சினிமாவாகும் 'எடியூரப்பாவின் அரசியல்'!


பெங்களூர்: முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் வாழ்க்கையை, சினிமாவாக தயாரிக்கிறார் கர்நாடக அமைச்சர் ரேணுகாச்சார்யா.

சாதாரண விவசாயியின் குடும்பத்தில் பிறந்த ஒருவர் போராட்டம், மக்கள் பணி மூலம் எப்படி ஜனநாயகத்தில் உயர்ந்த இடத்துக்கு வர முடியும் என்பதே இந்த படத்தின் கதை.

அதிலும் எடியூரப்பா நடத்திய போராட்டங்கள், முதல்வர் பதவியை அடைந்த பிறகு அவர் அமல்படுத்திய திட்டங்கள் ஆகியவை குறித்தும் இந்த படத்தில் காட்சிகள் இடம்பெற உள்ளன.

இந்த படத்தை எடியூரப்பாவுக்கு நெருக்கமான கலால்துறை அமைச்சர் ரேணுகாச்சார்யா தயாரிக்கிறார். ஒருகாலத்தில் எடியூரப்பாவுக்கு நேரெதிர் அணியில் நின்ரு அவரைக் கவிழ்க்கப் போராடியவர் இந்த ரேணுகாச்சார்யா!

'நாகரஹொளே', 'அந்தா' உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து இயக்கிய ராஜேந்திரசிங் இந்த படத்தை இயக்குகிறார்.

எதிர்பார்த்தபடி அனைத்து பணிகளும் குறித்த காலத்தில் நிறைவேறி விட்டால் விநாயகர் சதுர்த்தி அல்லது தசரா தினத்தன்று படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும்.
 

காவலன் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்த சீனர்கள்... விஜய் வியப்பு!


ஷாங்காய் நகரில் திரையிடப்பட்ட காவலன் படத்தைப் பார்த்து சீன ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இது எனக்கு வியப்பைத் தந்தது என நடிகர் விஜய் கூறினார்.

ஷாங்காய் திரைப்பட விழா சீனாவில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் விஜய் நடித்த காவலன் (11-ந்தேதி) மாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. ஆங்கில - சீன மொழி சப்-டைட்டிலுடன் காவலன் திரையிடப்பட்டது.

சீன மொழியைச் சார்ந்த அனைவரும் ஆர்வத்துடன் படம் பார்த்தனர். ஒவ்வொரு காட்சியையும் ரசித்ததுடன் காமெடி காட்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தது எனக்கு ஆச்சரியத்தை தந்தது என்று கூறினார் விஜய்.

படத்தின் கடைசி 20 நிமிடங்கள் அமைதியாக ரசித்த ரசிகர்கள் கண் கலங்கினர். படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். படம் பார்த்து முடிந்ததும் அவர்கள் மத்தியில் விஜய் பேசினார்.

அவர் கூறுகையில், "வெளிநாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வது இதுதான் முதல் முறை. ஷாங்காய் பட விழாவில் கலந்து கொண்டது முற்றிலும் எனக்கு புது அனுபவம்.

நடிகர், மொழி, தேசம் இவற்றை கடந்து ஒரு நல்ல படம் எந்த நாட்டு மக்களையும் கவரும் என்பதற்கு இது உதாரணம். படம் பார்த்து முடித்தவுடன் என் கேரக்டரான பூமி என்ற பெயரைச் சொல்லி அவர்கள் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. மொத்தத்தில் என் வாழ்நாளில் இது மறக்க முடியாத அனுபவம்.

ஜாக்கிசானுக்கு இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். (பலத்த கைதட்டல்) நான் படிக்கும் போது அவருடைய படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவரது ஊரில், நான் நடித்த காவலன் திரையிடப்பட்டது பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இங்குள்ள ரசிகர்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்," என்றார்.

விஜய்யின் பேச்சு அனைவரையும் கவரவே, எழுந்து நின்று கைதட்டினார்கள். ஷாங்காய் திரைப்பட குழுவிற்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக விஜய் நினைவு பரிசை வழங்கினார்.
 

நட்சத்திர கிரிக்கெட்: தமிழ் நடிகர்கள் பங்கேற்ற சென்னை அணி வெற்றி!!


ஐபிஎல்லில் மட்டுமல்ல, சிசிஎல் எனப்படும் நட்சத்திரக் கிரிக்கெட்டிலும் சென்னை அணியே வெற்றி பெற்றது.

ஐபிஎல்லைப் போலவே 20 ஓவர்கள் கொண்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டியை திரையுலகினர் நடத்தினர்.

இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்திப் பட உலகைச்சேர்ந்த நடிகர்கள் அடங்கிய அணிகள் மோதின.

தமிழ் நடிகர்கள் அணிக்கு சென்னை ரினோஸ் என பெயர் சூட்டியிருந்தனர். கர்நாடக அணிக்கு பெங்களூர் புல்டோசர்ஸ் என்றும், இந்தி நடிகர்கள் அணிக்கு மும்பை ஹீரோஸ், தெலுங்கு அணிக்கு தெலுங்கு வாரியர்ஸ் என்றும் பெயர் சூட்டப்பட்டது.

இறுதிப்போட்டியில் சென்னை ரினோஸ் மற்றும் பெங்களூர் புல்டோசர்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை ரினோஸ் அபார வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய சென்னை அணி, அபாரமாக ஆடி 189 ரன்களைக் குவித்தது. குறிப்பாக நடிகர் விக்ரம் சிறப்பாக விளையாடி மின்னல் வேகத்தில் 50 ரன்கள் குவித்தார்.

இந்த அளவு ரன்களை எடுக்க முடியாமல் திணறியது பெங்களூர் அணி. 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களே எடுத்தது.

இதன் மூலம் சிசிஎல்லின் முதல் வெற்றிக்கோப்பையை தமிழ் சினிமாவின் சென்னை ரினோஸ் அமி வென்றுள்ளது.

அடுத்த ஆண்டும் இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில் மேலும் இரு அணிகள் இணைகின்றன. ஸ்ரீதேவி - போனி கபூருக்குச் சொந்தமான வங்காள அணியும், பிரியதர்ஷனுக்கு சொந்தமான கேரள அணியும் போட்டியில் குதிக்கின்றன.

சினிமாவில் வெற்றி பெறத் தவறிய நடிகர்கள், இந்த சிசிஎல் மூலம் புதிய ரசிகர்கள், நல்ல புகழ் மற்றும் பணத்தைப் பெறும் வாய்ப்பு வந்துள்ளதாக சிசிஎல் அமைப்பு தெரிவித்துள்ளது.
 

குமாரசாமி, குழந்தையுடன் குட்டி ராதிகா-கர்நாடகத்தில் பரபர!


நடி்கை குட்டி ராதிகா, தனது 'கணவர்', முன்னாள் முதல்வர் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் எச்.டி. குமாரசாமி மற்றும் குழந்தையுடன் இருபபது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளதால் கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு புயல் கிளம்பியுள்ளது.

குமாரசாமியும், குட்டி ராதிகாவும் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருவதாக நீண்ட காலமாகவே ஒரு செய்தி கர்நாடகத்தில் உலவி வருகிறது. இந்த நிலையில் குட்டி ராதிகாவுடன், கையில் குழந்தையை ஏந்தியபடி குமாரசாமி காட்சி தரும் புதிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதை குட்டி ராதிகாவே ரிலீஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே குமாரசாமிக்கு அனிதா என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் குட்டி ராதிகா மீது அவர் காதல் வயப்பட்டார். பின்னர் ரகசிய வாழ்க்கை வாழத் தொடங்கியதாக தெரிகிறது. இந்த ரகசிய வாழ்க்கையின் விளைவாக, இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்ததாக கூறப்படுகிறது. தனது குழந்தையின் பெயர் ஷமீகா கே.சாமி என்று குட்டி ராதிகா முன்பே தெரிவித்திருந்தார். தற்போது ஷமீகாவின் தந்தை குமாரசாமிதான் என்பதை நிரூபிக்கும் வகையிலான புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் தான் ஒரு அரசியல் தலைவருடன் குடும்பம் நடத்தி வருவதாகவும், மகிழ்ச்சிகரமாக இருப்பதாகவும், தனக்குப் பெண் குழந்தை இருப்பதாகவும், அதன் பெயர் ஷமீகா கே. சாமி என்றும் பகிரங்கமாக அறிவித்தார் குட்டி ராதிகா. இதன் மூலம்தான் குமாரசாமியின் ரகசிய வாழ்க்கை அம்பலமானது.

தற்போது குமாரசாமியும், குட்டி ராதிகாவும், கையில் குழந்தையை ஏந்தியபடி நெருக்கமாக நின்றபடி காட்சி தரும் புகைப்படம் வெளியாகியிருப்பது குமாரசாமி எதிர்ப்பாளர்களுக்கு குறிப்பாக பாஜகவினருக்கு பெரும் சந்தோஷமான செய்தியாக மாறியிருக்கிறது.

அதேசமயம், மதச்சார்பற்ற ஜனதாதளம் இதை சதி வேலை என்று வர்ணித்துள்ளது.
 

நயன், அசினை காப்பியடிக்க மாட்டேன்! - த்ரிஷா


பாடிகார்ட் மலையாளம் படத்தின் நடித்த நயன்தாரா, அதன் தமிழ் வடிவமான காவலனில் நடித்த அசின் இருவருமே சிறப்பாக நடித்திருந்தனர். காரணம் அவர்கள் மிகச் சிறந்த நடிகைகள். அதே நேரம் அவர்களை நான் காப்பியடிக்க விரும்பவில்லை என்றார் நடிகை த்ரிஷா.

மலையாளத்தில் வெளியான பாடிகார்ட் படம் தமிழில் காவலன் என்ற பெயரில் ரீமேக் ஆனது. மலையாளத்தில் நயன்தாராவும், தமிழில் அசினும் நாயகிகளாக நடித்தனர். இப்படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. வெங்கடேஷ், திரிஷா ஜோடியாக நடிக்கின்றனர்.

இந்தப் படம் குறித்து த்ரிஸா கூறுகையில், "பாடிகார்ட் படத்தின் கதை அற்புதமானது. உணர்வு பூர்வமான காதலை உள்ளடக்கியது. இதில் எனது கேரக்டர் ரொம்ப பிடித்துள்ளது. ரொம்ப ஈடுபாட்டோடு நடித்து வருகிறேன். நயன்தாரா, அசின் ஆகியோர் மலையாளம், தமிழில் ஏற்கனவே இப்படத்தில் நடித்துள்ளனர். இருவரில் யார் நடிப்பு உயர்வானது என்று சொல்ல முடியாது. இரண்டு பேருமே சிறந்த நடிகைகள், ஆனால் நான் அவர்கள் நடிப்பை காப்பியடிக்க விரும்பவில்லை.

தெலுங்கு பாடிகார்ட் படத்தில் எனது தனித்துவத்தை காட்டுவேன். எனது தந்தை கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். புதுப்படங்களுக்கு இப்போதைக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை," என்றார்.
 

என்.எஸ்.கிருஷ்ணனின் மகளிடம் நில மோசடி: மதுரை ஆசாமிகள் மீது வழக்கு


மதுரை: நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் மகளின் நிலத்தை மோசடி செய்ததாக மதுரையைச் சேர்ந்த கணவன், மனைவி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவம்மாள் (வயது 63). இவர் தமிழ் சினிமாவின் சாதனையாளர் மறைந்த நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் மகள் ஆவார். இவரது கணவர் வரதராஜன். சென்னையில் வசித்த போது, இவர்களிடம் மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த நாகராஜன், அவரது மனைவி சந்திரா மற்றும் உறவினர்கள் தேவி காமாட்சி, முருகன் ஆகியோர் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் வண்டியூரில் குறைந்த விலைக்கு இடம் இருப்பதாக கூறி, 3.42 சென்ட் நிலத்தை வடிவம்மாளுக்கு விலைக்கு வாங்கி கொடுத்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சென்னை பாண்டி பஜாரில் நல்ல இடம் ஒன்று விலைக்கு வருவதாக நாகராஜன் வடிவம்மாளிடம் கூறியுள்ளார். இதை நம்பிய வடிவம்மாள் மதுரை வண்டியூர் இடத்தை விற்பனை செய்துவிட்டு, அந்த பணத்தின் மூலம் சென்னை இடத்தை வாங்குவதற்கு முடிவு செய்தார். இதற்காக வண்டியூர் இடத்தை விற்க, நாகராஜனுக்கு பவர் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.

இந்த பவரைப் பயன்படுத்தி நாகராஜன் வண்டியூர் இடத்தை அதிக விலைக்கு விற்று மோசடி செய்து விட்டதாகவும், இதற்கு சந்திரா, தேவி காமாட்சி, முருகன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் வடிவம்மாள் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் நாகராஜன், அவரது மனைவி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

கழுத்துக்குக் கீழே காதலன் பெயர்... பச்சைக் குத்திய ரம்யா!


தனது காதலன் பெயரை கழுத்துக்குக் கீழே பச்சைக் குத்திக் கொண்டுள்ளார் குத்து ரம்யா என அறியப்பட்டு திவ்யா வாக மாறிய நடிகை.

சர்ச்சைக்குரிய நடிகை எனப் பெயரெடுத்தவர் திவ்யா. சமீபத்தில்தான் இவரை மையம் கொண்டு ஒரு பெரும் புயலே கன்னட திரையுலகில் எழுந்து அடங்கியது.

இப்போது, ரம்யாவின் காதல் விவகாரங்கள் பத்திரிகைகளில் செய்தியாக வரத் தொடங்கியுள்ளன.

ரபேல் என்பவரைக் காதலிக்கிறாராம் ரம்யா. ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் இந்த ரபேல். இருவரும் சுற்றாத ஊரில்லை. ஆனாலும் தனது இந்தக் காதலை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்தார் ரம்யா.

சமீபத்தில் பெங்களூரில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் இருவரும் ஒன்றாக அமர்ந்து போட்டியை ரசித்தனர். அப்போதுதான் காதலன் ரபேலின் பெயரை தன்னுடைய கழுத்துக்கு கீழே பச்சையாக அவர் குத்திக் கொண்டுள்ளது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் எனது காதலன் ரபேலின் பெயரை பச்சை குத்தி கொண்டுள்ளது உண்மைதான். மிகவும் வித்யாசமான முறையில் பழமையான மொழிகளில் ஒன்றான ஹிப்ரூ மொழியில் அவரது பெயரை பச்சைக் குத்திக் கொண்டுள்ளேன். ரபேல் என்றால் புனிதம் என்று அர்த்தம். இந்த விஷயம் தெரிந்ததும் நெகிழ்ந்து போனார் ரபேல்,” என்றார்.

 

இயக்குநர் சங்க தேர்தல்: பாரதிராஜா - அமீர் சமரசம்!


இயக்குநர் சங்க தேர்தலில் ஒருவரையொருவர் தோற்கடித்துக் காட்டுவதாக சபதம் போட்டு களமிறங்கிய பாரதிராஜா மற்றும் அமீர் இருவரும் திடீர் சமரசம் ஆகிவிட்டனர்.

இயக்குநர் சங்கத்தின் நன்மை கருதியும், சங்கத்தில் பிளவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருதியும், இருபிரிவாக போட்டியிட்ட பாரதிராஜா – அமீர் தலைமையிலான அணிகள் சமாதான உடன்பாட்டுக்கு வந்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதன் படி இப்போது இருவரும் ஒரே அணியில் போட்டியிடுகின்றனர். தலைவர் பதவிக்கு தற்போதைய பதவியில் இருக்கும் பாரதிராஜவே போட்டியிடுகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு அமீரும், பொருளாளர் பதவிக்கு ஜனநாதனும், பிற பதவிகளுக்கு மற்ற இயக்குநர்களும் போட்டியிடுகின்றனர்.

இதுகுறித்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 40 ஆண்டுகளாக எங்களது இயக்குநர் சங்கத்தில் எந்தவித கருத்து வேறுபாடுகளும், பிளவுகளும் ஏற்படாததை மனதில் கொண்டு, கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு ஆகிய இருவரின் முயற்சியால் இரு அணி‌களை சேர்ந்தவர்களையும் சந்திக்க வைத்து, எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை கலைந்து அனைவரும் ஓர் அணியில் போட்டியிட முடிவெடுத்திருக்கிறோம். அதன்படி தற்போதைய தலைவர் பாரதிராஜாவே மீண்டும் தலைவர் பதவிக்கும், அமீரை செயலாளர் பதவிக்கும், ஜனநாதனை பொருளாளர் பதவிக்கும் போட்டியிட வைக்கிறோம்.

இதன்மூலம் எங்களுக்குள் இருந்த வேறுபாடுகள் கலைந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு சங்கத்தினை வளர்க்க பாடுபடுவோம். இயக்குநர்கள் ஒற்றுமையாக செல்பட இந்த முயற்சி எடுத்த கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பி.வாசு அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

இதேபோல இயக்குநர் அமீரும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சங்கத்தின் நன்மை கருதியும், திரையுலகில் இயுக்குநர்களின் ஒற்றுமையை உணர்த்தும் கடமை வேண்டி, இரு பிரிவாக இருந்த நாங்கள் இப்போது அதனை மறந்து ஓர் அணியில் சேர்ந்துள்ளோம். இயக்குநர்களின் ஒற்றுமைக்கு பாலமாக இருந்து செயல்பட்ட கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பி.வாசு ஆகியோருக்கு நன்றிகள்,” என்று கூறியுள்ளார்.

 

டி20 சாம்பியன்ஸ் லீக்: பிராண்ட் அம்பாஸடராக ஷாரூக்!


10 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் பிராண்ட் அம்பாஸடராக ஷாரூக்கான் அறிவிக்கப்பட உள்ளார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தப் போட்டிக்கு, அமிதாப் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு, போட்டியின் நடத்துநர்களான இஎஸ்பிஎன் ஸ்போர்ட்ஸ், ஷாரூக்கானை அணுகியுள்ளது.

அவரும் இந்தப் புதிய பொறுப்பை ஏற்க ஒப்புக் கொண்டுள்ளார். ஆனாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்தப் போட்டியில் ஐபிஎல்லில் பங்கேற்ற அணிகளிலிருந்து மூன்று அணிகள் பங்கேற்கின்றன. இப்போது நான்காவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த அணியின் உரிமையாளர் ஷாரூக்கான்தான் என்பதால், அவர் நிச்சயம் விளம்பரத் தூதராக இருப்பார் என்று இஎஸ்பிஎன் தரப்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.