழுவினர் ஏற்பாடு செய்தனர். விஜய்யைச் சந்தித்த மாணவர்கள் படத்துக்கு தங்களின் ஆதரவு உண்டு என்று தெரிவித்தனர்.

 

தம்பி விஜய், பிறப்பால் மட்டுமே தமிழராயிருப்பது அர்த்தமற்றது! - இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்

சென்னை: தம்பி விஜய் பிறப்பால் மட்டுமே தமிழராயிருப்பது அர்த்தமற்றது. காட்டிக்கொடுத்த கருணாவும் பிறப்பால் தமிழர்தான் என்பதை மறந்துவிடாதீர்கள், என்று கடிதம் எழுதியுள்ளார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

செஞ்சோலையில் அப்பாவி ஈழத் தமிழ்க் குழந்தைகள் 63 பேரை இலங்கைப் பே'ய'ரசு விமானத்திலிருந்து குண்டுவீசிக் கொன்ற ஆகஸ்ட் 14ம் நாளில் கனத்த மனத்துடன் இந்த செய்தி அறிக்கையை எழுதுகிறேன்.

தம்பி விஜய், பிறப்பால் மட்டுமே தமிழராயிருப்பது அர்த்தமற்றது! - இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்

ஆகஸ்ட் 14ம் நாள் உலகெங்குமுள்ள 10 கோடி தமிழர்களின் இதயம் அந்தக் குழந்தைகளின் ரத்தத்தால் நனைந்த நாள். இந்த நாளில், ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட அந்த மழலைகளை நினைவு கூரும் விதத்தில், அந்தக் குழந்தைகள் கொல்லப்பட்ட இன்றைய தினமும், அவர்களின் நினைவாக வன்னி மண்ணில் விளக்கேற்றப்பட்ட நாளைய தினமும் ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் குறைந்தபட்சம் ஒரு அகல் விளக்காவது ஏற்றப்படவேண்டும் என்று தமிழ்ப் பெருங்குடி மக்களைப் பணிவோடு வேண்டுகிறேன்.

ஆண்டுகள் கடந்த பின்னும் இதயத்தை உறைய வைக்கும் அந்தச் சம்பவத்தை மறக்க இயலாமல் நாம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் கண்ணீரில் நம்முடன் இரண்டறக் கலக்க வேண்டிய நண்பர்கள் சிலர், மனிதமிருகம் ராஜபக்சேவின் நண்பர்கள் தயாரித்துள்ள ஒரு திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிடுவதை எதிர்க்கலாமா - என்று கண்ணீர் மல்கக் கேட்பது எம்மைக் கவலையடையச் செய்துள்ளது.

செஞ்சோலையில் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளைக் குண்டுவீசிக் கொல்ல பயன்படுத்தப்பட்ட அதே விமானத்தில் மனித மிருகம் மகிந்த ராஜபக்சேவின் விருந்தினர்களாக விண்ணில் உலா வந்த லைக்காமொபைல் நிறுவனத்தினர் தான் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள் என்பது எம் இனிய நண்பர்களுக்குத் தெரியுமா தெரியாதா? அல்லது அறிந்தும் அறியாதவர்கள் போல் அறிதுயிலில் இருக்கிறார்களா?

தம்பி விஜய், பிறப்பால் மட்டுமே தமிழராயிருப்பது அர்த்தமற்றது! - இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்

கத்தி - என்கிற இந்தப் படத்தை எடுத்தவர்கள் தரப்பிலிருந்து, 'தமிழர்களின் ரத்தத்தில் நனைந்த பணத்தில் நாங்கள் படமெடுப்போமா' என்றெல்லாம் தொடக்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. ராஜபக்சேவின் நண்பர்கள் - ராஜபக்சே குடும்பத்தின் கூட்டாளிகள் - ராஜபக்சே குடும்பத்தின் அபிமானத்தைப் பெற்றவர்கள் - எடுக்கிற படம்தான் இது என்பது அம்பலமான பிறகு, 'இந்தப்படத்தில் தமிழர்களுக்கு எதிராக என்ன இருக்கிறது' என்கிற அடுத்த கேள்வியோடு அரங்குக்கு வருகிறார்கள் சில நண்பர்கள். அவர்களைப் பார்க்கும்போது, எனக்கு அவமானமாக இருக்கிறது.

எம் நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நேரடியாக தமிழ்த் திரையுலகில் கால்பதிக்க முடியாது என்பதால்தான், லைக்கா மொபைல் - என்கிற தனக்கு நெருக்கமான சிநேகிதனின் முகமூடியுடன் தமிழ் சினிமாவில் கால் வைக்க முயல்கிறது ராஜபக்சே குடும்பம். இதைக் கூடவா நீங்கள் புரிந்துகொள்ளவில்லை?

இன்று நீங்கள் லைக்கா மொபைலை அனுமதித்தால், நாளை - மகிந்த ராஜபக்சேவும் கோதபாய ராஜபக்சேவும் பசில் ராஜபக்சேவும் நமல் ராஜபக்சேவும் தமிழ்த் திரையுலகில் தங்களுக்கு நம்பகமான நண்பர்களை வெவ்வேறு முகமூடிகளுடன் திணிப்பதை உங்களால் எப்படித் தடுக்க முடியும்? 'இந்தப் படத்தில் தமிழர்களுக்கு எதிராக என்ன இருக்கிறது' என்கிற உங்களது கேள்வி, உங்களிடமே அப்போது எழுப்பப்படாதா? உங்கள் வார்த்தைகளாலேயே உங்கள் வாய் அடைக்கப்படாதா? என் இனிய நண்பர்களே, எச்சரிக்கையாயிருங்கள்.

கத்தி - திரைப்படத்தின் கதை என்ன என்பதைக் குறித்து இங்கே எவரும் கேள்வி எழுப்பவேயில்லை. வழக்கமான தமிழ் சினிமா ஹீரோக்கள் செய்வதைப் போல், இந்தியாவுக்கு வரும் ஆபத்தை தம்பி விஜய் எப்படித் தடுக்கிறார் - என்பதே கூட கதையாக இருந்துவிட்டுப் போகட்டும். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இந்தியாவாலும் இலங்கையாலும் எம் ஈழ உறவுகளுக்கு நேரும் ஆபத்துகளிலிருந்து அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்பதைப் பற்றி மட்டுமே நாங்கள் கவலைப்படுகிறோம்.

கத்தி திரைப்படத்தின் கதை என்ன? அதில் தமிழ்ச் சினிமாவின் பாரம்பரிய குத்தாட்டம் இருக்கிறதா இல்லையா - என்றெல்லாம் முட்டாள்தனமாகக் கேள்வி எழுப்பாமல், அது எவருடைய முதலீட்டில் எடுக்கப் படுகிறது என்றுதான் கேட்கிறார்கள் தமிழகத்தின் மாணவக் கண்மணிகள். கத்தி படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் அவர்களது கேள்வி. அந்த நியாயமான கேள்வியை எழுப்பும் எங்கள் மாணவத் தம்பிகளை மிரட்ட முயற்சிப்பது கடைந்தெடுத்த கோழைத்தனம்.

ராஜபக்சேவின் பினாமிகளோ - என்கிற சந்தேகம் எழுகிற அளவுக்கு ராஜபக்சேவுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் எடுக்கும் ஒரு படத்தைக் குறித்து கேள்வி எழுப்பும் அந்த மாணவத் தம்பிகள் மீது ஒரு துரும்பு பட்டால்கூட கத்தி படத்துடன் தொடர்புடைய தம்பி விஜய் உள்பட அத்தனைப் பேரும் அதற்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று பணிவன்போடு எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நான் ஒரு தெருப் பாடகன். எம் மக்களுக்காகத் திரைப்படம் எடுக்கிற எளிய கலைஞன். என்னுடைய அடுத்த திரைப்படம் முடிவடையும் நிலையில் இப்படியொரு அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், என்னுடைய பட வெளியீட்டின் போது நான் இடைஞ்சல்களைச் சந்திக்க நேரலாம். அதற்காக அஞ்சி இதைப் பேசாதிருப்பது கோழைத்தனம் என்பதாலேயே இதைப் பேசுகிறேன். இப்போது பேசாமல் வேறெப்போது நான் இதைப் பேசமுடியும்?

என் இனிய நண்பர்களிடம் நான் கேட்டுக் கொள்வது இதைத்தான்... செஞ்சோலையில் கொல்லப்பட்ட எங்கள் குழந்தைகளுக்காகக் கண்ணீர் வடியுங்கள். அவர்கள் மீது குண்டு வீசிய விமானத்தில் உல்லாசப் பயணம் சென்றவர்களுக்காக கண்ணீர் வடிக்காதீர்கள்!

தம்பி விஜய்க்கும் ஒரு வேண்டுகோள்....

பிறப்பால் மட்டுமே தமிழராயிருப்பது அர்த்தமற்றது. காட்டிக்கொடுத்த கருணாவும் பிறப்பால் தமிழர்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். நம்முடைய இருப்பும் நம் இதயத்தில் ஏந்தியிருக்கிற நெருப்பும்தான் தமிழரா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும்.

செஞ்சோலைக் குழந்தைகள் கொல்லப்பட்ட இன்றைய தினமும் நாளைய தினமும் அந்த அப்பாவிக் குழந்தைகளுக்காக அன்புத் தம்பி விஜய் உணர்வோடும் உணர்ச்சியோடும் தன் இல்லத்தில் ஒரே ஒரு அகல் விளக்காவது ஏற்ற வேண்டும் என்று உரிமையுடன் வேண்டுகிறேன்!

 

கத்தி, புலிப்பார்வையை பெரியார் திராவிடர் கழகம் ! - கோவை ராமகிருஷ்ணன்

கத்தி, புலிப்பார்வை போன்ற ஈழ விரோதிகளின் படங்களை தந்தை பெரியார் திராவிடர் கழகம் கடுமையாக எதிர்க்கும். வெளிவர விடாது என அந்த அமைப்பின் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் சமீபத்தில் அளித்துள்ள ஒரு வீடியோ பேட்டியில், "மகிந்த ராஜபக்சே, கலாச்சாரம் மற்றும் வணிகம் மூலம் தமிழகத்தில் கால் பதிக்க முயற்சிக்கிறார். அதற்கு இங்கிருக்கும் சிலரே உதவி வருகின்றனர். இதனை தமிழீழ ஆதரவு அமைப்புகள் ஒருபோதும் அனுமதிக்காது.

கத்தி, புலிப்பார்வையை பெரியார் திராவிடர் கழகம் ! - கோவை ராமகிருஷ்ணன்

பாலகன் பாலச்சந்திரனை ‘குழந்தைப் போராளி' போல தவறாக காட்டியுள்ளனர் புலிப்பார்வை படத்தில். அந்தப் படத்தை வெளியிடும் முயற்சி தொடர்ந்தால், அதை எதிர்த்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் கடும் போராட்டங்களை முன்னெடுக்கும்.

எங்கள் 2 லட்சம் மக்களைக் கொன்ற ராசபக்சேவின் கூட்டாளியான லைக்கா நிறுவனர் தயாரிக்கும் ‘கத்தி' திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்.

இந்த போராட்டத்தை முன்னெடுத்து போராடும் மாணவர் இயக்கங்களுக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் முழ ஆதரவு இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

 

இயக்குநர் கே பாலச்சந்தர் மகன் கைலாசம் மரணம்!

சென்னை: மூத்த இயக்குநர் கே பாலச்சந்தரின் மகன் கைலாசம் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 53.

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பாலச்சந்தர். இவரது மகன் கைலாசம். பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்த பல படங்களில் தயாரிப்பாளராக இருந்துள்ளார்.

மின் பிம்பங்கள் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். தொலைக்காட்சிகளுக்கு நிகழ்ச்சிகள் தயாரித்துக் கொடுப்பதில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்தது மின்பிம்பங்கள்.

காச நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார் கைலாசம். அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் இன்று பிற்பகல் 1.40 மணிக்கு அவர் மரணமடைந்தார்.

கைலாசத்துக்கு கீதா என்ற மனைவியும், விலாசினி என்ற மகளும், விஷ்ணு பாலா என்ற மகனும் உள்ளனர். தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி இவரது சகோதரி.

கைலாசத்தின் இறுதிச் சடங்குகள் நாளை நடக்கிறது. சென்னை வாரன் சாலையில் உள்ள அவரது இல்லத்திலிருந்து கைலாசத்தின் இறுதி ஊர்வலம் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி இரங்கல்

கைலாசம் மரணத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார், லிங்கா படப்பிடிப்பிலிருக்கும் ரஜினிகாந்த். அவர் நேரில் வந்து கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.