வீட்டுக்கு மருந்தடிக்க வந்தவருக்கு 'காபி வித் அன்பளிப்பு' தந்த அஜீத்!

தான் வீட்டிலிருக்கும்போது யார் வந்தாலும் அவர்களை அஜீத் உபசரிக்கும் விதமே அலாதியானது.

இப்போது சொல்லப் போகும் சம்பவம் சில மாதங்களுக்கு முன் நடந்தது.

அது ஒரு தீபாவளி சமயம். அஜீத் வீட்டுக்கு பூச்சி மருந்து அடிக்க வந்திருக்கிறார் ஒரு தொழிலாளி. அப்போது அஜீத் வீட்டிலிருந்திருக்கிறார். மருந்தடிக்கும் தொழிலாளி வந்திருப்பதை அறிந்ததும், தானே காப்பி போட்டு எடுத்து வந்து அந்தத் தொழிலாளிக்குக் கொடுத்தாராம்.

வீட்டுக்கு மருந்தடிக்க வந்தவருக்கு 'காபி வித் அன்பளிப்பு' தந்த அஜீத்!

அஜீத்தின் இந்தச் செயல் மிகுந்த வியப்பையும், நெகிழ்ச்சியையும் தந்துவிட்டது மருந்தடிப்பவருக்கு. வேலைகள் முடிந்து கிளம்ப எத்தனித்தவரைத் தடுத்து நிறுத்திய அஜீத், அவரைப் பற்றிய விவரங்களைக் கேட்டுக் கொண்டார்.

சிறிது நேரம் மருந்தடிப்பவரை நிற்கச் சொன்னவர், உள்ளே போய் பட்டாசுகள், இனிப்பு என தீபாவளிப் பரிசுகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, கையில் ரொக்கப் பரிசும் கொடுத்து திக்குமுக்காட வைத்தாராம்.

இந்த விஷயத்தை வெளியில் சொல்லிக் கொள்ள வேண்டாம் என அஜீத் வழக்கமான கட்டளையும் போட்டுதான் அவரை அனுப்பினாராம். ஆனால் சில மாதங்கள் கழித்து இப்போதுதான் தகவல் வெளியாகியுள்ளது.

 

மஞ்சப்பை.. ஹெச் டி தரத்துடன் திருட்டு வீடியோ.. இணையத்தில் வெளியானது!

ராஜ்கிரன், விமல், லட்சுமி மேனன் நடித்த மஞ்சப்பை.. ஹெச் டி தரத்துடன் திருட்டு வீடியோ.. இணையத்தில் வெளியானது!  

அதுவும் நல்ல ஹெச் டி தரத்தில் படம் முழுவதையும் வெளியிட்டுள்ளனர்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் இயக்குநர் சற்குணம் இணைந்து தயாரித்த படம் மஞ்சப்பை. கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், திருப்தியான வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது.

குறிப்பாக பி, சி சென்டர்களில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால் தயாரிப்பாளர்களுக்கு அந்த மகிழ்ச்சியை நீடிக்க விடாத வகையில், படத்தின் வீடியோ நல்ல துல்லியமான தரத்தில் வெளியாகியுள்ளது. இணையத்திலும், டிவிடிகளிலும் இப்போது படம் கிடைக்கிறது.

இது படத்தின் வசூலை கடுமையாக பாதிக்கும் என்பதால் கடும் கோபத்தில் உள்ளனர் தயாரிப்பாளர்கள்.

 

முதன் முறையாக.. சிம்பு படத்துக்காக ஒப்புக் கொண்ட நயன்தாரா!

சென்னை: முதல் முறையாக தன் சொந்தக் குரலில் டப்பிங் பேசப் போகிறார் நயன்தாரா.

பத்தாண்டுகளாக சினிமாவில் இருக்கும் நயன்தாரா, இதுவரை தமிழில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியதே இல்லை.

சிம்புவுடன் அவர் நடிக்கும் இது நம்ம ஆளு படத்தில்தான் முதல் முறையாக சொந்தக் குரலில் பேசப் போகிறார்.

முதன் முறையாக.. சிம்பு படத்துக்காக ஒப்புக் கொண்ட நயன்தாரா!

ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு டப்பிங் பேசும் எண்ணம் நயன்தாராவுக்கு இல்லையாம். ஆனால் இயக்குநர் பாண்டிராஜ்தான் அவரை சமாதானப்படுத்தி பேச சம்மதிக்க வைத்தாராம்.

இந்தப் படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்ததும் பாண்டிராஜ்தான். கரைப்பார் கரைத்தால் நயனும் சிம்புவுடன் நடிப்பார் என்று அப்போது பேசப்பட்டது. இப்போது டப்பிங் பேசவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இது நம்ம ஆளு ஷூட்டிங் கும்பகோணத்தில் நடந்து வருகிறது. விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பமாக உள்ளன.

 

நமது இசையின் ஓம்காரம் இளையராஜாதான்! - நடிகர் வி ரவிச்சந்திரன்

பெங்களூர்: எழுதும்போது ஓம் போடுவது, இசைக்கும்போது இளையராஜா என மனசுக்குள் எழுதிக் கொள்ள வேண்டும். அவர்தான் இசையின் ஓம்காரம், என்றார் கன்னட நடிகர் வி ரவிச்சந்திரன்.

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படம், கன்னடத்தில் த்ரிஷ்யா என்ற பெயரில் தயாராகியுள்ளது. பி வாசு இயக்கியுள்ள இந்தப் படத்தில் வி ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இவர் நடித்த படத்துக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார் இளையராஜா.

படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பெங்களூரில் நடந்தது. இந்த விழாவில் இளையராஜா பங்கேற்று வாழ்த்தினார்.

நமது இசையின் ஓம்காரம் இளையராஜாதான்! - நடிகர் வி ரவிச்சந்திரன்

விழாவில் ரவிச்சந்திரன் பேசியதாவது:

மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதே என் வாழ்வில் மிகப்பெரிய விஷயம். நாம் அனைவருமே அவர் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவர்கள். தினமும் என் கார் இளையராஜாவின் பாடல்கள் ஒலிப்பதற்கு முன் நகராது.

இளையராஜாவின் பல பின்னணி இசைக் கோர்வைகளை காப்பியடித்து நான் என் படங்களில் பயன்படுத்தியிருக்கிறேன். அந்த பின்னணி இசையை வைத்தே பாடல்களை உருவாக்கியிருக்கிறேன். அதைப் பாடும் பாடகர்களுக்குக் கூட அது தெரியாது. இளையராஜா தன் இசையில் அனைத்தையுமே தந்துவிட்டார். நாம் புதிதாக இசையமைக்க எதுவும் இல்லாத அளவு அனைத்தையும் மிக அட்வான்ஸாகவே தந்துவிட்டார் அவர்.

இசையின் ஓம்காரம்

பொதுவாக நாம் எழுதும்போது ஓம் என்று போட்டுவிட்டுத்தான் தொடங்குவோம்.. அதே போல இசைக்கத் தொடங்கும்போது மனதுக்குள் இளையராஜா என்று எழுதிக் கொள்ள வேண்டும். காரணம், இசையின் ஓம்காரம் அவர். ஒரு இடத்தில் அவர் கால் படுகிறது என்றாலே.. அந்த இடத்தில் ஒரு அதிர்வலையை நாம் உணரலாம். இன்றும்கூட அவரிடம் தெரியும் சிரத்தையும், அர்ப்பணிப்பும் என்னை அசர வைக்கிறது.

முன்பு ஒரு முறை என் தந்தை வீராசாமி, இயக்குநர் ஸ்ரீதருடன் இணைந்து ட்யூன் போட்டுக் கொண்டிருந்த அதே இளையராஜாவைத்தான் நான் இன்றும் பார்க்கிறேன். அன்றைக்கு நான் நடிகனாக இல்லை. அதன் பிறகு, இளையராஜாவின் இசை கேட்டு, நானும் ஒரு நடிகனானேன்.

விதி

இளையராஜாவிடம்தான் நான் முதலில் இசை கேட்டுப் போயிருக்க வேண்டும். எனக்கு அவர் மீது அத்தனை அன்பு. ஆனால் விதி என்னை அம்சலேகாவிடம் அழைத்துப் போய்விட்டது.

இயக்குநர் வாசுதான் இந்தப் படத்துக்கு இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று கூறினார். பாடல்களை விட, பின்னணி இசைக்கு மிக முக்கியத்துவம் உள்ள படம் இது. பின்னணி இசையில் ராஜா சார்தான் என்றும் மாஸ்டர்... அவரைப் போல இதில் வெற்றி பெற்றவர் யாருமில்லை..!"

-இவ்வாறு ரவிச்சந்திரன் பேசினார்.

யாஷ்

நடிகர் யாஷ் பேசும்போது, "இளையராஜாவின் இசையில் வெளிவந்த ஜோதி படத்தில் ஒரு பாடல்.. ஜொதயிலே.. இன்றும் இந்தப் பாடல்தான் எனக்கு விருப்பமானது. ஷூட்டிங்கிலிருந்து வீட்டுக்குப் போகும்போதுகூட, இந்தப் பாடலைத்தான் அடிக்கடி கேட்பேன். உலகில் பலர் பாடல்களை உருவாக்குகிறார்கள். ஆனால் இசையை உருவாக்குபவர் இளையராஜா மட்டும்தான்", என்றார்.

பி வாசு

இயக்குநர் வாசு பேசுகையில், "என் 19 வயதில் இந்த சினிமாவுக்கு வந்தேன். இதுவரை 62 படங்கள் இயக்கியுள்ளேன். அவற்றில் 30 படங்கள் இளையராஜா இசையமைத்தவை. கிட்டத்தட்ட அனைத்துமே சூப்பர் ஹிட் படங்கள், பாடல்கள். த்ரிஷ்யா படத்தின் மிகப் பெரிய பலம், அதன் பின்னணி இசைதான். அது இத்தனை உயிர்ப்புடன் வந்ததற்கு காரணம் இளையராஜாதான். ராஜா சாருடன் இணைந்து பணியாற்றுவது நமது அதிர்ஷ்டம். அவர் ஒரு முறை சொன்னார், 'எல்லாருக்கும் எங்கே இசை இடம்பெற வேண்டும் என்பது தெரியும்.. ஆனால் பலருக்கும் எங்கே இசை வரக்கூடாது என்பது தெரிவதில்லை,' என்று. ராஜா சாருக்கு இரண்டுமே தெரியும். அதனால்தான் அவர் இசையில் வந்த படங்கள் இன்னும் மறக்க முடியாதவைகளாகத் திகழ்கின்றன," என்றார்.

 

மஞ்சப்பை விமர்சனம்

Rating:
3.0/5
எஸ் ஷங்கர்

நடிப்பு: ராஜ்கிரண், விமல், லட்சுமி மேனன்
ஒளிப்பதிவு: மசானி
இசை: என் ஆர் ரகுநந்தன்
தயாரிப்பு: திருப்பதி பிரதர்ஸ், ஏ சற்குணம் சினிமாஸ்
இயக்கம்: என் ராகவன்

ராஜ்கிரணை மட்டுமே மனதில் வைத்து உருவாக்கப்பட்ட இந்த மஞ்சப்பை, சுவாரஸ்யமானதா.. பார்க்கலாம்!

ஆகாச நெலவுதான்... என்ற இளையராஜா பாணி பாடலுடன் தொடங்குகிறது மஞ்சப்பை.

மஞ்சப்பை விமர்சனம்

சின்ன வயசிலேயே தாய் தந்தையை இழந்த விமலை, வளர்த்து படிக்க வைத்து ஆளாக்குகிறார் தாத்தா ராஜ்கிரண். பெரியவனாகும் விமல், சென்னையில் ஐடி கம்பெனியில் வேலைக்குச் சேருகிறார். அமெரிக்காவுக்குப் போக வேண்டும் என்று தீராத ஆர்வம் கொண்ட விமலுக்கு, அதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. மூன்று மாதங்களுக்குள் அமெரிக்கா போகவிருக்கும் அவர், தன்னை வளர்த்து ஆளாக்கிய ராஜ்கிரணை அதுவரை தன்னுடன் சென்னையில் வைத்துப் பார்த்துக் கொள்ள விரும்புகிறார்.

தாத்தாவையும் வரவழைக்கிறார். கிராமத்து மனிதரான தாத்தா, தன் ஊரில் நடந்து கொள்வதைப் போலவே சென்னை நகரிலும், குடியிருக்கும் அபார்ட்மெண்டிலும் நடந்து கொள்ள... அக்கம் பக்கத்தவர்கள் ஏகத்துக்கும் புகார்.

விமலின் வேலைக்கும், அமெரிக்கா போகும் கனவும், லட்சுமி மேனனுடனான காதலும் கூட தாத்தாவின் நடவடிக்கையால் சோதனைக்குள்ளாக, கடுப்பான விமல் தாத்தாவை திட்டிவிடுகிறார்.

மஞ்சப்பை விமர்சனம்

அந்த நேரம் பார்த்து அந்த அபார்ட்மென்டில், இவர் ஏற்படுத்திய உணவுப் பழக்கத்தால், எலி மருந்தைத் தின்றுவிடுகிறது ஒரு குழந்தை. அவர்களும் ராஜ்கிரணைத் திட்டித் தீர்க்க... ராஜ்கிரண் காணாமல் போகிறார். அவர் கிடைத்தாரா இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.

வெண்கலக் கடைக்குள் யானை புகுந்த மாதிரி கலகலப்பாகப் போகின்றன ராஜ்கிரண் காட்சிகள். ஆனால் அதற்காக அபார்ட்மென்ட் வளாகத்திலிருக்கும் நீரூற்றில் அவர் குளித்து, துணி துவைப்பதும். நகராத காரை வேகமாகத் தள்ளி முன்பக்கத்தை நசுங்க வைப்பதாகக் காட்டுவதும், லேப் டாப்பை டோஸ்டர் என நினைத்து ஸ்டவ்வில் வைத்து வெடிக்க வைப்பதும்... கொஞ்சம் அதிகம்தான்!

ஆனால் சடாரென்று அந்த காவல் அதிகாரியின் கன்னத்தைப் பதம் பார்க்கும் காட்சியிலும், எச்சில் கையால் காக்காய் ஓட்டாத பக்கத்து வீட்டுக்காரனுக்கு உடல் நலமில்லாத போது அருகிலிருந்து கவனித்துக் கொள்வதும், விக்ரமன் பாணியாக இருந்தாலும், மனசு ரசிக்கிறது!

ராஜ்கிரணின் இயல்பான நடிப்பு அசர வைக்கிறது. இந்த மாபெரும் கலைஞனை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வது இயக்குநர்கள் கையிலிருக்கிறது.

மஞ்சப்பை விமர்சனம்  

லாஜிக் இருக்கிறதோ இல்லையோ... ராஜ்கிரண் இப்படி மாங்கு மாங்கென்று நடித்துத் தீர்க்க, விமல் எப்போதும் பேஸ்தடித்த மாதிரியே வருவதும், லட்சுமி மேனனுக்கும் அவருக்குமான சுவாரஸ்யமற்ற காதலும் படத்தை முழுமைபெறாத சித்திரமாக்கிவிட்டன. காட்சியமைப்பில் ஒரு சீரியல்தனம் இருப்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

பாராட்டத்தக்க விஷயம், படத்தின் எந்தக் காட்சியிலும் வன்முறையோ ஆபாசமோ இல்லை என்பது.

லட்சுமி மேனனுக்கு வழக்கமான பாத்திரம்தான். ஆனால் பளபளப்பு கொஞ்சம் கம்மி. பாடல் காட்சிகளில் பரவாயில்லை.

மஞ்சப்பை விமர்சனம்

மசானியின் ஒளிப்பதிவு பரவாயில்லை. திரும்பத் திரும்ப அந்த அலுவலகம், அபார்ட்மென்டை மட்டுமே ஷூட்டிங் ஸ்பாட் என்பதால் அவருக்கே போரடித்துவிட்டது போலிருக்கிறது.

ரகுநந்தனின் இசையில் எல்லா பாடல்களுமே முன்பே கேட்ட ரகம்தான். எஸ்பிபி பாடியுள்ள அந்த டைட்டில் பாடலும், ஒரு டூயட்டும் ஓகே.

இயக்குநர் ராகவனுக்கு முதல் வாய்ப்பு. கதை திரைக்கதையும் அவரே என்பதால் இன்னும் செம்மைப்படுத்தியிருக்கலாம்.

ஆனால் ராஜ்கிரண் என்ற ஒரே காரணத்துக்காக இந்தப் படத்தை ஒரு முறை பார்க்கலாம்!

 

நடிகை இனியா வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை: நகைகளும் களவு போனது

நடிகை இனியா வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை: நகைகளும் களவு போனது  

நடிகை இனியாவின் வீடு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ளது. இனியாவுக்கு கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு இல்லாததால் குடும்பத்தினருடன் வீட்டில் வசித்து வருகிறார். இவரது சகோதரிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இதற்காக நகைக்கடைக்கு சென்று நகைகள் வாங்கி வீட்டில் வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் வீட்டின் அருகில் இருந்த தியேட்டர் ஒன்றுக்கு இனியாவும், குடும்பத்தினரும் இரவு காட்சி படம் பார்க்க சென்றனர். வீட்டை பூட்டி விட்டு சென்று இருந்தார்கள். படம் முடிந்து வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது நகை, பணம் கொள்ளைபோய் இருந்தது. ரூ.5 லட்சம் ரொக்க பணத்தையும், பத்து பவுன் நகைகளையும் கொள்ளையர்கள் திருடிச்சென்றிருந்தனர். இதனால் இனியாவும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து இனியாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

 

கமலின் உத்தமவில்லனை கைப்பற்றிய ஜீ தமிழ் டிவி

கமல்ஹாசனின் உத்தமவில்லன் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் சேனல் கைப்பற்றியுள்ளதாம்.

கமலின் உத்தமவில்லனை கைப்பற்றிய ஜீ தமிழ் டிவி

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி ஆகியோர் நடிக்கும் படம் ‘உத்தமவில்லன்‘. இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி தயாரிக்கிறார்.

சரித்திர காலத்து கதையைப் பின்னணியாக கொண்டு திரைப்படமாக உருவாகி வருகிறது ‘உத்தமவில்லன்'. கலக்கல் காமெடி படமாக விறுவிறு வேகத்தில் தயாராகி வரும் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் சேனல் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை வாங்க பல சேனல்களிடையே ஏற்பட்ட போட்டியில் இருமடங்கு விலை கொடுத்து வாங்கி கமலையே மிரளவைத்துவிட்டதாம் ஜீ தமிழ் டிவி சேனல்.

 

24 மணிநேர செய்திச் சேனல் தொடங்கும் வசந்த் டிவி!

வசந்த் தொலைக்காட்சி 24 மணிநேர செய்திச்சேனல் ஒன்றை தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல தொழில் அதிபரும் காங்கிரஸ் பிரமுகருமான வசந்தகுமார் நடத்தி வரும் சேனல் வசந்த் தொலைக்காட்சி. கடும் போட்டிகளுக்கு மத்தியில் தம் பிடித்து நின்று கொண்டிருக்கிறது.

24 மணிநேர செய்திச் சேனல் தொடங்கும் வசந்த் டிவி!

ஆன்மீக நிகழ்ச்சிகள், சில தொடர்கள், பழைய பாடல்கள், தமிழ் மொழி சார்ந்த நிகழ்ச்சிகள் மூலம் மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. இப்போது வசந்த் தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து 24 மணி நேர செய்தி சேனல் ஒன்று விரைவில் வர இருக்கிறது.

இதுபற்றி அதன் நிறுவனர் வசந்தகுமார் கூறியிருப்பதாவது: "காங்கிரஸ் கட்சிக்கென தனி சேனல் கிடையாது. இந்தியாவிலேயே முதன் முறையாக நான்தான் எனது சொந்தப் பணத்தில் இந்த சேனலை ஆரம்பித்தேன்.

லாபகரமாக இல்லாவிட்டாலும், கட்சிக்காகவும், ஆத்ம திருப்திக்காகவும் நடத்தி வருகிறேன். விரைவில் 24 மணி நேர செய்தி சேனல் ஒன்றையும் தொடங்க இருக்கிறேன்" என்கிறார் வசந்தகுமார்.

 

அதுக்கு வர மாட்டேன், ஓ.கே.ன்னா நடிக்கிறேன்: நயன நடிகையின் கன்டிஷன்

சென்னை: நயன நடிகை பட ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போதே நான் பட விளம்பர நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிடுகிறாராம்.

பாலிவுட்டில் ஒரு படத்தை எடுத்து முடித்த பிறகு அதில் நடித்த நடிகர், நடிகைகள் ஊர், ஊராக செல்வதுடன் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் சென்று படத்திற்கு விளம்பரம் தேடுகிறார்கள். அங்கு படத்தின் ஒப்பந்தத்திலேயே அவர்கள் விளம்பர நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் கோலிவுட்டில் அப்படி இல்லை. அதனால் நடிகர், நடிகைகள் அனைவரும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வந்துவிடுவது இல்லை.

இந்நிலையில் நயன நடிகையோ தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது அதில் தான் எந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டேன் என்பதை சேர்த்த பிறகே கையெழுத்திடுகிறாராம்.

முன்னதாக விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவே மாட்டேன் என்கிறார் நயன நடிகை என்று ஆந்திர திரை உலகினர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மனோரமாவுக்கு சிறுநீரக பாதிப்பு.. டயாலிஸிஸ் சிகிச்சை!

சென்னை: உடல்நிலை மோசமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருக்கும் மனோரமாவின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை மனோரமாவுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மனோரமாவுக்கு சிறுநீரக பாதிப்பு.. டயாலிஸிஸ் சிகிச்சை!

அவருடைய உடல்நிலையை பரிசோதனை செய்தபோது, ‘பொட்டாசியம்' குறைபாடு இருப்பதையும், அதனால் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர்.

இதையொட்டி, மனோரமாவுக்கு ‘டயாலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதே நேரம் மனோரமா நல்ல சுய உணர்வுடன் இருப்பதாகவும், அவர் ஆட்களை அடையாளம் கண்டுகொள்வதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

 

நமீதா குத்துச் சண்டை கற்கிறாரா.. போஸ் கொடுக்கிறாரா?

நமாதா குத்துச் சண்டை கற்பதாக முன்பு செய்தி வந்தபோது, அதை அவரது அரசியல் பிரவேச செய்தி மாதிரிதான் எடுத்துக் கொண்டார்கள்.

ஆனால் இப்போது நிஜமாகவே குத்துச் சண்டை உடை, கைகளில் அதற்கான உறையெல்லாம் அணிந்து கும்மென்று போஸ் கொடுத்து ஒரு போட்டோவும் வெளியிட்டுள்ளார் நமீதா.

நமீதா குத்துச் சண்டை கற்கிறாரா.. போஸ் கொடுக்கிறாரா?

'இது சும்மா போஸ் கிடையாது.. நிஜமான குத்துச் சண்டைப் பயிற்சிதான். ஒரு நாளின் பல மணி நேரத்தை, ஜிம்மில் உடற்பயிற்சிக்காகவும், மைதானத்தில் குத்துச் சண்டைப் பயிற்சிக்காகவும் செலவழிக்கிறார் நமீதா' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இன்னும் சில தினங்கள் பயிற்சி எடுத்தால், ஒரு புரொபஷனல் பாக்ஸரிடமே மோதும் அளவுக்கு எக்ஸ்பர்ட் ஆகிவிடுவார் நமீதா என்கிறார்கள்.

ஆக, அடுத்த ரவுண்ட் குத்துச் சண்டை மைதானத்தில்தானா?