சென்னை: கோலிவுட்காரர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருவது, திருட்டு விசிடியைத் தடுத்து நிறுத்தக் கோரிதான். ஆனால் அரசுகள் பல மாறினாலும் இந்த திருட்டு விசிடி மட்டும் ஒழிக்க முடியாததாக உள்ளது.
திருட்டு விசிடி பல இடங்களில் தயாராகின்றன. முன்பெல்லாம் வெளிநாடுகளிலிருந்து வருவதாகக் கூறப்பட்டது. இப்போது உள்நாட்டிலும் சில தியேட்டர்களில் வைத்தே தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் தயாரிக்கப்பட்டு ரயிலில் பார்சல் மூலம் தமிழகத்துக்கு சிடிக்கள் கடத்தப்படுவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வழக்குகள்.. கைதுகள்
மாநில குற்றப்பிரிவின் கீழ் இயங்கும் திருட்டு சி.டி. தடுப்புப் பிரிவு கடந்த மாதம் வரை திருட்டு சி.டி. தயாரித்து மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக 390 வழக்குகள் பதிவு செய்து 390 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 1.44 கோடி மதிப்புள்ள 27,500 திருட்டு சி.டி.க்களை பறிமுதல் செய்தனர்.
கடந்த ஆண்டு 5,875 வழக்குகள் பதிவு செய்தனர். இதேபோல கடந்த 2013-இல் 2,664 வழக்குகளும், 2012-இல் 2,621 வழக்குகளும், பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒருபுறம் திருட்டு சி.டி. தயாரிப்போரும், விற்போரும் கைது செய்யப்பட்டாலும், மறுபுறம் அதன் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
திருட்டு சி.டி. விற்பனைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக இப்போது ஏற்பட்டு வரும் தொழில்நுட்பத்துறையின் அபரிமிதமான வளர்ச்சி, திரையரங்குகளின் கட்டண உயர்வு, ஒரிஜினல் சி.டி. போன்றே தரத்துடன் கிடைப்பது, குடிசைத் தொழிலாக திருட்டு சி.டி.யை தயாரிப்பது, காவல்துறையின் அலட்சியப் போக்கு என பல காரணங்கள் கூறப்படுகின்றன.
போலி நிறுவனங்கள்:
ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி, சிலர் திருட்டு சி.டி. தயாரித்து விற்பனை செய்வதையே பெரிய வணிக நிறுவனம் போல செயல்படுத்துகின்றனர். இவர்கள் சில திரைப்படங்களின் உரிமத்தை மட்டும் பெற்றுக் கொண்டு,பெரும்பாலான தமிழ் திரைப்படங்களின் சி.டி.யை போலியாகத் தயாரித்து மாநிலம் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.
இந்த வகை திருட்டு சி.டி. கும்பல், காவல்துறையினர் கண்டறிய முடியாத அளவுக்கு தங்களது தொழிலை நேர்த்தியாக செய்வதாக திருட்டு சி.டி. ஒழிப்பு பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் சென்னை பெரியமேடு, சிந்தாதிரிப்பேட்டை மூவிலேண்ட் என்ற நிறுவனத்தில் சென்னை பெருநகர காவல்துறையின் திருட்டு சி.டி. ஒழிப்புப் பிரிவு போலீஸôர் திடீர் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் அங்கு ரூ. 1.30 கோடி மதிப்புள்ள திருட்டு சி.டி.க்கள் மட்டுமன்றி, உரிமம் இல்லாமல் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த பழைய தமிழ் திரைப்படங்களின் சி.டி.க்களும் இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
டெல்லியிலிருந்து...
இது தொடர்பாக, அங்கு பிடிபட்ட இருவரிடம் போலீஸôர் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியடைய வைத்தன. அங்கு பிடிபட்ட அனைத்து சி.டி.களும் டெல்லியில் தயாரிக்கப்பட்டவை என்பதோடு, பிரபல ஆடியோ, விடியோ சி.டி. தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆர்டரின்பேரில் சி.டி.க்களை தயாரித்து வழங்கும் தொழிற்சாலையிலேயே, இந்த சி.டி.களையும் தயாரித்திருப்பது தெரியவந்தது. இதனால் அந்த சி.டி., ஒரிஜினல் சி.டி.யில் இருக்கும் தரத்தில் இருப்பதையும் அவர்கள் தெரிந்து கொண்டனர்.
டெல்லியில் தயாரிக்கப்படும் திருட்டு சி.டி.களை அந்தக் கும்பல், டெல்லியில் சென்னை வரும் ரயிலில் பார்சல் சேவை மூலம் எவ்வித சிரமமும் இன்றி பல ஆண்டுகளாகக் கொண்டு வந்திருப்பதும் தெரியவந்தது.
அதிகாரிகள் உடந்தை.. நடவடிக்கை எடுக்கப்படுமா?
இந்தக் கும்பல் மீது ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போலீஸôர் நடவடிக்கை எடுத்திருந்தபோதிலும், டெல்லியில் திருட்டு சி.டி. தயாரித்துக் கொடுக்கும் நிறுவனமும், ரயிலில் பார்சல் மூலம் திருட்டு சி.டி. கடத்துவதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளும் நடவடிக்கையில் இருந்து தப்பியுள்ளனர்.
இதன் விளைவாக, இரண்டு ஆண்டுகளில் இந்தக் கும்பல் முன்னைக் காட்டிலும் துணிச்சலுடன் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளம், ஆந்திரம், கர்நாடகம் என தென் மாநிலங்கள் முழுவதும் தங்களது பிடியை விஸ்தரித்துள்ளதாக அந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
ஒரிஜினல் சிடி தயாரிக்கும் இடத்திலேயே...
மேலும் இந்தக் கும்பலைப் போன்ற மேலும் பல நபர்கள், டெல்லியில் இருந்து ஒரிஜினல் சி.டி. தயாரிப்பு நிறுவனங்களிலேயே, திருட்டு சி.டி.க்களை தயாரித்துக் கொண்டு வருவதையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
இதன் அடுத்தகட்டமாக அந்தக் கும்பலை கையும் களவுமாக கைது செய்வதற்குரிய நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பிரச்னையில், திருட்டு சி.டி. தயாரித்து விற்போர் மட்டுமன்றி அவர்களுக்கு உறுதுணையாகவும், உடந்தையாகவும் இருப்பவர்கள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திரைத் துறையினரின் வேண்டுகோளாக உள்ளது.