சூர்யாவுடன் இணையும் நித்யா மேனன்

சென்னை: யாவரும் நலம் என்ற திகில் படத்தைக் கொடுத்த இயக்குநர் விக்ரம் குமார் தற்போது நடிகர் சூர்யாவை வைத்து 24 என்ற த்ரில்லர் படத்தை இயக்கி வருகிறார்.

அஞ்சான் மற்றும் மாஸ் என அடுத்தடுத்து 2 மாபெரும் தோல்விப் படங்களைக் கொடுத்த நடிகர் சூர்யா, அடுத்து வெற்றிப் படம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் இந்தப் படத்தில் தீவிரமாக உழைத்து வருகிறார்.

Nitya Menen to romance Suriya in 24

முதல்முறையாக நடிகர் சூர்யா த்ரில்லர் கதையில் நடிக்கும் இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார், இந்நிலையில் நடிகை நித்யாமேனனும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது 24 படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நித்யாமேனன், ஒரு முக்கியமான வேடத்தில் படத்தில் நடித்து வருகிறார் என்று கூறுகின்றனர்.

கால இயந்திரத்தைப் பற்றிய கதையாக உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா 2 வேடங்களில் நடித்து வருகிறார், அப்படியென்றால் 2 சூர்யாக்களில் ஒரு சூர்யாவிற்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறாரா? என்பது தெரியவில்லை.

சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வருகிறார், தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் உருவாகி வருகிறது 24.

 

ஒவ்வொரு மாணவரும் அப்துல்கலாமாக மாற வேண்டும்- வடிவேலு

சென்னை: மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாமின் உடல் இன்று பகல் 11 மணிக்கு மேல் அவரின் சொந்த மண்ணில் நல்லடக்கம் செய்யப்பட்டது, லட்சக்கணக்கான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இந்தியா முழுவதுமிருந்து பல்வேறு தலைவர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் மக்களின் ஜனாதிபதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர், நடிகர்களில் விஜயகாந்த், சிவகார்த்திகேயன் மற்றும் வடிவேலு ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Each Student Must be Abdulkalam - Vadivelu

அப்துல்கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் நிருபர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு அப்துல்கலாமைப் பற்றி பேசினார் " உலகத்தின் அனைத்து வல்லரசு நாடுகளையும், சர்வசாதாரணமாக பெயர் வைக்கப்படாத வல்லரசு நாடு இந்தியா என பீதியைக் கிளப்பி, இந்தியாவை தலைநிமிரச் செய்து தமிழன். அனைவருக்கும் பெருமையைச் சேர்த்த தமிழ் தங்கம் ஒரு மாபெரும் விஞ்ஞானி, இளைஞர்களுக்கேல்லாம் அவர் ஒரு கல்வி விளக்கு.

ஐயா ,அப்துல்கலாம் பிரிந்த நாள் நமக்கெல்லாம் ஒரு கருப்பு தினம். இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் அவர்களது உறவுக்காரர் இறந்தது போல் உணர்கிறேன் நான், அவர் நம்மை விட்டு பிரிந்தது மிகப்பெரிய வேதனை.

அவர்போலவே ஒவ்வொரு இளைஞர்களும், மாணவர்களும் ஒவ்வொரு அப்துல் கலாமாக மாறவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என தனது வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

 

பேச்சுவார்த்தையில் உடன்பாடு... நாளை முதல் மீண்டும் படப்பிடிப்பு

பெப்சி அமைப்புடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்தால், நாளை முதல் மீண்டும் படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் (பெப்சி) இணைந்துள்ள தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாக, தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இக்கோரிக்கைகள் தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், பெப்சி நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.

FEFSI issue solved: Shooting resumes from Friday

இதற்கிடையே, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் வரையில் படப்பிடிப்புகளை ரத்து செய்வதாக தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிவித்தது. அதன்படி, 27-ம்தேதி முதல் படப்பிடிப்புகள் நடைபெறவில்லை.

இந்நிலையில், பெப்சி நிர்வாகிகளுக்கும், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்குமிடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சம்பளப் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு ஏற்பட்டது. இதையடுத்து இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

ஆனால், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றதால், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமை முதல் வழக்கம்போல் படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற யூனியன்கள் தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தாலும், சண்டைப் பயிற்சியாளர்களுக்கான சம்பள உயர்வு விஷயத்தில் இன்றும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. அதையும் முடித்து வைக்க முயற்சி தொடர்கிறது.

 

இன்னொரு தாய்க்கு பிறந்த உண்மையான சகோதரர் விஜய்- ட்விட்டரில் நெகிழ்ந்த சிம்பு

சென்னை: வாலு படம் பலமுறை தள்ளிப் போனதில் சிம்புவும் அவரது ரசிகர்களும் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகினர். சமூக வலைதளங்களில் பலரும் வாலு படம் தள்ளிப் போனதை மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வந்தனர்.

Simbu Says

சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் படம் வெளியே வரவில்லை, இந்நிலையில் வாலு படம் வெளியாக வேண்டி நடிகர் விஜய் அந்தப் படத்திற்கு மிகப்பெரிய அளவில் பண உதவி செய்தார் என்று செய்திகள் வெளியாகின.

தற்போது இதனை உறுதி செய்யும் விதத்தில் நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்கு நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார். " வாலு படம் வெளியாக உதவி புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி, இன்னொரு தாய்க்கு பிறந்த உண்மையான சகோதரர்" விஜய் அண்ணா என்று நெகிழ்ந்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில் "நீங்கள் பெருமைப் படும்படி கண்டிப்பாக செய்வேன் என நம்புங்கள், நீங்கள் இல்லாமல் நான் இல்லை" என்று தனது ரசிகர்களுக்கு நன்றி கூறியிருக்கிறார்.

தற்போது இந்த ட்வீட்களின் மூலம்விஜய் உதவி செய்தது உறுதியாகி விட்டது, மேலும் சிம்பு ரசிகர்கள் மேற்கொண்ட பிரார்த்தனைகளுக்கும் பலன் கிடைத்து விட்டது.

இதனால் சிம்பு ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் உங்கள் அபிமானத் திரையரங்குகளில் வாலு விரைவில் வெளியாகும்...

 

அனுஷ்கா போன்றே ட்விட்டரில் கலாம் பெயரை தவறாக எழுதிய நடிகர்: ஆனால் 'எஸ்கேப்'

மும்பை: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா போன்றே இந்தி நடிகர் பர்ஹான் அக்தரும் அப்துல் கலாமின் பெயரை ட்விட்டரில் தவறாக போட்டுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மறைவு செய்தியை அறிந்த பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ட்விட்டரில் தனது இரங்கலை தெரிவித்தார். அப்போது அவர் கலாமின் பெயரை ஏபிஜெ அப்துல் கலாம் ஆசாத் என்று தவறாக தெரிவித்திருந்தார். இதை பார்த்தவர்கள் அவரை ட்விட்டரில் கிண்டல் செய்தனர். உடனே அவர் தனது ட்வீட்டில் இருந்து ஆசாத்தை நீக்கிவிட்டார்.

Not just Anushka: Farhan Akhtar too mixed up APJ Abdul Kalam's name on Twitter

அனுஷ்கா மட்டும் அல்ல பாலிவுட் நடிகர் பர்ஹான் அக்தரும் ட்விட்டரில் கலாமின் பெயரை ஏபிஜெ அப்துல் கலாம் ஆசாத் என்று தவறுதலாக தான் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.

இதற்கிடையே மக்கள் அனுஷ்காவை கிண்டல் செய்வதை பார்த்த பர்ஹான் தனது ட்வீட்டில் திருத்தம் செய்து அப்துல் கலாம் என்று பெயரை மாற்றிவிட்டார். நல்லவேளை நான் சிக்கவில்லை என்று மனிதர் நிம்மதி பெருமூச்சுவிட்டிருப்பார்.

அனுஷ்கா தனது தவறை ஒப்புக் கொண்டதுடன் தன்னை யார் கிண்டல் செய்தாலும் கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

"வா நண்பா வா கனவு காணலாம்" அப்துல்கலாமிற்கு பாடல் பாடி இணையத்தில் வெளியிட்ட நடிகர்

சென்னை: மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமலஹாசன், இயக்குநர் டி.ராஜேந்தர் ஆகியோர் கவிதை வடிவில் இரங்கற்பா எழுதி வெளியிட்டனர்.

தற்போது அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் நடிகர் அசோக். தமிழ் சினிமாவில்வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான அசோக் அப்துல்கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகளை எடுத்துக் கொண்டு, வா நண்பா வா கனவு காணலாம் என்ற பாடலை எழுதி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பாடலின் ஆரம்ப வரிகள் தொடங்கி இறுதி வரை உற்சாகத்தை அள்ளித் தெளிக்கும் வரிகளுடன் பாடி அசத்தி இருக்கிறார் அசோக், யூ.கே.முரளியின் இசைக்கு வரிகள் எழுதி இருக்கிறார் கவிஞர் ஜோதிபாசு.

3 மணிநேரத்தில் பாடலை எழுதி பாடி இசை அமைத்து இருக்கின்றனர், ஆரம்பம் தொடங்கி இறுதிவரை கலாம் கலாம் என முடியும் இந்தப் பாடலை அப்துல்கலாமிற்கு அர்ப்பணித்து இருக்கின்றார் நடிகர் அசோக்.

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் அசோக்...

 

பரவை முனியம்மாவுக்கு தனுஷ் ரூ 5 லட்சம் உதவி

உடல் நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நாட்டுப் புறக் கலைஞரும் நடிகையுமான பரவை முனியம்மாவுக்கு நடிகர் தனுஷ் ரூ 5 லட்சம் உதவி செய்துள்ளார்.

Dhanush helps Rs 5 lakhs to Paravai Muniyamma

பரவை முனியம்மா உடல் நலக்குறைவால் அவதிப்படுவது குறித்து குமுதம் இதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது. இதைப் படித்த நடிகர் விஷால் உடனடியாக ரூ 5 ஆயிரம் கொடுத்ததோடு, மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளுக்காக மாதம் ரூ 5 ஆயிரம் தொடர்ந்து தருவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன் சொந்தப் பணத்திலிருந்து ரூ 5 லட்சத்தை பரவை முனியமாமாவுக்கு அளித்து உதவி செய்துள்ளார்.பரவை முனியம்மாவின் இப்போதைய குடும்ப சூழலில் இந்தத் தொகை ஒரு மிகப் பெரிய உதவியாக அமைந்துள்ளது.

 

சீன, ஆங்கில மொழிகளிலும் வெளியாகிறது பாகுபலி

தமிழ், தெலுங்கில் நேரடிப் படமாகவும், இந்தி, மலையாளத்தில் டப் செய்யப்பட்டும் வெளியாகி, வசூலில் புதிய சாதனைப் படைத்து வரும் எஸ்எஸ் ராஜமவுலியின் பாகுபலி படத்தை அடுத்து, சீன மற்றும் ஆங்கில மொழிகளில் டப் செய்து சீனா உள்ளிட்ட நாடுகளில் வெளியிடவிருக்கின்றனர்.

பாகுபலி படம் இதுவரை ரூ 500 கோடிக்கு மேல் குவித்து வசூலில் புதிய வரலாறு படைத்துள்ளது.

Bahubali to be dubbed in Chinese and English

இன்னும் கூட தமிழகத்திலும் இந்தியாவின் பிற பாகங்களிலும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பாகுபலியின் ஆதிக்கம் தொடர்கிறது.

இந்தப் படத்துக்கு வெளிநாடுகளில் கிடைத்துள்ள பேராதரவைக் கண்ட ராஜமவுலி, சீன மொழியிலும், ஆங்கிலத்திலும் டப் செய்யும் பணியில் இறங்கியுள்ளார்.

இந்த டப்பிங் வடிவம் சர்வதேச தரத்தில் இருக்கும் என்றும் சில காட்சிகளை இன்னும் ட்ரிம் பண்ணப் போவதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பாகுபலியின் புதிய பதிப்பை 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப் போவதாக அவர் தெரவித்துள்ளார்.

 

கலாமின் எளிமையை பின்பற்றி வருகிறேன்: சிவகார்த்திகேயன்

ராமேஸ்வரம்: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் எளிமை மற்றும் அவரது கொள்கைகளைப் பின்பற்றி வருவதாக நடிகர் சிவகார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மட்டுமின்றி உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்தியர்களால் மக்கள் ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ளப் பட்ட அப்துல் கலாம், கடந்த 27ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

Actor Sivakarthikeyan paid tribute to Kalam

அவரது திடீர் மரணம் இந்தியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராமேஸ்வரத்தில் இன்று அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. அப்துல்கலாமின் உடலுக்கு மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சிவகார்த்திக்கேயனும் ராமேஸ்வரம் சென்று கலாமுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:-

அப்துல்கலாமின் எளிமை மற்றும் கொள்கையை பின்பற்றி வருகிறேன். பள்ளி,கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சார்பில் இங்கு கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளேன். அவரது கனவை நினைவாக்க அனைவரும் உறுதி ஏற்போம்' என்றார்.

 

கலாமிற்கு அஞ்சலி: வாலியின் வரிகளில்…

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

காமராஜர் படத்திற்காக வாலி எழுதி இளையராஜா இசையமைத்த பாடல் அப்துல் கலாமிற்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.

ஊருக்கு உழைத்தவனே உறங்குகிறாயோ
உழைத்தது போதுமென்று உறங்குகிறாயோ
ஊராருக்கு அழுதவனே உறங்குகிறாயோ
ஊராரை அழ வைத்து உறங்குகிறாயோ

Lyricist Vaali’s line for Abdul kalam

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

பள்ளி அறியாத பிள்ளை பல பேரின் முகத்தை பார்த்தானடா
அது ஊரு சுற்றாமல் சோறு தான் போட்டு படிக்க வைத்தானடா

மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த மகராஜன் இவன்தானடா
ஊரு உலகெங்கும் தேடி பார்த்தாலும் ஈடு எவந்தானட

இத்தனை தவம் தான் என்று வருந்த வைக்கிறானே
திரும்ப வர வேண்டுமே எங்கள் கருப்பு காந்தி இவனே

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

பதவி இருந்தாலும் பதவி போனாலும் உதவி புரிவானடா
தனை பெற்ற தாயை விட பிறந்த நாடு தான் பெரிது என்பானடா
ஆற்று நீரையே அணைகள் கட்டியே தேக்க வைத்தானடா
கண்கள் ஊற்றும் நீரை தடுக்க இயலாமல் ஏங்க வைத்தானடா
வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தான்
வெள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவனே

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

 

வெனிஸ் திரைப்பட விழாவில் போட்டியிடுகிறது வெற்றிமாறனின் "விசாரணை"

சென்னை: தமிழின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கியிருக்கும் படம் விசாரணை, லாக்-அப் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் விரைவில் திரையைத் தொடவிருக்கிறது.

அட்டக்கத்தி தினேஷ் சமுத்திரக்கனி, கிஷோர் மற்றும் முருகதாஸ் ஆகியோர் இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். விசாரணை என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது காவல்துறை பிரயோகிக்கும் அராஜகங்களைப் பற்றி பேசும் படமாக விசாரணை உருவாகி இருக்கிறது.

Vetrimaran's Visaranai to Compete in Venice Film Festival

சர்வதேச இயக்குநர்களின் படங்கள் கலந்து கொண்டு போட்டியிடும் வெனிஸ் திரைப்பட விழாவில், இயக்குநர் வெற்றிமாறனின் விசாரணை திரைப்படமும் கலந்து கொள்கின்றது. தமிழ் திரைப்படம் ஒன்று வெனிஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை, அந்தப் பெருமையை இயக்குநர் வெற்றிமாறனின் விசாரணை திரைப்படம் தட்டிச் செல்கிறது.

இந்த மகிழ்ச்சியான அனுபவம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறும்போது "72 வருட பாரம்பரியமிக்க வெனிஸ் திரைப்பட விழாவின் வரலாற்றில் ஒரு தமிழ்ப்படம் திரையிடப்படுவது இதுவே முதல்முறை" என்று மகிழ்ந்து உள்ளார்.

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார், விசாரணை படத்தைத் தயாரித்து இருக்கிறார் நடிகர் தனுஷ்.

 

பல வருடங்களுக்குப் பின் மீண்டு வரும் காதலி- இது என்ன மாயம்

சென்னை: கும்கி திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு. தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வெள்ளக்கார துரை படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை, தற்போது இயக்குநர் ஏ.எல்.விஜயின் இயக்கத்தில் இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

அறிமுக நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து இப்படத்தில் நடித்திருக்கும் விக்ரம் பிரபு படத்தைப் பற்றி கூறும்போது "என்னுடன் இதுவரை நடித்த நடிகைகளில் நடிகை லட்சுமி மேனனை எனக்கு மிகவும் பிடிக்கும்.

Ithu Enna Mayam Movie

வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் ஒவ்வொரு படத்தையும் பார்த்துப் பார்த்து தேர்வு செய்கிறேன். இது என்ன மாயம் திரைப்படமும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.

காதல் + காமெடி என்று எல்லாம் கலந்த கலவையாக இது என்ன மாயம் திரைப்படம் இருக்கும், இயக்குநர் ஏ.எல்.விஜய் இயல்பாக நடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து அதனையே படத்திலும் கொண்டு வந்திருக்கிறார்.

மொத்தத்தில் இது என்ன மாயம் திரைப்படம் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும் " என்று கூறியிருக்கிறார்.

ஒரு இளைஞனின் வாழ்க்கையில் பல வருடங்களுக்குப்பின் அவனது காதலி மீண்டும் வந்தால், எப்படி இருக்கும் என்பதுதான் இது என்ன மாயம் படத்தின் கதையாம்.

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தை மேஜிக் பிரேம்ஸ் சார்பில் நடிகர் சரத்குமார், ராதிகா ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர்.

 

என்னை கிண்டல் செய்த கோழைகள் தில் இருந்தா என் முன்னாடி வாங்க பார்ப்போம்: நடிகை அனுஷ்கா

மும்பை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரை ட்விட்டரில் தவறாக குறிப்பிட்டதற்காக யார் தன்னை கிண்டல் செய்தாலும் கவலை இல்லை என்று பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மரணம் அடைந்த செய்தியை அறிந்த பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார். அப்போது அவர் கலாமின் பெயரை ஏபிஜெ அப்துல் கலாம் ஆசாத் என்று தவறுதலாக குறிப்பிட்டிருந்தார்.

Anushka Sharma Says Tweet With Error in Dr Kalam's Name Was 'Honest Mistake'

இதை பார்த்த மக்கள் கலாம் பெயரை எப்படி தவறாக எழுதலாம் என்று கூறி ட்விட்டரில் அனுஷ்காவை கிண்டல் செய்தனர். இதையடுத்து அனுஷ்கா தனது ட்வீட்டில் ஆசாத் என்ற பெயரை நீக்கினார்.

இந்நிலையில் இது குறித்து அனுஷ்கா மும்பையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அது தெரியாமல் நடந்த தவறு. என்னை கிண்டல் செய்தாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை. என் நோக்கம் சரியானது. கம்ப்யூட்டருக்கு பின்னால் அமர்ந்து கமெண்ட் போடுபவர்கள் கோழைகள், முகம் தெரியாதவர்கள். எங்கே அவர்கள் என் முகத்திற்கு எதிராக கிண்டல் செய்யட்டும் பார்க்கலாம் என்றார்.

 

நீங்க கூட காமெடி சூப்பர் ஸ்டார்னு போட்டீங்களாமே! - சந்தானத்தை கலாய்த்த ரஜினி

சில ஆண்டுகளுக்கு முன் சேட்டை என்று ஒரு படம் வந்தது. அதில் சந்தானத்துக்கு காமெடி சூப்பர் ஸ்டார் என டைட்டிலில் போட, அது பற்றி சந்தானத்திடமே ரஜினி ஜாலியாக விசாரித்திருக்கிறார். இதனை சந்தானமே நேற்று தெரிவித்தார்.

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க.

Are you Comedy superstar? Rajini asks Santhanam

இப்படத்தின் இசை வெளியீடு புதன்கிழமை மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

இந்த விழாவில் சந்தானம் பேசுகையில், "கல்லூரியின் கதை படத்தில் ஆர்யா என்னுடன் நடிக்கும் போது, நானும் அவரும் கொஞ்சம் நட்பா இருப்போம். அப்போ பெங்களூரிலிருந்து மாடல்ஸ் வந்திருந்தாங்க. அப்போ நீங்க யாருனு கேட்கவும் நான் தான் காமெடி சூப்பர் ஸ்டார்னு சொல்லிட்டேன். இதை ஆர்யா கவனிச்சு எல்லோரிடமும் போட்டுக் கொடுத்துவிட்டார். அப்போ இருந்தே இன்னும் அதிக நட்பா பழக ஆரம்பித்துவிட்டோம்.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பழைய சம்பவத்தை நினைவில் வைத்து, டைட்டிலில் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என்றே டைட்டிலில் பெயரை போட்டுவிட்டார். அந்த அளவுக்கு எனக்கும் ஆர்யாவுக்கும் நட்பிருக்கிறது.

நான் லிங்கா படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் போது, சூப்பர் ஸ்டார் பட்டத்தை இப்போ யார்யாரோ போட்டுக்குறாங்க என்று பேசிக்கொண்டிருக்கும் போது ரஜினி என்னைப் பார்த்து 'நீங்க கூட காமெடி சூப்பர் ஸ்டார்னு போட்டீங்களாமே' அப்டினு கேட்கவும் ஷாக் ஆயிட்டேன். உடனே சார் அது ஆர்யா டைட்டிலில் போட்டுட்டாரு என்றேன்.

தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துலதான் ஹீரோவுக்கு இணையா காமெடியன் போட்டோவும் விளம்பரத்தில் போட்டார்கள் என்று நினைக்கிறேன். அதற்கு ஆர்யாவும் ஓகே சொன்னாரு. அந்த நிகழ்வுதான் நான் ஹீரோவா நடிக்கிறதுக்கு காரணமாகவும் தூண்டுதலாகவும் இருந்தது.

அவர் என்னை பயன்படுத்திக் கொள்வதும், நான் அவரை பயன்படுத்திக் கொள்வதையும் தாண்டி எங்களுக்குள் ஆத்மார்த்தமான நட்பிருக்கிறது. அதுமட்டும் தான் எங்களின் வளர்ச்சிக்கும் காரணம். ஆர்யா இந்தப் படத்தோட ஹீரோ மட்டுமில்லை, தயாரிப்பாளரும் கூட. இது வரைக்கும் படத்துக்காக செலவு தான் பண்ணிட்டு இருக்காரு. ஆனா வரவு வரவில்லை. அதனால இந்தப் படத்துக்கு ஆதரவு தெரிவியுங்கள். நிச்சயம் படம் உங்களுக்குப் பிடிக்கும். சீக்கிரம் வந்துவிடுகிறோம்," என்றார்.

 

எம்எஸ்விஸ்வநாதன் உருவப் படம்!- இளையராஜா திறந்து வைக்கிறார்

திரைப்பட இசை கலைஞர்கள் சங்க கலையரங்கில் அமரர் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் உருவப் படத்தை இளையராஜா திறந்து வைக்கிறார். இசையமைப்பாளர்கள் சங்கம் இதனை இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை:

திரைப்பட இசை கலைஞர்கள் சார்பாக மறைந்த இசை மேதை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்துவதாக எங்களது திரைப்பட இசை கலைஞர்கள் மற்றும் அறக்கட்டளை சார்பாக முடிவு எடுக்கப்பட்டது.

Ilaiyaraaja to open portrait of MSV

வரும் ஆகஸ்ட் 02 ஆம் தேதி ஞாயிறு மாலை 6.00 மணிக்கு வடபழனி, என்எஸ்கே சாலையில் அமைந்துள்ள திரைப்பட இசை கலைஞர்கள் சங்க கலையரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

எங்களது இந்த உணர்வு மிகு நிகழ்ச்சியில் இசை ஞானி இளையராஜா முன்னிலை வகித்து எம்.எஸ்.விஸ்வநாதனின் உருவப் படத்தை திறந்து வைத்து உரையாற்ற இருக்கிறார்.

எங்களின் அமைப்பைச் சேர்ந்த அனைத்து இசை அமைப்பாளர்களும், பிரபல பாடக, பாடகியரும், இசைக் கலைஞர்களும் இதில் பங்கேற்கிறார்கள். மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்த்திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகிகளும், மற்றும் அனைத்து தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்," என்று தெரிவித்துள்ளனர்.

 

பாயும் புலின்னா என்னன்னு தெரியுமா?

சென்னை: பாண்டியநாடு திரைப்படத்திற்குப் பின்னர் இயக்குநர் சுசீந்திரனும் நடிகர் விஷாலும் 2 வது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் பாயும்புலி. பாண்டியநாடு திரைப்படம் அடைந்த மாபெரும் வெற்றி காரணமாக இந்தப் படம் ரசிகர்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கிறது.

நடிகர் விஷாலிற்கு ஜோடியாக நடிகை காஜல் நடிக்கும் இந்தப் படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறாராம் விஷால். மதுரையைப் பின்னணியாகக் கொண்ட போலீஸ் கதையாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

Paayum Puli Movie Story

ஒருவன் யாரை வேண்டுமானாலும் கொலை செய்துவிட்டு தப்பித்து விடலாம் ஆனால் ஒரு போலீசைக் கொலை செய்து விட்டு சட்டத்திடம் இருந்து தப்ப முடியாது என்பதே பாயும் புலி படத்தின் கதை.

பாயும் புலி என்ற பெயரில் ஏற்கனவே ரஜினியின் திரைப்படம் ஒன்று வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது , ரஜினியின் மேல் அப்படி என்ன காதலோ தெரியவில்லை தொடர்ந்து தனது படங்களில் ரஜினியின் தலைப்புகளை அதிகம் பயன்படுத்தி வருகிறார் இயக்குநர் சுசீந்திரன்.

இதுவரை சுசீந்திரன் இயக்கியிருக்கும் படங்களின் எண்ணிக்கை மொத்தம் 8, இதில் 3 (பாயும் புலியையும் சேர்த்து) ரஜினியின் படத்தலைப்புகள் தான்.

விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் சூரியின் காமெடி, காஜலின் கெமிஸ்ட்ரி ஆகியவை நன்றாக வந்திருப்பதாக சொல்கிறார்கள். காதல், காமெடி, ஆக்க்ஷன், செண்டிமெண்ட் என எல்லாம் சேர்ந்த கலவையாக படம் இருக்கும் என்று படத்திற்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

பாயும் புலியா? பாயாத புலியான்னு? படம் வந்தாத்தானே தெரியும்...