டெல்லி: நடிகர் சயீப் அலி கானுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்பப்பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு மும்பையில் உள்ள உணவகத்திற்கு சென்ற பாலிவுட் நடிகர் சயீப் அலி கான் அங்கு தென்னாப்பிரிக்காவை சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் அவரது மாமனாருடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் சயீப் அந்த தொழில் அதிபரின் மூக்கில் குத்துவிட்டார். இது குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து கடந்த 2010ம் ஆண்டு சயீப் அலி கானுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெறக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்தை தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் எஸ்.சி. அகர்வால் கேட்டுக் கொண்டார். அவருக்கு அனுப்பிய பதிலில் இந்த விவகாரம் குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இது குறித்து உள்துறை அமைச்சகம் கூறுகையில்,
அகர்வால் புகார் தெரிவித்த விவகாரம் குறித்து பரிசீலித்து வருவதாக கூறியது வழக்கமான பதில் ஆகும். நிலுவையில் உள்ள புகார்களுக்கு அவ்வாறு தான் பதில் அளிக்கப்படும். விருது வாங்கிய பிறகு அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டால் உடனே அவரது விருதை பறிக்க வேண்டும் என்று இல்லை. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அவரது விருதை திரும்பப் பெறும் அளவுக்கு பெரியதா என்பதை அரசு பரிசீலிக்கும். சிறிய சண்டை குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் ஒருவரின் விருதை திரும்பப் பெறுவது நியாயம் இல்லை என்று தெரிவித்துள்ளது.