நண்பனில் விஜய்யுடன் இணையும் லாரன்ஸ்?


விஜய் – ஜீவா – ஸ்ரீகாந்த் நடிக்க ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் ரீமேக் நண்பனில் புதிதாக இணைகிறார் ராகவா லாரன்ஸ்.

நடன இயக்குநர் என்பதைத் தாண்டி, நடிகராக பெரிய அங்கீகாரம் கிடைக்காதவராக இருந்தவர் லாரன்ஸ். ஆனால் முன் -2 அவரது கேரியரையே புரட்டிப் போட்டுவிட்டது.

இன்று தமிழ் சினிமாவில் அதிக தயாரிப்பாளர்கள் மொய்க்கும் நடிகர் கம் இயக்குநர் லாரன்ஸ்தான். ‘ஹீரோவாக நடிங்க, இல்லன்னா நடிச்சு இயக்குங்க… எப்படியோ நம்ம கம்பெனிக்கு ஒரு படம் பண்ணா போதும்’ என ராகவா லாரன்ஸிடம் நச்சரிக்கும் பிரபல தயாரிப்பாளர்கள் நிறைய.

ஆனால் லாரன்ஸ் மிகக் கவனமாக புதிய படங்களைத் தேர்வு செய்து வருகிறார். முனி – 3 தொடரும் என படத்தில் போட்டிருந்தாலும், இப்போதைக்கு வேறு சில படங்களை தமிழ் மற்றும் தெலுங்கில் செய்த பிறகே முனி 3-ம் பாகத்தை இயக்கப் போகிறாராம்.

இதற்கிடையே, நண்பன் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்குமாறு லாரன்ஸை கேட்டுக் கொண்டாராம் இயக்குநர் ஷங்கர். இந்த வாய்ப்புக்கு மறுப்பு சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்ட லாரன்ஸ், விரைவில் படப்பிடிப்பில் பங்கேற்கவிருக்கிறார்.

லாரன்ஸும் விஜய்யும் திருமலை படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

நண்பனில் ஏற்கெனவே எஸ்ஜே சூர்யா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

 

என் இசை மக்களுக்கானது! - இசைஞானி இளையராஜா


என் இசை மக்களுக்கானது. அவர்களின் மகிழ்ச்சிதான் இந்த இசையின் முதல் நோக்கம் என்றார் இசைஞானி இளையராஜா.

இளையராஜா இசையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ஸ்ரீராம ராஜ்யம். இந்தப் படத்தை பாபு இயக்கியுள்ளார்.

அக்கினேனி நாகேஸ்வரராவ் வால்மீகியாகவும், பாலகிருஷ்ணா ராமராகவும் நயன்தாரா சீதையாகவும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ராமாயண காவியத்தின் உத்தரகாண்டத்தை மையமாக்கி உருவாக்கப்பட்டுள்ள படம் இது. ராவணனை வதம் செய்த பிறகு, ராமரின் ஆட்சிக் காலம் இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகியுள்ள ஸ்ரீராமராஜ்யத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இளையராஜாவின் இசை அமைந்துள்ளது. மொத்தம் 16 பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன.

ஸ்ரீசீதா ராமச்சந்திர சுவாமி கோயில் அமைந்துள்ள பத்ராச்சலம் நகரில் இந்தப் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது.

இசைஞானி இளையராஜா, அக்கினேனி நாகேஸ்வரராவ், பாலகிருஷ்ணா, நயன்தாரா உள்பட ஏராளமான திரையுலகப் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இளையராஜா தெலுங்கில் பேசினார். அவர் கூறுகையில், “இந்தப் படம் மிக முக்கியமான ஒன்று. என் இசை கடவுளுக்கானது என்று சொல்லமாட்டேன். இந்த இசை மக்களுக்கானது. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த இசையை உருவாக்கித் தருகிறேன். மக்கள் சந்தோஷமாக இருந்தால், இறைவன் சந்தோஷப்படுவான். இசையை விளக்குவது கஷ்டம். அனுபவிப்பது ஆனந்தம்.

இந்தப் படத்துக்கு மிகச் சிறந்த பாடல்களை எழுதியுள்ளார் ஜோன்னவிட்டலு. அவருக்கு என் நன்றி.

இந்த விழாவுக்கு வந்துள்ள அக்கினேனி நாகேஸ்வரராவைப் பார்க்கும்போது எனக்கு பழைய நினைவுகள். நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே அவர் படம் லைலா மஜ்னுவை எங்க ஊர் டெண்ட் கொட்டகையில் பார்த்து ரசித்தவன். அவர் படத்தில் மீண்டும் பணியாற்றியது சந்தோஷமாக உள்ளது.

இந்த ஸ்ரீராமராஜ்யம் குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்,” என்றார்.

விழாவில் பேசிய நாகேஸ்வரராவ், “கவர்ச்சி பிகினி ஆதிக்கம் செலுத்தும் இந்த காலகட்டத்தில், இந்த வயதில் வால்மீகி வேடத்தில் நாம் நடிக்க வேண்டுமா என யோசித்தேன். ஆனால் தயாரிப்பாளர் தொடர்ந்து வற்புறுத்தியதால் ஒப்புக் கொண்டேன். இந்தப் படத்துக்கு இளையராஜா அற்புதமான பாடல்களைத் தந்துள்ளார். அவருக்கு என நன்றிகள்,” என்றார்.

 

கோயில்களில் நயன்தாராவுக்கு அனுமதி!


இதுவரை உள்ளே நுழைய அனுமதி கிடைக்காத இந்து கோயில்களில் நயன்தாராவுக்கு இப்போது அனுமதி கிடைக்க ஆரம்பித்துள்ளது

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நயன்தாரா, பிரபு தேவாவைக் கல்யாணம் செய்து கொள்வதற்காக இந்து மதத்துக்கு சமீபத்தில் மாறினார். சென்னை ஆர்ய சமாஜத்தில் அவரை மதம் மாற்றும் நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன் நடந்தது.

இதற்கு முன் நயன்தாரா பல இந்துக் கோயில்களுக்குச் சென்றுள்ளார். ஆனால் குருவாயூர், காளஹஸ்தி, பத்ராசலம் போன்ற கோயில்களுக்கு மட்டும் அவர் செல்லவில்லை. காரணம் பிற மதத்தினருக்கு இந்த கோயில்களில் அனுமதியில்லை.

இப்போது இந்துவாக மாறிவிட்ட நயன்தாரா, திருமணத்துக்கு முன் கோயில்களுக்குச் சென்று வருகிறார். நேற்று பத்ராச்சலம் ஸ்ரீ சீதா ராமச்சந்திர ஸ்வாமி கோயிலில் நடந்த ஸ்ரீராமராஜ்யம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் நயன்தாரா. இந்த விழாவில் இளையராஜா, பாலகிருஷ்ணா போன்றவர்களும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு கோயிலுக்குச் சென்று வழிபட்ட நயன்தாராவுக்கு சிறப்பு மரியாதையும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

அடுத்து குருவாயூர் கோயிலுக்குச் செல்கிறார் நயன்தாரா. கடந்த இரு வாரங்களுக்கு முன் நயன்தாராவின் காதலர் பிரபுதேவா இந்தக் கோயிலுக்கு தனியாக சென்று வழிபட்டார். இந்த முறை நயன்தாராவும் பிரபுதேவாவும் சென்று சிறப்பு பூஜைகளை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

 

தெய்வத் திருமகள் பார்த்து விக்ரமை காதலிக்க துவங்கிவிட்டேன்! - ஸ்ரேயா


நான் ஜோடியாக நடித்த இரண்டு ஹீரோக்கள் விக்ரம் மற்றும் விஷாலின் படங்கள் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் நடிகை ஸ்ரேயா.

சிவாஜியில் ரஜினியுடன் நடித்த பிறகு, மற்ற முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஒரு ரவுண்ட் நடித்து முடித்துவிட்டார் ஸ்ரேயா. அவர்களில் விக்ரம் மற்றும் விஷாலும் உண்டு.

விகரமுடன் கந்தசாமியில் நடித்தார். விஷாலுடன் தோரணையில் ஜோடி சேர்ந்தார்.

இப்போது ஸ்ரேயா நடித்த ரௌத்திரம் ஓடிக் கொண்டுள்ளது. இந்தப் படம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரேயா, தமிழில் சமீபத்தில் அவர் பார்த்த படங்கள் குறித்துப் பேசினார்.

அவர் கூறுகையில், “சமீபத்தில் விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படம் பார்த்து பிரமித்துப் போனேன். பிரமாதமாக நடித்திருந்தார். கந்தசாமி படத்தில் விக்ரமுடன் நடித்த அனுபவம் எனக்கு உண்டு. ஆனால் தெய்வத் திருமகள் அவரை இன்னொரு உயர்ந்த இடத்துக்கு கொண்டு போய்விட்டது.

அதில் அவரது கிருஷ்ணா கேரக்டர் அற்புதமாக இருந்தது. அவரை நான் காதலிக்கத் துவங்கி விட்டேன்.

நான் பிரமித்த இன்னொரு ஹீரோ விஷால். அவர் நடித்த அவன் இவன் படம் எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும். அந்த அளவு அற்புதமாக நடித்திருந்தார்.

என்னுடைய இன்னொரு ஹீரோ ஜீவா நடித்த கோ படமும் பார்த்தேன். பிரமாதமாக இருந்தது. ஜீவா அசத்தலாக நடித்திருந்தார்”, என்றார்.

 

சகநடிகை தொந்தரவால் தற்கொலைக்கு முயன்ற புது ஹீரோயின்!


சக நடிகையின் டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்றதாக புதிய நடிகை அங்கீதா புகார் கூறியுள்ளார்.

சுற்றுலா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளவர் அங்கீதா. இவர் புதுமுகம் ஆவார். இவருக்கு தோழியாக சான்ட்ரா நடிக்கிறார். இவர்தான் படப்பிடிப்பு தளத்திலிருந்து கணவர் நடிகர் பிரஜனோடு நேற்று காணாமல் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சான்ட்ரா மீது ஹீரோயின் அங்கீதா புகார் கூறியுள்ளார். சான்ட்ரா தொல்லையால் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “நடிகை சான்ட்ரா தினமும் என்னை அவதூறாக பேசிவந்தார். மன உளைச்சலுக்கு ஆளாகும் வகையில் ஒரு கட்டத்தில் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி என் சாவுக்கு காரணம் சாந்த்ராதான் என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலைக்கு முயன்றேன்,” என்றார்.

அப்போது அவர் எழுதிய கடிதத்தையும் காண்பித்தார்.

படப்பிடிப்புக்கு வந்த பிரஜின் – சான்ட்ரா மாயம், புது நடிகை அங்கீதா தற்கொலை முயற்சி போன்றவற்றால், இதுவரை பெயரே தெரியாமலிருந்த சுற்றுலா படம் பிரபலமாகிவிட்டது.

ஒருவேளை இதெல்லாம் திட்டமிட்ட விளம்பர முயற்சியோ என்றும் திரையுலகில் கிசுகிசுக்கிறார்கள்.

 

சன் மியூசிக் அரங்கில் 'முரண்' இசை வெளியீடு!


சன் டிவி, சன் பிக்சர்ஸ் என்றாலே அலறி ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஒரு படத்தின் திரை இசை வெளியீட்டு விழா சன் டிவி குழும சேனல் ஒன்றில் நடந்துள்ளது. அதுவும் லைவ் நிகழ்ச்சியாக.

அந்தப் படம் முரண். சேரன் - பிரசன்னா நடித்துள்ள இந்தப் படத்தின் இசை நேற்று சன் மியூசிக் சேனல் அரங்கில் நடந்தது. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் வந்திருந்தனர் நிகழ்ச்சிக்கு.

இயக்குநர்கள் அமீர், எஸ்பி ஜனநாதன், மிஸ்கின், சேரன், ஏ எல் விஜய், பார்த்திபன், முரண் இயக்குநர் ராஜன் மாதவ், நடிகர்கள் பரத், நரேன், சிபி, பிரசன்னா என பலரும் பங்கேற்றுப் பேசினர்.

ஒரு மணிநேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் சஜன் மாதவ் இசையில் உருவான 'இதுவரை இல்லாத....,' 'நான் கண்டேன்..' ஆகிய இரு பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. படத்தின் ட்ரைலரும் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தை யுடிவி வெளியிடுகிறது.

இந்தப் படம் பெரும் திருப்புமுனையாக அமையும் என்றும், படத்தின் திரைக்கதை தமிழ் சினிமா ரசிகர்களால் பாராட்டப்படும் என்றும் பிரசன்னா தெரிவித்தார்.
 

ஆந்திராவிலும் தமிழ்ப் படங்களுக்கு நெருக்கடி ஆரம்பித்துவிட்டது.


தமிழ் சினிமாக்களுக்கு தமிழகத்துக்கு வெளியே அதிக வரவேற்புள்ள மாநிலம் ஆந்திரா. இங்கு எந்த தமிழ்ப்படமாக இருந்தாலும் அதன் டப்பிங் மற்றும் ஒரிஜினல் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது வழக்கம்.

ரஜினியின் அனைத்துப் படங்களும் நேரடியாகவும், தெலுங்கு டப்பிங் ஆகவும் ஆந்திராவில் வெளியாகி வசூல் சாதனைப் படைக்கின்றன. எந்திரன் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரேநேரத்தில் இங்கு வெளியானது. ரூ 45 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது இந்தப் படம்.

அவன் இவன் படம் வாடு வீடு என்ற பெயரில் வெளியாகி 18 கோடிகள் வரை குவித்தது. கோ படம் ரங்கம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு நல்ல வசூல் கண்டது.

சூர்யாவின் கஜினி, கார்த்தியின் நான் மகான் அல்ல போன்ற படங்கள் தெலுங்கில் நல்ல வசூல் கண்டன.

சமீபத்தில் தமிழில் வெளியான ராகவா லாரன்ஸின் காஞ்சனா, தெலுங்கில் அதே பெயரில் டப் செய்யப்பட்டது. இந்தப் படம் ரூ 3 கோடிக்கு விற்கப்பட்டது. இதுவரை ரூ 15 கோடிக்குமேல் அள்ளிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தெலுங்கு விநியோகஸ்தர்கள் தமிழ்ப் படங்கள் மூலம் ரூ 35 கோடி வரை சம்பாதித்துள்ளனர்.

இதனால் விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் நேரடி தமிழ் மற்றும் தமிழ் டப்பிங் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். நேரடி தெலுங்குப் படத்தைவிட, நேரடி தமிழ்ப் படத்துக்கு நல்ல ஸ்கிரீன்களை ஹைதராபாத்தில் ஒதுக்குகிறார்களாம்.

இந்த நிலை தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது. தமிழ் டப்பிங் படங்களுக்கு இப்போது ஆந்திராவில் 20 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதனை 50 சதவீதமாக உயர்த்துமாறும், தமிழ்ப் படங்களின் பிரிண்ட் எண்ணிக்கையை 50க்குள் கட்டுப்படுத்துமாறும் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் சங்கம் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இனி வரவிருக்கும் தமிழ்ப் படங்கள் முக்கியமானவை என்பதால் இந்த கட்டுப்பாட்டை இப்போதே விதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் தயாரிப்பாளர்கள்.

தெலுங்கு சினிமாக்களின் தரத்தை உயர்த்துவதை விட்டுவிட்டு, நன்றாக போய்க் கொண்டிருக்கும் வியாபாரத்தைக் கெடுக்கிறார்களே என புலம்புகிறார்கள் ஆந்திர விநியோகஸ்தர்கள்.
 

ஊட்டிப் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் பிரஜின் - சான்ட்ரா தலைமறைவு


ஊட்டியில் படப்பிடிப்பில் பங்கேற்க வந்த நடிகர் பிரஜன் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான சான்ட்ரா இருவரும் திடீர் மாயமாகினர்.

புரபைல் விஷன் என்ற நிறுவனம் தயாரிக்கும் படம் சுற்றுலா. இந்த படத்தில் புதுமுக கதாநாயகனாக மிதுன், புதுமுக கதாநாயகியாக ஸ்ரீஜி ஆகியோர் நடிக்கிறார்கள். ராஜேஷ் படத்தினை இயக்குகிறார். பரணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 27 நாட்களாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு குழுவினர் ஊட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர். இந்த படத்தில் டிவி நடிகர் பிரஜன், கதாநாயகியின் தோழியாக அவரது மனைவி நடிகை சான்ட்ரா ஆகியோர் நடித்து வந்தனர். இவர்களும் ஊட்டியில் ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று குன்னூர் அருகே உள்ள மேல்குன்னூர் அம்பேத்கார் நகர் பக்கம் உள்ள ஆங்கிலேயர் கல்லறை தோட்டத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. நேற்று படப்பிடிப்பு நடக்க இருந்த இடத்துக்கு படப்பிடிப்பு குழுவினர் வந்தனர். ஆனால் நடிகர் பிரஜன், நடிகை சான்ட்ரா மட்டும் வரவில்லை.

அவர்கள் திடீரென்று மாயம் ஆனதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து சுற்றுலா படத்தின் தயாரிப்பாளர் வெங்கட்டராமன், தயாரிப்பு மேலாளர்கள் அருணாசலம், பாரதி ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், "நடிகர் பிரஜன், துணை நடிகை சாந்த்ரா ஆகியோர் நேற்று திடீரென்று மாயமாகி விட்டனர். எங்கு சென்றார்கள்? என்று யாருக்கும் தெரியவில்லை. நேற்று முன்தினம் இரவு அவர்கள் 2 பேருக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது. அவர்களிடம் 160 நாட்கள் கால்ஷீட் பெற்றிருந்தோம்.

இப்போது எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. படப்பிடிப்பு ரத்து ஆனதால் ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் நஷ்டம் ஆகி உள்ளது. இது குறித்து நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் கொடுத்துள்ளோம்," என்றனர்.
 

பர்கூர் அருகே ரஜினிக்காக அம்மன் கோயிலில் கிடா வெட்டு!


நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பெற்றதற்காக அவரது ரசிகர்கள் செய்து வரும் நேர்த்திக் கடன்கள் தொடர்கின்றன.

பெரிய கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்றில்லாமல், கிராம அளவில் உள்ள அம்மன் கோயில்களில் அந்தந்த பகுதி ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.

கடந்த வாரம் கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூருக்கு அருகில் உள்ள கப்பல்வாடி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீதொட்டில் அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும், கிடா வெட்டும் நடந்தது. ஆடுகளை அம்மனுக்கு பலி கொடுத்த ரசிகர்கள் பின்னர் ஊர்ப்பொதுமக்கள் அனைவருக்கும் கறிவிருந்து அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பருகூர் நகர ஒன்றிய தலைமை தளபதி ரஜினிகாந்த் நற்பணிமன்ற

பொறுப்பாளர்கள் பி ஜி சுகுமார், பி கே வினோத்குமார், பிசி பாலகிருஷ்ணன், பி சி ரஜினிரமேஷ், பிவி பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கப்பல்வாடி அதிசயபிறவி ரஜினி மன்ற பொறுப்பாளர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.