ஆறு வருஷத்துக்கு முன்பு அடிச்சிகிட்ட ஷாருக்-சல்மான் இப்போ 'முஸ்தபா' பாடுறத பாருங்க!

மும்பை: ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த ஷாருக்கான்-சல்மான்கான் ஆகிய இரு பாலிவுட் ஜாம்பவான்களின் நட்பு, ஒரு திருமணத்தால் இன்று கைகூடியுள்ளது. இதனால் பாலிவுட் வட்டாரத்தில் இரு பெரும் நடிகரின் ரசிகர்களும் ஆனந்த கூத்தாடி வருகின்றனர்.

பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்களாக உள்ளவர்கள் ஷாருக்கான் மற்றும் சல்மான்கான். 2008ம் ஆண்டு நடிகை கத்ரினா கைப் பிறந்தநாள் விழாவின்போது இவ்விரு ஹீரோக்களும் உரசிக் கொண்டது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பிறகு இருவருக்கு இடையேயான நட்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

சல்மான், ஷாருக் ரசிகர்களும், நம்மூர், அஜீத்-விஜய் ரசிகர்களை போல உரசியபடி சுற்றித் திரிந்தனர். இந்நிலையில்தான், ஒரு திருமணம் இரு 'கான்களையும்' ஒன்று சேர்த்துள்ளது. சல்மான்கானின் தங்கை அர்பிதாவுக்கு நாளை செவ்வாய்க்கிழமை ஹைதராபாத் ஃபலக்னாமா பேலஸில் வைத்து திருமணம் நடைபெறுகிறது.

இதையொட்டி, மும்பையிலுள்ள, சல்மான்கான் வீட்டுக்கு நேற்றிரவு வந்த ஷாருக், அர்ப்பிதா தலைமீது முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். அப்போது உடனிருந்த சல்மானும் தனது தங்கையின் தலையில் முத்தம் கொடுத்துள்ளார். இரு கான்களும் ஒரே நேரத்தில், அர்பிதா தலையில் முத்தமிட்டு ஆசி வழங்கும் போட்டோவை சல்மானின் மைத்துனர் அதுல் அக்னிகோத்ரி தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த படம் இப்போது ஆயிரம் ரீடிவிட்டுகளை நெருங்கி சென்று கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டுகளில் மும்பையில் பாபா சித்திக் நடத்திய ரம்ஜான் இப்தார் விருந்தில் இரு நடிகர்களும் பங்கேற்று கட்டி பிடித்துக் கொண்டிருந்தாலும், சண்டைக்கு பிறகு முதல்முறையாக சல்மான் வீட்டிற்கு ஷாருக் இப்போதுதான் வந்துள்ளார். சல்மான் வீட்டின் கவுரவ உறுப்பினர் பட்டியலில் ஷாருக்கும் இருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

இருபெரும் நடிகர்களும் பிறந்தநாள் பார்ட்டியில் பிரிந்து, திருமண நிகழ்ச்சியில் ஒன்றிணைந்துள்ளது, பாலிவுட் வட்டாரத்தில் இருவரின் நலம் விரும்பிகளுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இவ்விரு நடிகர்களின் ரசிகர்களும் குஷியில் கொண்டாடி வருகின்றனர்.

 

லிங்கா படம் வியாபாரத்தில் எந்திரனை முந்தக் காரணம் ரஜினிதான்!- ஷங்கர்

எந்திரன் படத்தின் வியாபாரத்தை லிங்கா முறியடிக்கக் காரணம் ரஜினி ஒருவர்தான், என்றார் இயக்குநர் ஷங்கர்.

மேலும் கே.எஸ்.ரவிக்குமாரிடம் இருந்து எவ்வளவு வேகமாக படம் எடுக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'லிங்கா' இசை வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர் பேசும்போது, " 'லிங்கா' படத்தின் இறுதிகட்ட வேலைகள் படு வேகமாக நடக்கின்றன.

படத்தில் பணி புரிபவர்கள் டபுள் படையப்பா என்று சொல்கிறார்கள். படத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் பார்க்கும்போது 'சிவாஜி' படத்தில் பார்த்த ரஜினியைப் பார்க்க முடிகிறது.

இந்தப் படத்தோட வியாபாரம் 'எந்திரன்' பட வியாபாரத்தை தாண்டிவிட்டது என்று சொன்னார்கள். அனைத்திற்கும் காரணம் ரஜினிதான்.

இந்தப் படம் இவ்வளவு வேகமாக முடிந்தது ஆச்சர்யப்படுத்துகிறது. எவ்வளவு வேகமாகப் படமெடுக்க வேண்டும் என்று கே.எஸ்.ரவிக்குமாரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.

 

திருட்டு டி.வி.டி.யை பிடிக்க போறீகளோ: நடிகருக்கு போலீஸ் செம டோஸ்

சென்னை: திருட்டு டி.வி.டி. விற்பனையாகிறது என்றால் நீங்களே கடைகளை சோதனை செய்வீர்களோ. திருட்டு டி.வி.டி.யை தயாரிப்பதே உங்கள் ஆட்கள் தான் என போலீஸ் உயர் அதிகாரிகள் உயர்ந்த நடிகரை விளாசித் தள்ளிவிட்டார்களாம்.

உயர்ந்த நடிகர் திருட்டு டி.வி.டி. விற்கும் கடைகளுக்கு தானே நேரில் சென்று அதிரடியாக பரிசோதனை நடத்தினார். இதற்காக அவரை தளபதி பாராட்டியிருந்தார். இந்நிலையில் போலீஸ் உயர் அதிகாரிகள் உயர்ந்த நடிகரை அழைத்து செம டோஸ் விட்டார்களாம்.

திருட்டி டி.வி.டி. விற்பனையாகிறது என்றால் போலீசாரிடம் புகார் தெரிவித்தால் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். கடைகளுக்கு சென்று பரிசோதனை செய்யும் அதிகாரம் உங்களுக்கு இல்லை போலீசாருக்கு தான் உண்டு. நீங்கள் அவ்வாறு பரிசோதனைக்கு செல்கையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு நீங்கள் தான் முழு பொறுப்பு.

என்னமோ திருட்டு டி.வி.டி.யை கண்டுபிடிக்கிறேன் என்று சொல்கிறீர்களே அதை தயாரிப்பதே உங்கள் சினிமா ஆட்கள் தான் என்று போலீசார் நடிகருக்கு டோஸ் விட்டுள்ளனர். மேலும் திருட்டு டி.வி.டி. தயாரிக்கும் சினிமாக்காரர்களின் பெயர்கள் அடங்கிய பெரிய பட்டியலையும் நடிகரிடம் அளித்துள்ளனர். கடைகளுக்கு செல்வது இருக்கட்டும் முதலில் இவர்களை தடுத்து நிறுத்துங்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

பட்டியலை பார்த்த நடிகர் அசந்து போய் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாராம்.