உத்தம வில்லன் - விமர்சனம்

Rating:
4.0/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: கமல் ஹாஸன், கே பாலச்சந்தர், கே விஸ்வநாத், ஆன்ட்ரியா, பூஜா குமார், பார்வதி, ஊர்வசி, நாசர், எம்எஸ் பாஸ்கர்

ஒளிப்பதிவு: ஷம்தத்

படத் தொகுப்பு: விஜய் சங்கர்

கதை, திரைக்கதை : கமல் ஹாஸன்

தயாரிப்பு: என் சுபாஷ் சந்திர போஸ்

இயக்குநர்: ரமேஷ் அரவிந்த்

தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொள்ளும் பக்குவம் அல்லது தைரியம் எத்தனை கலைஞர்களுக்கு இருக்கிறது.. வெகு அரிதான சிலரால் மட்டும்தான் அதை நினைத்துப் பார்க்கக் கூட முடியும். கமல் அப்படி ஒரு அரிதான கலைஞன், படைப்பாளி.

உத்தம வில்லன் கமலின் நடிப்பு வாழ்க்கையில் ஒரு சுயபரிசோதனை முயற்சி. இது என் சொந்த வாழ்க்கையின் சில பகுதிகள்தான் என சொல்லிவிட்டுப் படமாக்கும் துணிச்சல் எவருக்கு இருக்கும்!

Uttama Villain Review

இந்தப் படத்தின் எடிட் செய்யப்படாத முழுமையான வடிவத்தைப் பார்க்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது. இன்று வெளியாகும் பிரதிகளில் அவற்றில் சில பகுதிகள் நீக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அப்படி நீக்க வேண்டிய அவசியமே இல்லை. கமலை அவ்வளவு ரசிப்பார்கள், மூன்று மணிநேரத்தையும் தாண்டி ஓடும் அந்த முழுமையான பிரதியைப் பார்த்தாலும்.

தமிழ் சினிமா ரசிகன் மீது கமல் வைத்திருக்கும் அபார நம்பிக்கை ஆச்சர்யப்படுத்துகிறது. தன் ஒவ்வொரு படத்திலும் அவனை அடுத்த தளத்துக்கு தன்னோடு பயணப்பட வைக்கும் முயற்சி அவருடையது.

உத்தம வில்லன் மிகச் சிறந்த படம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் மிக மிகச் சிறந்த முயற்சி. அதில் அவர் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்? பார்க்கலாம்..

மனோரஞ்சன் என்ற முதல்நிலை நடிகன், ஒரு கலைஞனுக்கே உரிய அத்தனை பலம், பலவீனங்கள் கொண்டவன். காதலித்தது ஒருத்தியை, அவளைக் கைப்பிடிக்க இயலாத சூழலில், சுய லாபம் கருதி திருமணம் செய்து கொண்டது வரலட்சுமியை (ஊர்வசி). மாமனார் பெரும் சினிமா தயாரிப்பாளர் பூர்ணச்சந்திர ராவ் (கே விஸ்வநாத்). ஆரம்பத்திலிருந்தே தலைவலியால் அவதிப்படும் மனோரஞ்சனுக்கு, தன்னை கவனித்துக் கொள்ள வரும் டாக்டரான அர்ப்பனாவுடன் ரகசிய காதல் வேறு.

Uttama Villain Review

ஒரு படத்தின் வெற்றி விருந்தில், மனோரஞ்சனைச் சந்திக்கிறார் ஜக்காரியா (ஜெயராம்). உங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.. என ஒரு தகவலைச் சொல்லிவிட்டுப் போக, பரபரப்புடன் அடுத்த முறை ஜக்காரியாவைச் சந்தித்து விவரங்கள் கேட்கிறான்.

அப்போதுதான் தான் காதலித்து தன்னால் கர்ப்பமான யாமினி, மாமனார் பூர்ணச்சந்திரராவால் மிரட்டப்பட்டு துரத்தப்பட்டதும், அவளை ஜக்காரியா திருமணம் செய்து கொண்டு, மனோரஞ்சன் குழந்தையை தன் குழந்தையாக வளர்ப்பதையும் தெரிந்து கொள்கிறான்.

Uttama Villain Review

மனம் அனலில் விழுந்து துடிக்க, மகளைப் பார்க்க ஆர்வமாகிறான். மகள் மனோன்மணி வேண்டா வெறுப்பாக மனோரஞ்சனை வந்து பார்க்கிறாள். மிக உணர்ச்சிப்பூர்வமான அந்த சந்திப்பின் முடிவில் மயங்கிச் சரிகிறான் மனோரஞ்சன்.

அடுத்த சில தினங்களில் ஆதிசங்கரர் படத்துக்காக தான் வாங்கிய அட்வான்சைத் திருப்பித் தரச் சொல்கிறான் மனோரஞ்சன். தன் மாமனாரின் பரம விரோதியாகக் கருதப்படும் இயக்குநர் - தன் குரு மார்க்கதரிசியைச் (கே பாலச்சந்தர்) சந்தித்து தனக்காக ஒரு படம் செய்யுமாறு கேட்கிறான்.

Uttama Villain Review

மறுக்கிறார் மார்க்கதரிசி. கெஞ்சுகிறான் மனோ.. சரி கதை இருந்தால் பண்ணலாம் என அவர் சொல்ல, ஒரு கதை சொல்கிறான் மனோ. கதைப்படி நாயகனுக்கு மூளையில் கட்டி என மனோ சொல்ல, 'நிறுத்துடா.. இது தமிழ் சினிமாவில் அடிச்சு துவைச்ச கதையாச்சே.. நீயே நாலு படம் நடிச்சிட்டியே!" என்கிறார். அப்போதுதான் அது கதையல்ல, தன் நிஜம் என மனோ சொல்ல அதிர்ந்து, உடைந்து போகிறார் மார்க்கதரிசி.

Uttama Villain Review

தன் சிஷ்யன் கேட்டுக் கொண்டபடி ஒரு படம் எடுக்கிறார். அதுதான் உத்தமவில்லன். 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சாகாவரம் பெற்ற தெய்யாட்டக் கலைஞன் உத்தமன் (கமல்) - பேராசை மன்னன் முத்தரசன் (நாசர்) - அடிமை இளவரசி கற்பகவள்ளி (பூஜா குமார்) இவர்களின் கதை படமாகிறது. அந்தப் படம் எடுத்து முடிக்கப்பட்டதா? மரணத்தின் விளிம்பிலிருந்து மனோரஞ்சன் மீண்டானா என்பது க்ளைமாக்ஸ்.

ஒவ்வொரு காட்சியிலும் அத்தனை பர்ஃபெக்ஷன்.

Uttama Villain Review

படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வரும் மனோரஞ்சன், பாத்ரூமில் குடித்துவிட்டு மயங்கி விழுந்து கிடக்கிறார். அதைப் பார்த்து அதிரும் காவலரும் மேனேஜர் சொக்குவும், மனோவைத் தூக்கி கழிவறைத் தொட்டிமீது அமர்த்துகிறார்கள். அப்போது மனோவின் முதுகு ப்ளஷ் டேங்கில் அழுந்த, நீர்ப் பீச்சயடிக்கும் சத்தம்...

மகளை முதன் முதலில் சந்திக்கிறான் மனோ.. அந்த சந்திப்பின் முடிவில் எழுந்து நிற்க முயல, அப்படியே நிலைதடுமாறி மயங்கி தடாலென தரையில் விழுவதை அத்தனை தத்ரூபமாக படமாக்கியிருப்பார்கள்.

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல.. ஏகப்பட்ட காட்சிகள்.

தனக்கு கேன்சர் என்பதை மகனிடம் நேரடியாகச் சொல்லாமல், பந்து விளையாடிக் கொண்டே சொல்லும் காட்சியில் கலங்கி கண்ணீர் சிந்தாதவை கண்களல்ல!

கேன்சர் நோயை மையமாக வைத்து படமெடுக்கும் ஐடியா ரசிகர்களால் விமர்சிக்கப்படும் முன்பே, தன் குருநாதரை வைத்து கிண்டலடித்து, அதையும் ஏற்க வைத்திருப்பதுதான் கமல் ஸ்டைல்.

படத்தில் கமல் வேறு, மனோரஞ்சன் வேறு என பிரித்துப் பார்க்க முடியாத மனநிலை ரசிகர்களுக்கு. ஒப்பனைகளற்ற நிஜ நடிகனாகவே அவர் வருவதால், அவர் வயது, மேக்கப் பற்றியெல்லாம் எந்த உறுத்தலும் வரவில்லை. நடிப்பில் அவரது மிகச் சிறந்த பத்துப் படங்களில் ஒன்றாக உத்தம வில்லனைச் சேர்க்கலாம்.

கமலுக்கு வந்த நோய் பற்றித் தெரிந்ததும் மனைவி ஊர்வசி மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு, அவர் மீதான காதலை கமல் சொல்ல, அருகிலேயே அவரது ரகசியக் காதலி நிற்க.. அந்த நெருக்கடியான நிமிடங்களை கமலை மாதிரி அநாயாசமாக யாராலும் கையாள முடியாது.

சிஷ்யனின் வாழ்நாள் எண்ணப்படும் உண்மையை ஜீரணிக்க முடியாமல், தானும் அவனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப் படங்களை தொட்டுத் தடவி அந்த தருணங்களை பாலச்சந்தர் நினைவு கூறும் அந்தக் காட்சி அத்தனை நெகிழ்ச்சி.

ஒவ்வொரு பாத்திரமும் அத்தனை கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது (அந்த டிவி தொகுப்பாளினிதான் ஓவராக்டிங் பண்ணி சொதப்புகிறார்... ஒருவேளை ஏதாவது குறியீடோ!).

நாயகிகளில் முதலிடம் சந்தேகமின்றி ஊர்வசிக்குத்தான். ஒரு உச்ச நடிகனின் நடுத்தர வயது மனைவியாக... நடிப்பு ராட்சஸிதான் இவர்!

ஹீரோவின் ரகசிய காதலியாக வரும் ஆன்ட்ரியா, அந்தக் காதல் ரகசியம் யாருக்கும் தெரியக் கூடாது என சத்தியம் வாங்கும் இடத்தில் ரசிகர்கள் மனதில் நிற்கிறார்.

ஒரு நடிகையாகவே இதில் வரும் பூஜா குமாரின் நடன அசைவுகளும், அழகும் அந்தக் காட்சிகளை ரீவைண்ட் பண்ணிப் பார்க்க முடியுமா என கேட்க வைக்கின்றன.

இயக்குநர் பாலச்சந்தர் 'அவராகவே' வந்து மனதை கனக்க வைக்கிறார். கே விஸ்வநாத்தின் கம்பீரமும் திமிரும், உன்னைக் கொன்னுடுவேன் என மருமகனை மிரட்டும் தோரணையும்.. அபாரம்.

Uttama Villain Review

ஜெயராம் மீது மிகப் பெரிய மரியாதையை வரவைக்கும் பாத்திரம் ஜக்காரியா. சொக்குவாக வரும் எம்எஸ் பாஸ்கரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது இந்தப் படம்.

குரூர கோமாளி மன்னனாக வரும் நாசர், அவரது கைத்தடி அமைச்சர்களாக வரும் ஞானசம்பந்தன், சண்முகராஜன் என அனைவருமே கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

நகைச்சுவைப் படத்துக்காக எடுக்கப்படும் உத்தமன் கதை, காட்சிகளில் நகைச்சுவையே இல்லை என்பதைச் சொல்லாமல் விட முடியாது. அதுவும் உத்தமனாக வரும் கமலின் தோற்றம், முகம், அதில் பிதுங்கி நிற்கும் கண்கள்... பிடிக்கவில்லை.

Uttama Villain Review

ஹிரண்யன் நாடகத்தை அப்படியே தலைகீழாக்கி, நரசிம்ம அவதாரத்தைக் கொன்றிருக்கிறார்கள். அதற்கு எத்தனைபேர் கிளம்பப் போகிறார்களோ...

காட்சிகளில் அத்தனை பர்ஃபெக்ஷன் பார்த்திருக்கும் கமல் அன்ட் டீம், பாம்பும், புலியும், எலியும், புறாக்களும் க்ராபிக்ஸ் என்பதை எல்கேஜி குழந்தை கூட கண்டுபிடித்துவிடும் அளவுக்கு ரொம்ப சாதாரணமாக விட்டுவிட்டது ஏனோ?

ஷம்தத்தின் ஒளிப்பதிவு பிரமாதம். ஜிப்ரானின் இசையில் இரண்டு பாடல்கள்தான் கேட்கும்படி உள்ளன. பல காட்சிகளில் பின்னணி இசை இல்லை. ஒலிக்கும் சில காட்சிகளில் பரவாயில்லை எனும் அளவுக்குதான் உள்ளது. 8-ம் நூற்றாண்டுக் காட்சிகளில் இசை அந்த காலகட்டத்துடன் ஒட்டவில்லை.

வசனங்கள் யார் என குறிப்பிடவில்லை. கமல் என்றே வைத்துக் கொள்ளலாம். திரைக்கதையும் வசனமும் இந்தப் படத்தின் வெற்றியில் பிரதான பங்கு வகிக்கின்றன.

படம் பார்த்து முடித்தபோது, கமலுடன் ஒரு நீண்ட தூரப் பயணம் போய் வந்தது போன்ற உணர்வு. மறுமுறையும் பயணிக்கத் தூண்டும் உணர்வு!

 

தெலுங்கிலும் காஞ்சனா – 2 பெரும் வெற்றி

கங்கா என்ற தலைப்பில் தெலுங்கில் வெளியான காஞ்சனா 2 படத்துக்கு, ராகவா லாரன்சே எதிர்ப்பார்க்காத அளவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Kanchana 2 gets tremendous response in Telugu

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வெளியான முனி - 3 காஞ்சனா - 2 படம் தமிழில் ரூ 50 கோடி வரை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.

இந்தப் படம் தெலுங்கில் கங்கா என்ற பெயரில் மே 1-ம் தேதி வெளியானது.

Kanchana 2 gets tremendous response in Telugu

தமிழில் பெற்ற வெற்றியை விட இருமடங்கு மக்களின் அமோக ஆதரவுடன் தெலுங்கிலும் ஓடிக் கொண்டுள்ளது இந்தப் படம்.

Kanchana 2 gets tremendous response in Telugu

இது நானே எதிர்ப்பார்க்காத வெற்றி என்று குறிப்பிட்டுள்ள ராகவா லாரன்ஸ், அந்த மகிழ்ச்சியுடன் முனி 4 படத்துக்காகன வேலைகளில் இறங்கிவிட்டார்.

 

உத்தம வில்லன் வெளியாகக் காரணம் ஞானவேல் ராஜாதான்! - நன்றி கூறும் லிங்குசாமி

உத்தம வில்லன் படம் வெளியாக காரணமாக இருந்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு இயக்குநர் லிங்குசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

கமல், பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி மேனன், மறைந்த இயக்குநர் பாலசந்தர் உள்ளிட்ட பலர் நடிக்க, ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கும் படம் 'உத்தம வில்லன்'. திருப்பதி பிரதர்ஸ் - ராஜ்கமல் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

Lingusamy thanked Gnanvel Raja

மே 1-ம் தேதி வெளியாக வேண்டிய 'உத்தம வில்லன்', பைனான்சியர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக படம் வெளியாகவில்லை.

இன்று காலை வெளியாகும் என்றார்கள். அப்படியும் வெளியாகவில்லை. இன்று பிற்பகலுக்குப் பிறகுதான் படம் வெளியானது.

சென்னையில் உள்ள ஈராஸ் அலுவலகத்தில் இயக்குநர் லிங்குசாமி, ஞானவேல்ராஜா, சி.வி.குமார், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பைனான்சியர் அன்பு உள்ளிட்டவர்கள் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து இதனை அறிவித்தார்கள்.

அப்போது இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், "ஒரு ரசிகனாக நான் கமல் படம் வெளியாகும் போது முதல் நாள் முதல் காட்சி சென்றுவிடுவேன். அவ்வாறு இப்படத்தை வெளியிடாமல் போனதுக்கு மன்னிப்பு கோருகிறேன். வெளிநாடுகளில் இப்படம் வெளியாகி பெரும் வரவேற்பு கொடுத்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இன்று பிற்பகல் காட்சிகளில் இருந்து இப்படம் வெளியாகிறது.

இதுமட்டுமன்றி, இப்படம் வெளியாக எனக்கு உதவி புரிந்த ஞானவேல்ராஜாவுக்கு நான் மிகுந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய உதவியை நான் வாழ்நாளில் மறக்கவே முடியாது," என்றார்.

 

மோகன் பாபு இல்லத் திருமணத்தில் முதல் முறை நடனமாடும் ரஜினி!

நடிகரும் அரசியல் பிரமுகருமான மோகன்பாபுவின் மகன் மனோஜ் மஞ்சுவின் திருமணத்தில் குடும்பத்துடன் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்.

வரும் மே 14-ம் தேதி தொடங்கி மூன்று தினங்கள் வெகு கோலாகலத்துடன் இந்த திருமண நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன.

Mohan Babu family marriage: Rajini to perform for a dance

ரஜினியும், மோகன்பாபுவும் எழுபதுகளிலிருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பது திரையுலகினர் அறிந்தது.

இந்த திருமணத்தில் ஒரு பாடலுக்கு ரஜினிகாந்த் மேடையில் நடனம் ஆட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மெகந்தி சடங்கில் அவர் ஆடப் போகிறார் என்கிறார்கள்.

இதற்கு முன் எந்த திருமண அல்லது தனி விருந்துகளிலும் ரஜினி நடனமாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

நயன்தாரா - ஜீவா நடிக்கும் திருநாள்: கும்பகோணத்தில் தொடங்கியது!

ஈ படத்துக்குப் பிறகு ஜீவா - நயன்தாரா நடிக்கவிருக்கும் 'திருநாள்' படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கியது.

'யான்' படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்துக்காக நிறைய கதைகளைக் கேட்டு வந்த ஜீவா, இயக்குநர் ராம்நாத் கூறிய கதை பிடித்திருந்ததால் அப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

Jiiva - Nayanthara in Thirunaal

இப்படத்தில் ஜீவாவுக்கு நாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். 'தெனாவெட்டு' படத்துக்குப் பிறகு இப்படத்தில் ஜீவா கிராமத்து இளைஞனாக நடிக்க இருக்கிறார்.

நகைச்சுவை, காதல், ஆக்‌ஷன் என அனைத்தும் கலந்த இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் கும்பகோணத்தில் துவங்க இருக்கிறது. இதற்காக கும்பகோணத்தில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

படத்தின் இசை - ஸ்ரீ; ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி; எடிட்டிங் - வி.டி.விஜயன்

'கோதண்டபாணி பிலிம்ஸ்' நிறுவனத்தின் எம்.செந்தில்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

 

வங்கிக் கடன் பிரச்சினை விரைவில் தீர்ந்துவிடும்..! - ஆஸ்கர் ரவிச்சந்திரன்

ரூ 97 கோடி வங்கிக் கடனை விரைவில் செட்டில் செய்துவிடுவேன் என்று ஆஸ்கர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஐ படத்தின் தயாரிப்புக்காக சென்னையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சொத்துக்களை அடமானம் வைத்து கடன் வாங்கி இருந்தார்.

Loan will be return to bank soon, says Aascar Ravi

ரூ.84 கோடிவரை கடன் வாங்கி இருந்ததார். அந்த தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.97 கோடியாக உயர்ந்து விட்டது.

குறிப்பிட்ட கால கெடுவுக்குள் பணத்தைத் திருப்பிச் செலுத்தாததால், படத்தையும் வெளியிட்டுவிட்டார் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இதனால் சொத்துக்களை முடக்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு விட்டது.

இந்த நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடங்கள் வீடுகள், தியேட்டர்கள் உள்பட 40 ஆயிரத்துக்கு 121 சதுர அடி சொத்துக்களை வங்கி முடக்கியுள்ளது.

இது குறித்து ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தரப்பில் கூறும்போது, "பணத்தை திருப்பிச் செலுத்த கால அவகாசம் கேட்டு வங்கிக்கு கடிதம் எழுதப்பட்டு அதிகாரிகளுடனும் பேச்சு வார்த்தை நடக்கிறது. விரைவில் கடன் தொகை திருப்பி செலுத்தப்படும்..," என்றனர்.

 

அசோக் செல்வன் நடிக்கும் கூட்டத்தில் ஒருத்தன்

தெகிடி, சூது கவ்வும், தி வில்லா படங்களில் நடித்த அசோக் செல்வன் அடுத்து நடிக்கும் படம் கூட்டத்தில் ஒருத்தன்.

‘இரண்டாம் பாகமான 'தி வில்லா' படம் மூலம் நாயகனாக அறிமுகமானார் அசோக் செல்வன். இவர் நடிப்பில் வெளியான ‘தெகிடி' பெரிய வெற்றியைப் பெற்றது.

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சவாலே சமாளி' படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Ashok Selvan-Priya Anand starrer Kootathil Oruthan starts rolling

இந்த நிலையில் ‘கூட்டத்தில் ஒருத்தன்' என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நாசர் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை ஞானவேல் இயக்கவிருக்கிறார். இவர் ‘பயணம்', ரத்தசரித்திரம்' உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவர்.

இப்படத்துக்கான பூஜை சமீபத்தில் நடந்தது. ரமணியம் டாக்கிஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர்.

 

உத்தமவில்லன் சிக்கல் தீர்ந்தும் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏன்? ரசிகர்கள் காத்திருப்பு

சென்னை: கமல்ஹாசன் நடித்த ‘உத்தம வில்லன்' திரைப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகாத காரணத்தால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். படத்திற்கான சிக்கல் தீர்ந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் இன்னமும் படம் வெளியாகவில்லை. இதனால் உத்தமவில்லன் எப்போது படம் வெளியாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி மேனன் ஆகியோர் நடித்து, ரமேஷ் அரவிந்த் டைரக்ஷனில், டைரக்டர் லிங்குசாமியின் தம்பி என்.சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்த படம், ‘உத்தம வில்லன்.' ரூ.55 கோடி செலவில் தயாரான பிரமாண்டமான படம் இது. தமிழ்நாடு முழுவதும் 400 தியேட்டர்களில் மே 1ஆம் தேதி இந்த படம் திரைக்கு வருவதாக இருந்தது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் படம் வெளிவர இருந்தது.

‘Uttama Villain’ screening stopped in Tamil Nadu

தியேட்டர்களை ‘கட் அவுட்' மற்றும் தோரணங்களால் ரசிகர்கள் அலங்கரித்து இருந்தார்கள். மே 1ஆம் தேதி காலை 8 மணிக்கே முதல் காட்சி நடைபெற இருந்ததால், 5 மணிக்கே ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு கூடி விட்டார்கள்.

‘பைனான்ஸ்' பிரச்சினை காரணமாக, ‘உத்தம வில்லன்' படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. காலை காட்சியும், பகல் காட்சியும் நடைபெறவில்லை. முன்பதிவு செய்திருந்த ரசிகர்களுக்கு தியேட்டர்களில் கட்டணத்தை திருப்பிக் கொடுத்தார்கள். ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்.

பிரச்சினை என்ன?

உத்தம வில்லன்' படம் ‘பைனான்ஸ்' பிரச்சினையால் வெளிவர தாமதம் ஆன விவகாரம், தமிழ் பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தின் தயாரிப்பாளருக்கும், பைனான்சியர்களுக்கும் இடையே சென்னையில் உள்ள பிலிம்சேம்பர்' கட்டிடத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் தயாரிப்பாளர்கள் சார்பில் லிங்குசாமி, என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவரும் கலந்து கொண்டார்கள். பைனான்சியர்கள் சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.

படம் வெளியாகவில்லை

காலை தொடங்கிய பேச்சுவார்த்தை மாலை 3 மணி வரை நடைபெற்றது. அதில், இரு தரப்பினருக்கும் இடையே சமரச உடன்பாடு ஏற்பட்டதாகவும், எனவே மாலை காட்சிக்கு, ‘உத்தம வில்லன்' படம் வெளிவந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ‘உத்தம வில்லன்' படம் மாலை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், மாலை காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்.

பத்திரிகையாளர்களுக்கு படம்

இதனிடையே நேற்று பத்திரிகையாளர்கள் காட்சி திரையிடப்பட்டது. அவர்களும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை எழுதிவருகின்றனர்.

கமல் திரும்பினார்

‘உத்தம வில்லன்' படம் திரையிடப்படுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதை தொடர்ந்து துபாயிலிருந்து நடிகர் கமல்ஹாசன் அவசரமாக சென்னை திரும்பியுள்ளார்.

இன்றும் தாமதம் ஏன்?

இதனிடையே உத்தம வில்லன் படம் தொடர்பாக நிதி பிரச்சனையில் ஒருசில ஆவணங்களில் கையெழுத்து பெறப்பட்ட பின்னர் திரையிடப்படும் என்று தகவல் வெளியானது. ஒருவழியாக சிக்கல் தீர்ந்துவிட்டது என்றும் இன்று படம் 11 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. இதனையடுத்து ரசிகர்கள் கமலின் கட் அவுட்களுக்கு அபிஷேகம் செய்தனர். ஆனாலும் அறிவித்த இன்றும் படம் வெளியாகவில்லை.

ரசிகர்கள் விரக்தி

இதனால் விரக்கியடைந்த ரசிகர்கள், கமல் படத்தை பார்க்காமல் இந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். கடைசியாக வந்த தகவலின்படி படம் 1 மணிக்கு வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மெட்ராஸ் படத்துக்கு ஸ்ரீநாகி ரெட்டி விருது!

கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்துக்கு ஸ்ரீநாகி ரெட்டி நினைவு விருது நேற்று வழங்கப்பட்டது.

Sri Nagi Reddy award for Madras

விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஸ்ரீ நாகி ரெட்டி நினைவு விருது வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சென்ற ஆண்டின் மிகசிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான விருதை ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் வெளியான "மெட்ராஸ்" திரைப்படத்தை தேர்ந்தேடுத்து வழங்கினர்.

Sri Nagi Reddy award for Madras

இந்த விருது வழங்கும் விழாவில் நீதிபதி கற்பக விநாயகம், சரோஜா தேவி, எஸ்.பி.முத்துராமன், ஆரூர் தாஸ், வெங்கட்ராம ரெட்டி, பாரதி ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Sri Nagi Reddy award for Madras

ஸ்டுடியோ க்ரீன் இணை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் படக்குழுவினர் கலையரசன், ரித்விகா, இராமலிங்கன், முரளி, பிரவீன் சேர்ந்து விருதை பெற்றுக்கொண்டனர்.

 

நடிகை ஜெயசித்ரா வீட்டில் 25 கிலோ வெள்ளி கவசம் கொள்ளை

சென்னை: சென்னையில் நடிகை ஜெயசித்ரா வீட்டில் 25 கிலோ வெள்ளி கவசம் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயசித்ரா ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது மகனைவைத்து ‘நானே என்னுள் இல்லை'என்ற திரைப்படத்தை இயக்கினார். ஜெயா டிவியில் ஒளிபரப்பான ரெங்கவிலாஸ் என்ற நெடுந்தொடரிலும் நடித்தார் ஜெயசித்ரா.

நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் வசித்து வருகிறார் ஜெயசித்ரா. அவரது வீட்டு வளாகத்தில் சிறிய அளவில் விநாயகர் கோவில் கட்டி அவர் வழிபட்டு வந்தார். கோவிலில் மூன்றரை அடி உயர விநாயகர் சிலை உள்ளது. இதற்கு 25 கிலோ எடையில் வெள்ளிக் கவசம் செய்து வைத்து இருந்தார்.

25kg silver robbery in Actress Jayachitra house

முக்கிய நாட்களின் போது விநாயகருக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது உண்டு. மற்ற நாட்களில் மரப்பெட்டியில் பூட்டி வீட்டில் பாதுகாக்கப்பட்டு வந்தது. நித்ய பூஜை செய்வதற்காக தனியாக அர்ச்சகர் ஒருவரை நியமித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்த வெள்ளிக் கவசம் கடந்த 24ஆம்தேதி மாயமானது. அர்ச்சகர் மற்றும் வீட்டில் வேலை செய்பவர்களிடம் விசாரித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ஜெயசித்ரா மானேஜர் கணேசன் நுங்கம்பாக்கம் போலீசில் இன்று புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை போன வெள்ளிக் கவசம் மதிப்பு ரூ.9 லட்சம் எனக் கூறப்படுகிறது.

 

'நல்ல தோழன் தந்தைக்கு சமமாகிறான்.. நல்ல தோழி தாய்க்கு சமமாகிறாள்!'

கந்தர்வா செல்லுலாய்ட் கிரியேட்டர்ஸ் உடன் ராஜ் அஸோஸியேட்ஸ், கதிர் பிலிம்ஸ்

ஆகிய திரைப்பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய தமிழ் திரைப்படம் ஒரு தோழன் ஒரு தோழி.

Oru Thozhan Oru Thozhi

"நல்ல தோழன் தந்தைக்கு சமமாகிறான்

நல்ல தோழி தாய்க்கு சமமாகிறாள்"

என்ற அழகிய கருத்தினை கொண்டு, எளிய மனிதர்களின் எதார்த்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.

Oru Thozhan Oru Thozhi

படத்தின் கதை குறித்து இயக்குநர் பெ மோகன் கூறுகையில், "பஞ்சாலையில் வேலை பார்க்கும் இரு நண்பர்களின் வாழ்க்கைக்குள் ஒரு பெண் வருகிறாள். நட்பு, காதல், சண்டை எனப்போகும் அவர்கள் வாழ்க்கையில் ஒரு உயர்வான நிலையை அடையும் சூழ்நிலை வருகிறது. அப்போது ஏற்படும் ஒரு அசம்பாவிதம் அவர்கள் வாழ்க்கையை எப்படி மாற்றிபோடுகிறது எனபதனை நட்பு என்றும் சொர்க்கத்தில் வாழாத மனிதர்களே இல்லை என்ற உயர்ந்த உணர்வோடும் சொல்லும் கதை இது," என்றார்.

இப்படத்தின் கதை நாயகர்களாக மீனோஷ் கிருஷ்ணா, மனோதீபன் மற்றும் கதாநாயகியாக அஸ்தரா ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.

Oru Thozhan Oru Thozhi

இவர்களோடு அபிநிதா, "ஹலோ" கந்தசாமி, குமார், மகாதாரா, அருணாச்சல மூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

ராஜபாளையம், மதுரை யானைமலை, ஒத்தகடை, நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சுற்றியுள்ள படமாக்கப்பட்டது.

இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையில் ஏழு பாடல்கள் இடம்பெறுகின்றன.

மே மாதம் திரைக்கு வரும் இப்படத்தை கிருத்திகா.ஜி, டி ராஜேஷ், பால்டிப்போ கதிரேசன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

 

தீர்ந்தது பிரச்சினை... இன்று பிற்பகல் வெளியாகிறது உத்தம வில்லன்!

உத்தம வில்லன் படத்துக்கான சிக்கல்கள் ஒவ்வொன்றாகத் தீர்க்கப்பட்டு வருகின்றன. படம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வெளியாகிறது.

இந்தப் படம் நேற்று வெளியாகவிருந்தது. ஆனால் பல்வேறு சிக்கல்கள் காரணமாக இந்தப் படம் நேற்று வெளியாகவில்லை.

Uthama Villain will hit screens at 2.30 pm

நேற்று காலை முதல் படத்தை வெளியிடுவது குறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி, வெளியீட்டாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் விநியோகஸ்தர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இன்று காலையிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது.

இந்த நிலையில் அனைத்துப் பிரச்சினைகளும் சுமூகமாக முடிந்ததாகவும், இன்று பிற்பகல் படம் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சத்யம் உள்ளிட்ட திரையரங்குகளில் படத்துக்கான முன்பதிவு சற்று முன்பு தொடங்கியது. சில நிமிடங்களுக்குள் இன்றைய காட்சிகளுக்கு முன்பதிவு முடிந்துவிட்டது.

முதல் காட்சி பிற்பகல் 2.55-க்கு தொடங்குகிறது. சில அரங்குகளில் 2.30 மணிக்கு ஆரம்பிக்கிறது.

 

இப்பல்லாம் படமா எடுக்கறீங்க... எம்ஜிஆர் படத்தைப் பாருங்க..! - நீதிபதி கற்பகவிநாயகம்

இப்போது படங்களில் 99% வன்முறைதான் இருக்கிறது. கருத்து ஒரு சகவிகிதம்தான் இருக்கிறது. எம்.ஜி.ஆர். படங்களில் எவ்வளவு கருத்தைக் சொல்லியிருக்கிறார். அவர் மாதிரி படமெடுங்கள், என்றார் நீதிபதி கற்பக விநாயகம்.

விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஸ்ரீ நாகி ரெட்டி நினைவு திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று மாலை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

Justice Karpagavinayagam praises MGR movies

இதில் சென்ற ஆண்டின் மிகச்சிறந்த பொழுது போக்கு திரைப்படத்துக்கான விருது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் வெளியான 'மெட்ராஸ்'படத்துக்கு வழங்கப் பட்டது.

ஸ்டுடியோ க்ரீன் சார்பில் அதன் இணை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விருதை பெற்றுக்கொண்டார்.

நீதிபதி கற்பக விநாயகம்

விருது வழங்கி ஜார்கண்ட் உயர்நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பக விநாயகம் பேசியதாவது:

" இந்த விழாவில் நான் கலந்து கொள்வதில் பெருமைப் படுகிறேன். ஒரு மனிதன் உயர்வதற்கு பின்பற்ற ஐந்து விஷயங்கள் தேவை .

Justice Karpagavinayagam praises MGR movies

1. இறை நம்பிக்கை. 2. உழைப்பு 3. ஒழுக்கம் 4. நாணயம் 5.மனிதநேயம்.

இப்படி பின்பற்றி உயர்ந்தவர்களில் எனக்கு மூன்று பேரை பிடிக்கும். பி.நாகிரெட்டி,ஆரூர்தாஸ், எஸ்.பி.முத்துராமன், . இவர்களின் ஆற்றல் சாதனைகளைவிட தனிமனித ஒழுக்கம் மிகச் சிறந்தது என்று மதிக்கப் படுகிறவர்கள். நாகிரெட்டி சாதனைகளாலும் பேசப்படுகிறவர்.

சரோஜாதேவியின் அழகு

இங்கே சரோஜாதேவி வந்திருக்கிறார். அவர் நின்றாலும் அழகு; நடந்தாலும் அழகு; ஆடினாலும் அழகு; ஓடினாலும் அழகு; பேசினாலும் அழகு; ஏன் அழுதாலும் அழகுதான். எம்.ஜி.ஆர். சிவாஜி என்கிற இரு இமய மலைகளை ஈர்த்தவர் சரோஜாதேவி.

எனக்கு இன்றும் பழைய நினைவுகள் நிழலாடுகின்றன. எனக்கு சினிமா மீது மிகவும் ஆர்வம். பள்ளி, கல்லூரி பருவத்தில் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறேன். சுமார் 500 நாடகங்களில் நடித்திருப்பேன். பாரதியாக அர்ஜுனனாக எல்லாம் நாடகங்களில் நடித்திருக்கிறேன்.

Justice Karpagavinayagam praises MGR movies

எனக்குத் தெரிந்த எம்ஜிஆர்

எனக்கு சினிமாவில் தெரிந்தவர் எம்.ஜி.ஆர்தான். நான் அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன்.

நான் எம்.ஜி.ஆருக்காக சிறை சென்று இருக்கிறேன். சாதாரண வக்கீலாக இருந்தவன் என்னை அரசு வக்கீலாக்கி அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர்தான். ஆம், அவர்தான் என்னை அரசு வழக்கறிஞராக்கினார்.

அப்போது எனக்கென்ன தெரியும் என்றேன் .உனக்குத் தெரியும் என்றார். நான் நீதிபதியானபோது அவர் உயிருடன் இல்லை. ஆனால் அவரது ஆசீர்வாதம் இருந்தது. இந்த நிகழ்ச்சியிலும் ரெட்டியாரின்ஆசீர்வாதம் நிறைந்து இருக்கிறது. உழைப்பவரே உயர்ந்தவர் என்பார் எம்.ஜி.ஆர். உழைப்பவரை உயர்த்தியவர் நாகிரெட்டி அவர்கள்.

நாகிரெட்டியின் பெருமை

ஒரு முறை ஏவிஎம் திருமண விழாவில் ஒரு பந்தியில் சாப்பிட்ட இலைகளை எடுக்க ஆள் வரவில்லை. ரெட்டியாரே சாப்பிட்ட இலைகளை எடுத்தார். பின்னர் சாப்பிட வந்தவர்கள் எடுக்க ஆரம்பித்தனர். அவ்வளவு எளிமையானவர் நாகிரெட்டியார்.

அவர் மற்றவர்களுக்காக வாழ்ந்தவர்; பிறருக்காக வாழ்ந்து பெருமை பெற்றவர். மரங்களில் 3 வகை மரங்கள் உண்டு. பாதிரி மரம் பூக்கும், காய்க்காது. பலா மரம் காய்க்கும், பூக்காது. மாமரம் பூக்கும், காய்க்கும், பழுக்கும். அதே போல மனிதர்களிலும் 3 வகைஉண்டு. சிலர் பேசுவார்கள் செய்ய மாட்டார்கள். சிலர் செய்வார்கள், பேச மாட்டார்கள். சிலர் மட்டுமே பேசுவார்கள், செய்வார்கள், உதவுவார்கள்.

Justice Karpagavinayagam praises MGR movies

நாகி ரெட்டியார் மாமரம் போன்றவர். அவர் பேசுவார், செய்வார், உதவுவார். அவர் பெயரில் விருது பெறும் மெட்ராஸ்' தயாரிப்பாளர், படக்குழுவினரை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

மனதை மாற்றிய சத்திய சோதனை

படிக்கும் போது நான் மந்தமான மாணவன்தான். நான் எஸ்.எஸ்.எல்.சியில் பெயிலாகி விட்டேன். தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தேன். காந்தியின் 'சத்திய சோதனை' படித்தேன். அது என் மனதை மாற்றியது. பாடமாக அமைந்தது. நல்ல படம் எடுங்கள், பாடமும் சொல்லுங்கள்

எம்ஜிஆர் மாதிரி படம் எடுங்கள்

இப்போது படங்களில் 99% வன்முறைதான் இருக்கிறது. கருத்து ஒரு சகவிகிதம்தான் இருக்கிறது. எம்.ஜி.ஆர். படங்களில் எவ்வளவு கருத்தைக் சொல்லியிருக்கிறார். 'கொடுத்ததெல்லாம் கொடுத்தார்' பாடலைப் பாருங்கள், 'உன்னை அறிந்தால்.' பாடலைப் பாருங்கள். இரண்டே வரிகளில் எவ்வளவு கருத்துகள்.

படம் எடுங்கள் பாடமும் சொல்லுங்கள். படங்களில் நல்ல கருத்தும் இருக்க வேண்டும்," என்றார்.

ஆரூர்தாஸ்

கதை வசனகர்த்தா டாக்டர் ஆரூர்தாஸ் பேசும் போது, "நான் சினிமாவுக்கு வர நினைத்ததே இல்லை. சினிமா மீது எனக்கு விருப்பமோ கனவோ லட்சியமோ ஆசையோ இருந்ததில்லை. அப்பாவின் விருப்பமான தமிழாசிரியர் ஆகவே விரும்பினேன். புலவருக்குப் படித்தேன். நான் எழுதிய ஒரு நாடகத்தைப் பார்த்து தஞ்சை ராமையாதாஸ் என்னை சினிமாவுக்கு அழைத்தார். உதவியாளராக்கி வசனம் எழுதப் பயிற்சி தந்தார். இதுவரை 1000 படங்கள் முடித்துவிட்டேன்.

விஜயா வாஹினி ஸ்டுடியோ என் வீடு மாதிரி. நாகிரெட்டி எனக்கு சகோதரர் போன்றவர். 50 ரூபாய் மாத சம்பளத்தில் என்னை முதலில் வேலைக்கு சேர்த்துக் கொண்டவர். நாகிரெட்டிதான் சின்னப்பா தேவரிடம் என்னை அறிமுகப் படுத்தினார். நல்ல உழைப்பாளி. தொழிலாளர்களை நம்பியவர்,'' என்றார்.

சரோஜாதேவியின் மலரும் நினைவுகள்

சரோஜாதேவி பேசும்போது, "நானும் எம்.ஜி.ஆரும் நடித்த 'எங்கள் வீட்டுப்பிள்ளை' படப்பிடிப்பு வாஹினி ஸ்டுடியோவில் எட்டாவது தளத்தில் நடந்தது. முதல்நாள் அந்தகடைத்தெரு செட் தீப்பிடித்து எரிந்து விட்டது. இதைப் போய் அவரிடம் சொன்ன போது தொழிலாளர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார். அந்த அளவுக்கு தொழிலாளர்கள் மீது நம்பிக்கை வைத்தவர். அவர்களும் முழுமூச்சாக இறங்கி ஒரே நாளில் சரி செய்து விட்டார்கள்," என்றார்.

ஒன்றரை லட்சம் காசோலை

விழாவில் மெட்ராஸ்' தயாரிப்பாளருக்கு ஒன்றரை லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப் பட்டது.

இந்நிகழ்வில் 'மெட்ராஸ்' படக்குழுவைச் சேர்ந்த நடிகர் கலையரசன், நடிகை ரித்விகா, கலை இயக்குநர் ராமலிங்கம் ஒளிப்பதிவாளர் முரளி, எடிட்டர் பிரவீன் ஆகியோரும் கௌரவிக்கப் பட்டனர். இந்த விருது வழங்கும் விழாவை இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் முன்னெடுத்து வழிகாட்டினார்.

முன்னதாக அனைவரையும் விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை குழுமத்தைச் சேர்ந்த வெங்கட்ராம ரெட்டி, பாரதி ரெட்டி ஆகியோர் வரவேற்றனர். நிறைவாக பொது மேலாளர் ராம்பாபு நன்றி கூறினார். ஜெயாடிவி ரம்யா நிகழச்சியைத் தொகுத்து வழங்கினார்.

 

அற்பனுக்கும் கையில் மௌஸ் கிடைத்தால், அவன் பிடிக்கத்தான் செய்வான்! - கமல்

சுஹாசினியின் மவுஸ் பேச்சுக்கான எதிர்வினை இப்போதைக்கு முடியாது போலிருக்கிறது.

ஓ காதல் கண்மணி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றபோதி, சுஹாசினி, "எப்படி தகுதியுள்ளவர்கள்தான் படத்தில் நடிக்க முடியுமோ, ஒளிப்பதிவு பண்ண முடியுமோ, ரஹ்மான் மாதிரி மியூசிக் தெரிஞ்சவங்கதான் மியூசிக் பண்ண முடியுமோ அதேமாதிரி எழுதத் தெரிஞ்சவங்கதான் விமரிசனம் எழுதணும். இப்போ கம்ப்யூட்டர் உலகத்துல, மவுஸ் மூவ் பண்ணத் தெரிஞ்சவங்க எல்லாம் எழுத்தாளராயிட்டாங்க," என்றார். சுஹாசினியின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

Kamal's reaction for Suhassini's comments

இந்நிலையில், சுஹாசினியின் கருத்து குறித்து வார இதழ் ஒன்றுக்கு கமல் பதிலளித்துள்ளார். "மௌஸ் பிடிக்கிறவங்க எல்லாரும் விமர்சனம் பண்றாங்க. தகுதி உள்ளவங்கதான் விமர்சனம் பண்ணணும்' என்று சுஹாசினி சொல்லி இருக்காங்களே என்று கமலிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்:

"அப்போ டிக்கெட் போட்டு அத்தனை பேருக்கும் கொடுக்காதீங்க. அற்பனுக்கும் கையில் மௌஸ் கிடைத்தால், அவன் பிடிக்கத்தான் செய்வான். ஏன்னா, மௌஸ் அவனுடையது. குடை அவனுடையது போல. அதை ஒண்ணும் பண்ண முடியாது. விமர்சனத்தைத் தடுக்கவும் கூடாது. சுஹாசினியுடைய கருத்தை தவறு எனச் சொல்லவில்லை. அதுவும் ஒரு கருத்து. அவ்வளவுதான்!'' என்று கூறியிருக்கிறார்.

 

ஐஸ்வர்யா தனுஷை கவர்ந்த கொக்கு குமாரு!

சென்னை: வை ராஜா வை படத்தில் தனுஷ் கொக்கி குமாராக நடித்துள்ளது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார்.

3 படம் மூலம் இயக்குனர் ஆனவர் ஐஸ்வர்யா தனுஷ். தற்போது வை ராஜா வை படம் மூலம் மீண்டும் நம்மை சந்திக்க வருகிறார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி நடித்துள்ள வை ராஜா வை படம் வரும் மே 1ம் தேதி ரிலீஸாகிறது.

Aishwarya Dhanush all set to release Vai Raja Vai

இந்நிலையில் படம் பற்றி ஐஸ்வர்யா கூறுகையில்,

வை ராஜா வை என் முதல் படமான 3ல் இருந்து வித்தியாசமானது. 3 படம் காதலை மையமாக வைத்து சீரியஸானது. ஆனால் இது ஜாலியான கமர்ஷியல் படம். இந்த படத்தில் தனுஷ் கௌரவத் தோற்றத்தில் கொக்கி குமாராக வருகிறார். அவர் நடித்த கதாபாத்திரங்களில் எனக்கு பிடித்தவற்றில் கொக்கி குமாரும் ஒன்று.

Aishwarya Dhanush all set to release Vai Raja Vai

அத்தகைய கொக்கி குமாரு கதாபாத்திரத்தை மீண்டும் திரையில் கொண்டு வந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. வை ராஜா வை படத்தை தெலுங்கில் டப் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.

 

இந்திக்குப் போகிறது காஞ்சனா 2!!

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் படம் 'காஞ்சனா 2' இந்தியிலும் வெளியாகவிருக்கிறது.

சமீபத்தில் வெளியான காஞ்சனா 2-க்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 7 வயது சிறுமி முதல் 70 வயதான பாட்டி தோற்றம் வரை பல்வேறு கெட்டப்புகளில் நடித்த லாரன்ஸூக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Kanchana 2 goes to Bollywood

மேலும் முனி - 3 (காஞ்சனா 2) படத்தின் மாபெரும் வசூல் சாதனை இந்தியா முழுக்க எதிரொலிக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், லாரன்ஸை மாஸ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்திய நாகர்ஜுனா மற்றும் வெங்கடேஷ், ராணா மற்றும் பிரபல நட்சத்திரங்கள் லாரன்ஸூக்கு வாழ்த்துச் சொல்லி இருக்கிறார்கள்.

படம் தெலுங்கில் இம்மாதம் 24 ஆம் தேதி (நாளை) பலத்த எதிர்பார்ப்புடன் படம் வெளியாகிறது. மேலும் இதே படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

பைரேட்ஸ் ஆப் கரீபியன்... ஜாக் ஸ்பேராவின் முதல் பார்வை டீசர் வெளியீடு!

பைரேட்ஸ் ஆப் கரீபியன் படத்தில் நடிக்கும் புகழ்பெற்ற ஜாக் ஸ்பேரோவின் முதல் தோற்றப் படம் இன்று வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் 'பைரேட்ஸ் ஆப் கரீபியன் - டெட் மென் டெல் நோ டேல்ஸ்'.

இந்தப் படத்தின் கதாநாயகனான கேப்டன் ஜாக் ஸ்பேரோவின் தோற்றம், ஸ்டைல் அனைத்தும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுபவை.

First Look At Johnny Depp Reprising His Role In Pirates Of The Caribbean 5

கேப்டன் ஜாக்காக, சற்றே கிறுக்குத்தனம் கொண்டவராக நடித்தவர் ஹாலிவுட் நடிகர் ஜானி டேப். மிகவும் சாதாரண நடிகராக இருந்த அவர், பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் தொடர் படங்களில் நடித்த பிறகு புகழின் உச்சத்துக்குப் போய்விட்டார்.

இதுவரை 4 பாகங்கள் வெளிவந்துள்ளன. இப்படத்தின் 5-வது பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தின் முதல் புகைப்படத்தை அதன் தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் கேப்டன் ஜாக் ஸ்பேரோவை, இருவர் பெரிய கயிற்றால் கட்டியப்படி இருக்க, அவர் தனது வழக்கமான குறும்பு பார்வையுடன் உள்ளார்.

இப்படம் இந்த ஆண்டு கோடையில் வெளியாகவிருக்கிறது.

 

ஓவரா ஆடுறானே... ‘ஒல்லி பெல்லி’ மீது கெட்ட கோபத்தில் "இனிஷியல்"!

சென்னை: தமிழில் இருந்து சென்று பாலிவுட்டில் வெற்றிகளைக் கொடுத்து வருகிறார்கள் ஆட்ட இயக்குநரும், இன்ஷியல் இயக்குநரும்.

தமிழில் வெளியான் சைலண்ட் சாமியார் படத்தைத் தற்போது சூப்பரின் நாயகியை வைத்து இந்தியில் இயக்கி வருகிறார் இன்ஷியல் இயக்குநர். இந்தப் படவேலையில் அடிக்கடி தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறாராம் ஆட்ட இயக்குநர்.

Initial director angry with Dance director

சமீபகாலமாக சூப்பர் நாயகியும், ஆட்ட இயக்குநரும் விடிய விடிய பேசிக் கொள்கிறார்கள், எனவே இருவரும் காதலில் விழுந்திருக்கலாம் என்ற பேச்சு பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் தீயாய் பரவிக் கிடக்கிறது.

தற்போது அந்த உரிமையில் தான் ஆட்ட இயக்குநர் சூப்பர் நாயகியின் படத்தில் தலையிடுகிறார் எனக் கூறப்படுகிறது. ஆனால், ஆட்டத்தின் இந்த ஆட்டத்தை இன்ஷியலால் பொருத்துக் கொள்ள முடியவில்லையாம்.

இதனால், ஆட்ட இயக்குநரின் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் இன்ஷியல்.

 

ரூ. 6,000 கோடிக்கு மேல் குவித்த பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 7.. அடுத்த பாகம் ஆரம்பமாகிறது!

பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 7' வசூலில் புதிய சாதனைப் படைத்து வருகிறது.

உலகமெங்கும் இந்தப் படம் ரூ 6 ஆயிரத்து 329 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், தற்போது அதன் தொடர்ச்சியாக ‘பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 8' வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Fast and Furious 8 announced

யுனிவர்சல் ஸ்டூடியோஸ், அமெரிக்காவின் லாஸ் வேகாசில் உள்ள ‘சீசர்' அரண்மனையில் ‘சினிமா கான் 2015' என்ற விழாவினை நேற்று ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கலந்து கொண்ட நடிகர் ‘வின் டீசல்' இதுவரை நீங்கள் பார்த்திருக்காத வகையில் சிறப்பான ஒரு படத்தைக் கொடுக்க போகிறோம் என்று தொடங்கி பலத்த கைதட்டல்களுக்கிடையில் பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தின் 8 வது பாகம் வெளியாகுமென்று அறிவித்தார்.

2017-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி ரிலீசாகும் என்று ரிலீஸ் தேதியையும் விழா மேடையிலேயே அறிவித்துள்ளார்.

முன்னதாக இந்த ஏழாவது பாகம்தான் கடைசி என்று அறிவித்திருந்தனர். இப்போது அடுத்தடுத்த பாகங்கள் தொடரும் என்ற அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 

16 வயதினிலே நாயகனுக்கு 36 வயதினிலே நாயகி சவால்!

சென்னை: உத்தமவில்லன் திரைப்படம் ரிலீசாகும் அன்று ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கிய வைராஜா வை திரைப்படம் வெளியாகிறது. அடுத்த வாரமே, ஜோதிகா நடிப்பில் 36 வயதினிலே படமும் ரிலீஸ் ஆகிறது.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிய திரைப்படம் 16 வயதினிலே. அப்படத்தின் நாயகன் கமல்ஹாசன், நடித்து, ரமேஷ் அரவிந்த் இயயக்கத்தில் மே 1ம் தேதி ரிலீசாக போகும் படம் உத்தம வில்லன்.

Is It Uttama Villain Vs Vai Raja Vai Vs 36 Vayadhinile?

இந்த படத்துக்கு போட்டியாக அதே நாளில் ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், கவுதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை திரைப்படம் வெளியாகிறது. அதற்கு அடுத்தவாரம், அதாவது மே 8ம்தேதி ஜோதிகாவின் மறு பிரவேச படமான 36வயதினிலே ரிலீஸ் ஆகிறது.

கமல் படத்துக்கு, ஜோதிகா படம்தான் டஃப் ஃபைட் தரும் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கின்றனர். 16 வயது நாயகனுக்கு 36 வயதினிலே போட்டியாக மாறப்போகிறது. இதில் யார் ஜெயிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

பிரபாகரனின் தம்பிகள் நாங்கள், தப்பாகப் படமெடுப்போமா? - 'கங்காரு' சுரேஷ் காமாட்சி

உலகுக்கே கலாச்சாரம் கற்றுத் தந்த தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் பிரபாகரனின் தம்பிகள் நாங்கள். எப்படிப் படமெடுக்க வேண்டும் என்று யாரும் எங்களுக்கு சொல்லித் தரத் தேவையில்லை. கங்காரு படத்தைப் பார்க்காமலே கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களை என்னவென்று சொல்வது, என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

கங்காரு படத்துக்கு தடைகோரி ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் படத்தை இயக்கிய சாமி, இதற்கு முன்பு சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியிருப்பதால், இந்தப் படமும் அந்த மாதிரிதான் இருக்கும் என்று யூகத்தின் அடிப்படையில் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Kangaroo Suresh Kamatchi statement

அந்த வழக்கு விசாரிக்க உகந்ததுதானா என்பதை முடிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படமும் இன்று வெளியாகிவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒரு படத்தைப் பார்க்காமலேயே, அதன் கதை, காட்சிகள் என்னவென்று தெரியாமலேயே படத்துக்குத் தடை கோரும் போக்கு இன்று அதிகரித்துவருகிறது. என் கங்காரு படத்துக்கு எதிராகவும் அப்படி ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கங்காரு படம் அண்ணன் தங்கைப் பாசத்தை புதிய பரிமாணத்தில் சொல்லியிருக்கும் படம். துளி கூட ஆபாசமற்ற, சுத்தமான படம் என்று தணிக்கைக் குழுவால் யு சான்றளிக்கப்பட்ட படம்.

Kangaroo Suresh Kamatchi statement

படத்தைப் பார்த்த அத்தனைப் பேரும் பாராட்டுகிறார்கள். ஆனால் படத்தையே பார்க்காமல், இவர்களாக ஒரு கருத்தை கற்பனை செய்து கொண்டு படத்துக்கு தடை கேட்கிறார்கள். இது என்ன வகை நியாயம்?

உறவின் பெருமையையும் மேன்மையையும் சொல்லும் படம்தான் இந்த கங்காரு.

உலகுக்கே கலாச்சாரத்தைக் கற்றுத் தந்தது தமிழினம். அந்த தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் பிரபாகரனின் தம்பிகள் நாங்கள். எப்படி திரைப்படம் எடுக்க வேண்டும் என எங்களுக்கு யாரும் சொல்லித் தரத் தேவையில்லை. பிரபாகரனின் தம்பிகளால் கலையுலகம் தலை நிமிருமே தவிர, இம்மியளவு தலைகுனிவு கூட ஒருநாளும் நேராது!

-இவ்வாறு அந்த அறிக்கையில் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

 

விவேக்கை காப்பியடித்துப் பேசினேன்! - சிவகார்த்திகேயன்

மான் கராத்தே படத்தில் வரும் வசனம் ஒன்றை விவேக்கை காப்பியடித்துதான் நான் பேசினேன் என்றார் சிவகார்த்திகேயன்.

நேற்று நடந்த பாலக்காட்டு மாதவன் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றுப் பேசியதாவது:

"விவேக் சாருக்கு நான் பள்ளி பருவத்திலிருந்து பரம ரசிகன். அவர் படம் பார்த்து வளர்ந்தவன் நான். அவரது காமெடிக் காட்சிகளை ஒன்று விடாமல் வீட்டில் போட்டுப் பார்ப்பேன். விவாதம் எல்லாம் வரும். அப்போது அவர் ஒரு காட்சியிலாவது கடவுள் இல்லை என்று கூறியிருக்கிறாரா இல்லையே என்பேன்.

Yes, I copied Vivek for Maan Karate, says Sivakarthikeyan

அவரது பாதிப்பு நிச்சயம் எனக்குள் இருக்கும். அது தவிர்க்க முடியாதது. அந்த அளவுக்கு என்னைப் பாதித்தவர் அவர்.

அவரது சீர்திருத்தக் கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு. அவரைப் போலவே எனக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் மூட நம்பிக்கை இல்லை.

Yes, I copied Vivek for Maan Karate, says Sivakarthikeyan

கல்லூரிக் காலங்களில் மாணவிகள் அவரை ஒரு கதாநாயகன் போலப் பார்ப்பார்கள். அவர் மீது அவ்வளவு அபிமானம் வைத்து இருப்பார்கள். 'குஷி' படத்தில் அவர் ஓபனிங் காட்சியில் வந்த போது கைதட்டினார்கள். திருச்சி ராஜா கலையரங்கத்தில் 1350 பேரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். அப்போது அதில் நானும் ஒருவன்.

எப்படியும் என் காமெடிக் காட்சிகளில் அவரது பாதிப்பு நிச்சயம் இருக்கும். உள்ளுக்குள் அதுதானே இருக்கிறது. மான் கராத்தே' படத்தில் வரும் அந்த 'ரத்தி அக்னி ஹோத்ரி' டின் பீர் வசனம் எல்லாம் பாராட்டப்படுகிறது. ஆனால் அது எப்போதோ அவர் பேசியதை நான் காப்பியடித்ததுதான். அவர் விழாவில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார்.

 

கத்தி காயம் முதல் கல்யாணம்வரை.. ஆதர்ஷ தம்பதி அஜித்-ஷாலினிக்கு இன்று 15வது திருமண நாள்!

சென்னை: நடிகர் அஜித் வாழ்க்கையில் இப்போது அத்தனையும் சந்தோஷம்தான். மகன் பிறப்பு, மகனுக்கு பெயர் சூட்டுதல் என்று அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளுக்கு நடுவே, இதோ, இன்று தனது 15வது திருமண நாளில் காலடி எடுத்து வைத்துள்ளார் இந்த காதல் மன்னன்.

"மனம் விரும்பும் காதலியே, மனைவியாக வரும்போது, வாழ்க்கை இன்ப வரமாகும்" என்ற 'இளைய தளபதி' நடிகரின் திரைப்படப் பாடல் வரிகள், இந்த 'தல' நடிகருக்கு மிக பொருந்தும்.

அமர்க்களம் படத்தில் ஷாலியுடன் பழகும்போது மலர்ந்த காதல், இன்றுவரை அமர்க்களமாகவே போய்க் கொண்டுள்ளது. சினிமா வட்டாரத்தில் ஆதர்ஷ தம்பதிகள் என்று பெயரெடுத்த ஒரு சிலருக்கான பட்டியலில், இந்த தம்பதிகளும் இடம் உண்டு.

Ajith-Shalini Complete 15 Years of Togetherness

"நான் ஒரு காட்டாறு மாதிரியான மனிதன். எதையோ தேடி அருவியாக விழுந்து, பாறைகளில் மோதி, தேவை இல்லாமல் பல விஷயங்களைச் சுமந்து கொண்டு இருக்கிறேன். இப்போதான் எனக்கான கடலை தேடிக் கண்டுபிடித்துச் சங்கமம் ஆகிறேன். இந்த கடல் என்னைக் கட்டுப்படுத்தவும், சாந்தப்படுத்தவும் உறுதுணையாக இருக்க ஆசைப்படுகிறேன்" என்று ஷாலினி குறித்த தனது காதல் பற்றி முன்பொருமுறை பேட்டியளித்தார் அஜித்.

எத்தனை தீர்க்க தரிசனமான வார்த்தைகள். காட்டாறுபோல பாய்ந்து, மனதில் பட்டதை பேசியதால், அவரை வீழ்த்த காத்திருந்தவர்கள் கிளப்பிய சர்ச்சைகள்தான் எத்தனை..ஆனால், ஷாலினி என்ற ஒரு பக்குவப்பட்ட பெண்மணி அஜித்தின் வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகு, அந்த காட்டாறு சமுத்திரத்தின் உள்ளே கலந்து, ஆழ்கடலின் அமைதியை தந்துகொண்டுள்ளது. இன்று, அவர் ஏதாவது பேசமாட்டாரா, எந்த தொலைக்காட்சியாலாவது தோன்ற மாட்டாரா என்று ரசிகர்கள் மட்டுமின்றி, அவரை வீழ்த்த வாய்ப்பு தேடியவர்களும், வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறார்களே. அது ஷாலினி என்ற மூன்றெழுத்து மந்திரத்தால் அல்லவா சாத்தியமாயிற்று.

தங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணாக தமிழக மக்களால் பார்க்கப்படும், ஷாலினியை திருமணம் செய்ததன் மூலம், 'நான் தமிழ்நாட்டு மருமகன்' என்றார் அஜித். ஆனால், இன்று தமிழ் ரசிகர்களோ அவரை 'தல'மகனாக்கி, தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். அத்தனை, அஜித் ரசிகர்களுக்கும் ஷாலினி இன்று, அன்னைக்கு சமமான அண்ணியாகிவிட்டார்.

அமர்க்களம் பட சூட்டிங்கில், ஷாலினி கையில் கத்தி பட்டு ரத்தம் வந்த நிலையில், பதறிப்போய், துடிதுடித்து, ஒரு மருத்துவ குழுவையே ஸ்பாட்டுக்கு வரவைத்தார் அஜித். அடுத்தவருக்கு ஒன்றென்றால், தனக்கு வந்த துன்பம் போல பதறும் நல்ல மனிதராக இருக்கிறாரே என்று நினைத்து இதயம் இளகியது ஷாலினிக்கு.. ஆனால் கத்தி காயத்தை பற்றி கொஞ்சம் கூட கவலையின்றி 'ஜஸ்ட் லைக் தட்' என்று எடுத்துக்கொண்ட ஷாலினியை பார்த்து, அஜித்துக்கு ஒரு ஆர்வம் பற்றிக் கொண்டது. அதுதான் காதல் விதை விழுந்த இடம்.

ஒருவர் பதறுபவர், மற்றொருவர் பக்குவப்பட்டவர். இரு துருவங்களுக்குள் ஈர்ப்பு வருவது இயல்புதானே. ஒருவர் மிருதங்கமும், இன்னொருவர் வீணையும் வாசித்தால்தானே கச்சேரி களைகட்டும். அப்படித்தான், தற்போது அஜித் வாழ்வில் கச்சேரி களைகட்டிக் கொண்டுள்ளது. இப்போதுதான் திருமணம் செய்ததை போல இருந்தது.... இன்றோடு 15வது ஆண்டு திருமண நாளில் ஆதர்ஷ அஜித் தம்பதி காலடி எடுத்து வைத்துள்ளது.

அனௌஷ்கா, ஆத்விக்.. பெண்-ஆண் என இரு குழந்தைகள் இந்த திருமணத்தின் பொக்கிஷ பரிசுகள். வழக்கம்போல, ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் தங்கள் நாயகனை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அதேபோன்ற வழக்கத்துடன், அமைதியாக ரசித்துக்கொண்டுள்ளார் இந்த ஆசை நாயகன்.

 

கொலவெறிக்கு முதல் வாழ்த்து சொன்னவரே விவேக்தான்! - அனிருத்

எனது கொலை வெறி.. பாடலுக்கு முதல் வாழ்த்துச் சொன்னவரே நடிகர் விவேக்தான் என்றார் இசையமைப்பாளர் அனிருத்.

விவேக் நாயகனாக நடித்த பாலக்காட்டு மாதவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று, முதல் சிடியைப் பெற்றுக் கொண்ட அனிருத் பேசுகையில், "நான் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறேன். அதற்கு காரணங்கள் இரண்டு உண்டு. முதலில் அந்தப் பாடல் பிடித்திருந்தது. இரண்டாவது விவேக் சார் எனக்குப் பிடித்தவர்.

Vivek is the first wisher for Kolaveri song

நான் முதலில் இசையமைத்த கொலவெறி பாடலுக்கு யார் யாரோ பாராட்டினார்கள். அமிதாப் முதல் பிரதமர் வரை அந்தப் பாடல் சென்றடைந்தது.

ஆனால் திரையுலகிலிருந்து முதலில் வந்த வாழ்த்து விவேக் சாரிடமிருந்துதான். அதுவும் ஒரு டிவி நிகழ்ச்சியிலிருந்தபடி எனக்கு போன் செய்து பாராட்டினார். அதை நான் என்றுமே மறக்க மாட்டேன். அந்த அன்புக்காகத்தான் இன்று இங்கு வந்திருக்கிறேன்," என்றார்.

 

ஷங்கர்-விஜய் கூட்டணியை முறிந்த ஒரு போன் கால்!

சென்னை: விஜய் நடிக்க வேண்டிய திரைப்படத்தை ரஜினிகாந்த்தின் ஒரு போன் கால் பறித்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம் நண்பன். இது ஹிந்தி திரைப்படமான 3இடியட்ஸ் ரீமேக்காகும். எனவே ஷங்கரின் நேரடி இயக்கத்தில், ஒரு படத்தில் நடிக்க விஜய் விரும்பினார். இதற்காக ஷங்கரும் ஸ்க்ரிப்ட் தயார் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

Did Rajinikanth phone call snatc away a Movie from Vijay?

இந்த படத்தில் வில்லன் வேடத்தில் விக்ரமை நடிக்க வைக்கலாம் என்று ஷங்கர் திட்டமிட்டிருந்தாராம். ஆனால், லிங்கா திரைப்படம் சரியாக போகாத நிலையில், மீண்டும் ஷங்கருடன் மாஸ் கூட்டணி வைக்க திட்டமிட்ட ரஜினிகாந்த், போன் மூலம் ஷங்கருக்கு தகவல் கூறியுள்ளார்.

இதையடுத்து தனது பிளானை மாற்றிய ஷங்கர், ரஜினி இமேஜுக்கு தக்கபடி திரைக்கதையை மாற்றியதாக கூறப்படுகிறது. எனவே இப்படத்தில், கமலை வில்லனாக நடிக்க கேட்டுள்ளார் ஷங்கர். ஆனால், அவர் மறுக்கவே, மீண்டும் தனது பழைய பிளான்படி விக்ரமை வில்லன் கேரக்டரில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம்.

 

இயக்குநர் பாக்யராஜ் வீட்ல விசேஷங்க..!

இயக்குநர் -நடிகர் பாக்யராஜ் மகனும், பிரபல நடிகருமான சாந்தனுவுக்கும், டிவி தொகுப்பாளினி கீர்த்திக்கும் வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி திருமணம் நடக்கிறது.

இதுகுறித்து இன்று மீடியாவுக்கு தன் கைப்பட பாக்யராஜ் எழுதியுள்ள கடிதம்:

அன்பு பத்திரிகையாளர்கள நண்பர்களுக்கு, பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதியரின் பணிவான வணக்கம்.

Director Bagyaraj's son to wed TV anchor Keerthi`

ஒரு இனிய நற்செய்தி. எங்க 'வீட்ல விசேஷங்க'. ஆம்! எங்கள் புதல்வன் சாந்தனு என்கிற சோனுவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது.

எங்கள் பெண் சரண்யா, சற்றுப் பொறுத்து திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறிவிட்டதால், வீட்டில் முதல் திருமணம் சாந்தனுவுக்கு நடக்கவுள்ளது.

பெண்ணின் வீட்டாரும் நமது கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. பிரபல நடனக் கலைஞர் ஜெயந்தி - விஜயகுமார் தம்பதிகளின் கீர்த்தியே மணமகள்.

ஆகஸ்ட் 21-ம் நாள் கோவிலில் திருமணமும், 22-ம் நாள் மாலை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வும் நடைபெற உள்ளது.

விரைவில் அழைப்பிதழுடன் முறைப்படி அனைவரையும் அழைக்க உள்ளோம்."

 

வை ராஜா வை - விமர்சனம்

Rating:
3.5/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், விவேக், டாப்சி, சதீஷ், சிறப்புத் தோற்றத்தில் தனுஷ்

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: வேல்ராஜ்

தயாரிப்பு: ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்

இயக்கம்: ஐஸ்வர்யா ஆர் தனுஷ்

பொதுவாகவே பெண் இயக்குநர்கள் படம் என்றால் அதில் பொழுதுபோக்கு அம்சங்கள், தொழில்நுட்ப நேர்த்தி அவ்வளவாக சோபிக்காமல் போய்விடும். குறிப்பாக ஒருவித பெண்மைத் தனமே மேலோங்கி இருக்கும்.

ஆனால் முதல் முறையாக இவற்றைக் கடந்து, ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடும் அளவுக்கு ஒரு தரமான பொழுதுபோக்குப் படத்தைத் தந்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். அதற்காக முதலிலேயே அவரைப் பாராட்டிவிடுவோம்.

கதை தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதிய கதைக் களம். காஸினோ எனப்படும் சூதாட்ட உலக நிகழ்வுகளை பரபரப்பான பொழுதுபோக்காக்கித் தந்திருக்கிறார் ஐஸ்வர்யா.

Vai Raja Vai Review  

மிடில் க்ளாஸ் பையனான கவுதமுக்கு இயற்கையாகவே எதையும் முன் கணித்துச் சொல்லும் ஒரு அமானுஷ்ய சக்தி இருக்கிறது. சிறுவயதில் அதனால் அவன் நிறைய பிரச்சினைகளைச் சந்திக்கிறான். எனவே அப்படி ஒரு சக்தி இருப்பதைே மறநந்துவிடுமாறு பெற்றோர் கெஞ்ச, மெல்ல மெல்ல அந்த சக்தியை மறக்கிறான்.

தன் நண்பன் உதவியுடன் ஒரு செல்போன் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை ஊழியராகிறார். தன் சைக்கிள் மீது மோதும் தாவரப் பிரியையான ப்ரியா ஆனந்தை, முதல் சந்திப்பிலேயே காதலிக்கிறார். இரு வீட்டிலும் அந்தக் காதல் ஓகே ஆகிவிடுகிறது. வேலை, நண்பன், காதலி என்று நிம்மதி வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் சூழலில் மீண்டும் அந்த சக்தி அவருக்குள் தலைதூக்குகிறது.

 வை ராஜா வை

அலுவலகத்தில் கவுதமும் வேலைப் பார்க்கும் விவேக்குக்கு இவனது சக்தி தெரிந்துவிட, அதை வைத்து கிரிக்கெட் சூதாட்டத்தில் ஒரு முறை ஈடுபடுகிறார்கள். அந்த மேட்சின் ஒவ்வொரு ஓவரிலும் என்ன நடக்கும் சரியாக கவுதம் முன் கணித்துச் சொல்ல, அதன் படியே நடந்து ஒரு கோடி சம்பாதிக்கிறார்கள்.

பெட்டிங்கில் பணத்தை இழந்த டேனியல் பாலாஜி கொலை வெறியாகிறார். ஜெயித்த பணத்தில் ஜாலியாக கோவா செல்லும் கவுதம் அன்ட் கோவை விரட்டிப் பிடித்து, துப்பாக்கி முனையில் மிரட்டி, மீண்டும் தனக்காக ஒரு சொகுசு கப்பலில் நடக்கும் காசினோவில் சூதாட வைக்கிறார் டேனியல். அங்கு சூதாடி பணத்தை வென்றாலும் ஆபத்து, தோற்றாலும் ஆபத்து... அதிலிருந்து கவுதம் அன்ட் கோ எப்படி தப்பிக்கிறார்கள், டேனியல் பாலாஜி - கவுதம் பகை எப்படித் தீர்க்கிறது என்பது மீதிக் கதை.

சுவாரஸ்யமான கதை.. அதை இன்னும் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா. கமர்ஷியல் வெற்றி தந்த முதல் பெண் இயக்குநர் என கம்பீரமாகச் சொல்லிக் கொள்ளலாம்.

 வை ராஜா வை

மிக இயல்பாக ஆரம்பிக்கும் காட்சிகள், எப்போது விறுவிறுப்பாக மாறியதென்றே தெரியாத அளவுக்கு வேகமெடுக்கின்றன.

அதுவும் அந்த கிரிக்கெட் சூதாட்டம் நடக்கும் விதம், அதில் புழங்கும் பணம், சொகுசு கப்பல் காஸினோ காட்சிகளெல்லாம் ரசிகர்களுக்கு ரொம்பவே புது அனுபவம். அந்தக் காட்சிகளுக்கு யுவன் அமைத்திருக்கும் பின்னணி இசை படத்தை இன்னும் விறுவிறுப்பாக்குகிறது.

கவுதமுக்கு முதல் வெற்றிப்படமாக அமைந்துள்ளது வை ராஜா வை. ஆனால் நடிப்பில் இன்னும் அவர் பல படிகள் ஏற வேண்டியிருப்பதை பல காட்சிகளில் பார்க்க முடிகிறது.

ப்ரியா ஆனந்த், டாப்சி இருவரும் தங்கள் பொறுப்பை சரியாகச் செய்திருக்கிறார்கள். இடைவேளைக்குப் பின் வரும் டாப்சி, அந்த காசினோ பற்றி க்ளாஸ் எடுக்கும் விதம் டாப்.

 வை ராஜா வை

விவேக் இந்தப் படத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அவரது ஒன் லைனர்கள், பஞ்ச் வசனங்கள் அத்தனையிலும் மகா நவீனம். மனிதர் என்னமாய் அப்டேட் ஆகியிருக்கிறார். இந்த பாணியை தொடருங்கள் விவேக். இந்தப் படம் இத்தனை லைவாக அமைய விவேக் முக்கிய காரணம்.

அடுத்து டேனியல் பாலாஜி. வில்லத்தனத்தில் புதுப் பரிமாணம் காட்டியிருக்கிறார். திருமண வீட்டில் கவுதமை காப்ரா பண்ணும் அவரது ஸ்டைல் செம!

க்ளைமாக்ஸில் கொக்கி குமாராக வரும் தனுஷை பிரமாதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா.

படத்தின் இன்னொரு சிறப்பு இரண்டே கால் மணி நேரத்துக்குள் முடிந்துவிடுவது.

சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் படத்தை ரசிக்க அவை தடையாக இல்லை.

வேல்ராஜின் ஒளிப்பதிவும், யுவன் சங்கர் ராஜாவின் இசையும் இயக்குநருக்கு பக்கபலங்கள்.

வை ராஜா வை.. ஜாலியான சம்மர் ரைடு!