வனயுத்தம்: தடை விலகினாலும் கொதிக்கும் முத்துலட்சுமி…

Muthulakshmi Still Fumes On Vanayutham   

ஒருவழியாக வனயுத்தம் படத்திற்கான தடை விலகி ரிலீஸ்க்கு தயாராகி வரும் நிலையில் படம் வெளியானால் இஸ்லாமியர்கள் கொதிப்பார்கள் என்று கூறியுள்ளார் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி.

வனயுத்தம் படத்தின் கதையின்படி, வீரப்பனின் அண்ணன் மாதையன் தமிழக போலீஸால் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்படுகிறார். அதே கோவை சிறையில், குண்டு வெடிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மதானியும் இருக்கிறார்.

மாதையன், மதானியிடம்15:16:28 உதவி கோர, "நிச்சயம் உதவி செய்கிறோம். எங்கள் ஆட்கள்தான் வெடிகுண்டு வெடிக்க வைப்பதில் கில்லாடிகள் ஆச்சே" என்கிறார் மதானி. இந்த காட்சிகளால், இஸ்லாமியர்கள் கொதித்து எழுவார்கள்... பாருங்கள்" என்கிறார் முத்துலட்சுமி.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட மதானி, 1998-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி, கோவை சிறையில் அடைக்கப்பட்டார். மதானியை விடுதலை செய்யக் கோரி தமிழகத்திலும், கேரளத்திலும் மிகப்பெரும் மக்கள் இயக்கங்கள் நடைபெற்றன.

2006 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், அப்பாவி சிறைவாசிகளின் விடுதலையை முன்னிலைப்படுத்தி த.மு.மு.க போன்ற தமிழக முஸ்லிம் அமைப்புகள் தேர்தலை எதிர்கொண்ட விதமும், மதானி உள்ளிட்ட பலரது விடுதலைக்கு வழிவகுத்தது. குற்றம் நிரூபிக்கப்படாமல் ஒன்பதரை ஆண்டுகால சிறை வாழ்கையை முடித்துக் கொண்டு, 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி, விடுதலையாகி வெளியே வந்தார் மதானி.

இவரை ஒரு கதாபாத்திரமாக வனயுத்தம் படத்தில் காண்பிக்கிறார்கள் என்கிறார், முத்துலட்சுமி! அதுவும், கோர்ட்டாலேயே நிரூபிக்க முடியாத வெடிகுண்டு பற்றி பேசும் கேரக்டர்! அதுதான் இஸ்லாமியர்களை கோபப்பட வைக்கும் என்கிறார். இன்னும் எத்தனை தடை இருக்கோ தெரியலையே... பாவம் படைப்பாளிகள்.

 

விஸ்வரூபம்... விநியோகஸ்தர்களின் உள்ளடி வேலை கமலுக்குத் தெரியுமா?

Viswaroopam Distributors Try Cheat Kamal

மதுரை: விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சிலும் வெளியிடுவதால், அட்வான்ஸ் அடிப்படையில் படத்தை திரையரங்குகளுக்குத் தரும் கமல் ஹாஸனை ஏமாற்றும் விதத்தில், பல பகுதிகளில் விஸ்வரூபத்தை மினிமம் கேரன்டி அடிப்படையில் சில விநியோகஸ்தர்கள் வெளியிடுகின்றனர்.

இதனால் கமல் முன்வைத்த நேர்மையான வர்த்தகம் மோசடிக்குள்ளாகியுள்ளது.

விஸ்வரூபம் படத்தின் வர்த்தகம் டிடிஎச் மற்றும் இஸ்லாமியர் பிரச்சினைகளைச் சந்திக்கும் வரை ரொம்ப சாதாரணமாகவே இருந்தது.

ஆனால் தொடர்ந்து பிரச்சினைகள், தடைகள் வந்ததில் படத்தின் வர்த்தகமும் எகிறிவிட்டது. முதல் 200 தியேட்டர்களாவது கிடைக்குமா என்ற நிலை போய், இப்போது 500 அரங்குகளில் படத்தை வெளியிடுகின்றனர். இன்னும் அதிகமான அரங்குகளில் கூட திரையிடப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த எதிர்ப்பார்ப்பை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் விநியோகஸ்தர்கள்.

இந்தப் படம் டிடிஎச்சிலும் வெளியாகப் போவதால், தியேட்டர்கள் யாரும் பாதிப்படைந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தியேட்டர்களிடம் எம்ஜி என்ற பெயரில் பெரும் தொகையைப் பெறாமல், குறைந்தபட்ச அட்வான்ஸ் மட்டும் பெற்றுக் கொண்டு படத்தை வெளியிடக் கொடுத்தார் கமல்ஹாஸன்.

இப்போது தியேட்டர்கள் இந்தப் படத்தை வெளியிட ஏகப்பட்ட ஆர்வம் காட்டுவதால், அந்த டிமாண்டை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர் விநியோகஸ்தர்கள்.

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இந்தப் படத்தை எம்ஜி எனும் மினிமம் கேரன்டி முறையில் விற்பனை செய்துள்ளார்களாம். இதனை ஒப்பந்தமாக எழுதிக் கையெழுத்திட்டால் மாட்டிக் கொள்வோம் என்பது தெரிந்து, துண்டுச் சீட்டில் எழுதி படத்தை விற்றுள்ளார்களாம்.

இதன் மூலம் தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கையை குறைத்துக் காட்ட முடியும் என்றும், இதனால் கமலுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் திரையரங்கு உரிமையாளர் சிலர் புகார் தெரிவித்துள்ளனர். எனவே கமல் அனைத்து தியேட்டர்களுக்கும் பிரதிநிதிகளை அனுப்பி கண்காணிக்க வேண்டும், டிடிஎச்சில் வெளியான பிறகும் அதுபோல செய்ய வேண்டும்.. அப்போதுதான் நிஜமான வசூல் நிலவரம் கமலுக்குக் கிடைக்கும் என்று தியேட்டர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

இன்று ரஜினிக்கு விஸ்வரூபம் சிறப்புக் காட்சி - கமல் ஏற்பாடு!

Rajini Watch Viswaroopam Tonight

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக இன்று விஸ்வரூபம் படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் கமல்ஹாஸன்.

கமல் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் படம் பல்வேறு சிக்கல்களைக் கடந்து நாளை தமிழகத்தில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியை ரஜினிக்கு போட்டுக் காட்ட ஏற்பாடு செய்துள்ளார் கமல்ஹாஸன். சத்யம் திரையரங்கில் இந்தக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரஜினியுடன் இருவருக்கும் நெருக்கமான நண்பர்களும் இந்தக் காட்சியில் பங்கேற்கின்றனர்.

விஸ்வரூபம் படம் மிகுந்த நெருக்கடியில் சிக்கியிருந்த தருணத்தில் கமலுக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்தவர் ரஜினி. இஸ்லாமிய சகோதரர்கள் கமலுடன் பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பின்னர் அரசு தடைவிதித்த போது, சிவகுமார், சரத்குமார் துணையுடன் கமலுக்காக முதல்வரிடம் பேசி இணக்கமான சூழலை ஏற்படுத்தியதில் பெரும்பங்கு வகித்தவர் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

 

நிர்வாண நடிப்பு... பிரகாஷ்ராஜுக்கு குவியும் கண்டனங்கள்!!

Many Condemn Praksh Raj His Movie

சென்னை: தெலுங்குப் படத்தில் நிர்வாணமாக நடித்த பிரகாஷ்ராஜுக்கு கண்டனங்கள் குவிகின்றன. பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன.

'ஓங்கோல் ஹிட்டா' என்ற படத்தில் ஆடை எதுவும் இன்றி நிர்வாணமாக நடித்துள்ளார் பிரகாஷ்ராஜ். இந்த நிர்வாண காட்சிக்காகவே தணிக்கை குழு படத்துக்கு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறுகையில், "நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று எனக்கு எந்த வேண்டுதலும் இல்லை. இது என் தொழில். படத்தின் இயக்குநர் கண்டிப்பாக அப்படி ஒரு காட்சியில் நடிக்கச் சொன்னார். நடிக்க வேண்டியதாகிவிட்டது.

கதைப்படி நான் வில்லன். பகலில் நல்லவனாக இருப்பேன், இரவில் கெட்டவனாகி விடுவேன். இரவு நேரத்தில் ஆடைகளை அவிழ்த்து வீசி விட்டு நிர்வாணமாக இருப்பது போல காட்சி.

இதுவரை நான் ஏற்றிராத வேடம் என்பதால், நிர்வாணமாக நடிக்க சம்மதித்தேன். இதை சில அமைப்புகள் எதிர்க்கின்றன. போராட்டத்துக்கும், அழைப்பு விடுத்துள்ளன.
அவர்கள் என் நிலையை நினைத்து தங்கள் எதிர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும்," என்றார்.

 

சென்னை மற்றும் புறநகர்களில் 50 அரங்குகளில் விஸ்வரூபம்!

Viswaroopam Be Released 50 Plus Screens In Chennai

சென்னை: நாளை சென்னை மற்றும் புறநகர்களில் 50 திரையரங்குகளில் விஸ்வரூபம் படம் வெளியாகிறது.

தமிழகம் முழுவதும் 500க்கும் அதிகமான திரையரங்குகளில் விஸ்வரூபத்தை திரையிட ஏற்பாடுகள் நடக்கின்றன. எதிர்ப்பார்ப்பு அதிகம் உள்ளதால், இந்தப் படத்தை மேலும் 50 அரங்குகளில் வெளியிட விநியோகஸ்தர்கள் பேசி வருகின்றனர்.

கமல் படங்களில் தமிழகத்தில் அதிக அரங்குகளில் வெளியான படம் என்ற பெருமை விஸ்வரூபத்துக்கே உண்டு. ஆனால் தமிழ் சினிமாவில் அதிக அரங்குகளில் வெளியான சாதனையை ரஜினியின் எந்திரன்தான் வைத்துள்ளது. இந்தப் படம் அன்றைக்கு சென்னையில் 44 அரங்குகளிலும், புறநகர்களில் 40 அரங்குகளிலும், தமிழகம் முழுவதும் 805 அரங்குகளிலும் வெளியாகி சாதனை படைத்தது.

விஸ்வரூபத்துக்கு டிக்கெட் முன்பதிவுகள் நேற்று துவங்கின. பல தியேட்டர்களில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

வில்லிவாக்கம், மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஏ.ஜி.எஸ். தியேட்டரில் 7 திரைகளில் 28 காட்சிகள் திரையிடப்படுகிறது. வடபழனி கமலா தியேட்டர் அசோக்நகர் உதயம் தியேட்டர்களில் ஞாயிற்றுக்கிழமை வரை டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் அதிக ஸ்க்ரீன்கள் இந்தப் படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பிவிஆர், சத்யம், எஸ்கேப், எஸ் 2 பெரம்பூர், எஸ் 2 திருவான்மியூர், பேம் நேஷனல் போன்ற அரங்குகளில் முதல் ஒரு வாரத்துக்கு அதிக திரைகளில் இந்தப் படத்தைக் காட்ட உள்ளனர். அதன் பிறகு டிடிஎச்சில் படம் வெளியாகிவிடும் என்பதால் முடிந்தவரை முதல் வாரம் அதிக திரையரங்குகளில் வெளியிடப் போகிறார்களாம்.

 

புதிய தலைமுறை டிவியின் தமிழன் விருதுகள்

Puthiya Thalaimurai Tv Tamilan Awards

சாதனைத் தமிழர்களை கெளரவப்படுத்தும் புதிய தலைமுறை தமிழன் விருதுகளுக்கான வாக்கெடுப்பு இன்று தொடங்கியுள்ளது.

சமூகசேவை, தொழில்துறை, அறிவியல் - தொழில்நுட்பம், தமிழ் இலக்கியம், விளையாட்டு, கலைத்துறை ஆகிய 6 துறைகளைச் சேர்ந்த சாதனை தமிழர்களை வாசகர்கள் தேர்வு செய்யலாம். இதற்கான வாக்கெடுப்புப் படிவத்துடன் தற்போது புதுச்சேரி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய பகுதிகளில் புதிய தலைமுறையின் வாகனங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

வாக்கெடுப்பு படிவத்தில், 6 துறைகளில் சாதனை படைத்த தமிழர்களை, அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது பெயரை எழுதி வாசகர்கள் தேர்வு செய்யலாம்.

சாதனை தமிழர்களை தேர்வு செய்வதற்கான இந்த வாகனங்கள் தமிழகம் முழுவதும் வரும் 20ஆம் தேதி வரை சுற்றிவர இருக்கின்றன. தேர்ந்தெடுக்கப்படும் சாதனைத் தமிழர்களுக்கு புதிய தலைமுறை டிவி விருதுகள் வழங்கி கவுரவுக்கிறது.

 

'ஐட்டம்' பாட்டுக்கு வந்தது ஆப்பு... இனி கட்டாய 'ஏ' சான்று.. சென்சார் அதிரடி!

Films With Item Numbers Carry A Certificate

ஐட்டம் பாடல் அல்லது குத்துப் பாடல் என்ற பெயரில் வரும் கவர்ச்சிப் பாடல் எந்தப் படத்தில் இடம்பெற்றால் அதற்கு இனி ஏ சான்றிதழ்தான் வழங்கப்படும் என சென்சார் போர்டு அறிவித்துள்ளதால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கவர்ச்சிப் பாடல் கட்டாயம் இருக்கும். சிவாஜி, ரஜினி, கமமல் படங்களில்கூட ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி என கவர்ச்சிக் நடிகைகளின் குலுக்கல் நடனம் கட்டாயம் இடம்பெறும்.

இப்போது அந்த கவர்ச்சிப் பாடல் பெயர் மாறி ஐட்டம் டான்ஸ், குத்துப் பாட்டு என்றாகிவிட்டது.

இந்தியிலும் தமிழிலும் இந்த ஐட்டம் பாடல்கள் ரொம்ப பிரசித்தம்.

ஆனால் சமீபத்தில் நடந்த டெல்லி கேங் ரேப் சம்பவத்துக்குப் பிறகு, சினிமாவுக்கான தணிக்கை விதிகளை கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி இனி ஐட்டம் டான்ஸ் இடம்பெறும் படங்களுக்கு ஏ சான்று தருவதாக முடிவு செய்துள்ளது தணிக்கைக் குழு.

"சிலர் இந்தப் பாடல்களை இப்போது Fun Song என்ற பெயரில் படங்களில் நுழைத்து வருகின்றனர். எந்தப் பெயரில் அழைத்தாலும் இந்தப் பாடல்களுக்கு நிச்சயம் ஏ சான்றுதான் கொடுப்போம்," என்று தணிக்கைக் குழு தலைவர் லீலா சாம்சன் அறிவித்துள்ளார்.

இது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் கவர்ச்சி பாடல்களை நம்பி இருக்கம் ஐட்டம் நடிகைகளுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

ஏ சான்றுள்ள படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதில் பல சிக்கல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வீரப்பன் கொல்லப்பட்டது எப்படி? 'வனயுத்தத்தில்' பதில் வைத்திருக்கிறேன்! - இயக்குநர்

Vanayudham Gives Clear Picture Veerappan Murder

சென்னை: வீரப்பன் கொல்லப்பட்டது குறித்த சந்தேகங்களுக்கு வனயுத்தத்தில் பதில் வைத்திருக்கிறேன் என்றார் இயக்குநர் ஏ எம் ஆர் ரமேஷ்.

குப்பி படத்தின் மூலம் பரபரப்பாக அறிமுகமானவர் இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ். அதன் பிறகு இப்போது வனயுத்தம் என்ற பெயரில் சந்தனக் காட்டு வீரப்பனின் கதையை எடுத்துள்ளார். இதே படம் கன்னடத்தில் அட்டஹாஸா என்ற தலைப்பில் வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில் வனயுத்தம் படத்துக்கு வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில காட்சிகளை நீக்கக் கோரி வழக்கு தொடர்ந்தனர். அந்தக் காட்சிகளை நீக்க ரமேஷ் ஒப்புக் கொண்டதால், இப்போது படம் எந்த சிக்கலுமின்றி வெளியாகிறது.

இதுகுறித்து இயக்குநர் ஏஎம்ஏர் ரமேஷ் கூறுகையில், "இந்தப் படத்தில் முத்துலட்சுமி ஆட்சேபித்த காட்சிகளை நீக்கிவிட்டோம். யார் மனதையும் புண்படுத்த இந்தப் படத்தை எடுக்கவில்லை. உண்மைகளை வெளியில் சொல்லவே எடுத்தேன். இதற்காக நான் எடுத்துக் கொண்ட காலம் கொஞ்சமல்ல.. 7 ஆண்டுகள்.

இந்தப் படத்துக்குப் பிறகு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவிருக்கிறேன். பிரபாகரன் வாழ்க்கை குறித்த பல விவரங்களை என்னிடம் விடுதலைப் புலிகளே கொடுத்துள்ளனர். அதனால் அந்தப் படத்துக்கு எதிர்ப்பு வராது என நம்புகிறேன்.

இங்கே தமிழகத்தில் ஏதாவது பிரச்சினை வந்தாலும் சமாளிப்பேன்," என்றார்.

 

கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் கடல் படத்தை தடை செய்யக் கோரி ஹைகோர்ட்டில் வழக்கு

Case Filed Hc Seeking Ban On Kadal

சென்னை: மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகக் கூறி அதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடல் படத்தில் கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகக் கூறி இயக்குனர் மணிரத்னம் மீது நேற்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடல் படத்திற்கு தடை விதிக்கக் கோரி ராயபுரம் கிழக்கு மாதா சர்ச் சாலையைச் சேர்ந்த எஸ்.ஏ. ஜான்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

‘கடல்' படத்தை மெட்ராஸ் டாக்சிஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது. தணிக்கை குழு ‘யு' சான்றிதழ் அளித்துள்ளது. இந்த படத்தில் கிறிஸ்தவ பாதிரியார்களும், போதகர்களும் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளனர். பாதிரியாருக்கு பெண்ணுடன் தொடர்பு இருப்பது போன்ற வசனமும் உள்ளது. ஏசு படத்தை உடைப்பது போன்றும் காட்சிகள் உள்ளன. இத்தகைய காட்சிகளும் வசனங்களும் கிறிஸ்தவ சமூகத்தினரை அவமதிப்பவை ஆகும். கிறிஸ்தவர்கள் மனதை புண்படுத்துவதாகவும் உள்ளது.

இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு கிறிஸ்தவ மதம் மீது தவறான எண்ணம் தோன்றும். குழந்தைகளுக்கும் தவறான சிந்தனையை உருவாக்கும். எனவே படத்தில் இடம் பெற்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு எதிரான காட்சிகளை ரத்து செய்ய வேண்டும். தியேட்டர்களில் படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

அரட்டையோடு இசையும், இலக்கியமும் பேசும் மக்கள் டிவி

Makkal Tv Kathai Paesi Gaanam Paadi

மக்கள் டிவியில் கதை பேசி கானம் பாடி நிகழ்ச்சியில் அன்றாட நிகழ்வுகளை அரட்டையோடு அலசுகின்றனர் மூன்று பேர்.

பேராசிரியர் ராம.கவுசல்யா தலைமையில் இளம்இசைக்கலைஞர்கள் மதுவந்தி, ஐஸ்வர்யா ஆகியோர் கலந்துரையாடும் இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

மூன்று பெண்கள் சேர்ந்தாலே என்ன பேசுவார்கள். இந்த நிகழ்ச்சியில் அன்றாடம் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் வரை, சமையல், அறிவியல்,இசை, இலக்கியம் என அனைத்தையும் அள்ளித்தருகிறது.

அந்த வகையில் இந்த வாரம் சைவ பிரபந்த திரட்டு எனப்படும் பதினோராம் திருமுறையில் பன்னிருவர் பாடிய தொகுப்பு குறித்து பேசப்படுகிறது. சொற்சுவை, பொருட்சுவை மாறாமல் நயம்பட கலந்துரையாடுகின்றனர்.

 

கேயார் எந்த பதவிக்கு போட்டியிட்டாலும் எதிர்த்து நிற்பேன் - எஸ்ஏ சந்திரசேகரன் சவால்

Sa Chandrasekaran Challenged Keyar

சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கேயார் எந்த பதவிக்கு போட்டியிட்டாலும் நான் எதிர்த்துப் போட்டியிடுவேன் என்று எஸ் ஏ சந்திரசேகரன் கூறினார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையில் ஒரு அணியாகவும், கேயார் தலைமையில் இன்னொரு அணியாகவும் பிளவுபட்டு இருக்கிறது. ‘‘நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்ததால், எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்'' என்று கேயார் நேற்று முன்தினம் பேட்டி அளித்தார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறுகையில், "நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கேயார் சில தகவல்களை சொல்லியிருக்கிறார். எங்கள் நிர்வாகத்தின் மீது நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 204 ஓட்டுகளும், எதிராக 10 ஓட்டுகளும் கிடைத்ததாக சொல்லியிருக்கிறார். அன்று நடந்த ஓட்டெடுப்பில், எங்கள் அணியினர் யாரும் வாக்களிக்கவில்லை. கடந்த தேர்தலில், சுமார் 700 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதில், சுமார் 400 பேர் எங்களை ஆதரித்தும், சுமார் 300 பேர் எங்களை எதிர்த்தும் வாக்களித்தனர். அந்த 300 பேர்களும் இப்போது 215 பேர்களாக குறைந்து விட்டார்கள்.

'வேலை பார்க்கவே விடவில்லை!'

ஒரு தேர்தலிலே வெற்றி பெற்றவர்கள் 2 ஆண்டுகள் சங்கத்தின் நிர்வாகத்தில் இருந்து பணிபுரியலாம் என்பதுதான் சங்கத்தின் விதிமுறை. எங்களை 2 ஆண்டுகள் அல்ல, 2 மாதங்கள் கூட நிம்மதியாக பணி செய்யவிடாமல் இடையூறுகளையும், பிரச்சினைகளையும் ஏற்படுத்தி சங்கத்தின் ஒற்றுமையை குலைக்கிறார்கள். தயாரிப்பாளர்களின் நலனுக்காக எந்த ஒரு முடிவையும் எடுக்கவிடாமல் தடை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மாதத்தில் தேர்தல்

இன்னும் ஒரு மாத காலத்துக்குள் முறைப்படியான பொதுக்குழு கூட்டப்படும். அதில், முன்கூட்டியே தேர்தல் நடத்துவதை பற்றி முடிவு செய்யப்படும். மீண்டும் தேர்தலில் எந்த பதவிக்கும் போட்டியிடக்கூடாது என்று நேற்று வரை முடிவு செய்திருந்தேன். ஆனால் இன்று, அடுத்த தேர்தலில் கேயார் எந்த பதவிக்கு நிற்கிறாரோ அதே பதவிக்கு நானும் போட்டியிடுவேன். நான் மட்டுமல்ல, எங்கள் அணியே போட்டியிடும்," என்றார்.