சென்னை: எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் ரசிகர்கள் நற்பணி மன்றம்' படம் தொடர்பாக விநியோகஸ்தர் வெங்கடேஷ்ராஜா மீது நடிகை வனிதா விஜயகுமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று மதியம் வந்திருந்தார் வனிதா விஜயகுமார் . அங்கு கமிஷனரிடம் திரைப்பட வினி யோகஸ்தரான வெங்கடேஷ் ராஜா என்பவர் மீது அவர் புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் வனிதா. அப்போது அவர் கூறியதாவது:-
வனிதா பிலிம் புரொடக்சன் என்ற பெயரில் நான் திரைப்படம் தயாரித்து வருகிறேன்.
‘‘எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் ரசிகர்கள் நற்பணி மன்றம்'' என்ற பெயரில் நான் தயாரித்த படத்தை வெளியிடுவதற்கான உரிமையை வைபிரவன் மூவிஸ் நிறுவனத்தினர் வினியோகஸ்தரான வெங்கடேஷ்ராஜாவுக்கு வழங்கினேன். இது தொடர்பாக அவருடன் முறைப்படி நான் ஒப்பந்தமும் போட்டு உள்ளேன். அதில் 80 தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்வதாக கூறப்பட்டு உள்ளது.
ஆனால், ஒப்பந்தப்படி வெங்கடேஷ்ராஜா அந்த படத்தை வெளியிடவில்லை. குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டும் படத்தை வெளியிட்டு உள்ளார். இது திட்டமிட்ட மோசடி. படத்தயாரிப்பாளர் என்ற முறையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தேன். அவர்கள் இது தொடர்பாக போலீசில் புகார் செய்யுமாறு அறிவுறுத்தினர். அதன்படியே இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து உள்ளேன்.
படத்துக்கு நஷ்டம் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் இழப்பீடுகளுக்கு தயாரிப்பாளரே பொறுப்பாகி வருகிறார். எனவே, என்னிடம் ஒப்பந்தம் போட்டு ஏமாற்றிய வெங்கடேஷ்ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.