வதோரா: பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு எதிராக 5 ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் ஆபாசன நடன வழக்கில் குஜராத்தின் வதோரா நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருக்கிறது.
2007ஆம் ஆண்டு மும்பையின் ஜே டபிள்யூ மரியத் ஹோட்டலில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் மல்லிகா ஷெராவத் கலந்து கொண்டார். அங்கு அவர் ஆபாச நடனம் ஆடியதாக புகார் எழுந்தது. அதனால் அவர் மீது ஐபிசி 294-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரோடா பார் அசோசியேசன் தலைவர் நரேந்திர திவாரி வழக்குத் தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு கீழ்நீதிமன்றம் , மேல் நீதிமன்றம் என இழுத்தடிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகாலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடைசியாக வதோரா நீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்க குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து வதோரா நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் வரும் ஏப்ரல் 20-ந் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று மல்லிகா ஷெராவத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.